முன்னுரை
பொதுவாகப் பலரும் ஷண்முக கவசம், லலிதா சஹாஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் கந்தர் சஸ்டி கவசம் போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றைப் போலவே சிவகவசம் என்பதும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது.
சிவகவசம் என்பது பாண்டிய மன்னன்னான வராமதுங்கர் என்பவர் காலத்தில் அவரால் இயற்றப்பட்ட செய்யுளாகும். இதை விடபமுனி எனும் முனிவர் பத்ராயு எனும் ஒரு அரசகுமாரனுக்கு அருளுபதேசம் செய்ய அதை வராமதுங்கர் என்ற பாண்டிய மன்னன் தாம் எழுதிய சிவபெருமானின் புண்ணியக் கதைகளை எடுத்துரைக்கும் பிரம்மோத்ர காண்டம் எனும் நூலின் ஒரு பகுதியாக செய்யுள் வடிவில் இயற்றினார் என்பதும் செய்தியாகும். தென் காசிப் பாண்டியர் எனப்படும் பாண்டிய மன்னர்களில் ஒருவரான வராமதுங்கர் அபிராம சுந்தரேசன் மற்றும் வீர பாண்டியன் என்ற பெயர்களையும் பெற்று இருந்தவர். ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளுடன் ஒன்றாக சேர்ந்தே இருந்த இலங்கையில் இருந்த நல்லூரை ஆட்சி செய்து வந்தவர். விஜயநகர் நாயக்கர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த பாண்டிய மன்னர்கள் அவர்கள் வசம் இருந்த ராஜ்யங்களில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். தமிழ் மொழியில் அதிகத் திறமைப் பெற்று இருந்த வராமதுங்கர் பெரும் சிவ பக்தர். அந்த மன்னன் கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி போன்ற இன்னும் சில தமிழ் நூல்களை இயற்றி உள்ளார்.
கந்தர் சஷ்டி கவசம் என்பது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கூறி அதை காக்குமாறு முருகப் பெருமானை வேண்டும் தமிழ் மந்திர பாடல் ஆகும். கவசம் என்றாலே காக்கும் ஒரு தடுப்பு அரண் போன்றதாகும். முருகனை வேண்டிக் கொண்டு கந்தர் சஷ்டி கவசத்தைப் படிப்பதின் மூலம் மன அமைதி கிட்டும் , நோய் நொடிகள் விலகும், விஷ ஜந்துக்களின் விஷங்கள் முறியும், தீய ஜந்துக்கள் நம்மைத் தீண்டாது என்பது நம்பிக்கை ஆகும்.அது போலவேதான் சிவகவசமும் சைவ அன்பர்களால் ஒரு காலத்தில் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர் என்பதினால் அவருடைய அந்த ஐந்து முகங்களைக் குறிப்பிட்டு உடலின் ஒவ்வொரு பாகத்தை காக்குமாறும், நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துக்களில் இருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறு சிவபெருமானை வேண்டி துதிக்கும் மந்திர பாடலாகும். இதை பாராயணம் செய்தால் பஞ்சமா பாதகங்கள், பகைகள், வறுமை போன்றவை விலகி அதை பாராயணம் செய்பவர்களுக்கு ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தும் இலக்கணத் தமிழில் எழுதி வைக்கப்பட்டு உள்ளதினால் இவை அதிகம் பிரபலமாகவில்லை. அதற்குக் காரணம் தமிழ் மொழி பேசும் சராசரி மனிதர்கள் அனைவருக்குமே இலக்கணத் தமிழ் தெரியாது என்பதினால் அதன் அர்த்தம் புரிவது இல்லை. அதனால்தான் அவற்றின் புகழை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மேலும் ஒரு கட்டத்தில் வைஷ்ணவம் தலை தூக்கி நின்றபோது சைவ சமய நூல்கள் தழைத்து இருக்கவில்லை என்பதும் இன்னொரு காரணம். இப்படிப்பட்ட மந்திரசக்தி வாய்ந்த பாடல்களின் அர்த்தங்கள் தெளிவாக விளக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்தால் அவற்றின் மகிமைகள் பரவி இருக்கும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே சிவகவசத்தின் அர்த்தங்கள் கூடிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதனால்தான் ஒரு முயற்சியாக மந்திர சக்தி வாய்ந்த சிவகவசத்தை அதன் விளக்கத்துடன் வெளியிட முடிவு செய்தேன். ஆன்மீகத்தில் நாம் அறிவதை பிறருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது நல்ல ஆன்மீகக் காரியம் என்பார்கள்.
கந்தர் சஷ்டி கவசத்தைப் படிப்பது போல சிவகவசத்தை திங்கள் கிழமைகளிலும் பிரதோஷ தினங்கள் அன்றும் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் பல பலன்கள் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அடுத்த இரு நாளில் விளக்கத்துடன் கூடிய சிவகவசம் வெளியாகும்.