இலங்கை கதிர்காம 
ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு
சாந்திப்பிரியா

பாகம்-2

முருகப் பெருமான் பிறந்த கதை அனைவரும் அறிந்ததே.
சிவபெருமானின் முகத்தில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகளை வாயு பகவான் ஏந்திக் கொண்டு போய் கங்கை நதியில் போட, கங்கையோ அதைக் கொண்டு போய் சரவணப் பொய்கை எனும் குளத்தில் தள்ளி விட, முருகன் ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகப் பிறந்தார். அவரை ஆறு கிருத்திகை தேவதைகள் எடுத்து வளர்த்து பார்வதியிடம் கொண்டு சென்று கொடுக்க, அவள் அந்த ஆறு குழந்தைகளையும் தன்னுடன் அணைத்துக் கொள்ள அவை அனைத்தும் ஒன்றாகி ஆறு முகத்தைக் கொண்ட ஒரு குழந்தை ஆயிற்று. அதுவே முருகன் அவதரித்த வரலாறு.
அதன் பின் நாரதர் கொண்டு வந்து கொடுத்த மாம்பழத்தை உலகை மூன்று முறை சுற்றி விட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே கொடுப்பேன் என்று கூறிய சிவபெருமானையும் பார்வதியையும் மூன்று முறை சுற்றி விட்டு வந்த விநாயகர் தாய் தந்தையை சுற்றுவது உலகை சுற்றியதற்கு சமம் ஆகும் என்று விளக்கி விட்டு தான் வெற்றி பெற்றதாகக் கூறி பழத்தைப் பெற்றுக் கொள்ள, அதனால் தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணிய முருகன் கோபமுற்று சிவன் பார்வதியை பிரிந்து சென்றார். அதன் பின் கோபம் தணிந்தவர் தனது பெற்றோர்களுடன் ஒன்று சேர்ந்தாலும் தனக்கென பூமியில் ஒரு இடம் வேண்டும் என்பதற்காக ஆறு இடங்களில் சென்று தங்கினார் (ஆறுபடை வீடுகள்) .
அதன் பின் அவர் எதற்காக அவதரித்தாரோ அந்தக் கடமையான சூரபத்மனை அழிக்க ஸ்ரீ லங்காவிற்கு சென்று அவனை வதம் செய்தார். (அந்த காலத்தில் அதன் பெயர் ஸ்ரீ லங்கா என்று இல்லை. ஆகவே முருகன் சூரனை அழிக்கச் சென்ற இடத்தைக் குறிப்பிடுவதற்காக சூரன் இருந்த அன்றைய இலங்கையின் பகுதியைக் குறிக்க ஸ்ரீ லங்கா என்றே இதில் குறிப்பிட்டு உள்ளேன் . அதனால் மனம் மகிழ்ந்த தேவர்கள் முருகப் பெருமானை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அவர் அங்கு தங்குவதற்காக தேவர்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவிடம் அவருக்கு மிகப் பெரிய மாளிகைக் அங்கு கட்டித் தருமாறு அனுப்ப, விஸ்வகர்மாவும் கதிர்காமன் என்ற வனப் பகுதில் அவருக்கு பெரிய மாளிகைக் கட்டி முடிக்க முருகன் அங்கேயே ஸ்கந்தனாக தங்கினார் என்பது இங்குள்ள வரலாறு. அதனுடன் சேர்த்து விஸ்வகர்மா அங்கு கட்டிய தற்போது உள்ள அதே ஆலயத்தின் அன்றைய பெயர் சிந்தாமணி ஆலயம் என்கிறார்கள். முருகன் அங்கு இருந்தபோது அந்த வனப்பகுதியில் இருந்த வேத்தாக்கள் எனப்படும் வேட இனத்தவர் வளர்த்த வள்ளியையும் அவர் காதலித்து மணந்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்தது.
மத்திய நூற்றாண்டில் எழுதப்பட்டு இருந்த ஸ்ரீலங்காவின் நூல்களில் உள்ள முருகனைக் குறித்தக் கதை தென் இந்தியாவில் கந்த புராணத்தில் எழுதப்பட்டிருந்த முருகக் கதைகளை விட சிறிது மாறுபட்டே உள்ளன. ஸ்கந்த முருகனின் புராணக் கதைகளை உள்ளடக்கி இந்தத் தீபகற்பத்தில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத நூலான ‘தஷிண கைலாச மான்மியம் ‘ (Daksina-kailasa manmiyam) என்பதில் எழுதி உள்ளது என்ன எனில் ”குருன்சா மலையை இரண்டாகப் பிளந்து அசுரன் ‘தாருகனை’ தன் வேலால் குத்தி அழித்த பின் ‘தேவகிரிக்கு’ சென்ற ‘முருகன்’ , அங்கிருந்துக் கிளம்பி ‘திருச்சைநல்லுர்’ மற்றும் பிற புனித இடங்களுக்கும் சென்றார். அதற்குப் பிறகு ‘குரு’ பகவான் மூலம் ‘சூரன்’ மற்றும் அவன் சகோதரர்கள் செய்து வந்த அக்கிரமங்களைப் பற்றிக் கேட்டறிந்தவர் ‘வீரவாகு தேவர்’ தலைமையில் பெரும் படையுடனும் எண்ணற்ற பூத கணங்களுடனும் கதிர்காமனை வந்து அடைந்தார். ‘எம கூடம்’ என்ற இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஆலயத்தில் முருகன் தங்கி இருக்க அவருடன் சென்றவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்த இடங்களில் தங்கினார்கள். அங்கிருந்து ‘மகேந்திரபுரி’ என்ற இடத்தில் இருந்த ‘சூரபத்மனிடம்’ தூதராக ‘வீரபாகு தேவர்’ சென்றார் . முருகன் சார்பில் சூரன் திருந்துவதற்கு  விடுத்த எச்சரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகி விட, அந்த முயற்சி தோல்வி அடைந்ததும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடந்த போரில் கதிர்காமனில் தங்கி இருந்த முருகனும் அவர் படை வீரர்களும் அதையே தங்களுடைய படை வீடாக மாற்றிக் கொண்டு யுத்தம் செய்தனர். மகேந்திரபுரிக்குச் சென்று சூரனை வெற்றி கொண்டதும் மீண்டும் கதிர்காமனுக்கு திரும்பிய முருகன் அதையே தன்னுடைய தங்கும் இடமாக மாற்றிக் கொண்டார். சூரனைக் கொன்றப் பின் அங்கு வந்து தங்கிய முருகனிடம் தேவர்கள் வேண்டிக் கொண்டபடி அவர் அங்கு ஒன்பது தீர்த்தங்கள் எனப்படும் நீர் நிலைகளை அமைத்தார். அந்த நீர் நிலைகள் இன்றும் அங்குள்ள மலைப் பிரதேசத்தில் உள்ளன என்றாலும் மேனிக் கங்கா எனும் நதியே மிகப் புனிதமான நதியாக கதிர்காமனில் கருதப்படுகிறது.
அன்றைய ‘ஜாப்னா பட்டினம்’ என்ற அழைக்கப்பட்ட வன்னி பகுதியில் உள்ள நகரில் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘கதிரமலைப் பல்லு’ என்ற நூல் வள்ளியுடனான முருகனின் காதல் திருமணத்தைப் பாடலாகப் பாடி உள்ளது. கொத்தடிமைகளாக நிலங்களில் வேலை செய்து வந்த ‘பள்ளர்களின்’ வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள பாடலில் ஒரு கணவருடன் ஒன்றிணைந்து வாழும் இரு மனைவிகளின் சம்பாஷணையைப் போல அமைந்து உள்ளது அந்தப் பாடல். அதில் ஒருவள் இலங்கையை சேர்ந்தவள், இன்னொருவள் இந்திய நாட்டை சேர்ந்தவள் . இருவரும் தங்களுடைய தாய் நாட்டின் பெருமையைக் கூறும் விதத்தில் அமைந்து உள்ளது அதில் காணப்படும் பாடல்கள் . ஸ்ரீலங்காவைப் பற்றி எழுதப்பட்டுள்ள உள்ள பாடலில் எல்லா இடங்களை விட சிறப்பானதும் புனிதமுமான இடம் கதிர்காமம் எனவும் அதைத் தொடர்ந்து அமைந்துள்ளவை ‘திருகேட்டீஸ்வரம்’ மற்றும் ‘திருக்கோணம்’ எனவும் கூறப்பட்டு உள்ளது (அவை இரண்டுமே  ஸ்ரீ லங்காவில் உள்ளன) . கதிர்காமத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதை ‘கதிராபுரி’ என்றும் ‘கதிரை’ என்றும் கூறி உள்ளது. ‘கதிரை’ என்றால் தென் பகுதியில் வாழும் வேலன் என்ற பொருளில் ‘தென்கதிர் வேலன்’ என எழுதப்பட்டு உள்ளது. ‘கதிர்காமப் பாட்டு’ என்ற நூலில் ஸ்கந்த முருகனைப் போன்றே அனைத்து சக்திகளையும் கொண்டவர் கதிர்காமன் என்றும் அவரை ‘சங்கரியின் மகன்’ எனவும், ‘வள்ளியின் நாயகன்’ எனவும், மரங்கள் மீதும் பூங்காக்களிலும் வசிக்கும் தோகை விரித்தாடும் மயில் மீது அமர்ந்து உள்ளவர் எனவும் எழுதப்பட்டு உள்ளது. இவற்றில் இருந்து கதிர்காமன் ஆலயம் எத்தனை பெருமை பெற்று இருந்துள்ளது என்பது புரியும்.
………..தொடரும்