ஜீவாத்மாவின் பயணம் (18)
மரணம் அடைந்தவர் குடும்ப உறவினர்கள் கடைபிடிக்க வேண்டிய தீட்டு காலம் மற்றும் மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்:
386. ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அவரோ அல்லது அவரது குடும்ப உறவினர்களோ 31 ஆம் நாள் சடங்கு முடியும் வரை இன்னொருவரின் மரண வீட்டிற்கு செல்லக் கூடாது.
387. தீட்டுக் காலத்தை ஸ்நானத் தீட்டு, பக்ஷிணீ தீட்டு, ஒரு நாள் தீட்டு, 11/2 நாள் தீட்டு, மூன்று நாட்கள் தீட்டு மற்றும் பத்து நாட்கள் தீட்டு எனப் பிரித்து உள்ளார்கள். தீட்டிலும் பிரசவ தீட்டு மற்றும் மரணத் தீட்டு என இரு வகை உண்டு. இங்கு நாம் மரண தீட்டை மட்டும் பார்க்கலாம்.
388. தற்செயலாய் துர் மரணம் அடைவோருக்கு, அதாவது விபத்தில் உயிர் இழந்தவர் என யாராக இருந்தாலும், அவர்களுடைய உறவினர்களுக்கு தீட்டு உண்டு. ஆனால் உடனடியாக கர்மாக்களை செய்யாமல் 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்ய வேண்டும் என்றும் ஒரு விதி உள்ளது.
389. ஆனால் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினருக்கும், பங்காளிகளுக்கும் தீட்டு, தர்ப்பணம் போன்றவை கிடையாதாம். ஏன் எனில் அவர்கள் பிசாசாக மாறி விடுவதாக ஐதீகம்.
390. சன்யாசிகள் மரணம் அடைந்தால் அவர்களது பங்காளிகளுக்கு தீட்டில்லை, செய்தியைக் கேட்ட பின் குளித்தால் போதும்.
391. 88 அடிகளுக்குள் பிணம் இருந்தால், அதை எடுக்கும்வரை, அருகில் உள்ள வீட்டினர் சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
392. மரண வீட்டில் சாப்பிட்டால் (கை நனைத்தல் என்றும் கூறுவார்கள்), அவர்கள் முப்பத்தி ஒரு நாட்கள் (31) எந்த ஆலயத்திற்கும் செல்லக்கூடாது என்கின்றது சாஸ்திரம்.
393. எவர் வீட்டில் ஸ்ரார்தம் நடைபெறுகிறதோ அன்றைய தினத்தன்று துக்கம் விசாரிக்க செல்லலாகாது.
394. தீட்டு முடியும்வரை தீட்டு உள்ள வீட்டினர் எந்த ஒரு புண்ணிய காரியங்களுக்கோ, புண்ணிய சடங்குகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ செல்லக் கூடாது.
395. எத்தனைதான் அதிக வயதானவர் என்றாலும், தீட்டு உள்ள காலத்தில், தீட்டு இல்லாதவர்கள் அல்லது அதே வீட்டில் உள்ள தீட்டு உள்ளவர் கூட அவரை நமஸ்கரிக்கலாகாது.
396. ஒரு தீட்டுக்காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது. தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு. ஆகவே தீட்டுள்ளவன் வீட்டுக்குச் சென்று விட்டு தம் வீடு வந்ததும் இன்னொரு முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.
397. தீட்டு இல்லாதவர்களுக்கும் துக்கத் தீட்டு உண்டு. அதாவது தீட்டுக் காலம் முடியும் முன்னால் ஆனால் சஞ்சயனம் முடிந்தப் பின்னர் இறந்தவர் வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரித்தாலும் அங்குள்ளவர்களைத் தொட்டு விட்டாலும் வீட்டுக்கு வந்து கால்களை அலம்பிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும். அதன் பின் குளித்து விட வேண்டும். இல்லை என்றால் குளிக்கும்வரை தற்காலிக தீட்டு உண்டு.
398. ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் (மகன்கள்), அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் (பேரன்கள்), அந்த ஆண் பேரன் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள்(கொள்ளு பேரன்கள்), அந்த ஆண் கொள்ளுப் பேரன் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக ஏழு தலைமுறை சந்ததியில் பிறக்கும் ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர்.
399. ஏழு பங்காளிகள் குடும்பத்தில் (முதல் குடும்பம்) உள்ள எந்த ஆண் இறந்தாலும், பிறந்தாலும் அந்த ஏழு பங்காளிகள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் தீட்டு சமமாகவே இருக்கும். ஆனால் எட்டாவது பங்காளி குடும்பத்திற்கு முதல் ஏழு பங்காளிகளில் உள்ள முதல் குடும்ப பங்காளியின் தீட்டு கிடையாது. அது இரண்டாம் பங்காளியின் குடும்பத்தில் ஏற்படும் பிறப்பின் மற்றும் மரணத்தின் மூலமே ஏற்பட்டும்.
400. அதே போல ஒன்பதாம் பங்காளி குடும்பத்திற்கு முதல் ஏழு பங்காளிகளில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது பங்காளியின் தீட்டு கிடையாது. அது மூன்றாம் பங்காளியின் குடும்பத்தில் இருந்தே துவங்கும்.
401. ஒரு குடும்ப வம்சத்தில் ஏழு பரம்பரையினர் என்பவர்கள் யார்? உதாரணமாக ஒரு குடும்ப வம்சத்தில் பத்து பரம்பரையினர் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம்.
402. அவர்களின் குடும்பத் தலைவர்கள் பெயர்கள் கோபாலன், கிருஷ்ணன், மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன், நந்தன், ரமேஷன் மற்றும் முகுந்தன் என்று வைத்துக் கொள்வோம்.
403. தீட்டுக் காலத்தை அனுஷ்டிக்கும் பங்காளிகள் எனப்படும் ஏழு பரம்பரையினர் எந்தெந்த குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்?
- முதல் ஏழு பரம்பரையினர் கோபாலன், கிருஷ்ணன், மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி மற்றும் ராமன் ஆவார்கள்.
- அடுத்த ஏழு பரம்பரையினர் கிருஷ்ணன், மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன் மற்றும் நந்தன் ஆவார்கள்.
- அதற்கு அடுத்த ஏழு பரம்பரையினர் மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன், நந்தன் மற்றும் ரமேஷன்.
- அதற்கும் அடுத்த ஏழு பரம்பரையினர் வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன், நந்தன், ரமேஷன் மற்றும் முகுந்தன் ஆவார்கள். இப்படியாகவே ஏழு பரம்பரையினர் (பங்காளிகள்) எனும் கிளை உள்ளது.
404. ஒரு குடும்பத்தில் ஏழு வயதுக்குள் சிறுவனோ அல்லது சிறுமியோ மரணம் அடைந்து விட்டால் அதன் சொந்த சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தாய் தந்தைக்கும் மட்டுமே பத்து நாள் தீட்டு உண்டு. அந்த குடும்பத்தின் ஏழு தலைமுறையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு தீட்டுக் கிடையாது.
405. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து பார்க்காமலும், எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவருக்கொருவர் குடும்பத்தில் ஏற்படும் மரணத்தில் மற்றவர்களுக்கு ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு. அவர்களுக்கு பத்து, மூன்று, ஒரு நாள் தீட்டு போன்றவைக் கிடையாதாம்.
406. தீட்டு உள்ளவர்கள் வீட்டில் தீட்டு இல்லாதவர்கள் உணவு உண்டால் அன்று அவர்களுக்கும் தீட்டுக் காலம் இருக்கும். மறுநாள் காலையில் குளித்தப் பிறகுதான் அவர்களுக்கு அந்த தீட்டு போகும்.
407. வீட்டில் மரணம் நிகழ்ந்து விட்டால், ஒரு வருடத்திற்கு, அதாவது முதல் வருட சிரார்த்தம் வரும்வரை, நடக்கவிருக்கும் மங்களகரமான நிகழ்ச்சியைத் தள்ளிப் போடுவது வழக்கம்.
408. குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல், புதுமனை புகுவிழா போன்ற அனைத்து சுப காரியங்களையும் நிச்சயம் ஒரு வருடம் வரை தள்ளி வைக்க வேண்டும். இறந்தவருக்கு முதல் திவசம் கொடுத்த பிறகே ஆலயத்துக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து விட்டு அதன் பின் சுப காரியங்களை தொடங்க வேண்டும்.
409. ஆனால் அனைத்து சுப காரியங்களுக்கும் ஒரு வருட இடைவெளி என்று சொல்லும் சாஸ்திரங்கள், திருமண நிகழ்ச்சிக்கு மட்டும் தோஷமில்லை என்றே சொல்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட வீட்டில் எதிர்பாராமல் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டால் திருமணத்தை தள்ளிப் போடாமல் நடத்தி வைக்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
410. ஆனால் திருமணம் நடக்க உள்ள நாளின் பதினைந்து நாட்களுக்கு முன்னால் வீட்டில் உள்ளவர் மரணம் அடைந்து விட்டால், 13 வது நாளான சுப காரியம் செய்த பிறகு, வேறு நல்ல தேதி பார்த்து திருமணத்தை நடத்தலாம் என்றும் சாஸ்திரம் கூறுகின்றது.
411. எந்த தீட்டும், தீட்டு கால முடிவில் காலையில் எழுந்த உடன் குளித்து விட்டால் விலகி விடும் என்பார்கள். ஆனால் எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடத்திற்கு அப்பால்தான் விலகும் என்பதினால் தீட்டு காலம் முடிந்ததும் காலை 24 மணிக்கு பிறகே குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
412. அதற்கு முன்னால் குளித்தால் தீட்டு விலகியதாக எடுத்துக் கொள்ள முடியாது, அது தொடரும் என்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் இதை நடைமுறையில் வைத்திருக்க முடியவில்லை என்பதினால் விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் குளிப்பதில் தோஷம் இல்லை என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆகவே இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்துள்ள நியதி அல்ல, ஓரளவிற்கு ஆன்மிகம் மற்றும் தர்ம நெறி முறைகளின் அடிப்படையில் அமைந்ததே என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
413. 8 மணி 24 நிமிடங்கள் என்பது என்ன கணக்கு என்ற கேள்வி எழலாம். சாஸ்திரங்களின்படி ஒரு நாள் என்பது அறுபது நாழிகை கொண்டது ஆகும். அதில் பகல் நேரம் 30 நாழிகை கொண்டதாகவும், இரவு நேரம் 30 நாழிகை கொண்டதாகும்.
414. சாஸ்திர விதிப்படி காலைப் பொழுதான 30 நாழிகையை ஐந்து காலமாக – ஒவ்வொரு காலத்துக்கும் 2 மணி நேரம் 24 நிமிடங்கள்- என பிரித்து வைத்து உள்ளார்கள். ஏன் என்றால் அந்த ஒவ்வொரு கால பிரிவிலும் பூமியில் விழும் சூரிய கிரணங்கள் தனித் தன்மைக் கொண்டவையாக உள்ளனவாம்.
415. பூமியில் காலை 4 மணி 30 நிமிடம் உள்ளபோதுதான் தேவலோகத்தில் சூரியன் உதிக்கின்றதாம். அந்த தேவ கிரணங்கள் பூமிக்கு வந்து விழும்போது பூமியில் காலை 6 மணி என்பதாக இருக்குமாம் உள்ளதாம்.
416. காலை 6 மணியிலிருந்து 8 மணி 24 நிமிடம் வரை ப்ராத காலம் என்றும், 8 மணி 24 நிமிடம் முதல் 10 மணி 48 நிமிடம் வரை ஸங்கவ காலம் என்றும், 10 மணி 48 நிமிடத்திலிருந்து பகல் 1 மணி 12 நிமிடம் வரை மாத்யான காலம் என்றும், மதியம் 1 மணி 12 நிமிடத்திலிருந்து 3 மணி 36 நிமிடம் வரை அபரான்ன காலம் என்றும், 3 மணி 36 நிமிடத்திலிருந்து மாலை 6 மணி வரை சாயங்காலம் என்று பெயரிட்டு உள்ளார்கள்.
417. தீட்டு காலத்தில் தினமும் கர்மா செய்து விட்டு வரும் போது கர்மா செய்யும் இடங்களில் சுற்றித் திரியும் தீய ஆத்மாக்களின் அணுக்கள் நமது உடல்களிலும் தொற்றிக் கொண்டு விடும். இரவில் நாம் படுத்திருக்கும் போதும், வீட்டில் உலவும் போதும் கூட அவை நம் உடலை விட்டு விலகுவதில்லை.
418. ஆனால் அந்த தீய கணங்கள் சூரிய ஒளியின் குறிப்பிட்ட தன்மை கொண்ட ஸங்கவ காலத்தில் அழிந்து விடக் கூடியவை. ஆகவே ஸங்கவ காலத்தில் உள்ள சூரிய ஒளி உடலில் பட்ட பின்னர்தான் அந்த கிரணங்களின் தன்மையினால் அந்த தீய கணங்கள் உடலின் மீது விழும் தண்ணீரில் கலந்து மரணம் அடைந்து விடுகின்றன என்ற நம்பிக்கை உள்ளது.
419. அதை மனதில் கொண்டுதான் அந்த தன்மைகளைக் கொண்ட சூரிய ஒளிக் கிரணங்கள் துவங்கும் காலமான காலை 8 மணி 24 நிமிடங்களுக்கு பிறகு குளிக்க வேண்டும் என்பதான விசேஷ நடைமுறை இருந்துள்ளது என்பதாக சாஸ்திரங்கள் கூறி உள்ளது.
420. இவை அனைத்துமே எழுதி வைக்கப்படாவிடிலும், வாய் மொழி வாய் மொழியாக கூறப்பட்டு வரும் நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்பட்டு வந்து கொண்டிருந்தாலும், நவீன கால விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள அர்த்தங்களும், காரணங்களும் மெல்ல மெல்ல தெரிய வருகின்றன.
421. அடுத்த கேள்வி, இரவு நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு தீட்டுக் காலம் எப்போது துவங்கும்?
422. சாஸ்திரங்களின்படி சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் அடங்கும். சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகை என்பது பூமியில் இரவு 1 மணி 30 நிமிடத்தைக் குறிக்குமாம். ஆகவே ஒரு குடும்பத்தில் இரவு 30 மணி வரை யாராவது இறந்து விட்டால் அவரது மரணம் முதல் நாளைய கணக்கில் சேரும். 1.30 மணிக்கு மேல் இறந்தால் மறுநாள் கணக்கில் சேருமாம்.
423. ஒருவர் வீட்டில் சிரார்த்த காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே சிரார்த்தம் செய்பவருக்கு இன்னொரு இறப்பு தீட்டு வந்துவிட்டது எனும் போது சிரார்த்தம் முடிந்த பின்னர்தான் அந்த தீட்டு துவங்கும்.
424. எந்த ஒரு பிரும்மச்சாரிக்கும் தீட்டு இல்லை. ஸ்நானம் மட்டுமே உண்டு.
425. திருமணம் நடக்கும்போது, மணப்பெண் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர்கள் இறந்து விட்டால், அந்த திருமணம் முடிந்து, மணமக்களின் கிரஹப் பிரவேச சடங்கும் முடிந்து சுபமாக திருமண சடங்கை முடித்து வைக்கும் சேஷ ஹோமம் செய்யும் வரை அவர்களுக்கு தீட்டு கிடையாதாம்.
426. ஒருவர் பங்காளியின் மரணத் தீட்டை அனுஷ்டித்துக் கொண்டு உள்ள காலத்தில், அவர்கள் செய்ய வேண்டிய குடும்ப சிரார்த்த தினம் வந்து விட்டால் அவர்கள் அந்த தீட்டு முடியும்வரை அவர்கள் சிரார்த்தம் செய்யக் கூடாது. பண்டிதரிடம் அடுத்த தேதி கேட்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
427. ஒரு கிரஹஸ்தர் சன்யாசி ஆகி விடுகிறார் என்றால் அவருடைய தாய் மற்றும் தந்தை அல்லது உறவினர் இறந்தால் அவருக்கு தீட்டுக் காலம் உண்டா என்றால் இல்லை என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சன்யாசியின் தாய் அல்லது தந்தை இறந்தால் சன்யாசிக்கு ஸ்நானம் மட்டுமே உண்டு. அதற்குள் காரணம் அந்த சன்யாசியின் உடலை அவர்கள் ஈன்று எடுத்ததினால் அந்த உடலுக்கு தர வேண்டிய மரியாதை ஆகும் அந்த செயல். தீட்டு கிடையாது.
428. எத்தனை நாள் தீட்டானாலும் சரி, அந்த தீட்டு உள்ள காலத்தில் கிரகணம் வந்தால் கிரகணம் துவங்கி முடியும்வரை அங்குள்ளவர்களுக்கு தீட்டுக் கிடையாதாம்.
429. சாதாரணமாக தீட்டு உள்ளவர்களின் வீடுகளில் உள்ள உணவு பண்டங்களை அந்த நாட்களில் வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள். காரணம் அந்த பொருட்களுக்கும் தீட்டு உண்டு. ஆனால் அவர்கள் வீட்டில் உள்ள தயிர், பால், நெய், காய்கறிகள், உப்பு, தேன், மற்றும் பழங்களுக்கு தீட்டு கிடையாது. அவற்றை யார் மீதும் படாமல் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்து மற்றவர்கள் உபயோகிக்கலாமாம்.
ஸ்நானத் தீட்டு:
430. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண் இறந்து விட்டால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை. ஆனால் இறந்த சேதி கேட்டதும் குளிக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு.
431. மற்ற உறவினர் இறந்தால் அதைக் கேட்டதும் ஸ்நானம் செய்தால் மட்டுமே போதுமானது. அதை தீட்டு என்பதாக கருதாமல், குளிக்கும்வரை அந்த தீட்டை ஆசாரம் அற்ற நேரமாக அதாவது விழுப்பு என்று கருதுவார்கள். ஒருவேளை அந்த செய்தி வரும் முன்னரே அவள் ஏற்கனவே குளித்து விட்டு இருந்தாலும் மரண செய்தியைக் கேட்டதும் மீண்டும் ஒருமுறை அவள் ஸ்நானம் செய்ய வேண்டும்.
432. பத்து நாள் தீட்டு காலம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பத்து நாள் கால தீட்டு செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்கு பிறகு கேட்டால் அது தீட்டாக கருதப்பட மாட்டாது. அந்த செய்தி கேட்டதில் இருந்து குளிக்கும்வரை அதை ஆசாரம் அற்ற நேரமாக கருதி ஒரு ஸ்நானம் மட்டும் செய்தால் அதுவே போதுமானது.
433. ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவருக்காக மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டிய பங்காளிகளுக்கு அந்த செய்தி மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து பதினோராம் நாள் விடியற் காலையில் கிடைத்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு கிடையாது, ஸ்நானம் செய்தால் அது மட்டும் போதுமானது.
434. சகோதரியின் கணவர்கள் மரணம் அடைந்தால் அந்த சகோதரியின் சகோதரர்களுக்கு ஸ்நானத் தீட்டு.
435. அதே போல சகோதரியின் சகோதரிகள் மரணம் அடைந்தாலும் அந்த சகோதரியின் சகோதரர்களுக்கு ஸ்நானத் தீட்டு.
436. ஒருவர் வீட்டு மாப்பிள்ளை இறந்தால் மாமனார் மற்றும் மாமியாருக்கு ஸ்நானத் தீட்டு.
437. அத்தையின் கணவர் இறந்தால் (அத்திம்பேர்) மருமகன்களுக்கு (அத்தையின் சகோதரர்களது மகன்கள்) ஸ்நானத் தீட்டு.
438. மாமாக்களின் (தாயாரின் சகோதரர்கள்) மகன்கள் இறந்தால் மருமகன்களுக்கு ஸ்நானத் தீட்டு
ஒரு நாள் தீட்டு
439. ஒரு நாள் தீட்டு (ஆண்கள்):-
- தனது மனைவியின் சகோதரர்கள் (மைத்துனர்கள் என்பார்கள்)
- மனைவி இறந்து விட்டால் மாமனார் மற்றும் மாமியார்
- பங்காளிகளின் (க்ஞாதி, ஸபிண்டர்கள் மற்றும் தாயாதி என்றும் கூறுவார்கள்) இரண்டு வயதுக்கு மேல் ஆறு வயதுக்குள் ஆன திருமணம் ஆகாத மகன்கள்.
- ஸபத்னீ மாதாக்களின் சகோதரர்கள் (தந்தைக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் அந்த இளைய, மூத்தாள், தாயார்களுக்கு ஸபத்னீ மாதாக்கள் என்று பெயர்)
- ஸபத்னீ மாதாக்களின் சகோதரரின் மகன்கள்
- ஸபத்னீ மாதாக்களின் சகோதரரின் மகள்கள்
- ஸபத்னீ மாதாக்களின் சகோதரிகள்
- ஸபத்னீ மாதாக்களின் சகோதரியின் மகன்கள்
- ஸபத்னீ மாதாக்களின் சகோதரியின் மகள்கள்
- ஸபத்னீ மாதாக்களின் மகள்கள் (தனக்கு ஒன்று விட்ட சகோதரி)
- ஸபத்னீ மாதா வழி ஒன்று விட்ட சகோதரியின் மகன்கள் மற்றும் மகள்கள்
- ஸபத்னீ மாதாக்களின் மகன்கள் (தனக்கு ஒன்று விட்ட சகோதரன்)
- ஸபத்னீ மாதாக்களின் தாய் மற்றும் தந்தை
440. ஒரு நாள் தீட்டு (ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கு)
- ஒரு குடும்பத்து ஆண் மகன் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகி விட்டாலும் தன் உடன் பிறந்த சகோதரனின் (பூர்வ கோத்திர சகோதரன்) மரணத்துக்கு ஒரு நாள் தீட்டு உண்டு
441. ஒரு நாள் தீட்டு (புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்களுக்கு) :-
மணமாகி விட்ட பெண் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் கோத்திரத்தை சார்ந்தவள் ஆகி விடுவதினால் பிறந்த வீட்டின் ஒரு சில தீட்டுக்கள் மட்டுமே உண்டு. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண்களுக்கு பிறந்த வீட்டில் கீழ் கண்டவர்கள் மரணத்தினால் ஒரு நாள் தீட்டு உள்ளது.
- தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பா (பித்ருவ்யன் என்பார்கள்)
தந்தை வழி அத்தை (தந்தையின் சகோதரியை அத்தை அதாவது பித்ருபகிநீ என்பார்கள்) - தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பா மகன்கள் மற்றும் மகள்கள்
- தந்தை வழி அத்தை மகன்கள் மற்றும் மகள்கள்
- ஸபத்னீ மாதாக்களின் மகன்கள் (அவர்களை ‘பின்னோதர சகோதரர்கள்’ அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)
- ஸபத்னீ மாதாக்களின் மகள்கள் (அவர்களை ‘பின்னோதர சகோதரிகள்’ அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த பெண்கள் என்பார்கள்)
- ஸபத்னீ மாதாவின் சகோதரர்கள்
- ஸபத்னீ மாதாவின் சகோதரிகள்
- ஸபத்னீ மாதாவின் மகன்களின் மகன்கள் மற்றும் மகள்கள்
- ஸபத்னீ மாதாவின் மகள்களின் மகன்கள்
- ஸபத்னீ மாதாவின் மகள்களின் மகள்கள்
- ஸபத்னீ மாதாவின் சகோதரிகளின் மகன்கள்
- ஸபத்னீ மாதாவின் சகோதரிகளின் மகள்கள்
- ஸபத்னீ மாதாவின் சகோதரர்களின் மகன்கள்
- ஸபத்னீ மாதாவின் சகோதரர்களின் மகள்கள்
- ஸபத்னீ மாதாக்களின் தாய் மற்றும் தந்தை
442. மூன்று நாள் தீட்டு செய்தியை மூன்று நாட்களுக்குப் பிறகு அடுத்த பத்து நாட்களுக்குள் கேட்டால் ஒரு நாள் தீட்டு மட்டுமே உண்டு. அதே செய்தியை பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் தீட்டே கிடையாது. ஸ்நான தீட்டு மட்டுமே உண்டு.
ஒன்றரை நாள் தீட்டு
443. ஒன்றரை நாள் தீட்டை பக்ஷிணீ தீட்டு என்பார்கள். பக்ஷிணீ என்பது 90 நாழிகைகள் கொண்ட காலம். அதாவது 36 மணி நேர காலம் ஆகும். நாழிகை என்பது பண்டைய கால சாஸ்திர அளவாகும். ஆனால் தற்காலத்தில் அவை நிமிடங்களாக கூறப்படுகின்றது.
444. பக்ஷிணீ தீட்டு காலம் என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம் ஆகும். பக்ஷிணீ தீட்டிற்கு சாஸ்திர விதி நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. இரவு அல்லது பகல் என்ற கணக்கையே வைத்து வந்தார்கள். ஆகவே பகலிலோ இரவிலோ எப்போது மரண செய்தி கிடைத்தாலும், பக்ஷிணீ தீட்டு உள்ளவர்களுக்கு அந்த தீட்டு காலம் 36 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால் சாஸ்திரங்கள்படி இரவில் தீட்டு போகாது என்பது நியமம் என்பதினால், பக்ஷிணீ தீட்டு உள்ளவர்களுக்கு காலையில் மரண தீட்டு கிடைத்தால் ஒரு இரவு அதிகம் தீட்டு காக்க வேண்டி உள்ளது.
445. பக்ஷிணி தீட்டை 36 மணி நேரத்துக்குப் பிறகு பத்து நாட்களுக்குள் கேட்டால் ஒரு பக்ஷிணி காலமே தீட்டு உண்டு. அதாவது காலையில் கேட்டால் ஒரு பகல் தீட்டு, இரவில் கேட்டல் ஒரு இரவு தீட்டு. இரண்டுமே மறுநாள் காலை குளித்தால் விலகிவிடும். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் ஸ்நான தீட்டு மட்டுமே உண்டு.
446. பத்து நாள் தீட்டு காலம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பத்து நாள் கால தீட்டை பற்றி மூன்று மாதங்களுக்கு மேல், ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு முன்னால் கேட்டால் அவர்கள் மூன்று நாட்கள் கூட தீட்டு காக்கத் தேவை இல்லை. அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து ஒன்றரை நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.
447. ஆனால் அதே செய்தியை அந்த குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்கு மேல், ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னால் கேட்டால், அந்த செய்தியைக் கேட்டதில் இருந்து ஒரு நாள் தீட்டு காத்தால், அது மட்டுமே போதுமானது.
448. ஒன்றரை நாள் பக்ஷிணீ தீட்டு (குடும்பத்து ஆண்கள் )
- (a) அத்தையின் பிள்ளை அல்லது பெண்
- (b) மாமனின் பிள்ளை அல்லது பெண்
- (c) தாயின் சகோதரியின் (சித்தி மற்றும் பெரியம்மாவின்) பெண்கள் மற்றும் பிள்ளைகள்
- (d) தன் உடன் பிறந்த சகோதரனின்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்) மணமான பெண்
- (e) தன் உடன் பிறந்த சகோதரியின் பெண் (மருமாள்)
- (f) தன் பிள்ளையின் மகள் (பௌத்ரீ- பேத்தி என்பார்கள்)
- (g) பெண் வயிற்றுப் பெண் (தௌஹித்ரி-பேத்தி என்பார்கள்)
- (h) பெண்ணின் உபனயனமாகாத மகன் (தௌஹித்ரன்-பேரன் என்பார்கள்)
- (i) தன் சகோதரியின் உபனயனமாகாத மகன் (மருமான்).
449. ஒன்றரை நாள் பக்ஷிணீ தீட்டு (குடும்பத்து பெண்கள்):-
- தந்தை வழி பெரியப்பா மற்றும் பெரியம்மா
- தந்தை வழி சித்தப்பா மற்றும் சித்தி
- தாய் வழி சித்தப்பா மற்றும் சித்தி
- தாய் வழி பெரியப்பா மற்றும் பெரியம்மா
- மாமன் (தாயின் சகோதரர்)
- மாமி (தாயின் சகோதரரின் மனைவி)
- அத்தை ( தந்தையின் சகோதரி)
- அத்தையின் மகன்களும், மகள்களும்
- மாமனின் மகன்களும், மகள்களும்
- தாய் வழி சித்தி மகன்களும், மகள்களும்
- தாய் வழி பெரியம்மா மகன்களும், மகள்களும்
- தந்தை வழி சித்தி மகன்களும், மகள்களும்
- தந்தை வழி பெரியம்மாவின் மகன்களும், மகள்களும்
- தந்தையின் தந்தை (பிதாமகன்)
- தந்தையின் தாய் (பிதாமஹீ)
- தாயின் தந்தை (மாதாமஹன்)
- தாயின் தாயார் (மாதாமஹீ)
- தன்னுடன் பிறந்த சகோதரிகள் மற்றும் அவர்களின் கணவர்கள்
- சகோதரியின் பெண்கள்
- சகோதரனின் மகன்கள் (மருமான்)
450. புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட திருமணம் ஆன பெண்ணுக்கு பிறந்த வீட்டு மூன்று தீட்டுகளைத் தவிர, புகுந்த வீட்டின் ஒன்று முதல் பத்து நாட்களுக்கான தீட்டுக்கள் உண்டு.
மூன்று நாட்கள் தீட்டு :
451. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்களுடைய கோத்திரம் புகுந்த வீட்டுக் கோத்திரமாகி விடுவதினால் அவர்களுக்கு பிறந்த வீட்டு தீட்டு கிடையாது. அவளுடைய தாய் மற்றும் தந்தை இறந்தால் மட்டுமே அந்தப் பெண்ணிற்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டாம்.
452. ஒரு வேளை ‘X’ குடும்ப உறுப்பினரின் மரண செய்தி ‘Y’ குடும்பத்துக்கு பத்தாம் நாளன்று இரவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது இரண்டாவது தீட்டு காலத்தை ‘Y’ குடும்பத்தினர் இன்னும் எத்தனை நாள் அனுஷ்டிக்க வேண்டும்? அந்த நிலையில் அவர்கள் இன்னும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டும். அந்த தீட்டு முதல் தீட்டுக் காலம் முடிந்து அடுத்த மூன்று நாட்களுக்குப் பின்னரே போகும்.
453. ஆனால் ‘X’ குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் குறித்த அதே செய்தி ‘Y’ குடும்பத்துக்கு பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது பதினோராம் நாள் விடியற்காலையில், முதல் தீட்டு முடிவடைந்து குளிக்கப் போகும் முன் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ‘Y’ குடும்பத்துக்கு தீட்டுக் காலம் எத்தனையாக இருக்கும்? அதாவது ‘X’ குடும்பத்தில் இறந்து விட்டவரின் செய்தியை பத்து நாட்களுக்கு மேல், அடுத்த மூன்று மா தங்களுக்குள் ‘Y’ குடும்பத்தினர் எப்போது கேட்டாலும் அவர்கள் பத்து நாள் தீட்டு காக்கத் தேவை இல்லை. அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து மூன்று நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.
454. ஒருவருடைய மரணத்தினால் ஒரு குடும்பத்தினருக்கு மூன்று நாட்கள் தீட்டு ஏற்படும் என்ற நிலையில் அந்த மூன்று நாள் தீட்டை பற்றிய செய்தியை இறந்தவரது கர்மா முடிவடைந்த பத்து நாட்களுக்குப் பிறகு கிடைத்தாலும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டுமா? பத்து நாள் கர்மா முடியும் முன்னரே அதன் இடையில் அந்த செய்தி கிடைத்தால் எத்தனை நாட்கள் தீட்டு உண்டு ?
455. ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவருக்காக மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டிய பங்காளிகளுக்கு அந்த செய்தி மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களுக்குள் ஏதாவது ஒரு நாளில் கிடைத்தாலும், அந்த செய்தியைக் கேட்ட தினத்தில் இருந்து அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. அந்த செய்தி இறந்தவரின் பத்தாம் நாள் மாலை வந்தால் கூட அன்றில் இருந்து அடுத்த மூன்று நாட்கள் தீட்டு உண்டு.
456. ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவருக்காக மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டிய பங்காளிகளுக்கு அதே செய்தி பதினோராவது நாளில் இருந்து 13 ஆம் நாள் வரை என்று கிடைத்தாலும் ஸ்நான தீட்டு மட்டுமே உண்டு. ஆனால் 13 ஆம் நாள் சடங்குகள் முடிந்து 14 ஆம் நாளில் இருந்து எப்போது கிடைத்தாலும் மூன்று நாட்கள் தீட்டு உண்டு.
457. ஒருவர் மூன்று நாள் தீட்டுக் காலத்தில் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம் அந்த மூன்று நாள் தீட்டு காலத்தில் இருக்கும்போது இன்னொரு மூன்று நாள் தீட்டு செய்தி கிடைத்தால் தீட்டு காலம் எத்தனை ? மூன்று நாட்கள் தீட்டு செய்தி முதல் மூன்று நாளில் கிடைத்தாலும், மூன்றாம் நாள் இரவு வரை கிடைத்தாலும் முதல் மூன்று நாள் தீட்டோடு இரண்டாவது தீட்டும் விலகி விடும். அதாவது நான்காம் நாள் காலை குளித்ததும் இரு தீட்டுகளும் விலகி விடும்.
458. ஆனால் இரண்டாவது தீட்டின் செய்தி நான்காம் நாள் குளிப்பதற்கு முன்பாகவோ அல்லது குளித்த பின்னரோ, எப்போது கிடைத்தாலும் மீண்டும் மூன்று நாட்கள் தீட்டு காத்தப் பின்னர் நான்காம் நாள் குளித்தால் மட்டுமே தீட்டு போகும். (அதாவது முதல் மூன்று நாட்கள் தீட்டு + அடுத்த மூன்று நாட்கள் தீட்டு = ஏழாவது நாள் தீட்டு போகும்)
459. மூன்று நாள் தீட்டு (குடும்பத்து ஆண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு)
ஒரு குடும்ப ஆண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு கீழ் கண்டவர்களின் மரணத்தினால் மூன்று நாட்கள் தீட்டு உண்டு.
- தாயின் தந்தை (தாத்தா or மாதாமஹர் என்பார்கள்)
- தாயின் தாய் (பாட்டி or மாதாமஹீ என்பார்கள் )
- தாயார் வழி மாமா, மாமி (தாயாரின் சகோதரர்களை மாதுலன் என்பார்கள், அவர்களின் மனைவிகளை ‘மாதுலானி’ என்பார்கள்)
- தந்தையின் சகோதரிகள் (அத்தை)
- மாமனார், மாமியார்
- தாயின் சகோதரிகள் (சித்தி, பெரியம்மா மற்றும் அவர்களின் கணவர்கள்)
- விவாகமான சகோதரிகள்.
- சகோதரியின் பூணூல் போட்ட மகன் (மருமகன்)
- மகளின் உபநயனம் ஆன பேரன் (அவனை ‘ தௌஹித்ரன் ‘ என்பார்கள்)
- திருமணம் ஆன மகள்கள்
- சகோதரர்களை அந்த குடும்பத்தில் இருந்து இன்னொரு குடும்பத்திற்கு ஸ்வீகாரம் போன ஆண் மகன்
- பங்காளிகளின் (‘ஸபிண்டர்கள்’அல்லது ‘க்ஞாதி’அல்லது‘ தாயாதிகள் ’என்பார்கள்) திருமணம் ஆகாத பெண்கள்.
- பங்காளிகளின் பூணூல் போட்டாலும் போடாவிடிலும் ஏழு வயதான பிள்ளைகள்
- ஏழு வயதுக்குள், உபநயனம் ஆகாத மகன் மரணம். -பெற்றெடுத்த தாய் மற்றும் தந்தைக்கு மட்டும் தீட்டு
- பல் முளைக்காத சிசு மரணம். -பெற்றெடுத்த தாய் மற்றும் தந்தைக்கு மட்டும் 3 நாட்கள் தீட்டு
460. மூன்று நாள் பிறந்த வீட்டு தீட்டு (ஸ்வீகாரம் போன ஆண் மற்றும் பெண்)
- ஒரு குடும்பத்து ஆண் மகன் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகியிருந்தாலும், ஸ்வீகாரம் போன ஆண் மகனை பெற்றெடுத்த தாயார் (ஜனநீ என்பார்கள்), தகப்பனார் (ஜனக பிதா என்பார்கள்) மரணத்தில் ஸ்வீகாரம் போன அந்த ஆண் மகனுக்கு மூன்று நாள் தீட்டு உண்டு.
- ஒரு குடும்பத்து பெண் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகியிருந்தாலும், ஸ்வீகாரம் போன பெண்ணை பெற்றெடுத்த தாயார் (ஜனநீ என்பார்கள்) மரணத்தில் ஸ்வீகாரம் போன அந்த பெண்ணிற்கு மூன்று நாள் தீட்டு உண்டு.
- ஸ்வீகாரம் தரப்பட்ட வீட்டில் இருந்து திருமணம் ஆகிச் சென்று விட்டால் அவளுக்கு பிறந்த வீட்டின் மரணங்களில் செய்தி கேட்டதும் பந்து எனப்படும் உறவினர் ஸ்நானம் மட்டுமே உண்டு. வேறு எந்த தீட்டும் கிடையாது. ஆனால் ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்பத் தீட்டுக்கள் அனைத்தும் உண்டு.
461. மூன்று நாள் பிறந்த வீட்டு தீட்டு (திருமணம் ஆகி சென்று விட்ட பெண்களுக்கு)
மணமாகி விட்ட பெண் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் கோத்திரத்தை சார்ந்தவள் ஆகி விடுவதினால் அவர்களுக்கு பிறந்த வீட்டின் ஒரு சில தீட்டுக்கள் மட்டுமே உண்டு. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண்களுக்கு பிறந்த வீட்டில் கீழ் கண்டவர்கள் மரணத்தினால் மூன்று நாள் தீட்டு உள்ளது.
- உடன் பிறந்த சகோதரன்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்)
- உடன் பிறந்த சகோதரனின்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்) பூணூல் போட்ட மகன் (மருமகன்)
- தனது தந்தையின் இளையாள் மற்றும் மூத்தாள் எனப்படும் பிற மனைவிகள் (ஸபத்னீ மாதா என்பார்கள்)
புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட திருமணம் ஆன பெண்ணுக்கு மேல் கூறப்பட்டு உள்ள பிறந்த வீட்டு மூன்று தீட்டுகளைத் தவிர, புகுந்த வீட்டின் ஒன்று முதல் பத்து நாட்களுக்கான அனைத்து தீட்டுகளும் உண்டு.
பத்து நாட்கள் தீட்டு :
462. ஒரு குடும்பத்தில் தாய் தந்தையின் மரணத்தை அவர்களது மகன்களோ, திருமணம் ஆகாத பெண்களோ எப்போது கேட்டாலும், அதாவது எதோ தவிர்க்க முடியாத காரணத்தினால், செய்தி கிடைக்காமல், தாமதமாக, பத்து நாட்கள் கழித்து செய்தியைக் கேட்டாலும் கூட, அவர்களுக்கு செய்தியைக் கேட்ட தினத்தில் இருந்து பத்து நாள் தீட்டு உண்டு.
463. ஒரு வேளை தாய் மற்றும் தந்தையின் மரணச் செய்தி தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர்களுக்கு பத்து நாட்களுக்குள் கிடைக்காமல் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் மற்றும் தந்தை இறந்து எத்தனைக் காலம் ஆனாலும் சரி, அது குறித்து முதல் செய்தி எப்போது கேட்டாலும் சரி, அந்த செய்தி கிடைத்த நாள் முதல் அடுத்த பத்து நாட்கள் தீட்டு உண்டு.
464. அதை போலவே கணவர் தீட்டை ஒரு வருடத்துக்குப் பிறகும் எப்போது கேட்டாலும் மனைவிக்கு பத்து நாள் தீட்டு உண்டு.
465. ‘Y’ குடும்பத்தில் உள்ள உறவினர் இறப்பினால் ‘Y’ குடும்பத்துக்கு பத்து நாள் தீட்டு உள்ளதாக வைத்துக் கொள்வோம். ‘Y’ குடும்பத்துக்கு அந்த தீட்டு முடியாத நிலையில், அவர்களுடைய இன்னொரு குடும்ப உறவினருடைய இறப்பினால், அதாவது ‘X’ குடும்ப உறுப்பினரின் மரணத்தினால் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டால் இரண்டு தீட்டுக்குமான கால அளவு எத்தனை ?
466. முதல் பத்து நாள் தீட்டு முடியும் முன்னரே இன்னொரு பத்து நாள் தீட்டு குறித்த செய்தி- பிறப்பு தீட்டோ அல்லது இறப்பு தீட்டோ, அவற்றைக் குறித்து எந்த செய்தி வந்தாலும், அந்த இரண்டாவது பத்து நாள் தீட்டும், முதல் பத்து நாள் தீட்டோடு முடிந்து விடும். ஆனால் அந்த செய்தி முதல் தீட்டு முடிய உள்ள பத்து நாட்களுக்குள் வர வேண்டும்.
467. ஒருவர் மூன்று நாள் தீட்டுக் காலத்தில் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மூன்று நாட்களுக்குள் பத்து நாட்கள் தீட்டு உள்ள இன்னொரு மரணச் செய்தி வந்து விட்டால் அப்போது அந்த இரண்டு தீட்டுகளும் மூன்றாவது நாள் தீட்டோடு முடிந்து விடுமா, இல்லை பதிமூன்று நாட்கள் இருக்குமா?
468. மூன்று நாள் திட்டை விட பத்து நாட்கள் தீட்டு அதிகம் என்பதினால், மூன்று நாட்கள் தீட்டு உள்ள நிலையில், பத்து நாள் தீட்டைப் பற்றிய செய்தி என்றைக்கு கிடைத்தாலும், பத்தாவது நாள்தான் இரண்டு தீட்டு காலமும் முடிவுறும். உதாரணமாக 1 ஆம் தேதி மூன்று நாட்கள் தீட்டு பெற்றிருந்த நிலையில், 3 ஆம் தேதியன்று இன்னொரு பத்து நாள் தீட்டு பற்றிய செய்தி கிடைத்தாலும் அவர்கள் தீட்டு 10 ஆம் நாள் முடிவடைந்து விடும்.
469. ஆனால் அந்த பத்து நாட்கள் தீட்டு பற்றிய அதே மரணச் செய்தி, மூன்று நாட்கள் தீட்டு முடிந்த அடுத்த நாள் அதாவது நான்காம் நாளன்று கிடைத்தால், நான்காம் நாளில் இருந்து பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டும் .
470. ஒரு குழந்தை பிறந்த பின் பத்து நாட்களுக்குள் பிறந்த அந்தக் குழந்தை இறந்து விட்டால், பெற்றோர்களுக்கு குழந்தை பிறப்பினால் இருந்த பிறப்பு தீட்டும், குழந்தையின் இறப்பு தீட்டும் சேர்ந்து பத்தாவது நாள் இரண்டு தீட்டும் முடிவடைந்து விடும். அதாவது பிறப்பு தீட்டும், இறப்பு தீட்டும் சேர்ந்து சம காலத்தில் முடிந்து விடும். குழந்தை பிறந்து அடுத்த நாளோ அல்லது பத்தாவது நாளோ கூட அந்த குழந்தை இறந்தாலும் கூட பத்தாவது நாள் நாடு இரவு இரண்டு தீட்டும் முடிவடைந்து விடும் என்ற இந்த விதி மாறாது. பதினோராவது நாள் காலை ஸ்நானம் செய்த பின் இரண்டு தீட்டும் விலகி விடும்.
471. 13 நாள் கர்மாக்களை செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு, 13 நாட்கள் சடங்கு முடியும் முன்னால், குழந்தையின் பிறப்பு தீட்டும், இறப்பு தீட்டும் குறித்த செய்தி 12 நாட்களுக்குள் என்று வந்தாலும் (தனித்தனியே வந்தாலும் சரி, சேர்ந்தே வந்தாலும் சரி), 13 ஆம் நாள் காலை குளித்ததும் அனைத்து தீட்டும் போய் விடும். ஆனால் 13 ஆம் நாள் குளித்த பின்னர் இறப்பு தீட்டு செய்தி வந்தால், மீண்டும் அடுத்த மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டும். சுபஸ்வீகாரம் செய்ய முடியாது. தீட்டு கழிந்த பின்னரே 17வது நாளன்று சுபஸ்வீகாரம் செய்ய முடியும்.
472. பத்து நாள் தீட்டு உள்ள ஆண் ஒருவர் நோயினால் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? அப்படிப்பட்ட நோயாளியை எவராவது ஒருவர் தொட்டு விட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் மீண்டும் தொட்டு விட்டு குளிக்க வேண்டும். இப்படியாக பத்து முறை தொட்டு விட்டு பத்து முறை குளித்தால் நோயால் படுத்துள்ளவரின் தீட்டு சாஸ்திரத்தின்படி விலகி விடுமாம். நோயால் படுத்திருப்பவருக்கு பதிலாக இன்னொருவர் பத்து முறைக் குளிப்பதின் மூலம் பத்து நாளைய கர்மாவில் நோயால் படுத்துள்ளவர் கலந்து கொண்டு விட்டதாக தேவர்கள் ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்யாவசனம் செய்ய வேண்டும். இது முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையில், தர்ம சாஸ்திர முறையில் அமைந்த விதியாகும், விஞ்ஞான பூர்வமான காரணம் எதுவும் கிடையாது.
473. அது போலவே பத்து நாள் தீட்டு உள்ள பெண் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையில் கிடக்கிறார் என்றால் அவரை யாராவது ஒரு பெண்மணி 12 முறை தொட்டு விட்டு பன்னிரண்டு முறை குளித்து விட்டால் சாஸ்திரத்தின்படி அவளது தீட்டு விலகி விடுமாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்யாவசனம் செய்ய வேண்டும்.
474. ஒருவருடைய தந்தை இறந்து விட்டார். அவரது சடங்குகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளபோது, தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயாரும் இறந்து விட்டால் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் தாயார் மரணத்துக்காக ஒன்றரை நாள் தீட்டு மட்டுமே உண்டு. இருவரது மரணத்தினால் ஏற்பட்ட இரண்டு தீட்டுக்களும் அதாவது தந்தையின் பத்து மற்றும் தாயாரின் ஒன்றரை நாள் தீட்டு இரண்டும் சேர்ந்தே 13 ஆம் நாள் காரியத்துக்குள் முடிவடைந்து விடுவதினால் 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு மொத்த தீட்டு காலமும் விலகி விடும். ஆனால் அதற்குள் இருவருக்கும் செய்ய வேண்டிய 12 நாட்கள் சடங்குகளை பண்டிதர் கூறும் ஆலோசனையை ஏற்று அதன்படி செய்து முடிக்க வேண்டும்.
475. ஆனால் தாயாரின் மரணம் தந்தையின் சடங்குகள் நடக்கும் 11 அல்லது 12 ஆம் நாள் ஏற்பட்டால் தந்தைக்கான சுபஸ்வீகாரம் தந்தை இறந்து விட்ட 14 ஆம் நாள்தான் செய்ய முடியும். அன்றுதான் இரண்டு தீட்டும் விலகும். ஆனால் இருவருக்கும் செய்ய வேண்டிய 12 நாட்கள் சடங்குகளை பண்டிதர் கூறும் ஆலோசனையை ஏற்று அதன்படி செய்து முடிக்க வேண்டும்.
476. தாயாரின் மரணம் தந்தையின் சடங்குகள் நடக்கும் 13 ஆம் நாள் ஏற்பட்டால் தாயாருக்காக பத்து நாள் தீட்டு உண்டு. ஆகவே 13 ஆம் நாள் தந்தைக்கு செய்ய வேண்டிய சுபஸ்வீகாரம் தாயாரின் சுபஸ்வீகாரத்துடன் 26 ஆம் நாள்தான் செய்ய முடியும். இது குறித்து இருவருக்கும் செய்ய வேண்டிய 12 நாட்கள் சடங்குகளை பண்டிதர் கூறும் ஆலோசனையை ஏற்று அதன்படி செய்து முடிக்க வேண்டும்.
477. ஒருவருடைய தாயார் இறந்து விட்டார். அவரது சடங்குகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளபோது, தந்தை இறந்து விட்டால், தந்தை என்று இறந்தாரோ அன்றில் இருந்து பத்து நாட்கள் தீட்டு உண்டு. உதாரணமாக தாயாரின் மரண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும்போது ஐந்தாம் நாளன்று தந்தை மரணம் அடைந்து விட்டால் இருவரது தீட்டும் தந்தை மரணம் அடைந்த 5 + 10 = 15 ஆம் நாள் அன்றுதான் போகும். அதற்கு பின்னரே மீதம் உள்ள 11 மற்றும் 12 ஆம் நாள் சடங்குகளை செய்த பின் அதற்கு அடுத்த நாள் வீட்டில் சுபஸ்வீகாரம் செய்ய முடியும். இது குறித்து இருவருக்கும் செய்ய வேண்டிய 12 நாட்கள் சடங்குகளை பண்டிதர் கூறும் ஆலோசனையை ஏற்று அதன்படி செய்து முடிக்க வேண்டும்.
478. ஒரு குடும்பத்தில் தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட சடங்குகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன. அந்த சடங்குகள் முடியும் முன்னரே அந்த குடும்பத்தில் உள்ள மகன்களின் மனைவிகளோ, இல்லை மகன்களின் மகள்களோ அல்லது மகன்களோ, அல்லது திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ள மகளோ யார் இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எத்தனை நாட்கள் தீட்டு இருக்கும்?
479. மேலே கூறிய நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே முந்தய தீட்டோடு பிந்தைய தீட்டும் போய் விடும். அதாவது தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடியும் அதே தேதியிலேயே மேலே கூறிய நிலையில், அதாவது மகன்களின் குடும்பத்தில் ஏற்படும் மரணத்தினால் (மகன்களின் மனைவிகளோ, இல்லை மகன்களின் மகள்களோ அல்லது மகன்களோ, அல்லது திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ள மகளோ மரணம் அடைந்து விட்டதினால்) ஏற்பட்ட தீட்டும் சுபஸ்வீகாரத்துக்கு முன்னால் குளித்ததும் விலகி விடும்.
480. தந்தையின் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அவருடைய இரண்டாம் மனைவி அல்லது மூன்றாம் மனைவி என யார் மரணம் அடைந்தாலும் தந்தையின் மூலம் பிறந்த பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கும் பத்து நாட்கள் தீட்டு உண்டாம். ஆனால் அந்த செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்குப் பிறகு கேட்டால் தீட்டு காலம் மூன்று நாள் மட்டுமே.
481. மனைவி கர்பமாக இருந்தால் அவளது கணவர் வேறு எவருடைய சவத்தையும் தூக்கக் கூடாது. ஆனால் அவருடைய தாய், தந்தை அல்லது சந்ததி இல்லாத மூத்த சகோதரர்களின் சவத்தை சுமக்க தடை இல்லை.
482. பத்து நாள் தீட்டு (ஒரு குடும்பத்தினருக்கு)
ஒரு குடும்பத்தினருக்கு கீழ் கண்டவர்களின் மரணத்தினால் பத்து நாட்கள் தீட்டு உண்டு.
- தந்தை, தாய்
- உடன் பிறந்த சகோதரர்கள்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்), அவர்களது மனைவிகள்
- உடன் பிறந்த சகோதரர்களின் ஏழு வயதுக்கு மேல் ஆன ஆண் மகன்கள்
- உடன் பிறந்த திருமணம் ஆகாத சகோதரிகள்
- தந்தைக்கு எத்தனை மனைவிகள் (‘ஸபத்னீமாதா’க்களின்) இருந்தாலும் அவர்களுடைய மகன்கள் (அவர்களை ‘பின்னோதர சகோதரர்கள்’ அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)
- தந்தையின் தாய் மற்றும் தந்தை (தந்தை வழி பாட்டி மற்றும் தாத்தா)
- தந்தையின் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் (பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா மற்றும் சித்தி)
- தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் மகன்களும் (பின்னோத்ரன் அல்லது ஒன்று விட்ட சகோதரர்கள் என்பார்கள்) அவர்களது மனைவிகளும்
- தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் மகன்களின் மகன்கள் (பேரன்கள் அதாவது பெளத்ரன் என்பார்கள்) மற்றும் அவர்களது மனைவிகள்
- தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் திருமணம் ஆகாத மகள்கள் (ஒன்று விட்ட சகோதரிகள்)
- குடும்பத்து ஆண்களுக்கு பிறந்து ஏழு வயதுக்கு மேல் ஆன ஆண் குழந்தை
- குடும்பத்து ஆண்களுக்கு பிறந்து ஏழு வயதுக்கு கீழ் உள்ள பூணூல் போட்ட ஆண் குழந்தை (ஏழு வயதுக்கு கீழ் உள்ள பூணூல் போடாத ஆண் குழந்தை இறந்தால் தீட்டு கிடையாது. ஸ்னானம் மட்டுமே உண்டு)
- 7 தலை முறை தந்தை வழி பங்காளிகள் (ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள *ஆண்கள் அனைவரும் ‘ஸபிண்டர்கள்’அல்லது ‘க்ஞாதி’அல்லது ‘தாயாதிகள்’எனப்படுவர்).
- பத்து நாள் தீட்டு (ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கு)
- ஒரு குடும்பத்து ஆண் மகன் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகி விட்டால் ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கும் அவனது மனைவிக்கும் ஸ்வீகரித்த தந்தை மற்றும் ஸ்வீகரித்த தாயாரின் மரணம். (குறிப்பு:- ஒருமுறை இன்னொருவருக்கு ஸ்வீகாரம் போய் விட்டால் சாஸ்திரங்களின்படி ஸ்வீகாரம் எடுத்தவர்களே அவர்களுடைய தாயார் மற்றும் தந்தை ஆவார்கள்)
- 7 தலை முறை ஸ்வீகரித்த தந்தை வழி பங்காளிகள் (ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் ‘ஸபிண்டர்கள்’ அல்லது ‘தாயாதிகள்’ அல்லது ‘க்ஞாதி’அல்லது ‘பங்காளிகள்’ எனப்படுவர்).
483. பத்து நாள் தீட்டு (குழந்தை மரணம்)
- ஒரு குடும்பத்து ஆண்களுக்கு பிறந்து பத்து நாட்களே ஆன ஆண் குழந்தை அல்லது மணமாகாத பெண் குழந்தை என எந்த குழந்தை இறந்தாலும் கீழ்கண்டவர்களுக்கு மட்டும் பத்து நாள் தீட்டு.
- இறந்த குழந்தையின் தந்தை, தாய், மற்றும் மணமான சகோதரர்கள் மற்றும் பின்னோதர சகோதரர்கள் (அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)
பல காலமாக போதிக்கப்பட்டு வந்திருந்த தர்ம சாஸ்திர நெறி முறைகளை ஆராய்ந்து அவற்றை தொகுத்து அளித்திருந்ததில் காலம் காலமாக முன்னோடியாக காட்டப்படுவது கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும் ‘வைத்தியநாத தீக்ஷிதீயம் ஆசௌச காண்டம்’ என்பதாகும்.
அதைத் தவிர
- 17 ஆம் நூற்றாண்டில் தமிழாசுர முனிவர் என்பவர் எழுதி உள்ள ‘ஆசௌச தீபிகை’
- 1882 ஆம் ஆண்டில் யாழ்பாணத்தை சேர்ந்த வண்ணை மா. வைத்தியலிங்க பிள்ளை வெளியிட்டு உள்ள ‘ஆசௌச தீபிகை‘,
- எழு நூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட ‘அகோர சிவ பத்ததி’ என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூல்
- மஞ்சன்குடி வெங்கடராம சாஸ்திரிகள் எழுதிய ‘ஸம்க்ஷேப தர்ம சாஸ்திரம்’
- நித்யகாம்ய மஹாயக்ஞ சமிதியின் ‘ஆசௌசச் சுருக்கம்’
- 1933 ஆம் ஆண்டு திருவையாறு ஸ்ரீநிவாஸ பிரஸ் வெளியீடான ‘அபிநவாசௌச ஸங்கரஹம்’
- ஸ்ரீ ஜகத் குரு டிரஸ்ட் வெளியீடான ‘இறப்பு தீட்டு’
- 1937 ல் தஞ்சை மாவட்டம் பாபனாசம் தாலுகா கீழவிடயல் கிராமம் ஸ்ரீ ஆர். முத்துசாமி அய்யர் எழுதி வெளியிட்டுள்ள ‘வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரம்’
- கொக்குவில் வைதீககிரியாரத்னம் மயிலணி பிரும்மஸ்ரீ சோமாஸ்கந்த குருக்கள் எழுதி உள்ள ‘சிரார்த்த நியமங்கள்’ மற்றும்
- சென்னை திருவல்லிக்கேணி காரிமாறன் கலைகாப்பகம் வெளியிட்டு உள்ள ‘சூதகமும் ஆசௌசமும்’ எனும் புத்தகம் போன்றவற்றில் மரணத் தீட்டு மற்றும் அதன் சடங்குகள் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன.
- தீட்டு காலம் குறித்த விவரங்களை மேல் கூறிய நூல்களில் காணப்பட்ட செய்திகளின் அடிப்படையில் தொகுத்து எழுதி உள்ளேன். பண்டை காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் காணப்படும் பல செய்திகள் எளிதில் பாமர மக்களுக்கு விளங்கவில்லை என்பதினால் , பல வார்த்தைகளுக்கான விளக்கத்தை அகராதிகளில் தேடித் பார்த்து முடிந்தவரை அவை அனைத்தையும் விளக்கி உள்ளேன்.
-END-