சாந்திப்பிரியா 
பாகம்-7

உலகெங்கும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தில் வேறு எந்த ஆலயமும் திரிகோண மலையில் உள்ள  திருக்கோணேஸ்வரர்  ஆலயத்தைப் போல சிறப்பை பெற்று இருக்கவில்லை.  அதற்குக் காரணம் குளக்கோட்ட மன்னன் என்பவனால்  ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படும் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் இரண்டு ஆலயங்களாக உருவாகி உள்ள  நிலையே ஆகும்.  ஆலயம் இரண்டாக உருவாகி உள்ளதா?  ஆமாம் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் போலவே  அந்த  இடத்தின்  அருகில்  உள்ள தம்பலகமலம் எனும் இடத்திலும்  இன்னொரு  திருக்கோணேஸ்வரர் அமைந்திருந்ததே ஆகும்.  அந்த இரண்டு ஆலயத்திலுமே  ஒரே மாதிரியான விழாக்கள், நித்திய பூஜைகள் , அபிஷேகங்கள் போன்றவை நடைபெறுவதாக கூறுகிறார்கள். அவற்றின்  கதை என்ன?

பண்டைய காலத்தில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த மன்னர்களும் பிற நாடுகள் மீது படையெடுத்து வந்து  நாட்டை பெரிதாக்கிக் கொண்ட நிலையில் குளக்கோட்டான் மட்டும் இலங்கையில் இருந்த  திரிகோணமலைக்கு  வந்தது  நாட்டைப் பிடிக்கும் ஆசையில் அல்ல, மாறாக  திருக்கோணேஸ்வரர்  ஆலயத்தை நிறுவுவதற்காகவே என்பதை அறியும்போது ஆச்சர்யமாகவே உள்ளது. ஆகவே குளக்கோட்ட மன்னன் யார், அவன் எப்படி வரலாற்று சிறப்பு மிக்கவன் ஆனான் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

முன்னொரு காலத்தில் இந்தியாவின் சோழ மண்டலத்தில் மனு நீதியை சேர்ந்த அரசர் ஒருவர் நல்லாட்சி செய்து வந்திருந்தார். அவர் பெயர் வரராமதேவர் என்பதாகும். அவர் பெரும் சிவபக்தர்.  அடிக்கடி அனைத்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தவர். மனுநீதி கண்ட சோழன் பரம்பரையில் வந்திருந்த  வரராமதேவர் ஒருமுறை மச்சேந்திரபுராணத்தில் கூறப்பட்டு இருந்த  கோணேசர் ஆலயத்தின் பெருமை பற்றி படித்து  அறிந்து கொண்டார்.  ஆகவே அந்த ஆலயத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும்  என்ற ஆவலால் உந்தப்பட்டு   இலங்கைக்கு வந்து  திருகோணேசரை தரிசனம் செய்து விட்டு சென்றார். ஆலயத்தில் வந்து திருக்கோணேஸ்வரரை வழிபட்டவர், அதன் மீது அதிக பக்தி கொண்டு அடிக்கடி அங்கு வரலானார். ஒவ்வொருமுறை அங்கு வந்தபோதும்  அவர் பெரும் செல்வத்தை கொண்டு வந்து அந்த  ஆலயத்தில்  இருந்த கிணறு ஒன்றில் பாதுகாப்பாக வைத்து விட்டுச்  சென்றார். அதற்குக் காரணம் எந்த காலத்திலாவது அந்த செல்வத்தைக் கண்டெடுப்பவர்கள் அந்த நிதி உதவியைக் கொண்டு அங்கு ஒரு ஆலயம் அமைக்கட்டும் என்ற ஆசையினால்தான். அவர் தானே அந்த ஆலயத்தை அமைக்க முடியாமல் இருந்ததின் காரணம், அவர் அங்கு வந்து வழிபட்ட நேரத்தில் அவருக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை.  தான் ஒரு ஆலயத்தை அமைக்கத் துவங்கி தனக்கும் முடிவு காலம் வந்து விட்டால், அந்த ஆலயப் பணிகள் அப்படியே  நின்று விடக் கூடும். மேலும் அந்நிய நாட்டில் இருந்த அந்த இடத்தில் ஆலயத்தை அமைக்க அந்த நாட்டில் இருந்த மன்னர்களின் ஆதரவு இல்லை என்றால், ஆலயப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆலயத்தை பாதுகாக்க  தக்க படை பலம் தேவையாக இருக்கும். அந்த நேரத்தில் கலிங்க நாட்டுடன் இணைந்திருந்த அந்தப் பகுதியையும்  ஆண்டு வந்த மன்னனோ  சோழநாட்டு மன்னர்களுடன்  நல்ல உறவு கொள்ளாமல் இருந்தவர்கள்.  ஆகவே அதையெல்லாம் கருத்தில் கொண்டே தனக்குப் பிறகு சோழ நாட்டை ஆளத் தகுதியானவர் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட  அந்நிய நாட்டில் வந்து ஒரு ஆலயத்தை அமைக்க முடியும் என்று எண்ணி செல்வத்தை மட்டும் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்தார் .

அந்த காலங்களில் ஆலயம் எனக் கூறப்பட்டவை என்பது இப்போது உள்ள கோபுரத்தை போன்றக் கட்டிட அமைப்பைக் கொண்டவை  அல்ல. திறந்த வெளிகளில் இருந்தவை. பல இடங்களிலும் இருந்த ஆலயம் என்பது அந்த காலங்களில் மேல்கூரை இல்லாமல், கட்டிடங்கள் இல்லாமல் பூமியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த  சில உருவங்களோடு  இருந்த இடங்கள் ஆகும். அப்படி சுயம்பு விக்ரகங்கள் இருந்த இடங்கள் விசேஷமான சக்தி பெற்று இருந்தவை. தேவ லோகத்தினர் அமைத்தவை என்ற பரவலான நம்பிக்கைகள் உண்டு. அந்த நிலையைக் கொண்டதே பிரும்மா வடிவமைத்த, வாயு பகவானினால் எடுத்து வந்து வைக்கப்பட்ட  தக்ஷிண கைலாய மலையில் அமைந்து இருந்த திருக்கோணேஸ்வரர் ஆலயமும் ஆகும்.   அங்கிருந்த ஆத்மலிங்கத்தை கோணேஸ்வரர் என அழைத்து வணங்கி வந்துள்ளனர்.  அப்போது திறந்த வெளியில் இருந்த ஆத்மலிங்கம் அமைந்திருந்த வனப் பிரதேசத்தையே  ஆலயம் என அழைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.  அதையே வழிபாட்டுத் தலமாக கடவுட்கள், யோகிகள், ரிஷி முனிவர்கள் என அனைவரும் கருதி அங்கு வந்து வழிபட்டார்கள்.  சிவபெருமானே  ஆத்மலிங்கமாக அங்கு எழுந்திருந்ததினால்  அங்கு  வந்து அவரை வணங்கி வழிபட்டனர். அதுவே பின்னாளில் ஆலயமாக குளக்கோட்டான் எனும் மன்னனால் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.

மனுநீதி கண்டசோழ  வரராமதேவர் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்து விட்டுச் சென்று இருந்த அந்த செல்வங்கள் அனைத்தையும் அங்கிருந்த பூத கணங்கள் பாதுகாத்து வந்தன.  இப்படி இருந்த காலத்தில் சோழ மண்டலத்தில் அரசாண்டு வந்த  வரராமதேவருக்கு சிவபெருமானின் அருளினால்  குளக்கோட்டான் பிறந்தார். குளக்கோட்டான் பிறந்ததின்  காரணம் சிவபெருமானின் அருளே என முழுமையாக நம்பிய வரராமதேவர் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை அவர் ஏற்று இருந்த அவருடைய மகனான குளக்கோட்டான், ஒருமுறை பூத கணங்கள் மூலம் அவரது தந்தை சேமித்து வைத்திருந்த  செல்வத்தைப் பற்றியும்,  திருக்கோணேஸ்வர சிவலிங்கத்தின் மகிமையும் தெரிந்து கொள்ள அவரும் அங்கு வந்து திருக்கோணேஸ்வரரை வணங்கலானார். அப்போது  அவர் தனது தந்தையார் கிணற்றில் பதுக்கி வைத்து விட்டுச் சென்று இருந்த செல்வத்தை பூத கணங்களின் உதவியுடன் கண்டு பிடித்தப் பின், அந்த செல்வத்தைக் கொண்டே தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு  பிரும்ம லோகத்தில் உள்ளதைப் போன்ற அழகான ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஏற்பாடு செய்தார்.

ஆலயம் ஸ்தாபிக்க முடிவு செய்த உடன்  அதற்கென  சோழ நாட்டில்  இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட அமைப்பு தொழிலாளக்  குடும்பங்களையும் வரவழைத்து  அங்கு குடி அமர்த்தினார். தான் ஆலயம் அமைக்க இருந்தது அந்நிய தேசத்தில் என்ற பயமும் இல்லை, எண்ணமும் அவருக்கு ஏற்படவில்லை.  பொற்குவியல் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு பல மாத காலம் பாடுபட்டு கோணேசர் ஆலயத்தில் மஹா மண்டபம், நுழைவு  மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்ன தான சத்திரம்,  மறைகளை ஓதுவார் மடம் ஆகியவற்றைபெரிய அளவில் அமைத்தார்.  அத்துடன் அங்கேயே அன்னை உமாதேவிக்கு ஒரு தனி ஆலயத்தையும் உருவாக்கி  அதன் பாதுகாப்புக்காக அதை சுற்றி மதிலையும் கட்டினார் .  மானிடப் பிறவியில் பெறும் பாவங்களை நீக்கிக் கொண்டு  இறையருள் பெறப் பாவனாசம் எனும் ஒரு புனித தடாகத்தை அங்கேயே உருவாக்கி, சிவபெருமான்  நீராடுவதற்கு என ஒரு தனியான மண்டபத்தையும் அமைத்தார். அத்தனை பக்தி அவருக்கு இருந்தது. கோணேசர் ஆலயத்தை  தரிசிக்க வருகை தரும் முனிவர்கள், துறவிகள், அடியார்கள் போன்றோர்கள்  தங்குவதற்கும்  பெரும் மண்டபங்களையும்  கட்டிடங்களையும்  உருவாக்கினார்.

ஆலயத்தை மட்டும் நிறுவாமல் அதை அடுத்து பெரிய நீர்த் தேக்கத்தையும், திரிகோண மலையை தொட்டவாறு   இருந்த தம்பலகமலம் பகுதியில் இருந்த வயல்களுக்கு தண்ணீர் தரும் நீர்பாசனத் திட்டத்தையும் அமைக்க எண்ணியவருக்கு அதை எப்படி செயல்படுத்துவது என்பது விளங்கவில்லை. காரணம் இரண்டு மலைப் பகுதியில் இருந்த இடத்தில்  அதை நிறைவேற்ற அவரிடம்  போதிய ஆள்பலமும்  இல்லை, அதை  எப்படி அமைப்பதென்ற திட்டமும் விளங்கவில்லை. அதுவும் போதாது என்று  அந்த நேரத்தில்  அவருக்கு ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டது.

ஆலயம்  வடிவமைக்கப்பட்டு வந்திருந்த நேரத்தில் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னனின் வாரிசாக பிறந்திருந்த ஆடகசௌந்தரி என்ற பெண் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்று இருந்தாள். அவள் அதிகாரத்தில் திரிகோணமலைப் பகுதியும் இருந்தது. ஆனால் அந்தப் பிரதேசம் வனப் பகுதியாக யாரும் அதிகம் செல்லாத பகுதியாக இருந்ததினால் அங்கெல்லாம் அரசுப் படையினர் இருப்பதில்லை.  மேலும்  இந்து சமயமும் அதிக அளவு அங்கு கால் ஊன்றி இருக்கவில்லை என்பதினால் ராவணன் வந்து வழிபட்ட தலம் , ரிஷி முனிவர்கள் வந்து தவம் உள்ள இடம் மற்றும் பிரும்மா அமைத்திருந்த இடம் போன்ற எந்த செய்திகளுமே அதிகம் மக்களின் கவனத்தில் போகாமல் இருந்திருந்த நேரமும் ஆகும். அந்த இடத்தின் மகிமையை அறிந்திருந்த சொற்ப அளவிலான  மக்கள் மட்டும் அங்கு வந்து ரகசியமாக  வழிபட்டவாறு இருந்தனர்.  இப்படி இருக்கையில்தான் அவள் அதிகாரத்தில் இருந்த பகுதியில் அவள் கட்டளையைப் பெறாமல் அந்நிய தேசத்து மன்னன் ஒருவன் வந்து பெரிய ஆலயம் அமைக்கின்றான்அவளுக்கு செய்தி கிடைத்தது. அதைக்  கேள்விப்பட்டதும் அவள் உடனே தனது அமைச்சரை பெரும் படையுடன் அனுப்பி அந்த ஆலயத்தை இடித்து தள்ளி  விட்டு வருமாறு அனுப்பினாள்.

ஆனால் திரிகோண மலைக்கு  வந்த அவளது அமைச்சரோ, தேவலோகத்தைப் போலவே  ஜொலித்த அங்கிருந்த நிலையைப் பார்த்து பிரமித்துப் போய், தனது அரசி செய்ய இருந்த தவறை உணர்ந்தார். அந்த தேவலோக ஆலயத்தை இடிப்பதை விட அந்த மன்னனையே தனது அரசிக்கும் கணவராக ஏற்பாடு செய்து விட்டால் நல்லது நடக்கும் , நாடும் வளம் பெரும் அல்லவா  என நினைத்தார். அதை மனதில் கொண்டு இரு நாட்டு அரசர், அரசியிடமும் தூது போய் , நல்லவற்றை எடுத்துக் கூறி,  நியாயத்தை எடுத்துரைத்து,  தேவ காரியத்தை மனதில் கொண்டே  எதுவும் செய்ய வேண்டும் எனப் பக்குவமாக எடுத்துரைத்து  அவர்களுடைய திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தார்.  இப்படியாக குளக்கோட்டான் மற்றும் ஆடகசௌந்தரி  இருவரின் திருமணமும்  நல்ல முறையில் நடைபெற்று இரு நாடுகளுக்கும்  இடையே நல்லுறவும் வளர்ந்தது.

திருமணம் முடிந்ததும் தனது மனைவியிடம் அந்தப் பிரதேசத்தின் வழமையைப் பெருக்க நினைத்துள்ள  தனது திட்டத்தை எடுத்துக் கூற அவளும் அதற்க்கு முழு மனதுடன் ஒத்துழைப்புத் தந்தாள்.  திருக்கோணேஸ்வரர்  ஆலயப் பகுதியில் இருந்த பூத கணங்களின் உதவியுடன் மளமளவென காரியங்கள் துவங்கின.  கந்தளாய் எனும் பெயருடைய  நீர்தேக்கத்தையும், தம்பலகமலம் பகுதியில் இருந்த வயல்களுக்கு தண்ணீர் தரும் நீர்பாசனத் திட்டத்தையும் சில நாட்களிலேயே  தேவ பூதகணங்களின் உதவியுடன்  செய்து முடித்து வைத்தார்கள். அதனால்தான் இன்றும் தம்பலகமலம் பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சியுடன் செழிப்பாக உள்ளதின் காரணம். ஆனால் இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டு குளக்கோட்டான் நிறுவிய ஆலயத்தை போர்த்துகீசியர்கள் பின்னாளில் இடித்து நாசப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்டதே  தம்பலகமலம் எனும் இடத்தில்  ஏற்பட்ட இன்னொரு   திருக்கோணேஸ்வரர் ஆலயம்.  அதைப் பற்றி பின்னர் கூறப்பட்டு உள்ளது.  குளக்கோட்டனைப் பற்றி குறிப்பு கைலாச புராணம் எனும் நூலில் உள்ளது. அதைத் தவிர அங்கு கிடைத்துள்ள பல்வேறு  கல்வெட்டுக்களும் அவனது பெருமையைப்  பறை சாற்றுகின்றன.

…..தொடரும்