-8-
129) குலதெய்வங்களை படைத்தது பிரும்மதேவரா என்றால் இல்லை என்று கூறலாம். எந்த இடத்தில் என்னென்ன தெய்வங்கள் மற்றும் குலதெய்வம் தோன்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகார வரம்பைக் கொண்டவர் பிரும்மதேவர் ஆகும். அப்படி என்றால் மானிடர்களுக்கு தாம் எங்கு அவதரித்து உள்ளோம் என்பதை எப்படி தெய்வங்கள் வெளிப்படுத்தின ? குல தெய்வம் உட்பட அனைத்து தெய்வங்களும் தாம் ஒரு இடத்தில் அவதரித்தப் பின்னர் அந்த கிராமத்தில் உள்ள எவருடைய கனவிலாவது தோன்றியோ அல்லது அவர்களது உடலில் புகுந்து கொண்டோ அல்லது சாமியாடிகள் மூலமோ தான் இன்னென்ன இடத்தில் உள்ளேன் என்பதைக் கூறி அங்கு வந்து தம்மை வழிபட்டால் அவர்களது அவர்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்றும் கூறுவார்கள். முன்னரே நான் கூறி இருந்தபடி எந்தெந்த இடங்களில் யார் அவதரிக்க வேண்டும் என பிரும்மதேவர் நிர்ணயித்து இருந்தாரோ அங்கு மட்டுமே சென்று அந்தந்த தெய்வங்கள் அவதரிப்பார்கள். அவர்கள் தமக்கு பிடித்த வேறு இடங்களில் சென்று அவதரிக்க மாட்டார்கள்.
130) அதே நேரத்தில் வேண்டுமென்றே செயற்கையான சில பிரச்சனைகளை சிலருக்கு உருவாக்கி அவர்கள் மனதில் அந்த தெய்வத்தை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற எண்ணத்தையும் விதைப்பார்கள். அதனால் பிரச்சனைகளை சுமக்கும் மக்கள் அந்த சமாதி மையங்களுக்கு சென்று பிரார்த்தித்து பூஜைகளை செய்யும்போது அவர்களுடைய பிரச்சனைகளும் விலகத் துவங்கியதை காண்பார்கள். மற்றவர்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் இயற்கையின் சீற்றங்களை தடுப்பது போன்றவற்றை கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் பிற கணங்கள் பிரதான தெய்வங்கள் மூலம் நிவர்த்தி செய்கின்றன என்ற ரகசியம் மக்களுக்கு தெரியாது.
131) மெல்ல மெல்ல மற்றவர் கண்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்த, சாபம் பெற்று பூமிக்கு வந்திருந்த பிற கணங்கள் மக்களால் ஏற்கப்பட்டு சில குடும்பத்தின் குல தெய்வம் அல்லது இஷ்ட தேவதைகள் ஆயினர்.
132) அங்காங்கே புண்ணியங்களை செய்த பிறவிகளை குல தெய்வமாக உருவாக்க பிரும்மதேவர் சில நாடகங்களையும் நடத்த வேண்டி இருந்தது. அவர்கள் சில மனித அல்லது விலங்குகளின் உடலில் நுழைந்து வினோதமான நாடகங்களை நடத்தி காலப்போக்கில் காவல் தேவதையாக மாறுகின்றன. இன்னும் காலப்போக்கில் அவைகளே கிராம தெய்வங்களாகவும் மாறி, குலதெய்வங்களாகவும் மாறுகின்றார்கள் . இப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக பிரும்மாவின் செயல் திட்டப்பாடி அனைத்துமே நடைபெறுகின்றன.
133) பரப்பிரம்ம லோகத்தில் இருந்த தேவ கணங்களுக்கு கிடைக்கும் சாபங்களின் தன்மைகளும் பூலோகத்தில் உள்ள மனிதர்கள் பெறும் சாபங்களின் தன்மைகளும் வெவ்வேறானவை ஆகும். பரப்பிரம்ம லோகத்தில் இருந்த தேவ கணங்களுக்கு கிடைக்கும் சாபங்களின் தன்மைகள் பூமியில் கிடைக்கும் சாபங்களின் தன்மைகளை விட மிகப் பெரிய அளவிலானது.
134) சாபங்களை களைந்து கொள்ள தேவகணங்கள் பூமிக்கு சென்று பிறப்பு எடுத்து மனிதர்கள் மற்றும் தெய்வங்களுக்கு இடையே மிகக் கடினமாக செயல்பட்டால் மட்டுமே சாப விமோசனம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பூமியில் பல காலம் கஷ்டப்பட்ட பின்னரே அதே பூமியில் உள்ள குலதெய்வங்களின் உதவிகளுடன் அவற்றால் பாப விமோசனம் பெற முடிகின்றது. ஆனால் இந்த நாடகங்கள் மானிடர்களுக்கு புரியாது, தெரியாது, அவை ஆன்மீக மகான்களுக்கு மட்டுமே தெரியும் மற்றும் புரியும்.
135) புராணத்தில் காணப்படும் பல கதைகள் மூலம் எவ்வாறு தெய்வங்கள் தங்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்ய கொள்ள பூமிக்கு வந்து மனித உருவெடுத்து, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த இடங்களுக்கு சென்று அங்கு தங்கி, தவம் இருந்து சாப விமோசனம் பெற்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்கள் தவம் இருந்த காலத்தில் அவர்களுடைய தெய்வ சக்திகளையும் பிரயோகிக்க முடியாது, மிகக் குறைந்த அளவிலேயே அவர்களது தெய்வீக சக்திகளை பயன்படுத்த முடியும் என்பதும் பிரும்ம விதியாக இருந்தது. அதன் காரணம் மானிட உருவங்களை எடுத்து வந்துள்ள தெய்வங்கள் சாப விமோசனம் பெற வேண்டுமானால் மானிடர்களைப் போலவேதான் கடும் துயரங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பது நியதியாக இருந்தது. இன்னொரு காரணம் தம்முடைய தெய்வ சக்திகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து விட்டால் அவற்றை துஷ்பிரயோகம் செய்து தமது சாப காலத்தில் கஷ்டப்படாமல் இருந்து விடுவார்கள், அதன் பின் சாபம் என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்பதாக பிரும்மதேவர் நினைத்ததினால்தான் அப்படிப்பட்ட நியதிகளை வைத்து இருந்தார்.
136) பரப்பிரம்ம லோகத்தில் தங்கியிருந்த போது சில தெய்வங்கள் பெற்றிருந்த சாபங்களை பூமியில் தவம் செய்து மீட்டு எடுக்க வேண்டும் என்பது நியதியாக இருந்ததினால், மனித பிறவி எடுத்து பாவங்களை நிவர்த்தி செய்து கொள்ள பூமிக்கு வந்த முதன்மை தெய்வங்கள், குறைவான தெய்வீக சக்திகளை சுமந்து வந்திருந்ததினால் பூமியில் தங்கியிருந்தபோது அவற்றை அரிதாகவே வெளிப்படுத்தினர். அதனால்தான் அவர்களால் உடனடியாக குலதெய்வம் எனும் அந்தஸ்தை பெற முடியாமல் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலையை அடைய வேண்டி இருந்தது. ஸ்ரீ முருகன், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பரசுராமர், பார்வதி தேவி , லக்ஷ்மி தேவி, வள்ளி தேவி, சீதா தேவி அல்லது சரஸ்வதி தேவி போன்ற தெய்வங்கள் இதற்கு உதாரணங்கள் ஆவர். வள்ளி தேவி பல பெயர்களில் குல தெய்வம் என்ற அந்தஸ்து பெற்று உள்ள நிலையில், தேவயானை தேவியும், சீதா தேவியும் அந்த நிலையை அடையவில்லை என்பதும், அவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மட்டுமே வழிபடப்படுவதும் ஆச்சரியமளிக்கிறது.
137) அந்த நான்கு நிலை தெய்வங்களை தவிர, மேலும் சில ஆன்மாக்களை கெட்ட ஆவிகள், பேய்கள் என ஐந்தாவது நிலையிலான தேவ கணங்களாக பிரம்மா மாற்றினார். பிரம்மனின் விதிமுறை என்னவென்றால், பூமிக்கு வந்து குடியேற உள்ள ஆத்மாக்கள், அந்த பூமிக்கு வந்த உடனேயே, ஏதாவது ஒரு பிறவி எடுக்கும் முன் தேவைக்கு மேலான எதிர்மறை எண்ணங்களை உள் வாங்கிக் கொண்டுவிட்டால் அவை வானத்தில் சுற்றித் தெரியும் பேய்களாகவும் ஆவிகளாகவும் மாறும். அதே நேரத்தில் பூமிக்கு வரும் ஆத்மாக்கள் எந்த அளவிலான எதிர்மறை ஆற்றல்களை உள் வாங்கிக் கொள்ளலாம் என்பதையெல்லாம் அவர்களுக்கு எதனால் தெரியப்படுத்தப்படவில்லை என்பதின் காரணம் தெரியவில்லை. தெய்வங்களுக்கும் தீய கணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரம்மா அந்த ஐந்தாவது நிலை பேய் மற்றும் பிசாசுகளை உருவாக்கி இருந்தார்.
138) எனது கட்டுரையின் முந்தைய பகுதியில், பூமிக்கு ஆன்மாக்களை அனுப்புவதற்கு முன், எதனால் பிரம்மா, நிலத்தை பல்வேறு தன்மைகளை கொண்டதாக பிரித்து வைத்திருந்தார் என்பதை விளக்கி இருந்தேன். அந்த தன்மைகள் எதிர்மறை மற்றும் நேர்மறை போன்ற தன்மைகளை கொண்டவையாக இருந்தன என்பதினால் அதில் சென்று தங்கும் ஆத்மாக்களும் அந்தந்த நிலத்தின் தன்மைகளை உறிஞ்சிக் கொண்டு விடும் என்ற நிலைப்பாட்டோடு நிலங்கள் படைக்கப்பட்டு இருந்தன . எந்தெந்த ஆத்மாக்கள் எங்கெங்கு சென்று தங்க வேண்டும் என்ற முடிவை அந்த ஆத்மாக்களின் முடிவுக்கே விட்டு இருந்தார் என்றாலும் எந்த அளவில் அந்த நிலத்தின் தன்மைகளை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வேண்டும் என்பதை மர்மமாகவே வைத்து இருந்தார்.
139) இதிகாச புராண மற்றும் பிற வேதங்களின் நூல்களைப் படிக்கும்போது, குல தெய்வம் உள்ளிட்ட தெய்வ வழிபாடு வேத காலத்திலேயே இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ரிக் வேதம் மற்றும் பவிஷ்ய புராணங்கள் போன்ற பண்டைய நூல்களில் பிராமணர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வேத காலத்தில் பிரதானமாக இருந்த பிராமணர்களில் ஒரு பிரிவினர் சரஸ்வதி நதிக்கரையில் வசித்த சரஸ்வத் பிராமணர்கள் என்பவர்கள் ஆவார்கள். அந்த சரஸ்வத் பிராமணர்கள் முதன்முதலில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட ஏழு ரிஷிகளின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது. பாரம்பரியமாக ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு சந்ததியினரும் ஒரு தனித்துவ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒவ்வொரு கோத்திரமும் ஏழு சப்த ரிஷிகளில் ஒன்றைக் குறிக்கிறது என்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் பத்து மகரிஷிகளின் பெயரில் பத்து கோத்திரங்களைக் கொண்ட சரஸ்வத் பிராமணர்கள், குறிப்பிட்ட வெவேறு எட்டு குல தெய்வங்களை வணங்கி வந்துள்ளார்களாம். இது ஏழு ரிஷிகளுக்கு பதில் பத்து ரிஷிகள் என்பது வியப்பான செய்தியாகவே உள்ளது. இதுவே வேத காலத்தில் கூட குல தெய்வ வழிபாடு நிலவியது என்பதைக் காட்டுகின்றது. குல தெய்வ வழிபாட்டை பிராமணர்கள் அந்த காலத்திலேயே கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதை சரஸ்வத் பிராமணர்கள் பற்றிய பல வரலாற்றுக் கதைகளிலும் காணலாம்.
140) குல தெய்வ வழிபாட்டின் நடைமுறையானது ஜாதி மத பேதங்கள் இல்லாத வேத காலத்திலிருந்தே தோன்றியது, மற்றும் அனைவரும் ஒரே மாதிரியான தெய்வங்களை வணங்கினர். ராமாயணம், மகாபாரதம் போன்ற மிகப் பெரிய இதிகாசங்களிலும் கூட ஜாதி மற்றும் மதங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை, ஆனால் அவரவர் செய்திருந்த தொழிலின் அடிப்படையில் அமைந்திருந்த நான்கு வர்ணங்கள் அல்லது பிரிவாக மக்கள் இருந்துள்ளார்கள் .
141) குல தெய்வ வழிபாடு குறித்தும் முன் பாகங்களில் கூறி உள்ளேன். பாரம்பரிய வாழ்வை தொடர்ந்து கொண்டிருந்த குடும்பங்களில் ஆன்மீக மேன்மை, குடும்ப நலன் மற்றும் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள் என்றாலும் தமது முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த குல தெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
142) இந்தக் கட்டுரை பெரும்பாலும் இந்தியாவில் நிலவி வரும் தெய்வ வழிபாட்டு முறையை விளக்குகின்றது. குல தெய்வ வழிபாடு என்பது பெரும் அளவில் இந்தியாவில் குறிப்பாக தென் பகுதியில் நிலவுகிறது. ஆனால் அதே சமயம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். உலகில் பல இடங்களிலும் இன்றும் பிற நாட்டினர் நம் நாட்டில் உள்ள குலதெய்வத்தை போலவே வீட்டு தெய்வம் என்ற பெயரில் சில தெய்வங்களை வழிபடுவதைக் காணலாம்.
143) பூமியில் பிறந்த அனைத்து மனிதர்களும் குல தெய்வ வழிபாட்டை கடைபிடிக்கின்றார்களா என்றால் இல்லை என்றே கூறலாம் எனும்போது குலதெய்வ வழிபாடு அற்ற குடும்பங்களைக் காப்பாற்றி வழி நடத்துவது யார்?
144) உலகில் உள்ள அனைத்து குடும்பத்தாருக்கும் குல தெய்வம் என்பது இருக்காது. பரம்பரை பரம்பரையாக எந்த குடும்பங்களில் குலதெய்வ வழிபாடு இருந்ததோ அந்த குடும்பங்கள் மட்டுமே குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். தத்தம் வாழ்ந்து கொண்டிருந்த நகரங்களிலோ அல்லது நிலங்களிலோ இருந்தவர்கள் தங்களுக்கு விருப்பமான பிற தெய்வங்களை இஷ்ட தெய்வங்கள் என்ற பெயரில் வழிபட்டனர். எவர் ஒருவர் ஆத்மார்த்தமாக தெய்வங்களை வணங்கி வந்தார்களோ அவர்களுக்கெல்லாம் அந்தந்த தெய்வங்கள் அருள் புரிந்து வந்தார்கள்.
145) ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குலதெய்வ வழிபாட்டை புறங்கணித்தாலும் அந்த குடும்பத்தை சேர்ந்த குலதெய்வங்கள் அவரைத் தவிர மற்றவர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது உண்மை. குலதெய்வ வழிபாட்டை கொண்டிருந்த குடும்பங்களில் யார் அதை புறங்கணித்தார்களோ அவர்கள் பல்வேறு சோதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தார்கள்.
146) குல தெய்வங்கள் எந்த அளவிலான சக்திகளை கொண்டுள்ளன என்றால் குலதெய்வங்களும் பிரதான மற்றும் இரண்டாம் நிலை தெய்வங்களை போலவே முழுமையான தெய்வ சக்திகளைக் கொண்டுள்ளன. அதன் காரணம் அவர்கள் அனைவருமே பிரதான தெய்வங்கள் அல்லது பரபிரும்மனின் தெய்வ சக்திக் கதிர்களில் இருந்து வெளியானவர்.
147)குலதெய்வங்கள் அமைந்துள்ள இடங்களில் பிற தெய்வங்களும் குடியேறலாமா? பிரும்ம நியதிப்படி எந்தெந்த தெய்வங்கள் எங்கெங்கு அவதரிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அவர்கள் அவதரிப்பார்கள் என்றாலும் ஒரு தெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்ப விவகாரங்களில் இன்னொரு தெய்வம் தலை ஈடாக கூடாது என்பதும் பிரும்ம நியதி ஆகும்.
148) ஒரு சிறிய சந்தேகம் எழுகின்றது. ஒரு பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட குல தெய்வத்தை வணங்கி வருகின்றார்கள் என்பதாக கருத்தில் கொள்வோம். ஒருவேளை அவர்கள் வேறு எங்காவது ஒரு பிரதேசத்தில் குடியேறி சென்று விட்டார்கள் எனும்போது அந்த குறிப்பிட்ட பிரதேசத்தில் அந்த குடும்பத்தினருக்கு வேறு எந்த தெய்வம் அருள் புரிந்து கொண்டு இருக்கும்?
149) தம்மை வழிபட்டுக்கு கொண்டிருந்த குடும்பத்தினர் ஒரு நிலப்பரப்பில் இருந்து இன்னொரு நிலப்பரப்பிற்கு குடியேறிச் சென்று விட்டாலும், அந்த நிலப்பரப்பிற்கு சென்று அவர்களுக்கு அருள் புரியும் தெய்வ சக்தி அவர்கள் வழிபட்டு வந்திருந்த குலதெய்வத்திற்கு நிச்சயம் உண்டு. ஆனால் அதே சமயத்தில் புதிய நிலப்பரப்பிற்கு சென்று தம்மை வழிபட்டுக்கு கொண்டிருந்த குடும்பத்தாருக்கு அருள் புரியும் நேரங்களில் ஏற்கனவே அங்கு பிற குடும்பங்களுக்கு அதிபதியாக இருக்கும் குலதெய்வங்களின் செயல்பாடுகளில் அவை எந்த விதத்திலும் தலை ஈடக் கூடாது, இடைஞ்சல்களை செய்யக் கூடாது என்பது பிரும்ம நியதியாகும்.
150) அதேபோல குடி பெயர்ந்து சென்றுள்ள, தம்மை வழிபாட்டு வரும் குடும்ப நலனுக்காக, அவர்கள் வணங்கும் குல தெய்வம் அந்த குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்றால் அங்கு ஏற்கனவே பல குடும்பங்களுக்கு அதிபதியாக உள்ள குலதெய்வங்கள் அங்கு வரும் குல தெய்வத்தை தடுக்கக் கூடாது, அவர்களுக்கு எந்த இடைஞ்சல்களை தாரக கூடாது என்பதும் கண்டிப்பான பிரும்ம நியதி ஆகும்.
151) குல தெய்வங்களின் செயல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை சிறு உதாரணம் மூலம் பார்க்கலாம். நலமங்கலா என்ற கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். பிரம்ம நியதியின்படி A,B,C,D என்ற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்த 25 முதல் 30 குடும்பங்களுக்கும், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு குலதெய்வம் என ஐந்து குலதெய்வங்கள் பிரும்மதேவரால் நியமிக்கப்பட்டு இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்குள்ள பிற குடும்பத்தினருக்கு குலதெய்வம் கிடையாது எனும்போது அவர்கள் அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப அதே இடத்தில் உள்ள அல்லது வெளி மாநிலத்தில் உள்ள வேறு ஏதாவது தெய்வங்களை தமது இஷ்ட தெய்வமாக கொண்டிருக்க தடை இருக்காது.
152) குல தெய்வங்களின் நிலை குறித்த இன்னொரு உதாரணம் இது. A எனும் குடும்பத்தின் சில உறுப்பினர்கள் தமக்கு எதிராளிகள் எனக் கருதும் B குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சில பாதகங்கள் வர வேண்டும் என்பதற்காக தங்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தேவதை அல்லது சில பிரதான தெய்வங்களை வேண்டிக் கொண்டு . யாகம் அல்லது பிற பூஜைகளை செய்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம். ‘B’ குடும்பத்தினர் உண்மையில் A குடும்பத்தினருக்கு எதிராக எதையும் செய்பவர்கள் அல்ல மற்றும் அவர்கள் நேர்மையாகவும், முறையாகவும் அவர்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்து வருகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு நிலையில் A குடும்பத்தின் குலதெய்வங்கள் அல்லது A குடும்பத்தினர் வேண்டிக் கொண்டு பூஜைகளை செய்த வேறு தெய்வங்கள் என எந்த தெய்வமும், அவர்கள் எத்தனைதான் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், பாதிக்கப்பட இருக்கும் ‘B’ குடும்பத்தினர் வழிபட்டு வரும் குலதெய்வங்களையும் கலந்தாலோசிக்காமல் தன் இச்சையாக A குடும்பத்தினரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது என்பது மிகவும் கண்டிப்பான பிரும்ம நியதி ஆகும்.
153) பிரும்ம நியதிப்படி, ஒருவரையொருவர் கலந்தாசிக்காமல், தன்னிச்சையாக தெய்வங்கள் எடுக்கும் முடிவுகள், ஒரு குல தெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்பங்களுக்குத் தீங்கு விளைவிக்குமானால், அத்தகைய தெய்வீகச் செயல்கள் பிரம்ம நெறியை மீறுவதாகவும், ஒரு குலதெய்வத்தின் உரிமையை பறிப்பதாகவும் இருக்கும் எனக் கருதப்படும். அது மட்டும் அல்ல தன்னிச்சையாக முடிவு எடுத்து ‘A’ குழுவினர் வேண்டிய பிரார்த்தனைகளுக்கு அருள் கொடுத்தாலும் அதற்கு பலன் கிடைக்காது.
154) ஒவ்வொரு குலதெய்வத்தை வழிபடும் பக்தர்களையும் அந்தந்த குல தெய்வங்களின் தெய்வீகக் கதிர்கள் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பதினால், மேல் கூறப்பட்டு உள்ள உதாரணத்தில் B பிரிவு குலதெய்வங்களின் முன் அனுமதியைப் பெறாமல், ‘A’ பிரிவு மக்களின் வேண்டுகோட்களை ஏற்றுக் கொண்டு பிற தெய்வங்களினால் கொடுக்கப்படும் அருள் ஆசி கதிர்கள் B பிரிவு மக்களை நெருங்க முடியாது. B பிரிவு மக்களின் குலதெய்வங்கள் தந்துள்ள தெய்வீகக் கதிர்களினால் அவை தடுக்கப்பட்டு விடும். B பிரிவு குலதெய்வங்களின் முன் அனுமதியைப் பெறாமல் A பிரிவு மக்களுக்கு ஏதாவது ஒரு தெய்வம் அருள் கொடுத்தால் அவர்கள் பிரும்மாவின் சாபத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்களுடைய தெய்வ சக்திகள் தற்காலிகமாக பரப்பிரும்மனினால் முடக்கப்பட்டு விடும். இப்படியாகத்தான் சில தெய்வங்கள் தம்மை அறியாமலேயே சாபங்களை பெறுகின்றார்கள். அதனால்தான் ஒரு குலதெய்வத்தின் பாதுகாப்பில் உள்ளவர்கள் அந்த தெய்வத்தின் தெய்வீக சக்திக் கதிர்களால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.
155) இந்த விதிமுறையிலும் ஒரு சிறிய ‘உள்விதி’ உள்ளது. அதாவது தெய்வங்கள் மனிதர்களிடையே நீதி, நேர்மை மற்றும் அன்பை நிலை நாட்டுபவை என்பதால், உண்மையில் ‘B’ குழுவானது ‘A’ குழுவிற்கு எதிராக விரும்பத்தகாத தீமைகளை செய்தவர்களாக இருந்திருந்தால், அவர்கள் தண்டனை பெறத் தகுதியானவர்கள் எனக் கருதும் B பிரிவு குடும்பத்தினரின் குலதெய்வங்கள் அவர்களுக்கு தம்மால் தரப்பட்ட தெய்வீக கதிர்களினால் ஆன பாதுகாப்பு வளையத்தை தண்டனை முடியும்வரை தற்காலிகமாக எடுத்து விடும்.
156) A பிரிவின் பிரார்த்தனைகளை ஏற்று B பிரிவு குலதெய்வத்தின் அனுமதியுடன் தரப்படும் தண்டனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன ? அப்படி தரப்படும் தண்டனைகள் எதிர்மறை ஆற்றல் சக்திக் கதிர்களாகி ‘B’ குழுவை அடைந்து, அவர்கள் உடலை சூழ்ந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையில் வரவுள்ள வளம் மற்றும் மகிழ்ச்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயல்படும். அதன் விளைவாக அவர்கள் தமது வாழ்க்கையில் முடிவற்ற மன வேதனையையும், தடங்கல்களையும் சந்தித்தவாறு இருக்க அவர்களது வாழ்க்கை சீர்குலைக்கிறது.
157) அதே சமயம், தண்டிக்கப்பட்ட ‘B’ பிரிவை சேர்ந்தவர் தமது தவறை உணர்ந்து, தண்டனையினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கோரி, தங்களது குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு தொடர்ந்து, உண்மையான, நியாயமான முறையில் பிரார்த்தனை செய்து வந்தால், எந்த தெய்வம் மூலம் அவர்கள் தண்டனை பெற்றார்களோ அந்த தெய்வம் சம்மதித்தால் அவர்களது தண்டனையை சில காலத்திற்குப் பிறகு ரத்து செய்யும் அதிகாரம் ‘B’ பிரிவை சேர்ந்தவர் வணங்கி வரும் குலதெய்வத்திற்கு உண்டு. இப்படியாக உள்ளுக்குள்ளேயே தெய்வங்களுக்கான பல விதி முறைகள் உள்ளன. அவை அனைத்துமே எதற்காக வைக்கப்பட்டு உள்ளன என்றால் எந்த ஒரு தெய்வங்களும் சக தெய்வங்களை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டு விடக்கூடாது என்பதினால்தான் . இப்படிப்பட்ட பிரும்ம நியதி முறைகள் அனைத்துமே மானிடர்களின் சிந்தனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை , விளங்காதவை .
158) தெய்வங்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் நிலைநிறுத்துவதற்காக, தெய்வ செயல்முறைகளில் பிரும்மா இதுபோன்ற பல விதிமுறைகளை இணைத்துள்ளார். ஏன் எனில் அனைத்து தெய்வங்களும் பரப்பிரும்மனின் தெய்வீக கதிரலையில் இருந்து வெளிவந்தவர்களே என்பதினால் ஒருவரை ஒருவர் அவமானப்படுத்துவது, அல்லது குலதெய்வங்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிற தெய்வங்கள் செயல்படுவது போன்ற செயல்கள் பரப்பிரும்மானின் தெய்வ தோற்றங்களின் செயலை இழிவு படுத்தும் விதத்தில் அமைந்து விடும் என்பதினால்தான் இத்தகைய கண்டிப்பான விதி முறைகள் உள்ளன.
159) மேலே உள்ள அனைத்தும் வெளிப்படுத்துவது என்ன என்றால், மனிதர்களைப் போலவே, தெய்வங்களும் சில நியதிகளுக்கு கட்டுப்பட்டவை என்பதை எடுத்துக் காட்டவும், நியாயமும், நேர்மையும், தர்மமும் பூலோகத்து மக்களுக்கு மட்டும் அல்ல தெய்வங்களுக்கும் பொருந்தும் என்பதைக் காட்டுவதற்கும்தான்.
தொடர்கிறது …..9
————————–
அடிப்படை ஆதாரம் :- மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.
(1)https://en.wikipedia.org/wiki/Gr%C4%81madevat%C4%81
(2)Many stories from Shri P.R. Ramachander’s Blog: http://villagegods.blogspot.com/
(3)https://en.wikipedia.org/wiki/Village_deities_of_Sri_Lankan_Tamils
(4)https://en.wikipedia.org/wiki/Tutelary_deity
(5)https://navrangindia.blogspot.com/2018/04/twenty-important-facts-about-worshiping.html
(6)https://www.wisdomlib.org/definition/kuladevata
(7)https://hinduism.stackexchange.com/questions/12329/what-is-the-origin-of-kula-devata-or-family-deity
(8)https://hellenicfaith.com/tutelary-deities/
(9)https://www.tamilbrahmins.com/threads/brahmins-kula-devatha.3111/
(10)http://www.sanskrutionline.com/home/history.html
(11)http://vaisshnav.blogspot.com/2015/12/kula-deivam-do-we-need-to-pray-to-kula.html
(12)https://everything.explained.today/Tutelary_deity/
(13)https://www.hindu-blog.com/2015/08/goddess-kubjika.html
(14)https://www.britannica.com/topic/Archon-Gnosticism
(15)https://www.rkaroma.com
(16)https://www.encyclopedia.com/environment/encyclopedias-almanacs-transcripts-and-maps/goddess-worship-goddess-worship-ancient-near-east
(17)https://www.missionkuldevi.in/en/2017/04/audichya-brahmin-samaj-gotra-kuldevi-list-history/
(18)https://www.facebook.com/groups/163154720690884/posts/906180419721640/
(19)http://www.sanskrutionline.com/home/history.html
(20)http://gsbkonkanis.weebly.com/kula-devathas.html
(21)https://srimad.org/?p=507
(22)https://krishnatoday.com/kuladevatha-and-krishna-devotees/
(23)https://ramtarak.com/5-amazing-facts-to-pray-kuladevata/
(24)https://chowdeshwaritemple.com/
(25)https://srivadapathirakali.org/sriambal.php
(26)https://hindi.webdunia.com/sanatan-dharma-niti-niyam/kuldevi-puja-121051100041_1.html
(27)http://www.pernekshetra.com/historyincarnation
(28)https://www.historydiscussion.net/history-of-india/early-vedic-period/the-early-vedic-period/6244
(29)https://shrigurumaharishi.org/2019/10/03/why-should-we-worship-our-kuladeivam-family-deity/
(30) Many temple histories contain curses redeemed by divines
(31)http://www.tripura.org.in/fourteengods.htm
———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman