–குபேர யந்திர பூஜை–
வாசகர் எழுப்பிய
சந்தேகங்களுக்கான பதில்கள்

 

1) எந்த திசையில் அமர்ந்து கொண்டு இந்த பூஜையை செய்யலாம்?

நான் எழுதி உள்ள குபேர யந்திர பூஜைக்கான கோலத்தை வடக்கு திசையைப் பார்த்து  அமர்ந்து கொண்டு செய்ய வேண்டும். ஏன் எனில் குபேரன் வடக்கு திசைக்கு அதிபதி ஆகின்றார்.

2) செல்வத்தை அருளும் லக்ஷ்மி தேவிக்கு பூஜையை செய்யாமல் எதற்கு குபேரருக்கு பூஜையை செய்ய வேண்டும்?   நேரடியாக லக்ஷ்மி தேவிக்கு செய்யும் எளிய பூஜை கிடையாதா?

சிவபெருமான் தன அதிபதிகளாக லக்ஷ்மி தேவியையும், அவளுக்கு கீழ் பணி புரிய குபேரனையும் நியமித்தார். குபேரன் தேவலோகத்தில் உள்ள குபேர பட்டிணத்தில் இருக்கும் அழகாபுரி அரண்மனையில் இவர் வீற்றிருக்கிறார். லக்ஷ்மி தேவியின் அனைத்து செல்வத்தையும் பாதுகாக்கும் பணியில் உள்ளவரே குபேரன். லக்ஷ்மி தேவி செல்வத்துக்கு அருள் புரிந்தாலும் குபேரர் சில சமயம் ‘அம்மா இவர் தகுதியானவர் இல்லை’ எனக் கூறி லக்ஷ்மி தேவி தரும் செல்வத்தை தடுத்து நிறுத்தி விட முடியுமாம். ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்பதினால் லக்ஷ்மி தேவியே செல்வத்தை அருள்பவள் என்றாலும் அதை குபேரனால் தடுக்க முடியும் என்பதினால் அவரையும் வணங்க வேண்டும்.   சில புராணக் கதையின்படி குபேரன் அனைத்து செல்வங்களையும் ராவணனிடம் இழந்துவிட்டு வந்தபோது அவளுக்கு லக்ஷ்மி தேவியேதன்னிடம் இருந்து செல்வத்தைத் தந்து அருள் புரிந்து அவரை தன்னிடம் உள்ள செல்வத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும் கதை உண்டு. ஆனால் எது எப்படியோ நியதியின்படி அந்த செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து உள்ள குபேரர் பெட்டியை திறந்தால்தான் செல்வம் கிடைக்கும் என்பதினால் குபேரரையும்  லட்சுமி தேவியுடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

சிவபெருமான் செல்வத்தின் அதிபதிகளாக மஹாலக்ஷ்மியையும் அவளுக்கு கீழ் இயங்கும் தெய்வமாக குபேரனையும் படைத்தவுடன் அவர் உலகில் உள்ள செல்வ நிதிகளான பத்ம நிதி, மகாபத்மநிதி, மகரபத்மநிதி, கட்சபபத்மநிதி, குமுத நிதி, நந்தநிதி, சங்குநிதி, நீலநிதி, மற்றும் யோகநிதி எனும் ஒன்பது நவநிதிகளையும் குபேரனுக்கு தந்தாராம். அவற்றில் முக்கியமானவை மூன்றுதான். கடல் சங்கின் உள் இருந்து இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நீரைப் போல தொடர்ந்து செல்வத்தை பெறும் நிலை சங்குநிதியாகும். பதுமம் என்றால் தாமரை என்ற பொருள் உண்டு. ஆகவே தாமரை மலரிலே உள்ள அடுக்கடுக்கான தாமரை இதழ்களை போல அடுக்கடுக்கான செல்வத்தை பெறும் நிலையே பத்மநிதியாகும். அதை போலவே எதிர்பாராமல் செல்வத்தைப் பெறும் நிலையே யோகநிதியாகும். ஆகவே இந்த மூன்று முக்கியமான நிலைகளையும்-பாதாளம், பூலோகம் மற்றும் தேவ லோகம் என மூன்று லோகங்களிலும் இருந்தவாறு குபேரன் வெளிப்படுத்துகின்றார். அதன் காரணமாகவே ஒன்பது கட்டங்கள் உள்ளன. குபேர யந்திரத்தின் ஒன்பது கட்டங்களிலும் குபேரர் அமர்ந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்துகிறார்.

அதை போலவே தேவி மஹாலக்ஷ்மி படைக்கப்பட்டவுடன் அவளும் மேலும் எட்டு குணங்களுடன் கூடிய உருவங்களை பெற்றாள். எதற்கு அத்தனை ரூபங்கள் தேவை என்றால் செல்வமே அனைத்தையும் தரும் நிலை அல்ல. அந்த செல்வத்தை முழுமையாக அனுபவிக்க வாழ்க்கையில் மேலும் சில சுகங்களை பெற வேண்டும். அஷ்ட லஷ்மிகளாக இருந்து கொண்டு அவள் தருபவை தானியம், தைரியம், சந்தானம் (மழலை செல்வம்),வெற்றி, விவேகம், மதிப்பு, சுகம் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றை தருகின்றாள்.  இவை அனைத்தும் இருந்தால்தான் செல்வம் பெற்றவன் அதன் சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதினால் செல்வம் வேண்டும் எனப் பிரார்திக்கும் நேரத்தில் தடை இன்றி செல்வம் கிடைக்க செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து உள்ள குபேரர் மூலமே லக்ஷ்மி தேவியை ஆராதிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

3) குபேர யந்திரத்தின் மகத்துவம் என்ன?

குபேர யந்திரம் விசேஷமான யந்திரம் ஆகும். யந்திரத்தில் உள்ள கட்டங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆகும். எதற்காக ஒன்பது கட்டங்கள்?

இந்த யந்திரத்தில் காணப்படும் எண்களை எப்படிக் கூட்டினாலும் -குறுக்காகவோ, மேல் இருந்து கீழாகவோ இல்லை பக்கவாட்டில் என எப்படிக் கூட்டினாலும் ஒன்பது என்ற எண் வரும் (72 i.e. 7 + 2 =9). அத்தனை ஏன் மொத்த எண்களின் கூட்டுத் தொகை கூட ஒன்பது என்ற எண்  (216 = 2 + 1 + 6 =9) ஆகும்.

ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள முதல் எண்ணான இரண்டு, இரண்டு என ஒன்பது இரண்டு எண்களையும் கூட்டுங்கள். மொத்தம் 18 என வரும். அதன் எண்ணும் 8 + 1 = 9 தான்.

அதை போல முதல் எண்ணான இரண்டு என்பதை எப்படிக் கூட்டினாலும் – குறுக்காகவோ, மேல் இருந்து கீழாகவோ இல்லை பக்கவாட்டில் என எப்படிக் கூட்டினாலும் 6 எனும் எண் வரும். ஆறு என்பதை திருப்பிப் பாருங்கள், அது ஒன்பதாகவே இருக்கும்.

ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள இரண்டாவது எண்களை எப்படிக் கூட்டினாலும் – குறுக்காகவோ, மேல் இருந்து கீழாகவோ இல்லை பக்கவாட்டில் என எப்படிக் கூட்டினாலும் 9 எனும் எண்தான் வரும். அதை போலவே ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள இரண்டாவது எண்கள் அனைத்தையும் கூட்டுங்கள். மொத்தம் 36 என வரும். ஆக அதுவும் 3 + 6 = 9 என்பதாகிறது.

குபேர யந்திரத்தில் மொத்தம் ஒன்பது கட்டங்கள் உள்ளதை கவனியுங்கள். அவற்றில் உள்ள மொத்த எண்களையும் ஒன்றாகப் பெறுக்கி அதன் கூட்டுத் தொகையைப் பாருங்கள்.

27 x 20 x 25 x 22 x 24 x 26 x 23 x 28 x 21= 780832483200 =45=9.

ஆக எப்படிப் பார்த்தாலும் 9 என்ற எண்ணே வரும்.

அனைத்திலும் உள்ள இரண்டாவது எண்ணை கவனியுங்கள். 0 முதல் 8 எனும் எண்கள் காணப்படும். 0 என்பது லக்ஷ்மி தேவியின் மூல ரூபம். அடுத்து அவள் காட்டும் எட்டு தன்மைகளின் அவதார ரூபம் 1 முதல் 8 என்பவை. ஆக ஒன்பது கட்டங்களில் தனித் தன்மையுடன் இருந்தவாறு லக்ஷ்மி தேவி அருள் புரிகின்றாள்.

4) குபேர யந்திரத்தில் காணப்படும் எண்களின் தாத்பர்யம் என்ன தெரியுமா? 

அனைத்து கட்டங்களிலும் இரண்டு என்ற எண் உள்ளதைக் காணலாம். முதல் எண்ணான இரண்டு (1 + 1 +2) என்பது லக்ஷ்மி தேவியும், தெய்வம் குபேரரும் சேர்ந்து அருளும் நிலையைக் காட்டும். இரண்டாம் எண் லக்ஷ்மி தேவியின் எட்டு தன்மைகளைக் (அஷ்ட லக்ஷ்மி தேவியைக் குறிப்பதாகும்) காட்டும்.   ஒன்பது கட்டங்களின் மத்தியக் கட்டத்தில் அமர்ந்து கொண்டே (24) இருவரும் அவர்களை சுற்றி உள்ள எட்டு திசையிலும் (2 மூலைகள் x 4 பக்கங்கள் = மொத்தம் 8 திசைகள்) இருந்தும் செல்வத்தையும் வளத்தையும் தருகிறார்கள். அஷ்ட திக்குக்களில் இருந்தும் செல்வத்தை வாரி வழங்கும் லஷ்மி தேவியைக் குறிக்கும் தத்துவம் இது.

ஆகவேதான் இந்த குபேர யந்திரத்தை பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும்  அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம். இந்த தன்மைகளைக் கொண்டுதான் மந்திர தந்திர சாஸ்திரங்களின் அடிப்படையில் எந்த கட்டத்தில் எந்த எண் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும்.

ஒன்பது கட்டங்களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு பக்கத்திலும் அவற்றின் மீது காணப்படும் ‘ஸ்ரீ’ எனும் எழுத்து குபேரனுடன் அஷ்ட லட்சுமியாக உள்ளவளை உருவாக்கியவளான சிவ-சக்தி தேவி வசிக்கும் ஸ்ரீபுரத்தைக் குறிக்கும். ஆகவே இந்த உலகையே படைத்து அதைக் காத்தருளும் பரமாத்மன் எனும் சிவசக்தியின் முழு அருளை பெற்று உள்ளதே இந்த யந்திரம் ஆகும்.