………..அத்தியாயம் – 5(ii)

அதைக்  கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு  தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது மனதில் அழியாமல் இருந்தாலும் தனக்கு மகனாகப் பிறந்து விட்ட ஒருவர் துறவற  நிலைக்கு செல்வதை மனத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அவர் இப்படிக் கூறியதும், அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ”மகனே, எங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மகனாக வந்து விளக்கேற்றி வைப்பாய். எங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தருவாய் என நினைத்தோமே. குருடனாகவும், முடமாகவும் உள்ள உன் சகோதரர்களை எங்கள் காலத்துக்குப் பின்னர் யார் பாதுகாத்து வருவார்கள் என்று நாங்கள் வருந்திக் கொண்டு  இருந்த நேரத்திலே, கவலைப்படாதே, நான் இருக்கிறேன் என்பது போல நீ வந்து என் வயிற்றில் பிறந்து எங்களுக்கு மன அமைதியை தந்தாய். ஆனால் அந்த மகிழ்ச்சி உடைந்து போய்விடும் போலல்லவா இருக்கிறது நீ துறவி  என்ற நிலையில் செல்ல  நினைப்பதும். எங்களுக்கும் வயது ஏறிக் கொண்டே உள்ள நிலையில் உன் சகோதரர்களை பாதுகாக்க யார் இருப்பார்கள். நாமோ ஏழைக் குடும்பத்தில் உள்ளோம். நமக்கு உதவவும் யாரும் கிடையாது.  உன் முடிவை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் மன பாரத்தைக் கொட்டுவது போல உன்னிடம் என் மனதில் உள்ள கவலையை கூறிவிட்டேன்.  இனி நடப்பது நடக்கட்டும். இதுதான் விதி என்றால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  வேறென்ன செய்ய இயலும்”  என்று கண்களில் இருந்து அருவிபோல வழிந்தோடிய கண்ணீருடன் அவரை இறுகக் கட்டிக் கொண்டவள் அப்படியே மயங்கியும் விழுந்து விட்டாள்.

மயங்கி விழுந்தவளை ஆறுதலாக தூக்கி எழுப்பினார் ஸ்ரீபாதா. அவளிடம் கூறினார் ”அம்மா, என்னை தயவு செய்து தவறாக நினைக்காதே.  நான் உனக்கு மகனாகப் பிறந்ததே உனக்கு நல்லதொரு மகன் வேண்டும் என்று நீ வேண்டியதினால்தான். இந்த  ஜென்மத்தில் நான் மனித குல மேம்பாட்டுக்கு என்னை அர்பணித்துக் கொண்டுதான் உன் மூலம் வெளி வந்தேன். அதற்காக நான் உன்னைக் கை விட்டு விடுவேன் என்று தவறாக நினைக்காதே. மனித குலத்தில்  நீங்களும் ஒன்றுதானே. நான் ஏற்கனவே யோக லஷ்மியை மணந்து கொண்டு விட்டவன் (அதாவது தான் தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டினார். தத்தாத்திரேயரின் மனைவியே லஷ்மி தேவியின் இன்னொரு அவதாரமான யோக லஷ்மி ஆவார் ).  ஆகவே  எதற்கும் அஞ்சாமல் நான் விரும்பும் வாழ்கையை கைகொள்ள எனக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும். என் சகோதரர்களை கைவிட்டு சென்று விடுவேன் என்று எப்படி நீங்கள் நினைத்தீர்கள்? என்னை நம்பியவர்களை  நான் எப்படிக்  கைவிடுவேன் என்று நினைக்கின்றீர்கள்? கவலை படவேண்டாம். அவர்களை பாதுகாப்பது என் பொறுப்பு”.

இப்படியாகக் கூறிய பின்னர் தனது இரண்டு சகோதரர்களையும் அருகில் வருமாறு சைகை காட்டினார். என்ன அதிசயம் நடக்கிறது என்பது புரியாதது போல குருடராக இருந்தவரும் சைகையை புரிந்து கொண்டு அவர் அருகில் செல்ல முடமானவரும் அவர் அருகில் சாதாரணமாக நடந்து சென்றதும் அவர்கள் இருவரின் தலை மீதும்  தனது கையை வைத்து ஸ்ரீ பாத வல்லபா ஆசிர்வதிக்க, இரண்டு சகோதரர்களும் திடகார்த்தமான உடலுடன் உள்ள ஆண் மகன்களாக உருமாறினார்கள். இரு சகோதரர்களும் தமது சகோதரர் தங்களை விட வயதில் இளையவர் என்றாலும் கூட ஸ்ரீ பாத வல்லபாவின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அதைக் கண்ட பெற்றோர்கள் ஆனந்தம் அடைந்து அழுதார்கள்.

அதன் பின் சில நாட்களிலேயே அவர்களுக்கு எங்கெங்கிருந்தோ செல்வம் வந்து சேர வாழ்கை கஷ்டம் இல்லாமல் ஓடத் துவங்கியது. அந்தக்  கட்டத்தில் ஸ்ரீ பாதா அவருடைய பெற்றோர்களிடம் ”இனி என் சகோதரர்கள் உங்களுக்கு அனைத்து விதத்திலும் துணையாக இருப்பார்கள். நீங்களும் நலமாக இருந்து சொர்க்கம் செல்வீர்கள். இனி என் பிறப்பு எனக்கு இட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற கிளம்பிச் செல்கிறேன்” என்று கூறிவிட்டு அவர்களிடம்  இருந்து விடைப் பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி புனித யாத்திரைகளை மேற்கொண்டார்.  கிளம்பிச் செல்லும் முன் தான் அவதாரப் புருஷர் என்றாலும் கூட, தன்னை பெற்றெடுத்ததினால் குருவுக்கு முன்னரான  தாய் – தந்தை ஸ்தானத்துக்கு மரியாதை தரும் வகையில் ஸ்தூல உடம்பில் உள்ள புதல்வனாக தன்னைக் காட்டிக் கொண்டு  அவர்களை நமஸ்கரித்து விட்டே கிளம்பிச் சென்றார்.

அங்கிருந்து கிளம்பி வடநாட்டிற்கு சென்றவர் விந்திய மலை, திரிவேணி சங்கம், காசி, கயா, ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத், என  பல புனித இடங்களுக்கும் சென்று அங்கிருந்த நதிகளில் நீராடி, ஆலயங்களை தரிசித்தப் பின் தத்தாத்திரேயர் வசித்து வந்த இடமான ஸாயாத்ரி  மலை அடிவாரத்தை அடைந்தார். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டப் பின் அங்கிருந்துக் கிளம்பி  கோகர்ணம் எனும் சென்றார். அது அவருக்கு முக்கியமான விஜயமாக அமைந்தது.  வழி நெடுக அவருடைய  தெய்வீக அருளை உணர்ந்து  கொண்ட பல சாது, சன்யாச முனிவர்கள் அவரிடம் ஆசிகளைப் பெற்றார்கள். அதை அறிந்து கொள்ள முடிந்தவர்கள் அவரது மஹான்  எனும் தேஜஸ்சைக் கண்டு   அவருக்கு சிஷ்யர்கள் ஆயினர்.  அவர் வட நாடுகளுக்கு சென்று வந்தது முதல் அவரது சீடர்களினால் ஸ்ரீ பாத வல்லபா (வல்லபா என்றால் வலிமையானவர், திறமையானவர் என்று பொருள்) என்று அழைக்கப்படலானார் (இத்துடன் அத்தியாயம்-5 முடிந்தது).

…….தொடரும்