சாந்திப்பிரியா
‘ பிரும்ம சர்மா, நீ முன் ஒரு பிறவியில் வெளி தேசாந்தரத்தில் இருந்து வந்தவனும், நோய் வாய்பட்டவனுமான ஒரு அந்தணனுக்கு உன் வீட்டு முன் முற்றத்தில் தங்க இடம் தந்து உணவும் தந்தாய். அவன் உடல் நலமடைய உன்னுடைய மனைவியும் அவள் துலா ஸ்நானத்தில் கிடைத்த புண்ணியத்தை அவருக்கு தந்து அவருடைய நோய் தீர உதவினாள். அதற்கு பிரதி உபகாரமாக அந்த அந்தணரும் தான் அங்கிருந்துக் கிளம்பிப் போகும் முன் அங்கிருந்தவரை தினமும் காவேரியில் ஸ்நானம் செய்து அதில் இருந்துக் கிடைத்த அனைத்துப் புண்ணியங்களையும் உங்களுக்கு விட்டு விட்டு சென்றார். ஆகவே அவர் கொடுத்த புண்ணியமும், உன் மனைவி செய்த புண்ணியமும் சேர்ந்து உனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தது.
ஆனால் இந்தப் பிறவியில் சில காலத்துக்கு நீயோ தகாத வாழ்கையை வாழ்ந்து கொண்டு, தான தருமங்கள் செய்யாமல், துலா ஸ்நானமும் செய்யாமல், விரத பூஜைகளை செய்யாமல் இருந்த பாபங்களினால் உன் நீண்ட ஆயுளில் சில வருட ஆயுள் குறைந்தது. அப்போதுதான் உன் ஆயுசும் முடிவடைய நான் உன்னை இங்கே அழைத்து வரச் சொன்னேன். ஆனாலும் உன் மனைவியின் புண்ணியத்தினால் நீ மீண்டும் உன் ஆயுசை வளர்த்துக் கொண்டு விட்டாய். ஆகவே இனியாவது நல்ல புத்தியுடன் வாழ்ந்து கொண்டு உன் மனைவியுடன் சுகமாக வாழ்ந்து வா’ என்று புத்திமதி கூறி ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய மேலும் பல தர்ம காரியங்களையும், தர்ம நெறிகளையும் உபதேசித்தார். தன்னுடைய தர்ம நெறி நியாயத்தில் அமைந்தது என்றும், சிரித்துக் கொண்டே பாபத்தை செய்யும் பாபாத்மாக்களுக்கு நரகத்தில் எத்தனை கொடிய தண்டனைகள் கிடைக்கும் என்பதையும் , அதற்காக அழுது கொண்டே அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் குறித்து விவரமாகக் கூறினார். அதன் பின் பிரும்ம சர்மாவை அனுப்பியதும், அவர் உடலில் அவரது ஆத்மா மீண்டும் புகுந்து கொள்ள, உறக்கத்தில் இருந்து விழித்தெழுவது போல பிரும்ம சர்மா மீண்டும் பிழைத்து எழுந்தார். அதைக் கண்ட அவருடைய மனைவியும் அதீத ஆனந்தம் அடைந்து, யமதர்மராஜரையும் மற்றக் கடவுட்களுடன் அன்று முதல் வணங்கத் துவங்கினாள். மறு ஜென்மம் எடுத்து பூமிக்கு திரும்பிய பிரும்ம சர்மாவும் சுசீளையும் வெகு காலம் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அப்படி இருக்கையில் சுசீலை ஒரு நாள் மரணம் அடைந்து சொர்கத்துக்கு சென்று விட்டாள்.
சுசீலை மரணம் அடைந்ததும் பிரும்ம சர்மா துக்கத்தினால் பீடிக்கப்பட்டார். ஒருநாள் அவர் வீட்டில் திருடர்கள் புகுந்து அவரிடம் இருந்த அனைத்தையும் களவாடிக் கொண்டு சென்று விட்டார்கள். அதனால் பிட்ஷாண்டியாகி விட்ட அவர் கையில் காசில்லாமல் உண்ண உணவும் இல்லாமல் திண்டாட வேண்டி இருந்தது. ஆகவே மீண்டும் அவருடைய புத்தி பிழறியது. சோதனையில் மனிதன் ஒன்று தடம் பிழறாமல் நிலையாக நின்று நற்கதி அடைவான், இல்லை தடம் மாறி தவறுகளைப் புரிந்து மஹா பாவியாகி விடுவான். பிரும்ம சர்மாவின் வாழ்க்கையிலும் பின்னதே நடந்தது. உண்ண உணவு இல்லை, ஏழ்மை, பசி, தாகம் என அவரை அனைத்தும் ஒன்று சேர வாட்டி எடுக்க மீண்டும் தர்ம நெறியை தூக்கி எறிந்தார். கிடைத்ததை எல்லாம் ராப்ப் பகல் பார்க்காமல் உண்டார். கண்ட இடங்களுக்கும் சென்று அங்கு கிடைத்த உணவுகளை உண்டார். எச்சிலையும் பார்க்காமல் எங்கெங்கோ உண்டார். நியமங்களை விட்டொழித்தார். ஆனால் அவர் வேதங்களில், சாஸ்திரங்களில், புரோகிதத்தில் வல்லுனராக இருந்ததினால் அவரை திவசம், சிரார்த்தம், கருமாதி என பலவற்றுக்கும் பலரும் அழைத்தார்கள். அவரும் தயங்காமல் அங்கெல்லாம் சென்று அவற்றை செய்து கொடுத்து நிறப்பிக் கொண்டார். ஆனால் பல நேரங்களில் குளித்து விட்டு வந்து பூஜை புனஸ்காரங்களை செய்வது போல பாசாங்கு செய்து விட்டு, சோம்பலினால், குளிக்காமலேயே சில இடங்களுக்கு சென்று பூஜை, புனஸ்காரங்கள் மற்றும் பிற சாஸ்த்திர காரியங்களை செய்தார். ஒருமுறை ஆச்சாரமாக செய்ய வேண்டிய சிவ பூஜையைக் கூட ஆச்சாரமில்லாமல் செய்து கொடுத்தார். இப்படி எல்லாம் செய்ததினால் அளவற்ற பாபங்கள் அவருக்கு சேர்ந்தன. அவர் மரணம் அடைந்ததும் அதற்கு கடுமையான தண்டனையாக மலபோஜனம் தின்னும் இடம் எனும் நரகத்தில் வீழ்ந்து, விழ ஜந்துக்களால் கடிக்கப்பட்டு, நரக வேதனைகளை அணு அணுவாக அனுபவித்தப் பின் முடிவாக மீண்டும் ஒரு பன்றியாக பிறவி எடுத்து பூமிக்கு வந்தார். பூமியில் மலம் தின்னும் பன்றியாகவே வாழ்ந்து வரவேண்டி இருந்தது.
அப்போது விருதாச்சல ஷேத்திரத்தில் அத்ரேய கோத்திரத்தில் பத்ம கர்ப்பர் என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். அவர் அடக்கமும், பொறுமையும் கொண்டவர். ஆசாரங்களை முறையாக அனுஷ்டித்தவர். பஞ்ச மகாகவ்யங்களை நியமத்துடன் செய்து வந்து விஷ்ணு பூஜை போன்றவற்றை செய்து வந்தவர். ஒருநாள் கடுமையான சூறாவளியுடன் மழையும் சேர்ந்து கொண்டது. அது துலா மாசம் ஆகும். தன்னுடன் பல வித்வான்களை அழைத்துக் கொண்டு விடியற் காலையில் காவேரி ஸ்நானம் செய்யக் கிளம்பிச் சென்றார். மழை பெய்து இருந்ததினால் பூமியில் உண்டான வாசனையை முகர்ந்து கொண்டு பன்றி உருவில் இருந்த பிரும்ம சர்மாவும் இன்னொரு பன்றியுடன் சேர்ந்து அவர்கள் சென்ற வழியில் குர்…..குர் எனக் கத்திக் கொண்டு சென்று கொண்டு இருந்தது. அங்காங்கே பூமியை தோண்டித் தோண்டி அதில் புதைந்து இருந்த கோரைக் கிழங்குகளை பிடுங்கித் தின்று கொண்டு வந்த அந்தப் பன்றியை கண்டதும் பத்ம கர்ப்பர் அவர் துரத்த முயன்றார். ஆனால் சிறிது நேரம் அவரை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த அந்த இரண்டு பன்றிகளில் ஒன்று திடீர் என என்ன காரணத்தினாலோ அவர்களை துரத்த ஆரம்பித்தது. பன்றியைக் கண்டு பயந்தோடிய பத்ம கர்ப்பர் காவேரி நதிக்கரையை அடைந்து அதில் குதித்தார். அவரை துரத்திக் கொண்டு வந்த பன்றியும் கரை அருகில் வந்து நின்று கொண்டது.
அப்போது அதில் ஸ்நானம் செய்து கொண்டு இருந்த தாசி ஒருவள், நீரில் மூழ்கியதும் தன் தலையில் இருந்த நீரை வெளியேற்ற தலை முடியை உதறினாள். அதில் சிறிது திவலை நீர் அந்த பன்றியின் உடல் மீது சென்று விழ பன்றி உருவம் மறைந்து பிரும்ம சர்மா மனித உடலைப் பெற்றார். அவரது அனைத்து பாபங்களும் மறைந்திருந்தன. தனக்கு பாப விமோசனம் கொடுத்த தாசியை வணங்கி விட்டு, பத்ம கர்ப்பரையும் வணங்கி விட்டு சென்ற பிரும்ம சர்மா விரைவில் மரணம் அடைந்து மோட்ஷத்தை அடைந்தார். இப்படியாக அவருடைய வாழ்க்கையில் முதலில் பல பாபங்களை செய்து, துலா மாத ஸ்நானம் செய்து புண்ணியங்களை பெற்று அந்த புன்னியங்களினால் முந்தைய பாபங்களை விலக்கிக் கொண்டு நற்கதி அடைந்தார். மீண்டும் சில காலம் பொறுத்து மீண்டும் தீமைகளை செய்து பாபங்களை அடைந்தவர் காவேரி ஸ்நானம் செய்து கொண்டிருந்த தாசியின் தலை முடியில் இருந்து தெறித்த நீர் திவலைகளினால் சாப விமோசனம் பெற்று நற்கதி அடைந்த பிரும்ம சர்மாவின் வாழ்க்கையில் இருந்தே காவேரி நதியின் மகிமையை உணர முடியும்’ என்று நாரதர் கூறி முடித்தார்.
அதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த பாண்டவ சகோதரர்களுக்கு இடையில் அமர்ந்து இருந்த தர்மர் நாரத முனியைப் பார்த்துக் கேட்டார் ‘மஹா முனிவரே, நீங்கள் காவேரி நதியின் பெருமை மற்றும் கார்த்திகை மாத மகாத்மியத்தைக் கூறுகையில், இடையில் தவளையும், பாம்பும் முக்தி பெற்றதைப் போல என்று ஒரு வாக்கியம் கூறினீர்களே. அதென்ன தவளையும் பாம்பும் கதை ? அந்தக் கதையையும் எமக்கு விளக்குவீர்களா’ எனக் கேட்டார்.