-2-
நாங்கள் அங்கு சென்று இருந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர்களில் ஒருவர் எங்களுக்கு இந்த ஆலயத்தின் விவரத்தைக் கூறினார். அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன், ஆனால் அவருடைய புகைப்படத்தைக் கீழே காணலாம்.
ஆலயம் எப்படி கட்டப்பட்டது என்கின்ற விவரம் குறித்து அவர் கூறிய வியப்பான விவரங்களை கீழே தந்துள்ளேன்:
”அவர்கள் அனைவருமே தென் நாட்டின் கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பைரவரின் பக்தர்கள். அவர்கள் பைரவ சித்தாந்த ஸ்வாமிகளுடன் உடன் இருந்தவர்கள். பைரவரின் முழு அருளாசி பெற்ற அந்த பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் இவர்களை வழி நடத்தி வந்தவர். அவரை இவர்கள் அனைவருமே பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் என்றே அழைப்பார்களாம் (பைரவ சுவாமிகளின் இயற்கைப் பெயர் சுப்பிரமணியப் பிள்ளை என்பதாக அறிந்தேன்). பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் தம்மை அவர்கள் அனைவரும் ஸ்வாமிகள் என அழைப்பதை விரும்பவில்லை. தாம் பைரவரின் தூதுவர் என்றே அவர் தம்மைக் குறித்துக் கூறி வந்தாலும் அதை அவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் அவரை பைரவரின் அம்சமாகவே கருதினார்கள். அவர்கள் அனைவருக்குமே ஒரு ஏக்கம் இருந்தது. பைரவரின் பக்தர்கள் வணங்கித் துதிப்பதற்கு பைரவருக்கு என தனி ஆலயம் தமிழ்நாட்டில் இல்லையே என்பதே அந்த மனத் தாக்கம் .
இப்படி இருக்கையில் ஒருநாள் திடீர் என பைரவ சித்தாந்த ஸ்வாமிகள்  அவர்களிடம் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு பைரவர் கட்டளை இட்டதும் மட்டும் இல்லாமல் அதன் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், என்ன மாதிரியான சூழ்நிலையில் அந்த ஆலயம் அமைந்து இருக்க வேண்டும், தான் எந்த காட்சியில் அங்கு இருக்க வேண்டும் போன்ற விவரங்கள் அனைத்தையும் கூறி விட்டு, அந்த ஆலயத்தை ஐந்தே மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று உத்தரவு இட்டு விட்டதினால் பைரவர் ஆலயம் அமைக்க உடனடியாக இடத்தைத் தேட வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார். அது மட்டும் அல்ல ஒரு குறிப்பிட்ட தேதியில் ஆலயத்துக்கான நிலத்துக்கு முன்பணத்தைக் கொடுத்து விட வேண்டும் என்று கூறி அந்த தேதியையும் குறிப்பிட்டார் (அவர் கூறியது மே மாதம் என்பது மட்டும் எனக்கு நினைவில் உள்ளது. அவர் அழகாக தென் மாவட்ட நாகர்கோவில் மொழி உச்சரிப்பில் அனைத்தையும் கூறினார்).  ஐந்து மாதத்தில் ஆலயத்தை கட்டி முடிக்க எத்தனைக் காரியங்களை   செய்ய வேண்டி இருக்கும், கையில் அத்தனை பணம் இல்லை எனும்போது எங்கிருந்து அத்தனைப் பணத்தை திரட்டுவது ? எந்த இடத்தில் பைரவர் கூறிய அடையாளங்களுடனான நிலத்தை தேடுவது? பைரவரின் கட்டளையின்படி ஐந்து மாதங்களுக்குள் ஆலயத்தை நிர்மாணிக்க முடியுமா? இந்த கேள்விகள் அனைத்தும் அவர்களை பிரமிக்க வைத்தாலும், முழு நம்பிக்கையோடு அவர்கள் ஆலயத்திற்கான நிலத்தை தேடும் பணியை துவக்கினார்கள்.
உடனடியாக கன்யாகுமரி மாவட்டத்திலேயே இருந்த மைலாடி எனும் கிராமத்தில் பெரிய கல்பாறை  ஒன்றை தேர்வு செய்து அதில் பாலபைரவர் சிலையை அமைக்க ஏற்பாடுகளை செய்தார்கள். அடுத்து ஆலயத்துக்கான நிலத்தை தென் பகுதியில் பல இடங்களிலும் தேடியும் அவர்களுக்கு பைரவர் கோடிட்டுக் காட்டி இருந்த அடையாளங்களுடன் கூடிய  நிலம் தென்படவே இல்லை. ஆனால் பைரவர் ஸ்வாமிகள் ‘மனம் தளராதீர்கள், பைரவர் சித்தப்படி அனைத்தும் அவர் கூறிய கால கட்டத்தில் நடந்து முடியும்’ என்ற நம்பிக்கையை கொடுக்க ஐந்து பேர் ஆலயத்துக்கான இடத்தை தேடி அந்த ஸ்வாமிகளுடன் சேர்ந்து இரவும் பகலும் பல இடங்களிலும் சுற்றி அலைந்தவாறு நடந்து கொண்டே சென்றார்கள். இப்படியாக கஞாகுமரிடில் இருந்து கிளம்பியவர்கள் இடமிடமாகச் சென்றுவிட்டு  சென்னையை அடைந்தார்கள். சென்னையில் மறைமலை நகரைத் தாண்டிச் சென்று கொண்டு இருந்தபோது பைரவ சித்தாந்த ஸ்வாமிகள்  வழிக் காட்டியபடி திருவடிசூலம் அருகே இருந்த ஈச்சங்கரணை  கிராமத்தின் அருகே (தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்துக்கு) வந்ததும் அந்த இடம் அனைத்து விதத்திலும் பைரவர் சித்தாந்த ஸ்வாமிகளுக்கு அந்த பைரவரே குறிப்பிட்டு இருந்த நிலப்பரப்பைப் போலவே இருந்ததினால் அங்கேயே பிரசன்னம் போட்டுப் பார்த்தார்கள்.   அதில் கிடைத்த விடையின்படி அந்த  இடமே தமக்கு பைரவர்  அடையாளம் காட்டிய இடம் என சித்தாந்த பைரவ ஸ்வாமிகள் கூறினாராம்.
ஆனால் பரந்து விரிந்திருந்த அந்த இடத்தில் யாருமே தென்படவில்லை, சுற்றிலும் எந்த வீடும் இல்லை, அமைதியான கிராமப் பகுதியாக இருந்தது. இங்குதான் ஆலயம் அமைக்க வேண்டும் எனில் அந்த இடத்துக்கான சொந்தக்காரரை கண்டு பிடிக்க எங்கு போய் தேடி அலைவது?  யாரைக் கேட்பது என பிரமித்து நின்றபோது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முன்பின் தெரியாத எவரோ ஒருவர் அங்கு வந்தார். அவர்களிடம் நேரடியாகக் கேட்டார் ‘நீங்கள் ஆலயம் அமைக்க நிலத்தைத் தேடுகிறீர்களா? நான்தான் இந்த நிலத்தின் சொந்தக்காரன். இதை நான் விற்க உள்ளேன், வேண்டுமா’. அவர்களால் நம்பவே முடியவில்லை ‘இவருக்கு எப்படி ஆலயம் அமைக்க நமக்கு நிலம் தேவை என்று தெரியும்?’  அடுத்தடுத்து சம்பாஷணை தொடர, பைரவ சித்தாந்த ஸ்வாமிகள்கூறியபடி அவர்களில் ஒருவர் தம்முடன் எடுத்து வந்திருந்த 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக அங்கேயே தந்தார். அந்த தினம் எது தெரியுமா, எந்த தினத்தன்று ஆலயத்துக்கான  முன்பணத்தை தர வேண்டும் என குறிப்பேட்டில் சித்தாந்த பைரவர் ஸ்வாமிகள் குறிப்பிட்டு இருந்தாரோ, அதே மாதம், அதே தேதி!!
அடுத்த சில தினங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பணங்களை திரட்டி நிலத்தை வாங்கி ஆலயம் அமைக்க பதிவும் செய்து விட்டார்கள். அனைத்தும் கனவு போல ஒன்றன்பின் ஒன்றாக இடையூறே இல்லாமல் நடந்து முடிந்தது.  இதற்கு இடையில் கன்யாகுமரியில் மைலாடியில் தயார் நிலையில் செய்து வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீ மஹா ருத்ர பைரவர் சிலையையும் அங்கு எடுத்து வர ஏற்பாடு செய்தார்கள். சிலை அங்கு வந்ததுமே ஒரு பக்கத்தில் ஒரு மண்டல பூஜையையும் இன்னொரு பக்கத்தில் கட்டிடப் பணியையும் தொடரத்  துவக்கினார்கள்.  ஆலயத்தை ஐந்து  மாதத்தில் கட்டி முடிக்க வேண்டுமே.
நிலத்தை தேடுகையில் எந்த ஒரு கட்டிடக் கலை நிபுணர்களிடமும் ஆலயத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், கட்டிடத்தை எப்படி அமைக்கலாம், என்னென்ன செய்யலாம் என்ற ஆலோசனை  கேட்கவில்லை.  கால பைரவர் அவருடைய பக்தரான சித்தாந்த பைரவ ஸ்வாமிகளுக்கு எந்த அமைப்பில் ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினாரோ அதே அமைப்பில் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்று கூறி விட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கட்டிடக் கலைஞர்களிடம் கூறி விட்டு அந்த ஆலயத்தை ஐந்தே மாதத்தில் கட்டி முடித்தார்கள்.  ஆகவே இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணியை பைரவரே செய்துள்ளார் என்பது பெரும் மகத்துவம் ஆகும். அது மட்டும் அல்ல அவ்வப்போது பைரவரே என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பைரவ  சித்தாந்த ஸ்வாமிகளுக்கு  எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் கட்டளையின்படி ஆலயவளாக விரிவாக்கம் தொடர்ந்து கொண்டு வருகிறது. அதற்கேற்ப நன்கொடைகளும் தாமாகவே எங்கிருந்தெல்லாமோ வந்து கொண்டு இருக்கிறது.
 
 
மேலே உள்ள இரண்டு படங்கள்: –
தற்போது  விரிவாக்க வேலைகள் தொடர்ந்து 
கொண்டிருக்கும் ஆலய வளாகத்தின் இரு பக்கத் 
தோற்றம். நடுவில் காணப்படுவது 
பைரவ சித்தாந்த ஸ்வாமிகளின் தோற்றம் 
 தூரத்தில் இருந்து தெரியும் 
ஆலய காட்சி
இதை அதிசயம் என்பதா?  இல்லை மாயாஜாலம் என்பதா? எளிதில் எவராலும் நம்ப முடியாத உண்மை சம்பவம் மேலே கூறப்பட்டவை. பைரவர் தனக்கு ஆலயம் அமைக்க என்ன கூறினாரோ அவை அனைத்தையும் உள்ளடக்கி ஆலயம் அமைந்தது ஒரு கனவு போல நடந்து முடிந்தது. இன்ன தேதியில் இன்னென்ன வேலை இந்த அமைப்பில் முடிய வேண்டும் என பைரவர் ஸ்வாமிகள் ஒரு குறிப்புப் புத்தகத்தில் அவருக்கு கிடைத்தக் கட்டளைப்படி எழுதி வைத்திருந்தார். அனைத்து வேலைகளுமே அந்த குறிப்பேட்டில் எழுதப்பட்டு இருந்தது போலவே துல்லியமாக நடந்து முடிந்து, எந்த தேதியில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டுமோ அந்த தேதியிலேயே அதுவும் நடந்து முடிந்தது மிகப் பெரிய அதிசயம் . அது பைரவரின் அருள் இல்லாமல் நடக்க முடியுமா?”.
………..தொடரும்