துலா புராணம்- 10
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

 நாரதர் கூறலானார் ‘ தர்மபுத்திரனே, உன்னை விட அதிர்ஷ்டசாலி வேறு யாருமே இருக்க முடியாது என்பதற்குக் காரணம் நீயும் உன்னுடைய தந்தையைப் போல  ஸத் கதைகளை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறாய். நீ கேட்டாயே அந்த தவளை மற்றும் பாம்பின் கதை, அதை இப்போது கூறுகிறேன் கேள். அந்தக் கதையில் வரும் தவளை ஒன்று பாம்பினால் பிடிக்கப்பட்டு, காவேரியில் விழுந்து, அதன் பலனாக வைகுண்டம் சென்று பின்னர் பூமியில் அந்தணனாகப் பிறந்து மீண்டும் விஷ்ணுவை அடைந்த வரலாறு இது.

ஒரு முறை விராட தேசத்தில் வாஸ்து ஹோமம் என்ற ஒரு அக்ரஹாரம் இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் யாகம், ஹோமம், காலட்சேபங்கள் போன்றவை எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அங்கிருந்தவர்கள் தீய மனதில்லாதவர்கள்.நல்ல குணங்களைப் பெற்று இருந்தவர்கள்  நல் வழியில் நடந்து வந்தவர்கள். அங்கிருந்தவர்கள் விடியற்காலை எழுந்து நியமங்களை செய்து விட்டு, அங்கிருந்த ஒரு நெல்லி மரத்தடிக்குப் போய்  அதற்க்கு அடியில்  அமர்ந்து கொண்டு கார்த்திகைப் புராணம் போன்றவாற்றைக் கேட்பார்கள். அப்படிப்பட்ட அந்த அக்ரஹாரத்தில் ஒரு நாள் ஒரு காக்கை தனது அலகால் ஒரு தவளையை பிடித்துக் கொண்டு வந்து தின்னத் துவங்கியது. அந்த தவளையும் காக்கையிடம் இருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக நெளிய அது காக்கையின் அலகில் இருந்து கீழே விழுந்தது. அங்கு அமர்ந்திருந்த  பிராமணர் ஒருவர் வேட்டியில் வந்து விழ அதை அவர் தட்டி விட்டார். அது நடந்த இடம் காவேரிக் கரை. அந்த அந்தணன் தட்டி விட்ட தவளையும் தாவி குதித்து காவேரியில் சென்று  குதித்தது. அதன் தலைவிதியைப் பார். அப்போதுதான் இறை தேடி தண்ணீரில் அலைந்து கொண்டு இருந்த நீர் பாம்பு அந்த தவளையைப் பார்த்து உடனே ஓடி வந்து அந்த தவளையை கவ்வி பிடித்து விழுங்கத் துவங்கியது.

உடனே அந்த தவளை அந்த பாம்பைப் பார்த்துக் கூறியது ‘ பாவ ஜென்மம் கொண்ட பாம்மே, நீயும் நானும் இருவருமே தாழ்ந்த இனத்தில்தான் – மிருக இனத்தில்- பிறந்து உள்ளோம்.  உன் முன் பிறவியின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் விஷ பலம் நமக்கு அதிகமாக இருக்கிறது’ என்று கர்வம் கொண்டு, என்னைப் போன்ற சாதுவை ஏன் ஹிம்சிக்கிறாய்? சுயநலம் கொண்டு உன் வயிறு நிரம்புவதையே முக்கியமாக நினைக்கிறாய். இத்தகையவர்கள் உயிர் வாழ்வதும் மரணம் அடைவதும் ஒன்றுதான். எவனொருவன் மற்றவர்களின் துயரத்தைப் பார்க்காமல் தன் சுகத்தை மட்டுமே பார்ப்பானோ அவன் நரகத்தையே அடைவான். ஆகவே அப்படிப்பட்டவனை விட மூடன் வேறு யாரும் இல்லை. நாம் உயிருடன் உள்ளவரை பிறருக்கு நன்மைகளைச் செய்து கொண்டு இருந்தவாறு இருக்க வேண்டுமே தவிர ஒருவரையும் துன்புறுத்தலாவாது. நீ உள்ள இந்த பூமியின் பெருமை தெரியுமா? இங்கு காவேரி ஆறு ஓடுகிறது. இங்குள்ளவர்கள் சாதுக்கள். மற்றவர்களுக்கு என்றும் உதவி செய்பவர்கள். அப்படிப்பட்ட நல்லவர்கள் உள்ள பூமியில் வாழும் உனக்கு எப்படி இந்த தீய குணம் வந்தது?’ என்று தவளைக் கேட்க பாம்பு கூறியது ‘உன்னையே சாது என்று கூறிக் கொள்கிறாயே, உனக்கு இது கூடவா தெரியவில்லை? யார் யார் எந்தப் பிறவியில் உள்ளார்களோ அதற்கேற்ப  அவர்களின் குணமும், உணவும் இருக்கும். எனக்கு ஆகாரம் என் கையில் கிடைக்கும் ஜந்துக்கள்தான் எனும்போது என்னை நீ ஏன் குறைக் கூறுகிறாய்? ஆனால் நீ கூறியதைக் கேட்டதும் எனக்கும் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உனக்கு எப்படி என்னுடைய பூர்வ ஜென்மம் என்ன என்பது தெரியும்? நீ எப்படி உன்னை ஒரு சாது என்று கூறிக் கொள்கிறாய்? அதை நீ விவரித்தால் உன்னை நான் முழுங்க மாட்டேன். விட்டு விடுவேன்’ என்று கூறியது.

அதைக் கேட்ட தவளையும் முதலில் தன் கதையைக் கூறத் துவங்கியது. ‘நான் முன்பு பிராம்மணனாக காஞ்சீபுரத்தில் பிறந்தவன். நான்கு வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் நன்கறிந்தவன். என்னை பலரும் புகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். வெளியில் ஒரு முகமும், உள்ளுக்குள் இன்னொரு முகத்தையும் கொண்டு வாழ்ந்தவன். வெளியில் மிக நல்லவன் போல நடித்தும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்தும் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் தீய செயல்களைச் செய்யும் துஷ்டர்களோடு தொடர்ப்பை வைத்துக் கொண்டு இருந்தேன். காலையில் மடங்களிலும், ஆலயங்களிலும் பிரவசனங்கள் செய்வதுண்டு. அப்போது அங்கு வருபவர்கள்  தட்ஷணையாக தட்டுக்களில் போடுவது அனைத்தையும் நானே கொண்டு சென்று விடுவேன். என்னைப் பொறுத்தவரை நான், எனக்கு, என் குடும்பத்துக்கு என்றே சம்பந்தி சேர்த்தேன். நான் செய்யும் பிரசங்க முடிவில் நான் எதிர்பார்க்கும் தொகைக் கிடைக்காவிடில் கோபமடைந்து திட்டுவேன். நான் மெத்த படித்தப் பண்டிதர் என்று அனைவரும் நம்பியதினால் நான் எங்கு சென்றாலும் நான் அழைத்துச் செல்லும் பண்டிதர்களுக்கு மிகக் குறைந்த அளவு பணத்தையே தருவதுண்டு. அந்த காரியங்களுக்கு என்னை அழைப்பவர்கள் நானே பெரிய பண்டிதன் என்ற நினைப்பில் அனைத்து தட்ஷணைகளையும் என்னிடம் தந்து விடுவார்கள். ஆனால் அவற்றை நான் அனைவருக்கும் சரியான பங்கு போட்டுக் கொடுக்காமல் எனக்கே அதிகம் வைத்துக் கொண்டு விடுவேன். அப்படித்தான் ஒருமுறை மஹா மாசத்தில் நான்கு வர்ணத்தினரும் ஒன்று சேர்ந்து பெரிய ஸ்நானம் செய்வதற்கு ஒரு ஏற்பாட்டை செய்தார்கள். அதில் நடைபெற்ற பூர்வாங்க  காரியத்தை செய்து தந்த  எனக்கு ஏராளமான சன்மானம் கொடுத்தார்கள். என்னை புஷ்பங்களால் அலங்கரித்த பல்லக்கில் உட்கார வைத்து தலையிலிருந்து கால்வரை அலங்கரித்து நானாவித வாத்தியங்களுடன் என்னைப் பல்லக்குடன் பட்டணத்தில் அழைத்து சென்று தங்கம், வெள்ளி போன்ற பாத்திரங்கள், ரத்தனம் பதித்த நகைகள், வஸ்திரங்கள் என பலவற்றையும் கௌத்தார்கள்.  நானோ என்னுடன் வந்திருந்தவர்களுக்கு சல்லிக் காசுக் கூடக் கொடுக்காமல் அத்தனையையும் என் வீட்டிற்கே எடுத்துச் சென்று என் மனைவி, மகள், மருமகன், மாப்பிள்ளை என அனைவருக்கும் கொடுத்தேன். அதில் மற்ற பண்டிதர்களுக்கு வருத்தம் ஏற்பட்டு இப்படி ஒரு ஈனக் காரியத்தை செய்கிறாரே எனக்கு சாபம் கொடுத்தார்கள். என் வீட்டில் ஒரு அந்தணனுக்கும் உணவளித்தது இல்லை. ஆனால் அந்நியர்கள் வீடுகளில் நானும் உணவருந்தி, என் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்வது உண்டு. ஒரு நாளும் நான் கடவுளை சரிவர ஆராதித்ததில்லை அதிதிகளைப் பூஜித்ததே இல்லை.  நான் நடத்தி வைத்த பூஜைகளில் மீதி இருக்கும் துளஸி, புஷ்பம் முதலியவற்றையும் விட்டு வைக்காமல் என் வீட்டுக்கு எடுத்து வந்து விடுவேன். அவற்றையும் விற்று பணத்தை சேமிப்பேன்.

ஒரு முறை ஒரு வைபவத்தில் நான் கலந்து கொண்டு ஏராளமான சன்மானம் பெற்றதும், என்னுடன் வந்திருந்த புரோகிதர்கள் எங்களுக்கும் அதில் ஒரு வஸ்திரமாவது கொடு என்று கேட்டார்கள். நானோ அகம்பாவமாக யாருக்கு என்ன தேவையோ அதை பணத்தைக் கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுங்கள்  என்று கூறி விட்டேன். அடுத்த சில நாட்களிலேயே   எனக்கு உடல் நலமின்றிப் போயிற்று.  அது என்னை மரணப் படுக்கைக்குக் கொண்டு சென்று விட்டது.  படுக்கையில் படுத்துக் கொண்டேன். நான் சம்பாத்தியம் செய்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களையும் விட்டு விட்டுச் செல்கிறேனே என அழுதபோது என் புத்திரன் என்னிடம் கூறினான் ‘ அப்பா, இது வரை உங்கள் வாழ்க்கையில் பணத்தை சேமிப்பதிலேயே புத்தியை செலுத்தி இருந்தீர்கள். உற்றார் உறவினர், சம்பத்து என எதுவுமே இறந்து போக உள்ளவனோடு   செல்லாது.  ஆகவே இறந்தப் பின் புண்ணியம் பெற வேண்டுமானால் இறக்கும் தருவாயிலாவது மனதிலும், இதயத்திலும் ஹரி நாமத்தை விடாது ஓத வேண்டும். உங்களுக்கும் எனக்கும் கூட என்ன பந்தம்? அது நீங்கள் மரணம் அடைந்தப்  பின் அந்த உறவு உங்களுடன் வரப்போவது இல்லை. ஆகவே  இறக்கும் தறுவாயிலாவது தர்ம சிந்தனைக் கொண்டு இருங்கள்’ என்றான். அப்போது அங்கு இருந்த என்னுடைய மனைவியும் அது போலவே பல விஷயங்களைக் கூறி குறைந்தபட்ஷம் நான் மரணம் அடையும் முன்னராவது நான் சம்பாதித்து வைத்திருந்த பொருட்களையும், வஸ்ரங்களையும், நிலங்களையும் பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும், வேதியர்களுக்கும் கொடுத்து விடு என்று என் வாயால் கூறுமாறு கேட்டாள். ஆனால் என் மனதிலோ அவை எதுவுமே ஏறவில்லை. அப்போது திடீரென விடாதே, பிடி, குத்து, கொல்லு என்ற கோஷத்துடன் வந்த யம கின்கர்கள் என்னை நரகத்துக்கு இழுத்துச் சென்று படாத பாடு படுத்தினார்கள். நாயை விட்டு கடித்து குதறச் சொன்னார்கள். மல ஜலத்தில் என்னை தூக்கிப் போட்டார்கள். சவுக்கால் அடித்தார்கள். தலைகீழாகத் தொங்கவிட்டு நாக்கை கயிறைக் கட்டி இழுத்து ஹிம்சித்தார்கள். அடுத்த பத்து பிறவிகளிலும் இப்படியாகவே பிறந்து-இறந்து சித்திரவதை  பட்டேன். அதன் பின் ஒரு பிறவியில் பிராமணனாகப் பிறந்து கார்த்திகை மாதத்தில் நெல்லி மரத்தடியில் அமர்ந்து கொண்டு நல்ல பிரசங்கத்தைக் கேட்டேன். காவேரி ஸ்நானம் செய்தேன். பத்து அந்தணருக்கு அன்னதானம் செய்தேன். அதன் பலனாகவே இந்த ஜென்மத்தில் கடைசியாக ஒரு தவளையாகப் பிறந்து இந்தக் காவேரியில் விழுந்து  காத்திகை மாதத்தில் சாப விமோசனம் பெற்று ஸ்வர்கத்துக்கு செல்ல உள்ளேன். இதுவே என் முன் பிறவியின் கதை. இப்போது உன்னுடைய முன் பிறவிக் கதையைக் கூறுகிறேன். கேட்டுக் கொள்’ என்று கூறிவிட்டு அதையும் சொல்லத் துவங்கியது .

‘ பாம்பே நீ முன் பிறவியில் ஒரு வைசியனாக பிறந்தாய். பெரும் செல்வந்தனாக நீயும் காஞ்சீபுரத்தில் பிறந்தாய். நான் வாழ்ந்திருந்த அதே ஊரில்தான் நீயும் இருந்தாய். பாலாற்றில் கார்த்திகை மாதத்தில் ஸ்நானம் செய்து, அந்தக் கரையில் நான் ஆற்றிய கார்த்திகை மாத மாஹாத்மாயா உரையையும்  கேட்டாய். ஆனால் அந்த விரத முடிவில் எனக்கு தக்ஷிணை கொடுக்காமல் இருந்து விட்டாய். அதிக பேராசை கொண்டவன் நீ ஆயினும் ஒரு பிராமணனுக்கு அன்னமிட்டாய். அப்படி செய்தவர்கள் அடுத்தப் பிறவியில்  பாம்பாக பிறப்பு எடுப்பார்கள்.  அதனால்தான் இந்தப் பிறவியில் நீ பாம்பாக பிறவி எடுத்துள்ளாய்.   நீ செய்த பாவத்தினால் பல பிறவிகளை எடுத்துப் பல துன்பங்களை அடைவாய்.  இன்னும் ஐந்து ஜென்மங்கள் நீ வேடனாகப் பிறப்பு எடுப்பாய். அடுத்த உன் பிறவியில் கார்த்திகை மாதத்தில் உன்னை ஒரு யானை துரத்திக் கொண்டே வரும். நீ யானையிடமிருந்து தப்பிக்க எண்ணி கரு நெல்லி மரத்தின் அருகில்  ஓடிக் கொண்டு இருக்கும் கிருஷ்ணா நதியில் குதித்து அதில் மூழ்கி இறந்து விடுவாய். அப்போது அங்கு உள்ளவர்கள் உரத்தக் குரலில் கூறும் சிவ சிவா என்ற வார்த்தையை உன் காதுகளில்  கேட்க உள்ளாய். அந்த உச்சாடனைகளை கேட்க உள்ளதினால் நீ சிவலோகத்தை அடைவாய். ஆகவே இனியாவது நீ யாருக்கும் தீங்கு செய்யாதே. தானாக கிடைக்கும் பொருளை உண்டு திருப்தியுடன் வாழப் பழகிக் கொள்’

இவ்வாறு பாம்புக்கு தவளை உபதேசம் செய்து முடித்ததும் பாம்பின் விஷப்பற்கள் தவளையின் உடலில் பதிந்து விட்டதினால் உடலெல்லாம் விஷமேறி தவளை இறந்து விட்டது. அப்போது ஆகாயத்தில் இருந்து ஒரு புஷ்பங்களினால் நன்கு அலங்கரிக்கப்பட்ட விமானம் வந்து அதில் தவளையை ஏற்றிக் கொண்டு சென்றது. புஷ்பத்தினால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து கொண்டே சென்ற  தவளை கூறியது ‘ பாம்பே, நான் கூறியவற்றை மறந்து விடாமல் நற்காரியங்களை செய். நீயும் விரைவில்  நல்ல கதியை அடைவாய்’ என்று கூறிக் கொண்டே சென்ற தவளை ஸ்வர்க்க லோகத்தை அடைந்தது.
தர்ம புத்திரனே, இதில் இருந்தாவது கார்த்திகை மாதத்துக்கு எவ்வளவு மகிமை உள்ளது என்பதை உணர்ந்தாயா? இதை சொல்பவனும் கேட்பவனும் ஸத்கதியை அடைவான். கார்த்திகையில் காவேரி நதியில் ஸ்நானம் செய்பவன் எவ்வளவுநற்  பயனை அடைவான் என்பது வார்த்தைக்கும் மனத்துக்கும் எட்டாத ஒன்றாகும்’. இவ்வாறு நாரதர் கார்த்திகை மாதத்தின் மகிமையைப் பஞ்ச பாண்டவர்களுக்கு கூறினார்.

 ………..தொடரும் 

முந்தைய பாகங்கள்

துலா புராணம் — 1
துலா புராணம் – 2

துலா புராணம் – 3

துலா புராணம் – 4
துலா புராணம் – 5
துலா புராணம் – 6

துலா புராணம் – 7
துலா புராணம் – 8 

துலா புராணம் – 9