–சாந்திப்பிரியா —

3

 

25)  ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக சில சடங்குகள் (நடைமுறைகள்) செய்யப்படுகின்றன. இதற்கு இறுதிச் சடங்கு என்று பெயர். இவை பெரும்பான்மையாக அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் கொள்கைகளுக்கும் அவற்றின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக உள்ளது.

25.1) ஒருவர் மரணம் அடைந்த பின் அவருக்கு அடுத்த பதிமூன்று நாட்களில் செய்ய வேண்டிய கர்மா அல்லது நியமங்களை எப்படி செய்ய வேண்டுமென்று சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். சாஸ்திரங்களில் மரணம் அடைந்தவரின் உடலை தஹனம் செய்வது என்பதை ‘அந்த்யேஷ்டி’ அதாவது ‘இறுதி  வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்வாக கூறி உள்ளார்கள். யாகங்களை வேள்வி என்பார்கள். அது போலவேதான் ஒரு புனித ஜீவாத்மா குடி இருந்த பதினாறு தெய்வீக ஆற்றல்களை கொண்ட  உடல் எனும் ஜடப்பொருளும் தெய்வீகமானது என்பதினால்,  அந்த உடலை எரிப்பதும் ஒரு புனிதமான வேள்வி, அதாவது யாகத் தீயை மூட்டுவது  போன்றதுதான், என்பதாகவே சாஸ்திரங்கள் கூறி உள்ளன.  இதை  குறித்து காஞ்சி பரமாச்சார்யா அழகாக கூறியதை  கேளுங்கள்:

  • ”கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது. ‘ஸம்ஸ்காரம்’ என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’ பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’). உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹூதி செய்து கொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்த பிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி [சிதைத் தீ] யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் பிரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது”.

26) இப்படிப்பட்ட வாழ்க்கையில் மரணம் அடைந்துவிட்ட ஒருவருக்கு  மற்றவர்கள் இறுதியாக செய்கிற புனிதமான அந்த்யேஷ்டி எனும் புனிதமான யாகம்தான் பிரேத ஸம்ஸ்காரமாகும். அந்த பிரேத சம்ஸ்காரம் செய்தால்தான் அந்த உடலின் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்  இருக்கின்ற தெய்வாம்சங்கள்  அதனதன் மூலஸ்தானத்துக்கு திரும்பப் போகும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கின்றது சாஸ்திரம். தனது வாழ்நாளில் பல தீமைகளையும் ஒருவன் செய்திருந்தாலும், அவன் தன்னுடைய வாழ்நாளில்,  தன்னுடைய சரீரத்தால் சில  நன்மைகளையாவது  செய்திருப்பான் என்பதினால் மரணம் அடைந்து விட்ட அவனது  சரீரத்துக்கு அவன் செய்திருந்த சில நன்மைகளுக்காவது மரியாதை  செய்யத்தான் வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனிடமே அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை உள்ளது என்பதினால்தான் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் என்ன சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எதோ ஒரு வகையில் இறந்தவர்களது சடலத்தை மரியாதையுடன் சமய சடங்காகவே ஸம்ஸ்காரம் செய்து வருகின்றார்கள்.

27) பிரேத ஸம்ஸ்காரத்தில் செய்யப்படும்  சில சடங்குகள்  விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளவையாகவும் காணப்படுகின்றன. அவை பின்னர் வரும் பத்திகளில் காணப்படும் சில சடங்கு முறைகளில்  விளக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ளவை நன்னெறி முறைகளை போதிப்பவை, ஒவ்வொருவரும் ஒழுங்கு முறையுடன் வாழ வேண்டும், பக்தி  செலுத்தியவாறு இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஆன்மீக கண்ணோட்டத்துடன் போதிக்கப்பட்டவை.  சடங்குகளில் கூறப்பட்டு உள்ள அனைத்திற்கும் நம்மிடம் விஞ்ஞானபூர்வ காரணங்கள் கிடையாது என்றாலும், நம்பிக்கையின் அடிப்படையில்  அவை காலம் காலமாக பழக்கத்தில் இருந்து கொண்டு உள்ளன என்பது மட்டும் இல்லாமல் நம்பப்பட்டும்  வந்துள்ளன. அவற்றில் பலவும் இந்தக் கால நடைமுறைக்கு ஏற்றவையாக இல்லை என்றாலும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள அனைத்து சடங்குகளும், நெறி முறைகளையும் ஏற்க முடியாதவை என்று கூற முடியாது. அந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஏற்பவே நியதிகள் பலவும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன என்றாலும், அதை இந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வதற்கு தடையும்  இல்லை.

28) பண்டை காலத்தில்  சம்ஸ்கிருத மொழிகளில் மற்றும் கிரந்தம் எனப்படும் மொழிகளில் எழுதி வைக்கப்பட்டு இருந்த வேதங்களையும், சாஸ்திரங்களையுமே கற்றறிந்து, குருமார்களிடம் சேவகம் செய்து குருகுல வாசத்தின் மூலம் அவற்றில் நல்ல தேர்ச்சியும் பெற்று இருந்ததினால், அந்தணர்கள் பலரும்  புரோகிதம் செய்து  பல நாடுகளிலும் அரசினரின் ஆலோசகர்களாக, ராஜ குருக்களாக  இருந்து வந்தார்கள். அவர்கள் மற்றவர்களை விட மேன்மையானவர்களாக கருதப்பட்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கு வாழ்வதற்கு பொருள் தேவை. ஆகவே வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டு இருந்தவற்றை  கல்வி அறிவு இருந்திடாத பாமர மக்களிடம் எடுத்துக் கூறி, அந்த நியமங்களை தாமே அவர்களுக்காக செய்து  தட்ஷணைகளையும், தானங்களையும் பெற்று வாழ்ந்து வந்தார்கள். அந்த அந்தணர்களின் சிலரும் கூட சாஸ்திர விதிகளில்  கூறப்படாத சில நல்ல காரியங்களையும் நன்னெறி போதனைகளாக சடங்குகளில்  புகுத்தி அவற்றை நடத்தி வந்திருந்திருக்க வேண்டும் என்பதினால்தான் சாஸ்திரங்களில் கூறப்பட்டு இல்லாத  பல சம்பிரதாயங்கள் கூட  காலம் காலமாக நடைமுறை வழக்கங்களாக  வந்திருக்க வேண்டும் .

29) இறந்தவர்களுக்கு செய்யப்பட்டு வந்திருந்த  சடங்குகளும், இறந்தவர்களின் ஆத்மா செல்லும் பாதையும் கூட கருட புராணத்தில் கருடாழ்வாருக்கு மகாவிஷ்ணு போதித்த போதனையின் அடிப்படையில் எழுதப்பட்டு உள்ளவைகளே. பெரும்பாலான சடங்குகள் அனைத்துமே வாய்மொழி வார்த்தைகளின் மூலமாகவே பரப்பப்பட்டு  பின்னர் எழுதி வைக்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் நாம் மறக்கக் கூடாது. ஆகவே எது  எந்த சூழ்நிலையில் கூறப்பட்டு உள்ளது  என்பதைக் கவனிக்க வேண்டும். அதனால்தான் தற்காலத்தில் பல்வேறு பிரிவினரும் சென்று வணங்கும் மகான்களும், ஆன்மீக குருக்களும் கூட பண்டை காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த பல சாஸ்திர சடங்கு முறைகளை இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொடுத்து நமக்கு வழி காட்டுகின்றார்கள் என்பதில்  இருந்தே, பண்டைக் காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த அனைத்து சடங்குகளுக்கும்  அடிப்படை ஆதாரம் இருந்திருக்க நியாயம் இல்லை, அவை தர்ம நெறி முறைகளை, பக்தி மார்கத்தை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை, வேத மற்றும் புராணங்களை நியாயப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பது விளங்கும்.

30)  சில  சடங்கு முறைகள் ஓரளவுக்கு பண்டையக் கால அந்தணர்களின் ஆதிக்கத்தை மேன்மைப்படுத்தவும் நியாயப்படுத்தவும் வறையுறுக்கப்பட்டு இருந்துள்ளன என்றாலும், அதே நேரத்தில் அடிப்படை சடங்குகள்  சாஸ்திர நியதிகளை மீறாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இறப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கூறப்பட்டு உள்ள சடங்கு முறைகளில் மீறக் கூடாத முக்கியமான பொதுவான சடங்கு முறைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் இந்தக் கட்டுரையில் தந்துள்ளேன். அதே சமயத்தில் இந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்ப  மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய, மாற்றி அமைத்துக் கொள்ளப்பட்டு வரும்  நெறிமுறைகளையும்  அங்காங்கே சுட்டிக் காட்டி உள்ளேன்.

31) இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பொதுவான காரியங்கள் என்னென்ன  என்பதை இந்தக் கட்டுரையில் கூறி உள்ளேன் என்றாலும் ஒருவர் வீட்டில் கர்மாக்களை நடத்தி வைக்கும் பண்டிதர்கள் அந்த குடும்பத்தினரின் சம்பிரதாயத்துக்கு ஏற்ப என்னென்ன கர்மாக்களை செய்ய வேண்டும் என்பதை விவரமாகக் கூறுவார்கள். இதற்கும் சில காரணங்களால் உண்டு.  ஒவ்வொரு கோத்திரங்களுக்கும், ஒவ்வொரு பரம்பரையினர் மற்றும் ஒவ்வொரு இனத்தவருக்கும் (ஜாதியினர்) தனித்தனி சடங்கு முறைகள் மற்றும் மந்திரங்கள்  உண்டு என்பதினால் அவற்றை இங்கு  தனித்தனியே விவரிக்காமல் பொதுவாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை மட்டும் விவரித்து உள்ளேன்.

பூஜை அறையும் ஏற்றப்பட்டு உள்ள விளக்கு . 
ஒருவர் வீட்டில் மரணம் ஏற்பட்டால்
அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த 
அறையின்  கதவை மூடி வைத்திருப்பார்கள்.

32) குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் முதலில்  வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் அங்குள்ள விளக்கை அணைத்து விட்டு அறையை மூடி வைத்து விடுவார்கள். அதை பன்னிரண்டு நாட்கள் காரியங்கள் முடியும்வரை திறக்க மாட்டார்கள். பல வீடுகளில் பூஜை அறை என்பது தனியாக இருக்காது. அந்த வீடுகளில் ஏதாவது ஒரு அறையில் அல்லது மூலையில் சுவற்றில் ஆணி அடித்து தெய்வங்களை மாட்டி வைத்து இருப்பார்கள். பொதுவாக தினமும் அந்த தெய்வங்களுக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைப்பார்கள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால்  அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த விளக்கை ஏற்ற மாட்டார்கள். ஏற்றக் கூடாது என்பது சாஸ்திரம். அதை போலவேதான்  வீட்டில் அடுப்பையும் ஏற்றி சமைக்கலாகாது என்பார்கள் என்றாலு கூட அந்த வீட்டின் தென் திசையில் ஒரு விளக்கை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அணையாமல் ஏற்றி வைத்து இருப்பார்கள். அந்த விளக்கை ஏன் ஏற்ற வேண்டும்? அதன் தாத்பர்யம் என்ன ?

33) குடும்பத்தில் ஒருவருடைய மரணத்தினால் வீட்டினருக்கு ஏற்பட்டு உள்ள அசௌகர்யம் அதாவது இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள துயர நிலைக் காலம் என்பதை சுருக்கி அசௌகம்  என்பார்கள். அதைதான்  சாஸ்திர சம்பிராயததில் தீட்டு காலம் என்று கூறி உள்ளார்கள்.

34) மகிழ்ச்சியான நாட்களில்  வீட்டில் அனைவரும்  நலமாக உள்ள  நேரத்தில் குடும்ப மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்காக தெய்வங்களுக்கு முன்னால் ஏற்றப்படும் ஒளி விளக்கின் மூலம் அந்த தெய்வங்களை நமது வீட்டிற்கு வந்து நமக்கு அருள் புரிய வேண்டும் என்று மானசீகமாக வேண்டுகோள் விடுகிறோம். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வைத்து தம்மை ஆராதிக்கும் பக்தர்களுக்கு அருள் செய்ய அந்த விளக்கின் ஒளி மூலம் தெய்வங்களே பல சமயங்களில் நம்மை அறியாமல் வீட்டுக்குள் வந்து போகுமாம். ஆனால் மரணம் அடைந்த ஜீவன்கள் உலவும் இடத்தில், அதனுடன் சேர்ந்து வேறு பல தீய ஆத்மாக்களும் உலவும் இடங்களில் தெய்வம் வருவது இல்லை.

35) அப்படிப்பட்ட வீட்டில் விளக்கேற்றி வைத்து மந்திரங்களை உச்சரித்து  தெய்வத்தை வேண்டும் போது, அங்கு சுற்றித் திரியும்   தீய ஆத்மாக்கள்  வேண்டும் என்றே  மந்திர உச்சாடனைகள் செய்பவரின்  எண்ணத்தில் புகுந்து மந்திர உச்சாடனைகளை தவறாக உச்சரிக்க வைக்குமாம்.  அப்படி தவறாக உச்சரிக்கப்படும் மந்திரங்களினால் உச்சாடனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில்  பல துன்பங்கள்  வந்து சேரும் என்பதினால்  இறந்தவர்கள் வீட்டில் தீட்டு காலம் எனப்படும் முதல் பன்னிரண்டு நாட்களிலும் தெய்வங்களுக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து தெய்வங்களை வழிபடுவது  ஆன்மீக ரீதியில் தடுக்கப்பட்டு உள்ளது.  தெய்வ ஆராதனை எனும்  புனிதம் வாய்ந்த செயலை துக்க காலத்தில் இறந்தவரது வீட்டில் செய்வதை ஆன்மீக ரீதியில் இதனால்தான் அனுமதிக்கவில்லை. மன  இருள் இல்லாமல் பூரண பக்தியோடு  செய்ய வேண்டிய தெய்வ காரியம் எதையுமே  துயரத்துடன் செய்யக் கூடாது என்பதினால் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளது.

36) ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்ததும் அந்த குடும்பத்தை விட்டு அடுத்த பன்னிரண்டு நாட்களில் வெளியேற உள்ள  ஆத்மா துயரத்தோடு அங்கு சுற்றித் திரியும் நேரத்தில், நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஏற்கனவே  துயறுற்று  திரியும் ஆத்மாவை மேலும் துயரத்தில் ஆழ்த்தலாமா? அந்த ஆத்மாவின்  துயரத்தில் அந்த வீட்டினரும் ஆத்மார்த்தமாக பங்கு  கொள்கிறார்கள் என்பதை  வெளிப்படுத்துவதற்காகவும் தெய்வத்தின் முன்பாக விளக்கை அந்த பன்னிரண்டு நாட்களும் ஏற்றுவது இல்லை. அந்த நேரத்தில் எந்த தெய்வங்களும் அங்கு வராதாம்.

37)  அதே சமயம்  இறந்து போனவர் அறையில் தெற்குப் பகுதியில் ஒரு சின்ன தீப விளக்கை அந்த பனிரண்டு நாட்களும் அணையாதபடி  இருக்குமாறு ஏற்றி வைத்திருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது.  அது ஏன்?  அடுத்த பன்னிரண்டு நாட்களும் யம தர்மனின் ஆதிக்கத்தில்  உள்ள அந்த வீட்டில் யம தர்மதேவருக்கு மட்டுமே முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் காரியம் அது. இறந்தவரது ஆத்மாவின் பாவங்களை மன்னித்து, அந்த ஆத்மாவை அழைத்துச் செல்ல வரும் யமகணங்கள் அவர்களை துன்புறுத்தாமல்  நல்ல முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக யம தேவனை ஆராதிக்கும் வகையில் அவருக்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்பதினால் இதை செய்கிறார்கள். யமதேவர் தென் திசையில் உள்ளதினால் தென் திசையில் விளக்கை ஏற்றி வைத்து, அவரை தெய்வமாக வணங்கி அவருக்கு மரியாதை தருகிறார்கள். சில ஊர்களில் யமதேவருக்கு ஆலயமும், சில ஆலயங்களில் யமனுக்கு சன்னதிகளும் உள்ளன என்பதை கவனியுங்கள்.

38) மரணம் அடைந்தவர் அறையில் விளக்கை ஏற்றுவதற்கு இன்னொரு காரணமும்  உண்டு. உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவானது  அந்த வீட்டில்  சுற்றிக் கொண்டே இருக்கும். அப்போது உயிருடன் இருந்த  நாட்களில் தான் வாழ்ந்திருந்த அறையில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கும் ஆத்மாவானது இருட்டில் தட்டுத்  தடுமாறிக் கொண்டு இருக்கக் கூடாது. தம்மை நல்ல முறையில் அழைத்துக் கொண்டு சொர்க்கத்தில் விட வேண்டும் என  யம தேவரை அடுத்த பன்னிரண்டு நாட்களும் ஆராதித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆத்மாவின்  சார்ப்பில் யமதேவருக்கு அந்த வீட்டினரால் வைக்கப்படும் விளக்காம் அது.  இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எம பயம் தீர்ப்பதாக ஐதீகம்.  

39) கருட புராணத்தில் அவ்வபோது குறிப்பிடப்படும் யமதேவர்  ஒரு திக்பாலர், சூரிய பகவானின் மகனான அவர் ஆதித்யர்  மட்டும் அல்ல அவரே தெற்குத் திசையின் காவலர் ஆவார். ஆன்மீக நூல்களில் யமபெருமானை  அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது. அவர் அனைவருக்கும் சமமானவர். சிவபெருமான் தனக்கு இட்ட பணியை செய்து வருபவர்.  அவருக்கு நன்றி சொன்னால் அவர் பாதுகாப்பில் இருக்கும்   மரணம் அடைந்து விட்டவராது ஆத்மாவை நல்லமுறையில் நடத்துவார்  என்பதற்காக   அந்த குடும்பத்தினர் தென் திசையில் யமதீபம் எனும் எண்ணெய் விளக்கை  ஏற்ற வேண்டும். யமபெருமானை வேண்டிக் கொண்டு தீபாவளி பண்டிகையிலும், ஆலயங்களிலும் ஏற்றப்படும் எம தீபத்திற்கு சமமான எம தீபமே இறந்தவர்கள் வீட்டிலும் பன்னிரண்டு நாட்களும் வைக்கப்படும் தீபம்  என்பதாக சில சாஸ்திர  நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  

40) ஒருவர் இறந்துவிட்டால் அந்த வீட்டினருக்கு அசௌகம் அல்லது தீட்டு என்பது வந்து விடும் என்பார்கள். வீட்டின் சொந்தக்காரர்களுக்கு இறந்தவருடனான சொந்தத்தின் அடிப்படையில் தீட்டுக் காலம் வறையுறுக்கபட்டு உள்ளன (தீட்டுக் கால அளவு எத்தனை என்பதை கடைசிப் பகுதியில் தந்து உள்ளேன்). தீட்டு என்பதைக் குறித்து இங்கு சின்ன விளக்கம் தர வேண்டி உள்ளது. சாதாரணமாக தீட்டு என்றால் விலக்கி வைக்கப்பட்ட வேண்டியது என்பது பொருள் ஆகும். உதாரணமாக பெண்கள் மாத விலக்கு ஆன காலத்தில் மூன்று நாட்கள் தீட்டுக் காலம் என்று கூறி அவளை வீட்டில் அனைவரிடமும் இருந்து தள்ளி இருக்குமாறு கூறுவார்கள். அவளை தனி அறையில் அல்லது தனி மூலையில் தங்க வைத்து இருப்பார்கள். அவளை யாரும் தொடக் கூடாது, தீண்டக் கூடாது, குறைந்தது பத்தடி தள்ளி நிற்க வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள்.

41) அந்த காலத்தில் இப்படியாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியதிக்கான விஞ்ஞான பூர்வமான காரணம் பின் காலத்தில் தெரிய வந்துள்ளது. இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் கோளாறினால் அந்த மூன்று நாட்கள் அவள் பலமின்றி இருப்பாள், அசுத்தமாக இருப்பாள் என்றும், அந்த மூன்று நாட்களிலும் பலமின்றி இருக்கும் அவளுக்கு முழு ஒய்வு தேவை, திருமணம் ஆகி இருந்தால் தாம்பத்திய உறவுகள் கூடாது, மூன்று நாட்களும் குளிக்கக் கூடக் கூடாது என்று சாஸ்திரங்களில் நடைமுறையாக வைத்து இருந்தார்கள். ஆகவே அந்த மூன்று நாட்களும் அவளை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதைக் குறிக்கும் வகையில் அந்த மூன்று நாட்களையும் அவளுக்கு தீட்டுக் காலம், அதாவது தூர விலக்கி வைத்திருக்க வேண்டிய காலம் என்றார்கள் (அந்தணர்களின் பலர் வீடுகளில் மாதவிலக்கு ஆன பெண்களை ‘தூரமணா’ அதாவது தூரத்தில் மனையில் அமர்ந்து உள்ளவள் என்பார்கள்).

42 ) அதே போன்ற நிலைதான் இறந்தவர்கள் வீடுகளிலும்  கடைபிடிக்கப்படும் தீட்டுக் காலம்  என்பதும் ஆகும். இறந்தவர்களது குடும்பத்தினர்களின் துக்க அளவின் மன நிலைக்கு ஏற்ப  தீட்டுக் காலம் நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது. அதாவது ஒருவர் வீட்டில் இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள மனத் துயர காலத்தில் அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது.  மகிழ்ச்சியுடன் இருந்தபடி காரியங்களை செய்ய மனம் வராது. வீட்டில் உள்ளவர்கள் அவ்வப்போது அழுதவண்ணமே, துக்கத்தோடு இருப்பார்கள். ஒருவர் பெரும் துயரில் இருக்கும்போது அவர்களது நரம்பு மண்டலம் தளர்ச்சி அடையும், மன நிலை பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு மன ஒய்வு தேவை. அப்போது அதிக வேலை செய்தால் நரம்பு தளர்வு இன்னும்  அதிகம் ஆகும். நரம்பு மண்டலம் தளர்ச்சி அடையும்போது அவர்கள் துயரம் இன்னும் பெருகும். ஏன் என்றால் மனக் கட்டுப்பாடு  அவர்களிடம் குறைந்திருக்கும். ஆகவே அவற்றை தடுக்கவே, அமைதி தரவே   அந்த குடும்பத்தினரை கர்மா முடியும்வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டவர்களாகக் கருதுவார்கள்.  கர்மா செய்யும் காலமான பன்னிரண்டு  (பதிமூன்றாம் நாள் சுப காரிய நாள்)  நாட்களில் அவர்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். ஆகவே அதையே தீட்டு காலம் என்று கூறி அந்த தீட்டு காலத்தில் இறந்தவர் வீட்டுக்கு அதிகம் யாரும் சென்று குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற  நெறிமுறைகளை வகுத்திருந்தார்கள்.  உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுபவருக்கு ஒய்வு தர தீட்டு எனக் கூறப்பட்ட இதில் விஞ்ஞான அடிப்படையும் உள்ளது.

43) ஒரு இந்து ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், இந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் ஏழு சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். ஒரு மூல புருஷனின் ஏழு தலைமுறையினரை பங்காளிகள், தாயாதிகள் மற்றும் சபிண்டர்கள் என்ற பெயர்களில் அழைப்பார்கள். அவர்கள் வீடுகளில் ஏற்படும் பிரசவங்களினால் ஏற்படும் தீட்டை சூதக தீட்டு என்பார்கள். இறந்து போனவர்களுக்காக பெரும் தீட்டை ஆசௌசம் என்பார்கள். இந்த இருவகை தீட்டு காலத்திலும் சந்தியாவந்தனம் தவிர வேறு எதையுமே செய்யக் கூடாது என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஒரு குடும்பத்தின் முதல் ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் – எள்ளுப் பேரனுக்குப் பேரன் வரையில் முதல் ஆணையும் சேர்த்து ஏழு தலைமுறைகள் வருகின்றது. இந்த ஏழு தலைமுறைகளுக்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் அல்லது இறப்பினாலும் அனைவருக்கும் தீட்டு உண்டாகும். பஞ்சாங்கங்கள் ஒருவர் இறந்த பின் தவிர்க்க வேண்டிய சுப காரியங்கள் பற்றி சில பரிந்துரைகளை அளிக்கின்றன.

………..தொடரும்