காளையார் கோவில் என்பது காளீஸ்வரர் கோவில் என்ற பெயரிலிருந்து மருவி வந்ததாகும். சிவகங்கை மாவட்டத் தலைநகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், மற்றும் மதுரையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கானப்பேரூர்  என்று அழைக்கப்பட்ட இடத்தில்  காளையார் கோவில் அமைந்துள்ளது. சிவகங்கையின் புகழ் பெற்ற கோயிலாக காளையார் கோயில் விளங்குகிறது. முன் ஒரு காலத்தில், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டு வந்திருந்தபோது காளையார் கோவில் பெரிய வனப்பகுதியாகவே இருந்துள்ளது. அங்கிருந்த பகுதிகள் பாளயக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளன.

இந்த ஊருக்கு காளையர் கோவில் என்ற பெயர் வந்ததின் காரணமும் உண்டு. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் விருதுநகர் அருகில் உள்ள திருச்சுழி எனும் ஊரில் ஆலய தரிசனம் செய்தப் பின் காளையார் கோயிலுக்கு சென்றார். அப்போது அதன் பெயர் காளையார் கோவில் என்பதாக இல்லை. அந்த ஊருடைய எல்லைக்கு வந்தவுடன் வழி எங்கும் சிவலிங்கமே நிறைந்துள்ளதைக் கண்டவர் சிவலிங்கத்தின் மீது நடந்தா ஊருக்குள் இறைவனைக் காணச் செல்ல வேண்டும் என மனம் வருந்தி திரும்பிச் செல்ல முயன்றபோது எதிர்புறத்தில் இருந்து ஒரு காளை ஓடி வந்ததைக் கண்டார். அங்கு ஓடி வந்த காளை சுந்தரமூர்த்தி நாயனார் நின்றிருந்த இடம் வரை வந்தப் பின் மீண்டும் திரும்பிச் சென்றது. அப்படி அது திரும்பிச் சென்றபோது அது கால் பதித்து நடந்த  இடங்களில் லிங்கம் இல்லையென்றும், ஆகவே அந்த வழியே வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, நாயனார் மகிழ்ச்சியுடன் அந்தக் காளை நடந்து சென்ற வழியில் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்தார். ஆகவேதான் நாயனாருக்கு ஒரு காளை வழிகாட்டி சிவபெருமானின் தரிசனம் பெற அழைத்துச் சென்ற தலம் என்பதால் அந்த ஊரை காளையார் கோவில் எனக் கூறலாயினர்.
காளையார் கோவிலில் காளையார் ஆலயம் எழுந்ததின் பின்னணிக் கதை ஒன்று உண்டு. கைலாயத்தில் ஒருமுறை சிவனும் பார்வதியும் கேலியாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அவள் சிவபெருமானிடம் கேட்டாள் ‘ ஐயனே எல்லாம் வல்ல வல்லமைக் கொண்ட தங்களுக்கு பல்வேறு ரூபங்கள் எதற்கு? ஒரே ஒரு ரூபம் போதாதா’ என்று கேட்டாள். அதற்கு அவர் அவளுக்கு பதில் தருகையில் அவளுடைய பல சந்தேகங்களையும் விளக்கிய பின் கூறினார் ‘தேவி நான் கண் விழித்தால் உலகமும் கண் விழிக்கும், கண்களை மூடினால் உலகமும் அழிந்து விடும், அது போல கண்களை மூடாமல் இருக்கும்வரை உலகம் வாழ்ந்து கொண்டே இருக்கும் ‘ என்று கூற பார்வதிக்கு ஒரு சந்தேகம் வந்தது. இவர் கண்களை மூடினால் உலகம் அழியுமா அதையும் சோதனை செய்து பார்த்தால் என்ன எனத் தோன்ற விளையாட்டுத் தனமாக அவருக்கு பின்னால் சென்று அவர் கண்களை மூடினாள்.
அவ்வளவுதான் உலகமே இயக்கத்தை நிறுத்திக் கொண்டு இருளில் மூழ்கத் துவங்க பயந்து போன பார்வதி மீண்டும் அவர் கண்களை திறந்து விட நின்ற  இயக்கம் மீண்டும் துவங்கியது. அந்த வேளையில் பூமியிலே சண்டாசுரன் எனும் கொடிய அசுரன் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டு தேவர்களையும் துன்புறுத்திக் கொண்டு வந்தான். ஆகவே தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அவனை அழிக்குமாறு வேண்டினார்கள். அவர்கள் குறையை சிவபெருமான் கேட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் இந்த சம்பவமும் நடந்தது. ஆனால் அவள் செயலைக் கண்டு கோபமுற்ற சிவபெருமான் அவளுக்கு சாபம் இட்டார்.  பார்வதி சிவபெருமானிடம் தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சினாள்.

ஆகவே அவர் கண்களை மூடிய பார்வதியின் சாபத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் எனில் அவள் காளி அவதாரம் எடுத்து சண்டாசுரனை அழித்தால் மட்டுமே மீண்டும் தன்னிடம் வந்து சேர முடியும்  என்றார். ஆகவே பார்வதி தேவியும் காளி அவதாரம் எடுத்து சண்டாசூரனுடன் யுத்தம் செய்து  அவனை அழித்தாள். அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமானும் பார்வதி தேவியின் சாபத்தை விலக்கினார். இப்படியாக பார்வதி தேவி சாப விமோசனம் பெற்ற இடமே காளையார் கோவில் ஆகும். சாப விமோசனம் பெற்ற பார்வதியும் அதே இடத்தில் அதி அழகான பெண்ணாக உருமாறி  சிவபெருமானை மீண்டும் மணந்து கொண்டாள். ஆகவே அவளை மணந்து கொண்ட சிவபெருமான் காளியின் அவதார பார்வதியை மணம்  செய்து கொண்டதினால் காளீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.   தங்கத்தைப்  போல மினுமினுத்த அதி அழகான உருவம் பெற்ற பார்வதியும் ஸ்வர்ண சுந்தரி அதாவது அதி அழகானவள் என்ற பெயரில் சிவபெருமானை மணந்து கொண்டாள்.

பின்னர் அங்கேயே காளீஸ்வரர் மற்றும் ஸ்வர்ண சுந்தரிக்கு பாண்டிய மன்னன் ஒருவரால் ஆலயம் எழுப்பப்பட அந்த ஆலயம் ஸ்வர்ண காளீஸ்வரர் ஆலயம் என்றாயிற்று. ஆனால் அந்த ஆலயம் பல போர்களுக்கு இடையே பழுதடைந்து போனதினால் சிவகங்கை சீமையை சேர்ந்த அரசர்களான சின்ன மருது மற்றும் பெரிய மருது என்பவர்கள் ஆலயத்தில் இருந்த மூன்று சன்னதிகளிலும் மண்டபங்களைக் கட்டி ஆலயத்தை விரிவாக்கினார்கள்.

ஆங்கிலேயர் பல இடங்களில் இருந்த பாளையக்காரர்களையும் அழித்து நாடுகளைக் கைப்பற்றி வந்தபோது அவர்களால் சின்ன மருது மற்றும் பெரிய மருது இருவரையும் யுத்தத்தில் தோற்கடிக்க முடியாமல் திணறி வஞ்சகமாக அவர்கள் நாட்டை கைப்பற்றினார்கள். ஆனால் அவர்கள் கையில் சிக்காமல் பெரிய மருது தலைமறைவானார். பெரிய மருது உயிருடன் உள்ளவரை தம்மை மீண்டும் அந்த பூமியை நிம்மதியாக ஆள விடமாட்டார் என பயந்து போன ஆங்கிலேய  அரசு அவரைத் தேடியும் அவர் எங்கும் கிடைக்காததினால் அவர் சரண் அடையாவிடில் அந்த ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கி விடுவோம் என்று தண்டோரா போட்டு நாடகம் நடத்த, தன்னால் காளீஸ்வரர் ஆலயத்துக்கு எந்த பங்கமும் விளைந்து விடக் கூடாது எனக் கருதிய பெரிய மருது ஆங்கிலேய அரசர்களிடம் சரணடைய வேண்டி இருந்தது. அவரை அவர்கள் உடனடியாக தூக்கில் இட்டார்கள். ஆனால் அவர் ஆசைப்பட்டபடி அவரது சமாதியை ஆலயத்துக்கு முன்னால்  அமைத்தார்கள்.

இந்த ஆலயத்தின் எதிரில் பெரிய தெப்பக் குளமும்  உள்ளது. அதை உருவாக்கியது தேவேந்திரனின் யானையான ஐராவதம் என்பது புராணக் கதை ஆகும். ஒருமுறை சிவபெருமானின் வாகனமான நந்தீஸ்வரரின் வாலை  இழுத்து அவரை தொந்தரவு செய்த ஐராவதத்தை பூமியிலே சென்று தெய்வ யானையாக இல்லாமல் காட்டு யானையாக பிறந்து ஆயிரம் வருடங்கள் அவதிப்பட வேண்டும் என நந்தி தேவர் சாபமிட காளையார் கோவில் ஊர் உள்ள இடத்துக்கு வந்த ஐராவதம் காட்டு யானையாக மாறியது.

 

தனது கொம்புகளாலேயே குத்திக் குத்தி ஒரு குளத்தை  உருவாக்கிய ஐராவதம் அந்த குளத்தில்  இருந்து தினமும் நீரை எடுத்து வந்து சிவபெருமானை வணங்கித் துதித்து சாப விமோசனம் அடைந்தது.