-6-

உலகம் வடிவமைக்கப்பட்டது

96) இந்தியாவில் வழிபடப்படும் தெய்வங்களின்தோற்றம் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பரபிரும்மனின் உடலுக்குள் இருந்த லோகத்தில் தெய்வங்கள் தோன்றியதாக பண்டிதர்களால் பொதுவாக நம்பப்படுகிறது. பல புராண நூல்களிலும் அனைத்து தெய்வங்களையும் சிவபெருமானே படைத்ததாக கூறப்பட்டு இருந்தாலும், சக்தி வழிபாடு உள்ளவர்கள், ஆதி பராசக்தியே பரபிரும்மன் எனவும், அதன் ஆற்றல் பெற்ற நிலையில் உள்ளவளும் பிரம்மமாக, இறுதி உண்மை என கருதப்படும் நிலையில் உள்ளவளுமே அந்த தேவியாகும் என்கின்றார்கள். ரிக்வேதத்தில் உள்ள தேவி சூக்தம் மற்றும் ஸ்ரீ சூக்தம் எனும் கூற்றின்படி அவளே அனைத்து படைப்புகளின் கருவாக இருக்கிறாள். இன்று நாம் காணும் தெய்வங்கள் எவ்வாறு குறிப்பிட்ட தோற்றம் மற்றும் வடிவங்களைப் பெற்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பொதுவாக நம்பப்படும் கருத்து என்னவென்றால், அவர்கள் பரபிரம்ம லோகத்தில், அநேகமாக பரபிரும்மனின் பெண் சக்தி எனும் பாகத்தின் கருப்பையில் இருந்தே தங்கள் அம்சங்களையும் தோற்றத்தையும் பெற்றனர் என்கின்றார்கள்.
97) அதே நேரத்தில் சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் பார்வதி தேவி போன்ற பிரதான தெய்வங்களும் கூட பரபிரம்ம லோகத்தில் உருவானதுதானா என்பது விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. எந்த தெய்வங்கள் என்னென்ன வடிவங்களையும் தோற்றங்களையும் பெற்றன? அனைத்து தெய்வங்களும் பரபிரம்ம லோகத்திற்குள் படைக்கப்பட்டு அங்கேயே தெய்வீக ஆற்றல் தரப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டனவா? தெய்வங்களின் தோற்றங்களும் அம்சங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்ததா? பதிலளிக்க முடியாத சில கடினமான கேள்விகள் இவை.
98) பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே, பல லட்ச கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களும், தேவகணங்களும் பரபிரம்ம லோகத்திற்குள் சில குணாதிசயங்கள் மற்றும் தோற்றங்களுடன் தெய்வீக ஆற்றல் பெற்று இருந்த சக்தி கணங்களாக இருந்தன என்று ஆன்மீக குருமார்கள் விளக்குகிறார்கள். பரபிரம்ம லோகம் என்று அழைக்கப்படும் ஆற்றல் மிக்க மையமாக அந்த லோகம் இருந்துள்ளது. அதில் பரபிரம்மனின் லட்சக்கணக்கான தெய்வீக ஆற்றல் கதிர்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. பூமியும் பெருங்கடலும் கூட செயலாற்ற நிலையில் பரபிரும்மனின் உடலுக்குள்ளேயே இருந்துள்ளன.
99) பண்டிதர்களின் கருத்துப்படி, தனது ஆற்றல் கதிர்களை பல்வேறு வடிவங்கள் மற்றும் தோற்றங்களில் காணப்படும் தெய்வங்களாக மாற்றுவதற்கு முன், தனது உடலுக்குள் தெய்வீக சிற்பியை பரபிரும்மன் உருவாக்கினார். பரபிரம்மனின் உடலுக்குள் இருந்த அந்த தெய்வ சிற்பியே சிவபெருமான், மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் பார்வதி தேவி போன்ற முக்கிய தெய்வங்களை உள்ளடக்கி அனைத்து தெய்வங்களுக்கும் சில வடிவத்தையும் தோற்றத்தையும் கொடுத்தார் என்று நம்பப்படுகிறது. தெய்வ சிற்பி விஸ்வகர்மாவின் பாத்திரத்தைப் பற்றி ரிக் வேதத்தில் கூட குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே போலவே மேலும் சில உபநிடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. தெய்வ சிற்பி விஸ்வகர்மா தனது நாபியிலிருந்து பல உருவங்களை எடுத்து அவற்றைக் கொண்டே தெய்வங்களின் தோற்றத்தை வடிவமைத்தாராம். பண்டைய வேத காலத்தில் தெய்வ சிற்பி விஸ்வகர்மாவை தெய்வ உருவங்களை படைக்கும் த்வஸ்தாருடன் (Tvastar) ஒப்பிட்டு பார்த்தார்கள்.

100) இவ்வாறு பரப்பிரும்மனின் உடலுக்குள்ளேயே உருவாக்கப்பட்ட தெய்வங்கள் அனைவருமே பரபிரம்மனுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இருந்தார்கள். தெய்வங்களின் வடிவமும் தோற்றமும் பரபிரும்மனின் உடலுக்குள் உருவாகிய பின்னர், அடுத்து கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருந்த பிரபஞ்சம் அனைவரும் காணும் வகையில் வெளிப்பட்டது. ஆனால் தெய்வங்கள் எப்போது வெளிப்பட வேண்டும் என்பதை பிரம்மதேவர் மட்டுமே முடிவு செய்வார் எனும் நியதி அமைக்கப்பட்டது.
101) இந்த ரகசியம் முதலில் படைக்கப்பட்டு இருந்த மகரிஷிகளுக்கு பிரம்மாவால் கூறப்பட்டது. ஸ்ரீமன் நாராயணனும் (விஷ்ணு பகவான்) இந்த ரகசியத்தை நாரத முனிக்கு ரகஸ்ய ஸ்துதி எனும் நூலில் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. இமயமலையில் உள்ள ஒரு குகையில் தனியாக அமர்ந்திருந்த போது, பார்வதி தேவிக்கு இந்த ரகசியங்களை சிவபெருமானே கூறினார் என்றும் அவர்களின் உரையாடலை ஒரு தெய்வீகப் பறவை கேட்டதும் அல்லாமல் அவற்றை ரிஷி மற்றும் முனிவர்களுக்கும் கூறியதாம்.  அதுவே வாய்வழி கதைகள் மூலம் ரிஷி மற்றும் முனிவர்களினால் பிரபஞ்சத்தில் பரப்பட்டனவாம்.
102) எதனால் பரபிரம்மனின் உடலுக்குள் தெய்வங்கள் உருவாயின? பரபிரம்ம லோகத்தில் அவரது தெய்வீக சக்திக் கதிர்களில் இருந்து ஏதோ ஒரு வடிவில் உருவாக்கப்பட்டிருந்த தெய்வங்களுக்கு தெய்வீக ஆற்றல்கள் தரப்பட வேண்டும், அப்படி தெய்வீக ஆற்றல்கள் தரப்படாவிடில் அவர்களால் தாம் என்னென்ன நாடகங்களை பூமியில் நடத்திட வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டு அவற்றை பூமியில் நடத்திட முடியாது. அந்த நிலை பூமியில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்பதினால்தான் தெய்வங்கள் பரபிரும்மனின் உடலுக்குளேயே படைக்கப்பட்டு அவற்றுக்கு பயிற்சி மற்றும் ஒத்திகைகளும் அங்கேயே தரப்பட்டனவாம்.
103) பரபிரம்ம லோகத்தில் இருந்து பிரபஞ்சம் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் பாதியில் மானிடர்கள் வாழும் வகையிலான ஆற்றல் மிக்கதாக பூமி உருவாக்கப்பட்டு வந்திருந்தபோது, பரபிரும்மனின் உடலுக்குள் படைக்கப்பட்டு இருந்த சில தெய்வங்கள் ஒத்துகையின்போது தவறுகளை செய்து சாபங்களையும் பெற்றன. அப்படி சாபம் பெற்ற சில தெய்வங்களில் சில பிரதான தெய்வங்களும் அடக்கம் ஆகும்.
104) ஆற்றல் மிக்க பூமி உருவாக்கப்பட்ட பிறகு, அதில் பிறப்பெடுக்க ஆன்மாக்கள் அனுப்பப்பட்டபோது, ​​பரபிரம்ம லோகத்தில் உருவாக்கப்பட்டிருந்த சில தெய்வங்களும் அதே பூமியில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்பில் சென்று கண்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்தன. மகரிஷி வேத வியாசர் மூலம் தான் தெய்வங்களின் உருவங்கள் மனித இனத்திற்குத் தெரிந்தன, அவர் தொகுத்த நூல்களில் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் உருவப் படங்கள் வரையப்பட்டு இருந்தன என சனாதனவாதிகள் நம்பினாலும், பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த செய்திகள் அனைத்துமே வாய்மொழி வார்தைகளாகவே வெளித் தெரிந்தன.  இன்னொரு நம்பிக்கை என்ன என்றால் தெய்வங்களின் உருவங்களை தியானத்தில் இருந்த ரிஷி முனிவர்கள் கிரஹித்துக் கொண்டு வெளித் தெரியப்படுத்தினார்களாம். பிரபஞ்சத்தில் தெய்வங்கள் தோன்றியபோது, ​​புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மா (1848-1906) போன்ற சில தெய்வீகக் கலைஞர்களால் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் மனதில் கிரகிக்கப்பட்டு அவற்றுக்கு வடிவம் தரப்பட்டனவாம்.

தெய்வங்களின் தோற்றமும் வழிபாடும்

105) சத்ய யுகத்தில் பிறக்க உள்ள மக்கள் ஒழுக்கம், நேர்மை, நல்ல பண்புகள் கொண்ட, பேராசை, பொறாமை அற்ற மற்றும் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதவர்களாக இருப்பார்கள் என்பதினால் அந்த யுகத்திற்கு அதிக தெய்வங்கள் தேவை இருக்காது. ஆனால் அதே சமயத்தில் அடுத்து அடுத்து வரும் யுகங்களில் அதிக தெய்வங்கள் தேவைப்படும் என்பதையும் பிரும்மதேவர் உணர்ந்திருந்ததினால் அதற்கேற்ப தெய்வங்கள் அவதரிக்க வேண்டிய நிலையை நிர்ணயித்தார்.
106) ஒவ்வொரு யுகங்களிலும் தோன்றும் மக்கள் குணங்களை மெல்ல மெல்ல இழந்தவர்களாக இருப்பார்கள். கடைசி யுகமான கலியுகத்தில் முற்றிலும் பண்புகள் அற்றவர்களாக மக்கள் இருப்பார்கள் என்பதாக பிரும்மா நினைத்தார்.
107) ஒவ்வொரு யுகங்களும் தோன்றும்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருப்பார்கள் என்பதினால் அதற்கேற்ப அவர்கள் வாழத் தேவையான அளவில் நிலமும் விரிவடைய வேண்டும். யுக யுகமாக மக்களின் குணங்களும் மாறுபட்டவண்ணம் இருக்கும் என்பதினால் தீய குணங்களைக் கொண்ட மக்களே இருக்கும் கலியுகத்தில் அவர்களை நல்வழிப்படுத்த அதிக அளவிலான தெய்வங்கள் தேவை என்பதினால் அதிக அளவிலான தெய்வங்களை கலியுகத்தில் தோற்றுவிக்க வைத்தார். இதனால்தான் துவக்க யுகத்தில் இருந்த தெய்வங்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவிலான தெய்வங்களை தற்காலத்தில் நம்மால் காண முடிகின்றது.
108) 3195 வது சதுர் யுக சுழற்சியின் சத்ய யுகத்தில் ஆன்மாக்கள் குடியேறத் தேவையான நிலம் உருவானப் பிறகு, பிரம்மாவின் படைப்புகள் மெல்ல மெல்ல அறிவாற்றல் கொண்டவர்களாக மாறத் துவங்கினார்கள். மிகக் குறைவான அளவிலேயே வழிபாடு எனும் பழக்கம் துவங்கி சில தெய்வங்களை வழிபடும் நிலை இருக்க, அதுவே மெல்ல மெல்ல த்ரேதா யுகம் மற்றும் துவாபர யுகங்களில் விரிவடையத் துவங்கியது. அங்கங்கே இருந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்கள் நமக்கு மீறிய எதோ சக்தி உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு வழிபாட்டு முறையை வளர்த்தவாறு இருக்க குலதெய்வ வழிபாட்டு முறையும் தோன்றியது.
109) வேத காலத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தவர்கள் சூரியன், சந்திரன், நெருப்பு, மரங்கள், மலைகள், பாறைகள் மற்றும் இயற்கையினால் ஏற்பட்டிருந்த சில வடிவங்களைக் கொண்ட பாறைகளையும் வணங்கினர் என்பதாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

110) மனிதர்களை விட சக்தி வாய்ந்த ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழும்ப , அந்த உணர்வே பயமாக மாறியது.  இதனால் திறந்த வெளியில் கண்களுக்கு தெரியாமல் இருந்திருந்த சக்திகளை வழிபடத் துவங்கினார்கள்.  ஆரம்ப கட்டத்தில் பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு வகைகளிலான நிலப்பரப்புகளாக இருந்த நிலங்கள், விலங்குகள் உலாவிய புதர்கள் நிறைந்த காடுகளாகவும் இருந்ததால், திறந்த வெளிகளில் இருந்த சில பாறைகளையும், கற்களையும் மரங்களையும் மக்கள் வணங்கி வந்தார்கள். அந்த குறிப்பிட்ட கற்கள், பாறைகள் அல்லது மரங்களின் அருகே செல்ல மக்கள் அஞ்சினார்கள், ஏதோ அசாதாரணமான, ஆவிகள் அங்கு வசிக்கின்றன என்று பயந்து, தூரத்தில் நின்று அவற்றை வணங்கி வந்தார்கள். பய உணர்வுகளினால் பீடிக்கப்பட்ட மக்கள் தெய்வ சக்திகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளத் துவங்க வேண்டும் என்பதற்காகவே பிரும்மதேவர் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி இருந்தார். மேலும் பய உணர்வினால் தெய்வங்களிடம் முழுமையாக மக்கள் சரண் அடையும் நிலையை தொடர்ந்து கொண்டிருக்க வைத்தார்.
111) அதுவே தக்க சமயம் எனக் காத்திருந்த சீடர்கள், ரிஷிகள், துறவிகள் மற்றும் முனிவர்கள், பல நிலப்பரப்புகளில் சென்று மக்களிடையே பல்வேறு தெய்வத் கதைகளை பரப்பி, தெய்வங்களிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே மக்களை தெய்வங்கள் காத்து அவர்களை நல்வழியில் செல்ல வைப்பார்கள் என்பதாக அவர்களை நம்ப வைத்தார்கள். இந்த நிலை ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் துவங்கியது என்பதாக நம்ப முடிகின்றது. பிரதான தெய்வங்களால் வெளிப்படுத்தப்பட்ட முதல் நிலை தெய்வங்கள் மெதுவாக பல பகுதிகளிலும் மின்னல்கள், இடி, பயமுறுத்தும் ஒலிகள், பேய் உருவங்கள் போன்றவற்றின் மூலம் வெளித் தெரியத் துவங்கினார்கள். இப்படியாக தோன்றிய சில தெய்வங்களை வழிபடத் துவங்க அதுவே குலதெய்வ வழிபாட்டு முறையை மக்களிடையே கொண்டு சென்றது.
112) ஒவ்வொரு நிலப் பகுதிகளிலும் கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள் தோன்றியவண்ணம் இருந்தன. வழிபாட்டு முறை என்பது, அந்த்ரோபோடியா (பெரிய மூளை குரங்குகள் மற்றும் குரங்குகள்) எனப்பட்ட வகையைச் சேர்ந்த பழமையான விலங்குகள் மானிடர்களாக மாறத் துவங்கிய காலமான ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கி இருக்கும் என்பதை ஒருவர் புரிந்துகொண்டால் போதுமானதாக இருக்கும். விலங்குகள் உருவான 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய நிலைக் குறித்து எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. எனவே, தெய்வ வழிபாடும் தெய்வீக தோற்றமும் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்தே தொடங்கி உள்ளன என்று நினைக்கலாம் .

தொடர்கிறது …..7


அடிப்படை ஆதாரம் :- மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.

(1) https://en.wikipedia.org/wiki/Devi
(2) https://www.tourmyindia.com/blog/famous-mythological-characters-hindu-sanatan-
(3) https://indianexpress.com/article/explained/raja-ravi-varma
(4) https://en.wikipedia.org/wiki/Tvashtr
(5) https://www.facebook.com/viswabramins/posts/in-the-vedaseditvishwakarma
(6) https://testbook.com/question-answer/the-religion-of-early-vedic-aryans-
(7) https://rmrl.in/wp-content/uploads/Genesis-of-Sun-Worship.pdf

———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman