–சாந்திப்பிரியா
4

48) மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகளை அடுக்கி வைத்து தயார் செய்யப்பட்டுள்ள சிதை மேடையை  இடபக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பூத உடலின் தலைப் பகுதி தெற்கு திசையில் இருக்கும்படி பாடையை சிதை மேடை மீது வைப்பார்கள்.  அதாவது உடலின் தலைப் பகுதியானது மயானத்தை நோக்கி வைக்கப்படும். சிதையில் பூதவுடல் வைக்கப்பட்டதும் பாடையுடன் சேர்த்துக் கட்டி இருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்க்கப்பட அந்த உடலில் உள்ள மேற்போர்வையைத் தவிர அதன் கீழ் உள்ள அரைஞாண் கயிறுவரை அனைத்தையும் எடுத்து விடுவார்கள். அதாவது போர்வையின் கீழ் உள்ள உடல்,  நிர்வாண நிலையில் வெற்றுடம்பாக இருக்கும்.

49) அதன் பின் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி சில சடங்குகளை செய்தபின், பங்காளிகள் மீண்டும் சவத்தின் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். கர்மாவை செய்ய வந்துள்ளவர் தனது இடது தோளில் சுட்ட களிமண்ணினால் செய்யப்பட்ட ஒரு காலி மண் குடத்தை ஏந்திக் கொண்டு முதலில் சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து அதில் கும்ப நீரை கொட்டிய பின், மேலும் அதில் அரிசி, சின்ன தங்கக்காசு அல்லது நாணயங்களைப் போட்டப் பின் சவத்தின் வாயில் அரிசியைப் போடுவார் (கர்மாவை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை கடைசி பகுதியில் வரும் பத்தியில் கூறி உள்ளேன்). இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும்.

50) அதன் பின் முன்போல மீண்டும் மண் குடத்தை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு ஒரு  சந்தனக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் சவத்தை இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் அவர் பின்னால் செல்பவர் சிறு கல்லினால் மண் குடத்தில் ஒரு சின்ன ஓட்டை இட அந்த ஓட்டை வழியே தண்ணீர் சவத்தின் மீது விழும். அதையும் இறந்தவரது உடலுக்கு செய்யும் கடைசி அபிஷேகம் என்பார்கள். அதன் இரண்டு தாத்பர் என்னென்ன?

51) முதலாவது  அந்த ஜீவன் தகிக்கும் தீயில் எரிந்து போனாலும், அதன் ஆத்மா தாகத்தோடும் பசியோடும் இருக்கக் கூடாது என்பதற்காக அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த குடத்தில் சமையல் செய்து ஜீவனின் பசியைப் போக்கி (பிண்டம்) , குடிப்பதற்கு தண்ணீரும் தருகிறோம் என்பதைக் குறிக்கும் செயல் அது. அந்த காலங்களில் மண் சட்டியில்தான் அரிசியை வேக வைத்து சமையல் செய்வார்கள். அது போலவேதான் தண்ணீரையும் குடத்தில் எடுத்து வருவார்கள். ஆகவே இரண்டுக்குமே குடமே பிரதானமாக உள்ளது. இப்படியாக  அந்த செயலை தகனம் செய்யப்பட உள்ள உடலுக்கு மயானத்தில் செய்யும்போது  அதைக் காணும் ஜீவனின் மனதில் மகிழ்ச்சி  ஏற்படுமாம்.

52)  இரண்டாவது தத்துவம் என்ன?   குடம் என்பது உடலைக் குறிப்பது. மண் குடம் நிலையற்ற தன்மையைக் கொண்டது. அது கீழே விழுந்தால் பிற உலோகப் பொருட்களைப் போல நசுங்காமல், உடைந்து போகக் கூடிய பொருளாகும். அந்த மண் குடத்தைப்  போன்றதே இந்த உலக வாழ்கையும் உள்ளது. பிறந்தவருக்கு வாழ்வு நிரந்தரம் அல்ல. குடத்தை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடும் இருக்கும் என்பதைப் போலவேதான் நாம் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் பிறருக்கு எந்த விதத்தில் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு வாழ வேண்டும். ‘இதோ உடைந்து போன இந்த மண் குடத்தில் இருந்து நீர் வெளியேறுகிறதே அதைப் போலவேதான் நம்முடைய ஜீவன்களும் மண் குடம் போன்ற இந்த உடலை விட்டு வெளியேறுவோம் . ஆகவே உள்ளவரை பிறருக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் ‘ என்று அந்த ஆத்மா அங்குள்ளவர்களுக்கு  எடுத்துக் காட்டுவதை உணர்த்துவதே அதன் இரண்டாவது  தத்துவம்.

53) குடம் என்பது மனித உடலைக் குறிப்பது. மண் குடத்தில் நிறப்பப்பட்டு உள்ள தண்ணீர் என்பது உடலின் உள்ளே உள்ள ஆத்மாவாகும்.  மூன்று முறை குடத்தை துளையிட்டு தண்ணீரை வெளியேற்ற வைப்பது  உடலை விட்டு வெளியேறும் ஆத்மா மூன்று சங்கல்பங்களை தான்  எடுத்துக் கொண்டு  வெளியேறுவதைக் குறிக்கும் சடங்காம்.  அந்த மூன்று சங்கல்பங்கள் என்னென்ன?

சிதையை சுற்றி வருகையில் குடத்தில் 
போடப்பட்ட சிறு ஓட்டையில் இருந்து 
வெளியேறும் நீர் சவத்தின் மீது விழுகிறது

54) இந்த மண்ணுலகில் ஒரு ஆத்மாவானது பிறப்பு எடுத்ததும் மண் ஆசை, பெண் ஆசை மற்றும் பொருளாசையுடன் அலைந்து திரிகிறது. அதனால்தான்  ஆத்மாவானது உடலை விட்டு வெளியேறும்போது  அந்த மூன்று ஆசைகளையும் அங்கேயே அழித்துக் கொண்டு, ‘இனி மண் உலகில் உள்ளவர்களுக்கும்  ஆத்மாவான எனக்கும் எந்த பந்தமும் கிடையாது, நான் சுதந்திரமானவன், எங்கு வேண்டுமானாலும் சென்று பிறப்பேன்.  எப்படி உடைந்து போன மண் குடத்தை மீண்டும் ஓட்ட வைக்க இயலாதோ அப்படித்தான் இப்போது நான் வெளியேறிய உடலுடன் என்னை மீண்டும் ஓட்ட வைக்க இயலாது’ என்ற சங்கல்பத்துடன்  உடலை விட்டு வெளியேறும். அது போலவேதான் வாழ்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவித்தப் பின் வயதான காலத்தில் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டத்தில் ஒவ்வொருவரும் காம, குரோத மற்றும் இச்சைகளை குறைத்துக் கொள்ளத் துவங்க வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே  அதை  ஒரு போதனையாக வைத்துள்ளார்களாம்.

55)   உடைந்த ஓட்டையில் இருந்து வெளியேறிய நீர் உடலின் மீது விழுந்து அந்த உடலின் மீதிருந்து  பூமியிலே சிந்தும் தண்ணீர், அந்த ஜீவன்  பூமாதேவி மீது ஆணை இட்டு அந்த சங்கல்பத்தை  எடுத்துக் கொள்வதைக் காட்டுவதான   ஐதீகம். ஆகவே மண் குடத்தை ஓட்டை இட்டு தண்ணீரை உடல் மீது விழ வைப்பது பக்தி மார்கத்தை வலுப்படுத்த செய்யப்பட்ட ஆன்மீக போதனை ஆகும். இதற்கு எந்த விதமான விஞ்ஞானபூர்வமான  காரணமும்  கிடையாது.  இனி கர்மாவை தொடர்வோம்.

56) மூன்றாவது சுற்று முடிவில் கர்மாவை செய்பவர் சிதையை பார்க்காமல் சிதையின் எதிர் திசையைப் பார்த்து  நின்றபடி ‘ ஓம்’ எனக் கூறிக் கொண்டே சந்தனக் கட்டையை ( அதில் சிதையை எரிக்க நெருப்பு இருக்கும்) சிதையின் தலைப் பகுதியில் வைத்தப் பின் குடத்தை உடையும்படி முன்புறமாக கீழே போட்டு விடுவார். இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும். சில குடும்பங்களில் கர்த்தா சிதையை பார்த்தபடி நின்றவாறு சந்தனக் கட்டை கொள்ளியை சிதை மீது வைக்கும் பழக்கமும் உண்டு. சிதைக்கு கொள்ளி வைத்தப் பின் கர்த்தாவானவர் பிரேதத்தின் பாதங்கள் உள்ள பகுதிக்குச் சென்று தன் விரலில் அணிந்திருந்த தர்பைப் புல்லினால் ஆன பவித்திரம், பூணூல் போன்றவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் உடல் முழுவதும்  எரியும் வரை அங்கேயே நின்று கொண்டு இருப்பார்கள்.

57) முன் காலங்களில் விறகுகளை அடுக்கி அதன் மீது பிணத்தை வைத்து எரித்தது போல் இல்லாமல் இந்த காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் மின்னடுப்பில் பிணங்களை எரித்து விடுவதினால் சிதை பீடத்தில் வைத்த சவத்திற்கான சடங்குகளை முடித்தப் பின் பாடையுடன் கூடிய உடலை எடுத்து வந்து மின்சார யந்திரத்தின் மேடை மீது வைத்தப் பின் சம்பிரதாயமாக கொள்ளிக் கட்டையை அதில் வைப்பார்கள்.  அதன் பின் அங்குள்ள தொழிலாளி அந்த பாடையுடன் உள்ள உடலை யந்திரத்தின் உள்ளே தள்ளி கதவை மூடிவிடுவார். உடல் சற்று நேரத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். இந்த முறையில் செய்யப்படும் கர்மா சாஸ்திர விதிப்படி சரியா அல்லது தவறா என்ற விவாதம் தேவை அற்றது. காரணம் மின் அடுப்பிலும் உள்ளே எரியும் நெருப்பே உடலே பஸ்பமாக்கி  விடுகிறது என்பதினால் சாஸ்திர விதிப்படி இது தவறல்ல.

 சாதாரண முறையில் செய்யப்படும் தகனம் 
 மின்அடுப்பு  யந்திரத்தில் செய்யப்படும் தகனம்

58) அதன் பின் பூதவுடல் எரிந்து போன அரை மணி நேரத்திலேயே அங்குள்ள தொழிலாளி யந்திரத்தில் இருந்து சாம்பலையும் எலும்பையும் எடுத்து கர்த்தா செய்பவரிடம் தருவார்கள்.  அங்கு சில சடங்குகளை செய்தபின் அவற்றை எடுத்து  அவர் பால் நிறப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அதில் அவற்றைக் கரைத்தப் பின்  அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்துவிட்டு வீடு திரும்புவார்கள். அதை சஞ்சயனம் என்று கூறுவார்கள். இந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்போது புரோகிதர்கள் சில சடங்குகளை செய்ய  மந்திரம் ஓதுவார்கள். எலும்புகளை எடுத்ததும்  கர்த்தா முக சவரம் செய்து கொண்டு தாடி மீசைகளை எடுத்து விடுவார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்வார்கள். அதன் பின் அங்கேயே குளித்தப் பின் குடத்தில் போடப்பட்ட எலும்பை நதிக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த பழக்கமும் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும்.

அதாவது இறந்தவர்களுக்காக செய்யும் அடுத்த 13 நாட்களுக்கான காரியங்களை இனி முக மலர்ச்சியோடு செய்வேன் என்பதைக் எடுத்துக் காட்டும் ஒரு பாவனை ஆகும். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. பொதுவாகவே மந்திரவாதிகள் மற்றும் தீவினை , ஏவல்களை செய்பவர்கள் பெரும்பாலும் யார் மீது ஏவல் வைக்க வேண்டுமோ அவர்களது ரோமங்களைத்தான் மூலமாக உபயோகித்துக் கொள்ள முயல்வார்கள் . அதன் காரணம் தீய ஆவிகள் ரோம துவாரங்கள் வழியேதான் எளிதில் சென்று அமர்ந்து கொண்டு அவர்களை தாக்குமாம். அதை போலவேதான் இறந்து போனவர்களின் ஆத்மாக்களும் அவர்களது ரத்த சம்மந்தம் உள்ளவர்களது, அதாவது அவர்கள் மீது அதிக அளவு பாசம் வைத்துள்ளவர்களது முடியில் சென்று அமர்ந்து கொண்டு வீடு திரும்ப முயலுமாம். இதனால்தான் அந்த காலங்களில் மயானங்களில் சென்று திரும்பும் அனைத்து உறவினர்களும் மொட்டை அடித்துக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இன்னமும் சில கிராமங்களில் அந்த ஊரில் உள்ள அனைவருமே ஒருவரது இறப்பில் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது.

எறிந்த இடத்தில் இருந்து எலும்புகளை
பொறுக்கி  எடுப்பார்கள்

59) மயானத்தில் மின் அடுப்பில் உடலை எரிக்காமல் விறகுக் கட்டை மீது வைத்து மயான பூமியிலேயே சாதாரண முறையில் தகனம் செய்பவர்கள் பிணத்தை தகனம் செய்த மறுநாள் மயானத்துக்குப் போய் பிணம் எரிக்கப்பட்ட இடத்தில் சாம்பல் மீது  பாலை ஊற்றி  அதில் கிடக்கும் எலும்புகளை பொறுக்கி எடுத்து வந்து அவற்றை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அதில் அவற்றைக் கரைத்தப் பின் அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்தப் பின் வீடு திரும்புவார்கள். அதையும்  சஞ்சயனம் என்றே கூறுவார்கள். இவை அனைத்தும் முதல் நாள் சடங்கு என்றாலும், பிணத்தை எடுத்த அடுத்த நாள் வரை தொடர்கிறது. அதன் காரணம் மின் அடுப்பில் உடனடியாக உடல் எரிந்து விடுவதைப் போல விறகுக் கட்டையில் அத்தனை விரைவாக உடல் எரிந்து விடாது. ஆகவே மறுநாள்தான் எலும்பை எடுக்க மயானத்துக்கு செல்ல வேண்டும். சில வீடுகளில் அந்த சடங்கு முடிந்தப் பின்னரே,  மூன்றாம் நாள் கல் ஊன்றி கர்மாவின் பிற காரியங்களைத் தொடர்வார்கள்.

எதற்காக பாலில் எலும்புக்களைப் போட்டு எடுத்துச் செல்கின்றார்கள் ? பிறந்த குழந்தைக்கு முதலில் உணவை தருவது அதை பெற்று எடுத்த தாயின் தாய்பால் ஆகும். இறந்தவர்களது ஆத்மாவும் அதனதன் விதிப்படி எங்கோ சென்று குழந்தையாக பிறப்பு எடுக்கும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவருமே, மனிதர் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல மற்றும் முதல் தாய் சக்தி தேவியே என்பதினால் அவளது குழந்தையாகவே பிறப்பு எடுத்து மரணம் அடைந்துவிட்ட ஆத்மாவும், அடுத்த பிறவி எடுக்கும்வரை பசி தாகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அதை பிரபஞ்சத்திலே படைத்த சிவசக்தியின் அமுத பாலை உடலை விட்டு வெளியேறி விட்ட அந்த ஆத்மா  குடித்து விட்டு,  அடுத்து ஒரு வருட காலம் தமது உறவினர் செய்யும் காரியங்களை ஏற்றுக் கொண்டு தனது பயணத்தை துவக்குவதான தாத்பர்யம் ஆகும்.  இதனால்தான் மரணம் அடைந்தவர்களுக்கு செய்யப்படும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது, கால ஓட்டத்தில் அவற்றை யாரும் புரிந்து கொள்ளாமல் ஒரு யந்திரம் போல அனைத்தையும் செய்கின்றார்கள் .

எலும்புகளையும், சாம்பலையும் நதியில் 
அல்லது நீர் நிலையில் கரைப்பார்கள்

60)  தகனம் செய்த அடுத்த நாளில் இருந்து எங்கே சடங்குகளை செய்ய கல் ஊன்றி உள்ளார்களோ அங்கு சென்று இரண்டாம் நாள் சடங்குகளை துவக்குவார்கள். அதைத் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் காரியங்கள் நடைபெற்று முடியும். பதிமூன்றாம் நாள் சுபகாரியம் வீட்டில் நடைபெறும். அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம். முதல் நாளன்று கல்லை ஊன்றி பாஷாண ஸ்தாபனம் செய்யாவிடில் மூன்றாம் நாளன்று  கல்லினால் சம்பிரதாயமாக இரண்டு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வார்கள்.

61) கல் ஊன்றுதல் என்பது என்ன?  ஒருவர் இறந்த உடனேயே ஆத்மாவானது உலகை விட்டு வெளியேறிச் சென்று விடுவது இல்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் பத்து நாட்கள்வரை அந்த ஆத்மாவானது பூவுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம். அதனால்தான்  பத்து நாட்களும் பூமியிலேயே தங்கி இருக்கும் ஜீவனை பூமியிலே புதைத்த கற்களில் (பாஷாண ஸ்தாபனம்) மந்திர சக்திகள் மூலம் செலுத்தி (ஆவாஹிப்பது என்பார்கள்)   அதற்கு தினமும் எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) கொடுத்து உயிருடனான ஜீவாத்மாவாக பாவித்து அதை ஜீவித்து இருக்க வைப்பார்கள். இப்படியாக கல் ஊன்றி செய்யப்படும் சடங்கை முதல் நாளில் ஆரம்பிக்காவிடில் ஒற்றைப் படையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாம் நாளன்று துவக்கி  அனைத்து முந்தைய நாட்களுக்குமான சடங்கையும்  சேர்த்து  அன்றே செய்து முடிப்பார்கள் .எந்த ஒரு நிகழ்ச்சியிலும், காரியங்களிலும் முதலில் வணங்க வேண்டியது வினாயகப் பெருமானே. அவருக்கு பிறகே மற்ற தெய்வ ஆராதனைகள் துவங்கும். அதை போலவேதான் எண்களில் முதலில் துவங்குவது ஒன்று எனும் ஒற்றைப்படை எண் ஆகும், அதை தொடர்வதே பிற எண்கள்.  இதனால்  ஒன்று என்பது வினாயகப் பெருமானுக்கு இணையான எண் எனக் கருதி, வைதீக காரியங்களில் ஒற்றைப்படை அல்லது அதன் அடிப்படையில் வரும் ஒற்றைப்படை எண் தினங்களில் காரியங்களை துவங்குவார்கள். முன் காலங்களில் முக்கியமாக கர்மாக்களில் இதை கடைபிடித்தார்கள் என்பதாக கருத்து உள்ளது.

62) கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடமே  அந்த சடங்குகள்  செய்து முடிக்கப்படும்வரை  மந்திர சக்திகளினால் ஆன புனிதமான கைலாயம் மற்றும் இந்திர லோகமாக அந்த ஆத்மாக்களுக்கு இருக்கும் என்பது ஐதீகம் ஆகும்.  அங்கு இறைவீகம் நிறைந்து இருக்கும் என்பார்கள். ஏன் என்றால் இறந்து போனவருடைய ஆத்மா அங்கு கல்லின் உள்ளே அமர்ந்திருக்கும். அங்கு அதை தன கட்டுப்பாட்டில் வைத்துள்ள வஸுக்கள் இருக்கும். ஆத்மாவை தம் வசம் வைத்துள்ள வஸுக்கள் தினமும் மந்திர சடங்குகளினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் அந்த தேவலோகத்திற்கு அழைத்து வந்து கர்மாவில் கலந்து கொள்ள வைக்கும் என்பார்கள்.  அதனால் அந்த ஆத்மாவும்  தமக்கு  அந்தஸ்தை தரும் வகையில் செய்யப்படும் சடங்குகளை மனதார ஏற்றுக் கொண்டு தாம் வாழ்ந்திருந்த  குடும்பத்துக்கு மனதார ஆசிகளை அளிக்குமாம்.  அதே வஸுக்கள்தான் அந்த ஆத்மாவை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அதன் குடும்பத்தினர் வாழும் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்து விட்டு வர துணை புரியும்.

63)  ஒருவர் இறந்து விட்டால் அவர் குடும்பத்தினர் முதல் நாளைய சடங்குகள் அனைத்தையும்  குடும்ப மனிதர் இறந்து போன அன்றே  செய்யத் துவங்குவார்கள். ஆனால் தற்காலத்தில்  பலரது உறவினர்களும் கர்த்தா செய்பவரும் வெளி ஊர்களில் இருப்பதினால் அவர்களால் இறந்த அன்றே வர இயலாமலும் இருக்கும்.  அதன் காரணமாக   கர்மாவை அவர்கள் வரும்வரை துவக்க மாட்டார்கள். சாஸ்திர விதிப்படி  அது சரியானதா அல்லது தவறானதா என்ற கேள்வி எழலாம்? ஒருவர் மரணம் அடைந்ததும், அந்த நேரத்தில் இருந்து கர்மாவை செய்யத் துவங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் அளவு என்ன, விளக்கம் என்ன?

…………..தொடரும்