அத்தியாயம் – 19

அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா கேட்டார் ‘குருவே, நீங்கள் ஒரு குருவின் மகிமைக் குறித்துக் கூறிக்கொண்டே இருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். எனக்கொரு சந்தேகம் உள்ளது. கருநெல்லி மரம் என்று கூறுகிறீர்களே, அந்த மரத்தின் மகிமை என்? எதனால் அதன் அடியில் சென்று ஸ்வாமிகள் அமர்ந்தார் என்பதையும் எனக்கு விளக்குவீர்களா?’ என ஆவலுடன் கேட்க சித்த முனிவர் அதையும் கூறலானார்.

‘நமத்ஹரகா, கருநெல்லி மரத்துக்கு தெய்வீக குணம் மட்டும் அல்ல அதற்கு மருத்துவ குணமும் உண்டு. அதன் அடியில் சென்று அமர்ந்தால் அந்த இடம் சூடு இல்லாத  குளுமையான இடமாக இருக்கும்.  அந்த மரத்தின் குணம் தன் இலைக்கு அடியில் சுற்றி உள்ள இடத்தை குளுமையாக வைத்து இருப்பதே ஆகும். முன்னர் ஒருமுறை ஹிரண்யகசிபுவை அழிக்க விஷ்ணு பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை கொன்றவுடன்  அவர் விரல்கள் எல்லாம் நெருப்பு சூடு பட்டது போல வெந்து போயின. ஆகவே அவரை அழைத்து வந்து கருநெல்லி மரத்தடியில் அமர வைத்து  அவருடைய விரல்களில் அத்தி மரத்தின் பழங்களை நசுக்கி சாறு எடுத்து தடவிவிட அவர் விரல்களில் ஏற்பட்ட எரிச்சல் அடங்கிப் போயிற்று.  அதனால் மகிழ்ச்சி அடைந்த திருமாலும் இலட்சுமியும் அந்த மரத்திற்கு ‘அது கற்பக விருட்ஷமாக கருதப்படட்டும்’ என்று ஆசி கூறினார்கள்.  மேலும் அதன் அடியில் அமர்ந்து கொண்டு எவர் ஒருவர் தபம் புரிந்தாலும் அவர்கள் பெரும் செல்வ பாக்கியத்தைப் பெறுவார்கள்.  அவர்கள் வேண்டியது கிட்டும் என்றும் ஆசி கூறினார்கள். அது மட்டும் அல்ல அந்த மரத்தின் அடியில் குளிப்பது கங்கையில் குளித்ததிற்கு சமமாகும், வாரிசு அற்ற பெற்றோர் அங்கு வந்து வேண்டினால் மழலை செல்வம் பெறுவார்கள் என்றார். ஏன் என்றால் அந்த மரத்தடியில் எப்போதுமே விஷ்ணுவும் இலஷ்மி தேவியும் வாசம் செய்வார்கள் என்பதினால் அப்படிப்பட்ட ஆசிகளைக் அளித்து விட்டு சென்றார்கள்.

அதனால்தான் அந்த மரத்தின் மகிமையை நன்கு உணர்ந்திருந்த நம்முடைய குருதேவரும்  இந்த மரத்தடியில் வந்து தங்கி இருந்தார். எப்போதுமே மரத்தடியிலேயே தங்கி உள்ளாரே, அவர் எப்படி, எப்போது பிட்ஷை எடுக்கச் சென்று உணவை பெறுகிறார் என அக்கம் பக்கங்களில் இருந்தவர்கள் வியந்தார்கள். ஏன் எனில் அங்கு வந்தப் பின் அவரை யாருமே பிட்ஷை எடுத்துப் பார்க்கவில்லை. ஆனால்  அந்த இடத்தில் வாசம் செய்து வந்த அறுபத்தி நான்கு யோகினிகளும் அவருக்காக வேறு வேடங்களில் சென்று பிட்ஷை எடுத்து வந்து அவருக்கு தந்தது யாருக்குமே தெரியாது.

தினமும் அந்த அறுபத்தி நான்கு யோகினிகளும் மதியம் வந்து குருதேவரை தங்களுடன் அழைத்துச் சென்று பிட்ஷையை  தந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்து அழைத்ததும் அவர்கள் பின்னால் குரு நடந்து செல்வார். அந்த நதியை  அவர்கள் நடந்து செல்லும் பொழுது ஒரு பாதைப் போல அந்த நதி  விலகி வழியை விடும்.  அவர் சென்றதும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடும்.

 இப்படி தினமும் நடந்து கொண்டிருந்ததை ஒருநாள் கங்கானுஜ் என்ற பெயரைக் கொண்ட விவசாயி பார்த்து விட்டான். யோகினிக்கள் அந்த வழியாக ஸ்வாமியை அழைத்துச் செல்வதைக் பார்த்து விட்டான். ஆகவே அவர் நிச்சயமாக தெய்வீக அவதாரமாகவே இருக்க வேண்டும்   என்பதைப் புரிந்து கொண்டவன் மறு நாளும் அதே நேரத்தில் அங்கு வந்து மறைந்து நின்று கொண்டு  நடந்ததைக் கண்டான். இப்படியாக நடைபெற்றுக் கொண்டு இருந்ததை சில நாட்கள் கவனித்தவன்  ஆச்சர்யம் அடைந்து ஒருநாள் குரு நடந்து செல்லும்போது அவருக்குப் பின்னால் சப்தம் போடாமல் தானும் மெல்லத் துவங்கினான். அந்த யோகினிகள் குருவிற்கு பூஜை  செய்து பிட்ஷை  தருவதையும்  கண்டான். அதே சமயம் ஸ்வாமிகளும் அவனைப் பார்த்து விட்டார். ஆகவே ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து தான் ஆவல் மிகுதியினால் அந்த தவறை செய்து விட்டதாகவும், ஆகவே  தான் செய்து விட்ட  தவறுக்காக மன்னிப்பைக் கேட்டான். ஆனால் கருணை மனம் கொண்ட ஸ்ரீ நருசிம்ம ஸ்வாமிகளோ அவனிடம் கூறினார் ‘மகனே நீ என்னுடைய தரிசனத்தை  பெற்று  விட்டதால் இனி உனக்கு எந்த விதமான துயரங்களும் இனி வராது.  நீ இனிமேல் பயப்படத் தேவை இல்லை. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்.  நான் இந்த ஊரில்  உள்ளவரை இதைப் பற்றி எவரிடமும் கூறக் கூடாது. அப்பொழுதுதான் உனக்கு நல்லவை நடக்கும்’.

ஆகவே அங்கு நடந்ததைப் பற்றி எவரிடமும் மூச்சு விடாமல் கங்கானுஜ் தினமும் அதிகாலையில் குளித்தப் பின்னர் ஸ்வாமிகளை சென்று தரிசனம் செய்தப் பின் அவரை வணங்கி வரலானான்.  அப்படி இருக்கையில் ஒருநாள் அவன் ஸ்வாமிகளிடம் கேட்டான் ‘மகானே நான் எதுவும் அறியாத மூடன் ஆவேன். எனக்கு நெடுநாளாக காசிக்குச் சென்று கங்கையில் குளித்து பாபங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் இன்றுவரை அது நிறைவேறவில்லை. அதுவே எனக்கு பெரிய மனக்குறையாக உள்ளது’  என்று வருத்தப்பட்டான்.

அதைக் கேட்ட ஸ்ரீ நருசிம்ம ஸ்வாமிகள் கூறினார்   ‘கங்கானுஜ், நீ கவலைப் படாதே. இங்குள்ள கிருஷ்ணா நதி கங்கைக்கு சமமானது. உன்னுடைய பக்தியையும், சிரத்தையையும் கண்டு மனம் மகிழ்கிறேன்.  ஆகவே என்  பாதுகைகளை கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள். நான் கூறும்போதுதான் கண்களை திறக்க வேண்டும்’.

ஸ்ரீ நருசிம்ம ஸ்வாமிகள் கூறியது போல அவர் பாதுகைகளை கையில் ஏந்திக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். அவர் ‘கண்களை திற’ என்றபோது கண்களை திறந்து பார்க்க தான் பிரயாகையில் இருப்பதைக் கண்டான். அப்படியே ஆனந்தம் அடைந்து நதியில் குளித்தான். அது போலவே அவர் கண்களை மூடிக் கொண்டும், திற எனும்போது திறக்கவும் தான் காசி, கயா போன்ற இடங்களிலும் பல்வேறு ஆலயங்களின் உள்ளேயும் இருப்பதைக் கண்டான்.

காசி விஸ்வநாதர், துந்தி கணபதி, விஸ்வேஸ்வரர், அன்னபூரணி, விசாலாக்ஷி மற்றும் கால பைரவர் போன்ற ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து செய்ததும் அன்று மாலையே மீண்டும் அமரேஷ்வரரில் இருந்த கருநெல்லி மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள்.

அதன் பின்னர் ஸ்வாமிகள் அங்கிருந்துக் கிளம்பிச் செல்ல  முடிவு செய்தார். அதற்கு அந்த யோகினிகள் உடன்படவில்லை. அவரே அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அனால் அவர்களிடம் அவர் கூறினார்  ‘யோகினிகளே உங்கள் கோரிக்கையை என்னால் ஏற்க முடியாது. நான் இங்கு வந்து பல காலம் ஆகி விட்டது. நான் இங்கு தங்கி உள்ளது பலருக்கும் தெரிந்து விட்டது. ஆகவே அதிக அளவில் மக்கள் வந்து என்னுடைய தவத்துக்கு இடையூறு செய்கிறார்கள். அதனால்தான் நான் இங்கிருந்து செல்ல முடிவு செய்து விட்டேன். நான் செல்லும் முன்னர் என்னுடைய நினைவாக என்னுடைய பாதுகைகளை இங்கேயே விட்டுச் செல்கிறேன்.

இங்கு வந்து என்னுடைய பாதுகைகளை வணங்கி, துதித்து வேண்டிக் கொள்பவர்களது குறைகளை நீங்கள் நீக்க உதவ வேண்டும்.  எனக்கு எப்படி நீங்கள் தீட்ஷை பெற்றுக் கொண்டு பசி இல்லாமல் வைத்து இருந்தீர்களோ  அப்படியேதான் இங்கு என்னுடைய பாதுகைகளை வணங்கிய பின் அன்னபூரணியை  வழிபடும் பக்தர்கள் வயிறு காயாமல் செல்ல தினமும் அன்னதானம் நடைபெறும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். இங்குள்ள தீர்த்தங்களில் குளித்து விட்டுச் செல்பவர்களது பாபங்கள் விலகும். கருநெல்லி மரத்தை ஏழுமுறை பிரதர்ஷணம்  செய்தப் பின் பூஜை செய்தால் குழந்தை இல்லாதவர்கள் மழலை செல்வம் பெறுவார்கள். எனது பாதுகை மற்றும் கருநெல்லி மரத்தை பிரதர்ஷணம் செய்யும் வெண்குஷ்ட நோயினால் பீடிக்கப்படவர்களது வெண் குஷ்ட நோயும் விலகும். உங்களுக்கு ஒரு ரகசியம் கூறுவேன். நான் உடலளவில் இங்கு இல்லை என்றாலும், நான் இங்குதான் சூஷ்மமாக  உலவிக் கொண்டே இருப்பேன்’ என்று கூறியதும் அப்படியே அங்கிருந்து மறைந்து விட்டார் (இத்துடன் அத்தியாயம் -19 முடிவடைந்தது).

…….தொடரும்