ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் – 33

  ஹிமாச்சலப் பிரதேசத்தில்

அற்புத சின்னமஸ்தா

தேவி  ஆலயம்


சாந்திப்பிரியா 

 மகாவித்யாவில் வரும் சின்னமஸ்திகா தேவியின் ஆலயமே ஹிமாச்சலப் பிரதேசத்தில் உனா எனும் மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயத்தின் பெயர் சிந்த்பூரணி ஆலயம். அந்த ஆலயம் சக்திபீட ஆலயங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆலயத்தில் உள்ள தேவியை தலை இல்லாத  துர்கா தேவியின் அவதாரமான சின்னமஸ்திகா தேவியாகவே வணங்குகின்றார்கள். அந்த தேவியை முறைப்படி வணங்கித் துதிப்போருக்கு வேண்டியதை அவள் தருவதாக நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் விலகும்  . மன அமைதி கிடைக்கும் , எதிரிகள் மீதான பயம் ஒழியும், வீட்டிலும் தீயவை வராதுஅவளை சித்தி கொண்டால் பல அபூர்வ சக்திகள் கிடைக்குமாம்.

தேவர்களை துன்புறுத்தி வந்த நிஷும்பவை  அழிக்கக் கிளம்பிச் சென்ற துர்க்கை  தன்னுள் இருந்து ஒரு பயங்கரமான தேவியை படித்தால். அகோர உருவமும், ஆக்ரோஷமுமான அந்த தேவி அந்த அசுரனை வதம் செய்தப்பின் தன்னுடன் இருந்த  காவல் தேவதைகளின் பசியை  தீர்க்க தன்னுடைய தலையை வெட்டிக் கொண்டு  அதில் இருந்து வெளியான ரத்தத்தை அவர்களுக்குக் கொடுத்தாளாம்.  கொடுமையான  கோலத்தில் இருந்தாலும் தன்னை அண்டி நிற்பவர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தரும் அத்தனை  கருணை மிக்கவளாம் அவள். அப்படிப்பட்ட கோலத்தில் நின்று கொண்டு உள்ள சின்னமஸ்தா தேவி வெட்டப்பட்ட தன் தலையில் இருந்து பீறிட்டு வெளிவந்த ரத்தத்தை மற்றவர்களுக்கும் தரும் கோலம் என்பது தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு அவர்களுக்குத் தேவையானவற்றை அள்ளித் தருதல் என்பதை காட்டும் தாத்பர்யம்.  தட்ஷ யாகத்தில் ஏற்பட்ட சச்சரவினால் ஏற்பட்ட பிரச்சனையில் பார்வதியின் வெட்டப்பட்ட உடலின் இருந்து விழுந்த பாகங்களில் ஒன்றான அவளுடைய பாதம் விழுந்த இடத்திலேயே இந்த ஆலயம் எழுந்துள்ளது .
ஆலயத்தில் தேவியின் சிலை ஒரு உருண்டையான கல்லாகவே உள்ளது. அந்த இடத்தில் ஆலயம் எழக் காரணமானவர் பண்டிட் மாய் தாஸ் எனும் ஒரு சரஸ்வத் பிராமணராம். அவருடைய வம்சாவளியினரே இருபத்தி ஆறு வம்சங்களாக அங்கு பூஜைகளை செய்து வருகின்றனர்.

பண்டிட் மாய் தாஸ் துர்கையின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருடைய அளவுக்கு மீறிய பக்தி மார்க்கம் அவர் உடன் பிறந்தோருக்கு பிடிக்கவில்லை என்பதினால் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டு இருந்தவர் ஒரு ஆல மரத்தடியில் இளைப்பாறினார் . சற்றே கண் அயர்ந்தவர் கனவில் ஒரு அழகிய பெண் தோன்றி தானே அங்குள்ள கடவுள் எனவும் தன்னை அங்கேயே இருந்து வழிபடுமாறும் கூறி மறைந்தாள். முழித்து எழுந்ததும் அவர் அதை மறந்து விட்டார்.

மீண்டும் திரும்பி வந்தபோது அதே மரத்தடியில் அவர்  இளைப்பாற அவருக்கு துர்க்கை  தேவி மீண்டும் சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்சி தந்து சின்னமஸ்தா தேவியான தான்தான் அந்த மரத்தடியில் ஒரு உருண்டை வடிவமான கல்லாக தங்கி உள்ளதாகக் கூறி  அதை ஒரு இடத்தில் வைத்து தன்னை  பூஜை செய்தவாறு அங்கேயே இருக்குமாறு கூறினாள். அவள் கூறியபடியே அவரும் அந்தக் கல்லை எடுத்து வைத்து பூஜித்து வந்தார்.  அதன் பின் அங்கு பல அற்புதங்கள் நடந்தன.

மெல்ல மெல்ல அங்கு பெரிய ஆலயமும் சின்னமஸ்தா தேவிக்கு எழுந்தது. காடு மறைந்து மக்கள் குடியேறினர். இன்று அந்த ஆலயம் புகழ்பெற்ற புனிதத் தலமாகி விட்டது. ஆலயத்துக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர், ஜலந்தர் மற்றும்  ரோதக் மாநிலத்தில் இருந்தும் நேரடியாகப் போக பஸ் வசதிகள் உள்ளன. ஆலயத்துக்கு சுமார் ஒரு கிலோ மீடர் தொலைவிலேயே வாகனம் நிறுத்தப்பட்டு விடுகின்றன. அங்கிருந்து நடந்தே படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். அந்த ஆலயத்தின் அருகில்தான் ஆலயத்தை நிறுவிய பண்டிட் மாய் தாஸின் சமாதியும் உள்ளன.