உத்தர வைத்தீஸ்வரர்

ஆலயம்

-சாந்திப்பிரியா-

ஆதிவைத்தீஸ்வரன் ஆலயங்களில் இரண்டாவது பெரிய கோயில் சென்னை புறநகர்ப் பகுதியில் ஒன்பது நவக்கிரகங்கள் என்ற பெயரில் உள்ள கோவில்களில் ஒன்றாகும்.  ராஜராஜ சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் 1200 ஆண்டு பழமையான இந்த ஆலயம் சென்னைக்கு 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூந்தமல்லி என்ற இடத்தில் உள்ளது. இந்த ஆலயத்தில் பிரதான தெய்வம் வைத்தீஸ்வரன் தனது தேவியான தையல் நாயகியுடன் காட்சி தருகிறார். அனைத்து வைதீஸ்வரன் கோயில்களிலும் பிரதான தெய்வமாக உள்ள சிவபெருமான், வைத்தீஸ்வரன் எனவும் அவருடைய தேவி தையல் நாயகி என அழைக்கப்படுவதை போலவே,  இந்த ஆலயத்திலும் மூலவரும் அவர் துணைவியும் வைத்தீஸ்வரன் எனவும் தையல் நாயகி அல்லது பாலாம்பிகா எனவும் அழைக்கப்படுகிறார்கள். பாலாம்பிகா என்றால் அழகானவள் என்பது அர்த்தம் ஆகும். முதலில் தைல நாயகி என்றே இங்குள்ள அம்பாள் அழைக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக தைலம் எனப்படும் மருத்துவ எண்ணெயை அவள் கொண்டு சென்றதினால் தைல நாயகி எனப்பட்டாள். ஆனால் காலப்போக்கில் அவள் தையல் நாயகி என அழைக்கப்படலானாள். கிழிந்த உடைகளை தையல் போட்டு தைத்து புதியதாக ஆக்குபவரை தையல்காரர் என்பார்கள். அதை போலவே அங்காரக பகவானின் வியாதியை குணப்படுத்தி மீண்டும் நல்ல நிலையில் கொண்டு வந்த இறைவனுக்கு துணையாக மருத்துவ தைலங்களைக் ஏந்தி வந்த தேவியை பெண் தையல்காரர் என அழைக்கும் விதமாக தையல் நாயகி என கூறினார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிவபெருமானுக்காக அமைந்த இந்த ஆலயம்  அடர்ந்த மல்லிகைப் பூ காடாக இருந்ததாம். மல்லிகை பூக்கள் ஏராளம் நிறைந்த இடமாக இருந்ததினால் ‘மல்லி பூ பூத்திருந்த இருந்த இடம்’ என்ற கருத்தைக் கூறும் விதமாக ‘பூத்து இருந்த மல்லி’ என்று பெயரிட்டது. பின்னர் அந்த பெயர் பூந்தமல்லி சுருக்கப்பட்டது. இந்த கோயில் சீர்காழி அருகே உள்ள வைதீஸ்வரன் ஆலயத்தை பிரதிபலிக்கும் இன்னொரு ஆலயம் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் ஏற்படும் செவ்வாய் கிரகத்தின் எதிர்மறையான விளைவுகளை அகற்றுவதற்காகவும், பல்வேறு வியாதிகளுக்கு நிவாரணம் பெறவும் பக்தர்கள் சென்று வழிபடும் ஆலயமே வைத்தீஸ்வரன் ஆலயம் ஆகும்.

அங்காரக பகவான் சாபத்தினால் தனக்கு ஏற்பட்ட தீராத வியாதியை விலக்கிக் கொள்ள இங்கு வந்து வைத்தியநாதரை வணங்கி குணம் அடைந்தாராம். ஆகவேதான் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் அமர்ந்துள்ள அங்காரக பகவானை இந்த ஆலயத்தில் வந்து வணங்கினால், ஜாதகத்தில் உள்ள செய்வாய் தோஷம் விலகும் என்பதினால் வைத்தீஸ்வரன் ஆலயம் மேன்மை பெறுகின்றது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு கிராமியக் கதை உள்ளது.

வைத்தீஸ்வரன் ஆலயங்களில்

அங்காரக பகவானை ஏன்

வணங்கித் துதிக்க வேண்டும்?

கிராமக் கதையின்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், துவாபர யுகத்தில், இமயமலை அடிவாரங்களில் பல முனிவர்கள் தவம் இருப்பது உண்டு. அதில் ஒருவர் காலத்தைக் குறித்து முன்னரே கூறிடும் காலமுனிவர் என்பவரும் இருந்தார். அவர் தனக்கு மற்ற முனிவர்களை விட மேன்மையான ஞானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானை துதித்தபடி தவம் இருந்தார். அந்த முனிவர் தேவ முனிவர் என்பதினால் நவகிரகங்களும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள். அனைவருக்கும் வரும் காலத்தை முன்னரே கணித்துக் கூறி வந்த அவருக்கு தன்னுடைய இறுதி வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் தான் முன்ஜென்மத்தில் செய்த ஊழ்வினையின் பயனாக துன்பம் அனுபவிக்க வேண்டி இருக்கும் என்பதை கவனித்துக் கொள்ள மறந்தே போனார்.

அவருடைய தவத்தினால் சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்தாலும் காலமுனிவரின் தண்டனைக்கு காலம் முடியும்வரை அவருக்கு காட்சி தர விரும்பவில்லை. அப்படி காட்சி தந்துவிட்டால் அந்த முனிவரின் சாபம் போய் விடும், தேவ கட்டளைக்கு ஏற்ப நிகழ இருந்த தண்டனையை மாற்ற சிவபெருமானுக்கு மனம் இல்லை. ஆகவே ஒரு சந்நியாசி உருவில் அந்த முனிவரிடம் சென்று பேச்சு கொடுத்து விட்டு, பேச்சின் இடையே அந்த முனிவருக்கு வர இருந்த தண்டனையை நினைவுபடுத்தியப்பின் மறைந்துவிட்டார். அப்போதுதான் கால முனிவருக்கு தனக்கு வர இருந்த தொழுநோய் குறித்து நினைவுக்கு வந்தது. சாதாரணமாக யாருக்கு குறிப்பிட்ட காலத்தில் துன்பம் அல்லது இன்பம் தோன்றுமோ அதற்கான கிரகங்கள் அவர்களது ஜாதகத்தில் அந்தந்த தன்மையை தரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு அந்த பலன் ஏற்பட வழி செய்வார்கள். அந்த நிலையில் அங்காரக பகவான் அவருக்கு நோய் தரும் இடத்தில் அமர வேண்டி இருந்தது. உடனடியாக அந்த முனிவர் தந்திரமாக அனைத்து கிரகங்களையும் அழைத்து அங்காரக பகவானை அவர் ஜாதகத்தில் நன்மை தரும் இடத்தில் அமரச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்க வேறு அனைத்து கிரகங்களும் நிர்பந்தம் செய்ததினால் தன்னை அறியாமல் அங்காரகனும் முனிவருக்கு நோய் தரும் ஸ்நானத்தில் அமராமல் வேறு இடத்தில் சென்று அமர்ந்து கொள்ள முனிவருக்கு வர இருந்த நோய் மாறிவிட்டது. அதனால் அவர் மீது பிரும்மா கடும் கோபம் கொண்டார். தெய்வ கட்டளையின்படி நிகழ இருந்த தண்டனையை மாற்றி அமைக்க வழி செய்ததினால்  காலமுனிவருக்கு வர இருந்த தொழு நோய் அங்காரகனுக்கு வரட்டும் என சபித்து விட அங்காரக பகவானை அந்த நோய் பற்றிக் கொண்டது.

அங்காரக பகவான் அறியாமல் தான் செய்த பிழையை மன்னித்து கருணை காட்டுமாறு பிரும்மாவை வேண்டிக் கொள்ள அவரால் கொடுத்த சாபத்தை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள முடியாது என்பதினால் தன்வந்தரி மகரிஷியிடம் சென்று நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பினார்.

தன்வந்திரி மகரிஷியும் நடந்தவற்றை அறிந்து கொண்டார். அந்த வியாதியை தன்னால் குணப்படுத்த முடியாது என்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே அவர் அங்காரக பகவானிடம் அந்த வியாதி குணமடைய வேண்டும் எனில் அதற்கான ஒரே வழி பூலோகத்துக்கு மனித உருவில் சென்று சிவபெருமானை துதித்து சாப விமோச்சனம் பெற்று வியாதியை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என்ற விதியைக் கூறினார். அவர் ஆலோசனையை ஏற்று அங்காரக பகவானும் மனித உருவ எடுத்து பூமிக்கு சென்று பல இடங்களிலும் அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து தவம் செய்து வந்தார். அப்படி அங்காரக பகவான் அமர்ந்து தமது நோய் குணமடைய சிவ தவம் செய்த இடங்களே பிற்காலத்தில் வைத்யநாத பகவான் அவதரித்த ஸ்தலங்களாகி, வைத்தீஸ்வரஸ்வாமி ஆலயங்கள் ஆயின.

காலம் கடந்தது. ஒருநாள் சிவபெருமான் தனது மனைவி பார்வதியுடன் மனித உருவில் அங்காரக பகவான் தவம் செய்த இடத்துக்கு போய் தாம் மருத்துவர் எனக் கூறிக் கொண்டு அவருடைய வியாதியை குணப்படுத்தினார். பார்வதியும் அவளது கைகளில் சில தைல குடுவைகளை ஏந்தி வந்திருந்தாள். அங்காரக பகவானின் வியாதி குணம் அடைந்ததும் அடுத்து சாபம் விலகிய அங்காரக பகவானுக்கு அவருடைய பழைய உருவம் திரும்ப வர, ஒருகணம் தன்னை மறந்து ஸ்தம்பித்து நின்ற அங்காரக பகவான், அடுத்த க்ஷணமே தன்னை குணப்படுத்தியது மருத்துவர் உருவில் இருந்த சிவபெருமானும் பார்வதியும் என்பதை உணர்ந்து அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசிகளை பெற்றார். சிவபெருமானிடம் அவர் ஒரு வரத்தையும் வேண்டினார்.

அவர் வேண்டியது என்ன என்றால் தனது நோயை எந்த இடத்தில் சிவபெருமான் குணப்படுத்தினாரோ அந்த இடத்திலும், எந்தெந்த இடங்களில் வியாதியுடன் அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து தவம் செய்தாரோ அங்கெல்லாம் சிவபெருமான் வைத்தீஸ்வர பகவானாகவும், வியாதிக்கான தைலங்களை ஏந்தி வந்த பார்வதி தேவி தைல நாயகியாகவும் அவதரித்து ஆலயத்தில் அமர வேண்டும் என்பதே. அது மட்டும் அல்ல அந்த ஆலயங்களில் தானும் (அங்காரக பகவானும்) ஒரு சன்னதியில் அமர வேண்டும் எனவும், யாருக்கெல்லாம் ஜாதகத்தில் தன்னால் தோஷம் ஏற்படுமோ அவர்கள் வைத்தீஸ்வரஸ்வாமி ஆலயத்துக்கு வந்து தன்னை வேண்டி பூஜை செய்தால், அந்த தோஷத்தின் கடுமையை முற்றிலுமாக விலக்காவிடிலும், அதன் தன்மையை வெகுவாக குறைப்பேன் எனவும், அதனால் அவர்கள் படும் துயரங்கள் அவர்களால் தாங்க முடியும் அளவில் மட்டுமே இருக்கும் என்பதாகவும் கூற அதையும் சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். ஒருவருக்கு கர்மாவினால் ஏற்படும் தண்டனையை முற்றிலும் அகற்றுவது தெய்வ நியதிக்கு எதிரானது என்பதினால் அதன் தாக்கத்தை வெகுவாக குறைப்பது என்பதே சரியான நிலைப்பாடாகும் என்பதினால் அங்காரக பகவான் இந்த முடிவை எடுத்தார். இதனால்தான் நோய் நொடிகள் விலக வைத்தீஸ்வரஸ்வாமி ஆலயத்துக்கு சென்று வைத்யனாதஸ்வாமி மற்றும் தையல்நாயகியை வணங்கித் துதித்தப் பின் அங்காரக பகவானையும் துதிப்பது அவசியம் என்பதான நியதி ஆயிற்று.

உத்தர வைத்தீஸ்வரன் ஆலயம், பூந்தமல்லி

அங்காரக பகவான் தவம் செய்த இடங்களில் பூந்தமல்லியில் உள்ள உத்தர வைத்தீஸ்வரன் ஆலய இடமும் ஒன்று ஆகும். அது மல்லிகை வனமாக இருந்தது. அங்கு வந்த அங்காரகன் ஒரு சிவலிங்கம் இருந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார். ஆகவேதான் அங்கு அமர்ந்து கொண்டு தமக்கு ஏற்பட்டு இருந்த ரோக நோய் குணமாக சிவபெருமானை துதித்து தவம் இருந்தார். அந்த ஆலய வளாகத்துகில் ஒரு பனை மரம் உள்ளது. அதன் அடியில் காணப்படும் காலடித்தடம் அங்காரக பகவானுடைய காலடித்தடம் என்பதாகக் கூறுகின்றார்கள்.

இந்த ஆலயத்தின் மேன்மை என்ன என்றால் துவாபர யுகத்தில் அங்காரக பகவான் நிறுவியதாக கூறப்படும் இந்த ஆலயம் நான்கு யுகங்களை தாண்டி, பிரளய காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் கூட அழியாமல் இருந்துள்ளது என்று பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.  அதே போல பிரளய காலத்தில் உலகெங்கும் கொடிய விஷ ஜுரம் பரவி உயிர்கள் பலியானபோது, வைத்தீஸ்வர பகவான் இந்த ஆலயத்திலேயே மூன்று முகங்களைக் கொண்ட ஜுவரேஸ்வரர் எனும் அவதாரம் எடுத்து அந்த ஜூரத்தைக் கட்டுப்படுத்தினாராம்.    பகவான் ஜுவரேஸ்வரருக்கு ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.

இந்த ஆலயத்தின் மேலும் ஒரு பெருமை என்ன என்றால், இலங்கை யுத்தத்தில் வெற்றி கண்டு இங்கு சிவபெருமானை துதிக்க வந்த பகவான் ராம லஷ்மணர்கள் இருவரும் தமக்காக உயிர் விட்ட தெய்வீகப் பறவையான ஜடாயுவுக்கு இறுதி காரியங்களை செய்தார்கள். அவர்கள் இறுதி காரியம் செய்த குண்டம் ஜடாயு குண்டம் எனும் பெயரில் இந்த ஆலயத்தில் உள்ளது. தெய்வீகப் பறவையான ஜடாயு  சீதையை கவர்ந்து சென்ற ராவணனுடன் நடு வானில் சண்டை இட்டபோது அதன் வெட்டப்பட்ட உடலில் இருந்து பல பாகங்கள் அங்கங்கே சிதறி விழுந்தனவாம். அதில் ஒரு பாகம் இந்த ஆலய வளாகத்தில் விழுந்ததினால் இங்கு அவருக்கு இறுதி காரியங்கள் நடைபெற்றதாம். அதன் பின் ஜடாயுவின் ஆத்மா இங்கு வந்து சிவபெருமானிடம் தமக்கு முக்தி தருமாறு வேண்டி அந்த வரத்தையும் பெற்றதாம்.  

இந்த தலத்தில்  முத்துக்குமாரசுவாமி எனும் பெயரில் உள்ள முருகப் பெருமான், சூரிய பகவான், நான்கு வேதங்களில் ஒன்றான ரிக்வேத அதிபதி மற்றும்  மகாமுனிவரான அகஸ்தியர் போன்றவர்கள் சிவபெருமானை வணங்கித் துதித்து இருக்கிறார்களாம். இங்குதான் சூரபத்மனை அழிக்க யுத்தத்திற்கு சென்ற முருகப் பெருமானுக்கு அவருடைய தாயார் பார்வதி தேவி சக்தி வேலினை தந்தாராம். சூரபத்மனை அழித்தப் பின் வெற்றியுடன் இங்கு வந்த முருகப் பெருமான் தனது தந்தை மற்றும் தாயாருக்கு பூஜைகளை செய்தாராம். அது முதல் இந்த ஆலயத்தில் மூன்று வேளையிலும் முருகப் பெருமான் தனது தந்தை மற்றும் தாயாருக்கு பூஜைகளை செய்கிறார் என்பது ஐதீகம். அது மட்டும் அல்ல முருகப் பெருமானுடன் சேர்ந்து மூன்று வேளையிலும் அங்காரக பகவானும்  பூஜைகளை செய்கிறாராம்.  

இந்த ஆலயத்தில் முருகப் பெருமான், விநாயகப் பெருமான், பைரவப் பெருமான், லட்சுமி தேவி, நவக்கிரகங்கள்  மற்றும் தன்வந்தரி  மகரிஷிக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஆலய நுழைவாயிலை நோக்கி ஸ்வயம்புவாக வெளிவந்த பாண லிங்கமும் உள்ளது. பாண லிங்கம் என்பது யாராலும் வடிவமைக்கப்பட்டது அல்ல. அது ஸ்வயம்பூ மூர்த்தியாக சிவலிங்க உருவில் நதிக்குள் இருந்து வெளிவருகிறது என்கின்றார்கள்.  இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் தினமும் ஏதாவது ஒரு உற்சவம் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதினால் அப்படிப்பட்ட நித்யோஸ்தவம் நடைபெறும் வெகு சில ஆலயங்களில் இந்த ஆலயமும் ஒன்றாக உள்ளது. நித்யோஸ்தவம்  நடைபெறும் ஆலயங்களில் தொடர்ந்து சென்று வழிபட்டால் விவேகம் வளரும், மென்மையான எண்ணங்கள் தோன்றும் என்பது ஐதீகம் ஆகும்.

இந்த ஆலயத்தில் ‘சித்தாம்ருத தீர்த்தம்’ எனும் குளம் உள்ளது. அதை அகஸ்திய முனிவர் நிறுவினாராம். அதில் குளித்தால் நீண்ட காலமாக விலகாமல் உள்ள நோய்கள் விலகத் துவங்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலய விலாசம் :

Uthira Vaidhyalingeswarar Temple,
Kattur, Kanchipuram, Tamil Nadu,
India, Pin code – 603110.