–சாந்திப்பிரியா
7

103)  முதல் நாள் முதல் ஒன்பது   நாள் வரையிலான சடங்குகள் 

சஞ்சயனம்:-  தகனத்தைத் தொடர்வது சஞ்சயனம் என்பது. சஞ்சயனம் என்பது இறந்தவர்களின் எரிந்து போன சரீரத்தின் எலும்பு பாகங்களை  எடுத்து வந்து அதை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிநிலையில் சென்று கரைப்பது. மின்சார அடுப்பில் உடலை தகனம்  செய்தால் இதை முதல் நாளிலேயே செய்து விடுவார்கள். ஆனால் மயானத்தில் விறகு அடுக்கி விறகை எரித்து தகனம் செய்தால் அதை இரண்டாம் நாள் அன்று  செய்வார்கள் (இதன் தாத்பர்யத்தை பாகம் 4, பத்தி 59 மற்றும் பாகம் -5, பத்தி 65ல் ஏற்கனவே விளக்கி உள்ளேன்) .

a) கல் ஊன்றுதல் :- சஞ்சயனம் முடிந்ததும் குளித்து விட்டு ஈர வேஷ்டியுடன்  ஆசமனம் பண்ணிய பின்   தர்ப்பைப் புல்லை மோதிரம்  போன்று பவித்திரம் செய்து அதை அணிந்து கொண்டு, பத்து நாட்களும் இறந்தவர் வாழ்ந்திருந்த  இடத்துக்கே சென்றுவிட்டு திரும்பும் ஜீவனை சாஸ்திரிகள் மந்திர சக்திகள் மூலம் அங்கேயே அவர்களால் பூமியில் புதைக்கப்படும் ஒரு கல்லில் செலுத்தி அந்தக் கல்லின் முன்னால் தினமும் சில  சடங்குகளை செய்வார்கள் (இதன் தாத்பர்யத்தையும் பாகம்-4,  பத்தி 61 & 62 ல், மற்றும்  பாகம்-6 பத்தி  84, 91, 91ல் விளக்கி உள்ளேன் ).

b) தினமும் எள்ளும் தண்ணீரும் விட்டு பிண்டம் போடுதல்:-  அந்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும் தர்பை மூலம் எள்ளு கலந்த தண்ணீரை ஊற்றியும், அங்கேயே சமைத்த வெள்ளை சாதத்தையும் (அதை பிண்டம் என்பார்கள்) போட்டு அந்தக் கல்லையே உயிருடனான ஜீவாத்மாவாக கருதி அதை ஜீவித்து இருக்க வைப்பார்கள்.  அவைகளையே வாஸ உதகம், தில உதகம், பிண்டம் போடுதல் என்பார்கள்.  பிண்டம் போடுவதை இறந்தவரது மகள்கள் செய்ய வேண்டும் என்பது  விதியாகும். அப்படி மகள் இல்லை என்றால் வீட்டில் உள்ள மருமகள் செய்ய வேண்டும். அதற்கான பிண்டத்தை தயாரிக்க அவள் அந்தக் கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடத்துக்கே சென்று, அங்கு அடுப்பு மூட்டி சாதம் வைக்க வேண்டும். சாதம் வெந்ததும், பிண்டத்தைப் பிடித்துப் போட வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் அவள் ஈரப் புடவையுடனேயே  செய்ய வேண்டும் என்பது நியமனம். அது ஏன்?

c) இதற்கும் ஓரளவுக்கு விஞ்ஞான அடிப்படைக் காரணம் உள்ளது. மன வேதனையில், துக்கத்தின் விளைவாக ரத்தம் கொதிப்படைந்து உடல் சூடாகவே இருக்கும்.  கர்மாக்களை செய்யும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஈரத்துடன் இருக்கையில் உடலின் சூடு குறையும், எண்ண அலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதினால் இதை ஒரு விதியாக வைத்து உள்ளார்கள்.

d) மேலும் பண்டை காலங்களில் நதிக்கரையில் அல்லது வேறு நீர் நிலைகளில் கர்மாக்களை செய்வார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள நதியில் குளித்து விட்டு  அங்கு காரியங்களை செய்வார்கள். ஆகவே நதி அல்லது நீர் நிலைகளில் குளித்தப் பின் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மாற்றுத் துணியையும் நனைத்து விட்டு  காய வைத்து அதை உடுத்திக் கொண்டு காரியத்தை துவக்க   கால தாமதம் ஏற்படும்.  அந்த நேரத்தில் இன்னும் துணி காயவில்லையே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டு மனமும் காரியத்தில் நிறைவாக ஈடுபடாமல் உடைகள் மீது கவனத்தை வைத்திருக்கும். வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை  நனைக்காமல் மாற்றிக் கொள்வது  கூடாது. ஏன் என்றால் தீட்டு வீட்டில் இருந்து எடுத்து வந்த துணிகளை உடுத்திக் கொண்டு தீட்டோடு காரியங்களை செய்யக் கூடாது.  உடைகளை மாற்றிக் கொள்ள மறைவிடங்களும் இல்லாத காலம் அது. கர்மாக்களை செய்யும்போது மனக்கட்டுப்பாடு தேவை. ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டே ஈரப்புடவையுடன் சடங்கை செய்ய வேண்டும் என்ற விதி வைக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்திலேயே   இவற்றை எல்லாம் எத்தனை ஆழமாக சிந்தித்து விதியாக வைத்துள்ளார்கள் என்பதைக் காணும்போது வியப்பாகவே உள்ளது.

e) பிண்டம் போடும் இடமே மந்திர சக்திகளினால் ஆன புனிதமான இடமாக, தெய்வீக பூமியாக இருக்கும். ஆகவேதான் அங்கு தர்பை புல்லையும் போட்டு வைத்து இருப்பார்கள். தர்பையைப் பயன்படுத்தாத சடங்குகளே கிடையாது (இதன் தாத்பர்யத்தையும் பாகம்-4, பத்தி 61 & 62 ல் மற்றும்  பாகம்-6 பத்தி 84, 87 மற்றும் 92 ல் விளக்கி உள்ளேன்).

f) ஆகவே இப்படியாக  தர்பை மூலம் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஆத்மா உண்டதும் அங்குள்ள பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கும்  ஏற்ப ஆகாரமாக அவற்றை மாற்றி தேவலோகத்தில் உள்ள அவர்களுக்கும் கொண்டு சென்று கொடுத்து அவர்களை திருப்தி அடைய வைக்கிறது.  இவை அனைத்தும் கண்களுக்கு தெரிவதில்லை, ஆனால் மானசீகமாக உணர வேண்டியவை ஆகும்.

g) இந்த சடங்குகளுக்கு எள்ளையும் தர்பைப் புல்லையும் எதற்காக பயன்படுத்துகிறார்கள்? வேறு தான்யங்களை ஏன் பயன்படுத்துவது இல்லை என்ற கேள்வி  எழலாம்.

h) எள் என்பது திருமாலின் வியர்வையிலிருந்து தோன்றியதாக கருதப்படுவதினால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். எள்ளிலும்  கருப்பு எள், வெள்ளை எள் இரண்டு வகை உண்டு. எந்த எள்ளை பயன்படுத்தினாலும் பலன் ஒன்றே என்றாலும் சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் அது பிதுர் தேவர்களை அதிக சந்தோஷப்படுத்தும் என்பார்கள். கருப்பு எள் வராஹ மூர்த்தியிடம் இருந்து தோன்றியதாக கூறுவார்கள். அதனால்தான் எள்ளை தண்ணீருடன் கலந்து சமர்பிக்கையில், பித்ருக்களின் பசியைப் போக்கி திருமால்  வாழும் இடமான வைகுண்டலோகத்துக்கு இறந்தவர்களது ஆத்மாக்களை அனுப்பி வைப்பதாக ஐதீகம் உள்ளது  என்று  பண்டிதர்கள் கூறுவார்கள்.

i) அதைப் போன்ற தெய்வீக மகிமை பெற்றதே தர்பைப் புல்லும் ஆகும். தர்ப்பைப் புல் என்பது முதலில் ஆகாயத்தில் தோன்றியது என்றும் அந்த தர்பைப் புல்லின் அடிப் பகுதியில்  பிரஹ்மாவும், நடுப்பகுதியில் திருமாலும் நுனியில் சிவபெருமானும் வசிப்பதாகவும் அதுவே பரப்பிரும்மனின் வடிவம் என்றும் புராண ஐதீகம் உண்டு.  இதனால் தர்பை உள்ள இடத்தில் இருந்து தீய சக்திகள் ஓடி விடும்.  இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய சக்திகள் அணுக முடியாமல் இருக்க தர்பை மீது சவத்தை வைப்பார்கள் என்பது இதனாலும் வைக்கப்பட்டு உள்ள விதி முறை ஆகும். தர்பையில் காந்த  சக்தி  என்பதினால் அது அதை கையில் வைத்துள்ளவர்களுக்கு பிராண சக்தியைத் தருகிறது. அதனால்தான் நாம் சடங்குகள் செய்யும்போது இழக்கும் பிராண சக்தியை அதிகரிக்கவும் அதை பயன்படுத்துகிறோம்.  தர்பையின் மேன்மையை குறித்து மாபெரும் முனிவர்களான மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வியாசர், பரத்வாஜர், யாக்ஞவல்க்யர்,  ஆபஸ்தம்பர் போன்றவர்கள் நிறையவே கூறி உள்ளார்கள். வேதங்களிலும் தர்பையின் மகிமையைக் கூறி உள்ளார்கள். அந்த முனிவர்கள் தர்பைப் புல்லை சமுஸ்கிருத மொழியில் குசம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

j) சரீரத்தை விட்டு வெளியேறிய ஆத்மாவானது தகனத்துக்குப் பின்னர் அடுத்த ஒன்பது நாட்களும்  ஆத்ம சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. அதனால்தான் அந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றை அடக்குவதற்காக ஒன்பது நாட்களும் எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் செய்து , பிண்டத்தையும் போட்டு சடங்கு செய்கிறார்கள். அப்போது அந்த ஆத்மா பிரேத உடலைப் பெறுகிறது (இதன் தாத்பர்யத்தையும் பாகம்-6, பத்தி  86 & 87 ல் விளக்கி உள்ளேன்).

k) ஜீவனுக்கு சரீரமே இல்லை எனும்போது அவை எப்படி பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும்?  இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஜீவ அணுக்கள் உண்டு. காற்றில் உள்ள அதன் ஜீவ அணுக்கள் நம்மை உரசிக் கொண்டு செல்லும்போது அதை காற்று என்று உணர முடியுமே தவிர அதை வாசனை என்று உணர முடியாது. ஏன் என்றால் அந்த ஜீவ அணுவின் தன்மை அது.  அதைப் போலத்தான் ஒலி , வாசனை, ஒளி, பார்வை என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஜீவ அணு உள்ளது. அதன் மூலமே நம்மால் அவற்றின் தன்மைகளை உணர முடிகிறது. இப்படியாக உள்ள நிலையில் பிரேத ஆத்மாவாக உள்ள ஜீவன் பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் எப்படி குடிக்க முடியும் என்ற கேள்வி எழத் தேவையே இல்லை.

l) மனித உடலுக்குள் உடல் சார்ந்த (Physical) உணவு புகுந்து சென்று வயிற்றில் அமர்ந்ததும்தான் பசி அடங்கும், தண்ணீர் தாகத்தை அடக்கும்.  ஆனால் பிரேத உடலுக்கு பசியை அடக்கவும், தாகத்தைத் தீர்க்கவும் உடல் சார்ந்த பொருள் தேவை இல்லை. அதனால் உடல் சார்ந்த பொருளை உண்ணவோ குடிக்கவோ முடியாது. ஆனால் அதே சமயத்தில் அந்த உடல் சார்ந்த பொருட்களான பிண்டம் மற்றும் எள்ளும் தண்ணீரும் வெளிப்படுத்தும், நமது கண்களுக்கு தெரியாத ஜீவ அணுக்களை அவை ஸ்வாசித்து அவற்றை தன்னுள் கிரகித்துக் கொள்ளும் நிலையில் பிரேத உடலின் உணர்வுகள் திருத்தி அடைகின்றன.  மனித உடலுக்கு உடல் சார்ந்த பொருள் தேவை, பிரேத உடலுக்கு உடல் சார்ந்த பொருட்களின் ஜீவ அணுக்களின் ஸ்பரிசம் மட்டுமே தேவை.  இதுவே இந்த சடங்கின் தாத்பர்யம் ஆகும்.

m) இவை அனைத்தையும் நித்ய  விதி என்பார்கள். கல் ஊன்றிய நாள் முதல் அனுதினமும் வாஸோதகம், திலோதகம் பிண்ட ப்ரதானம், ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம், நவச்ராத்தம் போன்ற  காரியங்கள் அனைத்தும் கர்த்தாக்களால் செய்யப்படுகின்றன. இந்த காரியங்களை அடுத்த நாளே துவக்க முடியாமல் போய்விட்டால் அவை அனைத்தையும் 3,5,7, அல்லது 9 தாவது நாளில் துவக்கி அதற்கு முன் விட்டுப் போன அத்தனை நாட்களின் கர்மாக்களையும் சேர்த்து ஒரே நாளில் செய்து முடிப்பார்கள்.

104)  பத்தாவது நாள் சடங்கு : தசாஹம் :-

பத்தாம் நாள் அன்று பண்ண வேண்டிய கர்மாக்கள் : பங்காளி தர்ப்பணம்(குழி தர்ப்பணம் என்பார்கள்), நித்தியவிதி, ப்ரபூத பலி, பாஷாண உத்தாபனம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம், சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடல் போன்றவை ஆகும்.
a) ப்ரபூத பலி என்பது  சாதம், அடை, உருண்டைகள் மற்றும் அகத்திக் கீரை போன்றவற்றை ஜீவாத்மாவாக உள்ள ஊன்றிய கல் முன்னால் கொட்டுவதாகும்.  இந்த சடங்கில் தரப்படும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டு இருக்கலாம்.

b) இறந்தவருக்கு மனைவி இருந்து அவர் உயிருடன் இருந்தால் அவளும் ப்ரபூத பலி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஒரு புதுப்புடவை வாங்கி அதை அவள் மீது சகோதரர்கள் போட வேண்டும். கையில் தரக் கூடாது. அதை புடவைப் போடுவது என்பார்கள். அதற்குப் பிறகு அவள் அப்படிப்பட்ட  பட்டுப் புடவைகளை அணியாகக் கூடாது என்பதற்காக கடைசியாக அவளுடைய வீட்டினரால் சம்பிரதாயமாக தரப்படுவதாம் அந்த புடவை. ஆனால் இந்த சடங்கு  ஒரு ஆன்மீக போதனைக்காகவே வைக்கப்பட்டு உள்ள சற்றே மூடத்தனமாக உள்ள இந்த சடங்கிற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. இந்த சடங்கிற்குப் பின் கணவனை இழந்த பெண்ணிற்கு என்ன நிலைமை ஏற்படுகிறது தெரியுமா?

c) பண்டைக் காலத்தில் கணவரை இழந்த பெண்கள் அன்று முதல் விதவையாகக் கருதப்பட்டதினால் அவர்கள் அன்றைய தினம் தாலியை அறுத்துக் கொண்டு, தலைமுடியை வழித்துக் கொண்டு, வெள்ளைப்  புடவையை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த வண்ணப் புடவைகளையோ, நகைகளையோ அணிந்து கொள்ளக் கூடாது என்றும், விதவையானப் பின் வெளியில் செல்லக் கூடாது, விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது  என்றெல்லாம் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள்.  அதற்கு அடிப்படைக் காரணம்  விதவைகள் ஆன பெண்கள் உலக சுக போகங்களில் மூழ்கி  காம இச்சை கொண்டு அலையக் கூடாது, தமது இறுதி வாழ்நாள்வரை ஆன்மீகத்தில் இருந்து கொண்டு பக்தி மார்கத்தில் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சடங்கு முறை ஆகும். ஆனால் தற்காலத்தில் பல குடும்பங்களில்  இந்த சடங்குமுறை  இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் விதவையான பெண்கள் தமது தலைமுடியை வழித்துக் கொள்வதில்லை, வெள்ளைப் புடவைகளை மட்டும் அணிந்து கொள்வதில்லை, நகைகளையும் அணிகிறார்கள், ஆடம்பரமாகவும் இருக்கிறார்கள். அனைத்து விழாக்களிலும் கலந்தும் கொள்கிறார்கள். ஆகவே இந்த சடங்கு தார்மீக அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

d) பத்தாம் நாள் சடங்கு அன்று   இறந்தவரின்  பங்காளிகள் இருந்தால் அவர்கள் அங்கு வந்து பத்து தினங்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டும். பண்டைக் காலத்தில் இறந்தவர்களின் பங்காளிகள் நதி மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வார்கள். அந்த நீர் நிலையில் இறந்தவர்களது சாம்பலும் கரைக்கப்படும். அப்படி கரைக்கப்படும் சாம்பலானது அந்த நீர் நிலையில் கரைந்து விடும்போது இறந்து போன அந்த ஜீவனின் அணுக்களும் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த நீரில் பயணித்துக் கொண்டு இருக்கும். இந்த நிலையில் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம்  செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்றும்போது அந்த தர்ப்பண நீரும் அந்த ஜீவனின் அணுக்களை சென்றடைவதால் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த ஜீவனின் அணுக்கள் மூலம் அதை ஆவாஹிக்கும் ஜீவன்களின் தாகம் அடங்கும் என்பதான ஐதீகம் உண்டு. அதனால்தான் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில்தான் இறந்தவர்களுக்கு தர்ப்பணம்  செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்ற வேண்டும் என்பது சாஸ்திர விதியாக இருந்தது.

e) ஆனால் அனைத்து இடங்களிலும் நதிகளும் நீர் நிலைகளும் இருப்பது இல்லை. அதனால்தான் பண்டை காலத்திலும் கூட நதிக்கரை, கடற்கரை இல்லாத பல இடங்களில் பூமியிலே சின்ன குழியை தோண்டி பூமாதேவியிடம் அந்தக் குழியிலே ஊற்றப்படும் தர்ப்பண நீரை அவள் உடலுக்குள் (பூமிக்குள்) ஓடும் நதியுடன் சென்று கலந்து விட வேண்டும் என வேண்டிக் கொண்டு செய்யப்படும் சடங்காக அதை வைத்திருந்தார்கள். அதன் விளைவாக பண்டை காலத்திலும் நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குழி  தர்ப்பணம் செய்யலாம் என விதி அமைத்தார்கள்.

குழி  தர்பணம்

f) குழி தர்ப்பணம் என்பது என்ன? கர்மா நடைபெறும் இடத்தில் வந்து தர்ப்பணம் செய்யும் பங்காளிகள் அந்த இடத்தில் கொட்டப்பட்ட மண் தரையில் சின்ன குழி போல கையால் தோண்டி வைத்து அந்த குழிக்குள் எள்ளும் தண்ணீரும் கலந்து விடுவார்கள். கர்மா நடைபெறும்  இடத்தில்  குழி செய்து அதில் எள்ளும் தண்ணீரும் ஊற்றியதும்   அங்கேயே அது  பூமியிலே ஊடுருவி அதே பூமிக்குள் இருந்து வெளிவரும் நதி, கடல், குளம், நீர் நிலை அனைத்திலும் கலந்து  விடுவதாகவும், ஆகவே அந்த ஜீவனின் அணுக்கள் நீர் நிலை மூலம் எங்கு பாய்ந்து சென்று இருந்தாலும் அங்குள்ள அந்த ஜீவனின் அணுக்கள் மூலம் இறந்தவரது ஜீவனின் தாகத்தை தர்ப்பண நீர் தீர்க்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

g) அப்படி என்றால் அந்த நீரில் உள்ள மற்ற ஜீவன்களின் அணுக்கள் அந்த தர்ப்பண  நீரை ஆவாஹிக்காதா  என்றால், அது முடியாத ஒன்று என்பதே ஆன்மீக ரீதியிலான பதில் ஆகும்.  காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட ஜீவ அணுக்கள்  அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும் என்பது விசித்திரமான தெய்வ நியதியாம்.

h) தர்ப்பணத்தில் தண்ணீர் ஊற்றும்போது அதை வலது கை ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் இடுக்கு வழியே ஊற்றுகிறோம். ஒவ்வொருவரது கையிலும் வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே உள்ள  இடைப் பகுதியில் ஓடும்  ரேகைகளை பொதுவாக பித்ரு பூம்ய  ரேகைகள் என்பார்கள். பங்காளிகள் மந்திரங்களை ஓதி ஊற்றும்  தர்ப்பண நீரானது  அவர்களது கைகளில்  உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியே  ஓடிச் செல்லும்போது அந்த கைகளின் ஸ்பரிசங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அது பித்ருக்களுக்கான நீராக மாறி விடுமாம்.  அதனால்தான் ஜீவ அணுக்கள் அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும்  என்ற தெய்வ நியதி  நியாயமாகவே உள்ளது.

 ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளில் 
உள்ள ரேகைகள் மீது இருந்து வெளியேறும் 
பித்ரு  நீரின் ஸ்பரிசம் வேறுபட்டு இருக்கும் 
என்பதை விளக்கும் படம் 

i)  அதன்  பின் அனைவரும் அங்கேயே குளித்து விட்டு ஆனந்த ஹோமத்தில் பங்கேற்பார்கள்.

j)  அதை செய்வதற்கு முன்னால் பத்து நாட்களுக்கு  முன் ஆவாஹனம் செய்து பூமியிலே ஊன்றிய கல்லை மீண்டும் யதாஸ்தானம் செய்து வெளியில் எடுத்து விடுவார்கள். அதாவது அங்கு  வாசம் செய்து கொண்டிருந்த ஜீவனை வெளியில் எடுத்து விடுவார்கள் என்பதான ஐதீகம் ஆகும்.

k) பத்தாவது தினத்தன்று யதாஸ்தானம் செய்து வெளியில் எடுக்கப்பட்ட ஆத்மாவானது கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் எடுக்குமாம். அதன் பின்னரே சூட்சும சரீரம் எடுத்த அந்த ஆத்மாவானது யமதூதர்களுடன் யமலோகத்துக்கு பயணத்தை துவக்குமாம். அந்த பயணத்துக்கு வழிவகுக்கும்  நிலையை ஏற்படுத்தவே யதாஸ்தானம் எனும்  சடங்கு செய்து  அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம். அங்கிருந்து பயணிக்கும் ஆத்மாவின் கதை கிரேக்கிய தினத்தில் கூறப்படும். அதை  பாகத்தில் விளக்கி உள்ளேன்.

l) கடைசியாக சாந்தி ஹோமம் செய்தபின்  பூர்ணாஹூர்த்தி காட்டிவிட்டு ப்ரபூத பலி – அரிசியினால் ஆன சாத உருண்டை, கீரை மற்றும் அப்பம் போன்றவற்றை- அங்கு கல்லின் முன் போடுவார்கள். ஆனால் இந்த வரிசைகிரமம் சில குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும் என்பதினால் அதை பண்டிதர்கள் கூறுவது போல செய்து முடிக்க வேண்டும்.

m) பத்தாம் நாளன்று முதல் நாள் அன்று இரவு உப்பில்லாமல் சமைக்கப்பட்டு அங்கு எடுத்து வந்துள்ள உணவை இறந்தவரின் பங்காளிகள் ‘உப்பில்லாத சாப்பாடு’ எனும் பெயரில் போடுவார்கள். அந்த உப்பில்லாத உணவை பெற்றுக் கொள்ளும் ஜீவனானது, ஐயோ இந்த உப்பில்லாத சாதத்தை உண்பதை விட வேறெங்காவது போய்  விடலாம் என்று உலக பந்தத்தை அறுத்துக் கொண்டு செல்லும்   மன நிலையை அதற்கு அளிக்கும் என்று இந்த சடங்கை வைத்து உள்ளார்கள்.

n) அனைத்தும் முடிந்தப் பின் வந்துள்ள உறவினர் அனைவருக்கும் உணவு அளிப்பார்கள்.  அன்று தீட்டு விலகி விட்டதாக ஐதீகம் உண்டு. அன்று சாரு சம்பாவனை என்பதையும் செய்வார்கள். அப்பம் மற்றும் பொறி போடுவார்கள். அன்று குடும்பத்தினருக்கு விலகி விட்டதாக கருதப்படும் தீட்டு மறுநாள் மீண்டும் வந்து சேரும் என்பார்கள்.
105)  11 ஆம்  நாள் கர்மாக்கள் :-  இறந்த 11வது நாளில் செய்வது ஏகோதிஷ்டம் என்று பெயர் பெறும். அன்று செய்யப்படும் கர்மாக்கள்:-

a) யஜ்யோபவீத தாரணம் புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், அவ்ருத்தாத்ய மாஸிகம்  போன்றவை ஆகும்.

b) பதினோராம் நாளன்று நடைபெறும் இன்னொரு முக்கியமான சடங்கு ‘ஒத்தன் சாப்பாடு’ என்பதாகும். அன்றைய தினம் ஒத்தன் எனப்படும் ஒரு புரோகிதரை அழைத்து வந்து அவரையே உப்பில்லாத உணவை அங்கேயே தயார் செய்து அதையே  உண்டு விட்டு செல்லுமாறு கூறுவார்கள். மீதி இருந்தால் அதை அவர் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டுமாம்.  அவருக்கு  தட்ஷணையும் உண்டு. அவர் போகும்போது அவரை யாரும் பார்க்கக் கூடாதாம். இதுவும் ஒரு முக்கியமான சடங்காம். அப்படி செல்பவரையே பிரேத மனிதர் என்பார்கள்.

106) 12 ஆம்  நாள் கர்மாக்கள் :-  அன்றைய தினம் செய்ய வேண்டிய கர்மாக்கள் புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம் போன்றவை ஆகும்.

a)  11-ஆம் நாள் வரை ப்ரேத ரூபத்தில் இருந்த ஆத்மாவானது பன்னிரண்டாம் நாளன்று பித்ருக்களின் ரூபத்தை அடைந்து அவர்களுக்கு முன்னால் மரணம் அடைத்துவிட்ட பித்ருக்களுடன் ஒன்று சேர்வதாக ஐதீகம் உண்டு. அன்றைய தினத்தன்று சவுண்டி சாப்பாடு என்ற சடங்கும் நடைபெறும்.   அந்த சவுண்டிக்கு வீட்டினர் சமைத்த உணவைப் போடுவார்கள். ஆனால் அவர் போகும் போதும் அவரை எவரும் பார்க்கக் கூடாதாம்.

b)  இதில் முக்கியமான கர்மா ஸபிண்டீகரணம் என்பதாகும். இந்த கர்மா மூலம் இறந்தவருக்கு முன் மாண்ட அவருடைய மூன்று தலைமுறையினரின் பிண்டத்துடன் இறந்தவரின் பிண்டத்தையும் ஒன்று சேர்ப்பது சபிண்டீகரணம்.

 சபிண்டீகரணம்

ஆனால் பிரேதத்துவம் பெற்றதும் அந்த ஆத்மா அடுத்த பிறவி எடுக்கும் என்பதல்ல அதன் அர்த்தம். அந்த பிரேத ஆத்மாக்கள் யமலோகத்துக்கும் போகாமல், சொர்க்க லோகத்துக்கும் போகாமல் யமதர்மனின் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு கிடைக்க உள்ள  தண்டனை மற்றும் பிரதிபலன்களை எதிர்பார்த்தவண்ணம் யமலோகத்தில் உள்ள யமராஜனிடம் சரணடைய பயணித்துக் கொண்டு  இருப்பார்கள். அதன் பயணம் முடிவுற  ஒரு வருட காலம் ஆகுமாம்.

c) ஆகவேதான் அந்த ஜீவன்கள்  நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக அந்த பித்ரு ஆத்மாக்களுக்கு அந்த ஒரு வருட காலத்துக்குள் செய்ய வேண்டிய பதினாறு ஸ்ரார்தங்களை  ஒரே நாளில் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு முக்கியமான காரணமும் உள்ளது. ஒரு வருடத்தில் அந்தந்த குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய ஸ்ரார்தத்தை ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால் கர்த்தாவினால் செய்ய முடியாது போய் விட்டால், அந்த பாவம் கர்மாவை செய்பவருக்கு போகாது. மாறாக எந்த ஜீவனுக்காக அந்த ஸ்ரார்தம் செய்யப்படுமோ அதற்கு போய் சேரும். அதனால் அது படும் வேதனையின் விளைவாக, அந்த ஜீவனின் குடும்பத்தினர் மன வேதனைகளை அடைவார்கள் என்பது தெய்வ நியதியாம். அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே  ஒரே நாளில் அந்த பதினாறு ஸ்ரார்தங்களை முறையாக, நியதிப்படி செய்வதின் மூலம் யமதர்மதேவர் அந்த ஜீவன்களுக்கு கிடைக்க உள்ள தண்டனைகளின் கடுமைகளைக் குறைப்பார் என்பது நம்பிக்கை.

d) பதினாறு ஸ்ரார்தங்களை ஒரே நாளில் செய்ய முடியாது என்பதினால்தான் பன்னிரண்டாம் நாளன்று பதினாறு அந்தணர்களுக்கு அரிசி, வாழைக்காய் போன்றவற்றுடன் தட்ஷணயையும் சேர்த்து கொடுத்து அந்த குறிப்பிட்ட கர்மாவை செய்து முடிக்கிறார்கள். இதை சோடசம் என்று கூறுவார்கள். சோடசம் என்றால் பதினாறு என்பது பொருள் ஆகும்.
e) இறந்தவரை நேரடியாக பித்ருவாக பாவித்து முதன்முதலாகச் செய்யப்படும் ஸ்ரார்தமான ஸோதகும்பம் எனப்படும் சடங்கையும் பன்னிரண்டாம் நாள் செய்து ஒரு பிராமணருக்கு போஜனம் செய்விப்பார்கள்.
107) 12 ஆம் நாள் கர்மாக்கள்:- பதிமூன்றாம் நாளன்று வீட்டின் அனைவருக்கும் உள்ள தீட்டு காலம் முடிந்து விடும். குடும்பத்தினர் குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள்.  அன்று ஹோமம் செய்து அந்த ஹோம ஜலத்தை வீடு முழுவதும் தெளித்து வீட்டையும் சுத்தமாக்குவார்கள். இதை சுபஸ்வீகாரம் என்று கூறுவார்கள். சுபஸ்வீகாரத்தின்  அன்று  மாலை சாஸ்திரிகள் இறந்தவரின் ஆத்மா பயணிக்கும் கதையைக் கூறுவார். அவர்கள் கூறுவது கருட புராணத்தின் அடிப்படையில் அமைந்துள்ள கதையாகவே இருக்கும். கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ள அந்தக் கதை என்ன ?
 …………..தொடரும்