துலா புராணம்-5
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா

சபையில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டார்கள். அப்போது அரிச்சந்திரனைப் பார்த்து  ‘இன்னும் சற்றுப் பொறு’ என்பது போல அகஸ்தியர் தன் கையைக் காட்டினார். சற்று நேரம் அமைதியாக இருந்த அகஸ்தியர் மேலும் தொடர்ந்து கூறலானார். ‘அரிச்சந்திரனே, இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் யம பயம் அற்று, சம்சாரக் கடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமயத்தில் விலகி நற்கதி அடைய வேண்டும் என்பதற்காகவே காவேரி என்னும் புண்ணிய நதியை நான்முகன் இந்த பூமியில் ஏற்படுத்தினார். மேலும் இந்த உலகில் ஒவ்வொருவரும் தம்மை அறியாமலேயே செய்யும் பாவங்களினால் வேத தர்மங்கள் அழியத் துவங்கும், நன் நெறிக்  குறையும், பூஜை புனஸ்காரங்களை செய்யத் தயங்குவார்கள். அநீதி தழைக்கும். அப்போது தெரியாமல் செய்து விட்ட பாபங்களினால் அவர்கள் மகா பாவிகளாக ஆகி விடுவார்கள். ஆகவே அந்த மகாபாவிகள் மீண்டும் பிறப்பு எடுத்து தாம் பெற்றிருந்த பூர்வ ஜென்ம கர்மாவினால் துன்பங்களை அனுபவிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணத்தினால் காவேரியைப் படைத்தார்.

காவேரியை  தக்ஷிண கங்கை என்றும் சொல்வார்கள். காவேரி நதியானது காசியில் பாயும் உத்தர கங்கையை விட மேன்மையானது என்பதின் காரணம் ஒரு முறை கங்கை நதியானது ‘தன் நதியில் வந்து குளித்து விட்டு  அவரவர் பாவங்களை அதில்  விட்டுச் செல்வதினால் தன்னால் அந்த பாரங்களை சுமக்க முடியவில்லை’ என்றும், அந்த பாவங்களை தன்னிடம் இருந்து விலக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றும்  சிவபெருமானிடம்  முறையிட்டபோது, அவர் கங்கையை காவேரி நதியில் சென்று குளித்து விட்டு பாவத்தை தொலைத்துக் கொள்ளுமாறு கூறினார். அப்படி என்றால் காவேரி நதியில்  தான் சுமந்து கொண்டு இருந்த பாவ மூட்டைகளை கங்கை நதி விட்டு விட்டால் அனைத்து பாவங்களும் ஒன்று சேர்ந்து காவேரியை நதியை பாவ நதியாக்கி விடாதா என்று நினைப்பாய். அதுவே காவேரி நதியின் மகத்துவம். காவேரி நதியில் பாவங்கள் கலப்பது இல்லை. கங்கை நதியானவள் அதில் வந்து குளிக்கும்போது அவள் அங்கு தள்ளும் பாவ மூட்டைகள் அனைத்தும்  கருகி ஆவியாக மாறி மேலுலகத்துக்கு சென்று மறைந்து விடுகின்றன. அது போலத்தான் காவேரியில் குளிக்கும் பக்தர்கள் விட்டுவிடும் பாவங்களும் எரிந்து சாம்பலாகி ஆவியாகி விடும். அந்த செயல் நம் கண்களுக்குத் தெரியாது.  அதனால்தான் காவேரியின் தெய்வீகத் தன்மை எந்த ஜென்மத்திலும்  மறைவதே இல்லை. இதை மனதில் கொண்டுதான் காவேரி நதியின் புனிதத்தன்மையைக் காக்க அதை ஸஹ்ய மலையிலிருந்து பெருகும்படி நான்முகன் செய்துள்ளார்.

அதில் சென்று ஸ்நானம் செய்பவர்கள் நற்கதியை பெறுவார்கள். எவ்வளவு அக்கிரமங்களைச் செய்த போதிலும் ஒரு நாள் ஸ்நானம் செய்த மாத்திரத்தில் அவர்களின் பாவங்கள் தொலையும். வாழ்வில் ஒரு முறையாவது துலா மாதத்தில் காவேரி நதிக்குச் சென்று அதில் ஸ்நானம் செய்தால் அதுவரை அவர்கள் செய்திருந்த அனைத்து பாவமும் விலகும். குறைந்த பட்ஷம் அடுத்த பிறவி எடுக்கும்போது அவர்கள் பூர்வ ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு செல்ல மாட்டார்கள். இவற்றையும் விட மேலான விஷயம் ஒன்று உண்டு. காவேரியில் ஸ்நானம் செய்வதைப் போல துலா காவேரியைப் பற்றிய மகிமையை காதால் கேட்டால் கூட பல பாபங்களும் விலகுகின்றன. அதை அறிந்திருந்ததினால்தான் வேதராசியும் தனது மனைவியினால் ஏற்பட்டு இருந்தப் பாவத்தை விலக்கிக் கொள்ள தலைக் காவேரிக்கு சென்று அங்கு வாழ்ந்திருந்து, மரணம் அடைந்தப் பின் யமராஜனையும் ஜெயித்து வைகுண்டம்சென்றான்’ என்று கூறி முடித்தார்.

அதைக் கேட்ட அரிச்சந்திரன் இன்னும் ஆவலுற்று ‘ மா முனிவரே, அதெப்படி யமராஜரையும் வேதராசியினால் ஜெயிக்க முடிந்தது? அந்தக் கதையையும் எமக்குக் கூறுவீர்களா ?’ என்று கேட்டான்.

சிரித்தபடி அகஸ்தியர் கூறத் துவங்கினார். ‘தேவராசியின் செயலினால் யம தூதர்கள் கலக்கம் அடைந்தார்கள். பாபிகள் அனைவரும் நரகத்தை விட்டுச் சென்று விட்டால் நமக்கு இனி என்ன வேலை அங்கு இருக்கும் என எண்ணி பயந்தவர்கள் ஓடோடிச் சென்று யமராஜரிடம் தேவராசி செய்த செயல்களை எடுத்துரைத்தார்கள். அதைக் கேட்ட யமராஜர் தந்து இருப்பிடத்தில் இருந்து எழுந்தார். மூன்று உலகத்தையும் எரித்து விடுவது போல கர்ஜித்தார். ‘நான் இத்தனை சிரமப்பட்டு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைக் கொடுத்தவாறு தர்ம நெறியைக் காப்பாற்றி வந்துள்ள நிலையில், யாரோ ஒருவர் இங்கு வந்து பாவிகளை நரகத்தில் இருந்து விடுதலையாக்கி சொர்கத்துக்கு அனுப்பி விட்டாரா? யார் அவர்? அதன் பின் நான் எதற்கு? யம லோக விதி முறைகள் எதற்கு இருக்க வேண்டும்?’ . கண்கள் சிவப்பேறி , கர்ஜனை செய்தவாறு அனல் பறக்க எழுந்தவர் தனது வாகனமாக எருமை மீது ஏறிக் கொண்டு சேனையுடன் தேவராசியைக் காணக் கிளம்ப அகண்டமே அதிர்வது போல இருந்தது. அவரது சேனைகளின் கர்ஜனைகள் பத்து திக்கிலும் ஒலித்தன. உலகமே நடுங்கியது. தேவராசியும் நடு நடுங்கினார். உடனேயே விஷ்ணு கவசத்தை உரத்துக் குரலில் ஓதத் துவங்கினார்’.

‘ஸ்வாமி விஷ்ணு கவசமா?. அது என்ன என்பதையும் விளக்கி விட்டு மீதிக் கதையை கூறுவீர்களா என அரிச்சந்திரன் கேட்க அகஸ்தியர் விஷ்ணு கவசத்தைப் பற்றிக் கூறினார்.

‘அரிச்சந்திரா, விஷ்ணு கவசம் என்பது சாதாரண விஷயமல்ல. அது படு ரகஸ்யமானது. இந்த கவசத்தை மகா விஷ்ணுவே பாற்கடலில் படுத்து இருந்தவாறு  நான்முகனுக்கு உபதேசித்தார். அதை உனக்கும் உபதேசிக்கிறேன் என்று கூறி விட்டு மந்திர அர்த்தங்களை அவருக்கு விளக்கிக் கூறியப் பின் மந்திரங்களையும் உபதேசித்தார்.  இந்த மந்திரங்களை தேவராசி ஓதத் துவங்கியதும், பயங்கர உருவைக் கொண்டு தேவராசியை நோக்கி வந்து கொண்டு இருந்த யமராஜர் பயந்து, ஒடுங்கி நின்றார். அவரது பயங்கரமான முகமோ, சாந்தமான முகமாக மாறியது. அவருடன் வந்து கொண்டு இருந்த சித்ரகுப்தனும் அடங்கி ஒடுங்கி நின்றார். இருவரும் மெல்ல மெல்ல தேவராசியின் அருகில் சென்று அடக்கத்துடன் நின்றபடி ‘ அதீத பிராம்மணரே, உங்கள் வரவு நல்வரவாக. இதோ அர்க்யம், இதோ பாத்யம், இதோ அசமநீயம்’ என அவரை பலவாறாக உபசரித்து ‘அந்தணரே, உங்கள் வரவால் இன்று நரகமும் சொர்கமாகிவிட்டது. அது என் பாக்கியம். துலா மாதத்தில் காவேரியில் நீராடி நீங்கள் பெற்றுள்ள புண்ணியத்தினாலும், ஹரி நாமத்தினாலும் எங்கள் அனைவரையும் வென்று விடீர்கள். நரகத்தில் அவனவன் செய்த பாவத்திற்கு ஏற்ப தண்டனைப் பெற்றவர்களை ஒரே வார்த்தையான ஹரி என்பதின் மூலம்  விடுதலை செய்து விட்டீர்கள். பிறர் படும் துயரத்தை சகிக்காமல் பகவானின் நாமத்தைக் கூறியே, ஆயுதங்களாலும் வெல்ல முடியாத வெற்றியைப் பெற்று விட்டீர்கள்’. இப்படியாகக் கூறிய யமதர்மராஜார், தனது அதிகாரத்தை தேவராசி பறித்து விட்டாரே என்ற ஏக்கத்தினால் பெருமூச்சு விட்டப் பின்  மேலும் தொடர்ந்தார்,’ அந்தணரே, தெரிந்தோ, தெரியாமலோ பாவத்தை செய்தவர்கள் கூட பகவானின் நாமத்தைக் கூறி பாப விமோசனம் பெறுகிறார்கள். இனி பகவான் நாமத்தைக் கூறாதவர்கள் மட்டும் எனது லோகத்துக்கு வருகை தரட்டும். பகவானின் நாமத்தை ஸ்மரிப்பவர்கள் நற்கதி அடையட்டும்.

ஹரி ஓம், ஹரி ஓம், கிருஷ்ணா, முகுந்தா, முராரே என பகவானின் நாமத்தைக் கூறுபவர்கள் என் லோகத்துக்கு வரமாட்டார்கள். அவர்கள் அருகில் செல்லவே எனது தூதர்களும் நடுங்குவார்கள். இனி தங்களைப் போன்ற சாதுக்களுக்கு நான் சாந்த முகத்தைக் காட்டுபவனாகவும், பாவாத்மாக்களுக்கு பயங்கர ரூபத்தைக் காட்டுபவனாகவுமே இருக்க ஆசை கொண்டுள்ளேன் . துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்யாதவர்களும், துலா மகிமையைக் கேட்காதவர்களும் எனது லோகத்துக்கு வரட்டும். கோரமான எனது ரூபத்தைப் பார்க்கட்டும். இனி நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வமான விஷ்ணுவின் லோகத்துக்கு புறப்பட்டு செல்லுங்கள். உங்களுக்கு விடை தருகிறேன்’ என்று கூறி விட்டு அவரை வழி அனுப்பி வைத்தார். அதன் பின் தனது சைனியத்துக்கும் துலா மாத மகிமை, காவேரி ஸ்நான மகிமை, ஹரி நாம மேன்மை போன்ற அனைத்தையும் அற்புதமாக எடுத்து உரைத்தப் பின் தன் சபைக்குக் கிளம்பிச் சென்றார்.’.

இப்படியாக வேதராசியின் கதையைக் கூறி முடித்த அகஸ்திய முனிவர் இதை நீ அனைவருக்கும் எடுத்துரைத்தால், சகல புண்ணியத்தையும் அடைவாய்’ என அரிச்சந்திரனை ஆசிர்வதித்தார்.

கதையும் அதோடு முடியவில்லை. அடுத்து அரிச்சந்திரன் இன்னொரு விஷயத்தைக் குறித்து  அகஸ்திய முனிவரிடம் கேட்டார்.

……….தொடரும்

 

முந்தைய பாகங்கள்