மஹாவித்யா  –  (8)  
காளி  தேவி

சாந்திப்பிரியா 

 

மகாவித்யாவில் சக்தி தேவி காட்டிய ஒரு முக்கியமான தோற்றம் காளி தேவியின் தோற்றமே.அவளுடைய  யந்திரத்தை  கடுமையான விதிப்படியே பூஜித்து ஆராதிக்க வேண்டும். தக்க குரு இல்லாமல் காளி ஆராதனை செய்வது  நல்லதல்ல.
தக்ஷ்யன் யாகத்தினால் ஏற்பட்ட சர்ச்சையின் விளைவாக சிவ பெருமான் மீது கோபமடைந்த பார்வதி தனக்கும் அவரைப் போலவே சக்தி உள்ளது என்பதை எடுத்துக் காட்ட மஹாவித்யாவில் பத்து பயங்கரமான மற்றும் சாந்த வடிவங்களில் தன்னுடைய சக்தியை வெளிப்படுத்தியதின் காரணம் சிவனை சாந்தம் அடையச் செய்ய மட்டும் அல்ல ஆண் பெண்ணின் இணைந்த சக்தியே உண்மையான சக்தி. பெண் இன்றி ஆண்களுக்கு முழுமையான சக்தி கிடைக்காது என்ற உண்மையையும் , அவர் மீது தன்னுடைய அன்பு எத்தனை உள்ளது, அவருக்காக என்ன என்ன ரூபங்கள் எடுத்து தான் துயரமுற்று மீண்டும் மீண்டும் அவரிடமே வந்து அவருடைய சக்தியாகவே உள்ளேன் என்பதையும் எடுத்துக் காட்டவே என்கிறார்கள்.

அந்த ரூபங்களில் ஒன்றுதான் மகா வித்தையின் காளி அவதாரம். கருமை நிறத்தில் உள்ளவள், ரத்தம் வடியும் நாக்கை வெளியில் காட்டியவண்ணம் கையில் வெட்டப்பட்ட அசுரன் தலையை வைத்தபடி, கபால மாலைகளை அணிந்து கொண்டு காட்சி தரும் காளி தேவி பயங்கரமான உருவைக் கொண்டவள். ஆனால் சாந்தமான காளியோ அத்தனைக்கு அத்தனை கருணை மிக்கவள். அவளை ஆராதித்து துதித்தால் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது இதீகம். காரணம் அவளும் சக்தியின் ஒரு ரூபமே. அதனால்தான் நவராத்ரியில் அவளை முக்கியமாக வணங்குகிறார்கள். வங்காளத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதா தேவியும் கூட அதனால்தான் அவளை வணங்கி வந்தனர்.

காளியின் தோற்றம் பற்றி கூறப்படும் ஒரு கதை இது. தேவர்களை துன்புறுத்தி வந்த அசுரனை அழிக்கக் பார்வதி தன்னுடைய உடலில் இருந்து அம்பிகா எனும் தேவியைப் படைத்து அவளை சம்பா – நஷும்பாவை அழிக்க அனுப்பினாள். யுத்தத்திற்கு வந்த அம்பிகாவின் அழகில் மயங்கி அவளை பிடித்து வருமாறு சம்பா – நஷும்பா தம்முடைய படையினரான சந்தா- முண்டாவை அனுப்ப, தனக்கு யுத்தத்தில் பயங்கரமான ஆக்ரோஷ தேவியின் துணை தேவை எனக் கருதிய அம்பிகா தனது முகத்தில் இருந்து பயங்கரமான உருவையும், கோரமான குணத்தையும் கொண்ட காளியை படைத்து அனுப்ப அவள் அந்த அசுரர்களை கொன்று அவர்களின் ரத்தத்தைக் குடித்தாள். காளியும் யுத்தத்தில் அவர்களை அழித்தப் பிறகு வெறி பிடித்து ஆடினாள். அந்த ஆட்டத்தில் கீழே விழுந்து இருந்த சிவன் மீது நிற்பது கூடத் தெரியவில்லை. பின்னர்தான் அதை உணர்ந்தாள். வெட்கத்தினால் தான் செய்த தவறை நினைத்து தன்னுடைய நாக்கை கடித்துக் கொண்டாள். அதனால் ஏற்பட்ட வலியில் நாக்கை வெளியே தொங்கவிட கடித்த இடத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.

இன்னொரு கதையில் அசுரர்களை கொன்று அவர்களின் ரத்தத்தைக் குடித்த காளி யுத்தத்தில் அவர்களை அழித்தப் பிறகு வெறி பிடித்து ஆடினாள். அவள் சிவபெருமானைக் கூட மதிக்கவில்லை . ஆகவே அவர் அவளுடன் ஒரு நடனப் போட்டி நடத்தி தாண்டவ நடனம் ஆடி அவளை தோற்கடித்து அவளை சாந்தப் படுத்தினார். அதனால்தான் பயங்கரமான காளி சாந்தமான காளியானாளாம்.

இன்னொரு கதைப்படி சிவபெருமான் காளியை படித்தப் பின் ஒரு முறை அனைவர் முன்னிலும் அவளை காளி, காளி எனக் கூவி அழைத்தாராம். . காளி என்றால் கருப்பானவள் எனவும் அர்த்தம் உள்ளது. ஆகவே தான் கருப்பாக இருப்பதினால் தன்னை கறுப்பி என அழைப்பதாகக்   கருதியவள் அவரைப் பிரிந்து போய் விட்டாள். சிவ பெருமானுக்கு அவள் சென்ற இடம் தெரியவில்லை. ஆனால் நாரதர் மூலம் அவள் இருந்த இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அங்கு சென்று அவளுக்கு தன் நிலையை விளக்கிக் கூறி, இனி அவளை மூவுலகமும் போற்றும் அதி சுந்தரமான உருவில் காட்சி அளிப்பாய் எனக் கூறி ஆசிர்வதிக்க அவள் பதினாறு வயதான பெண் போன்று அதி சுந்தர திரிபுரா சுந்தரியானாளாம் .ஆகவேதான் காளி பார்க்க அகோரமான உருவில் இருந்தாலும் மென்மையான தன்மை கொண்டவள் என்கிறார்கள்.