சூத முனிவர் நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கு திருப்பூவனத்தைப் பற்றி விளக்கிக் கூறலானார். ”முனிவர்களே, திருப்பூவணத்திற்கு நான்கு யுகங்களில் நான்கு பெயர்கள் இருந்துள்ளன. கிரேதாயுகத்திலே தேவிபுரம் என்றும் திரேதா யுகத்திதல் லஷ்மிபுரம் என்றும், துவாபர யுகத்தில் பிரும்மபுரம் என்றும் பெயர்கள் உண்டு. அதுவே கலியுகத்தில் தட்சிண காசி அல்லது பிதுர் முக்திபுரம் என அறியப்படும். அங்கு செல்பவர்களுக்கும் அங்கேயே வசிப்பவர்களுக்கும் முக்தி கிடைக்கும், பித்ரு பாபம் தீரும் மற்றும் சிவப்பிராப்தி கிடைக்கும்”.
முன் ஒரு காலத்திலே இந்த தலத்திலே பொன்னையாள் என்றொரு மாது வாழ்ந்து வந்திருந்தாள். அவள் ஆலயத்தில் நடனமாடும் மங்கை. அவள் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவள். அங்கு இருந்த சிவபெருமானுக்கு பூவண்ணனாதர் என்ற பெயருண்டு. தினமும் அவரை பூஜித்து வந்திருந்த பொன்னையாளுக்கு ஒரு தீராத ஆசை இருந்தது. தன் வாழ்நாளில் பூவண்ணனாதரை தங்கத்திலான சிலை அழகில் காண வேண்டும் என்பதே அந்த ஆசை. ஆனால் ஏழை அவளால் எப்படி அத்தனை தங்கத்தை சேர்த்து சிலையை வடிவமைப்பது?
ஆகவே அவள் தினமும் மனமுருகி ஆலயத்தில் சிவபெருமானையே அதற்கான சக்தியை தனக்கு தர வேண்டும் என்று வேண்டி வந்தாள். சில காலம் கடந்ததும் சிவபெருமானுக்கு அவள் மீது கருணைப் பிறந்தது. அவள் வேண்டிய வரத்தை தர முடிவு செய்தார். ஆகவே ஒரு நாள் சிவபெருமான் ஒரு சித்தரைப் போல வேடம் கொண்டு அந்த நகருக்கு வந்தார் . ஆலயத்தில் சென்று அங்கிருந்த சிவபெருமானை வணங்குவது போல பாவனை செய்தார். அவர் அங்கு வந்து சிவபெருமானை வேண்டிய பின் பொன்னையாள் காதில் விழும்படி வேறு ஒருவரை நோக்கி ‘இந்த ஊரில் நமக்கு ஒருநாள் தங்கி இளைப்பாறி உணவு உண்ண ஏதேனும் இடம் இருக்குமா?’ என்று கேட்டார்.
அவர் ஆலயத்தில் இப்படிக் கேட்டதைக் கண்ட பொன்னம்மாளோ நேரடியாக அந்த சித்தரிடம் சென்று ‘ ஐயா, நான் இந்த ஆலயத்தில் பல காலமாக நடனம் ஆடிவரும் மங்கை. நான் என் வாழ்க்கையையே சிவபெருமானுக்கு அர்பணித்து விட்டேன். ஆகவே நான் சம்பாதிக்கும் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கே செலவு செய்கிறேன். ஒரு சிவனடியாரான உங்களுக்கு ஆட்ஷேபணை இல்லை என்றால் என் வீட்டில் வந்து உறங்கி உணவருந்தி விட்டுச் செல்லலாமே. அப்படி நடந்தால் அதுவே என் பாக்கியம்’ என்று மனமுருகி கேட்டாள் .
அதைக் கேட்ட சித்தர் உருவில் இருந்த சிவபெருமானும் அவளிடம் போலியாக நடித்தார். ‘அம்மணி உங்கள் அன்பு எம்மைக் கவர்கிறது. ஆனால் நீங்களோ ஒரு பெண். ஆகவே உங்கள் வீட்டில் வந்து இரவு தங்கினால் அது நன்றாக இருக்காது. மேலும் நானோ இன்றே மதுரைக்கு கிளம்பிச் செல்ல வேண்டும். ஆனால் மனம் கனிந்த உங்கள் வேண்டுகோளை தட்ட விரும்பவில்லை என்பதினால் நான் உங்கள் வீட்டில் வந்து உணவு மட்டும் அருந்தி விட்டுச் செல்ல சம்மதிக்கிறேன். உங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லையே?’ என்று கேட்க பொன்னமாளும் தயங்காமல் அவர் கூறியதை ஏற்றுக் கொண்டார்.
சிவனடியாரும் குளித்து விட்டு, ஆலயத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு வருவதாகக் கூறி விட்டு உணவு அருந்தும் நேரத்தில் அவள் வீட்டுக்குச் சென்றார். அவளும் அவருக்கு வயிறு நிறைய உணவை படைத்துப் போட்டாள். வயிறு நிறைய உணவு அருந்தியவர் உணவு அருந்தி விட்டு கிளம்பும் முன் அவர் அவளிடம் கேட்டார் ‘மங்கையே , உன்னைப் பார்த்தால் உனக்கு மனதுக்குள் எதோ ஒரு ஏக்கம் உள்ளது தெரிகிறது . ஆகவே உன் விருப்பம் என்ன என்பதை என்னிடம் கூறினால், நானும் நான் பூஜிக்கும்போது உன் சார்பில் சிவபெருமானை வணங்கி துதிப்பேன்’ எனக் கூற அவளும் தனது மனதில் இருந்த தன் ஆசையை அவரிடம் கூறத் துவங்கினாள்
..…….தொடரும்