திருமங்கலக்குடி ஆலயம்
(சூரியனார் ஆலயத்துக்குச் செல்லும் முன் 
கண்டிப்பாக  வழிபடவேண்டிய  ஆலயம்)

சாந்திப்பிரியா

இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து இரண்டு கிலோ தொலைவிலும் உள்ளது.  அங்கிருந்து சூரியனார்  ஆலயம் ஒரு  கிலோ தொலைவில் உள்ளது.  இது  ஒரு முக்கியமான ஆலயம். அதன் பெயர் பிராணதீஸ்வரர் ஆலயம். நவகிரஹ தரிசனம் செய்யப் போகின்றவர்கள் சூரியனார் ஆலயம் செல்லும் முன்னால் முதலில் பிராணதீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னரே சூரியனார் ஆலயம் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்குப் பலன் இல்லை என்கிறார்கள். திருமங்கலக்குடி கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோ தொலைவில் உள்ளது. அந்த ஆலயத்தை மங்களாம்பிகை ஆலயம் என்றும் கூறுகிறார்கள் அந்த ஆலயம் வந்த வரலாறு சுவையானது.

பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த குலோத்துங்க சோழ மன்னன் அந்த இடத்தின் மன்னனாக இருந்தபோது அவருடைய அமைச்சரான அலைவாணர் என்பவர் மன்னனிடம் கூறாமல் அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி திருமங்கலக்குடியில் ஒரு சிவன் ஆலயத்தைக் காட்டினார். அதைக் கேள்விப்பட்ட மன்னன் கோபமடைந்து அவர் தலையை வெட்டி எரியுமாறுக் கூறினார். அதன்படி அமைச்சரின் தலையை வெட்டினார்கள். அவர் மனைவி அந்த ஆலயத்தில் இருந்த மங்கலாம்பிகையிடம் சென்று’ உனக்காகத்தானே என் கணவர் இந்த ஆலயத்தைக் காட்டினார். ஆகவே அவர் என்ன பாவம் செய்துவிட்டார்? அவருக்கு நீதான் மீண்டும் உயிர் பிச்சை தர வேண்டும் என வேண்டினாள். அதைக் கேட்டப்  பார்வதி சிவபெருமானிடம் அந்த பக்தருக்கு மீண்டும் உயிர் தர வேண்டும் என வேண்டினாள். அவரும் அவருக்கு மீண்டும் உயிர் பிச்சை தந்தார். வெட்டப்பட்ட தலை உடலோடு சேர அந்த அமைச்சர் மீண்டும் உயிர் பெற்றார். ஆகவே இறந்தவருக்கு பிராணம் தந்த தலமான அதை பிராணதீஸ்வரர் என்று அழைத்தனர். மேலும்  மாங்கல்ய பாக்கியம் கிடைத்த இடமான அதை திருமாங்கல்யம் தந்தவள் என்ற அர்த்தத்தில் திருமாங்கல்யக்குடி எனவும் அழைக்கலாயினர் .ஆலயத்தில்  உள்ள  சிவலிங்கம்  ஸ்வயம்பு  என்கிறார்கள் .

ஆலயத்தின் மகிமை என்ன என்றால், சூரியனார் ஆலயம் செல்லும் முன் அந்த ஆலயத்துக்கே முதலில் சென்று பிரார்த்தனையை தொடர வேண்டும். முக்கியமாக முதலில் ஆலயத்தில் உள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். ( அந்த கோள் தீர்த்த விநாயகர் கதை என்ன? அது பின்னர்) . அதன் பின் ஆலய மண்டபத்தில் உள்ள நடராஜப் பெருமானை வணங்கிவிட்டு அங்கேயே உள்ள காசி விசாலாட்சியையும் வணங்க வேண்டும். அதன் பிறகு அதே மண்டபத்தில் உள்ள சூரியநாரை வணங்கிவிட்டு அவர் எதிரிலேயே அவரைப் பார்த்தபடி உள்ள குருவையும் வணங்க வேண்டும்.  அவர்களை வணங்கியப்பின் அப்பிரதர்ஷணமாகச்  சென்று ( மற்ற  ஆலயங்களில் செய்வதைப் போல வலது புறத்தில் இருந்து சுற்றாமல் இடது புறத்தில் இருந்து சுற்ற ஆரம்பிக்க வேண்டும். இதுவே முக்கியமாக கவனிக்க வேண்டிய  ஒன்று ).  சனீஸ்வரன், புதன், அங்காரகன், சந்திரன், கேது, சுக்கிரன் மற்றும் ராகுவை என்ற இப்படிப்பட்ட வரிசையில் அந்தந்த சன்னதியில் ஆனந்கிவிட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அதை முடித்தப்பின் மீண்டும் பிரதர்ஷணமாக- வலதுபுறத்தில்   திரும்பி மீண்டும் கோள் தீர்த்த விநாயகரை வந்து வழிபட்டப் பின்னரே அந்த ஆலய தரிசனம் நிறைவு பெறும்.

எந்த முறையில் பிராத்தனை செய்ய  பிரதர்ஷணமாகச் செல்ல வேண்டும் என்பதைக் காட்ட அந்த ஆலயத்தில் வழிகாட்டும் பலகை அங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. அது முடிந்தப் பின்னர்தான் அங்கிருந்துக் கிளம்பி சூரியனார் ஆலயம் சென்று அவரை வழிபட வேண்டும். இல்லை எனில் சூரியனை வழிபட்ட பலன் கிடையாதாம்.