-4-

அகண்டத்தை வெளிப்படுத்திய பரப்பிரும்மன்

41) முன்னர் கூறியது போல், பரப்பிரும்மன் தன்னுள் இருந்து பிரபஞ்சத்தை வெளிப்படுத்தி அதை உயிரினங்கள் வாழத் தேவையான நிலையில் மாற்றி அமைத்தப் பின்னர் தெய்வங்களையும் வெளிப்படுத்தத் துவங்கினார். முதலில் பரப்பிரும்மனின் ஒரு பக்கத்திலிருந்து சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா போன்ற முதன்மை தெய்வங்கள் தோன்ற, அவரது உடலின் மறு பக்கத்திலிருந்து பார்வதி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வெளியே வந்தனர். ஆனால் இதை சில ஆன்மீகவாதிகள் ஏற்க மறுக்கின்றார்கள். அவர்கள் கூற்றின்படி முதலில் பரப்பிரும்மனின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு ஆண் தெய்வமான சிவபெருமான் மட்டுமே வெளியே வந்தார் என்றும், உடனடியாக அவரிடமிருந்து விஷ்ணு பகவான் வெளிப்பட, அவருடைய நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார் என்கின்றார்கள். ஆனால் பரப்பிரும்மனின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று ஆண் தெய்வங்கள் வெளி வந்தார்கள் என்பது மறுக்கப்படவில்லை.
42) அதே நேரத்தில் பரப்பிரும்மனின் மறுபக்கத்திலிருந்து பார்வதி தேவி (சக்தி) வெளி வந்தாள். அப்படி வெளி வந்த பார்வதி தேவி அவள் உடலில் இருந்து உடனடியாக மேலும் இரண்டு பெண் தெய்வங்களான -மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி எனும் தெய்வங்களை வெளிப்படுத்தினார். சில நாட்டுப்புறக் கதைகளின்படி, பரப்பிரும்மனின் பெண் ஆற்றலுடன் வெளி வந்த பார்வதி தேவி தன் உடலில் இருந்து மஹாலக்ஷ்மி தேவியை வெளிப்படுத்த, அவளது உடலில் இருந்து சரஸ்வதி தேவி வெளிப்பட்டாராம்.
இது குறித்து மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன. அவை பின்வருமாறு.
(a) சைவ மதத்தினரின் கூற்றுப்படி முதலில் சிவபெருமான் வெளிப்பட அவரிடம் இருந்தே பிற தெய்வங்கள் வெளியாயினர் (Ref: லிங்க புராணம் ,பகுதி -3)
(b) வைஷ்ணவ மதத்தினரின் கூற்றுப்படி முதலில் விஷ்ணு பகவான் வெளிப்பட அவரிடம் இருந்தே பிற தெய்வங்கள் வெளியாயினர் (Ref: யதுர் வேத நாராயண சூக்தம் மற்றும் நாராயண உபநிஷத்)
(c) மூன்றாவது கூற்றின்படி பரபிரும்மன் வெளிப்படுத்திய முட்டையில் இருந்து பிரும்மா வெளிப்பட அவரிடம் இருந்துதான் பிற தெய்வங்கள் தோன்றினார்கள்.
(d) நான்காம் கருத்து அதாவது சக்தியே பிரதானம் எனும் கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள், முதலில் வெளி வந்தது சக்தி எனும் பெண் தெய்வமே என்றும் அவளுடைய மனதில் இருந்து பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் எனும் பெரும் துறவி வெளியானார்கள் என்கின்றார்கள் (Ref: ஸ்ரீமத் பாகவத புராணம் மற்றும் தந்திர சாஸ்திர புத்தகங்கள் ).
எது எப்படியோ பரபிரும்மனின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று ஆண் தெய்வங்களும் மறுபக்கத்தில் இருந்து மூன்று பெண் தெய்வங்களும் வெளியானார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்கவில்லை.
43)மூன்றாவது கருத்தின்படி பரப்பிரும்மன் பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியவுடன், கண் சிமிட்டும் நேரத்தில் பரப்பிரம்மனின் உடலில் இருந்து முதலில் வெளியான ஆண் மற்றும் பெண் கணங்கள் (சக்தி கணங்கள்) இரண்டும் ஒன்றிணைந்து சிவசக்தியாக மாறி பரப்பிரும்மன் என்பவர் ஆண் மற்றும் பெண் சக்தியைக் கொண்ட தெய்வம் என்பதை வெளிப்படுத்தியது. அப்படி வெளியான இரு சக்திகளும் ஒன்றிணைந்து முதலில் சிவலிங்க உருவில் காட்சி தந்த பின் மீண்டும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி என்ற தனித் தனி உருவைப் பெற, அவர்களைத் தொடர்ந்தே பிற தெய்வீகங்கள் தோன்றின.
44)விஷ்ணுவும், பிரம்மாவும் பரப்பிரும்மனின் ஆண் சக்திகளிலிருந்து வெளியான சிவபெருமானின் தெய்வீகக் கதிர்களிலிருந்து வெளிப்பட்டதாலும், பரப்பிரும்மனின் பெண் சக்தியான பார்வதி தேவியிலிருந்து மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோர் வெளி வந்ததினாலும் சிவசக்தியை பிரதிபலித்த சிவலிங்கமானது சிவபெருமானோடு விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய இரு தெய்வீக தம்பதியினரின் அம்சங்களையும் உள்ளடக்கியே இருந்தது. சிவலிங்கத்தின் மேல் பகுதியில் காணப்படும் சிவலிங்கம் முட்டை வடிவில் பரபிரும்மன் வெளிப்படுத்திய அகண்டத்தைக் காட்ட, மொத்த சிவலிங்க உருவமோ இந்த பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களும் ‘ப்ரக்ருதி’ மற்றும் ‘புருஷா’ எனும் ஆண் மற்றும் பெண் சக்திகளின் இயக்கத்தினால் உருவானவை என்பதாக காட்டுகின்றது.
45) இப்படியாக மூன்று பெண் தெய்வங்களும் மூன்று ஆண் தெய்வங்களும் வெளிப்பட்ட பின்னர் மூன்று பிரிவு தெய்வங்களும் சிவன் -பார்வதி, விஷ்ணு-மஹாலக்ஷ்மி மற்றும் பிரும்மா-சரஸ்வதி போன்றவர்கள் ஒன்றிணைந்து தம்பதியாயினர்.
46) இப்படியாக மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் தெய்வங்கள் ஒன்றிணைந்த ஜோடிகளான பிறகு பிரம்மாவுக்கு படைப்புத் தொழிலும் , விஷ்ணுவுக்கு காக்கும் தொழிலும், சிவபெருமானுக்கு அழிக்கும் தொழிலும் ஒதுக்கப்பட்டன. அந்த மூன்று ஜோடிகளில் சிவபெருமான்-பார்வதி தேவி, மற்றும் விஷ்ணு- மஹாலக்ஷ்மி தேவி என்ற இரண்டு ஜோடிகளும் பல தெய்வங்களை  வெளிப்படுத்தினார்கள். அவர்களில் பல தெய்வங்கள் வெகு காலத்திற்குப் பிறகு குலதெய்வங்கள் ஆயினர்.
47) பிரும்மா மற்றும் சரஸ்வதிக்கு அவர்களால்  படைக்கப்படும் உயிரினங்களை பாதுகாத்து வழிகாட்டி நடத்தும் பல்வேறு தெய்வங்களை வெளிப்படுத்தும் அதிகாரம் தரப்படவில்லை. ஏன் என்றால் மாணவர்களை போன்ற  தன்மையில் உள்ள படைக்கப்பட்ட உயிரினங்களை,  ஒரு ஆசிரியரைப் போல இருக்கும் வகையிலான தெய்வங்கள் வழிகாட்டி நடத்த வேண்டும் என்பதினால், மாணவர்களை படைத்த பிரும்மாவிற்கு அவரே ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்ற தெய்வ நீதி அடிப்படை தத்துவத்தினால் உயிரினங்களை படைத்த பிரும்மா மற்றும் சரஸ்வதி தேவிக்கு தெய்வங்களை வெளிப்படுத்தும் அதிகாரம் தரப்படவில்லை.
48) மூல தெய்வீகங்களின் செயல்பாடுகளும் பணிகளும் ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பிடத்தக்கவை. அதாவது ஒரு தொழிற்சாலையில் செய்யப்படும் பொருட்கள் ஒரு குழுவால் தயாரிக்கப்பட்டு, இன்னொரு குழுவினரால் சோதனை செய்யப்பட்டு, நல்லவை மற்றும் சிறு பிழைகள் உள்ளவற்றை  சரி செய்து அனுப்ப வேண்டியவை என பிரித்து மற்றொரு குழுவிற்கு அவற்றை அனுப்பப்படுகின்றன. மூன்றாவது குழுவோ  தம்மிடம் வந்தவற்றை மறு உருவாக்கம் செய்ய முயலும் அல்லது சரி செய்ய முடியாது என்பவற்றை அழித்து மீண்டும் மூலப் பொருள் தயாரிக்க அனுப்பி விடும். இப்படியாகவே ஒரு பொருள் உற்பத்தி ஆகும் தொழிற்சாலையின் செயல்பாடு ஒரு வண்டிச் சக்கரம் போல சுழன்று கொண்டே உள்ளது.
49) பிரும்மா தனக்கு இட்ட பணியான படைக்கும் தொழிலை தனியே செய்ய இயலாது என்பதினால் அவரது மனைவியான சரஸ்வதி தேவியின் அறிவாற்றல் எனும் சக்தியின் துணையோடு செயல்படுகிறார்.
50) அடுத்ததாக பிரும்மாவினால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்ட ஜீவராசிகளையும் மனிதர்களையும் வழி நடத்தி பாதுகாத்து  அவர்களில் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என அடையாளம் கண்டு, நல்லோர்களை வழி நடத்தியவண்ணம் பிறரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியானது விஷ்ணு பகவானிடம் தரப்பட்டு இருந்தது. பரந்த பிரபஞ்சத்தில் பிறப்பு-இறப்பு மற்றும் மறுபிறப்பு எனும் சுழற்சிகளுடன் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வரும் ஆத்மாக்களை வழி நடத்தி பாதுகாக்கும் செயலை விஷ்ணுவினால் மட்டுமே தனியாக செய்ய முடியாது என்பதால், அவருக்கு பல வழிகளிலும் உதவ துணை தெய்வங்கள் தேவைப்பட்டனர். எனவே, பிரம்மாவினால் முன் திட்டமிட்டு வரையறுக்கப்பட்ட பணிகளைச் செய்யத் தேவையான தெய்வங்களை விஷ்ணு பகவானின்  தெய்வீக ஆற்றல்களிலிருந்து விடுவிக்க அவரது துணைவியானவளும், ஆரோக்கியம், அதிர்ஷ்டம், வெற்றி போன்ற அனைத்திற்கும் அதிபதியானவளும் செல்வங்களின் தெய்வமாக வேதங்களில் சித்தரிக்கப்படுபவளுமான மகாலட்சுமி தேவியின் சக்திகளுடன்  விஷ்ணு பகவான் இந்த செயலைச் செய்கின்றார்.

குலதெய்வ  தோன்றம்:  அடித்தளம் அமைந்தது

51) விஷ்ணுவால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வங்களின் பங்கு என்ன? இந்த பரந்த பிரபஞ்சத்தில் பரவியுள்ள மானிடர்களை ஒரு தர்மநெறி ஆட்சிமுறையின் கீழ் கொண்டு வந்து அவர்களை நல்ல வழியில் நடத்திச் சென்று பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பகவான் விஷ்ணுவால் வெளிப்படுத்தப்படும் தெய்வங்கள் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட மானிடர்களுக்கு ஒரு ஆசிரியர் போல இருந்து அவர்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே அவர்களால் நீண்ட காலத்திற்கு அமைதியாகவும் வளத்துடன் வாழ முடியும், மேலும் அந்த தெய்வங்களின் வழிகாட்டுதலின்படி சென்றால் மட்டுமே அனைத்து தீய சக்திகள் மற்றும் துன்பங்களில் இருந்தும் ஒரு கேடயம் போல இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்  என்பதை விளக்குகின்றது.
52) பிரம்மாவின் படைப்புக்களில் நல்ல மற்றும் தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் அடக்கம். அவர்களைத் தவிர மானிடப் பிறப்பு எடுக்கும் அசுர சக்திகளும் அடக்கம் ஆகும். அதனால்தான் இயற்கையாகவே தீய தன்மைகளைக் கொண்டு பிறப்பு எடுத்த தீய ஆன்மாக்கள் மற்றும் அசுர சக்திகள் தம்மை நல்வழியில் செல்லும் வகையில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதனால்தான் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் அல்லது அந்த அசுர சக்திகளை சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற நிலை உருவாயிற்று.
53) மக்களை பாதுகாக்க வேண்டும், அவர்களில் உள்ள தீய சக்திகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவரவர் செய்த பாபங்களுக்கு ஏற்ற தண்டனை தர வேண்டும். அந்த தண்டனை நீண்ட காலம் துயரப்படும் அளவிலும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். அல்லது அவர்களது தவறுகளை உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்ள சில வாய்ப்புகள் கூட கொடுக்கப்படலாம். அதையும் மீறி திருந்தாத ஜென்மங்களை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை போன்ற அனைத்தையும் மனதில் கொண்டே விஷ்ணு பகவான் மஹாலக்ஷ்மி தேவியுடன் சேர்ந்து அந்த செயல் முறைகளுக்குத் தேவையான அளவிலான தெய்வங்களை வெளிப்படுத்தினார். அப்படி வெளியான பல தெய்வங்களே பின்னர் குல தெய்வங்கள் ஆயின.  விஷ்ணுவினால் வெளிப்படுத்தப்பட்ட மிகவும் முக்கியமான தெய்வங்களில் ஒன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி ஆவார். ஒரு காலத்தில் எவர் ஒருவருக்கு தம் குலதெய்வத்தை அடையாளம் காண முடியவில்லையோ அவர்கள் திருப்பதி வெங்கடாசலபதியையே தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டார்கள்.
54) மூன்றாவது முக்கிய செயலான அழித்தல் என்பதை சிவபெருமான் ஏற்று உள்ளார். பிரபஞ்சத்தில் பிறப்பு – இறப்பு -மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியில் படைக்கப்படுபவை அவற்றின் விகிதாசார அளவில் அழிக்கப்படாவிடில், படைக்கப்பட்டவை மட்டும் அல்லாமல் புதியதாக படைக்கப்படும் உயிரினங்களும் சேர்ந்து வாழ பூமியில் இடமே இல்லாமல் போய் விடும். இப்படியாக அழிக்கும் தொழிலை இந்த பரந்து விரிந்துள்ள பிரபஞ்சத்தில் சிவபெருமானால் மட்டுமே செய்ய முடியாது என்பதினால் அவருக்கு உதவியாக இருக்க  பல தெய்வங்களை தனது மனைவியான பார்வதி தேவியுடன் சேர்ந்தே படைப்பதும்  இல்லாமல், பிற தெய்வங்கள் மூலமும் அந்த செயலை சிவபெருமான் நிறைவேற்றுகிறார்.
55) சிவபெருமான் கொண்டுள்ள அழிக்கும் செயல் இரண்டு வகையிலானது. முதலாவது பிறப்பு எடுத்த உடலை அழிப்பது, இரண்டாவது ஆன்மீகத்தின் பாதையில் செல்வதற்கும் பாவங்களிலிருந்து விடுபடுவதற்கும் தேவையான மன அறியாமையையை அழிப்பது. முதலில் மரணம் அடைந்தவர்களது ஆன்மாவை தன்னால் உருவாக்கப்பட்ட யமலோகத்தின் அதிபதி யம தர்மராஜா மூலம் சிவபெருமான் செய்கின்றார். யமலோகத்தில்  பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஒரு  ஜீவனுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகள் அல்லது வெகுமதிகளை பெற்ற பிறகு மறுபிறப்புக்கான வழிமுறை ஏற்படுகின்றது.
56) அதை போலவே சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் இணைந்து அவரவர் தெய்வீக ஆற்றல்களில் இருந்து பல தன்மைகளைக் கொண்ட தெய்வங்களை வெளிப்படுத்தி அவர்கள் மூலம் மானிடர்கள் மற்றும் பிற தேவ கணங்களைத் துன்புறுத்திய அசுர சக்திகளை அழிக்கிறார்கள். அசுர சக்திகள் தலை தூக்கியபோதெல்லாம் பெரும்பாலான அசுரர்கள் பார்வதி தேவியால் வெளிப்படுத்தப்பட்ட பெண் தெய்வீக சக்திகளால் அழிக்கப்பட்டனர். சில சமயங்களில் அவளே அசுரர்களை அழிக்க வெவ்வேறு அவதாரம் எடுத்தாள். தெய்வீக வரலாற்றைப் பார்த்தால், பார்வதி தேவியின் அம்சங்களான மகிஷாசுரமர்தினி தேவி, லலிதாம்பிகை தேவி, காளி தேவி, துர்க்கை தேவி, தச மகாவித்யா தேவிகள், அன்னை மாரியம்மன் போன்ற பெண் தெய்வீக சக்திகளால் அழிக்கப்பட்ட அசுர சக்திகள் அதிகம் என்பதை அறியலாம். இதேபோல் பார்வதி தேவியால் வெளிப்படுத்தப்பட்ட சில தெய்வங்கள் தாந்திரீக தெய்வங்களும், அறியாமையை விலக்கி ஆன்மீக மேன்மை தரும் தெய்வங்களும் ஆனார்கள். இப்படியாக சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியினால் வெளியிடப்பட்ட பல தெய்வங்களில் சில பிற்காலத்தில் குலதெய்வங்கள் ஆயினர்.
57) அசுர சக்திகள் வெளிப்பட்ட நேரங்களில்,  அந்த தீய அசுர சக்திகளை அழிக்க பார்வதி தேவியைத் தவிர அவரது கணவரான சிவபெருமானும் பல தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தினார், அல்லது அவர் சார்பாக தீய அசுர சக்திகளை அழிக்க தனது தெய்வீக சக்திகளை மற்ற தெய்வங்களுக்கும் தந்தார். அவர் வெளிப்படுத்திய முக்கியமான தெய்வங்களில் ஸ்ரீ முருகப்பெருமான், 64 பைரவர்கள், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ சரபன்,  ஸ்ரீஅஸ்வத்தாமா போன்ற தெய்வங்கள் அடங்குவார்கள்.
58) மேலே கூறப்பட்ட மூன்று முதன்மை தெய்வங்களைத் தவிர சிவபெருமானும் விஷ்ணு பகவானும் சேர்ந்து பிரபஞ்சத்திற்கு தேவையான மிக முக்கியமான தெய்வங்களை வெளிப்படுத்தினார்கள். ஸ்ரீ தேவேந்திரன், ஸ்ரீ யமபெருமான், ஸ்ரீ சந்திரன் (தத்தாத்ரேய அவதாரத்தில் உருவாக்கப்பட்டது),  ஸ்ரீ சூரியன், ஸ்ரீ ராகு,  ஸ்ரீ கேது, ஸ்ரீ புதன், ஸ்ரீ குரு, மற்றும் ஸ்ரீ சனி பகவான் போன்றவர்களை தவிர ஸ்ரீ அக்னி, ஸ்ரீ வருணன் மற்றும் வாயு போன்ற தெய்வங்களையும் படைத்தார்கள்.
59) பிரும்மாவிற்கு தெய்வங்களை படைக்கும் தரப்படவில்லை என்றாலும் அவர்கள் வாழ்வதற்குத் தேவையான, தேவலோகம், இந்திரா லோகம், யமலோகம்  மற்றும் பிற தெய்வ லோகங்களை படைக்கும் அதிகாரம் உள்ளது. மேலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும், அவரவர் செயல்களில் உதவிட அவர்களுக்கு தேவையான தேவர்கள் மற்றும் தேவ கணங்களை பரபிரும்மன் மூலம் வெளிப்படுத்தும் சக்தியும் தரப்பட்டு இருந்தது. மேலும் குலதெய்வங்களுக்கும் தேவையான தேவர்கள் மற்றும் தேவ கணங்களை அனுப்பும் சக்தியும் பிரும்மாவிற்கு தரப்பட்டு இருந்தது
60) குலதெய்வங்கள் உட்பட பலதரப்பட்ட தெய்வங்களை வெளிப்படுத்தும் சக்தி சிவபெருமான் மற்றும் விஸ்ணு பகவானின் தம்பதியினருக்கு தரப்பட்டு இருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்திய அனைத்து தெய்வங்களும் குலதெய்வங்களாகி விடவில்லை. முக்கியமாக சிவபெருமான் தம்பதியினர் வெளிப்படுத்திய சில தெய்வங்கள் மானிடர்களின் அஞ்ஞானத்தையும் அறியாமையையும் விலக்கி ஞானத்தையும் மோட்ஷத்தையும் தரும் வல்லமை பெற்ற தெய்வங்களாக இருந்தார்கள். அவர்களில் சிலர் பல்வேறு அவதாரங்களிலான முருகப் பெருமான், வள்ளி தேவி, தக்ஷிணாமூர்த்தி பகவான் போன்றவர்கள் ஆவர். விஷ்ணு பகவானைப் போலவே சிவபெருமானால் வெளிப்படுத்தப்பட்ட மிகவும் முக்கியமான தெய்வங்களில் ஒன்று சிவபெருமானின் ஒரு ரூபமான வைத்தீஸ்வரர் ஆவார். ஒரு காலத்தில் எவர் ஒருவருக்கு தம் குலதெய்வத்தை அடையாளம் காண முடியவில்லையோ அவர்களில் பலர் திருப்பதி  ஸ்ரீ வெங்கடாசலபதி பகவானைப் போலவே, ஸ்ரீ வைத்தீஸ்வர பகவானையும் தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டார்கள்.
61) பரப்பிரும்மனிடம் இருந்து பிரதான தெய்வங்கள் வெளிப்படுவதற்கு முன் சிவசக்தி அம்சங்களைக் கொண்ட சிவலிங்கம் தோன்றிய உடனே பரப்பிரும்மனே ஸ்ரீமன் தத்தாத்ரேயராக சில கணங்கள் காட்சி தந்த பின் அதே சிவலிங்கத்தில் புகுந்து மறைந்து விட்டார் என்பதாக ஆன்மீக குருக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
62) பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின்னர் கலியுகத்தில் பரபிரும்மனே மீண்டும் அவதூதர் உருவில் ஸ்ரீ தத்தாத்திரேயராக தோன்றினார். அஞ்ஞானத்தில் இருந்து மக்களை மீட்டு, அறியாமையை விலக்கி அவர்களுக்கு ஞானம் தரும் வகையிலான போதனைகளைத் தரும் குருபரம்பரையை தனது அவதாரங்களாக, ஆன்மீக மகான்கள் எனும் போர்வையில் உருவாக்கினார்.

                                                                                                                                                          தொடர்கிறது …..5

————-
அடிப்படை ஆதாரம் :-
மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.

1) https://www.quora.com/Is-it-possible-that-Para-Brahman-divided-himself-in-three-energies-called-Brahma-Vishnu-and-Shiva
2) https://ia800205.us.archive.org/32/items/LingaPuranaJ.L.ShastriPart1
3)
https://en.wikipedia.org/wiki/Mahadevi
4)
https://www.learnreligions.com/what-is-shiva-linga-1770455
5)
https://www.tutorialspoint.com/what-is-the-concept-of-shiva-linga-and-why-it-s-worshiped-more-than-his-own-idol
6)
https://www.linkedin.com/pulse/sacred-sanctity-divine-goddess-maha-lakshmi-finance-wealth-osk-reddy
7)
https://www.exoticindiaart.com/article/dasavatar/
8)
http://muneshkumarkella.blogspot.com/2014/06/shri-vishnu-incarnations-dashavatar-24.html
9)
https://en.wikipedia.org/wiki/Parvati
10) https://janetpanic.com/what-is-difference-between-brahman-and-para-brahman
11) https://www.anaghadatta.org/about/lord-dattatreya-guru-parampara/
12) https://www.thekundaliniyoga.org/hindu_gods/shridattaguru/shri_datta_guru_origin_avatars_sadgurus_datta_lineage.aspx

———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman