மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய பல ஆலயங்களை அவர் நிறுவியதாக ஒரு கருத்து உண்டு. ஏன் எனில் அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து தனது சக்தியை அதிகரித்துக் கொள்வது அவருடைய வழக்கமாம். அவற்றில் ஒன்றுதான் பகளாமுகி தேவி ஆலயம் ஆகும். அந்த ஆலயம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள நல்கேடா என்ற சிற்றூரில் அமைந்து உள்ளது.
தாந்த்ரீக அடிப்படைக் கொண்ட மகாவித்யா எனும் தச வித்தியா சாதனாவில் பத்து தேவிகள் உள்ளனர். அந்த பத்து தேவிகளும் பார்வதி தேவியின் பல்வேறு தாந்த்ரீக பெண் ஸ்வரூபங்களே ஆகும். நர்மதாவின் கிளை நதியான லகுந்தார் என்ற நதியின் கரையைத் தொட்டபடி உள்ள இந்த ஆலயமும் சக்தி பீடங்களில் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். ஒரு அதிசய செய்தி என்னவென்றால் உலகிலேயே ஓரிரு பைரவர் ஆலயத்தைத் தவிர அனைத்து தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக சக்திகளைத் தரும் ஆலயங்கள் அனைத்துமே பெண் தெய்வங்களை மூலமாகக் கொண்ட ஆலயமாகவே உள்ளது. அதில் முக்கியமானது பகளாமுகி தேவி ஆலயமும் ஒன்றாகும். பகளாமுகி என்றால் கொக்கு முகத்தவள் என்று பொருள்படும். இந்த ஆலயத்தின் பெரும் மகிமை என்ன என்றால் ஆலயத்தின் மிக அருகிலேயே நான்கு பக்கங்களிலும் மயானங்கள் உள்ளன. நான்கு பக்கங்களிலும் மயானங்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலையில் எந்த ஒரு ஆலயமும் எந்த ஒரு இடத்திலும் அமைந்திருக்கவில்லை. மயானங்களின் வான்வெளியில் தெய்வீக மற்றும் பிற ஆத்மாக்கள் உலவிக் கொண்டு இருக்கும் என்பது நியதியின் உண்மை. அங்குள்ள அந்த ஆத்மாக்கள் அனைத்தும் இந்த தேவியின் கட்டுப்பாட்டில் உள்ளனவாம். ஒரு வேளை அதனால்தான் என்னவோ இந்த ஆலயம் தந்திர மந்திர சக்திகளை மிக அதிக அளவில் அடக்கி வைத்து உள்ளது என்று கருத வேண்டி உள்ளது.
பகளாமுகி தேவி ஆலயத்தைப் பற்றி சிறு வரலாறு அங்குள்ள ஒரு கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது. மற்றபடி ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்ற விவரம் இல்லை. அனைத்து செய்திகளுமே அங்குள்ள பண்டிதர்கள் மற்றும் கிராமத்தினர் தரும் வாய்மொழிச் செய்திகளே. இந்த ஆலயத்தின் புராணக் கதையும் மகத்துவமும் அந்த கிராமத்தினரிடையே வம்சாவளியாக பரவி வந்துள்ளன. ஆமாம் பகளாமுகி தேவி எப்படி தோன்றினாள்?
பகளாமுகி தேவி தோன்றிய வரலாறு குறித்து இங்குள்ள கிராம மக்கள் மற்றும் பண்டிதர்களினால் கூறப்படும் கிராமியக் கதை இது. உலகம் படைக்கப்பட்டப் பின்னர் சத்யுகத்தில் ஒரு முறை பெரும் கடல் சீற்றத்துடன் கூடிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்று விட்டது. அதன் கோர தாண்டவத்தைத் தன்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என மனம் பதறிய காக்கும் கடவுளாக படைக்கப்பட்ட விஷ்ணு பகவான், சௌராஷ்டிராவில் இருந்த ஒரு தனிமையான இடத்தில் சென்று இந்த பிரபஞ்சம் அழிவில் இருந்து காக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு தவத்தில் அமர்ந்து கொண்டார். கடுமையான தவத்தின் விளைவாக அவருடைய நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும் ஆகாயத்தில் இருந்த நட்சத்திரங்களின் ஒளியும் ஒன்று சேர அந்த ஒளி வெள்ளத்தில் மஞ்சள் நிற ஆடை உடுத்திய ஒரு பெண் உருவில் தோன்றினாள் பகளாமுகி தேவி. இப்படியாகத் தோன்றிய பகுளாமுகி தேவி உடனடியாக விஷ்ணுவிடம் சென்று இந்த உலகை அழிவில் இருந்து காப்பற்ற பார்வதி தேவி தன்னை தோற்றுவித்து அனுப்பி இருக்கின்றாள் என்றும் ஆகவே கவலைப்பட வேண்டாம் என்று கூறி விட்டு இயற்கையின் சீற்றங்களை நொடிப் பொழுதில் அடக்கி, அவற்றை தன்னுள் கிரகித்துக் கொண்டு விட்டாள். தவத்தை முடித்துக் கொண்ட விஷ்ணு பகவானுக்கு தெய்வீகத்தையும் ஆன்மீக சிந்தனைகளையும் அழித்துக் கொண்டு உலகில் கேடு விளைவித்துக் கொண்டு இருந்த தீய சக்திகளை அடக்க பார்வதி தேவியானவள் பகளாமுகி தேவியை தன்னுள் இருந்து படைத்து அனுப்பி இருக்கின்றாள் என்ற உண்மை புரிந்தது. இப்படியான நிலையில் அவதரித்தவளே பகளாமுகி தேவி ஆவாள்.
இந்த ஆலயம் நல்கேடாவில் எழுந்த புராணக் கதையும் கிராமத்தினரால் கூறப்படுகின்றது. புராணச் செய்திகளின் அடிப்படையில் மகாபாரதப் காலத்தில் பாண்டவர்கள் தாம் இழந்த நாட்டை பிடிக்க நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களிலும் இருந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்திர ஆலயங்களில் வழிபாடு செய்து வந்தார்கள். அதனால் கிருஷ்ண பகவானின் ஆலோசனைப்படி தர்மர் தமது சகோதரர்களுடன் பகுளாமுகி தேவியை இந்த இடத்தில் வந்து வழிபட்டார் எனக் கூறுகின்றனர். பாண்டவர்கள் இங்கு வந்தபோது எந்த ஒரு ஆலயமும் காணப்படவில்லை. ஆனால் ஸ்வயம்புவாக தோன்றி இருந்த பகளாமுகி தேவியின் சிலை தற்போது காணப்படும் அதே சிலையாக ஒரு மரத்தடியில் இருந்தது. உலகில் தீய சக்திகளை அடக்கி தர்மத்தை நிலைநாட்ட வந்ததாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தனக்கு சௌராஷ்ரத்தில் காட்சி கொடுத்த பகளாமுகி தேவி அங்கு வந்து பூமிக்குள் தங்கி இருக்கின்றாள் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமான கிருஷ்ணருக்கும் தெரியும் என்பதினால் கிருஷ்ணர் உருவில் இருந்த மகாவிஷ்ணு பாண்டவ சகோதரர்களை இந்த இடத்துக்கு வந்து யுத்தத்தில் வெற்றி கிடைக்க பகளாமுகி தேவியை வழிபடுமாறு கூறி இருந்தார். அதனால்தான் மகாபாரத யுத்தத்தின் முன்பாக பாண்டவர்கள் இங்கு வந்து பகளாமுகி தேவியை வேண்டி வணங்கி, அவளிடம் இருந்து அதீத சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு அருள் தந்து சக்தி கொடுத்த இந்த தேவிக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கிருஷ்ண பகவான் கூறியதினால் பாண்டவ சகோதரர்கள் இந்த பகளாமுகி தேவியை இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய வழிபாட்டுத் தலம் அமைத்ததான கதை உள்ளது. இப்படியாக பாண்டவ சகோதரர்கள் அமைத்த தற்காலிகமான சிறிய வழிபாட்டுத் தலம் கால ஓட்டத்தில் பல்வேறு நிலைகளில் உருமாறி இன்றைய காட்ச்சியில் உள்ள ஆலயமாக எழுந்தாலும், அதில் உள்ள பகளாமுகி தேவியின் சிலை எந்த மாற்றத்தையோ அல்லது சேதத்தையோ அடையவில்லை என்பது இந்த ஆலயத்தின் மகிமையாகும் என்று பண்டிதர்களும் கிராம மக்களும் கிராமக் கதையாகக் கூறி வருகிறார்கள். மகாபாரத யுத்தம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்பதினால் இங்குள்ள பகுளாமுகி தேவியும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டவள் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். தற்போது இங்குள்ள ஆலய பண்டிதர் இந்த ஆலயத்தில் பூஜைகளை செய்து வரும் பண்டிதர் குடும்பத்தின் பத்தாவது பரம்பரையை சேர்ந்தவர். அவர் பரம்பரையை சேர்ந்தவர்களே இந்த ஆலய நிர்வாகத்தை மேற்பார்வை இட்டும், பூஜைகளை செய்தும் வருகின்றார்களாம். அவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு பூஜைகளை செய்வதில்லை. பல இடங்களில் இருந்து சாதுக்களும் சன்யாசிகளும் இங்கு வந்து சித்த சாதனாக்களை செய்து சித்த சக்தி பெறுகிறார்களாம். அப்படி வழிபாடு செய்யும்போது அவர்கள் பகளாமுகி தேவியை மகிழ்விக்க அவளுக்கு பிடித்தமான மஞ்சள் நிற ஆடையையே அணிகிறார்களாம்.
பகளாமுகி தேவியின் தோற்ற அமைப்பையும், உருவத்தையும் குறித்த செய்தி சில புராணங்களில் காண முடிகின்றது. ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவிக்கு மூன்று கண்கள் உள்ளன. மந்திர தந்திர சக்திகளின் தெய்வமான அவள் மேனி பொன்னிரமானது. அவளுக்கு பிடித்த வண்ணம் மஞ்சள் நிறம். கடல் நடுவில் மஞ்சள் நிற சம்பகா பூக்கள் நுரைப் போல மிதந்து கொண்டு இருக்க அதன் நடுவே தனது தலையில் உள்ள கிரீடத்தில் சந்திரனை பிறை வடிவில் வைத்துக் கொண்டு தங்க ஆசனத்தில் அமர்ந்து இருக்கின்றாள் என்றும், பகளாமுகி தேவி ஒரு அரக்கனின் நாக்கை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தவாறு காட்சி தருகிறாள் எனவும் அவளுடைய ரூபத்தை வர்ணிக்கின்றனர்.
இங்குள்ள ஆலயத்தில் உள்ள பகளாமுகி தேவி மூன்று கண்களை மட்டும் அல்ல மூன்று முகங்களையும் கொண்ட பகுளாமுகி தேவியாக காட்சி தருகின்றாள். பகளாமுகி தேவியின் சிலை பூமியில் இருந்து தானாக வெளி வந்தது எனவும் கூறப்படுகின்றது. பகளாமுகி தேவி மூன்று தேவிகள் உள்ளடங்கிய தெய்வம், அதாவது பகளாமுகி தேவி, தேவி மகாலஷ்மி மற்றும் தேவி சாமுண்டா என்றும் அப்படிப்பட்ட தேவியை தன்னுள் இருந்து பார்வதி தேவியே படைத்து அனுப்பி உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ உலகில் சத்யுகத்தில் விளங்கிய தீமைகளை அழிக்க பகளாமுகி தேவிக்கு பரமசிவனின் மூன்று கண்களின் அபார சக்தியை தந்து அனுப்பியதாகவும் அதை வெளிப்படுத்தும் விதமாகவ பகளாமுகி தேவிே மூன்று கண்கள் மற்றும் மூன்று முகங்களைக் கொண்டு அங்கு காட்சி தருகின்றாள் என்றும் பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
பகளாமுகி தேவியின் பிராகாரத்தைச் சுற்றி பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த தூண்கள் அனைத்தும் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கியவை. அந்த சக்திகள் பகளாமுகி தேவியின் சக்திகள் என்றும் அந்த சக்திகள் தினமும் தொடர்ந்து அந்த தூண்களில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு அந்த கருவறையை சக்திகள் அடங்கிய அறையாக வைத்துள்ளதாகவும் அந்த சக்திகளையே அங்கு வந்து சாதனாக்களை செய்யும் சாதனாத்விகள் அங்குள்ள பகளாமுகி தேவியின் அருள் கிடைத்ததும் தம்முள் கிரகித்துக் கொள்வதாகவும் நம்பிக்கை உள்ளது. ஆகவேதான் அங்கு வந்து பகளாமுகி தேவியை வழிபட்டுவிட்டு செல்லும் பக்தர்களின் உடலில் அந்த சக்தி புகுந்து கொண்டு விடுவதினால் அவர்களை எந்த தீய சக்தியாலும் எந்த தீமைகளையும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.
ஆனால் தீய எண்ணங்களை மனதில் ஏந்திக் கொண்டு அந்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அங்கு வந்து சாதனாக்களை செய்பவர்களுடைய எண்ணம் நிறைவேற பகுளாமுகி தேவி அருள் புரிவது இல்லை. அவர்களுக்கு தந்திர சக்திகள் கிடைப்பது இல்லையாம்.
இங்குள்ள ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவியின் சிலை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்சியாளர்களும், வரலாற்று வல்லுனர்களும் கூறினாலும், அது உண்மை அல்ல மகாபாரத யுத்தம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்பதினால் பாண்டவர்கள் வந்து வழிபட்ட பகளாமுகி தேவி சிலையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
பகளாமுகி தேவியின் மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் எதிரிகள் அழிவார்கள். இந்த தேவிக்கு வாக்கு வன்மையை அடக்கும் சக்தி உள்ளது என்பதினால் அலுவக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் தேர்வுகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பலவிதமான பிரிவினர் பகளாமுகி தேவி மந்திரத்தை உச்சாடனம் செய்து துதிக்கின்றார்கள். மேலும் தனது பக்தர்களிடம் அவர்களது விரோதிகள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் அகலவும், பக்தர்களின் ஏமாற்றங்கள் அவர்களை பாதிக்காமல் இருக்கவும் பகளாமுகி தேவி வகை செய்கின்றாள். இதன் காரணம் இந்த பகளாமுகி தேவியே மஹா வித்யாவில் காணப்படும் எட்டாவது தாந்த்ரீக தேவியாகும் என்பதே.
ஒரு அசுரனின் நாக்கை பிடித்து இழுப்பது போல காணப்படும் பகளாமுகி தேவியின் பின்னணி கதை என்ன?
முன்னர் ஒரு காலத்தில் மதன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பல தவங்களை செய்து அளவற்ற சக்திகளை, முக்கியமாக வாக்கு சித்தியை பெற்று இருந்தான். அதைக் கொண்டு அவனால் அவன் இருந்த இடத்தில் இருந்தே சித்தி, பூஜை மந்திர ஒலி போன்ற எவற்றையும் எந்த இடத்திலும் தடுத்து நிறுத்த முடியும் எனும் வாக்சித்தி வரமாகும். ஆனால் அந்த வரத்தின் பின்னே அவனுக்கே தெரியாத இன்னொரு துணை விதியும் இருந்தது. அதன்படி அவனால் பேச முடியாதபடி அவனது நாக்கு வன்மை சில நொடிகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் அவன் அந்த சக்தியை இழந்து விடுவான் என்பதே துணை விதியாகும்.
அவனுடைய மனம் போன போக்கில் எங்கெல்லாம் பூஜைகளும் யாகங்களும் செய்யப்பட்டனவோ அங்கெல்லாம் ஓதப்பட்ட மந்திரங்களை உச்சரிக்க விடாமல் தடுத்தான். அதனால் அனைவருடைய சித்திகளும், பூஜை மந்திர ஒலிகளும் நின்றன. எவர் எதை ஒதினாலும் அவன் அவற்றை தன் வாக்கு வலிமையினால் தடுத்தான். தேவர்களை மட்டும் அல்லாமல் பூமியில் இருந்தவர்களையும் கொடுமைபடுத்தினான். ஆகவே அவனது தொல்லையை சகிக்க முடியாமல் போன தேவர்கள் தம்மை அவனது கொடுமையில் இருந்து காப்பாற்றுமாறு பகளாமுகி தேவியை வேண்டிக் கொள்ள அதனால் கோபமுற்ற பகுளாமுகி தேவி அந்த அசுரன் மீது படையெடுத்து வந்து அவனுடன் சண்டையிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனுடைய வாக்கு சக்தியை அழித்தாள். நாக்கு இருந்தால்தானே எதையும் உச்சரிக்க முடியும். அதனால்தான் அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனை பேச இயலாதவனாக்கி அவன் சக்தியை அழித்தாளாம். அவனைக் கொல்லும் முன் அவன் அவளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். தன்னுடைய நாக்கை பிடுங்கி எறியும் அதே காட்சியில் பக்தர்கள் அவளை ஆராதிக்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். அதை பகளாமுகி தேவி ஏற்றுக் கொண்டதினால் அதே கோலத்தில் ஆலயங்களில் காட்சி தந்து அவள் வணங்கப்படுகின்றாள்.
ஒரு தீயவனின் வேண்டுகோளை அந்த பகளாமுகி தேவி ஏன் ஏற்றுக் கொண்டால் என்பதற்கும் ஒரு பின்னணிக் கதை உண்டு. அசுரன் மதன் கொல்லப்பட்டதற்கு பல காலத்துக்கு முன்னர் அவனும் ஒரு தேவ கணமாகவே இருந்திருந்தான். தேவ லோகத்தில் இருந்தவாறு பார்வதி தேவிக்கு உத்தமமான முறையில் பணிவிடைகளை செய்து வந்ததினால் அவனுக்கு தேவலோகத்தில் பெரும் மரியாதை இருந்தது. ஆனால் ஒருநாள் அவன் பார்வதி தேவி தியானத்தில் இருந்தபோது அதை அறியாமல் உரத்த குரலில் பூஜை மந்திரத்தை உச்சரிக்கத் துவங்க பார்வதி தேவியின் தியானம் கலைந்தது. அதனால் கோபமுற்று கண் விழித்த பார்வதி தேவியும் அந்த தேவ கணத்தை அது ஒரு அசுரனாகப் பிறந்து அதே வாக்கு வலிமையினாலேயே அவமானப்பட்டு அழிவை எய்துவான் என சாபமிட்டுவிட அந்த தேவகணமும் அவள் கால்களில் விழுந்து அறியாமல் தான் செய்துவிட்ட பிழையை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்ள பார்வதி தேவியும் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால் கருணைக் கொண்டு தனது சாபத்தின் தன்மையை மாற்றி அமைத்தாள். அதன்படி அவனுக்கு வாக்கு வலிமையினால் ஏற்படும் மரணம் தனது சக்தி கணத்தினால்தான் நடைபெறும், அதன் பின் அவன் மீண்டும் தன்னுடன் இணைந்து விடுவான் என்றாள். அதனால்தான் பார்வதியின் அவதார ரூபமான பகளாமுகி தேவியே அவனது அடுத்த பிறவியான அசுரன் மதனுடைய நாக்கைப் பிடுங்கி எறிந்து அவன் வாக்கு வலிமையை அழித்துக் கொன்றாள். அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவன் நாக்கை பிடுங்கி எறிந்த கோலத்திலேயே பகளாமுகி தேவி தனக்கு தரப்படும் பூஜைகளையும் ஆலயங்களில் ஏற்றுக் கொள்ளத் துவங்கினாள்.