சிக்கல் சிங்காரவேலர் 
ஆலயம் – I  
 சாந்திப்பிரியா 

முருகனின் ஆலயங்களில் மிகப் பழமையானதும்  புகழ்  பெற்றதும்  எது என்றால் அந்த ஆலயங்களில் ஒன்று  சிக்கல் சிங்காரவேலவன் ஆலயம் என்பதை தயங்காமல் கூற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில்  நாகப்பட்டினத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் எனும் கிராமம்.  அங்கு உள்ளதே புகழ் பெற்ற சிங்காரவேலர் ஆலயம்.  இந்த முருகனுக்கு பெருமை சாற்றும் ஆலயம் கட்டப்பட்டபோது சிவன் ஆலயமாகவே இருந்தாலும் பின்னர்  முருகனே முக்கியமானவராகக் கருதப்பட்டார்.  சோழ மன்னன் காலத்தில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.  இந்த ஆலயத்தைக் குறித்த கதைகள் சில உண்டு. அவற்றில் முக்கியமானவை இரண்டு ஆகும்.

இந்த ஆலயம் ஏற்பட்ட இடத்தில் ஒரு காலத்தில் முழுமையாக மல்லிகை பூக்களைக் கொண்ட செடிகள் படர்ந்திருக்க அது மல்லிகை வனம் என அழைக்கப்பட்டு வந்திருந்துள்ளது. ஆகவே இந்த தலத்தின் பெயரையும் மல்லிகாரண்யம் என அழைக்கலானார்கள். அந்த மல்லிகை மணத்தின் வாசனையினால் ஈர்க்கப்பட்டே காமதேனு அங்கு வந்து வசித்ததாக கதை உள்ளது. அந்தக் கதை என்ன என்றால் அந்த பூமியே மல்லிகை மலர் கொடியினால் சூழ்ந்திருந்தபோது அதன் அழகில் மயங்கிய காமதேனுப் பசு  தான் ஒரு மண்டலம் பூமிக்கு சென்றுவிட்டு வருவதாக வசிஷ்டரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு அந்த வனப் பகுதியில் வந்து வசிக்கலாயிற்று. ஒரு மண்டலம் என்பது தேவ கணக்கின்படி 45 நாட்கள் அல்ல பல வருடங்கள் கணக்கைக் கொண்டது. காமதேனுவும் அவ்வபோது தேவலோகத்துக்கு சென்று விட்டு வருவது உண்டு.

இந்த நிலையில் ஒருமுறை பிரபஞ்சம் பஞ்சத்தினால் பரிதவித்தது. எவருக்கும் உண்பதற்கு  உணவு சரிவரக் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது யாருக்கு என்ன கிடைத்ததோ அதையே உண்டு வாழ்ந்தார்கள்.   பூலோகத்தில் வந்திருந்த காமதேனுப் பசுவும் ஒருநாள் உண்ணுவதற்கு புல்லும் உணவும் கிடைக்காத நிலையில் பசியால் துடித்து மாமிசத்தை தின்று விட்டதினால் தோஷம் அடைந்தது.  பூலோக வாசம் முடிந்ததும் அது தேவலோகத்துக்கு சென்றபோது அதைக் கண்ட  சிவபெருமான் மாமிசத்தை உண்டு விட்டதினால் கைலாயத்தில் நுழைய அதற்கு இடம் இல்லை என்று கூறி காமதேனுப் பசுவிற்கு சாபமிட அதுவும் புலியின் முகத்தைக் கொண்ட பசுவாகி விட்டது. தவறு செய்ததற்கு மன்னிப்புக் கோரிய பசுவும்  அழுது புலம்பி  தனக்கு சாப விமோசனம் தருமாறு  அவரிடம் மன்றாடியது. அதனால் அது செய்த பாவத்தைக் களைந்து கொண்டு மீண்டும் பழைய நிலையை அடைய சிக்கல் என்ற இந்த ஊருக்கு வந்து சிவபெருமானை  துதித்து தவம் இருந்து சாப விமோசனம் பெற வேண்டியதாயிற்று. அங்கு வந்தபோது பஞ்சம் ஏற்பட்டு இருந்த பூமியில் தண்ணீரெல்லாம் வற்றி இருந்தது.  ஆகவே சிவபெருமானை துதிப்பதற்கு முன்னால்  குளிக்க வேண்டும் என்பதினால் தண்ணீர் வற்றி இருந்த ஒரு  குளத்தில்   அது தனது மடியில் இருந்த பாலை சுரக்க அது பால் குளமாயிற்று. அதில் குளித்து விட்டு அது சிவனைத் துதித்து தவம் இருந்தது. அந்த குளத்தையே  இன்று தேனு தீர்த்தம் என்கிறார்கள் (காமதேனுவில் இருந்து எடுத்த தேனு எனும் வார்த்தையைக் கொண்டு) .

அந்த காமதேனு அங்கு வந்து புலி முகத்துடன் இருந்தபோது வசிஷ்ட முனிவரும் அந்த தலத்தில் வந்து  காமதேனு சாப விமோசனம் பெற வேண்டும்  என்பதற்காக தவத்தில் இருந்தார்.  காமதேனு அவருடைய பசு என்பதினால், அதற்கு சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என சிவபெருமானை வேண்டிக் கொண்டு அவரும் அங்கு இருந்தார். அப்போது பால் குளத்தில் இருந்த பாலும் வற்றி வெண்ணையாக  வழிந்து கொண்டு இருக்க அதை  எடுத்து, அந்த வெண்ணையில் சிவலிங்கத்தை உருவாக்கி  அதையே பூஜித்து வரத் துவங்கினார். அதிசயமாக  அந்த வெண்ணையும் உருகவில்லை, முனிவரின் பூஜையும் தொடர்ந்து கொண்டு இருந்தது.  அவர்களின் தவத்தினால் மனம் உருகிய சிவபெருமான் காமதேனு பசுவிற்கு  சாப விமோசனம் தர அதுவும் தனது பழைய முகத்தை பெற்றது.

சில காலம் கழிந்ததும், வசிஷ்ட முனிவர் முன்னால் சிவபெருமான் தோன்றி அவர் கேட்ட வரங்களையும் அருளினார். அதன் பின் வசிஷ்டர் அங்கிருந்து கிளம்பலானார். ஆகவே அந்த இடத்தில் தான் பூஜித்த வெண்ணையினால் உருவாக்கிய சிவலிங்கத்தையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு வசிஷ்ட முனிவர் செல்லத் துவங்கியபோது   வெண்ணை என்றாலும் அதை அவரால் வெளியில் எடுக்க  முடியவில்லை. வெண்ணையை பூமியில் இருந்து எடுக்க முடியாமல் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.  அதனால்தான் சிக்கல் ஏற்பட்ட இந்த தலத்தின் பெயரும் சிக்கல் என ஆயிற்று என்கிறார்கள். வசிஷ்ட முனிவரினால் வெண்ணையினால் செய்த லிங்கத்தை எடுக்க முடியாததினால்  அதை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட அதுவும் லிங்கமாகி அங்கேயே பதிந்து கொண்டது. இப்படியாக அந்த சிங்காரவேலர் ஆலயத்தில் முதலில் சிவலிங்கமே பூஜிக்கப்பட்டு வந்தது.  வெண்ணையினால் செய்த சிவலிங்கமாக அது இருந்ததினால் அந்த சிவலிங்கத்திற்கு வெண்ணை நாதர் அல்லது  வெண்ணைபிரான் என்று பெயர் ஏற்பட்டது.

வசிஷ்டர் அமர்ந்து கொண்டு வெண்ணையினால் 
ஆன சிவலிங்கத்தை பூஜித்த இடமாம் இது.  மேலே உள்ளது 
வெண்ணை சிவன் இருந்த சன்னதி

இந்த தலத்தின் பெருமை மேலும் உண்டு. இதுவும் ஒரு விதத்தில் சிவன் மற்றும் விஷ்ணு சேர்ந்தே உள்ள தலமாகும். இன்னொரு கதையின்படி வசிஷ்டர் உருவாக்கிய வெண்ணை லிங்கத்தை குழந்தை உருவில்  கிருஷ்ணரைப் போல வந்த  விஷ்ணு தனது கையில் எடுத்துக் கொண்டு செல்ல முயல,  அதைக்  கண்டு கோபமுற்ற வசிஷ்டர் அவரைத் தடுத்தபோது  தனது நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கடிஹஸ்தம்  மற்றும் அபய முத்திரையுடன் வசிஷ்ட முனிவருக்கு விஷ்ணு பெருமான் காட்சி தந்தப் பின்  அங்கிருந்து போக முயன்றபோது அந்த வெண்ணை அவர் கட்டைவிரல் மற்றும் அடுத்த விரலில் ஒட்டிக் கொள்ள அதை எடுக்க முடியாத நிலை தோன்றி  அவருக்கு சிக்கல் ஏற்பட்டதினால் அந்த இடம் சிக்கல் என்ற பெயரைப்  பெற்றதாகவும்  கூறுகிறார்கள்.

 —–தொடரும்