சாந்திப்பிரியா
சிவபெருமான் கூறியபடி நாரதரும் மனித உருவை எடுத்து பூமிக்குச் சென்று பல இடங்களிலும் இருந்த விஷ்ணு மற்றும் சிவஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தப் பின் கடைசியாக காஞ்சீபுரத்தின் அருகில் காஞ்சீபுரம் மற்றும் அரக்கோணத்துக்கு இடையே உள்ள திருமாற்பேறு என்ற ஆலயம் உள்ள இடத்தை அடைந்தார். அங்கு இருந்த மிகச் சிறிய ஆலயத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் எதிரில் லிங்கத்தை வணங்கிய நிலையில் விஷ்ணுவின் ஒரு சிலையும் இருந்தது. அதைக் கண்ட நாரதருக்கு வியப்பாக இருந்தது. சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் இருந்த விஷ்ணுவின் சிலையைக் கண்ட நாரதருக்கு அந்த ஆலயம் விஷ்ணுவின் தலமா இல்லை சிவஸ்தலமா என்ற சந்தேகம் இழுந்தது. ஆகவே அங்கிருந்த பண்டிதரிடம் அவர் இது சிவன் ஆலயமா இல்லை விஷ்ணுவின் ஆலயமா என்று கேட்க அந்த பண்டிதரும் இது விஷ்ணுவின் ஆலயமே என்று கூறினார். அதைக் கேட்ட நாரதருக்கும் இன்னும் அதிக ஆச்சர்யம் எழுந்தது. அப்படி என்றால் இங்கு மூலவராக விஷ்ணு இல்லையே . அதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது அங்கிருந்த அர்ச்சகர் அவருக்கு ஒரு புராணக் கதையைக் கூறினார்.
”முன் ஒரு காலத்தில் குபன் என்ற ஒரு மன்னன் ததீசி எனும் தவ வலிமை மிக்க முனிவருடன் போர் செய்ய வேண்டி இருந்தது. அந்த மன்னன் விஷ்ணுவின் பக்தன். ஆகவே அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவான் அவனுக்கு ஆதரவாக தானும் ததீசி முனிவருக்கு எதிராக போரில் இறங்கினார். போரில் முனிவர் மீது தனது சக்ராயுதத்தை ஏவிய விஷ்ணுவின் சக்ராயுதம் ததீசி முனிவரின் தவ வலிமையினால் முனை மழுங்கிப் போயிற்று. ஆகவே தனது ஒரே சக்தி வாய்ந்த ஆயுதமான சக்ராயுதமே முனை மழுங்கி விட்டதை கண்டு கவலையடைந்த திருமால் என்ன செய்வதென்று தெரியாமல் தேவர்களுடன் ஆலோசனை செய்தார். அவர்கள் அறிவுறுத்தியபடி அவர் சலந்தராசூரன் எனும் கொடியவனை அழிக்க தான் உண்டாக்கிய சுதர்சன சக்கரம் அப்போது சிவபெருமானிடம் உள்ளதை அறிந்து கொண்டதும், அதை மீண்டும் சிவபெருமானிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக சிவபெருமானை துதித்து பூஜை செய்ய முடிவு செய்து, அந்த பூஜையை செய்ய தகுதியான சக்தி வாய்ந்த தலத்தை தேடி அலைந்து முடிவாக பார்வதி தேவி பூஜித்து வணங்கிய சிவபெருமானின் தலமான மாற்பேறு எனும் இந்த தலத்தை வந்தடைந்தார்.
இத்தலம் வந்து பார்வதி பூஜித்த அதே லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர் தூவி பூஜை செய்தார். இப்படியாக விஷ்ணு சிவனை நோக்கி பூஜித்தவாறு இருந்தபோது ஒருநாள் அவரை சோதிக்க எண்ணினார் ஈசன். வேண்டும் என்றே ஒருநாள் விஷ்ணு கொண்டு வந்து இருந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒரு மலரை மாயமாக மறைய வைத்து விட்டார். 999 பூக்களால் அர்ச்சனை செய்தாகி விட்டப் பின்னர் கடைசி மந்திரத்தை உச்சரித்து போட தாமரை இல்லை. சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் விஷ்ணு மனம் தளரவில்லை. நேரத்தை வீணடிக்க விரும்பாமல் திருமால் தனது ஒரு கண்ணை பிடுங்கி அதையே தாமரை மலராக பாவிக்குமாறு கூறியவாறு சிவனுக்கு அர்ச்சனை செய்ய அவர் பக்தியைக் கண்டு சிவபெருமான் வியந்தார். தெய்வமாகவே இருந்தாலும், தன்னை பூஜிக்கையில் தனது பக்தியைக் நிலை நாட்ட தனது கண்ணையே கொண்டு பூஜித்ததைக் கண்டு மகிழ்ந்து போன சிவனார் திருமாலின் கண்களை மேலும் அழகிய கண்ணாக இருக்குமாறு அருளி சக்கிராயுததையும் அவருக்கு தந்ததும் அல்லாமல் இனி அந்த தலத்தில் உள்ள விஷ்ணு செந்தாமரைக் கண்ணனார் அதாவது அழகிய தாமரை மலர் கண்ணைக் கொண்டவர் என அழைக்கப்படுவார் என்றும் அருள் புரிந்தார். திருமால் சிவபெருமானை வழிபட்டு சக்கிராயுததைப் பெற்றதினால் இதை ஹரிசக்ரபுரம் என்றும் கூறுவார்கள். ஆகவே உண்மையான பக்திக்கு ஒரு சான்றாக உள்ள தலம் இது ” என்று பண்டிதர் கூறவும், அதைக் கேட்ட நாரதர் பக்திக்கு அடையாளம் அந்த தலத்தில் உள்ள விஷ்ணுவே என்பதை புரிந்து கொண்டு உடனடியாக கிளம்பி மேலுலகம் சென்றார்.
இந்த ஆலயத்தின் வரலாற்றைப் போலவே தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள திருவிழிமிழலை நேத்ரபாணேஸ்வரர் ஆலய வரலாறும் உள்ளதினால் சிவபெருமானுக்கு தன் கண்ணைக் கொண்டு விஷ்ணு பகவான் பூஜை செய்த இடங்கள் இரண்டாக இருந்துள்ளது என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருமாற்பேறு எனும் ஆலயம் மணிகண்டேஸ்வரர் ஆலயம் என்றும் தயை புரிந்ததினால் தயாநீஸ்வரர் ஆலயம் என்றும் சிலரால் கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை பார்வதியே மணலைக் கொண்டு கட்டியதினால் அது சிதைந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த சிவா லிங்கத்துக்கு தண்ணீர் ஊற்றீ அர்ச்சனை செய்யும்போது, அதன் மீது தண்ணீர் விழக் கூடாது என்பதற்காக அந்த லிங்கத்தின் தலை மீது ஒரு தாமிர பாத்திரத்தைக் கொண்டு மூடி அர்ச்சனை செய்கிறார்களாம்.
அப்பர் மற்றும் சம்மந்தரினால் பாடப்பட்ட இந்த ஆலயம் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. ஆலயத்தின் வயது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் என இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் விஷ்ணு பெருமான் சிவனை துதித்த அந்த ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூசிப்பவர்கள் முக்தி பெறுவார்கள். அவர்களது எதிரிகள் அழிவார்கள். இந்த ஆலயம் சிவன் ஆலயமே என்றாலும், இதை பெருமாளின் ஆலயமாகவே கருதுகிறார்கள். அதனால்தான் இங்கு வருடாந்திர பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. இந்த ஆலயத்துக்கு நேரடியாகச் செல்ல காஞ்சீபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அரக்கோணத்தில் இருந்தும் அங்கு செல்லலாம்.