ஆந்திர பிரதேசத்தில் சந்திர பகவான், சூரிய பகவான், இந்திர பகவான், விஷ்ணு பகவான் மற்றும் முருகப் பெருமான் போன்ற ஐந்து தெய்வங்களும் ஐந்து இடங்களில் சிவ பெருமானுக்கு ஆலயம் எழுப்பி உள்ளார்கள். அவை அனைத்தும் சிவபெருமானின் ஆத்ம லிங்கத்தில் இருந்து உடைந்து விழுந்த லிங்கத்தை கொண்டு கட்டப்பட்ட ஆலயங்கள் ஆகும். அந்த ஐந்து சிவாலயங்களை பஞ்சரமா ஆலயங்கள் அல்லது பஞ்சரமா ஷேத்திரங்கள் என்கின்றார்கள். அந்த ஐந்து ஆலயங்களும் :-
- அமராவதியில் உள்ள அமரரமா ஆலயம்
- தக்ஷராமம் எனும் இடத்தில் உள்ள தக்ஷரமா ஆலயம்
- கிழக்கு கோதாவரியில் உள்ள சோமரமா ஆலயம் கிழக்கு கோதாவரியில் உள்ள பல்லக்கொல்லு எனும் இடத்தில் உள்ள ஷீரரமா ஆலயம்
- மேற்கு கோதாவரியில் சமர்லகோடாவில் உள்ள பீமரமா ஆலயம் என்பன ஆகும்
அந்த ஐந்து ஆலயங்களின் வரலாறும் சுவையானது.
இந்த ஆலயங்களின் வரலாற்றின்படி தாரகாசுரன் எனும் ஒரு அசுரன் கடுமையான தவம் செய்து பிரும்ம தேவரிடம் இருந்து ஒரு அரிய வரத்தைப் பெற்று இருந்தான். அந்த வரத்தின்படி சிவபெருமானுக்கு பிறக்கும் பிள்ளையைத் தவிர அவனை வேறு யாராலும் பரமசிவன் கடுமையான தவத்தில் அமர்ந்து இருந்தார். ஒருமுறை கடுமையான தவத்தில் சிவபெருமான் அமர்ந்து விட்டால் பல காலத்துக்கு அவர் தவத்தைக் கலைத்துக் கொள்ள மாட்டார். ஆகவே அவருக்கு பிள்ளை பிறக்க வழி இல்லை என தவறான கணக்கு போட்டான் தாரகாசுரன். அதற்கு முன் அவன் கடுமையான விரதம் பூண்டிருந்து சிவபெருமானிடம் இருந்து ஆத்ம லிங்கத்தையும் பெற்று இருந்தான். ஆகவே அவன் அளவற்ற பலம் படைத்தவனாக இருந்தான்.
தனக்கு கிடைத்த சக்திகளைக் கொண்டு தாரகாசுரன் அக்கிரமங்களை செய்யத் துவங்கினான். அனைவரையும் கொடுமைப்படுத்தினான். அவனது கொடுமையை தாங்க முடியாமல் போன தேவர்களும், கிங்கர்களும், தேவ கணங்களும் மற்றும் பிற தெய்வங்களும் ஒன்றாகக் கூடி சிவபெருமானிடம் சென்று முறை இட்டார்கள். அவர்களது குறையைக் கேட்ட சிவபெருமானும் ஒரு நாடகம் நடத்தி முருகப் பெருமானை தோற்றுவித்து அவரை தாரகாசுரனை அழிக்க அனுப்பினார். முருகப் பெருமானும் தாரகாசுரனுடன் யுத்தம் செய்யத் துவக்கி கடுமையாகப் போரிட்டார். போரில் எத்தனைமுறை அவன் மீது சக்தி வாய்ந்த ஆயுதங்களை வீசினாலும் அவன் மீண்டும் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்தான். அதனால் களைப்படைந்த முருகப் பெருமானும் தனது தாய் தந்தையாரை மனதில் வேண்டினார். சிவபெருமானும் உடனடியாக பகவான் விஷ்ணுவை அவருக்கு உதவ அனுப்பினார். முருகப் பெருமானை யுத்தகளத்தில் சந்தித்த விஷ்ணு பகவானும் அவருக்கு ஒரு ஆலோசனை கொடுத்தார். தாரகாசுரனை அழிக்க வேண்டும் எனில் முதலில் சிவபெருமான் அவனுக்கு தந்திருந்த ஆத்ம லிங்கத்தை துண்டு துண்டாக உடைத்தால் மட்டுமே அவனை வெல்ல முடியும் என்று கூற மீண்டும் முருகப் பெருமான் சோர்வடைந்தார். உடைந்த அந்த லிங்கங்கள் உடனடியாக ஒரு வழிபாட்டுத் தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட வேண்டும் என்பதும் கட்டாயம் என்றார். தன்னால் தனது தந்தையின் இன்னொரு உருவமான சிவலிங்கத்தை எப்படி உடைப்பது? அது தந்தையை கொல்வதற்கு சமம் ஆகும் அல்லவா?
அதைக் கேட்ட விஷ்ணு பகவானும் முருகப் பெருமானை தேற்றினார். முருகப் பெருமானிடம் நடப்பது அனைத்துமே அவருடைய தந்தையான சிவபெருமான் நடத்தும் நாடகத்தின் ஒரு அங்கமே என்றும், தாரகாசுரனை ஒரு கருவியாகப் பயன் படுத்தியே சிவபெருமான் பூமியில் ஐந்து இடங்களில் தனது ஆத்ம சக்தி கொண்ட சிவலிங்கமாக ஆலயத்தில் அமர முடிவு செய்து உள்ளார் என்றும், அதனால்தான் தாரகாசுரனிடம் அந்த லிங்கத்தை அவர் தந்து உள்ளதாகவும் கூறினார். தாரகாசுரனை அதற்கு தேர்ந்து எடுத்ததற்கு ஒரு பின்னணி காரணம் இருந்தது. தாரகாசுரனின் முன் பிறவியில் அவன் நாத்தீகனாக இருந்தவன். அவன் ஒருமுறை சிவபெருமானை வழிபட்டுக் கொண்டு இருந்த ஒரு சிறுவனைக் கொன்று விட்டதினால் தாரகாசுரன் அடுத்தப் பிறவியில் பூமியில் பிறப்பு எடுப்பான் என்றும், அப்போது அவனது மரணம் சிவபெருமானுக்கு பிறக்க உள்ள பிள்ளையினால் நடக்கும் என்றும் சாபம் கிடைத்தது. ஆகவே அந்த காட்சியின் இறுதிக் கட்டமான தாரகாசுரனின் மரண வேளை வந்துவிட்டதினால் தாமதிக்காமல் அவனைக் கொல்லுமாறு கூறினார். முருகப் பெருமானும் உடனடியாக தனது ஆயுதத்தை ஏவி ஆத்ம லிங்கத்தை உடைத்தார். அந்த லிங்கமும் ஐந்து துண்டுகளாக ஐந்து இடங்களில் சென்று விழுந்ததும், அதை எதிர்பார்த்து காத்திருந்த சந்திர பகவான், சூரிய பகவான், தேவேந்திரர், விஷ்ணு பகவான் மற்றும் முருகப் பெருமான் என ஐவரும் உடனடியாக அந்தந்த இடங்களுக்கு ஓடிச் சென்று உடைந்து விழுந்த ஆத்ம லிங்கத்தின் பாகத்தை எடுத்து அங்கேயே அதை பிரதிஷ்டை செய்து வழிபாட்டுத் தலம் அமைக்க உடனேயே தாரகாசுரனின் அனைத்து சக்திகளும் அழிந்தது. முருகப் பெருமானும் சற்றும் தாமதிக்காமல் அவன் மீது ஆயுதத்தை வீசி எறிந்து அவனைக் கொன்றார். இப்படியாக எழுந்த அந்த ஆலயங்களும் பஞ்சரமா என்ற பெயர் பெற்றன. பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள்படும். அரோமா என்றால் மணம் எனவும் அமைதி என்றும் பொருள்படும். நாளடைவில் பேச்சு வார்த்தையில் அரோமா எனும் வார்த்தை அரமா என ஆகிட ஐந்து ஆலயங்களும் சேர்ந்து பஞ்சரமா என அழைக்கப்பட்டது. அந்த ஐந்து ஆலயங்களுக்கும் சென்றால் மன அமைதி கிடைக்கும் என்பதும் ஐதீகம் ஆயிற்று.
இரண்டாவது கதை தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்த கதையுடன் இணைந்தது. கடலைக் கடைந்து அமிர்தம் வெளிவந்ததும் அதை அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாத தேவர்கள் விஷ்ணு பகவானின் துணை கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தாமே எடுத்துக் கொண்டார்கள். அதனால் வருத்தமுற்ற அசுரர்கள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து பல அரிய வரங்களை பெற்றார்கள். அப்படி வரன்கள் பெற்றுக் கொண்டவுடன் அனைத்து அசுரர்களும் தாரகாசுரனின் தலைமையில் தேவர்களுடன் யுத்தம் செய்தார்கள். அசுரர்களின் தலைவன் தாரகாசுரன் பெற்று இருந்த வரத்தினால் அவனை வெல்ல முடியாமல் போன தேவர்கள் சிவபெருமானிடம் சரண் அடைய அவரும் முருகப் பெருமானை படைத்து அனுப்பி அவனிடம் இருந்த ஆத்ம லிங்கத்தை உடைக்க ஏற்பாடு செய்து, அவனை கொன்ற பின் அந்த உடைந்த சிவலிங்கத்தைக் கொண்டு ஐந்து ஆலயங்களையும் சந்திர பகவான், சூரிய பகவான், தேவேந்திரர், விஷ்ணு பகவான் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களால் அமைக்க வழி செய்தார். இப்படியாக எழுந்தவைகளே பஞ்சரமா ஆலயங்கள்.
அந்த ஐந்து ஆலயங்களில் முதலாவதானது தக்ஷராமத்தில் உள்ள தக்ஷரமா ஆலயம் ஒன்றாகும். இது ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள ராமச்சந்திரபுரம் எனும் இடத்தில் உள்ளது. தக்ஷராமாம் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் இருந்து 47 கிலோ தொலைவிலும், சம்மர்லகோடா ரயில் நிலையத்தில் இருந்து 42 கிலோ தொலைவிலும் உள்ளது. இந்த ஆலயத்தை சூரியனார் கட்டியதாக வரலாறு உள்ளது. இங்கு வந்து ராமபிரான், இந்திரா பகவான் மற்றும் சூரியனார் போன்றவர்கள் சிவபெருமானை வழிபட்ட வரலாறும் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஒன்பது அடி உயரமானதாம். அவரை பீமேஸ்வரி ஸ்வாமி என்றும், நாயகியை மாணிக்கம்யா தேவி என்றும் அழைக்கின்றார்கள்.
இரண்டாவது ஆலயத்தின் மூலவரான சிவபெருமானின் பெயர் அமரேஸ்வர ஸ்வாமி என்பதாகும். தாயாரின் பெயர் பாலசாமுண்டிகா என்பதாகும். அமராவதியில் உள்ள அமரராமா எனும் இடத்தில், கிருஷ்ண நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் 15 அடி உயரமானது. ஒரு கிராமியக் கதையின்படி இந்த லிங்கம் மேலும் மேலும் உயரமாக வளரத் துவங்க அதை தடுக்கும் வகையில் அதன் தலை பகுதியில் ஒரு ஆணி அடித்தார்கள் என்றும், ஆணி அடித்ததும் அந்த தலைப்பு பகுதியில் இருந்து ரத்தம் வெளிவந்து ரத்தக் கறையை ஏற்படுத்தியதாகவும் பின்னர் உலர்ந்து விட்ட அந்த சிவப்பு ரத்தக் கறையை இன்றும் சிவலிங்கத்தின் தலையில் காணலாம் என்றும் கூறுகின்றார்கள்.
மூன்றாவது ஆலயம் சந்திர பகவானால் நிறுவப்பட்டது. கிழக்கு கோதாவரியின் கரையில் பீமாவரம் எனும் இடத்தில் உள்ள இந்த ஆலய மூலவரின் பெயர் சோமேஸ்வரஸ்வாமி என்பதாகும். அன்னை ராஜராஜேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். இங்குள்ள ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் நிறம் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் வேறு நிறத்தில் மாறி காணப்படுகிறது என்பது அதிசயமாம்.
கிழக்கு கோதாவரியின் பாலக்கோடு எனும் இடத்தில் உள்ளது நான்காம் ஆலயம். ஆலயத்தின் பெயர் ஷீரரமா. இதை விஷ்ணு பகவான் நிறுவினாராம். இங்குள்ள ஆலய மூர்த்தியை ராமலிங்கஸ்வாமி என அழைக்கின்றார்கள், அம்பாளை பார்வதி தேவி என அழைக்கின்றார்கள். வெண்மையான நிறம் கொண்ட இந்த ஆலயத்தின் சிவலிங்கம் மிக உயரமானது. ஷீரா என்றால் பால் என அர்த்தம். ஆகவே வெண்மையான பாலைப்போல உள்ள சிவலிங்கத்தை ஷீரரமா என அழைக்கின்றார்கள்.
ஐந்தாவது ஆலயம் மேற்கு கோதாவரிக் கரையில் சம்மர்லகோடா எனும் இடத்தில் அமைந்துள்ள குமார பீமேஸ்வரஸ்வாமி சிவன் ஆலயம் ஆகும். அன்னையின் பெயர் பால திரிபுரசுந்தரி என்பதாகும். சிவலிங்கம் சுமார் 16 அடி உயரமானதாம். இதை முருகப் பெருமான் நிறுவினாராம். ஆலயத்தில் உள்ள நந்தியின் சிலை ஒரே கல்லினால் செய்யப்பட்டதாம். ஆலயத்துக்கு நான்கு நுழை வாயில்கள் உள்ளன.
இந்த ஐந்து ஆலயங்களுக்கும் ஒரே நாளில் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்ப ஆந்திர அரசின் சுற்றுலா பேருந்து (வண்டி) வசதி உள்ளதாம்.