…………அத்தியாயம் -2(ii)

குரு தத்துவத்தின் விளக்கத்தை தமக்குக் கூறுமாறு கேட்ட நமத்ஹரகாவுக்கு சித்த புருஷர் கூறலானார் ”மகனே, நான் கூறுவதை காது கொடுத்து நன்றாக கேட்டுக் கொள். உன் அனைத்து சந்தேகங்களும் விலகும்”. இப்படியாக கூறி விட்டு கதையை தொடர்ந்தார் ”பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது. அப்போது விஷ்ணுவையும், பிரும்மாவையும் பரமாத்மன் படைத்தார். விஷ்ணு ஒரு கடலில் பெரிய இலையில் படுத்துக் கொண்டு இருந்தபோது (அந்த நிலையில்தான் விஷ்ணு படைக்கப்பட்டாராம்) அவர் வயிற்றில் இருந்து ஒரு தொப்பிள் கொடி மேலெழுந்து வந்து நின்றது. அதில் பிரும்மா அமர்ந்திருந்தார் (பிரும்மா இப்படித்தான் படைக்கப்பட்டாராம்). ‘இனி வராஹ கல்பா எனும் புதிய உலகைப் படைப்பாய்’ என பிரும்மாவுக்கு பரபிரும்மன் ஆணை பிறப்பிக்க, பிரும்மாவும் முதலில் நான்கு பக்கங்களிலும் என்னென்ன உள்ளது திரும்பிப் பார்க்க அவருக்கு நான்கு முகங்கள் முளைத்தன. அவற்றில் இருந்து நான்கு வேதங்கள் வெளி வந்தன. அவை வெளி வந்தவுடன் பிரும்மாவுக்கு தலை கனம் ஏற்பட்டது. என்னால் அல்லவா நான்கு பக்கங்களிலும் நான்கு வேதங்கள் வந்துள்ளது என பெருமையுடன் அமர்ந்து இருந்து பூமியைப் படைக்க ஒரு ஷணம் மறந்தார். அதைப் பார்த்த விஷ்ணுவும், பிரும்மாவை நோக்கி, ‘பிரும்மனே கீழே படுத்துள்ள என்னையும் பாரும்” என்றார். அப்போதுதான் தன் சுய நினைவுக்கு வந்த பிரும்மாவும் கீழே நோக்கி விஷ்ணுவைப் பார்க்க பூமியும் பிறந்தது. பலவிதமான ஜீவராசிகளும் படைப்பை பெற்றன. மூன்றாவதாக மனித இனங்கள் வெளிவர, நான்காவதாக செடி கொடிகள் வெளி வந்தன. பிரும்மாவின் படைப்பைக் குறித்து பிரும்மவைவார்த்த புராணத்தில் விரிவாக கூறப்பட்டு உள்ளது” .

சித்த முனி மேலும் தொடர்ந்து கூறலானார் ”அடுத்த கட்டம் அந்த படைப்புக்களை யாரிடம் கொடுத்து வைப்பது? விஷ்ணு கூறியவாறு பிரும்மாவும் நான்கு யுகங்களைப் படைத்தார். அவற்றை நான்கு திசைகளிலும் வைத்து தாம் படைத்தவற்றைக் காக்க நினைத்தார். ஆனால் யாரிடம் யாரை ஒப்படைப்பது ? ஆகவே தாம் படைத்த நான்கு யுகங்களை பிரும்மா அழைத்து அவர்களிடமே யோசனைக் கேட்டார். அவர்களது கருத்தைக் கெட்டப் பின் அந்த நான்கு யுகங்களில் முதலில் வெளி வந்த கிரேதா யுகம் உலகைக் காக்கட்டும் என அதை முதலில் அனுப்பினார்.

சில காலம் கழிந்ததும் கிரேதா யுகத்தை அழைத்து ‘படைப்புக்களின் நிலை என்ன?’ என்று கேட்டபோது தலையைக் குனிந்து கொண்ட கிரேதா யுகம் வருத்தத்துடன் கூறியது ”பிரும்மனே, நான் இனியும் சொல்ல என்ன உள்ளது? களைத்துப் போய் வந்துள்ளேன். பூமியிலே உள்ளவர்கள் தீய சொற்களை பயன்படுத்தி, அடுத்தவரை நிந்தனை செய்து, ஏன் பிறந்தோம் எனும் அளவுக்கு தாறு மாறாக நடக்கிறார்கள். நானும் எத்தனையோ முயற்சி செய்தும் அவர்களை திருத்த முடியாமல் களைப்படைந்து விட்டேன் ” என்றது. அதைக் கேட்ட பிரும்மாவும் வருத்தம் அடைந்து கூறினார் ”கிரேதா யுகமே, உன் அவஸ்தையை நானும் மனப்பூர்வமாக உணர்கிறேன். நீயும் 17,280,000 வருடங்கள் இந்த உலகைக் கட்டிக் காத்து வந்துள்ளாய். ஆகவே நீ போய் ஒய்வு எடுத்துக் கொள். அந்த நிலையை நிவர்த்தி செய்ய அடுத்த யுகத்தை நான் அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு, இரண்டாவதாக வெளி வந்த த்ரேதா யுகத்தை அனுப்பினார். 12,960,000 ஆயிரம் வருடங்கள் கழிந்ததும் அந்த யுகமும் பிரும்மாவிடம் வந்து உலகில் நீதி நேர்மை அழியத் துவங்கி அக்ரமங்கள் பெருகி உள்ளன, அவற்றை தம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை எனக் குறைப்பட்டுக் கொள்ள அதையும் ஒய்வு எடுக்குமாறு கூறிவிட்டு அதற்கு பதிலாக மூன்றாவதாக வெளி வந்திருந்த துவாபர யுகத்தை பூமிக்கு அனுப்பினார்.

அதுவும் 864,000 வருடங்கள் பூமியில் வாழ்ந்த பின் பிரும்மாவிடம் வந்து பூமியில் உள்ளவர்கள் அளவுக்கு மீறிய முறை கேடுகளில் வாழ்ந்து கொண்டும் , அக்ரமங்கள செய்து கொண்டும் , பித்தலாட்டங்களை அதிகரித்துக் கொண்டும், உண்மையையே விலை பேசும் அளவுக்கு தர்மத்தை அழித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்றும் எத்தனையோ முயன்றும் தம்மால் அந்த அக்கிரமங்களை தடுக்க முடியவில்லை என்றும் குறைப்பட்டுக் கொள்ள, பிரும்மா யோசனையில் ஆழ்ந்தார். இனி தாம் படைத்த உலகை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டுமானால் இப்போது அங்குள்ளவர்களுக்கு தக்க தண்டனைக் கொடுத்து அவர்களே தம் தவறுகளை உணரும் வகையில் நிலைமையை மாற்றி அமைத்து கடவுள் இருக்கிறார் என்ற பயத்தை பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் பக்தி மார்கத்தில் செல்லத் துவங்குவார்கள். தான் படைத்த பிரபஞ்ச தத்துவமும் முழுமைப் பெறும். தான் படைத்த படைப்புக்களை பக்தி மார்கத்தில் அழைத்துச் செல்ல ஒரு நல்ல வழி வகுக்க வேண்டும். அதன் பின் மீண்டும் புதுப்பிறவிகளை சிருஷ்டி செய்து நல் வழியில் நடக்கும் மனித இனங்களைப் படைக்க முடியும் என்பதே ஒரே வழி என்பதை உணர்ந்தார்.

அதை திறமையுடன் செய்ய நினைத்தவர் நான்காவதாக வெளி வந்திருந்த  கலியுகத்தை அழைத்து அதன் கருத்தைக் கேட்க கலியுகம்  கூறியது ”பிரும்மனே, இதென்ன கஷ்டம்? அதை நான் செய்கிறேன். பூமியிலே உள்ளவர்களை மேலும் மேலும் தவறுகளை செய்யத் தூண்டி, அதன் பயனாக அவர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வேன். நான் படைக்கும் மாயா எனும் மாய வலையில் வீழ்ந்து மேல் மேலும் கஷ்டங்களையும், கொடுமைகளையும் அதிகரிக்க வைப்பேன். மக்களை துயரத்தில் ஆழ வைப்பேன். அப்போது அவற்றைத் தாங்க முடியாமல் போகும் மனிதக்குலம் நமக்கு மேலும் ஒருவன் உள்ளான் என்ற பயத்தைப் பெற்றிடும். மன அமைதி கிடைக்க அவரவர்களுக்கு தெரிந்த தெய்வங்களை நாடத் துவங்குவார்கள். ஆலயங்கள் பெருகும், மகான்களும் பிறந்திடுவார்கள். இந்தப் பிறவி போதும் என்ற மனப்பக்குவத்தை மனித குலம்  பெற்றிடும். இப்படியாக பக்தியும் பெருகும், மாயாவினால் உந்தப்பட்டு தீமைகளை அதிகரிக்க வைக்கும் மற்றவர்களினால் உலகமும் விரைவில் அழியத் துவங்கும்.” என்றது.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிரும்மா கூறினார் ”நல்லது கலியுகமே, நீ செய்ய உள்ள காரியம் நிறைவானதே. ஆனால் அதில் நீ சற்று கவனமாக இருக்க வேண்டும். அனைவரையும் நீ ஒன்று போல எடைப் போடக் கூடாது. நீ செல்லும் அந்த உலகில் கற்றறிந்த பண்டிதர்கள், பக்திமான்கள், குருமார்கள், யோகிகள், தர்ம வழி நடப்பவர்கள், போன்றவர்கள் இருப்பார்கள் அல்லவா? கடவுள் நினைவாகவே இருக்கும் அவர்களுக்கெல்லாம் உன்னால் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டு விடக்கூடாது. அல்லவா. அவர்களும் உன் மாயையில் வீழ்ந்து வேதனைகளை அனுபவித்தால் பக்தி மார்கத்தை பரப்புவது யார்? ஆகவே நீ அவற்றை இல்லாம் சீர்தூக்கிப் பார்த்தே உன் காரியத்தை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அவர் கூறியதைக் கேட்ட கலியுகமோ பயம் அடைந்து பிரும்மாவைக் கேட்டது ”பிரும்மனே இப்படி ஒரு காரியத்தை எப்படி என்னால் செய்ய இயலும்? என்னால் எப்படி நல்லவர்களையும் தீயவர்களையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆகவே ஏதாவது ஒரு உக்தியைக் கூறினால் அதன்படி நான் அதர்மத்தைப் பரப்பி யுகத்தை முடிக்க ஏற்பாடு செய்யலாம் அல்லவா” என்று கேட்டதும் பிரும்மா கூறினார் ” சரி அப்படி என்றால் நீ ஒன்றை மனதில் வைத்துக் கொள். ஹரி மற்றும் ஹரனை வணங்கித் துதிக்கும் இடங்கள், எங்கெல்லாம் மக்கள் ஒற்றுமையுடன் வசிப்பார்களோ அங்கெல்லாம் மற்றும் காசி, ராமேஸ்வரம் போன்ற புனித இடங்களில் உள்ளவர்கள், பசுக்களை ரட்ஷிப்பவர்கள், சாஸ்திரோத்தமாக நடப்பவர்கள், உலக சுகபோகங்களை துறந்து தெய்வீக சேவை செய்பவர்கள், முக்கியமாக எங்கெல்லாம் உலக சுகபோகங்களை துறந்து தெய்வீக இடங்கள் மட்டுமே தான் செல்லும் இடம் என்றபடி வாழ்ந்து காட்டும் உண்மையான ஒரு குருவை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வணங்கித் துதிப்பார்களோ அங்கெல்லாம் நீ செல்லக் கூடாது.  இப்படி செய்தால் உன் காரியத்தை நீ முழுமையாக செய்ய முடியும்” என்றார்.

அதைக் கேட்ட கலி மீண்டும் பிரும்மாவைக் கேட்டது ” பிரும்ம தேவரே குரு, குரு என்று என்னிடம் கூறுகிறீர்களே அந்த குரு என்பவர் யார், அவரது மகிமை எப்படிப்பட்டது என்பதையும் எனக்கு எடுத்துரைத்தால் நான் செய்ய உள்ள காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்” என்றது. அதன் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட பிரும்மாவும்  கலியுகத்துக்கு குருவின் மகிமையை எடுத்துரைக்கும் ஒரு கதையைக் கூறலானார்.

………..தொடரும்