சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையை ஆண்டு வந்தவர் பராக்கிரம பாண்டியன் என்பவர். அவர் சிவபக்தர். அவர் தினமும் மதுரையில் இருந்த சொக்கநாதர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வருவதுண்டு. ஒருமுறை அவர் காசிக்குச் சென்று காசி விஸ்வனாதரை தரிசித்து விட்டு வந்தார். அங்கிருந்த போது அவர் தினமும் காசி விஸ்வனாதரை தரிசனம் செய்த பின்னரே உணவு அருந்துவார். சில காலம் காசியில் தங்கி விட்டு வந்தவர் நாடு திரும்பினார். திரும்பி வந்த சில நாட்களிலேயே அவருக்கு மீண்டும் காசிக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் போக முடியாத சூழ்நிலையில் இருந்தார்.

மனம் வருந்தி சொக்கநாதர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வந்தவர் கனவில் அன்று இரவு சொக்கநாதர் தோன்றிக் கூறினார் ‘ மன்னனே, நீ ஏன் காசிக்கு செல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறாய்? கவலைப்படாதே. நாளைக் காலை உன் அரண்மனை வாயிலில் எறும்புக் கூட்டத்தை காண்பாய். அவை வரிசையாக செல்லும். அவற்றைக் கொல்லாமல் அவற்றை தொடர்ந்து சென்றால் அவை எங்கு சென்று நிற்குமோ அங்கு நான் காசி விஸ்வனாதராக காட்சி தருவேன். நீ அங்கு ஒரு ஆலயம் எழுப்பி என்னை வழிபடு. காசிக்கு செல்ல முடியாதவர்களுக்கு காசிக்குச் செல்பவர்களுக்கு எப்படி மோட்ஷம் கிடைக்குமோ அதே போலவேதான் இங்கு வந்து என்னை வழிபடுபவர்களுக்கும் அதே அளவிலான மோட்ஷம் கிடைக்கும்’ என்று கூறிவிட்டு மறைந்தார். இதனால்தான் காசிக்கு செல்ல முடியாதவர்கள் தென்காசிக்குச் சென்று மோட்ஷம் பெறலாம் என்ற நம்பிக்கை தோன்றியது.

மறுநாள் காலை விழித்தெழுந்த மன்னன் அரண்மனை வாயிலில் எறும்புக் கூட்டம் ஒன்று சாரை சாரையாக எங்கோ செல்வதைக் கண்டார். கனவில் வந்து சொக்கநாதர் கூறியது போல அவை செல்லும் பாதையில் அவற்றைத் தொடர்ந்து சென்றார். சிற்றாற்றங்கரையில் (நதிக் கரையில்) செண்பக வனத்திற்கு அருகில் சென்ற அந்த எறும்புக் கூட்டம் அங்கிருந்த புற்றில் மறைந்து விட்டது. அந்தப் புற்றைத் தோண்டி எடுத்த பராக்கிரம பாண்டியன் அங்கு ஒரு சுயம்பு லிங்கம் இருந்ததைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். காசி விஸ்வனாதரே தனது பூதகணங்களை எறும்பு உருவில் அனுப்பி தனக்கு தான் மறைந்துள்ள இடத்தைக் காட்டி உள்ளார் என்பதை மன்னன் உணர்ந்தான். இல்லை எனில் அத்தனை நாளும் இல்லாமல் அன்று மட்டும் ஏன் எறும்புக் கூட்டம்  அவர் அரண்மனை வாயிலில் இருந்து ஆலயம் உள்ள இடம்வரை செல்ல வேண்டும்? அதற்குப் பின்னர் அப்படி ஒரு எறும்புக் கூட்டமே அங்கு காணப்படவில்லை. தான் எங்கு எழுந்தருள விருப்பம் கொண்டுள்ளாரோ அங்கு  தன்னே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள தெய்வங்கள் தவறுவதில்லை.

சொக்கநாதர் கனவில் கூறியதைப் போலவே அங்கேயே ஒரு ஆலயம் அமைத்து சிவபெருமானை வழிபடலானார். 1445 ஆம் ஆண்டில் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு ஆறு  ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505 ஆம் ஆண்டில் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

தென்காசியில் அமைந்துள்ள இந்த தென்காசி விஸ்வனாதர் ஆலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலோனோர் தங்கள் குடும்பங்களின் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் காசி விஸ்வநாதரை வணங்கி, ஆசி பெற்றுக் கொண்டே காரியங்களை துவக்குகிறார்கள் என்கிறார்கள். இந்திரன்,  நாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி மற்றும் பல முனிவர்கள்  இங்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபாட்டு சாபங்களை விலக்கிக் கொண்டுள்ளார்கள்.

இங்கு வந்து வழிபட்டால் வாழ்க்கை வளம் பெறும், தொழில் வளம் உயரும், உடல் ஆரோக்கியம் பெருகும், வேலை வாய்ப்பு கைகூடும், தடைபடும் திருமணம் நிறைவேறும், புத்திரபாக்கியம் கிடைக்கும், பூர்வ ஜென்ம பாபங்கள் விலகும், எந்த விதமான தோஷங்கள் இருந்தாலும் அவையும் விலகும் மற்றும் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பதெல்லாம் காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை ஆகும்.

இங்கு சுயம்புவாக வெளிப்பட்ட ஈஸ்வரனுக்கும், அன்னைக்கும் வஸ்திரம் சாத்தி ஆராதிக்கின்றனர். எல்லா தலங்களிலும் தெற்கு நோக்கி இருக்கும் துர்க்கை இங்கு மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.