-7-

உலகம் வடிவமைக்கப்பட்டது

113) தான் படைத்த ஆன்மாக்களை பூமிக்கு அனுப்புவதற்கு முன் பரபிரும்மன் மூலம் வெளிப்படுத்தப்படும் தெய்வங்களை  பல்வேறு நிலைகளிலான தெய்வங்களாக பிரித்து  அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த  நிலப்பரப்புக்களில் சென்று கண்ணுக்குத் தெரியாமல்  மறைந்து இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரபிரும்மனிடம் பிரும்மதேவர் கேட்டுக் கொண்டார்.   பூமியில் பிறப்பு எடுக்கும் சில மானிடர்களையும் காலப்போக்கில் சில தெய்வங்களாக மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சுருக்கமாக கூறினால் பூமியில் உள்ள மனிதர்களை வழி நடத்தவும் பாதுகாக்கவும் பின்வரும் வகையிலான தெய்வங்களை பிரும்மதேவர், பரப்பிரும்மன் மூலம் உருவாக்கினார்.

  • பரப்பிரம்மனிடமிருந்து நேரடியாகத் தோன்றிய பிரதான தெய்வங்கள்
  • பிரதான தெய்வங்களில் இருந்து வெளியான முதல் நிலை தெய்வங்கள். காலப் போக்கில் அவர்களில் சிலர் குலதெய்வமாகவும், வேறு சிலர் இஷ்ட தெய்வங்களாகவும் மாறினர்
  • பிரதான தெய்வங்களில் இருந்து வெளியான இரண்டாம் நிலை தெய்வங்கள். அவர்களில் சிலர் குலதெய்வமாகவும், வேறு சிலர் இஷ்ட தெய்வங்களாகவும் மாறினர்
  • பரப்பிரம்ம லோகத்தில் சாபம் பெற்ற மூன்றாம் நிலை தேவகணங்கள். அவை பூமியில் பிறப்பு எடுத்து சாபங்கள் நீங்கியதும் கிராம தெய்வங்களாக, காவல் தெய்வங்களாக மாறுகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முதல் மற்றும் இரண்டாம் வரிசை தெய்வங்களுக்கு கீழே பணிபுரிவார்கள். அதன் பின்அவர்களில் சிலர் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வங்களாக மாறுகிறார்கள்.
  • தேவலோகத்தில் பாவம் செய்த அல்லது சாபங்களை பெற்று இருந்த தெய்வங்கள் அல்லது தேவ கணங்கள் நான்காம் நிலை தெய்வங்களாக பூமியில் மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ பிறந்து, தவம் செய்து அதன் பின்னர் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை தெய்வங்களுக்கு கீழே பணி  புரிந்து சாப விமோசனம் பெறுபவை ஆகும். அவர்களிலும் சிலர் கிராம தேவதைகளாக அல்லது ஊர் எல்லை காக்கும் தெய்வங்களாக மாறுவார்கள்.
  • ஐந்தாவது தீய ஆவிகள் மற்றும் பேய், பிசாசுகள் ஆவர். உண்மையான தெய்வ சக்திக்கும் தீய சக்திகளுக்கும் இடையிலான வித்யாசத்தைக் காட்டவே அவை பிரும்மாவினாலேயே படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டன. அந்த தீய ஆத்மாக்கள் இறுதியில் பல வழிகளில் தெய்வீக சக்திகளால் அழிக்கப்படுவார்கள்.

114) பிரதான தெய்வங்களில் இருந்து எதோ ஒரு வடிவில் வெளிவந்த முதல் நிலை தெய்வங்கள் வழிபாட்டுத் தலங்கள் அல்லது ஆலயங்களில் குடியேறின. சுருக்கமாக கூறினால் அவை அனைத்துமே பிரதான தெய்வங்களின் நிழல் உருவங்களேயாகும். அபாரமான தெய்வீக சக்திகளைக் கொண்டிருந்த அந்த தெய்வங்கள், குலதெய்வங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்புகளில் தோன்றி சில  குடும்பத்தினரின் குலதெய்வங்களாகி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். தம்மை சிரத்தையுடன் வழிபட்டவர்களின் வேண்டுதல்களை ஏற்று அருள் புரிந்தார்கள். அவர்கள் எந்த நிலையிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில் சக்தி பெற்று இருந்தார்கள். அவர்களால்  வேறு எந்த தோற்றத்திலும் அவதரிக்க முடியும். எங்கெல்லாம் அசுர சக்திகள் தலை தூக்கி நின்றனவோ அங்கெல்லாம் சென்று அவர்களை அழிக்கும் ஆற்றலையும் பெற்று இருந்தார்கள். தமது நிலப்பரப்பில் மட்டும் அல்லாமல் வேறு நிலப்பரப்பில் சென்று அசுர சக்திகளை அழிக்கும் ஆற்றலையும் அதிகாரத்தையும் பெற்று இருந்தார்கள்.
115) முதல் நிலை தெய்வங்கள் பிரம்மாவின் படைப்பின் அடிப்படை விதிமுறைகளை மீறாமல் தங்கள் தெய்வீக சக்திகளை பல்வேறு நிலப்பரப்புக்களில் சென்று வெளிப்படுத்தவும், பிரயோகிக்கவும் சக்தி கொண்டிருந்தன. முதல் நிலை தெய்வங்கள் பல்வேறு தோற்றங்களிலும் பெயர்களிலும் அவதரிக்கின்றன. இதற்கான சிறந்த உதாரணம் பல ஆலயங்களிலும், பல பெயர்களிலும் வணங்கப்படும்  சிவன் லிங்க வடிவிலான சிவபெருமான் ஆவார். அவர் மருத்தீஸ்வரர், கபாலீஸ்வரர், வைத்தீஸ்வரர், சொக்கநாதர், கும்பேஸ்வரர் போன்ற பெயர்களில் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கின்றார். அதை போலவேதான் பெண் தெய்வமான பார்வதி தேவி பல ஆலயங்களில் திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை, காமாட்சி, கற்பகாம்பிகை, இராஜராஜேஸ்வரி போன்ற பெயர்களில் வெவ்வேறு உருவங்களில் காட்சியளிக்கிறார். பகவான் மகாவிஷ்ணு கூட வெங்கடாசலபதி, சாரங்கபாணி, ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி, பூரி ஜகந்நாதர் போன்ற பெயர்களில் வெவ்வேறு உருவங்களில் காணப்படுகின்றார். 
  

Kashiswar Bhairava or Kashiswara Jiu is a banalingam
established by Kashiswar Dutta Chowdhury in mid-17th century AD,
after he discovered it in the Saraswati River. The God is the
guardian deity of Dutta Chowdhury family, Andul, Howrah.

116) குல தெய்வங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பக்தர்களுக்கு பிரதான தெய்வங்களினால் ஒரு தலைப்பட்சமாக வரங்கள் அல்லது அருளாசிகளை வழங்க முடியுமா? இதற்கான பதில் ‘முடியாது’ என்பதே ஆகும்.  அப்படி செயல்படுவதில் மூலம் ஏற்கனவே செயல்பட்டு வரும் குலதெய்வங்களின் உரிமையை அவர்களால் பறிக்க முடியாது. ஆனால் சில நன்மைகளுக்காக குலதெய்வங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிலருக்கு அப்படிப்பட்ட வரங்களை கொடுக்கவும் , தீமைகளையும் அழிக்க வேண்டிய நிலைமையில் அதை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடும்போது அவர்கள் அந்த நிலப்பரப்பின் அதிபதி தெய்வங்களான குலதெய்வங்களை கலந்தாலோசித்தப் பின்னரே  செய்ய வேண்டும் என்பது பிரும்ம நியதியாகும்.
117) இரண்டாவது நிலை தெய்வங்கள் என்பவர்கள் முதல் நிலை தெய்வங்களின் நிழல் தெய்வங்கள் ஆவர். அவர்கள் முதல் நிலை தெய்வங்களின் பிரதிநிதியாக செயல்படுவார்கள். அவர்களுக்கும் அளவில்லாத தெய்வ சக்திகள் இருக்கும் என்பதின் காரணம் அவர்களும் பிரதான தெய்வங்களின் தெய்வீக சக்திக் கதிர்களில் இருந்து வெளியான தெய்வங்களே என்றாலும் அவர்கள் முதல் நிலை தெய்வங்கள் மூலம் வெளி வருகின்றார்கள். அவர்களால்  தங்கள் அதிகாரத்தையும் தெய்வீக சக்திகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குடும்பங்களை வழிநடத்தவும் பாதுகாக்கவும் முடியும்.
118) இரண்டாம் நிலை தெய்வங்கள் தம்முடைய அதிகாரங்களைச் செயல்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இரண்டாம் நிலை தெய்வங்கள் தம்மை இஷ்ட தெய்வங்களாக ஏற்றுக்கொண்டுள்ள ஆனால்  மற்றொரு குலதெய்வத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றும்போதோ அல்லது எவரையாவது தண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அந்த செயல் ஒரு குலதெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள   மற்ற   குடும்பங்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்காது   என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவற்றையும் மீறி குறிப்பிட்ட சில உண்மையான காரணங்களுக்காக, குலதெய்வங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிலருக்கு தண்டனை வழங்குவது அல்லது அவர்களது பிரார்த்தனைகளை இஷ்ட தெய்வமாக நிறைவேற்றுவது போன்ற நிலை ஏற்பட்டால், முதலில் அவர்கள் அந்த பக்தர்களுடைய குலதெய்வத்திடம் கூறிவிட்டு அவர்களது அனுமதி பெற வேண்டும் என்பது பிரும்ம  நியதி ஆகும்.
119) முதல் மற்றும் இரண்டாவது நிலை தெய்வங்களுக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது?   இரண்டாம் நிலை தெய்வங்கள் பெரும்பாலும் முதல் நிலை தெய்வங்களின் வெளிப்பாடு ஆகும். அத்தியாவசியமான நேரத்தில் இரண்டாம் நிலை தெய்வங்களில் சிலர் பரப்பிரும்மனின் உடலுக்குள் இருந்து பிரும்மா மூலம் நேரடியாகவும் வெளிப்படுத்தப்படலாம் என்றாலும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தெய்வங்களின் தெய்வீக சக்திகள் அனைத்துமே ஒரே அளவில்தான் உள்ளன என்றாலும் இரண்டாம் நிலை தெய்வங்களின் அதிகார ஷேத்திரம் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இருக்கும்.
120) சில நேரங்களில் சில, விசித்திரமான சூழ்நிலை உருவாகலாம். ஒரு சில நிலப் பகுதிகளில் முதல் நிலை தெய்வங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இரண்டாம் நிலை தெய்வங்கள்   குலதெய்வம் அல்லது துணை தெய்வங்களாக செயல்படும்போது, சில அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்வதற்காக, முதல் நிலை தெய்வங்களும் அதே நிலப்பரப்பில் தோன்றுவதற்கு அவசியம் ஏற்படும்போது அவர்களால் வெளியிடப்பட்ட இரண்டாவது நிலை தெய்வங்களின் நிலைமை என்ன ஆகும்?   நிச்சயமாக அவர்களுக்கு  இடையே மோதல் ஏற்படாது. ஏனென்றால் தம்மால் வெளிப்படுத்தப்பட்ட இரண்டாம் நிலை தெய்வங்களின் ஆற்றல் எல்லைக்கு மீறிய செயல்களை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பட்ஷத்தில், அந்த குறிப்பிட்ட செயல்களை செய்து முடிக்க  அங்கு முதல் நிலை தெய்வங்கள் தோற்றம் அளிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் முதல் நிலை தெய்வங்களினால் செய்யப்படும் அந்த செயல்கள் அந்த நிலப்பரப்பில் உள்ள இரண்டாம் நிலை தெய்வங்களின் உரிமைகளை எந்த அளவிலும் மீறாத அளவில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
121) பெரும்பாலான இரண்டாம் நிலை தெய்வங்கள், முதல் நிலை தெய்வங்களுக்கு உதவி  செய்து  பணி புரிந்த பின் குல தெய்வங்கள் அல்லது இஷ்ட தெய்வங்கள் ஆகி விடுகின்றன. உதாரணமாக இரண்டாம் நிலை தெய்வமான முருகப் பெருமான், ஐயப்பன், ராமர், கிருஷ்ணர் போன்றவர்கள் வெவ்வேறு பெயர்களில் குலதெய்வங்கள் ஆகி உள்ளார்கள். அதை போலவேதான் தெய்வங்களான வீரபத்திரர், பைரவர் ஆஞ்சனேயர் போன்றவர்களும் சிலருக்கு குலதெய்வங்கள் ஆகி உள்ளார்கள்.  பெண் தெய்வங்களில் பார்வதி தேவி  பல்வேறு பெயர்களில் அதாவது துர்கா தேவி , மகிஷாசுரமர்தினி தேவி மற்றும் லலிதாம்பிகை தேவி போன்ற பெயர்களிலும்,   பலவித மாரியம்மன் பெயர்களிலும் அவதரித்து குலதேவதையாக இருக்கின்றார்.
122) பரப்பிரம்ம லோகத்தில் இருந்தபோது சாபங்களை பெற்று பூமியில் தெய்வமாக அவதரிக்கும் மூன்றாம் நிலை தெய்வங்கள் சில காலம்வரை இரண்டாம் நிலை தெய்வங்களுக்கு பணி புரிகின்றன. ஆலயங்களில் மூல தெய்வங்களுக்கு பாதுகாப்பு தரும் விதங்களில் ஆலய காவல் தெய்வங்களாக   பணி புரிகின்றன. பொதுவாக மூன்றாம் நிலை தெய்வங்கள் முதலில் மானிட உருவில் அவதரிக்கின்றன. அந்த மானிடர்கள் ஒரு கட்டத்தில் கிராம தேவதைகள் ஆன பின்னர் அங்குள்ள இரண்டாம் மற்றும் முதல் நிலை தெய்வங்களுக்கு உதவி செய்தபடியும், அந்த ஊர் மக்களை காத்தபடியும் இருப்பார்கள். கிராம தெய்வங்களில் சில இரண்டாம் நிலை தெய்வங்களில் இருந்து வெளியானவைகளாகவும் உள்ளன.
123) கிராமப்புறங்களில் நீண்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் கிராம மக்களால்  வழிபடும் தெய்வங்களாக இருப்பவர்களே கிராம தெய்வங்கள் ஆவர். அவர்கள் கிராம தேவதைகளாக வேத காலத்திற்கு முந்திய கால கட்டத்தில் இருந்தே இருந்துள்ளார்கள் என்கின்றார்கள். புகழ்பெற்ற கிராமக் கடவுளான காத்தவராயன், சிவபெருமானிடம் ஒரு சிறிய சாபத்தைப் பெற்ற முருகப் பெருமானின் அவதாரம் என்றும், பாவத்தைப் போக்க காத்தவராயனாகப் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. மதுரை வீரன் என்று அழைக்கப்படும் மற்றொரு புகழ்பெற்ற காவல் தெய்வம், மதுரை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தையும், அவரை வழிபடும் மக்களையும் பாதுகாக்கிறார் என்பதாக ஐதீகம் உள்ளது. மற்ற கிராம தெய்வங்களில் ஒருவரான அய்யனார் என்பவர் ஸ்ரீ ஐயப்பனின் அவதாரம் என்று கூறப்படுகிறது. சுடலை மாடன், சங்களைக் கறுப்பர், சப்த மாதர்கள் எனப்படும் ஏழு கன்னிகைகள் போன்றவர்களும் கனகாம்பிகை அம்மன் என்பவர்களும் கூட கிராம தெய்வங்களே ஆவர்.
124) மானிடர்களாக பிறக்கும் தேவ கணங்கள் எப்படி கிராம தெய்வங்கள் ஆயினர்? தேவகணங்கள் பூமிக்கு வந்து தவம் இருக்கும்போது அவ்வப்போது மனித அல்லது விலங்குகளின் உடலில் நுழைந்து, அவர்கள் மூலம் வீரச் செயல்களை வெளிப்படுத்தி வந்தவாறு இருந்து கொண்டு, அவர்களது தவ கால முடிவில்  கிராம தெய்வங்களாக மாறுகின்றார்கள். அவர்கள் கிராம தெய்வங்களானவுடன் சில பொறுப்புகளும், வரையறுக்கப்பட்ட தெய்வீக சக்திகளும் வழங்கப்படுகின்றன. அந்த வரம்புக்குட்பட்ட அதிகாரங்களைக் பயன்படுத்தி கிராம தெய்வங்கள் (தேவலோகத்தில் பாவங்களை சுமந்துகொண்டு, தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பூமியில் பிறந்தவர்கள்) பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க முடியாது என்றாலும், அவர்களது பிரார்த்தனைகளை மூல தெய்வங்களிடம் எடுத்துச் சென்று அவர்களது வேண்டுகோட்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் அத்தனை  குறைந்த அளவிலான தெய்வ சக்திகளை  கொண்டிருந்தாலும் அந்த  கிராம தேவதைகளினால் ஊரில் நுழையும் பேய் பிசாசு மற்றும் தீய ஆவிகளை விரட்ட முடியும்.
125)ஒரு காலக் கட்டத்தில், அப்படி அவதரிக்கும் கிராம தெய்வங்கள் சில சாமானியர்களின் கனவில் தோன்றி, தம்மை அவர்கள் குடும்பக் கடவுளாக ஏற்றுக் கொண்டு குறிப்பிட்ட முறையில் வழிபடும்படி கட்டளை இடுவார்கள். அவர்களது கட்டளையை ஏற்று அந்த கிராம தெய்வத்தை வழிபடும் அந்தந்த குடும்பங்களின் துயரங்களை அங்குள்ள இரண்டாம் நிலை தெய்வங்களின்  உதவியுடன் குறைக்கும்போது   அந்த கிராம தேவதைகளையும் மக்கள் தனது குலதெய்வமாக ஏற்கத் துவங்குவார்கள். அவர்களை தொடர்ந்து மேலும் சில குடும்பங்களும் அந்த கிராம தேவதையை குலதெய்வமாக ஏற்கத் துவங்கும்போது அந்த கிராம தேவதையும் அந்த நிலப்பரப்பில் உள்ள குல தெய்வங்களில்  ஒருவராகி விடும்.
126)   கிராமங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களையும் அழிவுகளையும் கிராம தெய்வங்களால் திறம்பட தடுக்க முடியும் என்றாலும், அவற்றினால்  பிரம்மதேவனால் உருவாக்கப்பட்ட, பேய்கள் மற்றும் தீய ஆவிகள் அவற்றை அழிக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் அவற்றை அந்த கிராமத்தில் இருந்து விரட்டியடிக்க முடியும். இப்படியாக கிராம தெய்வங்களின் செயல்திறன் அதிகரிக்கத் தொடங்கும் போது, ஒரு குல தெய்வத்திற்கான சக்தி எத்தனை தேவையோ அதன் அடிப்படையில் மேலும் மேலும் தெய்வ சக்திகள் கிராம தேவதைகளுக்கு பிரம்மாவால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
127) நான்காம் நிலை தெய்வங்களும் பூமிக்கு வந்து சில மனிதர்களின் அல்லது விலங்குகளின் உடம்பில் புகுந்து கொண்டு மெல்ல மெல்ல அந்த ஊரின் எல்லைகளை காக்கும் ஊர் எல்லை காவல் தெய்வங்களாகின்றன. மானிடர்களில் சிலர் முன் பிறவிகளில்   செய்த நற்செயல்களின் காரணமாக ஊர் எல்லை காவல் தேவதைகளாக மாறுகிறார்கள். மனிதர்களின் அல்லது விலங்குகளின் உடலில் புகுந்து கொள்ளும்  புண்ணிய ஆத்மாக்கள் அவர்கள் வெளிப்பட்ட கிராமத்தில் உள்ள மனித குலத்திற்கு நன்மை பயக்கும் செயல்களை செய்வார்கள். காலப்போக்கில், அவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, அந்த கிராம மக்கள் அந்த புண்ணிய ஆத்மாக்களான மானிடர்களை மரியாதையுடன் நடத்தத் துவங்குவார்கள். அந்த மனிதர்கள் அல்லது விலங்குகளின் மறைவுக்குப் பிறகு, அவர்களை அடக்கம் செய்த இடங்களில் கல்லறை அல்லது நினைவு சின்னம் அமைத்து அதை ஒரு வழிபாட்டு தலமாக ஆக்கி விடுவார்கள்.  இறந்து போன சரீரங்களில் உள்ள அந்த ஆத்மாக்கள் அந்த கிராமத்தை  சுற்றி வந்தவண்ணம் ஊர் ஜனங்களை காப்பாற்றி வரும். அந்த அளவிற்கான தெய்வீக சக்திகளை அவர்களுக்கு பிரும்மா வழங்குவார்.
128) இப்படியாகத்தான் பிரம்மாவால் முதலில் திட்டமிடப்பட்டு செயல்படுத்திய நாடகத்தின் மூலம் சாபம் பெற்ற தேவகணங்கள் சாபம் நீங்கி காலப்போக்கில் கிராம தேவதைகளாக அங்கீகாரம் பெறுகின்றன.

தொடர்கிறது …..8

————————–
அடிப்படை ஆதாரம் :- மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.

(1) https://www.khanacademy.org/humanities/art-asia/beginners-guide-asian-culture/hindu-art-culture/a/principal-deities-of-hinduism
(2) https://www.britannica.com/topic/Hinduism/Deities
(3) https://damienmarieathope.com/2021/01/low-gods-earth-tutelary-deity-
(4) https://en.wikipedia.org/wiki/Mukhalinga
(5) https://www.indiastudychannel.com/experts/47537-information-about-mother-goddess-
(6) https://www.sidmartinbio.org/how-many-types-of-vishnu-are-there/
(7) https://en.wikipedia.org/wiki/Gr%C4%81madevat%C4%81
(8) https://www.profvk.com/22-3-temples-galore
(9) https://en.wikipedia.org/wiki/Village_deities_of_South_India
(10) https://en.wikipedia.org/wiki/Gr%C4%81madevat%C4%81
(11) https://en.bharatpedia.org.in/wiki/Village_deities_of_South_India
(12) Several temple histories where divines manifested in human form to get curses revoked
(13) https://www.indianetzone.com/27/evil_demon_spirits_hindu_mythology.htm

———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman