பிரும்மா நிறுவிய

துங்கபத்ரை நதி
ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூலில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் அல்லது ஹைதிராபாத்தில் இருந்து சுமார் இருநூற்றி நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே ஆலம்பூர் என்ற இடம். அந்த இடத்தில் உள்ள துங்கபத்திரை நதிக் கரையில் ஏழாம் நூற்றண்டில் கட்டப்பட்ட நவபாஷண பிரம்மா ஆலயம் என்கின்ற ஒன்பது ஆலயங்கள் உள்ளன. அவை தாரகா பிரும்மா, ஸ்வர்க பிரும்மா, பால பிரும்மா, கருட பிரும்மா, குமார பிரும்மா, அர்க்க பிரும்மா, வீர பிரும்மா மற்றும் விஷ்வ பிரும்மா என்ற ஆலயங்களே. அந்த இடம் தக்ஷிண கைலாசம் என அழைக்கப்படுகின்றது. அந்த ஆலயங்களைக் கட்டியவர் யார்?

ஒரு முறை தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் படைக்கும் சக்தியை இழந்துவிட்ட பிரும்மா அந்த இடத்தில் வந்து ஒன்பது இடங்களில் தங்கி ஆயிரம் வருடங்கள் சிவபெருமானை துதித்து தவம் இருந்தாராம். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு மீண்டும் படைக்கும் சக்தியை அளித்தாராம். ஆகவே பிரும்மா வணங்கித் துதித்த அந்த ஒன்பது லிங்கங்களும் உள்ளடக்கிய ஒன்பது ஆலயங்கள் பின்னால் கட்டப்பட்டனவாம்.

ஆகவேதான் பிரும்மாவால் ஏற்பட்ட அந்த ஒன்பது ஆலயங்கள் நவபிரும்மா ஆலயங்கள் என்ற பெயர் பெற்றன. அதில் உள்ள சிவனாரை பிருமேஸ்வரர் என அழைகின்றனர். அங்கு சென்றால் அனைத்து ஒன்பது ஆலயத்திற்கும் செல்வதே சிறப்பு. ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள மைய மண்டபங்கள் நீளவாட்டில் ஒரே மாதிரியாகவே கட்டப்பட்டு உள்ளன. ஆலயங்களில் சித்திரரங்கள் அற்புதமாக படைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு கால கட்டத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் அவை ஒன்பதும் பிருமாவினால் ஏற்படுத்தப் பட்ட ஆலயங்களே என்பதே அவைகளின் சிறப்பாகும்.

பிரமேஷ்வர ஷேத்ர மகாத்மியம் என்ற நூலின் செய்தியின்படி அந்த இடத்தை ஆண்டு வந்த ஒரு மன்னன் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். அவன் அந்த ஆலயங்களை இடித்துத் தள்ள முயன்றபோது அவருக்கு சில சித்தர்கள் சாபம் கொடுக்க அவன் ஆட்சியை இழந்தான் .அவன் காட்டில் அலைந்து திரிந்து கொண்டு இருந்தபோது அவன் ஒரு வேட்டைக்கரனை சந்திக்க அவனும் மன்னனிடம் தான் செய்த பாவத்தின் பரிகாரமாக பிரமேஷ்வர ஷேத்ரத்தில் உள்ள நலிந்த ஆலயங்களை மீண்டும் கட்டினால் ஆட்சியை மீண்டும் பெறுவான் என்றானாம். ஆகவே அந்த மன்னனும் மீண்டும் அந்த ஆலயங்களை கட்டியதாக ஒரு கதை உள்ளது.

ஆலயங்கள் கட்டப்பட்டபோது அந்த இடம் ஹாலம்பூர் என அழைக்கப்பட்டு இருந்ததாம். துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள கோட்டைக்குள் எட்டு ஆலயங்களும் வடநாட்டு ஆலயபாணியில் கட்டப்பட்டு இருக்க தென்னாட்டு ஆலய பாணியில் கட்டப்பட்டு உள்ள தாரக பிரும்மா ஆலயம் மட்டும் அதன் வெளியில் அமைந்து உள்ளது. அனைத்து ஒன்பது ஆலயங்களுமே சிவ பெருமானுக்காக கட்டப்பட்டு உள்ளது. ஆலயத்தை சாளுக்கிய மன்னர்கள் கட்டி உள்ளனர் எனவும் அவற்றில் சிலவற்றை மன்னன் விக்ரமாதித்தனே கட்டி உள்ளதாகவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.