காத்தாயி அம்மன் எனும் 
வள்ளி தேவி பிறந்த கதை
சாந்திப்பிரியா
 
 வள்ளிமலை ஆலயத்தில் வள்ளி தேவி 
முன்னொரு காலத்தில் தொண்டை மண்டலத்தில் வள்ளி மலை எனப்படும்  இடத்தில் இருந்த மலை அடிவாரத்தில் நம்பி  என்ற ஒரு வேடன் இருந்தான். ( அது இப்போது உள்ள வள்ளி மலை அல்ல) அவனுக்கு வெகு காலம் குழந்தையே பிறக்கவில்லை என்பதினால் கடவுளை தனக்கு  குழந்தை பாக்கியம் தருமாறு வேண்டிக் கொண்டே இருந்தான். ஆனாலும் வெகு காலம் அவனுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இப்படி இருக்கையில் அதே மலை அடிவாரத்தில் தவத்தில் இருந்த ஒரு முனிவர் ஒரு நாள் அந்தப் பகுதியில்  தன் கணவனுடன் சல்லாபித்துக் கொண்டு  இருந்த ஒரு பெண் மானைக் கண்டு அதன் அழகில் மயங்கினார். அது தன்னுடைய கணவனுடன் சல்லாபிப்பதைக் கண்ட முனிவரின் மனதில் காம இச்சை மனதில் தோன்றியது.  அந்த மானை ஒரு அழகான பெண்ணாக நினைத்தார். அதனால் அவருடைய மானசீகமான காம எண்ணக் கற்பனைகளினால்  ஈர்க்கப்பட்ட  அந்தப் பெண் மானும் கர்ப்பம் அடைந்து ஒரு அழகான பெண் குழந்தையை பெற்று விட்டது. முனிவர் மானிடர் என்பதினால் அந்த மானுக்கும் மானிடப் பிறவியே பிறந்தது. என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்த முனிவர் அந்தப் பெண் குழந்தையை ஒரு புதரின் அருகில் போட்டுவிட்டுப் அங்கிருந்துப் போய் விட்டார். அந்த இடங்களில் இருந்த மலைஜாதி மக்கள் தமது  உணவுக்கு அந்தக் காடுகளிலோ சுற்றி அலைந்து பூமியில் கிடைக்கும் இனிப்பான வள்ளிக் கிழங்குகளை தோண்டி எடுத்துச் செல்வார்கள். அப்போது அந்த இடத்தில் கிழங்குகளைத் தோண்டி எடுக்க வந்தவர்கள் அந்தப் புதரில் அழுது கொண்டு கிடந்த குழந்தையை பார்த்து அதை எடுத்துக் கொண்டுப் போய் வேடர்களின்  தலைவனான  நம்பியிடம் கொடுக்க அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய நம்பியும்  குழந்தையே இல்லாத தானே  அதை தன்னுடையக் குழந்தையாக பாவித்து வளர்க்க ஆசைப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றான். அந்தக் குழந்தை வள்ளிக் கிழங்குகள் புதைந்து இருந்த இடத்தில் கிடைத்ததினால் அதற்கு வள்ளி எனப் பெயரிட்டு வளர்த்தான். அவை அனைத்துக்கும் காரணம் வள்ளி முன் ஜென்மத்தில் பெற்று இருந்த சாபமே. அதனால்தான் அவள் பூமியில் பிறக்க வேண்டி இருந்தது. அந்த மானும் முனிவரும் பூர்வ ஜென்மத்தில் அவளுடைய பெற்றோர்கள். அந்த முனிவரும் தகாத உறவு கொண்டே ஒரு மகளை பெற்றெடுப்பார் என்ற சாபம் இருந்ததினால் இப்படி நடந்தது. அவர்கள் அனைவரும் தேவலோகத்தில் இருந்த தேவ கணங்களே.  இப்படியாக வள்ளி பிறந்த கதையை வாய்மொழிக் கதையாகக் கூறுகின்றனர்.
 வள்ளி தேவியின் இன்னொரு தோற்றம்
அதன் பின் அந்த வேடுவக் குலத்திலேயே வளர்ந்து வந்த  வள்ளியும் முருகப் பெருமானை காதலித்து , பின்னர் திருமணம்  செய்து கொண்டு வள்ளி தேவியாகி இன்று நம்முடைய சித்தாடியில் நமது குலதெய்வமாகக் காட்சி தந்து கொண்டு நம்மை ஆசிர்வதித்துக் கொண்டும் காத்தருளிக்  கொண்டும்  இருக்கின்றாள். வள்ளி  எப்படி    முருகப்  பெருமானை  மணந்தாள் ? அந்த  தனிக்  கதையை அடுத்து படியுங்கள்.