சாந்திப்பிரியா

இன்று அகில உலகமெல்லாம் புகழ்ந்து போற்றி வணங்கப்படும் சீரடி சாயிபாபாவின் புகழை இந்தியாவின் பல பாகங்களிலும் கொண்டு சென்ற பெருமை ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி என்பவரையே சாரும்.  அவரே சென்னையில் அகில இந்திய சாயி சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி பல இடங்களிலும் ஸ்ரீ  சாயியின் ஆலயங்கள் எழக் காரணமாக இருந்தவர். ஸ்ரீ சாயிபாபாவின் புகழை இந்தியா முழுவதும் பரப்பியவர். அவர் வரலாறு சோகமானது. அதே சமயம் ஆன்மீக பக்தர்களின் மனதுக்கு இனிமையானது.

தமிழ்நாட்டில் பிராமணர் குடும்பத்தில் பிறந்த அந்த மஹான் மனிதர்களை மனிதர்களாகவே மதிக்கப் பழகியவர். தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள பவானி என்ற இடம் பிரபலமானது . அங்குதான் ஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமி அவர்கள் ஸ்ரீ  வெங்கடகிரி ஐயர் மற்றும் அவருடைய மனைவியான திருமதி அங்கச்சி அம்மாள் என்ற பிராமணத் தம்பதியாருக்கு பிறந்தார். அவர் பிறந்த வேளையே விசித்திரமானதாக இருந்தது. கருத்தரித்து இருந்த திருமதி அங்கச்சியம்மாள் வீட்டின் பின் புறத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது எந்த விதமான பிரசவ வலியும் இன்றி, எவருடைய துணையும் இன்றி வீட்டின் முற்றத்திலேயே ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட குழந்தை பிறந்தது. தான் கடவுளின் அவதாரம், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததினால்தான் தன்னுடையப் பிறப்பை அனைவருக்கும் பொதுவான இடத்தில் , பரந்த வெளியில், ஆகாயத்தின் கீழே நிகழ்த்திக் கொண்டிருந்துள்ளார்.  வளரத் துவங்கிய குழந்தைக்கு  வீட்டிலேயே ஆசிரியர் வர வரவழைக்கப்பட்டு பாடங்கள் போதிக்கப்பட்டன.

இயற்கையாகவே ஸ்ரீ நரசிம்மர் எவருக்கும் அடங்க மாட்டார். எவருடனும் சண்டைக்கு போக மாட்டார், ஆனால் வலுவில் வந்த வந்த சண்டையை எளிதில் விடவும் மாட்டார். அதே சமயம் தன்மானமும் தனித்தன்மையையும் கொண்டவராக இருந்தார். அவருடன் பிறந்த சகோதரர் ஸ்ரீ லஷ்மணன் என்பவரை சிறு வயதிலேயே எவரோ கடத்திச் சென்று, அவர்  உடம்பில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு கொன்று போட்டு விட்டு சென்று விட்டனர். ஸ்ரீ  லஷ்மணரைத் தொடர்ந்து ஸ்ரீ நரசிம்மரும் நதியில் விழுந்து மரணம் அடைய இருந்த கண்டத்தில் இருந்துத் தப்பினார். ஸ்ரீ நரசிம்மர் எனும் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர் அந்த குழந்தை ஒரு கண்டத்தில் இருந்து தப்பி விட்டதினால், பல வருடங்கள் உயிருடன் இருக்கும் எனவும், ஆனால் அவர்கள் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை தந்தார். அது மட்டும் அல்ல அந்த குழந்தை பிற்காலத்தில் பலரது வாழ்வை நிர்ணயிக்கப் போகும் மனிதராக இருப்பார் என்றும் அதனால் ஒருவேளை அவர் குடும்பத்தை விட்டு விலகி இருக்கவும் கூடும் என்று கூறினார். ஆகவே வழக்கறிஞ்சரான அவருடைய தந்தை சேலம் நகரில் குடியேறினார். அவர்கள் நல்ல வசதியானவர்கள் என்பதினால் வீட்டில் பெரிய தோட்டம் அமைத்து அவற்றை பராமரிக்க வேலையாட்களையும் வைத்து இருந்தார்கள். வசதிக்கு குறைவில்லை. அதே நேரத்தில் அவர்கள் நல்ல கொடையாளிகள். ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவியவர்கள்.

ஸ்ரீ நரசிம்மரோ மிகவும் புத்திசாலியானவர், துறுதுருப்பானவர் என்பதினால் படிப்பில்  நாட்டம் இல்லாமல் இருந்தார்.தாம் கற்ற எதையும் தீர ஆராய்ந்து பார்க்காமல் நம்ப மறுத்தவர். ஆகவே அந்த இளம் வயதிலேயே அவருக்கு தம்மை மீறிய சக்திகளை அறிந்து  கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. ஸ்ரீ நரசிம்மர் வீட்டில் அடிக்கடி ஆன்மீக சம்மந்தமான நிகழ்ச்சிகள் நடப்பது உண்டு. பஜனை, சொற்பொழிவுகள் போன்று பல நிகழ்ச்சிகளை அவர் தந்தை நடத்திக் கொண்டே இருந்தார். அதனால்தானோ என்னவோ இளம் வயதிலேயே ஸ்ரீ  நரசிம்மரின் மனதும் ஆன்மீகத்தில்  ஈடுபாடு இருந்தது. அது போதாது என்று சாதுக்கள் சன்யாசிகளின் மீதும் அதிக அளவு ஈடுபாடு தோன்றியது. அந்த காலங்களில் பிராமண வகுப்பினருக்கு இளம் வயதிலேயே பூணுல் போடுவது உண்டு. ஆகவே ஸ்ரீ நரசிம்மருக்கும் அந்த சடங்கு முடிந்தது. அவர் ஆசாரங்களைக் கடைபிடிக்க வேண்டி இருந்தது.

மெல்ல மெல்ல வளர்ந்து வந்த ஸ்ரீ நரசிம்மர் சேலத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்பு படிக்க சென்னைக்குச் சென்றார்.  அங்கு சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்தார். சட்டப் படிப்பை சென்னையில் முடித்துக் கொண்டு சேலம் சென்று அங்கு பயிற்சியை முடித்துக் கொண்டப் பின் 1895 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்து நேரடியாக பார் கவுன்சலில் சேர்ந்து விட்டார். திறமையான வாதத் திறமை இருந்ததினாலும், சட்டத்தை நன்கு அறிந்து இருந்ததினாலும், விடா முயற்சிகளினாலும் விரைவில் அவர் பார் கவுன்சிலின் தலைவரானார். வாதத் திறமை மிக்கவரான அவர் பல நேரங்களில் வழக்கின் தன்மையைக் கருதி நீதி மன்றத்தில் வழக்குகளை நடத்தாமல் பலருக்கும் சமரசங்கள் செய்து பிரச்சனைகளை தீர்த்து உள்ளார். தேவை அற்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் நீதி மன்றத்தில் சென்று நீதி கேட்பதில் பணம் விரயம் ஆகுமே என எடுத்து உரைப்பார். அதனால் பல ஏழை எளியவர்களுக்கு வழக்கு மன்றங்களினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடிந்தது.

அவருடைய பொது ஜனத் தொண்டினால் கிடைத்த பெருமையினால் சேலம் நகர மகராட்சியின் தலைவரானார். அவருக்கு இயற்கையாகவே ஆங்கிலத்தில் புலமை இருந்தது. ஆகவே பல சங்கங்களின் உறுப்பினரானார். பல இடங்களில் இருந்தும் அவருக்கு அழைப்புக்கள் வந்தன. அப்படி இருந்தும் தான் கடை பிடித்து வந்த நியமங்களை ஒதுக்கவில்லை. அவற்றை முறையாகக் கடைபிடித்தே வந்தார். அவருக்குத் திருமணம் ஆகி ஐந்து குழந்தைகள் பிறந்தன. அவருக்குப் பிடித்த ஆன்மீக மனிதர்களில் ஸ்ரீ சுரைக்காய் சித்தர் மற்றும் ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்யா அவர்கள். அவர்கள் இருவரையும் அவர் அடிக்கடி சென்று சந்தித்து வந்தார். அவர் தொடர்ந்து செய்து வந்த தொழிலினால் பெரும் புகழும் செல்வமும் பெற்றார். அதனாலோ என்னவோ சிறிது காலம் அரசியலிலும் ஈடுபட்டார். காந்திஜியின் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு உள்ளார்.

இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த அவர் வாழ்க்கையில் சூறாவளி வீசியது போல அவருடைய தாயார் பிளேக் எனும் கொடிய நோயினால் மடிந்தார். அந்த காலத்தில் அந்த நோய் தாக்கி பல ஆயிரக்கணக்கான  மக்கள் மடிந்தனர். அது போலவே திடீரென அவர் தந்தையும் காலரா நோயினால் தாக்கப்பட்டு மடிந்தார். இரண்டு மரணங்களும் அடுத்தடுத்து ஒரே ஆண்டில் நிகழ்ந்தன. அப்போது அவரை ஸ்ரீ நரசிம்மர் என்பதற்குப் பதிலாக ஸ்ரீ நரசிம்ம ஐயர் என்றே மக்கள் அழைக்கத் துவங்கி இருந்தார்கள்.  தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்தினால் அனைத்து வசதிகளையும், ஏன் வக்கீல் தொழிலையும் விட்டு விட்டு ஒதுங்கி வாழலானார் . ஆனால் அவருடைய சோகம் அத்துடன் முடியவில்லை. தாயாரின் வருடாந்திரக் காரியம் நடந்து முடிந்த அதே தினத்தில் அவரது இளம் வயதான மகன் மற்றும் மகளை பறி கொடுத்தார். அவர்கள் இருவரும் வீட்டில் இருந்தக் கிணற்றில் கால் தவறி விழுந்து இறந்தார்கள். அது அவருக்கு இன்னும் பேரிடியாகவே இருந்தது. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மெல்ல மெல்ல அவர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு ஐந்து குழந்தைகளில் உயிருடன் இருந்த ஒரு மகனுக்கும், இரண்டு மகள்களுக்கும் ஒரு தந்தை செய்ய வேண்டிய  கடமையான திருமணத்தை செய்து  வைத்தார். 1922 ஆம் ஆண்டில் அவருடைய துணைவியாரும் மரணம் அடைந்த பின் அவர் தனி மரமானார். இப்படியாக ஐந்து வருடங்களில் அவர் வாழ்க்கையில் சூறாவளி பெரிய அளவில் வீசி அவரை தத்தளிக்க வைத்தது.

இனி தனக்கு வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என விரக்தி அடைந்தவர், எங்காவது சென்று  ஒரு குருவிடம் சரண் அடைந்து விடலாம் என்ற முடிவிற்கு வந்தார். அப்படிப்பட்ட திருப்பு முனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன் அனைத்து சுக போகங்களையும் துறந்து விட்டு கையில் பணமும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் மனதில் எதுவுமே இல்லை. யாராவது நல்ல குரு கிடைத்தால் அவரை சரண் அடைந்து மன அமைதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே  வாழ்கையின் குறிக்கோளாக வைத்துக் கொண்டார். அவர் தனக்கு ஒரு குருவை தேடிக் கொண்டு கிளம்பியதன் காரணம் அவர் பெருத்தும் மதித்து அடிக்கடி சென்று பார்த்து வந்த இரண்டு மகான்களான ஸ்ரீ சுரைக்காய் சித்தரும், ஸ்ரீ சிருங்கேரி ஸ்வாமிகளும் மரணம் அடைந்து விட்டிருந்தார்கள். அவர்கள் உயிருடன் இருந்து இருந்தால் அவர்களிடம் சென்று தீட்ஷை பெற்று இருந்திருப்பார்.

முதலில் அவர் சிருங்கேரிக்குச் சென்று அங்கிருந்த ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகளிடம் அடைக்கலம் ஆனார். அங்கு சற்றே அமைதி கிடைத்ததும் தமக்கு தீட்ஷை தருமாறு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகளிடம் கேட்க அவரோ ஸ்ரீ நரசிம்ம ஐயர் அங்கு இரண்டு மாதம் தங்கியதும் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீ ரமண மகரிஷியிடம் தீட்ஷைப் பெறுமாறு அவருக்கு அறிவுரைக் கூறி அங்கு செல்லுமாறுக் கூறி விட்டார். எந்த ஒருவருக்கும் குரு கிடைக்க வேண்டும் என்றால் அது அந்த குருமார்களின் மனதில் தோன்ற வேண்டும் என்பார்கள். ஆனால் ஸ்ரீ சிருங்கேரி ஸ்வாமிகளுக்கோ அந்த எண்ணம் மனதில் எழவே இல்லை. ஆகவே அவர் ஸ்ரீ ரமண மகரிஷியிடம் ஸ்ரீ நரசிம்ம ஐயரை அனுப்பினார்.

ஸ்ரீ ரமண மகரிஷியை சந்தித்த ஸ்ரீ  நரசிம்ம ஐயர் அவர் கூறிய அறிவுரையை ஏற்று அங்கு ஒரு குகையில் சில காலம் தங்கி தவம் புரிந்தார். அங்கிருந்தபடி பல மகான்களையும், ஆன்மீக செம்மல்களையும் சந்தித்தார். அங்கு தங்கி இருந்த காலகட்டத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்கை முறைகளை அறிந்து கொள்ளும் சந்தர்பங்கள் நிறையவே அவருக்கு கிடைத்தன. அது போல அங்கிருந்த ஸ்ரீ சேஷாத்ரி மகானின் தொடர்பும் கிடைத்தது. அவை அனைத்தும் அவர் மனதில் ஆன்மீக எண்ணம் வலுப்பட உதவின. ஸ்ரீ  ரமணாஷ்ரமத்தில் மூன்று வருடங்கள் தங்கினார். அங்கிருந்த நாட்களில் ஸ்ரீ நரசிம்ம ஐயர்  ஸ்ரீ ரமண மகாரிஷியைப் பற்றி எழுதிய புத்தகம் பெரும் பாராட்டைப் பெற்றது. ஆனாலும் ஸ்ரீ ரமணர் அவருக்கு தீட்ஷை அளிக்கவில்லை. காரணம் ஸ்ரீ நரசிம்ம ஐயருக்கு தீட்ஷை தர உள்ளவர் வடநாட்டில் இருக்கின்றார் என்ற உண்மையை அவர் அறிந்து இருந்ததுதான். பல மாதங்கள் அங்கு இருந்தும் தனக்கு தீட்ஷை கிடைக்கவில்லை என்பதை அறிந்து கொண்ட ஸ்ரீ நரசிம்ம ஐயர், ஸ்ரீ ரமண மகரிஷியின் அறிவுரைப்படி தனது குருவைத் தேடி வட நாட்டிற்குப் பயணம் ஆனார்.

போகும் வழியில் அவர் கர்னாடகாவின் ஹூப்ளி நகரை அடைந்து அங்கு சித்ராஷ்ராமத்திற்கு சென்று சில நாட்கள் அங்கு தங்கி இருந்து அந்த மடத்தின் ஸ்வாமிகளுக்கு நெருக்கமானார் . ஆனால் ஸ்ரீ நரசிம்ம ஐயருக்கு அங்கும் ஒரு குருவைப் பெரும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஸ்ரீ நரசிம்ம ஐயருக்கு நெருக்கமாக ஆகத் துவங்கிய நேரத்தில் அந்த ஆஸ்ரமத்தின் ஸ்வாமிகளும் திடீரென மரணம் அடைந்துவிட அங்கும் அவருக்கு தீட்ஷை கிடைக்கவில்லை. மனதில் அமைதி இல்லை. தான் தேடும் குருவும் கிடைக்கவில்லை. கையிலும் காசு இல்லை. மனதில் தெம்பு மட்டுமே இருந்தது. என்ன செய்வது எனத் தெரியவில்லை என்றதும் அவருக்கு ”உன்னுடைய குருநாதர் வட நாட்டில் உள்ளார், ஆகவே அவரை அங்கு தேடிப் போ” என்று ஸ்ரீ  ரமண மகரிஷி கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது. ஆகவே அவர் தன்னுடைய குருவைத் தேடி பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.

தன்னுடைய குருவைக் காண வேண்டும் என்ற வெறியுடன் வழியில் கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு பரதேசி போல ஊர் ஊராக நடந்து கொண்டே சென்றவாறு இருந்தார். சென்ற அனைத்து இடங்களையும் நடந்தும், வழியில் யாராவது வண்டியில்  தன்னை ஏற்றிக் கொண்டு சென்றால் அவர்கள் இறக்கி விடும் இடங்களில் இறங்கிக் கொண்டு பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தார். அப்படி சென்றவர் பண்டார்பூரை அடைந்தார். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்து ஸ்ரீ பாண்டுரங்க பகவானை  தரிசித்தவாறு இருந்தார். அவர் மனதில் எந்த குறிப்பிட்ட திட்டமும் இல்லை. அவர் குறிக்கோள் அனைத்துமே தனக்கு யாராவது குரு ஒருவர் கிடைக்க மாட்டாரா என்பதே. அதனால்தான் எந்தெந்த ஆலயங்களைத் தேடி அதிகம் சாது சன்யாசிகள் வருவார்களோ, எங்கெல்லாம் ஆஸ்ரமங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று கொண்டும், தனது குருவிற்காக அவர் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டும் இருந்தார். பண்டார்பூரில் இருந்தவருக்கு ஒருநாள் பகவான் ஸ்ரீ வித்தோபாவே ஒரு வயதான சாத்வினி உருவில் வந்து அவரை வடநாட்டிற்குச் சென்று குருவைத் தேடுமாறு கூறி விட்டு மறைந்தார்.

ஸ்ரீ விட்டலாவின் அறிவுரையை ஏற்று அங்கிருந்து கிளம்பிய  ஸ்ரீ நரசிம்ம ஐயர் சகோரியை அடைந்தார். அந்த காலத்தில்ஸ்ரீ  உபாசினி மகராஜ் என்பவர் மிகவும் பிரபலமானவர். ஸ்ரீ சாயிபாபாவின் நிழல் அவதாரமாகவே கருதப்பட்டவர். அவர் சகோரி எனும் இடத்தில் ஆஸ்ரமம் அமைத்து இருந்தார். அங்கு சென்று ஸ்ரீ உபாசினி மகராஜிடம் அடைக்கலம் ஆகிய ஸ்ரீ நரசிம்ம ஐயருக்கு அவர் பல சாதனாக்களை கற்றுக் கொடுத்தப் பின் சில காலம் அங்கு தங்க அனுமதித்தார். ஆனால் ஸ்ரீ உபாசினி மகராசுக்கு மனதில் தெரியும், அவரை ஸ்ரீ சாயிபாபாவிடம் அனுப்ப வேண்டும் என்பது. ஆகவே அவர் ஸ்ரீ நரசிம்ம ஐயரிடம் சீரடிக்குச் சென்று ஸ்ரீ சாயிபாபாவை வணங்குமாறும் அங்கு அவருக்கு நல்ல குரு கிடைப்பார் என்றும் கூறினார். ஆனால் ஸ்ரீ  நரசிம்ம ஐயருக்கு அதற்கு மேல் தனக்கு ஒரு குரு கிடைப்பார் என்ற நம்பிக்கை அறவே விலகிற்று. எங்கு சென்றாலும் அங்கு போ, இங்கு போ என்றே துரத்துகிறார்கள், தம்மிடம் தங்க அனுமதிப்பது இல்லை. ஆகவே இனி எங்கு போவது.  ஸ்ரீ சாயிபாபாவோ உயிருடன் இல்லை எனும்போது அங்கு சென்று யாரைத் தேடுவது?

அதை விடக் கொடுமை என்ன என்றால் தான் பயணித்த வழிகளில் உண்ண  உணவும் கிடைக்காமல் பல நாட்கள் தவித்து இருந்துள்ளார். குடிக்கத் தண்ணீர்  கூட இல்லாமல் ஒரு சமயம் சாலையில் தங்கி இருந்த தண்ணீரைக் குடித்து இருக்கின்றார். பெரும் வசதியான குடும்பத்தில் இருந்து பங்களாவும், வேலையாட்களுமாக, அங்கும் இங்கும் செல்ல வசதியான வண்டிகளையும் கொண்டு வாழ்ந்து கொண்டவருக்கு நேரக் கூடிய கதியா இது?  ஒரு முறை பசி தாங்க முடியால் போய் களிமண்ணை எடுத்துத் தின்று உள்ளார்! வழியில் யாராவது எதையாவது கொடுத்தால் அவற்றை வாங்கித் தின்று உள்ளார். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவர் வைராக்கியம் வென்றது. அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு அவர் குருவைத் தேடி வழி நடந்துள்ளார். அப்படிப்பட்ட மன நிலையை அனைவரும் பெற முடியாது. ஆகவே இனி சென்னைக்கே திரும்பி சென்று அங்கேயே எங்காவது ஆஸ்ரமத்தில் அமர்ந்து கொண்டு விடலாம் என்ற மன நிலைக்குப் போய் விட்டதும் அதை ஏற்காமல் சென்னைக்கே திரும்பி விட முடிவு செய்து சென்னைக்கு கிளம்பியவரை வழியில் முன்பின் தெரியாத ஒருவர் சந்தித்து அவரை சீரடிக்குச் செல்லுமாறு கூறினார். ஆனால் அதைக் கேட்காமல் சென்னையை நோக்கிச் செல்லலானார். சில நாட்கள் பொறுத்துப் பார்த்தால் அவர் சென்று அடைந்த ஊர் சீரடியாக இருந்ததைக் கண்டார்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக இங்கு வந்தோம் எனக் குழம்பினார். ஒன்றும் புரியாமல் வேறு வழி இன்றி அங்கு  ஸ்ரீ சாயிபாபாவின் சமாதியில் சென்று வணங்கி விட்டு ஊருக்குத் திரும்பலாம் என எண்ணினார். இப்படியாக 1936 ஆம் ஆண்டு சீரடியை அடைந்த ஸ்ரீ நரசிம்ம ஐயர் சாயிபாபாவின் சமாதியின் முன் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த போது தன் மனதில் இனம் புரியாத அமைதி திரும்பியதைக் கண்டார். சற்று நேரத்திலேயே ஸ்ரீ சாயிபாபா அவருடைய மனக் கண்ணில் காட்சி தந்து அவரை தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். அதைக் கேட்ட ஸ்ரீ நரசிம்ம ஐயர் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட ஆனந்த வெள்ளத்தில் மிதந்தவர் தனக்கு தகுந்த குரு கிடைத்து விட்டதை புரிந்து கொண்டார். அதனால்தான் அனைவருமே அவரை பக்குவப்படுத்தி ஸ்ரீ சாயிபாபாவிடம் அனுப்பி உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொண்டார்.

அன்று முதல் அங்கேயே தங்கி பலரிடமும் ஸ்ரீ சாயிபாபாவின் வாழ்கை வரலாற்றைக் கேட்டு அறிந்தார். ஸ்ரீ சாயிபாபாவுடன் நெருங்கிப் பழகிய சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பக்தர்களை சந்தித்து பல செய்திகளை சேகரித்துக் கொண்டார். மெல்ல மெல்ல மனம் பூரண தெளிவு அடைந்தது. இனி ஸ்ரீ சாயிபாபாவே தன்னுடைய குரு, அவரே தனக்கு வழிகாட்டி என்பதை உணர்ந்தார். உடனடியாக சென்னைக்குத் திரும்பி அங்கு அகில இந்திய சாயி சமாஜத்தை நிறுவினார். தென் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஸ்ரீ சாயியின்  புகழைப்  பரப்பி  வந்தார். தெனிந்தியாவில் தனது பணியை முடித்துக் கொண்ட பின் அவர் வடக்கு நோக்கி பயணம் செய்தார். பூனா, பாம்பே, இந்தூர், அலகாபாத், கல்கத்தா , பரோடா போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்றவர் தமது சொற்பொழிவினாலும், எழுத்துக்களினாலும் பல பக்தர்களை ஸ்ரீ சாயிநாதரின் பக்தியில்  இழுத்தார்

அதன் பின் மீண்டும் சென்னைக்குத் திரும்பியவர் அகில இந்திய சாயி சமாஜம் என்பதை உருவாக்கினார்.  திருவிளக்கேணி என்ற இடத்தில் துவக்கப்பட்ட அந்த அமைப்பு மயிலாபூரிலேயே இரண்டு  வாடகை வீடுகளில்  மாற்றப்பட்டப் பின் இறுதியாக மூன்றாவது இடமான தற்போது  ஸ்ரீ சாயிபாபா ஆலயம் உள்ள இடத்திற்கு 1952 ஆம் ஆண்டு மாறியது.

முதலில் ஒரு சிறிய அறையில் அந்த சங்கம் துவக்கப்பட்டு மெல்ல மெல்ல வளரத் துவங்கிற்று. இடையிடையே அந்த சங்கத்தின் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்கும் சூழ்நிலைகளும் ஏற்பட்டாலும், மனதை தளரவிடாமல் சமாஜத்தை வளர்க்கும் முறையில் பல ஏற்பாடுகளை அவருடன் சேர்ந்த பக்தர்களின் உதவியுடன் செய்யத் துவங்கினார். ஸ்ரீ சாயிபாபாவைப் பற்றிய பல புத்தகங்களை எழுதி வெளியிட்டார். அவை பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றது.

தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் அண்டை மானிலங்களின் பல இடங்களுக்கும் சென்று ஸ்ரீ சாயியின் பெருமையை பரப்பி வரலானார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஸ்ரீ சாயிபாபாவின் பெருமையைப் பரப்பும் விதங்களில் சொற்பொழிவுகள் ஆற்றினார். அங்காங்கே ஸ்ரீ சாயி சமாஜத்தின் கிளைகளையும் நிறுவினார். மெல்ல மெல்ல சாயி சமாஜத்தின் திட்டங்கள் விரிவடைந்தன. ஸ்ரீ சாயிபாபாவின் பெருமையைக் கூறும் புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டார். சென்னையில் பிரதான இடமாக இருந்த மயிலாப்பூர் எனும் பகுதியில் ஸ்ரீ சாயி சமாஜாத்திற்கான இடத்தை வாங்கினார். அங்கு ஸ்ரீ  சாயிபாபாவின் ஆலயத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

1953 ஆம் ஆண்டு ஆலயப் பணிகள் நடந்து கொண்டு இருந்தபொழுது கர்பக்ரஹம் மற்றும் கோபுரம் மட்டுமே கட்டத் தேவையான பணம் இருந்தது. ஆனாலும் எந்த வகைகளிலோ பணம் வந்து கொண்டே இருந்தது. ஆலயம் எழுந்தது. அந்த ஆலயம் இருந்த இடத்தின் ஒரு மூலை பகுதியிலேதான் ஸ்ரீ நரசிம்மஸ்வாமிஜி அவர்கள் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி ஒரு குடிசை போன்ற கொட்டகையில் வாழ்ந்து கொண்டு இருந்தார். ஸ்ரீ ஸ்வாமிஜியின் எண்ணம் எல்லாம் அங்கு ஆலயத்தைத் தவிர ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை கட்ட வேண்டும், படிப்பறிவு தர பாடசாலை கட்டவேண்டும் என்பதே.  பல புத்தகங்கள் எழுதினார். முதல் இருபது ஆண்டுகளில் ஸ்ரீ சாயிபாபா பற்றிய அறிமுகம், ஸ்ரீ சாயிபாபா யார், பூஜா விதி, பக்தர்களின் அனுபவங்கள், ஸ்ரீ சாயி ஸஹஸ்ரநாமவளி போன்ற புத்தகங்கள் வெளியாயின.

முதன் முதலாக இந்தியாவிலேயே ஸ்ரீ சாயி சமாஜத்தின் மூலம் ஸ்ரீ சாயிபாபாவின் உருவப் படங்கள்  பொறித்த மோதிரங்கள், மாலைகள், டாலர்கள், படங்களை போன்றவற்றை வெளியிட்டு விற்பனை செய்தார். அவருடைய முயற்சிகளினால் இந்தியாவின் பல நகரங்களிலும் ஸ்ரீ சாயிபாபாவைப் பற்றிய செய்திகள் மக்களை அடைந்து  பக்தர்கள் பெருகினார்கள். தமிழ்நாட்டில் சென்னையில் மிகப் பெரிய ஸ்ரீ சாயிபாபாவின் ஆலயத்தை அமைத்ததின் மூலம் அதுவே மற்ற ஆலயங்களுக்கு முன்னோடியான ஸ்ரீ சாயி ஆலயமாக அமையக் காரணமாயிற்று .

உண்மையைக் கூறினால் சீரடியில் மட்டுமே புகழ் மிக்கவராக இருந்த ஸ்ரீ சாயிபாபாவை உலகெங்கும் உள்ள மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர் பெருமையை திக்கெட்டும் பறை சாற்றி ஸ்ரீ சாயிபாபாவை ஒரு மாபெரும் தெய்வமாக கோடிக் கணக்கான பக்தர்கள் ஏற்பதற்கு காரணமாக இருந்தவர் ஸ்ரீ நரசிம்ம ஐயரே.  சீரடியில் இருந்து சென்னைக்குத் திரும்பி சாயி சமாஜத்தை மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கி ஸ்ரீ சாயி ஆலயம் அமைத்த ஸ்ரீ நரசிம்ம ஐயரை மக்கள் ஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிஜி என்றே அழைக்கலாயினர்.  ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் முயற்சியினால் இந்தியாவின் பல பாகங்களிலும் ஸ்ரீ சாயியின் பல ஆலயங்கள் தோன்றின. அவரையும் ஸ்ரீ சாயியின் அவதாரப் புருஷராகவே மக்கள் கருதினார்கள்.

1953 ஆம் ஆண்டில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் முடிந்த சில மாதங்களில் ஸ்ரீ நரசிம்மஸ்வாமிகள் ஒரு விபத்தில் அடி பட்டு மருத்துவ மனையில் சேரவேண்டி வந்து விட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவ மனையில் இருந்தாலும் அங்கும் தன்னுடைய கடமையை செய்தபடிதான் இருந்தார். 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னிரண்டாம் தேதியன்று ஸ்வாமிகளின் எண்பத்தி மூன்றாவது பிறந்தநாள் அன்று அவருக்கு உடல் நலமின்றிப் போயிற்று. சில நாட்களிலேயே அவருடைய உடல் நிலை மோசமாகி கைகால்களை அசைக்கக் கூட முடியாமல் போய் படுத்த படுக்கையில் விழுந்தவர் அக்டோபர் மாதம் பத்தொன்பதாம் தேதி விடியற்காலை 3.45 மணிக்கு தமது பூத உடலைத் துறந்து சமாதி அடைந்தார். இப்படியாக 1956 ஆம் ஆண்டுவரை ஸ்ரீ சாயிபாபாவின் பிரச்சாரத்தை மிகத் தீவீரமாக மேற்கொண்ட ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் பெருமையும் அனைத்து இடங்களிலும் பரவியது. தான் மரணம் அடைய இருப்பதை உணர்ந்ததினால் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜி தனக்கு வாரிசாக ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். அவர் மனதிற்கேற்ப அவருடைய வாரிசாக ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகள் என்பவர் உருவானார்.

அவர் தனக்கு நல்ல சீடராக உருவானதும் ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி அவர்கள் தான் மரணம் அடைவதற்கு முன் தன்னுடைய அனைத்து ஆன்மீக சக்திகளையும் தன்னுடைய சீடரானஸ்ரீ  ராதாகிருஷ்ண சுவாமிஜிக்கு கொடுத்துவிட்டார். அவர் மறைந்த பொழுது ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி பெங்களூரில் இருந்தார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினெட்டாம் தேதியன்று மாலையிலேயே ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜிக்கு ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் உடல் நிலை மோசமாகி விட்டது எனத் தெரிந்தது. ஆகவே இரவு முழுவதும் அவர் தியானத்தில் அமர்ந்து விட்டார். விடியற்காலை நான்கு மணிக்கு வெளியில் வந்தவர் தன்னுடைய சீடர்களிடம் ” நம்முடைய குருதேவர் தன்னுடைய சக்திகள் அனைத்தையும் என்னிடம் தந்துவிட்டு சற்றுமுன் மறைந்து விட்டார். என்றுக் கூறிய பின் உடனே சென்னை சென்று தமது குருவான ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் இறுதிக் காரியங்களை செய்து தனது கடமையை ஆற்றினார். ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் ஆசைப்படி ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிகளின் முயற்சியினால் பெங்களூரில் மிகப் பெரிய சாயியின் ஆலயம் நிறுவப்பட்டு உள்ளது. ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜி ஒரு சகாப்தம்.