ஆலய  புனரமைப்பு திருப்பணி

:நன்கொடை – வேண்டுகோள்:

சாந்திப்பிரியா 

நம் பாரத தேசத்தில் உள்ள சிவாலயங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றில் பல ஆலயங்களை ரிஷி, முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் நிர்மாணித்து பூஜை மற்றும் வழிபாடுகள் செய்துள்ளார்கள். பகவான் மகாவிஷ்ணு  சில சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு,  பூஜித்து உள்ளார். அந்த ஆலயங்கள் அனைத்திலுமே உள்ள  சிவலிங்கங்கள் சிவபெருமான் ஸ்வயம்புவாக லிங்க உருவில் எழுந்தருளியவை. சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியும் திருவானைக்காவல் மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் உள்ள சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட்டு,  பூஜித்து உள்ளார்.

இதே போல நாகலோகத்தை சேர்ந்த நாகங்களான ஆதிசேஷன் மற்றும் வாசுகி போன்ற தெய்வீக நாகங்களும் பூமிக்கு வந்து சில ஆலயங்களில் சிவபெருமானை பூஜித்து, வணங்கி வந்துள்ளார்கள். அவற்றில் திருக்குடந்தை நாகேஸ்வரர், திருநாகேஸ்வரம் நாகனாதஸ்வாமி, திருபாம்புபுரம் சேஷபுரீஸ்வரர் மற்றும் நாகூரில் உள்ள நாகனாதஸ்வாமி போன்ற ஆலயங்கள் அடங்கும். இன்றும் கூட நாகலோகத்துடன் தொடர்ப்பு கொண்ட ஞானிகளும், சித்தர்களும் நம்மிடையே கண்களுக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறார்களாம்.

ஒருவருக்கு ஏற்படும் கால சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் போன்றவற்றை விலக்கிக் கொள்ள இந்த திருத்தலங்களில் சென்று வழிபடுவதின் மூலம் அந்த தோஷங்கள் அனைத்துமே நீங்கும் என்பது ஐதீகம். மாசி மாத பௌர்ணமி என்பது வசந்த பௌர்ணமி எனக் கூறப்படுகின்றது. ஒரு புராணக் கதையின்படி ஒரு வசந்த பௌர்ணமி காலத்தில் நாகலோகத்தில் உள்ள தெய்வீக நாகங்களான அஷ்ட நாகங்களும், அவர்கள் செய்ய வேண்டிய நித்திய கால பூஜைகளை மறந்து விட்டு தத்தம் மனைவிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்கள். அப்போது பிராமண குலத்தை சேர்ந்த சம்புதத்தன் எனும் ஒரு சிறுவனை நாகம் ஒன்று தீண்டி விட அவன் மரணம் அடைந்து விட்டான். அதை தெரிந்து கொண்ட அந்த சிறுவனின் தந்தையோ நாகலோகத்தில் இருந்த அனைத்து தெய்வீக நாகங்களுக்கும்   சாபம் கொடுத்து விட்டார்.  அந்த அந்தணர்  கொடுத்த சாபத்தை களைந்து கொள்ள அனைத்து நாகங்களும் அதற்கு அடுத்த சிவராத்திரியில் பூமிக்கு வந்து சில சிவாலயங்களில் சிவபெருமானை வணங்கித் துதித்தால் மட்டுமே சாப விமோசனம் பெற முடியும் என்பதாக அந்த அந்தணர் கூறி விட, தெய்வீக நாகமான ஆதிசேஷன் தலைமையில் பூமிக்கு வந்த அஷ்ட நாகங்களும் பிற நாகங்களும், உஷாதி காலத்தில் திருக்குடந்தை நாகேஸ்வரரையும், உச்சி வேளையில் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், சந்தியா  காலத்தில் திருபாம்புபுரம் சேஷபுரீஸ்வரரையும், அன்று இரவே நாகூரில் நாகநாதஸ்வாமியையும் தரிசித்து பூஜைகள் செய்து பாப  விமோசனம் பெற்றார்கள்.  அப்படி பூமிக்கு வந்த பல நாகங்கள் அவர்கள் வந்த வழிகளில் அங்கங்கே சிவபெருமானுடைய சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை பூஜித்து துதித்தார்கள். அந்த இடங்கள் அனைத்தும் பின்னர் ஆலயங்களாயின. அப்படி ஆலயம் எழுந்த ஒரு தலமே ராகுகேதுமங்கலம் எனப்படும் தெற்காலத்தூரில் உள்ள, ராதாமங்கல, நாகநாதஸ்வாமி திருக்கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள தேவியான சாந்தநாயகியை அங்கு புற்றில் வாழ்ந்து வரும் நாகலோகத்தை சேர்ந்த நாகராணி இன்றும் பூஜித்து வழிபடுவதாக ஐதீகம் உள்ளதினால் இங்கு வந்து நாகராணியை பூஜித்து வணங்கினால் சர்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட  இயற்கை சீற்றங்களினால் பழுதடைந்து, சிதைந்து இருந்ததினால் இதை புனரமைக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. இந்த சக்தி வாய்ந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ள  நாகலோகத்தை சேர்ந்த நாகராஜா மற்றும் நாகராணி போன்றவர்களின் உருவ சிலைகள் நாகர்கோவிலில் உள்ள மைலாடி எனும் இடத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

மிகப் பழமையான இந்த ஆலய மூலவர் நாகநாதஸ்வாமி இன்றும் நாகலோகத்தை சேர்ந்த நாகராஜா மற்றும் நாகராணியினால் பூஜை செய்யப்பட்டு வருகின்றார். கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கேது கிரக தோஷம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம் அற்றவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நாகநாதஸ்வாமி மற்றும் தேவி சாந்தநாயகியை பூஜித்தப் பின் நாகராணியையும் பூஜித்து வணங்கினால் சர்ப தோஷங்கள் விலகும், வேண்டியவைக் கைகூடும் என்பது நம்பிக்கை.

மஹா சிவராத்திரியில் நாகூரில் நாகநாதஸ்வாமியை தனது மனைவியுடன் சேர்ந்து பூஜிக்கும் போது தெய்வீக நாகமான நாகராஜரின் தலைப் பகுதி நாகூர் ஆலயத்திலும்,  வால் பகுதி ராதாமங்கல தெற்காலத்தூர் ஆலயம் வரையும் நீண்டு கிடப்பதாக ஐதீகம் உள்ளது. அதாவது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் இரண்டு ஆலயங்களிலும் ஓரே நேரத்தில் அந்த தெய்வீக நாகம் சிவபெருமானை வழிபடுவதான  நிலையே இது என்கின்றார்கள். சிவராத்திரிக்குப் பிறகு அடுத்த அமாவாசை வரை அங்கு தங்கி இறைவனை பூஜை செய்து வரும் இரு நாகங்களும்   அமாவாசையில் அருகில் உள்ள நாக தீர்த்தத்தில் நீராடிய பின் பூஜையை நிறைவு செய்து இறைவனின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டு செல்வார்களாம். தென் இந்தியாவில் இந்த ஒரு ஆலயத்தில் மட்டுமே நாகராணி ஒருவரது சர்பதோஷத்தை களைகின்றாளாம்.

ஒவ்வொருவருடைய சந்ததியினரிலும் ஏதாவது ஒரு வம்சத்தினர் நாக தோஷங்கள் பெற்று இருப்பார்கள். அந்த தோஷங்கள் அடுத்தடுத்து வரும் சில வம்சத்தினரை அவர்களை அறியாமலேயே தொடர்வதினால் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சிக்கல்கள் மற்றும் அல்லல்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் முன் காலத்து மக்கள் தம்மை அறியாமலேயே சில குறிப்பிட்ட சிவாலயங்களில் சென்று வணங்கி வந்ததன் மூலம் சர்ப்ப தோஷ நிவர்த்தி பெற்று வந்தார்கள். ஆனால் அதன் காரணம் தெரியாமல் தமக்கு வந்த கஷ்ட நஷ்டங்களை தாம் சென்ற ஆலயத்து இறைவனே நீக்கினார் என்பதாக நம்பி வந்தார்கள். பல காலம் பொறுத்தே அந்த குறிப்பிட்ட ஆலயங்களின் மேன்மைகள் வாய்மொழி வார்த்தைகளால் கூறப்பட்டு வந்திருந்த கதைகளினால் மெல்ல மெல்ல வெளித் தெரிய வந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நாக தோஷங்களையும், பிற தோஷங்களையும் களைவதற்காக சிவபெருமானே சில இடங்களில் ஸ்வயம்புவாக சிவலிங்க உருவில் எழுந்தருளி ஆலயங்களாக உருவாக்க வைத்தார் என்பதும் அந்த ஆலயங்களே பின்னர் சர்பதோஷ நிவர்த்தி தரும் ஆலயங்களாக அறியப்பட்டன எனவும் கற்றறிந்த பண்டிதர்கள் கூறுவார்கள். இந்த உண்மைகளை ரிஷி முனிவர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். அவர்களே இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்களாம். ஆமாம் சர்பதோஷத்திற்கு அத்தனை முக்கியத்துவம் தரப்பட்டது ஏன்? நிதானமாக கீழுள்ளவற்றைப் படித்தால் காரணம் புரியும்.

சிவபெருமானின் கட்டுப்பாட்டிலேயே அனைத்து நாகங்களும் உள்ளன என்பது பல புராணங்களின் கூற்றாகும். பாம்பு புற்றுக்களை பார்த்தால் அவை அனைத்துமே மலை மீதுள்ள சிவலிங்க உருவை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும் என்பது தெரியும். ஆன்மீக கூற்றின்படி பாம்புப் புற்றில் பாலை ஊற்றி வணங்கியது கூட கைலாய மலையில் வாழ்ந்து வரும் சிவபெருமானுக்கு, அவரை வெளிப்படுத்தும் சிவலிங்கத்தின் மீது பால் அபிஷேகம் செய்து செய்யும் ஆராதனை போலவே இருந்துள்ளது. பாம்புப் புற்றுக்களில் உள்ள பல ஓட்டைகள் கைலாய மலைக்கு செல்லும் நுழை வாயில்கள் என்பதாக கருதப்படுகின்றது.

முன் காலங்களில் மக்கள் வாழ்ந்திருந்த இடங்களை குக்கிராமம் என்பார்கள். அவர்கள் தங்கி இருந்த இடங்கள் அடர்ந்த மரம் கொடிகள் சூழ்ந்திருந்த காட்டுப் பகுதிகளில் அமைந்து இருக்கும். காடுகளில் உள்ள செடி கொடிகளினால் அங்கெல்லாம் பாம்புகள் வாழ்ந்து கொண்டிருக்கும். ஆகவே அவற்றின் தாக்குதல்களில் இருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதினாலும் சிவபெருமானின் கட்டுப்பாட்டில்தான் பாம்புகள் உள்ளன என்பதினாலும் அந்த கிராமங்களில் சிவன் வழிபாட்டு தலங்கள் இருந்துள்ளன. இந்த நிலையில் வீடுகளில் பாம்பு புகுந்து விட்டால் உடனே அவற்றைக் கொல்வதும் பழக்கமாகவே இருந்துள்ளது. அதனால் பாம்புகளைக் கொன்றவர்களுக்கு சர்ப்ப தோஷங்கள் ஏற்பட்டன. ஆனால் அந்த மக்களுக்கு பாம்புகள் நாகலோகத்தில் நாகராஜரின் கட்டுப்பாட்டில் உள்ளவை, அவை சிவபெருமானுக்கு சேவை செய்தபடி பாம்புகளின் உருவில் உள்ள தேவ கணங்கள் என்பதெல்லாம் தெரியாததினால் பாம்புகளைக் கொன்றார்கள். ஆனால் பாம்புகளை கொலை செய்ததும் அவை தம்மைக் கொன்றவர்களுக்கு சாபமிட்டன. சிவகணங்கள் என்பதினால் அந்த பாம்புகள் இட்ட சாபங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. இதனால்தான் சர்ப்ப தோஷங்கள் உள்ளவர்கள் தோஷ விமோசனம் பெறச் செல்லும் ஆலயங்கள் பெரும்பாலானவை சிவாலயங்களாகவும், நாகங்களை சேர்ந்த நவகிரக நாயகர்களில் ஒருவரான ராகு மற்றும் கேது ஆலயங்களாகவே உள்ளன. சர்ப்ப தோஷம் பெற்றவர்கள் நாக தோஷங்களை விலக்கும் சில குறிப்பிட்ட ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் ஒழிய அந்த தோஷங்கள் விலகாமல், அவர்களது வம்சாவளியினரையும் தாக்கி வரும்.

அதே சமயம் சிவபெருமானும் மானிடர்கள் மீது அக்கரைக் கொண்டவராக இருந்ததினால்தான் தனக்கு கணங்களாக உள்ள பாம்புகளின் மரியாதையையும் காப்பாற்ற வேண்டும், அதே சமயம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், அறியாமலும் பாம்புகளைக் கொன்றதற்கு தோஷ நிவாரணம் கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக தமது விஷேஷ சக்திகளை உள்ளடக்கிய சில ஆலயங்களை எழச் செய்தார். அந்த ஆலயங்களில் சென்று நாகங்களை கௌரவிக்கும் வகையில் பூஜைகளை செய்து தோஷ நிவாரணம் செய்ய வகை செய்தார்.

பல்வேறு சாபம் பெற்று இருந்த பல தெய்வங்களும், தெய்வ லோக பாம்புகள் உட்பட பூலோகம் வந்து காடுகளிலும், அடர்ந்த பகுதிகளிலும் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தும், ஏற்கனவே சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருந்த இடங்களில் இருந்த சிவலிங்கங்களை வணங்கித் துதித்து சாப விமோசனம் பெற்றார்கள் என்பதை புராணங்களில் படித்து இருக்கலாம். அப்படி வந்த தெய்வங்களில் ராகு, கேது, நாகராஜா மற்றும் நாகராணி போன்றவர்களும் உண்டு. அவர்கள் சாப விமோசனம் பெற வழிபட்ட மற்றும் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் தலங்கள் பெரும்பாலும் மாயவரம்- கும்பகோணத்தை சுற்றியே அமைந்துள்ளன.

அப்படி எழுந்திருந்த மேன்மை பெற்ற ஆலயங்கள் பெரும்பாலும் ஊர்களின் எல்லைகளில், குக்கிராமங்களில் அதிகம் மனிதர்கள் வசிக்காத ஊர்களில் உள்ளன. அவற்றில் பல ஆலயங்கள் பாழடைந்த நிலையில், சிதைந்த நிலையில் இருந்தன. அவற்றின் பெருமைகளும் மேன்மைகளை மெல்ல மெல்ல வெளிவராத துவங்கின. மஹாபெரியவா எனப்படும் காஞ்சி மாமுனிவர் மற்றும் பல ஆன்மீக தலைவர்கள் பல்வேறு நிலைகளில் கூறிய தகவல்கள் மூலம் அவற்றின் பெருமைகள் வெளித் தெரிந்தன. அதனால் அத்தகைய மென்மையான ஆலயங்களை மஹா பெரியவரின் அறிவுரைப்படி புனரமைத்து மக்களின் வழிபாட்டுத் தலங்களாக்க ஆன்மீக பக்தர்கள் சிலர் முயற்சி செய்து வருகின்றார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆலயம்தான் ராதாமங்கலத்தில் உள்ள நாக தோஷ நிவர்த்தி தரும் சிவன் ஆலயம். பாழடைந்த நிலையில், சிதிலடைந்தும், ஆலய கட்டிடம் உடைந்தும் யாரும் பராமரிக்காமல் இருந்ததைக் கண்ட ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்ட இரு பெண்மணிகள் திருமதி கீதா கணேஷ் மற்றும் திருமதி வைதேகி சுப்பிரமணியம் வெளியில் அதிக விளம்பரம் கொடுக்காமலும், தமது நண்பர்கள் மற்றும் சில ஆன்மீக அன்பர்களின் உதவிகளுடன் நிதி திரட்டி ராதாமங்கல ஆலயத்தை புனரமைத்து வருகின்றார்கள். புனரமைக்கும் பணி பாதி முடிந்து விட்டாலும் மீதி உள்ளதை முடிக்க இன்னமும் தாராளமாக நிதி தேவைப் படுகின்றது. ஆகவே இந்த ஆலய புனர் நிர்மாண பணிக்காக நிதி உதவி செய்யுமாறு அனைத்து ஆன்மீக நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறார்கள். இந்த ஆலய புனர் நிர்மாணப் பணிக்கு நிதி உதவி அளித்து உதவிடும்போது, அவர்களது ஆலய திருப்பணிப் பங்கும் சேர்ந்து கொள்வதினால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களை தொடரும் தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

நன்கொடைகளை எப்படி அனுப்ப வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள கீழ் தரப்பட்டு உள்ள ஆன்மீக அன்பர்களை தொடர்பு கொள்ளலாம்.

 

திருமதி . வைதேகி சுப்ரமணியன் : 9962047702
திருமதி . கீதா கணேஷ் : 9840981213 / 9952092834