ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -23
கருடமலே 
விநாயகர் ஆலயம்
சாந்திப்பிரியா

பெங்களூர்- கோலார்- முல்பாகல் என்ற தடத்தில் கோலாருக்கு அருகில் உள்ளதே கருடமலே கணபதி ஆலயம். அந்த ஆலயம் பெங்களூரில் இருந்து 110 கிலோ தொலைவில் உள்ளது. பெங்களூரில் இருந்து வயிட்பீல்ட் சென்று அங்கிருந்து கோடிலிங்கேச்ஸ்வரர் என்ற இடத்தை அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையின் வழியே முல்பாகல் என்ற இடத்தை நோக்கிச் சென்றால் கருடமலே ஆலயம் உள்ள கிராமமான கருடமளே வரும். அது மிகச் சிறிய கிராமம். அந்த இடம் முன்னர் காடாக இருந்தது எனவும், காட்டில் பல மலைகள் ஒன்று சேர்ந்த இடம் போல அது தெரிந்ததினால் அதை காட்டு மலை என அழைக்க அதுவே பின்னர் கூட்டு மலை என ஆகி, கருடமலே என மருவி கருடமளே என ஆயிற்றாம் . இன்னொரு காரணம் அங்குதான் அடிக்கடி அனைத்து தேவர்களும் வந்து கூடினார்கள் எனவும் அதனால்தான் அந்த இதயத்தை தேவர்கள் காட்டில் கூடும் மலை என்பதைக் குறிக்க கூட்டு மலை என அழைத்தனர் எனவும் அதுவே மருவி கருடமலே என ஆயிற்று எனவும் கூறுகிறார்கள். அங்குள்ளவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கு இல்லை கன்னடத்தை தாழ் மொழியாகக் கொண்டவர்கள்.

ஆலயத்தில்  உள்ள  விநாயகர் 

ஆலயத்தில் உள்ள விநாயகரின் சிலையின் அளவு பதினான்கு அடிக்கும் மேலான உயரத்தில் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த சிலை வளர்ந்து கொண்டே போவதாகக் கூறுகிறார்கள். ஆலயத்தில் உள்ள சாலிக்ராமக் கல்லில் ஆனா விநாயகர் சிலை மும்மூர்த்திகளினால் படைக்கப்பட்டவர் என நம்புகிறார்கள். உலகில்  வேறு    எங்குமே  சாலிக்ராமக்  கல்லில்  செய்த கடவுளின் சிலை கிடையாது.

கிரதே யுகத்தில் தாராசுரன் என்பவன் சிவ பெருமானிடம் இருந்து அறிய வரங்கள் பெற்றுக் கொண்ட பின் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவனை தேவர்களாலும் அடக்க முடியவில்லை என்பதினால் அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று வேண்டிக் கொள்ள அவர்கள் அந்த விநாயகரைப் படைத்தனராம். அதன் பின் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு சக்தி தேவியாக மாற விநாயகர் அந்த சக்தியை மணந்து கொண்டு அவளையே தனது ஆயுதமாக மாற்றிக் கொண்டு அந்த அசுரனுடன் சென்று சண்டை இட்டு அவனை அழித்தாராம். அதன் பின் அதி சக்தி பெற்ற விநாயகர் கருடமலே ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்க அவருக்கு அங்கு ஆலயம் வெகு காலத்துக்குப் பிறகு அங்கு அமைந்தது.

 ஆலயத்தின் தோற்றம் 
அந்த சக்தி பெற்ற விநாயகரை திரிதே யுகத்தில் ராம பிரானும் , துவாரபா யுகத்தில் கிருஷ்ணரும் வந்து வழிபட்டுச் சென்றதாக வரலாற்றுக் கதையை இங்கு கூறுகிறார்கள். மேலும் சப்த ரிஷிகளில் ஒருவரான கௌண்டன்ய முனிவர் அங்கு தினமும் வந்து விநாயகரை வழிபட்டுச் சென்றாராம். அவர் இன்னமும் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குகையில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. ஆலயம் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்துக்குச் சென்று வேண்டிக்கொண்டால் நிச்சயமாக வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.