சாந்திப்பிரியா

பாகம்-4
பால முனிவர் வியாக்கிரபாதர் ஆனக் கதை

தந்தையின் உபதேசத்தைப் பெற்றுக் கொண்ட தவப் புதல்வர்  தனது தாய் மற்றும் தந்தையை வணங்கி அவர்களுடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு  தென் திசையை நோக்கி தில்லைவனத்தைத் தேடித் பயணித்தார்.  அங்கும் இங்கும் சென்றவாறு இருந்தப் பின் முடிவாக தில்லைவனத்தை அடைந்தவர் அங்கிருந்த சிவகங்கை என்ற குளத்தில் நீராடிக் கொண்டு, அதன் அருகில் இருந்த ஒரு ஆல மர அடியையே தன் இருப்பிடமாக்கிக் கொண்டு, தினமும் அங்கு கரையில் இருந்த சிவலிங்க  பெருமானுக்கு பூஜைகளை செய்து வந்தார். அதோடு மட்டும் இல்லாமல் அங்கு திருமூலட்டாறு எனும் இடத்தில் இருந்த திருமூலட்டேஸ்வரரையும்  (சிவபெருமான்) வணங்கி பூஜித்து வந்தார்.

தில்லைவனம் என்பது சிதம்பரத்தில் உள்ளது. தில்லை என்பது ஒரு வகையான மரங்கள் ஆகும்.  சிதம்பரம் முதலில் தில்லை மரங்கள்  சூழ்ந்த வனமாகவே இருந்தது.  எந்த காலத்தில் என்று கணிக்க முடியாத காலத்தில் அதாவது வேத காலத்திலேயே அல்லது அதற்கும் முற்பட்டக் காலத்தில் என்று கூறலாம், சிதம்பரத்தின் பகுதி  அனைத்துமே  தில்லைக் காடாக இருந்தது. அப்படிப்பட்ட தில்லைவனத்தில்தான் ஒரு ஆல மரத்தின் அடியில் சிவகங்கை நதிக்குப் பக்கத்தில்  பால முனிவர் தங்கி இருந்தார்.

பால முனிவர் பல நாட்களாக அங்கு தங்கி இருந்தவாறு சிவ தரிசனத்தை செய்தவாறும், சிவ பூஜையை செய்தவாறும் இருந்தபோது  தான் வணங்கி வந்து கொண்டிருந்த திருமூலாட்டானேஸ்வரர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் சற்று தள்ளி இன்னொரு குளம் இருப்பதைக் கண்டார். அந்த இடம்  அமைதியாக இருந்து கொண்டு சிவதரிசனம்  செய்யத் தனக்கு ஏற்றதாக  இருக்கும் என்று நினைத்தவர்  அந்த குளத்தின் அருகில் சென்று அங்கு ஒரு பர்ணசாலையை அமைத்துக் கொண்டு  அங்கேயே ஒரு சிவ லிங்கத்தை  ஸ்தாபித்துக் கொண்டார் . சிவலிங்கத்தை ஸ்தாபித்துக் கொள்வது என்றால், அந்தக் காலத்தில் கெட்டியான களிமண்ணுடன்  குங்குமம், மஞ்சள் மற்றும் வீபுதி போன்ற கலவைகளைக் கலந்து , அதை நன்கு காயவைத்து பத்திரமாக பூமியிலே மழை மற்றும் வெயில் படாத இடத்தில் மந்திரங்களை ஓதி  அந்த இடத்தை புனிதப் படுத்தி பாதுகாப்பாக   வைத்து அதையே தாம் மானசீகமாக வணங்கும் சிவபெருமானாக பாவிப்பார்கள்.  இப்படியாக ஸ்தாபித்த  அந்த சிவலிங்கத்தையும் முதலில் தான் வழிபாட்டு வந்த திருமூலாட்டானேஸ்வரரையும்  தினமும் வணங்கி பூஜித்து வந்தார்.

அங்கிருந்த வனப் பகுதிக்குச் சென்று  தினமும் பல பூக்களை பறித்து வந்து அந்த லிங்கங்களுக்கு பூஜை செய்து வந்தபோது, நாளடைவில் பூக்கள் கிடைப்பதும் அரிதாயிற்று. விடியற்காலை வேளைகளில் பனி பொழிந்து வெளியில் செல்வதும் கஷ்டம் ஆயிற்று.  பால முனிவராக இருந்தவர் அல்லவா. அவர் மன உறுதி பெற்றிருந்தது போல இயற்கையை எதிர்த்து நிற்க அவருடைய உடல் உறுதி படவில்லை.  ஆகவே ஒருநாள் அவர் பூஜை செய்யும்போது மனம் வருந்தி சிவலிங்கத்திடம் முறையிட்டு அழுதார்.

‘ பூக்களை விடிந்ததும் எடுக்கலாம் என்றால் வண்டு அதை சுவைத்து விடுகிறது, விடியும் முன் எடுக்கலாம் என்றால் வழியும் தெரியவில்லை, அது பக்குவமாகி விட்டதா என்பதும் புரியவில்லை ( பனிபடர்ந்த பிரதேசமாக இருந்ததினால் கண்களால் நன்கு பார்க்க முடியவில்லை என்ற பொருளில் அதாவது மலர்ந்த புஷ்பமா என்பது தெரியவில்லை), மரங்களில் ஏறினாலோ கால்கள் பனியால் வழுக்குகின்றன, பழுதில்லாத பூக்களைக் கொண்டு வந்து சிவ பூஜை செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்றே எனக்குப் புரியவில்லையே இறைவா’.

உண்மையான தன் பக்தனின் மனக் குமுறலைக் கேட்ட சிவபெருமான் மனம் மகிழ்ந்து அவர் முன் தோன்றினார். பால முனிவரிடம் கேட்டார்  ‘பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும்?’. சிவபெருமானை தரிசனம் பெற்ற பால முனிவர் மகிழ்ச்சித் தாங்காமல் கூறினார் ‘எம்பெருமானே, அடியேன்  மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருக்க புலிக் கால் போன்ற திடமான காலையும் , அதில் உள்ள நகம் புலி நகம் போல வலிமைக் கொண்டதாகவும் தந்தால்  மரத்தின் மீது சிரமம் இன்றி ஏறுவேன், வழி பார்த்து நடந்து, பக்குவமான பூக்களைப் பறிக்க கால்களிலும் கைகளிலும் கண்களையும் கொடுத்தால் அப் பூக்களைக் கொண்டு வந்து நான் உம்மை தினமும் பூஜிக்க முடியும் எனும் வகைக்கு எனக்கு அருள் புரிய வேண்டும்’.  அதைக் கேட்ட சிவபெருமானும் மனம் மகிழ்ந்து  அந்த பால முனிவருக்கு அவர் கேட்டதை தந்து  அருள் புரிந்தார். அதுமட்டும் அல்லாமல் ‘புலிப் பாதத்தைக் கொண்டவனாவாய்’ என்று ஆசிர்வதிக்க  அன்று முதல் வியாக்கியம் என்றால் புலி என்றும் பாதர் என்றால் பாதத்தைக் கொண்டவர்  என்றும் பொருள் தரும் வகையில் அந்த பால முனிவர் தன் பெயரை வியாக்கியபாதர் என மாற்றிக் கொண்டார்.

அது முதல் வியாக்கியபாதர் நாள்தோறும் விடியும் முன் இயற்கை  நியதிகளை முடித்துக் கொண்டு ஸ்நானம்  செய்தப் பின் பவித்திரமாக கோட்டுப் பூ, கொடிப்பூ, நிலப்பூ மற்றும் நீர்ப்பூ என்ற நான்கு அபூர்வ வகைப் பூக்களை பறித்து வந்து சிவ விதிப்படி நித்தமும் சிவனை பூஜித்துக் கொண்டு வெகுகாலம் அங்கிருந்தார்.

நாளடைவில் வியாக்கியபாதர் எனும் அந்த முனிவரின் பெயர் பல இடங்களிலும் பரவ, அவர் பிரபலமானார். அவர் நிறுவிய சிவலிங்கேஸ்வரரின் பெயர்  – புலி போன்ற தன்மையை வியாக்கியபாதருக்கு தந்த காரணத்தினால்  – திருபுலீஸ்வரர் என ஆயிற்று. பல முனிவர்களும் ரிஷிகளும் அங்கு வந்தார்கள். அவர் புகழைக் கேள்விப்பட்ட அவரது தந்தையான மந்தியந்தின முனிவரும் அங்கு வந்து பர்ணசாலையில்  தம் மகனுடன் தங்கி இருந்து கொண்டு சிவகங்கையிலே ஸ்நானம் செய்து  தன் புதல்வரான வியாக்கியபாதர் ஸ்தாபித்த சிவலிங்கத்தையும், திருமூலாட்டானேஸ்வரரையும் வணங்கி பூஜித்து வந்தார்.

இப்படியாக அவர்கள் அங்கிருந்தபடி சிவபூஜைகளை செய்து கொண்டு இருந்த காலத்தில் வியாக்கியபாதரின் புகழைக் கேள்விப்பட்ட வசிஷ்ட முனிவர் அங்கு வந்து சிவபெருமானின் அருள் பெற்று அவரை நேரடியாக தரிசனம் பெற்று இருந்த வியாக்கியபாதரின் புகழைக் குறித்த உண்மைகளைக் கண்டறிந்தப் பின், தனது சகோதரியை அவருக்கு மணமுடிக்க விரும்பினார். ஆகவே மாபெரும் முனிவரான வசிஷ்ட முனிவரின் விருப்பத்தை ஏற்று வசிஷ்ட முனிவரின் சகோதரியை  மணம் செய்து கொண்டு அவள் மூலம் ஒரு சத் புத்திரனை பெற்றெடுத்தார்.

அந்த சத்புத்திரனை வசிஷ்டரின் மனைவி அருந்ததி தன்னுடைய ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று காமதேனுப் பசுவின் பாலைக் கொடுத்து சில நாள் வளர்த்தாள். சிறிது காலத்துக்குப் பின்னர் வியாக்கியபாதரின் மனைவி தனது புதல்வனை தன்னிடம் அழைத்து வந்து கிழங்கு பழம் போன்றவற்றை கரைத்த மாவுடன் அதற்குக் கொடுக்கத் துவங்க  அந்தப் பிள்ளையோ தனக்கு காமதேனுப் பசுவின் பால்தான் வேண்டும் என்று அழத் துவங்கியது. அவர்கள் காமதேனுப் பசுவின் பாலுக்கு எங்கே போவார்கள்?

ஆகவே வியாக்கியபாதர் அந்தக் குழந்தையைக் கொண்டு போய் திருமூலாட்டானேஸ்வர் சன்னதியில் கிடத்தினார்கள். பசி அடங்காமல் குழந்தை அழத் துவங்கியதைக் கண்ட சிவபெருமான் தன பக்தரின் குழந்தை அழலாகாது என்பதற்காக அங்கே பால் பொங்கும் ஒரு கடலையே  ஏற்படுத்தினார். இப்படியாகவே சிதம்பரத்தில் பாற்கடல்  என்ற குளம் ஏற்பட்டது.  அந்தப் புத்திரனும் பால் கடலின் பாலை உண்டு வளர்ந்து நாளடைவில் உபமன்யு என்ற பெயரைப் பெற்றார்.
தந்தை போதித்த பாடங்களினால் மெல்ல மெல்ல உபமன்யுவும் அனைத்தையும் கற்றறிந்த பால முனிவரானார். காலப்போக்கில் பால உபமன்யு முனிவராக இருந்த  அவருக்கும் சில சீடர்கள் அமைந்தார்கள். அப்போது ஒருநாள் சிவபெருமானுக்கு பூஜை செய்யப் பூக்கள் கிடைக்கவில்லை என்பதினால் உபமன்யு எனும் பால முனிவர் தன் சீடரிடம் இன்னொரு இடத்தில் கிருஷ்ணர் சிவபூஜை செய்த பூக்களைக் கொண்டு வருமாறு கூறி அனுப்பி, அந்தப் பூக்களைக் கொண்டு சிவபூஜை செய்தார். அதை அறிந்து கொண்ட கிருஷ்ணரும் அங்கு வந்து அவர் செயலை ஆட்சேபிக்க உபமன்யு முனிவரும் அவரிடம் எந்த ஒருவர் சிவ தீக்ஷைப் பெறாமல் சிவனுக்கு பூஜை செய்கிறார்களோ அந்த பூக்கள் நிர்மாலியமாகாது (பூஜிக்கப்பட்ட பூக்களாகாது என்பது பொருள்) என்பதினால் அவற்றை வேறு பூஜைகளுக்குப் பயன் படுத்தலாம் என்றும்,  சிவதீட்ஷைப் பெறாமல் செய்யும் பூசையையோ அந்தப் பூஜையில் போடப்பட்ட பூக்களையோ சிவனும் ஏற்பது இல்லை என்று கூறியதும், கிருஷ்ணருக்கு மனதில் ஒரு உண்மை  உறைத்தது.  தான் வெகுகாலம் சிவபூஜை செய்தும் தமக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை என்பதின் காரணம் தாம் சிவ தீக்ஷைப் பெறாமல் பூஜை செய்ததுதான் என்பதை புரிந்து கொண்டார்.

தீட்ஷை என்பது பல  வகைப்படும். ஒரு குருவானவர்  தன்னிடம் தொண்டு செய்தவரை  சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள தரப்படும் தீட்ஷை.  சன்யாசம் பெற கிடைக்கும் தீட்ஷை போன்றவை.  ஆனால் பூஜைகளுக்கான சிவதீக்ஷை பெறுவது என்பது வேறு வகை ஆகும். அது என்ன?  எவர் ஒருவரும், யாராக இருந்தாலும்  அதாவது சைவர்கள், பிற சமூகத்தினர், வைஷ்ணவப் பிரிவினர்  என யாராக இருந்தாலும்  குறிப்பிட்டக் காரணங்களுக்காக  சிவனுக்கு பூஜை  செய்யும்போது அந்த நேரத்தில் அந்த பூகைக்கான கர்த்தாவாக  தான் சிவனடியாராக மாறியதாக சத்தியம் செய்வதாகும். அதாவது இந்த நேரத்தில் இந்த  பூஜையை செய்யும் காரணத்துக்காக உனக்கு சிவனடித் தொண்டனாக இருக்கிறேன்  என்று கூறி அவரை வணங்குவதாகும். அந்தக் காலங்களில் அதை பூஜா விதிப் பிரமாணம் என்று கூறுவார்கள்.  ஆகவே  பூஜைகளுக்கான  சிவ தீட்ஷை பெறுவது  என்பது மத மாற்றமோ இல்லை இன மாற்றமோ இல்லை. குறிப்பிட்ட காரணங்களுக்காக சிவனை வேண்டிக் கொண்டு  பூஜையை செய்தப் பின்னர்  அவரவர் தாம் உள்ள பிரிவை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்  என்பதினால் பூஜைக்கான விதியை பின்பற்றாமல் இருந்தது தனது பிழையே என்பதை  உணர்ந்த கிருஷ்ணரும் உபமன்யு முனிவரிடம் சிவ தீட்ஷை பெற்றுக் கொண்டு அங்கேயே இருந்து கொண்டு அங்கிருந்த சிவலிங்கங்களுக்கு  சிவபூஜை செய்து சிவனார் அருள் மூலம் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார். அந்த அருள் மூலம்  அவருக்குப் பிறந்தவரே சம்பா எனும் பிள்ளையாகும்.

காலம் ஓடியது. பாற்கடலின் பாலை (பால் என்பதை பிற காலத்தில் நீர் என்பார்கள் என்பதின் காரணம் அது நீர் நிலை ஆயிற்று) பருகிக் கொண்டு உபமன்யு எனும் பால முனிவர் வளர்ந்து பெரியவரானார். இப்படியாக ஒருவர் மட்டுமே இருந்த பர்ணசாலை மூவர் உள்ள பர்ணசாலையாயிற்று. அவருடன் அவருடைய தந்தையான வியாக்கியபாதர் மற்றும் பாட்டனாரான மந்தியன்தின முனிவர் என மூவரும் இருந்து கொண்டு திருமூல்லாட்டனேஸ்வர் மற்றும் திருபுலீச்வரம் எனும் சிவலிங்கங்களை வழிபாட்டு பூஜித்து வந்தார்கள்.

ஒருநாள் வியாக்கிரபாத முனிவர் திருமூல்லாட்டனேஸ்வர் சன்னதியில் அமர்ந்து கொண்டு யோகத்தில் இருந்தபோது அவர் கண்களுக்குள் முன்னொரு காலத்தில் தேவதாரு எனும் வனத்தில் நாற்பத்தெட்டாயிரம் முனிவர்கள் மகிழும் வகையில் சிவபெருமான் ஆடிய நடனக் காட்சி தெரிந்தது.  நடனத்தின் பின் காட்சி அளித்த சிவபெருமான்,  கோடி சூரியனைப் போன்ற  ஒளியுடன் , பச்சை நிற மேனியராக, மூன்று கண்களும், சந்திரப் பிறை மற்றும் கங்கையும் தலையில் கொண்டு, கொன்றைப் பூ மாலை அணிந்து கொண்டு, வலது செவியில் சங்க குண்டலம் தொங்க, இடச் செவியில் திருத்தோடு மின்ன, திருக்கரங்கள் கமண்டம், டமரம் ஏந்தி  , பிற கரங்கள்  அபய முத்திரை மற்றும் அருள் என அனைத்தையும் காட்டியவாறு இருக்க, இடுப்பிலே புலித்தோல் ஆடை மினுக்க, நந்தி மீது அமர்ந்திருந்தவரின் வலது பாதம் முயலகன் மேல் இருக்க , இடது பாதம் தூக்கி வளைத்து தொடை மீது காணப்பட, ஸ்ரீ பஞ்சாட்ஷர சொரூபியாய் உமையுடன் சேர்ந்து சிவபெருமான் அங்கிருந்த முனிவர்களுக்கு காட்சி அளித்ததைக் கண்ட வியாக்கிரபாத முனிவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.  மெய் சிலிர்க்க, அந்தக் காட்சியைக் ஓடி இருந்தக் கண்களுக்குள்ளேயே  கண்டவர்  கைகள் தம்மை அறியாமலேயே சிரத்தின் மேல் சென்று குவிய, அந்த அற்புதத்தைக் கண்டவர் நா தழுதழுத்து கூறிக் கொண்டார்  ‘ ஆஹா….இந்த தரிசனத்தைக் காண என் திருத் தவம் இடம் கொடுக்கவில்லை என்றாலும், இந்த தில்லை வனமே மீண்டும் அப்படி ஒரு காட்சிக்கு உள்ளாகாதா?. இப்படியாக எண்ணிக் கொண்டு, அந்த தரிசனக் கோலத்தை தமக்கும் அந்த தில்லைவனத்தில் சிவபெருமான் தர வேண்டும் என வேண்டிக் கொண்டு   மீண்டும் கடும் சிவபூஜையை செய்யத் துவங்கினார்.

…….தொடரும்