சிவபெருமானின் தீக்கனலில் இருந்து படைக்கப்பட்ட வீரபத்திரஸ்வாமி ஆலயம் உள்ளது. அதையே லிபாக்ஷி ஆலயம் என அழைக்கின்றார்கள். வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி இந்த ஆலயம் 450 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்பட்டாலும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மாபெரும் முனிவரான அகஸ்திய முனிவரால் வீரபத்திரஸ்வாமிக்கு அமைக்கப்பட்ட ஆலயம் என்றும், தமது யோக சக்தியினால் அந்த முனிவர் சிவலிங்கத்தை தோற்றுவித்து அதை வீரபத்திரஸ்வாமியாக இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்ற புராணக் கதையும் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த ஆலயம் இன்று முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது .
இந்த ஆலயம் சில புராணக் கதைகளை தன்னுள் அடக்கிக் கொண்டு உள்ளது. அதில் ஒன்று தெய்வீகப் பறவை ஜடாயுவின் இறுதி சடங்குகளை ராமபிரான் இங்கு செய்தது, மற்றும் அகஸ்திய முனிவரே இந்த ஆலயத்தை முதலில் நிறுவினார் எனும் புராணக் கதை ஆகும். மூன்றாவது விஜயநகர மன்னனின் கருவூலப் பொருளாளர் சம்மந்தப்பட்ட வரலாற்று செய்தி ஆகும்.
லிபாக்ஷி ஆலயம் குறித்த முதலாவது தகவல் ஸ்கந்த புராணத்தில் காணப்படும் ‘லிபாக்ஷயா பாபநாசநா’ எனும் பகுதியில் இருந்து தெரிய வந்தது. சிவபெருமானின் மகிமைகளை எடுத்துரைக்கும் பல ஸ்தல புராணங்களில் ஒன்றில் மாமுனிவர் அகஸ்தியர் தென் பகுதிகளில் விந்திய மலையின் அடிப்பகுதியில் உள்ள சிவன் ஆலயங்களை தரிசிக்க வந்தபோது, இந்த ஆலயம் உள்ள மலைப் பகுதியில் ஒரு குகையில் தங்கி இருந்தார் என்றும் தனது தவ வலிமையினால் சிவலிங்கம் ஒன்றை தோற்றுவித்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு உள்ளார் என்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. அவர் சிறியதாக எழுப்பிய வழிபாட்டுத் தலமே பின்னர் பெரிய அளவிலான ஆலயமாக விஜயநரக அரசரின் பொருளாளராக இருந்த ஒருவரால் மன்னனின் அனுமதி பெறாமலேயே கட்டப்படப்பட்டது என்பதாக கூறுகிறார்கள்.
நந்தியின் சிலை
கூர்ம சைலம் அதாவது ஆமையின் முதுகு எனப் பொருள் தரும் பெயரில் அமைந்துள்ள மலையின் உட்புறத்தில் உள்ள பாறையில் பல தூண்களையும், மேற்கூறைகளையும் அமைத்து அற்புதமான சித்திரங்களை அவற்றில் செதுக்கி ஆலயம் அமைத்து உள்ளார்கள். ஏழு தலைகளை கொண்ட காட்சியில் காணப்படும் நாகராஜா எனப்படும் பெரிய பாம்பு மூன்று அடுக்குகளாக தன்னை சுற்றிக் கொண்டு அமர்ந்திருக்க அதன் அடியில் சிவலிங்கம் உள்ளது. சற்றே தள்ளி 15 அடி உயரமும், 27 அடி அகலமுமான நந்தி வாகன சிலையும் காணப்படுகின்றது. அதே ஆலயத்தில் பாதி கட்டி முடித்த நிலையில் ஒரு கல்யாண மண்டபமும் காணப்படுகின்றது. வீரபத்திரர் சன்னதிக்கு வெளியில் உள்ள மேற்கூறையில் காணப்படும் வாத்திய குழுவினரின் அற்புதமான சித்திர வேலைப்பாட்டுடனான ஓவியங்கள் கண்களைக் கவர்பவை ஆகும். இந்த ஆலயத்தில் பல தூண்கள் மேற்கூறையை தாங்கியபடி இருக்கும் வகையில் அமைந்து இருக்க அந்த தூண்களில் ஒன்று பூமியில் இருந்து சுமார் இரண்டு சென்டிமீட்டர் அளவிற்கான இடைவெளியுடன் காணப்படுகின்றது. அது அந்தரத்தில் தொங்குவது போல உள்ளது மிகப் பெரிய அதிசயம் ஆகும். அதன் அடியில் ஏதாவது துணி அல்லது காகிதத் தாளை நுழைத்து எதிர்புறத்தின் வழியே எடுக்க முடியும். இவ்வளவு அற்புதமான நிலையில் ஆலய அமைப்புக்கள் காணப்பட்டாலும், வல்லுனர்களின் கூற்றின்படி அந்த ஆலயம் எந்தவிதமான மூல அமைப்பின் அடிப்படையிலும் கட்டப்படாமல் அவசர கதியில் ஏனோதானோ எனக் கட்டப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதினால் அடுத்து ஆட்சிக்கு வந்த மன்னர்களால் அந்த ஆலய அமைப்பை சீர்படுத்தி முடிக்க முடியவில்லை. அதன் காரணம் கட்டடத்தின் பொறியியல் அமைப்பு அவர்கள் எவருக்கும் விளங்கவில்லை என்பதே. இனி ஆலய வரலாற்றைப் பார்ப்போம்.
லிபாக்ஷி ஆலயத்தில் உள்ள தொங்கும் துணை பற்றிய செய்தியில் சில முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. இதைக் குறித்து கருத்து தெரிவிக்கும் பொறியியல் நிபுணர்கள், அனைத்து தூண்களும் பூமியை தொட்டவாறு இருக்கையில் இந்த தூண் மட்டும் ஏன் தனியாக தொங்கும் நிலையில் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு சரியான காரணம் கிடையாது. ஒருவேளை சில நேரங்களில் பூமி அதிர்வுகள் நிகழ்ந்திருந்தபோது அந்த குறிப்பிட்ட தூணின் அடியில் உள்ள பூமி வெடித்து சற்றே கீழே இறங்கி இருக்க வாய்ப்பு நிறையவே உண்டு. அதனால் அந்த தூணின் அடிப்பகுதி பூமியில் இருந்து விலகி இருக்கலாம். இந்த ஆலய வளாகம் முழுவதுமே ஒரே பாறையில் செதுக்கப்பட்டு உள்ளத்தினாலும், வேறு எந்த ஒரு பகுதியும் தனியாக செய்யப்பட்டு அதை ஆலயவளாகத்துடன் இணைத்து வைக்காமல் மலையின் உள்ளே ஒரே பாறையில் ஆலயத்தையும், அதில் உள்ள தூண்களையும் செதுக்கி உள்ளார்கள் என்பதினால் இந்த தொங்கும் தூண் மேல் கூறை பகுதியின் ஒரு அங்கமே என்றும் அதில் இருந்து விலகி கீழே விழ வாய்ப்பில்லை என்கின்றார்கள். இந்த தொங்கும் தூணை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆட்டிப் பார்த்தபோது, மொத்த வளாகமே சற்றே ஆடியதினால் அந்த ஆலயம் இடிந்து விழக் கூடாது என பயந்துபோய் மேற்கொண்டு அந்த தூணை பற்றிய ஆராய்ச்சியை தொடராமல் அவற்றை அப்படியே விட்டு விட்டார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்கு முன் இங்கு வந்து மலைக்க குகையில் தங்கி இருந்த அகஸ்திய முனிவர் தவ வலிமையினால் சிவலிங்கத்தை தோற்றுவித்து அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டுவிட்டுச் சென்ற வெகு காலத்துக்குப் பிறகு விஜயநகர மன்னர் ஒருவரின் அரசவையில் பொருளாளராக இருந்த விரூபனா என்பவர் அரசருக்கே தெரியாமல் நாட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள இந்த ஆலய வளாகத்தை பிரும்மாண்ட முறையில் கட்டி முடிக்க முயற்சி செய்துள்ளார் என்றாலும் அதில் அவர் முழுவதும் வெற்றி பெறவில்லை. அவருக்கு கண்பார்வை போன பின் ஆலயம் பாதியிலேயே அரைகுறையாக கட்டப்பட்ட நிலையிலேயே நின்றுவிட்டது.
விஜயநரக அரசரின் பொருளாளராக இருந்தவர் விரூபான என்பவர். பல வருடங்களாகவே விரூபனாவிற்கு சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. ஆனால் அரசாங்கத்தில் வேலை செய்து வந்த அவரால் அவருடைய வருமானத்தில் இருந்து மிச்சப்படுத்தும் பணத்தைக் கொண்டு ஒரு ஆலயத்தைக் கட்ட முடியாது என்பது நன்கு தெரியும். ஆகவே ஒருமுறை மன்னர் வெளிநாட்டின் மீது படையெடுத்து சென்று இருந்தபோது, அவர் திரும்பி வருவதற்கு பல காலம் பிடிக்கும் என்பதை அறிந்து கொண்ட விரூபனா, ஆலயம் அமைக்க அதுவே தக்க தருமணம் என முடிவு செய்து ஆலயத்தைக் கட்டுவதற்கான பெருமளவு பணத்தை அரசாங்க கஜானாவில் இருந்து ரகசியமாக திருடி அந்த பணத்தில் ஆலய நிர்மாணத்தைத் துவக்கினார். அதனால் விரைவில் கஜானா காலி ஆயிற்று. மன்னனுக்கு அவை எதுவுமே தெரியாது.
கட்டி முடிக்காமல் வைக்கப்பட்டு
உள்ள கல்யாண மண்டபம்
ஆலய வரலாற்றின் இரண்டாவது கதை தெய்வீகப் பறவை ஜடாயு குறித்தது. ராவணன் அன்னை சீதா தேவியை கவர்ந்து கொண்டு அவளை இலங்கைக்கு கொண்டு சென்றபோது அவன் தெய்வீகப் பறவையான ஜடாயுவின் ஆட்சியில் இருந்த வனப் பகுதி மூலமே செல்ல வேண்டி இருந்தது. அதனால் அந்த காட்சியைப் பார்க்க நேரிட்ட தெய்வீகப் பறவை ஜடாயு அன்னை சீதா தேவியை பிடித்துக் கொண்டு சென்ற ராவணனை தடுக்க முயல இருவருக்கும் பெரும் சண்டை மூண்டது. ராவணன் எளிதில் இலங்கைக்கு செல்ல முடியாமல் தவித்தான். ஆனால் இருவருக்கும் இடையே பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டு இருந்தாலும், பல அறிய வரங்களினால் பல அபார சக்திகளை பெற்று இருந்த ராவணனை வெற்றி கொண்டு சீதா தேவியை தெய்வீகப் பறவை ஜடாயுவினால் மீட்க முடியவில்லை. சண்டையில் தெய்வீகப் பறவை ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தி அதை படுகாயப்படுத்த அந்த பறவையும் பூமியிலே விழுந்தது. தற்போது லீபாக்ஷி ஆலயம் உள்ள இடத்தில் அது விழுந்து மரணம் அடைய அதற்கு இறுதி சடங்குகளை ராமபிரானும் லக்ஷ்மணரும் செய்தார்கள். குற்றுயிராகக் கிடந்த பறவையைப் பார்த்த ராமபிரான் ஓடி வந்து ‘எழுந்திரு பறவையே, எழுந்து நில்’ எனக் கூவியதினால் இந்த இடத்துக்கு தெய்வீகப் பறவையின் நினைவாக ‘எழுந்திரு பக்ஷியே’ என தெலுங்கு மொழியில் பொருள்படும் விதத்தில் அமைந்த ‘லீ, பக்க்ஷி, லீ’ எனும் பெயர் அமைய அதுவே லிபாக்ஷி என மறுவியதாக கிராமியக் கதை உள்ளது.
தெய்வீகப் பறவையான ஜடாயுவிற்கு லீபாக்ஷியைத் தவிற தென் இந்திய பகுதியில் உள்ள வேறு இரண்டு ஆலயங்கள் உள்ள இடத்திலும் இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளதாக அந்தந்த ஆலயங்களின் கதை உள்ளது. தெய்வீகப் பறவையின் மரணம் குறித்தான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அமைந்த அந்த மூன்றும் திவ்ய தேசத்தில் ஒன்பதாக கூறப்படும் திருப்புல்லபூதங்குடி ஆலயம், திவ்ய தேசத்தில் காணப்படும் திருப்பூக்குழி விஜயராகவாப் பெருமான் ஆலயம் மற்றும் லீபாக்ஷி ஆலயம் என்பன. அவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. இந்த மூன்றையும் தவிர்த்து தெய்வீகப் பறவை ஜடாயுவுக்கு ராமபிரான் தில தர்ப்பண பூமி மற்றும் ராமேஸ்வரத்தில் ஸ்ரார்தமும் தர்ப்பணமும் செய்துள்ளார். இவை அனைத்துக்குமான காரணம் முடிவுரையில் கூறப்பட்டு உள்ளது*****.
இந்த மூன்று ஆலயங்களும் அருகருகில் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று பல கிலோமீட்டர் அளவுக்கு தள்ளி அமைந்து உள்ளன என்பதினால் தெய்வீகப் பறவை ஜடாயுவிற்கு எப்படி அந்த மூன்று இடங்களிலும் தகனம் நடந்து இருக்க முடியும், இது முரண்பாடில்லையா என்ற கேள்வி எழலாம். ஆகவே அவற்றை விளக்கும் விதமாக சில விவரங்களை முடிவில் கொடுத்து உள்ளேன்*****.
—————————–
*****
இந்த சர்ச்சை குறித்து நான் 2012 ஆம் ஆண்டிலேயே சில பண்டிதர்களுடன் விவாதித்தேன். அப்போது பல செய்திகளைக் கேட்டு வியந்தேன். ஆகவே மீண்டும் அவற்றின் அடிப்படையில் தெய்வீக பறவையான ஜடாயுவின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரே கதையையே தல வரலாறாக கொண்டுள்ள ஆலயங்களின் மீதான சந்தேகத்தை நீக்க சில விளக்கத்தை அளிக்கின்றேன்.
திருப்புல்லபூதங்குடி ஆலயம் மற்றும் திருப்பூக்குழி விஜயராகவாப் பெருமான் ஆலயம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று சுமார் 150 கல் இடைவெளியில் அமைந்துள்ளன. அதை போலவே லிபாக்ஷி ஆலயமும் இந்த இரண்டு ஆலயங்களில் இருந்து 300 கிலோ தொலைவில் அமைந்து உள்ளது. இவை அனைத்துமே உண்மை ஆகும்.
தெய்வீக பறவை ஜடாயுவின் மரணத்துடன் சம்மந்தப்பட்டுள்ள ராமபிரான் குறித்த விவரங்கள் பல புராணங்களிலும் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட புராணங்கள் எழுதப்பட்டு உள்ள காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அந்த காலத்தில் தெய்வீக அவதாரங்களும் மற்றவர்களும், தேவலோகத்தில் இருந்து பூமிக்கும், பூமியில் இருந்து தேவலோகத்துக்கு சில நொடிகளில் சென்று விட்டு திரும்ப வந்துவிட முடியும் என்ற உண்மை நிலை இருந்தது. இவற்றை புராணங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். தற்கால மனிதர்களின் உயரத்தைப் போல அவர்களுடைய உயரங்கள் ஆறடி அல்லது ஏழு அடியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பத்து கைகளையும், மூன்று முதல் பத்து முகங்களையும் கொண்டு இருந்தவர்களின் உருவம் தற்காலத்தைய சராசரி மனித உடலளவா இருந்திருக்கும்? சஞ்சீவ மலையையே பெயர்த்து தான் கையில் ஏந்திக் கொண்டு சென்ற பகவான் ஹனுமான், பூமியில் இருந்து ஆகாயம் அளவுக்கு விஸ்வரூப தரிசனம் தந்த கிருஷ்ண பகவான், தன் கையில் கைலாய மலையையே தூக்கி வைத்துக் கொண்ட ராவணன், சிவபெருமானின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களினால் பூமி ஒரு பக்கம் சரிந்தபோது அதை சமன் செய்ய எதிர்புறத்தில் இருந்த இன்னொரு மூலைக்கு சென்று நின்று கொண்டு அதை சமனாக்கிய அகஸ்திய முனிவர் போன்றவர்கள் சாதாரண உருவிலா இருந்திருக்க முடியும்? ஒரே நொடியில் பல மைல் தூரத்தை ஒரே காலடி வைத்து செல்ல முடிந்தவர்கள் அவர்கள் எனும்போது அவர்களின் உருவ அமைப்பை புரிந்து கொள்ளலாம்.
அந்த காலகட்டத்தில் இந்திய பூமியின் பகுதிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் என பல துண்டுகளாக இல்லாமல் அனைத்துமே ஒன்று சேர்ந்த ஒரே பகுதியான பூமியாக அடர்ந்த காடுகளால் இணைக்கப்பட்டு இருந்துள்ளன. தற்காலத்தில் ஒன்றுடன் ஒன்று சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்ல குறைந்தது ஆறு மணி நேரம் பிடிக்கின்றது. ஆகவே தற்காலத்தில் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை அடைய ஆறு மணி நேரம் பிடிக்கும் நிலையில் அன்றைய அசுர உருவில் இருந்தவர்களால் சில அடிகள் நடந்தே சென்னையில் ஒரு மூலையில் இருந்து பெங்களூரின் இன்னொரு மூலைக்கு செல்ல முடிந்தது. ஆகவே தூரம் என்பது ஒரு பொருட்டாகவே இருந்தது இல்லை. ராவணன் சீதா தேவியை கவர்ந்து கொண்டு வான் வழியே சென்றபோது பல மைல் சுற்றளவு கொண்ட அந்த இடங்கள் அனைத்துமே தெய்வீகப் பறவை ஜடாயுவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அப்போது வானத்தில் நடைபெற்ற யுத்தத்தில் ராவணன் தெய்வீகப் பறவை ஜடாயுவைக் கொன்று போட்டபோது பூதாகாரமாக இருந்த அந்தப் பறவையின் உடலின் பல பாகங்களும், அதன் ரத்தமும் சில இடங்களில் விழுந்தன. அந்த பாகங்கள் விழுந்த இடங்கள் பிற்காலத்தில் புனித இடங்களாக அமைய அவற்றில் இந்த மூன்று ஆலயங்களும் எழுந்தன.
மரணம் அடையும் தருவாயில் இருந்த தெய்வீகப் பறவை ராமபிரானிடம் தனக்கு இறுதி சடங்குகளை அவரே செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டதும், அதை உடனடியாக ராமபிரான் ஏற்றுக் கொண்டார் என்றாலும் அவர் மனதில் ஒரு குழப்பம். ‘மூத்த மகனாக இருந்தும் எனது தந்தைக்கே இறுதி காரியங்களை செய்யவில்லை. அப்படி இருக்கும்போது என்னுடன் எந்த நிலையிலும் ரத்த சம்மந்தமே இல்லாத இந்த பறவைக்கு எந்த உறவு நிலையில் இருந்து கொண்டு நான் இறுதி காரியத்தை செய்வது? இறக்கும் தருவாயில் வாக்கு கொடுத்து விட்டதினால் அதை மீறவும் முடியாது. மேலும் ஒருவருடைய மனைவி உயிருடன் இருக்கையில் இப்படிப்பட்ட காரியங்களை மனைவி பக்கத்தில் இல்லாமல் செய்ய இயலாது. அது தர்மத்தை மீறிய செயலாகிவிடும். கொடுத்த வாக்கை மீறினால் அதுவும் தர்ம நெறியை மீறியதாகிவிடும். இந்த பறவை இறந்த இடம் எதுவாக இருக்கும்? அதன் ஆத்மா எங்கு சென்று இருக்கும்? ஆகவே இறுதி காரியங்களை எங்கு செய்வது, எப்படி செய்வது? பரமேஸ்வரா என்னை ஏன் இன்று இப்படிப்பட்ட தர்ம சங்கடமான நிலையில் வைத்துவிட்டாய்’ என்று சிவபெருமானை வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்தவருக்கு மேற்கொண்டு என்ன செய்வது என மனதில் ஒன்றுமே தோன்றவில்லை. கண்களை மூடிக்கொண்டு அந்த குழப்பத்துக்கான விடை தேடி அமர்ந்திருந்தபோது வானத்தில் இருந்து ஒரு ஆசிரி குரல் கொடுத்தது.
‘ராமா, இதற்கு ஏன் இத்தனை குழம்புகின்றாய் ? இந்த குழப்பம் தற்காலிகமானதே. உயிரை துறக்கும் தறுவாயில் இருந்த இந்த பறவைக்கு நீ கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது என வருந்தாதே. நீ விதி வசத்தினால் உன் தந்தையை நேரில் சந்திக்காமல் பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது. எந்த ஒருவரும் ஏதாவது ஒரு விதியின் காரணத்தினால் தனது பெற்றோர்களையோ அல்லது மனைவியிடமிருந்தோ விட்டு பன்னிரண்டு வருடங்கள் விலகி அவர்களது முகத்தைக் கூடப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சமயங்களில் இப்படிப்பட்ட இறுதிக் காரிய நியமங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டால், அப்போது வேறு யாரையாவது தனது நிழல் பெற்றோர்களாகவோ அல்லது நிழல் மனைவியாகியாகவோ தற்காலிகமாக சங்கல்பம் செய்து கொண்டு நியமங்களை செய்யலாம் என்கின்றது தெய்வலோக தர்ம நெறி. அத்தகைய நியமங்களை செய்யாமல் விட்டால் அதுதான் தர்மத்தை மீறிய செயல் ஆகும்.
இந்தப் பறவை உனக்கு உதவி செய்ய முயலுகையில் உயிரை விட்டது என்பதினால் அதை உன் குடும்ப உறவாகவே நினைத்துக் கொண்டு அதற்கான காரியங்களை செய். எந்த ஒருவர் இன்னொருவருக்காக தான் உயிரை தியாகம் செய்வாரோ அவர்கள் பூர்வ ஜென்மத்தில் ரத்த சம்மந்தம் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பதே தெய்வ நியதியாகும். இல்லை என்றால் இன்னொருவருக்காக தன்னுயிர் தரும் மனநிலை வராது. இந்தப் பறவையும் நீயும் பூர்வ ஜென்மத்தில் தொடர்ப்பு கொண்டு இருந்தவர்கள். ஆகவே மனக் குழப்பம் அடைய தேவை இல்லை. நீ யார்? இந்த நேரத்தில் நீ விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமனாக அவதரித்து உள்ளாய். இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது விஷ்ணு பகவானே உலகை ரட்ஷிப்பவராகவும், மோட்ஷத்தை தருபவராகவும் இருக்க படைக்கப்பட்டார். அதை இந்த தெய்வீகப் பறவை புரிந்து கொண்டு விட்டதினால்தான் உன்னிடம் தனக்கு இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்தது. ஆகவே தயங்காமல் அதற்கு இறுதி சடங்குகளை செய்து மோட்ஷத்திற்கு அனுப்பி வை.
உன் தந்தைக்கு இறுதிக் காரியம் செய்யவில்லை என்பதினால் இதை உன் பெரிய தந்தையாக சங்கல்பம் எடுத்துக் கொண்டு அதற்கான காரியங்களை செய்யலாம். புல்லா இனத்தை சேர்ந்த பறவையின் உயிர் நிலை உடலைத் தவிர அதன் சிறகுகளிலும் படர்ந்து இருக்கும். இந்தப் பறவையின் ஆத்மாவும் அதன் வெட்டப்பட்ட சிறகுகளில் படர்ந்திருக்கும். ஆகவே இந்தப் பறவையின் இரண்டு சிறகுகளும் உடலும் விழுந்த இடங்கள் அனைத்திலும் நீ இறுதி சடங்குகளை செய்ய வேண்டும். மனைவி இல்லையே என வருந்தாதே. நீயோ விஷ்ணுவின் ஒரு அவதாரம். சீதா தேவி மற்றும் பூதேவி இருவருமே லஷ்மி தேவியின் அவதாரங்கள். லஷ்மி தேவியோ விஷ்ணு பகவானின் மனைவி. ஆகவே நீ இறுதி காரியத்தை செய்யும்போது சீதையின் உருவாக நிழல் உருவில் பூதேவி அங்கு வந்து நின்று கொள்வது மட்டும் அல்லது சடங்குகள் முடியும்வரை உன்னை தொடர்வாள். ஆகவே நீ கவலை கொள்ளாது தெய்வீகப் பறவையான ஜடாயுவின் உயிர் நிலைகள் விழுந்த மூன்று இடங்களிலும் இறுதி சடங்கை செய்துவிட்டு அதன் உடல் விழுந்த பகுதியில் தகனமும் செய்து விடு. அதன் பின் உன்னுடைய மனைவி மீட்கப்பட்டு உன்னோடு சேர்ந்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் தர்ப்பணம் செய்ய உகந்ததாகக் கருதப்படும் பூமி மற்றும் எந்த கடல் கரையில் உன்னால் மணலில் லிங்கம் அமைக்க முடிகிறதோ அங்கும் சிரார்த்தம் செய்து விட்டால் பித்தரு கடன்களை சரிவர செய்யாத உன் தோஷங்களும் அகன்று விடும், உன் தந்தையும், பெரிய தந்தையாக நீ சங்கப்பம் செய்து கொண்டு இறுதி காரியம் செய்யும் இந்தப் பறவையும் சொர்கத்தை அடைந்து விடும். இப்படியாகக் கூறிவிட்டு குரலை நிறுத்திக் கொண்டு விட்டது. அதைக் கேட்ட ராமபிரான் மனதில் தெளிவு ஏற்பட்டது. இனி தான் கொடுத்த வாக்கை மீறக் கூடாது என முடிவு செய்தார்.
ஆகவே தெய்வீகப் பறவை ஜடாயுவின் கட்டுப்பாட்டில் இருந்த பல மைல் அளவு படர்ந்திருந்த அந்த அடர்ந்த காட்டில் மூன்று இடங்களிலும் தெய்வீகப் பறவை ஜடாயுவின் இறுதி சடங்குகளை ராமபிரானும் லஷ்மணரும் செய்தார்கள். எந்தெந்த இடத்தில் எல்லாம் அந்தப் பறவையின் உடல் பாகங்கள் கிடந்தனவோ அந்த இடங்களுக்கெல்லாம் லக்ஷ்மணருடன் சேர்ந்து சில நொடிகளில் நடந்தே சென்ற ராமபிரான் அதே இடத்தில் இறுதி சடங்கின் 13 நாட்களுக்கான நியமனங்களை துவக்கி அந்தந்த பாகங்களை ஆங்காங்கே இருந்த பூமியிலே வைத்து எரித்தார். அதன் இறுதி காரியங்களை செய்யும்போது இறந்து கிடந்த அந்தப் பறவையை ராமபிரான் தனது கையில் எடுத்துக் கொண்டு சென்றார். சில இடத்தில் அந்த தெய்வீகப் பறவையை தன் மடி மீது வைத்துக் கொண்டு சடங்குகளை செய்தார். இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் >திருப்புல்லபூதங்குடி ஆலயம்,திருப்பூக்குழி விஜயராகவாப் பெருமான் ஆலயம் மற்றும் லிபாக்ஷி ஆலயம் அமைந்துள்ள இடங்கள் ஆகும். இப்படியாக தெய்வீகப் பறவை ஜடாயுவின் உடலின் பாகங்கள் விழுந்த, இறுதி காரியங்கள் நடைபெற்ற இடங்கள் புனித பூமியாகி விட அவற்றின் மீது பிற்காலத்தில் இந்த மூன்று ஆலயங்களும்எழுந்தன. அவை அனைத்துமே தெய்வீகப் பறவை ஜடாயுவின் மரணத்தை தத்தம் ஆலய வரலாறாக கொண்டவையாக அமைந்து இருந்தன.