பாகம்-3

அதைக் கேட்ட பிருத்பலன் மீண்டும் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார் ‘மகரிஷியே , நீங்கள் கூறியது எனது அறிவுக் கண்களை சற்றே திறந்துள்ளது. சூரியன் எனும் ஆதித்தியனின் பெருமை அத்தனை மேன்மையானதா? அப்படி என்றால் அவருக்கு ஆலயம் எங்காவது உள்ளதா ? அந்த விவரம் கூறினால் அங்கு சென்று பிரார்த்திக்க ஆசைப்படுகிறேன்’.

வசிஷ்டர் கூறலானார் ‘ மன்ன, நீ கேட்பதினால் சூரியனாருக்கு ஆலயம் எழுந்த  ஒரு கதையை விவரமாக கூற ஆசைப்படுகிறேன். அதன் மூலம் உனக்கு சூரியனுக்கு ஆலயம் ஏற்பட்ட விவரத்தையும், அதை ஏற்படுத்தியவரின் விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். இது கதை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்ச்சி.
பூலோகத்தில் முன்னொரு காலத்தில் சந்திரபாகா எனும் இடத்தில் சம்பாபுரம் என்றோர் நகரம் இருந்தது. அதுதான் சூரிய பகவானின் நிரந்தரமான இடமாக இருந்தது. அங்குதான் இந்த உலகின் ஷேமத்திற்காக பன்னிரண்டு ரூபங்களில் சூரியன் வசிக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஸாம்பாவிற்கும் காட்சி தந்து அவனுக்கும் அருள் புரிந்தார். எல்லோரையும் ரஷிக்கிறார். அங்கு சென்று அவரை துதித்தால் நிச்சயம் அவருடைய பூரணமான அனுக்கிரகம் தவறாது கிடைக்கும். விதிப்படி செய்யும் அனைத்து பூஜைகளையும் அவர் நேராக ஏற்றுக் கொள்கிறார்’.

இடையில் இடை மறித்து கேட்டார் பிருத்பலன் ‘ என்னை மன்னிக்க வேண்டும் மகரிஷியாவர்களே. சூரிய பகவான் ஸாம்பா என்பவருக்கு அருள் புரிந்ததாகக் கூறினீர்கள். அந்த ஸாம்பா என்பவர் யார்? அவருக்கு சூரியன் ஏன் அருள் புரிந்தார்? அதைக் குறித்தும் கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்’ என்றதும் வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார்.

‘ அனைத்தையும் நிச்சயமாகக் கூறுவேன். முதலில் ஸாம்பா பிறந்தக் கதையைக் கேள். கிருஷ்ணர் ஜம்பாவதியை மணந்து கொண்ட கிருஷ்ணபிரான்  தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்படி ஆசைப்பட்டதின் பின்னணியில் அவருடைய அவதாரத்துக்கு  உலக சேவை ஒன்றை நடத்த வேண்டிய  அவசியமும், மற்றும் ஒரு சாபமும் இருந்தது. அதன்படி முதலாவதாக அவருடைய அந்த அவதாரத்தின் மூலம் சூரிய பகவானின் மேன்மை உலகிற்கு வெளிப்பட வேண்டும்.  இரண்டாவது, அவர் ஸ்தாபித்த வம்சம், அவர் வழியினாலேயே அழிந்தும் விட வேண்டும். ஆகவே தனக்கு ஒரு மகன் வேண்டும் என ஆசைப்பட்டவர் வனத்துக்கு சென்று தான் எப்போதும்  ஆலோசனைக் கேட்கும் ஒரு முனிவரை  சந்தித்து தனது ஆசையைத் தெரிவித்தார். அதைக் கேட்ட அந்த முனிவர் கூறினார் ‘ கண்ணா, நீ ஆயிரம் பூக்களை எடுத்து வந்து அவற்றைத் தூவி  சிவபெருமானை துதித்து தவம் இருந்தால், உனது ஆசை நிறைவேறும். உன் தவம்  ஒரு நாளில் கூட பலிக்கலாம். இல்லை ஆயிரமாயிரம் வருடங்கள் கூட நீ தவமிருக்க வேண்டி இருக்கலாம். ஆகவே நீயே யோசனை செய்து கொள்’ என்று கூறி விட்டார்.

அதைக் கேட்டதும் உடனே மன மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்ற கிருஷ்ணர் ஆயிரம் மலர்களை சேகரித்தார். அவற்றை கொண்டு போய் காட்டு மத்தியில் ஒரு சிவ லிங்கத்தை வைத்து அதற்கு அந்தப் பூக்களைப் போட்டு கண்களை மூடிக் கொண்டு தவம் இருக்கலானார். ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. கிருஷ்ணரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தனது மனைவியான உமையுடன் கிருஷ்ணருக்கு காட்சி தந்தார். அவரைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்த கிருஷ்ணர் அவர்களை வணங்கினார். அதைக் கண்ட சிவபெருமான் கிருஷ்ணரிடம் கேட்டார் ‘கிருஷ்ணா, நீயே விஷ்ணுவின் அவதாரம். நீயே இன்னும் பல அவதாரங்களை எடுத்து இந்த உலகை ரசிக்க வேண்டியவர். அப்படி இருக்கையில் என்னை வேண்டி தவம் இருந்தது ஏன்?’

அதற்கு கிருஷ்ணர் கூறினார் ‘ தேவாதி தேவா, நீங்களே பரப்பிரும்மன். இந்த பிரபஞ்சத்தையே சிருஷ்டி செய்தவர். எம்மையும் படைத்தீர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்தீர். அப்படி இருக்கையில் என் தவத்தின் காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்குமா?’.

சிவபெருமான் கூறினார் ‘இல்லை, கிருஷ்ணா, உன் தவத்தின் காரணத்தை உன் வாயாலேயே கூறினால்தான் நான் உன் ஆசையை நிறைவேற்ற முடியும்’.
தயங்காமல் கிருஷ்ணர் கேட்டார் ‘ தேவா….எனக்கு உங்களைப் போலவே ஒரு சிறந்த மகன் பிறக்க வேண்டும். அனைத்திலும் உங்களைப் போலவே உள்ளவன் பிறக்க வேண்டும்’ என்று கூறிய பின் மீண்டும் அழுத்தமாக ‘உங்களைப் போன்றவனே’ என்று கூறினார். அதைக் கேட்ட சிவனும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பார்த்து புன்னகைத்தார்கள். அதன் பின் கிருஷ்ணர் கேட்ட வரத்தை சிவபெருமானும் அவருக்கு அளித்தார். அதன் காரணமாக ஜம்பாவதிக்கு கிருஷ்ணர் மூலம் அழகான ஒரு ஆண் மகன் பிறந்தான். அறிவாலும் ஆற்றலாலும் சிறந்தவனாக இருந்தான் என்பது மட்டும் அல்ல. அவன் பேரழகானவனாகவும் இருந்தான். சிவபெருமானின் தத்துவம் அழித்தல் என்பதே. ஸாம்பா யாரை, அல்லது எதை அழிக்கப் பிறந்தான்?

……தொடரும்