பல்வேறு ஆதி வைத்தீஸ்வரர் ஆலயங்கள்
சாந்திப்பிரியா-

ஆதி வைத்தீஸ்வரன் ஆலயங்கள்

ஆதி வைத்தீஸ்வரன் ஆலயங்கள் குறித்து பலருக்கும் தெரிந்திடாத சில செய்திகள் உள்ளன. சீர்காழி அருகில் உள்ள மூல ஆதி வைத்தீஸ்வரன் ஆலயத்தைத் தவிர மேலும் பல இடங்களிலும் ஆதி வைத்தீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன என்பதே அந்த செய்தியாகும். மகாபாரதத்தில், பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, அவர்கள் ஐவரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்கள் கிருஷ்ணரை அணுகினர், அவர் குணமடைய சிவலிங்கத்தை வைத்தியநாதராக பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு அறிவுறுத்தினார். அதே நேரத்தில், கைலாசத்தில், கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்ட சிவபெருமான், கைலாசத்தில் உள்ள வில்வ மரத்தை அசைத்தபோது அந்த மரத்திலிருந்து ஐந்து வில்வ இலைகள், பாண்டவர்கள் தங்கியிருந்த இடங்களை தாண்டி பல்வேறு இடங்களில் சென்று விழுந்தன.
பாண்டவர்கள் சிவலிங்கத்தை நிறுவ இடத்தைத் தேடி அலைந்தபோது, அவர்கள் ஒவ்வொருவரும் வில்வ இலைகள் விழுந்த ஐந்து இடங்களை பல்வேறு பகுதிகளில் கண்டறிந்தார்கள். அந்த தலங்களில், ஐந்து பாண்டவர்களும் ஒவ்வொரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட, அவர்கள் நோயில் இருந்து குணமடைந்தனர். அந்த ஐந்து தலங்களே ஐந்து பஞ்ச வைத்தியநாதர் தலங்களாக விளங்குகின்றன என்பதாக கூறுகின்றார்கள். மற்ற இடங்களில் உள்ள வைத்தீஸ்வரர் ஆலயங்கள் பல்வேறு மன்னர்களினால் பல்வேறு காரணங்களுக்காக கட்டப்பட்டு உள்ளது.

புள்ளிருக்கு வேளூர் ஆதி வைத்தீஸ்வரன் ஆலயம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், சீர்காழிக்கு அருகில் உள்ள மூல ஆதி வைத்தீஸ்வரர் ஆலயத்தை புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரிலும் அழைப்பார்கள். அதன் காரணம் ‘புள்’ என்பது ஜடாயு பறவையை குறிக்க, ‘ளிருக்கு’ என்பது ரிக் வேதத்தைக் குறிக்க, ‘வேள்’ என்பது முருகன் பெருமானைக் குறிக்க ‘ளூர்’ என்பது சூரியன் ஆகிய நால்வரையும் குறிப்பதாகும். அந்த நால்வரும் இந்த தலத்திற்கு வந்து சிவபெருமானை ஆராதித்ததினால் இந்த ஊரின் பெயரும் புள்ளிருக்கு வேளூர் என ஆயிற்றாம்.
நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும் மேற்கிலும் ராஜ கோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. வேப்ப மரமே இத் தலத்தின் தல விருட்சமாகும். நான்கு கோபுரங்களுடனும், உயர்ந்த மதில்களோடும் கூடிய இந்த ஆலயத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் இறைவன் அமர்ந்திருக்க, அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி அமைந்து உள்ளது. ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றார்கள்.

ஸ்தல வரலாறு : அங்காரனுக்கு ஒருமுறை வெண்குஷ்ட நோய் வந்து அவதிப்பட்டபோது ஒரு நாள் அசரீரி குரல் ஒன்று கேட்டது. அந்த குரல் தற்போது ஆதி வைத்தீஸ்வரர் ஆலயம் உள்ள இடத்திற்கு சென்று ஒரு மண்டலம் அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு ஆதி வைத்தீஸ்வரர் எனப்பட்ட சிவபெருமானையும், அவரது துணைவி பார்வதி தேவியையும் வணங்கி துதித்தால் வெண்குஷ்ட நோய் குணமாகி விடும் என்று கூறியது. அதைக் கேட்ட அங்காரனும் ஆசிரி கூறியபடியே இங்கு வந்து ஆதி வைத்தீஸ்வரர் எனப்பட்ட சிவபெருமானையும், அவரது துணைவி பார்வதி தேவியையும் வழிபட, அவரது நோய் முற்றிலும் குணமாயிற்று. அவரை குணப்படுத்த சிவபெருமான் மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரித்தபோது அதற்கான தைல பாத்திரத்தை பார்வதி தேவி கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.
இந்த தலத்தில் முத்துக் குமாரசுவாமி எனும் பெயரில் உள்ள முருகப் பெருமான், சூரிய பகவான், நான்கு வேதங்களில் ஒன்றான ரிக்வேத அதிபதி மற்றும் மகா முனிவரான அகஸ்தியர் போன்றவர்கள் சிவபெருமானை வணங்கித் துதித்து இருக்கிறார்களாம்.
சூரபத்மனை அழிப்பதற்காக இந்த தலத்திற்கு வந்த முருகப் பெருமான், தனது தாய் தந்தையரை வழிபட்டு, யுத்தத்தில் வெற்றி பெற தேவையான சக்தியைத் தரும் வரத்தினையும் பெற்று உள்ளார். அப்போதுதான் முருகப் பெருமானுக்கு அவருடைய தாயார் பார்வதி தேவி சக்தி வேலினையும் தந்தாராம். சூரபத்மனுடன் நடந்த போரில் முருகனின் படையில் இருந்த பலருக்கும் ஏற்பட்ட காயத்திற்கு இங்குள்ள வைத்தியநாத சுவாமியும், தையல் நாயகியுமே வைத்தியம் பார்த்ததாக சொல்லப்படுகிறது.
சூரபத்மனை அழித்தப் பின் வெற்றியுடன் இங்கு வந்த முருகப் பெருமான் தனது தந்தை மற்றும் தாயாருக்கு பூஜைகளை செய்தாராம். அது முதல் இந்த ஆலயத்தில் மூன்று வேளையிலும் முருகப் பெருமான் தனது தந்தை மற்றும் தாயாருக்கு பூஜைகளை செய்கிறார் என்பது ஐதீகம். அது மட்டும் அல்ல முருகப் பெருமானுடன் சேர்ந்து மூன்று வேளையிலும் அங்காரன் பூஜைகளை செய்கிறாராம். அங்காரனின் நோயைக் குணப்படுத்தியதினால் இந்த ஆலயம் அங்காரனை வழிபடும் தலம் ஆயிற்று.
ஆலயத்தின் மூலவரை ஆதி வைத்யனாதஸ்வாமி என்று அழைக்கின்றார்கள், தாயாரை (பார்வதி) தைலநாயகி என்று அழைக்கின்றார்கள். இங்குதான் நோய்களை குணப்படுத்திய தன்வந்தரி முனிவரும் ஜீவ சமாதி அடைந்தார்.

ஆலயத்தின் மேன்மை : இந்த ஆலயத்தின் மேன்மை என்ன என்றால் துவாபர யுகத்தில் அங்காரகன் நிறுவியதாக கூறப்படும் இந்த ஆலயம் நான்கு யுகங்களை தாண்டி, பிரளய காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் கூட அழியாமல் இருந்துள்ளது என்று பண்டிதர்கள் கூறுகின்றார்கள். அதே போல பிரளய காலத்தில் உலகெங்கும் கொடிய விஷ ஜுரம் பரவி உயிர்கள் பலியானபோது, வைத்தீஸ்வர பகவான் இந்த ஆலயத்திலேயே மூன்று முகங்களைக் கொண்ட ஜுவரேஸ்வரர் எனும் அவதாரம் எடுத்து அந்த ஜூரத்தைக் கட்டுப்படுத்தினாராம். பகவான் ஜுவரேஸ்வரருக்கு ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.
இந்த ஆலயத்தின் மேலும் ஒரு பெருமை என்ன என்றால், இலங்கை யுத்தத்தில் வெற்றி கண்டு இங்கு சிவபெருமானை துதிக்க வந்த பகவான் ராம லஷ்மணர்கள் இருவரும் தமக்காக உயிர் விட்ட தெய்வீகப் பறவையான ஜடாயுவுக்கு இறுதி காரியங்களை செய்தார்கள். அவர்கள் இறுதி காரியம் செய்த குண்டம் ஜடாயு குண்டம் எனும் பெயரில் இந்த ஆலயத்தில் உள்ளது. தெய்வீகப் பறவையான ஜடாயு சீதையை கவர்ந்து சென்ற ராவணனுடன் நடு வானில் சண்டை இட்டபோது அதன் வெட்டப்பட்ட உடலில் இருந்து பல பாகங்கள் அங்கங்கே சிதறி விழுந்தனவாம். அதில் ஒரு பாகம் இந்த ஆலய வளாகத்தில் விழுந்ததினால் இங்கு அவருக்கு இறுதி காரியங்கள் நடைபெற்றதாம். அதன் பின் ஜடாயுவின் ஆத்மா இங்கு வந்து சிவபெருமானிடம் தமக்கு முக்தி தருமாறு வேண்டி அந்த வரத்தையும் பெற்றதாம்.

தீர்த்த குளங்கள் : இந்த ஆலயத்தில் சித்தாமிர்த தீர்த்தம் எனும் குளத்தைத் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்க சந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு சில தீர்த்த குளங்களும் உள்ளன என்கின்றார்கள். முன் ஒரு காலத்தில் பல சித்தர்கள் இந்த ஆலய தலத்திற்கு வந்து இறைவனுக்கு அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றார்களாம். அப்போது அவர்கள் அபிஷேகம் செய்த அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்து விட்டது என்பதினால் இந்த குளத்தின் பெயரும் சித்தாமிர்த தீர்த்தம் என ஆயிற்று.
இந்த ஆலய திருக் குளத்தில் குளித்தால் பல்வேறு வகைகளிலான நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலய குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும், பிரகாரத்தில் வைக்கப்பட்டு உள்ள ஒரு மரப் பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் பிரார்த்தனையின் ஒரு அங்கமாக உள்ளது.

மணிப்பள்ளம் ஆதி வைத்தீஸ்வரன் ஆலயம்

சீர்காழி அருகில் உள்ள ஆதி வைத்தீஸ்வரன் ஆலயத்தைத் தவிர மேலும் பல இடங்களில் காணப்படும் ஆதி வைத்தீஸ்வரன் ஆலயங்களில் முதலாவது ஆலயம், மூல வைத்தீஸ்வரன் ஆலயத்தில் இருந்து இருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவில் உள்ள மண்ணிப்பள்ளம் எனும் கிராமத்தில் உள்ளது. அந்த ஆலயத்தில்தான் இன்று மூல வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள பிரதான தெய்வம் இருந்ததாக கூறுகின்றார்கள். ஆகவே ஆதி வைத்தீஸ்வரன் ஆலயங்களில் இதுதான் மூத்த ஆலயம் என்பதாக கூறுகின்றார்கள்.

ஸ்தல வரலாறு : மணிப்பள்ளத்தில் உள்ள ஆதி வைதீஸ்வரன் ஆலய வரலாறு சுவையானது. இங்குள்ள ஆதி வைத்தீஸ்வரர் ஆலயம், மற்ற ஆதி வைதீஸ்வரன் ஆலயங்களுக்கு தாய் ஆலயம் என்று நம்பப்படுகிறது.
கோயில் வரலாறு குறித்து கூறப்படும் நாட்டுப்புறக் கதைகளின்படி, மருந்துகளின் தலைவராக இருந்த தன்வந்தரி மகரிஷி இந்த ஆலயத்தில் வசித்து வந்தாராம். அந்தப் பகுதியை சேர்ந்த மன்னர் ஒருவர் மகரிஷியை சந்திக்க விரும்பி, தனது அரண்மனைக்கு தன்வந்தரி மகரிஷியை அழைத்து வரும்படி தூதர்களை அனுப்பினார். ஆனால் தன்வந்தரி மகரிஷி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். மன்னன் தன்னை பார்க்க விரும்பினால் அவர்தான் ஆலயத்துக்கு வந்து தன்னை பார்க்க வேண்டும் என்று பதில் அனுப்ப, அதனால் கோபமுற்ற மன்னன் தனது படைகளை அனுப்பி, மகரிஷியை தீயில் போட்டு எரித்து விடுமாறு கட்டளையிட்டார்.
ஆனால் தீயில் போடப்பட்ட மகரிஷி அந்த நெருப்பில் இருந்து ஒன்றும் ஆகாமல் வெளியில் வந்ததும் இல்லாமல் அதே இடத்தில் மீண்டும் தன்னுடைய மருத்துவப் பணியினை தொடர்ந்தார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மன்னன் அந்த ஆலயத்தை அழித்து விடுமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் அந்த மன்னன் மணிப்பள்ளத்தில் இருந்த ஆலயத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ்பெற்ற வைதீஸ்வரன் பகவான் ஆலயத்தைக் கட்டினார் என்பதாகக் கூறுகின்றார்கள். தன்வந்திரி மகரிஷியை சந்திக்க முடியாமல் போன கோபத்தில் மன்னன் இந்த ஆலயத்தின் மூல சிலைகளை எடுத்துச் சென்று தற்போது சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து இருக்கலாம் என்று நம்புகின்றார்கள்.
பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட இரு பக்தர்களும் (ஸ்ரீ ரமேஷ் மற்றும் ஸ்ரீ பரமானந்தம்) உள்ளூர் மக்களின் உதவியுடன் மீண்டும் ஆலயத்தை நிர்மாணிக்க முயன்றபோது ஆலயம் அமைக்கக் கூடாது என விரும்பிய சில விஷமிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலானார்கள். ஆலயத்தை மீண்டும் கட்ட முயன்ற பக்தர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. மேலும் சிலர் ஆலய பணியில் இருப்பது போல காட்டிக் கொண்டு உள்ளிருந்து கொண்டே சிக்கல்களை உருவாக்கினார்கள்.

இத்தகைய குழப்பங்களின் நடுவில் அங்கு நிலவிய சூழ்நிலையை திசை திருப்பும் வகையில் ஒரு தெய்வ நிகழ்வு நடந்தது. ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில், மஞ்சள் நிற பூசணிக்காய் ஒன்று ஐந்து தலை நாக உருவில் விளைந்தது. காட்டுத் தீ போல அந்த செய்தி பரவியபோது, தொலைதூர இடங்களிலிருந்தும் பல மக்கள் சாரி சாரியாக அந்த அரிய காட்சியைப் பார்வையிட அங்கு வந்தனர். அந்த மக்கள் அப்படிப்பட்ட உருவம் கொண்ட பூசணிக்காய் தோன்றியது நாகராஜரின் (நாகங்களின் தலைவர்) தெய்வீக செயல் என்று கூறினர். மேலும் அந்த பூசணிக்கு வழிபாடு செய்யத் தொடங்கினர். அந்த நிகழ்விற்குப் பிறகு ஆலய கட்டுமானத்திற்கு இடையூறு விளைவிப்பதில் முன்னணியில் நின்றவர்கள் உட்பட அனைவரும் ஆலய நிர்மாணப் பணிக்கு தடங்கல் விளைவிப்பதை நிறுத்திக் கொண்டார்கள் என்பதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள். இது வாய் மொழி செய்திதான்.
ஆலயத்தை சுற்றி ஒரு சுவர் எழுப்பப்படாவிட்டால், கோவில் கட்டுமானம் சுறுசுறுப்பாக நடைபெறாது என ஆரூடம் கூறிய ஒரு பண்டிதர் குறிப்பிட்டத்தைப் போலவே ஆலயத்தை சுற்றி ஒரு சுவர் எழுப்பப்பட்ட பின்னரே அவர்களால் ஆலய கட்டுமானத்தை நிறைவாக துவக்க முடிந்தது. அதுவரை பல தடைகள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்ததாம். இருப்பினும் 12 வருடங்கள் போராடி வெற்றி கொண்டு அனைத்து தடைகளையும் மீறி ஆலய பணி வெற்றிகரமாக நிறைவு அடைய 2013 ஆம் ஆண்டில் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. நடந்தவை அனைத்துமே ஆதி வைத்தியநாதன் மேன்மையை எடுத்துக் காட்டுவதற்கு செய்யப்பட்ட தெய்வீக நாடகம் என அனைவரும் நம்பினார்கள்.
பல வருடங்களுக்கு முன்னர் அந்த கிராமத்தில் குடியேறியவர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த நிலப் பகுதியில் சிதைந்த நிலையில் இருந்த இந்த ஆலயத்தை மீட்டெடுத்து ஆலயத்தை மீண்டும் நிர்மாணிக்க அங்கிருந்த ஸ்ரீ ரமேஷ் மற்றும் ஸ்ரீ பரமானந்தம் எனும் இரு அன்பர்கள் கடுமையாக போராட வேண்டி இருந்ததாம். திரு ரமேஷின் கூற்றுப்படி ஒரு காலத்தில் இந்த கிராமம் பிராமணர்களின் பிரதான குடியேற்ற பகுதியாக இருந்தது. அவர்களுக்காக தனி சுடுகாடு கூட இருந்ததாம்.

ஆலயத்தின் மேன்மை : 1920 ஆம் ஆண்டில், அன்றைய பீடாதிபதியான காஞ்சி மஹா பெரியவர் தமது பாத யாத்திரையின்போது இந்த கிராமத்தை கடந்து சென்றபோது பாழடைந்த கோயிலுக்குச் சொந்தமான ஐந்து நீர்நிலைகளில் ஒன்றான ‘தைலக்குட்டி’ எனும் குளத்தில் நீராடிய பின் சிதைந்து இருந்த ஆலயத்தில் இருந்த ஆதி வைத்தியநாத பகவானின் தரிசனம் பெற்றார் எனப் பெருமையாக கூறுகின்றார்கள். அவரே அங்குள்ள சிலைகள் தெய்வீக கணங்களினால் நிறுவப்பட்டது என்று குறிப்பிட்டார் எனவும் அங்குள்ளவர்கள் கூறினார்கள்.
தொல்லியல் துறை தொல் பொருள் வல்லுவரான குடவாசல் பாலசுப்ரமணியம் என்பவரின் கூற்றின்படி மணிப்பள்ளத்தில் உள்ள இந்த ஆலயமே சீர்காழியில் உள்ள மூல வைத்தீஸ்வரன் என்றும், பிற இடங்களில் உள்ள வைதீஸ்வரன் ஆலயங்களை விட இது முதன்மையானது என்பதாகும். 1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் இருந்த வைத்தீஸ்வரன் ஆலயம் பல மைல் சுற்றளவில் கட்டப்பட்டு இருந்துள்ளது என்பதற்கு சான்றாக ஆலயத்தின் சிதைபாடுகள் தொலைதூர அளவுக்கு பல இடங்களில் கிடைத்துள்ளனவாம். இந்த கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்ட உடைந்த கட்டமைப்புகள் மற்றும் தெய்வங்களின் சிலைகள், உடைந்த நிலையில் இருந்த சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் அவர்களது கூற்றை பலப்படுத்தியுள்ளன. இங்கிருந்த பல சிலைகள் கேரளாவைப் போன்ற இடங்களுக்கு திருட்டுதனமாக கொண்டு செல்லப்பட்டு விட்டன என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் சில சிலைகளை அருகில் இருந்த கிராமத்தினர் எடுத்துக் கொண்டு சென்று ஆலயங்களை அமைத்துக் கொண்டார்களாம். மொத்தத்தில் ஆலய பகுதியில் இருந்த பழுதடைந்த மற்றும் சிதைந்த சிலைகளை மட்டுமே அங்கு விட்டுச் சென்று இருந்தார்கள். அந்த ஆலய வளாகத்தில் பாறையில் செதுக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு கல்வெட்டுகள் கிடைத்தனவாம். ஆனால் அவற்றின் தொடர் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. அவற்றையும் எவராவது கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துக் கொண்டு சென்று இருக்கலாம் என நம்புகின்றார்கள்.
ஆரம்பத்தில் தற்போது பிரதான சன்னதி உள்ள இடத்தின் மீது சாறை சாரையாக பாம்புகள் உலாவிக் கொண்டு இருந்ததினால் அதன் அருகில் செல்ல எவருக்கும் துணிவில்லாமல் இருந்ததாம். திரு. ரமேஷின் கருத்துப்படி, முதலில் இருந்ததாக நம்பப்படும் மிகப் பெரிய ஆலயத்தின் அழிவுக்கான காரணங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும், அதன் ஆராய்ச்சி தொடர்கிறது என்றும் கூறினார். பல இடங்களிலும் புதிய வைத்தியநாத ஸ்வாமி ஆலயங்களை எழுப்பியவர்கள் இங்கு வந்து ஆலய நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மணலை எடுத்துச் சென்று பூமி பூஜையில் பயன்படுத்துவதாக திரு ரமேஷ் கூறினார்.

ஆலய அமைப்பு : ஆலயத்தின் பிரதான நுழை வாயில் கிராம பகுதியில் சிறிய சந்தில் உள்ளது. கோவில் வளாகம் சற்றே பெரியதாக கட்டப்பட்டு உள்ளது. சன்னதியில் உள்ள சிவலிங்கம் ஆதி வைத்தியநாதன் என அழைக்கப்படுகிறார். மிக நீளமான இந்த சிவலிங்கம் ஆழமாக புதைக்கப்பட்டு உள்ள நிலையில் காணப்படுகின்றது. சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி தையல்நாயகி எனும் பெயரில் தனி சன்னதியில் உள்ளார். விநாயகர் சன்னதி தென் கிழக்குப் பகுதியில் இருக்க, முருகப் பெருமான் மற்றும் தன்வந்தரி மகரிஷிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. அதை போல சந்திரன், சந்திரன், பைரவர் ஆகியோரும் உள்ளார்கள். ஆதி வைத்தியநாதன் சன்னதி கிழக்கே பார்த்தபடி இருக்க தையல்நாயகி தெற்குப் பக்கத்தை நோக்கி பார்த்தபடி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள். சிவலிங்கத்தின் உயரம் 7 அடி; சுற்றளவு 3.5 அடி ஆகும். ஆவுடையாரின் சுற்றளவு பத்து அடி ஆகும். அதன் முன் நாம் நின்றால் நமது பிம்பம் திரும்ப பிரதிபலிப்பாகவே கூறப்படுகிறது.

தீர்த்த குளங்கள் : இந்த ஆலயத்துக்கு ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவை : – தைல தீர்த்தம், சடையார் தீர்த்தம், ஹோம தீர்த்தம், வெட்டு ருண தீர்த்தம் மற்றும் தெய்வ தீர்த்தம் என்பன ஆகும்.

மண்ணிப்பள்ளம் ஆலய தொடர்பு முகவரி :
திரு ரமேஷ்: +91 9842188063
திரு பரமநாதன் : +91 944452625

உத்திர வைத்தீஸ்வரன் ஆலயம் பூந்தமல்லி, சென்னை புறநகர்

ஸ்தல வரலாறு : ஆதி வைத்தீஸ்வரன் ஆலயங்களில் இரண்டாவது பெரிய ஆலயம் சென்னை புறநகர் பகுதியில் பூந்தமல்லியில் அமைந்துள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தீஸ்வரன் ஆலயம் ஆகும். இதை உத்திர வைத்தீஸ்வரன் ஆலயம் என்கின்றார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை புறநகர் பகுதியில் அங்காங்கே கட்டப்பட்ட, ஒன்பது நவகிரஹ ஆலயங்களில் இது ஒன்றாகும். ராஜராஜ சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும், 1200 ஆண்டு பழமையான இந்த ஆலயம் சென்னைக்கு 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூந்தமல்லி என்ற இடத்தில் உள்ளது.
இந்த ஆலயத்தில் பிரதான தெய்வம் வைத்தீஸ்வரன் தனது தேவியான தையல் நாயகியுடன் காட்சி தருகிறார். அனைத்து வைதீஸ்வரன் ஆலயங்களிலும் பிரதான தெய்வமாக உள்ள சிவபெருமான், வைத்தீஸ்வரன் எனவும் அவருடைய தேவி தையல் நாயகி என அழைக்கப்படுவதை போலவே, இந்த ஆலயத்திலும் மூலவரும் அவர் துணைவியும் வைத்தீஸ்வரன் எனவும் தையல் நாயகி அல்லது பாலாம்பிகா எனவும் அழைக்கப்படுகிறார்கள். பாலாம்பிகா என்றால் அழகானவள் என்பது அர்த்தம் ஆகும். முதலில் தைல நாயகி என்றே இங்குள்ள அம்பாள் அழைக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக தைலம் எனப்படும் மருத்துவ எண்ணெயை அவள் கொண்டு சென்றதினால் தைல நாயகி எனப்பட்டாள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிவபெருமானுக்காக அமைந்த இந்த ஆலயம் அடர்ந்த மல்லிகைப் பூ காடாக இருந்ததாம். மல்லிகை பூக்கள் ஏராளம் நிறைந்த இடமாக இருந்ததினால் ‘மல்லி பூ பூத்திருந்த இருந்த இடம்’ என்ற கருத்தைக் கூறும் விதமாக ‘பூத்து இருந்த மல்லி’ என்று பெயரிட்டது. பின்னர் அந்த பெயர் பூந்தமல்லி சுருக்கப்பட்டது.
அங்காரன் தான் பெற்று இருந்த சாபத்தினால் தனக்கு ஏற்பட்டு இருந்த தீராத வியாதியை விலக்கிக் கொள்ள பல வைத்தீஸ்வரர் ஆலயங்களுக்கும் சென்று வைத்தியநாத ஸ்வாமியை வேண்டி வழிபட்டு உள்ளார். அதே போலவேதான் அவர் இந்த ஆலயத்திற்கும் வந்து வைத்தியநாதரை வணங்கி, தனது வியாதி குணம் அடைய வேண்டினார். ஆகவே இந்த வைத்தீஸ்வரன் ஆலயத்தில் அமர்ந்துள்ள அங்கார பகவானை, இந்த ஆலயத்தில் வந்து வணங்கினால், ஜாதகத்தில் உள்ள செய்வாய் தோஷம் விலகும் என்பதினால் வைத்தீஸ்வரன் ஆலயம் மேன்மை பெறுகின்றது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு கிராமியக் கதை உள்ளது.

கால முனிவரின் கதை : பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், துவாபர யுகத்தில், இமயமலை அடிவாரங்களில் பல முனிவர்கள் தவம் இருப்பது உண்டு. அதில் ஒருவர் காலத்தைக் குறித்து முன்னரே கூறிடும் கால முனிவர் என்பவரும் இருந்தார். அவர் தனக்கு மற்ற முனிவர்களை விட மேன்மையான ஞானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானை துதித்தபடி தவம் இருந்தார். அந்த முனிவர் தேவ முனிவர் என்பதினால் நவ கிரகங்களும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள். அனைவருக்கும் வரும் காலத்தை முன்னரே கணித்துக் கூறி வந்த அவருக்கு, தன்னுடைய இறுதி வாழ்க்கையின் ஒரு கால கட்டத்தில் தான் முன் ஜென்மத்தில் செய்த ஊழ் வினையின் பயனாக துன்பம் அனுபவிக்க வேண்டி இருக்கும் என்பதை கவனித்துக் கொள்ள மறந்தே போனார்.
அவருடைய தவத்தினால் சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்தாலும் கால முனிவரின் தண்டனை காலம் முடியும்வரை அவருக்கு காட்சி தர விரும்பவில்லை. அப்படி காட்சி தந்து விட்டால் அந்த முனிவரின் சாபம் போய் விடும், தேவ கட்டளைக்கு ஏற்ப நிகழ இருந்த தண்டனையை மாற்ற சிவபெருமானுக்கு மனம் இல்லை. ஆகவே ஒரு சந்நியாசி உருவில் அந்த முனிவரிடம் சென்று பேச்சு கொடுத்து விட்டு, பேச்சின் இடையே அந்த முனிவருக்கு வர இருந்த தண்டனையை நினைவு படுத்தியப் பின் மறைந்து விட்டார். அப்போதுதான் கால முனிவருக்கு தனக்கு வர இருந்த தொழுநோய் குறித்து நினைவுக்கு வந்தது.
சாதாரணமாக யாருக்கு குறிப்பிட்ட காலத்தில் துன்பம் அல்லது இன்பம் தோன்றுமோ அதற்கான கிரகங்கள் அவர்களது ஜாதகத்தில் அந்தந்த தன்மையை தரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு அந்த பலன் ஏற்பட வழி செய்வார்கள்.
அந்த நிலையில் அங்காரன் அவருக்கு நோய் தரும் இடத்தில் அமர வேண்டி இருந்தது. உடனடியாக அந்த முனிவர் தந்திரமாக அனைத்து கிரகங்களையும் அழைத்து அங்கார பகவானை அவர் ஜாதகத்தில் நன்மை தரும் இடத்தில் அமரச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்க, வேறு அனைத்து கிரகங்களும் நிர்பந்தம் செய்ததினால் தன்னை அறியாமல் அங்காரனும் முனிவருக்கு நோய் தரும் ஸ்நானத்தில் அமராமல் வேறு இடத்தில் சென்று அமர்ந்து கொள்ள, முனிவருக்கு வர இருந்த நோய் மாறி விட்டது.

அங்காரன் தொழு நோய் பெற்ற கதை : அதனால் அங்காரன் மீது பிரும்மா கடும் கோபம் கொண்டார். தெய்வ கட்டளைகளின்படி நிகழ இருந்த தண்டனையை மாற்றி அமைக்க வழி செய்ததினால் கால முனிவருக்கு வர இருந்த தொழு நோய் அங்காரனுக்கு வரட்டும் என சபித்து விட அங்காரனை அந்த நோய் பற்றிக் கொண்டது.
அங்காரனும் தான் செய்த பிழையை மன்னித்து கருணை காட்டுமாறு பிரும்மாவை வேண்டிக் கொள்ள, அவரால் கொடுத்த சாபத்தை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள முடியாது என்பதினால் தன்வந்தரி மகரிஷியிடம் சென்று நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பினார்.
தன்வந்திரி மக ரிஷியும் நடந்தவற்றை அறிந்து கொண்டார். அந்த வியாதியை தன்னால் குணப்படுத்த முடியாது என்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே அவர் அங்காரனிடம் அந்த வியாதி குணமடைய வேண்டும் எனில் அதற்கான ஒரே வழி பூலோகத்துக்கு மனித உருவில் சென்று சிவபெருமானை துதித்து சாப விமோசனம் பெற்று வியாதியை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என்ற விதியைக் கூறினார். அவர் ஆலோசனையை ஏற்று அங்காரனும் மனித உரு எடுத்து பூமிக்கு சென்று பல இடங்களிலும் அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து தவம் செய்து வந்தார். அப்படி அங்காரன் அமர்ந்து தமது நோய் குணமடைய சிவ தவம் செய்த இடங்களே பிற்காலத்தில், வைத்தீஸ்வரஸ்வாமி ஆலயங்கள் ஆயின.
காலம் கடந்தது. ஒருநாள் சிவபெருமான் தனது மனைவி பார்வதியுடன் மனித உருவில் அங்காரன் தவம் செய்த இடத்துக்கு போய் தாம் மருத்துவர் எனக் கூறிக் கொண்டு அவருடைய வியாதியை குணப்படுத்தினார். பார்வதியும் அவளது கைகளில் சில தைல குடுவைகள் ஏந்தி வந்திருந்தாள். அங்காரனின் வியாதி குணம் அடைந்ததும் அடுத்து சாபம் விலகிய அங்காரனுக்கு அவருடைய பழைய உருவம் திரும்ப வர, ஒரு கணம் தன்னை மறந்து ஸ்தம்பித்து நின்ற அங்காரன், அடுத்த க்ஷணமே தன்னை குணப்படுத்தியது மருத்துவர் உருவில் இருந்த சிவபெருமானும் பார்வதியும் என்பதை உணர்ந்து அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசிகளை பெற்றார். சிவபெருமானிடம் அவர் ஒரு வரத்தையும் வேண்டினார்.
அவர் வேண்டியது என்ன என்றால் தனது நோயை எந்த இடத்தில் சிவபெருமான் குணப்படுத்தினாரோ அந்த இடத்திலும், எந்தெந்த இடங்களில் வியாதியுடன் அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து தவம் செய்தாரோ அங்கெல்லாம் சிவபெருமான் வைத்தீஸ்வர பகவானாகவும், வியாதிக்கான தைலங்களைக் ஏந்தி வந்த பார்வதி தேவி தைல நாயகியாகவும் அவதரித்து ஆலயத்தில் அமர வேண்டும் என்பதே.
அது மட்டும் அல்ல அந்த ஆலயங்களில் தானும் (அங்காரனும்) ஒரு சன்னதியில் அமர வேண்டும் எனவும், யாருக்கெல்லாம் ஜாதகத்தில் தன்னால் தோஷம் ஏற்படுமோ அவர்கள் வைத்தீஸ்வரஸ்வாமி ஆலயத்துக்கு வந்து தன்னை வேண்டி பூஜை செய்தால், அந்த தோஷத்தின் கடுமையை முற்றிலுமாக விலக்காவிடிலும், அதன் தன்மையை வெகுவாக குறைப்பேன் எனவும், அதனால் அவர்கள் படும் துயரங்கள் அவர்களால் தாங்க முடியும் அளவில் மட்டுமே இருக்கும் என்பதாகவும் கூற அதையும் சிவபெருமான் ஏற்றுக் கொண்டார்.
ஒருவருக்கு கர்மாவினால் ஏற்படும் தண்டனையை முற்றிலும் அகற்றுவது தெய்வ நியதிக்கு எதிரானது என்பதினால் அதன் தாக்கத்தை வெகுவாக குறைப்பது என்பதே சரியான நிலைப்பாடாகும் என்பதினால் அங்காரன் இந்த முடிவை எடுத்தார். இதனால்தான் நோய் நொடிகள் விலக வைத்தீஸ்வரஸ்வாமி ஆலயத்துக்கு சென்று வைத்யனாதஸ்வாமி மற்றும் தையல் நாயகியை வணங்கித் துதித்தப் பின் அங்காரனையும் துதிப்பது அவசியம் என்பதான நியதி ஆயிற்று.

ஆலய தொடர்ப்பு முகவரி :
Uthira Vaidhyalingeswarar Temple,
Kattur, Kanchipuram, Tamil Nadu,
India, Pin code – 603110.

பாண்டூர் ஆதி வைத்தீஸ்வரன் ஆலயம்

செவி வழிக் கதையின்படி தற்போதைய வைத்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைத்தீஸ்வரனுக்கு மூத்தவர், மாயவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைதியான சூழ்நிலையில் இருக்கும் பாண்டூர் எனும் கிராமத்தில் ஒரு ஆலயத்தில் அமர்ந்து உள்ளார் என்கின்றார்கள். இதுவே மூல ஆதி வைத்தீஸ்வரன் ஆலயங்களில் மூன்றாவது வைத்தீஸ்வரர் ஆலயம் என்கின்றார்கள். பாண்டூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 2000 ஆகும்.
மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில் வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.
இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில் இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது. பாண்டு ரோகம் என்பது ரத்த சம்மந்தப்பட்ட நோய் ஆகும். அது ரத்தத்தை சுண்டி, தோலில் வெண் குஷ்டம் போன்ற நிலையை உருவாக்கி, அப்படியே ஒருவரை களைப்படைய வைத்துக் கொண்டே இருக்கும். முடிவில் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாது போய் விடும்.

ஸ்தல வரலாறு : மஹாபாரத யுத்தம் முடிந்த பின் எதற்காக பாண்டவ சகோதரர்கள் பல சிவன் ஆலயங்களுக்கும் சென்று வழிபட வேண்டி இருந்தது என்பதைக் கூறும் நாடோடிக் கதை இது. கிருஷ்ண பரமாத்மாவின் உதவியோடு மஹாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை சென்றடைந்து அரியணை ஏறினார்கள். தனது கடமை முடிந்து விட்டதை தெரிந்து கொண்ட கிருஷ்ண பரமாத்மாவும் துவாரகைக்கு சென்று அங்கிருந்து தன் அவதாரத்தை முடித்துக் கொள்ள விரும்பினார். ஆகவே அவர் துவாரகைக்கு திரும்பும் முன் பாண்டவ சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு சில அறிவுரைகளை கொடுத்தார். அவர் கூறினார்
“பாண்டவ சகோதரர்களே, நான் கூறும் இவற்றை கவனமாகக் கேளுங்கள். மஹாபாரத யுத்தத்தில் கௌரவர்களை அழித்து உங்களிடம் ஆட்சியைக் கொடுத்தப் பின் நான் எடுத்த அவதாரத்தின் கடமை முடிந்து விட்டது என்றே எண்ணினேன். ஆனால் காந்தாரி எனக்கு கொடுத்த சாபத்தின் விளைவினால் எனக்கு இன்னொரு கடமை சாப உருவில் வந்துள்ளது. அதையும் நான் முடித்தால் மட்டுமே என்னுடைய அவதாரம் முடிவுக்கு வரும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னுடைய குல மக்கள் அழிவதற்கு நான்தான் காரணம் என அவள் தவறாக புரிந்து கொண்டு நானும் என்னுடைய சந்ததியினரும் அடுத்த 36 வருடத்தில் அழிய வேண்டும், அதற்கும் நானே காரணமாக இருக்க வேண்டும் என்பது அவள் கொடுத்துள்ள சாபம்.
அவளுடைய சந்ததியினர் அழிந்ததின் காரணம் அவர்களுடைய ஊழ் வினைப் பலனே என்பதை அவள் எண்ணிப் பார்க்கவில்லை. அதை போலவே நான் எனது சந்ததியினரும் அழியக் காரணமாக இருந்து, அவர்களை அழித்தப் பின்னரே இந்த பூத உடலை துறக்க வேண்டும் என்பது காந்தாரியின் சாபத்தினால் ஏற்பட்டு உள்ள விதியாக அமைந்து விட்டது. ஆகவே இனி என் உதவியை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வரும் காலம் குறித்து நான் கொடுக்கும் இந்த எச்சரிக்கையை கவனமாகக் கேளுங்கள். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் உங்களுடைய சொந்த பந்தங்களை கொன்று விட்டதினால் ஏற்பட்டு உள்ள தோஷத்திற்கான தெய்வ தண்டனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
அந்த தண்டனை என்ன என்றால் இன்று முதல் நான்கு ‘கால’ வருடங்கள் முடிவடைய உள்ள நிலையில் உங்களுக்கு மனபல இழப்பும், உடல் ரோக நோய்களும் ஏற்படும் (கால வருடங்கள் எத்தனை என்பதைக் குறித்த எண்ணிக்கை தெரியவில்லை). அந்த தண்டனைகளின் பலனாக உங்களுக்கு கடுமையான உடல் நோய் ஒன்று பாண்டு ரோகம் எனும் பெயரில் ஏற்படும். நான்கு ‘கால’ வருடங்களின் முடிவில் அந்த நோய் ஏற்பட்ட உடனேயே உங்களுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நீங்கள் எட்டி விட்டீர்கள் என்பதை உணர வேண்டும். ஆனால் அப்போது உங்களுக்கு உதவிட நான் இங்கு இருக்காமல் துவாரகையில் என்னுடைய இறுதிக் கட்ட வாழ்க்கையுடன் போராடிக் கொண்டு இருப்பேன். நீங்கள் வனவாசத்தில் இருந்தபோதே உங்களுக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் அந்த நோய் உங்களுக்கே தெரியாத வகையில் உங்கள் உடம்பில் தொற்றிக் கொண்டு விட்டது. அது வெளியே தெரியும் காலமே உங்களுடைய இறுதிக் கட்டக் காலம் ஆகும்.

ஆகவே நான்காம் ‘கால’ வருட முடிவில் உடனடியாக உங்கள் ஆட்சிப் பொறுப்பை தக்க நபரிடம் ஒப்படைத்து விட்டு நதிக்கரைகளில் உள்ள எத்தனை சிவன் ஆலயங்களுக்கு செல்ல முடியுமோ அத்தனை சிவபெருமான் ஆலயங்களுக்கும் சென்று அங்கு அவரை வழிபடுங்கள். முக்கியமாக எங்கெல்லாம் சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்து உள்ளாரோ அங்கெல்லாம் நீங்கள் சென்று அவர் காட்சி தரும் வரை தவத்தில் அமர்ந்து கொண்டு அவரை தரிசித்தப் பின் பயணத்தை மீண்டும் தொடருங்கள்.
இறுதியாக ஆதி வைத்தீஸ்வரர் உங்கள் முன் காட்சி தந்து மோட்ஷம் பெற அருள் புரிந்ததும் உங்கள் நோய்களும் விலகும், உங்களுக்கு மோட்ஷமும் கிடைக்கும். ஆதி வைத்தீஸ்வரர் மட்டுமே பல நோய் நொடிகளை தீர்க்கும் வல்லமை கொண்ட தெய்வம் ஆவர். நோய் நொடிகள் இருந்த பல்வேறு ரிஷி முனிவர்கள் மற்றும் தேவர்கள் கூட ஆதி வைத்தீஸ்வரரனை வேண்டி வணங்கி தம் துயரங்களையும், நோய் நொடிகளையும் விலக்கிக் கொண்டு உள்ளார்கள்.
வைத்தியநாத பெருமான் யார் என்று யோஜனை செய்கின்றீர்களா? அவர் வேறு யாரும் அல்ல. பிரும்மா, விஷ்ணு, மற்றும் அனைத்து ஆண் மற்றும் பெண் கடவுட்களும், அத்தனை ஏன் விஷ்ணுவின் அவதாரமாக அவதரித்து உள்ள நான் கூட வணங்கித் துதிக்கும் சிவபெருமானே அந்த ஆதி வைத்தீஸ்வரர் ஆவார். யுக, யுகமாக ஆதி வைத்தீஸ்வரராக அவதரித்துக் கொண்டே இருக்கும் அவர் ஆயிரத்துக்கும் அதிக நாமங்களால் பூஜிக்கப்படும் தெய்வம் ஆவார். அவரை எளிதில் காண முடியாது. மனதார அவரை துதிப்பவர்களுக்கும், எவர் ஒருவருக்கு பிராப்தம் உள்ளதோ அவர்களுக்கும் மட்டுமே அவர் காட்சி தருகின்றார். அவரே இந்த பிரபஞ்சத்தின் தலைவர். இத்தனை பெருமைகளைக் கொண்ட அவரால் மட்டுமே உங்கள் நோயை குணப்படுத்த இயலும்.
ஆகவே நீங்கள் இமய மலையை நோக்கி பயணிக்க துவங்கியதும் முதலில் தென் பகுதியில் இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய பாண்டு ரோக நோய் வெளியில் தெரியத் துவங்கியதும், ஆதி வைத்தீஸ்வரரை தேடித் கொண்டு, அவரிடம் சென்று அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
வழியில் எங்கெல்லாம் உங்களுக்கு சிவபெருமானுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என உள்ளுணர்வு ஏற்படுமோ அங்கெல்லாம் அவருக்கு ஆலயமும் எழுப்புங்கள். ஆதி வைத்தீஸ்வரரை தரிசனம் செய்து உங்கள் நோய் விலகியதும் நீங்கள் இமய மலைக்கு செல்வீர்கள். அங்கு நீங்கள் நடந்து செல்லும்போது ஒருவருக்குப் பின் ஒருவராக மரணம் அடைந்து சொர்கத்துக்கு செல்வீர்கள். அதற்கு முன்பாகவே நானும் உங்கள் அனைவரையும் விட்டு விலகி துவாரகையில் இருந்து இந்த பூத உடலை நீக்கிக் கொண்டு மேலுலகம் சென்றிருப்பேன்”. இவ்வாறாக கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு போதனை செய்தார்.
அதைக் கேட்ட பாண்டவ சகோதரர்கள் கிருஷ்ண பகவான் இல்லாமல் தாங்கள் அனாதைகளாக விட்டோமோ என துயரம் அடைந்தார்கள். ஆனால் விதியை மீற முடியாது என்பது அவர்களுக்கு நன்கே தெரியும். அடுத்து கிருஷ்ணரிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் தம் நாட்டிற்கு சென்றார்கள்.
காலம் கடந்தது. மெல்ல மெல்ல பாண்டவ சகோதரர்களுக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது, மன பலமும் உடல் பலமும் அழியத் துவங்கின. மனம் வெறுமை அடைந்தது. அவர்களால் ஆட்சியில் தொடர முடியவில்லை. ஆகவே அவர்கள் ஆட்சிப் பொறுப்பை அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு கிருஷ்ண பகவானின் அறிவுரையின்படி தென் இந்திய பகுதியில் இருந்து தமது ஹிமய மலைப் பயணத்தை துவக்கினார்கள்.

ஹஸ்தினாபுரத்தில் இருந்துக் கிளம்பியவர்கள் துவாரகைக்கு சென்று கிருஷ்ண பகவானிடம் ஆசிகளை பெற்றுக் கொண்டு கடற்கரை வழியே தென் இந்திய பகுதியை நோக்கி தமது பயணத்தை துவக்கினார்கள். அவர்கள் பல்வேறு பிராந்தியங்கள் மூலமாக சென்று அங்கங்கே இருந்த வழிபாட்டுத் தலங்களில் சிவபெருமானை வணங்கித் துதித்தார்கள். மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா போன்ற பிராந்தியங்களில் சில இடங்களில் சிவபெருமானுக்கு ஆலயங்களையும் நிறுவினார்கள். (அப்போதெல்லாம் அந்த பெயர்களில் பிராந்தியங்கள் இருந்திடவில்லை. அனைத்துமே ஒரே நில பூமியாகவே இருந்தன. அங்கங்கே பல இடங்களிலும் இருந்த அடர்ந்த நீண்ட காடுகளும், நதிகளும் பிராந்தியங்களை பல்வேறு பூமிகளாக பிரித்து வைத்திருந்தன).
இந்த நிலையில் காவேரி ஆற்று கரை அருகே பாண்டவ சகோதரர்கள் வந்தடைந்தபோதுதான் அதுவரை வெளித் தெரியாமல் அவர்கள் உடலுக்குள் மறைந்து இருந்திருந்த கடுமையான ‘பாண்டு’ என்ற நோய் வெளித் தெரிந்தது. அவர்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதை அது காட்டியது. காவேரி நதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்களிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கு ஆதி வைத்தீஸ்வரரை துதித்து தவம் இருந்து நோயை போக்கிக் கொள்ளுமாறு ஆசிரி ஒன்று கூறியது. அந்த ஆசிரியே விஷ்ணு பகவானுடைய குரல் ஆகும்.
அது தெரியாமல் பயத்துடன் குரல் வந்த திசையை நோக்கிக் கொண்டு இருந்த பாண்டவ சகோதரர்கள் முன் திடீர் என கிருஷ்ண பரமாத்மாவே விஷ்ணு பகவான் உருவில் காட்சி தந்த பின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு சென்று மண்ணாலான சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்து சிவபெருமானின் அருளை வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்து போனார்.
அந்த ஆசிரி கூறிய இடமே மாயவரத்தில் அருகில் உள்ள பாண்டூர் எனும் கிராமம் ஆகும். அவர்களும் விஷ்ணு பகவான் கூறிய இடத்துக்கு சென்று அங்கு சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்கள். முடிவில் அவர்கள் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமானும் அவர்கள் முன் தனது துணைவியார் பார்வதி தேவியுடன் காட்சி தந்தார். அப்படி காட்சி தந்த கோலத்தில் இருந்தவர்களே வைத்தியநாத பெருமான் மற்றும் பாலாம்பிகா எனும் தையல் நாயகி ஆவார்கள். பாண்டவ சகோதரர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தனது துணைவியார் பார்வதி தேவியுடன் அவர்கள் அமைத்த ஆலயத்தில் அமர்ந்து கொண்டு அங்கு வந்து அவர்களை வழிபட்டவர்களுக்கு வியாதி நிவாரணமும் தந்து ஆசி வழங்கி வரலானார்கள்.
பாண்டவ சகோதரர்கள் அந்த கிராமத்தில் இருந்தபோது அவர்களுக்கு உதவி செய்த தேவகணமே பின்னர் சகாய பெருமான் எனும் உருவில் அங்கு தனி சன்னதியில் அமர்ந்தார். இந்த ஆலயத்தில் தென்மேற்கு சன்னதியில் விநாயகப் பெருமானும், மேற்கில் சகாய பெருமானும் அமர்ந்து இருக்க, தனி சன்னதியில் ஐயனார் மற்றும் பிடாரியும் உள்ளார்கள். ஆலயத்தில் கால பைரவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவர் பக்தர்களின் துயரங்கள் அனைத்தையும் துடைக்கின்றார்.

ஆலயத்தின் மேன்மை : ஆலயம் சிறியது என்றாலும் மேன்மை மிக்கது. பாண்டவ சகோதரர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாத பெருமானே சீர்காழி அருகில் உள்ள பெரிய வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத பெருமானுக்கு மூத்தவர் என ஆலயத்தை நிர்வாகிப்பவர்கள் கூறுகின்றார்கள். இந்த ஆலயம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.

தீர்த்த குளம் : அதன் எதிரில் சூர்ய புஷ்காரனி எனும் குளம் உள்ளது. அதில் குளித்தால் தீராமல் உள்ள நோய்கள் விலகத் துவங்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. ஆலயத்தின் அருகில் உள்ள வயல் வெளி மத்தியில் ஐந்து பிடாரி எனும் பெயரில் கிராம தேவதையின் பெயரில் உள்ளது. பாண்டூரில் உள்ள வைத்தீஸ்வரரின் ஆலயத்தில் வந்து வணங்கித் துதிப்பவர்கள் பிடாரியையும் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு அந்த ஆலயத்தை வந்தடைந்த முழு பலனும் கிடைக்கும் என்பதும் ஐதீகமாம். பிடாரி எனும் தெய்வம் சிவ சக்தியின் தோற்றம், அவள் காளியின் அவதாரமாக அவதரிக்கின்றாள் என்று நம்பிக்கை உள்ளது. அவள் சிவபெருமானின் ஆலயத்திற்கு வெளியில் இருந்து கொண்டு ஆலயங்களை காப்பவளாம். பேய், பிசாசுகள் மற்றும் தீய சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட அவளை தாந்த்ரீகர்கள் அதிகம் வணங்கித் துதிக்கின்றார்கள். அதனால்தான் தீய சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட அவள் பல கிராமங்களின் கிராம தேவதையாக இருக்கின்றாள்.

ராதா நல்லூர் ஆதி வைத்தீஸ்வரன் ஆலயம்

ராதா நல்லூர் எனும் சிறு கிராமத்தில் உள்ளது இன்னொரு வைத்தீஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கிப் பார்த்தவாறு அமைந்துள்ள 1200 வருடத்திற்கு முந்தைய இந்த ஆலயம் ராஜராஜ சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. இதுவே மூல ஆதி வைத்தீஸ்வரன் ஆலயங்களில் நான்காவது வைத்தீஸ்வரர் ஆலயம் என்கின்றார்கள். மாயவரத்தில் இருந்து மணல் மேடு – பந்த நல்லூர் பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரர் ஆலயத்தைப் போலவே இங்கும் ஆலய அமைப்பு இருக்க வைத்தீஸ்வர ஸ்வாமியும், தையல் நாயகியும் அங்குள்ள அதே கோலத்தில் இங்கும் அமர்ந்துள்ளார்கள். இரு மண்டப பகுதிகளை கொண்ட இந்த ஆலயத்தின் முதல் மண்டப பகுதியில் நந்தி தேவரும், ஆலயக் கொடி மரமும் காணப்படுகின்றன. இரண்டாம் மண்டபத்தில் ஆலய முதல்வரும், தையல் நாயகியின் சன்னதிகளும் உள்ளன. விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி, சந்திர-சூரியர்கள் மற்றும் பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன. இது சூரிய பூஜைக்கு பிரபலமானது. இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பந்த நல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இங்குள்ள முருகப் பெருமானையும் முத்து குமாரசுவாமி என அழைக்கின்றார்கள். அவர் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகின்றார் இங்குள்ள முருகப் பெருமானையும் முத்து குமாரசுவாமி என அழைக்கின்றார்கள். அவர் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகின்றார். தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகவும், ஜாதகத்தில் செய்வாய் தோஷம் உள்ளவர்களும் சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரர் ஆலயத்துக்கு செல்வதை போலவே, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். பாழடைந்த நிலையில் உள்ள இந்த ஆலயத்துக்கு உள்ளூர் மற்றும் அக்கம் பக்கத்து கிராமத்தினர் வந்து வணங்கிச் செல்கின்றார்கள். கிராம ஆலயம் என்பதினாலோ என்னவோ, இந்த ஆலய குறித்த விவரம் நகர்ப்புறங்களில் அதிகம் பரவவில்லை.

ஆலயம் குறித்த கதை : சூரபத்மனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிய முருகப் பெருமானுக்கு அவருடைய தாயார் பார்வதி தேவி சக்தி வாய்ந்த ஒரு வேலை இந்த ஆலய வளாகத்தில் கொடுத்தாராம். யுத்தம் முடிந்து சூரபத்மனை அழித்து விட்டு வெற்றிவாகை சூடிய பின் முருகப் பெருமான் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரத்தைக் குறித்து கூற வந்தாராம். அப்போது சிவபெருமானும் அவரது துணைவி பார்வதி தேவியும் ராதா நல்லூர் ஆலய பகுதியில்தான் இருந்தார்களாம். யுத்தத்தில் இருந்து வந்ததினால் முதலில் குளித்து விட்டு பெற்றோரை சந்திக்க விரும்பிய முருகப் பெருமான் தனது வேலை பூமியிலே பாய்ச்ச மாயவரம் கும்பகோணம் பகுதியில் பெரிய ஆறு வெளியாயிற்று. அதுவே மணிமுத்தாறு என்பது. முதலில் அதன் பெயர் சுப்பிரமணிய ஆறு என்பதாகும்.

தீர்த்த குளம் : அதில் குளித்தப் பின் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரங்களை கூறிக் கொண்டு இருந்தபோது பார்வதி தேவிக்கு தாகம் ஏற்பட அவளுக்கு தண்ணீர் தருவதற்காக மீண்டும் தனது வேலை ஆலய பகுதியில் பூமியில் செலுத்த அங்கு தண்ணீர் குளம் தோன்றியதாம். அதில் இருந்து தண்ணீர் தந்து பார்வதி தேவியின் தாகத்தை முருகப் பெருமான் தணித்தாராம். அந்த தண்ணீர் குளமே இன்றைய ஆலயக் குளம் ஆகும். அதில் வெல்லக் கட்டிகளை போட்டு தமது நோய்கள் தீர பக்தர்கள் பிரார்த்தனை செய்து வைத்தீஸ்வர பெருமானை வேண்டுகிறார்கள். இப்படியாக கூறப்படும் வைத்தீஸ்வரன் ஆலயங்களை பற்றிய செவி வழிக் கதையில் பார்வதிக்கு தாகம் தணிக்க முருகப் பெருமான் குளம் வெட்டி தண்ணீர் தந்த கதை இந்த ஆலயம் குறித்து மட்டுமே கூறப்பட்டாலும், மற்ற கதைகள் அனைத்தும் வைத்தீஸ்வரன் ஆலயங்களில் ஒன்று போலவே கூறப்படுகின்றது.
ராதா நல்லூர் ஆலயத்தைக் குறித்த மேலும் விரிவான செய்திகள் கிடைக்கவில்லை. இந்த ஆலயத்தை நிர்வகிக்கும் குருக்கள் ஒருவர் ஆலயத்தின் எதிரிலேயே வசிக்கிறார்.

ஐவா நல்லூர் ஆதி வைத்தீஸ்வரன் ஆலயம்

ஐந்தாவது வைத்தீஸ்வரன் ஆலயம் ஐவா நல்லூர் எனும் கிராமத்தில் உள்ளதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அந்த ஆலயத்துக்கும் செல்லும் வழி எளிதில் செல்லும் நல்ல சாலையாக இல்லை. கிராமத்தின் உள்ளேயே பாழடைந்த நிலையில் ஒரு கூரை வீட்டின் அடியில் வைத்தீஸ்வர ஸ்வாமியும், தையல் நாயகியும் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

அதை போலவே மயிலாடுதுறை-கும்பகோணம் பகுதியில் வடகடை எனும் கிராமத்தில் ஆறாவது வைத்தீஸ்வரர் ஆலயமும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் விவரம் தெரியவில்லை. வரகடையில் உள்ள வைத்தியநாதர் ஆலயம் மணல் மேடுக்கு தெற்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

உத்திர வைத்தீஸ்வரன் ஆலயம் காட்டூர் (திருப்போரூர் அருகே)

சென்னை – திருப்போரூரில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இன்னொரு ஆதி வைத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமும் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார தலம் மற்றும் குழந்தை வரம் கேட்டு வருபவர்களுக்கு வரம் அளிக்கும் ஆலயம் ஆகும். நாகை மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள மூல வைத்தீஸ்வரன் ஆலயத்தைப் போலவேதான் இந்த ஆலய தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தீஸ்வரரையும் தையல் நாயகியையும் வணங்கித் தொழுதால், அனைத்து விதங்களிலுமான தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம் என்பதினால் இந்த ஆலயத்தையும் சீர்காழி அருகில் உள்ள மூல வைத்தீஸ்வரன் ஆலயத்திற்கு சமமாகவே கருதுகின்றார்கள். காட்டூரில் அமைந்துள்ள உத்திர வைத்தீஸ்வரர் என அழைக்கப்படும் இந்த ஆலயம், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் தையல் நாயகியுடன் வைத்தீஸ்வரர் அமர்ந்து உள்ளார்.

ஸ்தல புராணம் : பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர், ஒரு முறை தொண்டை மண்டலத்தின் அந்த வனப் பகுதிக்கு சிவபெருமான் -பார்வதியின் திருமணக் கோலத்தை தனக்கு காட்ட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தவம் செய்ய வந்த அகத்திய முனிவர், அந்த ஊரில் எங்குமே சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை பார்த்தார். ஆகவே தவத்தில் அமர்ந்தவர் இறைவன் ஆலய தின பூஜைகளுக்காகவும், மக்களின் தாகத்தை தணிப்பதற்காகவும், சிவபெருமான் அருள் புரிந்து அந்த இடத்தில் நீர் நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என பிரார்த்தனை செய்தார். 

அகத்திய முனிவரின் வலிமை மிக்க தவத்தின் விளைவினால் மனம் இறங்கிய ஈசன் அந்த முனிவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அதே இடத்தில் ஒரு தீர்த்தக் குளத்தை தோற்றுவித்தார். அது மட்டும் அல்ல, அதன் பெயரையும் அகத்தியர் தீர்த்தம் என்று கூறி, பல்வேறு நோயினால் அவதிப்படுபவர்கள், அந்த குளத்தில் இருந்து நீர் கொண்டு வந்து தனது திருமேனிக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை பிணி தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினால் தீராத நோய்களும் தீரும் என்று அருள் புரிந்தார். மேலும் அகத்திய முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அவருக்கு தனது திருமணக் கோலத்திலும் காட்சி தந்தருளினார். எனவே காட்டில் பிறந்த அந்த ஊரை காட்டூர் என அழைத்தார்கள். அன்றில் இருந்து இந்நாள்வரை இந்த பகுதியில் எந்த விதமான கொடிய நோய்களும் மக்களை தாக்கவில்லை என்பது பெரும் அதிசய செயலாகவே உள்ளது.

ஆலயத்தின் மேன்மை: சன்னதியின் கருவறையில் சுமார் இரண்டு ஆதி உயரத்தில் சிவலிங்க உருவிலான வைத்தீஸ்வரர் அமர்ந்து இருக்க, தையல் நாயகி தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருந்தவாறு அருள் பாலிக்கின்றார்.
ஒவ்வொரு வருடமும், பங்குனி உத்திர திருநாளுக்கு மூன்று தினங்கள் முன் காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தனது பொற் கிரணங்களை வைத்தீஸ்வரனின் திருமேனி மீது சார்த்தி அவரை தரிசித்து வணங்கி செல்கிறார் என்பது ஒரு ஐதீகம் ஆகும். அப்படி சூரிய கிரணங்கள் இறந்தவன் திருமேனி மீது விழும்போது வைத்தீஸ்வரர் பிரகாசமான ஒளிப் பிழம்பாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஒரு காலத்தில் காட்டூரில் இருந்த இந்த வனப் பகுதிக்கு மகரிஷிகளும் அந்தணர்களும் வந்து தங்கி, வேதங்கள் ஓதுவதும் வேறு பல்வேறு யாகங்களும், பூஜைகளும் செய்வது வழக்கமாம்.
இந்த ஆலயம் ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு உள்ளது. ஆலய சன்னதிகளில் விநாயகர், பால முருகன், சண்டேஸ்வரர், அதிகார நந்தி போன்றவர்கள் காணப்படுகின்றார்கள். செவ்வாய் பகவான் அவருடைய வாகனமான ஆட்டுக்கிடாவுடன் தனி சன்னதியில் காணப்படுகின்றார்.
கடந்த 100 ஆண்டுகளாக இங்குள்ள குளத்தில் நீர் வற்றி பார்த்ததே இல்லை என்று அந்த ஊரை சேர்ந்த முதியோர்கள் கூறுகின்றார்கள். அதன் அருகிலே பைரவர் மலை சுமார் 300 அடி உயரத்தில் உள்ளது. மலையின் மீது அமர்ந்துள்ள பைரவரை தரிசித்த பின்பு தான் உத்திர வைதிஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இங்கு நிலவி வரும் ஐதீகம் என்று இவ்வூர் மக்கள் கூறுகின்றார்கள்.

ஆலய முகவரி :
சென்னையில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சிவஸ்தலம் சென்னை திருப்போரூர் அருகே 4 கி.மீ. தூரத்தில் காட்டூரில் உள்ளது.

வைத்யனாதீஸ்வரர் ஆலயம், மத்தூர்

கர்னாடகா மானிலத்தில் மத்தூர் எனும் தாலுக்காவில் காவேரி ஆற்றின் உப நதியான ஷிம்ஷா எனும் ஆற்றின் கரையில் ஒரு பழமையான சிவாலயம் உள்ளது. வைத்யனாதபுரா பஞ்சாயத்தில் உள்ள அந்த ஆலயத்தை ‘வைத்யனாதீஸ்வரர் ஆலயம்’ என அழைக்கின்றார்கள். அங்குள்ள ஆலயத்தில் ஸ்வயம்புவாக எழுந்தருளி உள்ள சிவபெருமான் பல நோய்களையும், முக்கியமாக தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளை குணமாக்குவதாக நம்புகின்றார்கள். மழை போதுமான அளவில் பெய்யாததினால் அந்த ஆற்றின் நீர் சுத்தமாக இல்லை. இந்த ஆலய பூஜாரி ஆலய வரலாற்றைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறினார்.

ஆலயம் குறித்த கதை : இந்த ஆலய வரலாறு ஹோய்சாலா மன்னர்கள் காலத்துடன் இணைந்தது. இங்குள்ள சிவபெருமான் நாக உருவைக் கொண்டவர் என்றும் கற்பகிரகத்தில் உள்ள பாம்புப் புற்றில் இருந்து சிவலிங்க உருவில் வெளி வந்ததாகவும் கூறுகின்றார்கள். இந்த ஆலய வரலாற்றைக் குறித்த வாய்மொழிக் கதை என்ன என்றால் முன் ஒரு காலத்தில் ஒரு மரத்தின் அடியில் ஒரு மண் புற்று இருந்ததாகவும், அங்கு தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பசு மாடு ஒன்று சென்று புற்றின் எதிரில் நின்று கொள்ள, அதன் மடியில் இருந்து அந்த புற்றின் மீது அபிஷேகம் செய்வது போல பால் சுரக்குமாம். அதை பல நாட்களாக கவனித்து வந்த ஒருவன் அந்த மாட்டின் செயலை கிராம மக்களிடம் கூற, தெய்வ பக்தி கொண்ட அந்த கிராமத்தினரும் அது முதல் அந்த மண் புற்றை தெய்வப் புற்றாக வணங்கி வரலானார்கள்.ஒருநாள் அந்த கிராம மக்களில் ஒருவர் கனவில் சிவபெருமான் தோன்றி, தானே அந்த புற்றில் மறைந்து உள்ளதாகவும், அவர்களது வியாதிகளை தீர்க்கும் மருத்துவராக தக்க நேரத்தில் வெளிப்பட்டு அங்கு தங்கி இருப்பேன் என்றும் கூறினாராம். அதுவரை அந்த ஊரில் மருத்துவர்கள் எவருமே கிடையாது. கிராம முதியோர்கள் வியாதிகளை மூலிகைகள் மற்றும் செடி கொடிகளின் சாற்றைக் கொண்டு குணப்படுத்தி வந்தனர். ஆனால் பல வியாதிகளை குணப்படுத்த முடியாமல் போனதினால் நோய் வாய்ப்பட்டவர்கள் மரணமும் அடைந்தார்கள்.
இந்த நிலையில்தான் ஒரு நாள் நல்ல மழை பெய்த போது அந்த புற்று இரண்டாக பிளவு பட்டது. அதன் நடுவில் சிவலிங்கம் காணப்பட்டது. அந்த சிவலிங்கம் வெளிப்பட்ட இடத்தையே வழிபாட்டு தலமாக மாற்றி, அவரவர்களுக்கு வந்த வியாதிகளை குணப்படுத்துமாறு வேண்டிக் கொண்டு அந்த சிவலிங்கத்தை வழிபட்டு நலம் அடைந்து வந்தார்களாம். காலப்போக்கில் அந்த வழிபாட்டு தலமே ஒரு ஆலயமாக உருவாயிற்று.

ஒரு பசுவின் மூலமே சிவபெருமான் தன்னை இந்த ஆலயத்தில் வெளிப்படுத்திக் கொண்டார் என்பதினால் ஆலயத்தில் ஒரு பசு மாட்டிற்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் நாக தோஷமும் விலகும் என்பதாகவும் சிலர் நம்புகின்றார்கள்.

ஆலய அமைப்பு: ஆலயம் சிறிதே என்றாலும் அதில் நவரங்க மண்டபம், சபா மண்டபம் , முக்த மண்டபம், மற்றும் கர்ப்பக்கிருகம் என ஒன்றன் பின் ஒன்றான சிறிய அளவிலான அரங்கங்கள் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் எழு தலை நாகத்தின் தலைக்கு கீழே சிவலிங்கம் காணப்பட, அதன் முன் மண்டபத்தில் நந்தி தேவர் சிவலிங்கத்தை நோக்கியபடி நேரடியாக அமர்ந்து இல்லாமல் சிவலிங்கத்தின் இடப்புறத்தில் அமர்ந்து உள்ளார். சிவபெருமானின் தரிசனத்தை பக்தர்கள் இடையூறு இன்றி காண வேண்டும் என்பதற்காக நந்தி தேவர் ஒதுங்கி அமர்ந்து இருக்கின்றார் என்பது ஐதீகம். அந்த கர்ப்பக்கிரகத்தில் ஒரு நாகம் உள்ளதாகவும், அது பக்தர்களை காப்பாற்றி வருவதாகவும் நம்புகின்றார்கள்.

ஆலய அமைப்பு: நவரங்க மண்டபத்தில் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, ஷண்முகா எனும் பெயரில் முருகன், பைரவர், பரசுராமர் போன்ற தெய்வங்களுடன் இரண்டு சிவலிங்கங்கள் காட்சி அளிக்கின்றன. அந்த சிறு ஆலயத்தில் மூல கருவறையைத் தவிர வெளிப் பிராகாரத்தில் பார்வதி, நவ கிரகங்கள் மற்றும் சூரிய பகவானுக்கும் தனித் தனியான சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றைத் தவிர மஹிஷாசுரமர்தினி மற்றும் உமா மகேஸ்வரியின் உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்துமே கங்கா மற்றும் சோழர்கள் கால கட்டிடக் கலையை பிரதிபலிக்கின்றனவாம்.
ஆலயத்தின் முதல் நுழை மண்டபத்தில் பரசுராமனின் சிலை காணப்படுகின்றது. சாதாரணமாக எந்த சிவாலயத்திலும் பரசுராமரின் சிலை இருக்காது. கன்னட நாட்டுப்புற பாடல் சிலவற்றில் பரசுராமரின் புகழ் காணப்படுகின்றது. அவரை பார்வதி தேவியின் அவதாரமாக கருதப்படும் ரேணுகா தேவியின் புதல்வராக கூறப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தில் இடப்புறத்தை நோக்கியபடி உள்ள ஆவுடையார் மற்றும் வலப்புறத்தை நோக்கியபடி உள்ள ஆவுடையார் என்று இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றை பரசுராமர் அங்கு பிரதிஷ்டை செய்துள்ளதாக நம்பிக்கை உள்ளது.
பரசுராமர் விஷ்ணு பகவானின் ஆறாவது அம்சம், அவருக்கு மரணமே கிடையாது என்பதினால் இன்றும் மகேந்திரகிரி எனும் மலை அடிவாரத்தில் தவத்தில் இருப்பதாக கருதப்படுகின்றது. கலிகாலம் துவங்கியதும், கல்கி அவதாரம் எடுத்து, தீயவர்களை அழித்து புது யுகம் பிறக்க வழி செய்ய இருந்த விஷ்ணு பகவானுக்கு, சிவபெருமான் மூலம் முக்கியமான ஆயுதம் கிடைக்க இருந்தது. அதற்கு உதவி செய்ய பரசுராமர் ஒரு முக்கியமான அவதாரம் எடுக்க வேண்டும் என்பதினால், அதற்கு முன்னோடியாக தேவையான பலத்தையும் ஆயுதத்தையும் சிவபெருமானிடம் இருந்து பெற இந்த யுகத்திலேயே தவம் இருந்தாராம். அதில் ஒரு இடமே இந்த ஆலயம் ஆகும் என்பது நம்பிக்கை உள்ளது.
மேலும் துவாபர யுக காலத்தில் இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்து நிலமங்களா எனும் ஊர் வரை இருந்த அனைத்து இடங்களும் அஞ்சனாபுரி என அழைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் முக்கியமான மஹாபாரத யுத்தங்கள் நடந்துள்ளன என்பதாக சில ஆலய அர்ச்சகர்கள் கூறினார்கள். பாண்டவர்கள் முதல் கிருஷ்ணர் வரை பலரும் அங்கு தங்கி இருந்துள்ளார்களாம். சில ஆலய வரலாற்றில் இது காணப்படுகின்றது. அப்போது பரசுராமர் அவர்களில் பீஷ்மர், துரோணர், மற்றும் கர்ணனுக்கு, ‘வைத்யனாதீஸ்வரர் ஆலயம்’ உள்ள இந்த பகுதியிலேதான், ஆயுதப் பயிற்சி தந்ததும் அல்லாமல் யுத்த யுக்திகளையும் கற்றுக் கொடுத்தாராம். ஆகவே பரசுராம பெருமான் இங்கு இருந்துள்ளது இவற்றின் மூலம் தெளிவாகின்றது.
பரசுராமர் பிராமணர்கள் எனப்படும் அந்தணர்களை பெரிதும் விரும்பி அவர்களை பாதுகாத்து வந்தவர் என்பதினால் எங்கெல்லாம் அந்தணர்கள் அதிகம் இருந்தார்களோ அங்கெல்லாம் இருந்த நதிக்கரையில் தங்கி தவத்தில் இருந்தபோது அங்குள்ளவர்கள் அவரை வணங்கி வந்துள்ளார்கள் என்பதாக சில புராணக் கதைகள் உள்ளன.
அதனால்தான் அன்றைய அக்ராஹாரத்தில் இருந்த இந்த ஆலய பகுதியில் வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டு உள்ளார் என்பதற்கு ஆதாரமாகவே அவர் சிலையும் ஆலயத்தில் உள்ளது என்று நம்புகின்றார்கள்.

ஆலயத்தின் மேன்மை : ஆலய பண்டிதரின் கூற்றின்படி நான்கு திங்கள் கிழமைகளில் அங்கு வந்து ஷிம்ஷா நதியில் குளித்து விட்டு ஈரத் துணியுடன் ஸ்வாமிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்தால் தீராத நோய்கள் விலகுவதாகக் கூறினார். மேலும் அங்கு பிரசாதம் மற்றும் மருந்தாக பாம்புப் புற்றின் மண்ணையே தருகின்றார்கள். அந்த மண்ணை நீரில் கரைத்துக் குடித்தால் நோய்கள் விலகுமாம். அந்த மண் தெய்வீக சக்தி கொண்டது என்பதினால் குடிக்கும் நீரை தெய்வீக நீராக மாற்றி நோய்களை விலக்குமாம்.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயம் உள்ள இடம் பிராமணர்கள் ஒன்றிணைந்து வாழ்ந்திருந்த ஒரு அக்ரஹாரமாகவே இருந்துள்ளது. அப்போது அது வேதங்கள் ஓதிய வேதபுரியாக பெருமையுடன் இருந்துள்ளதாம். அப்போது இருந்த ‘வைத்யனாதீஸ்வரர் ஆலயம்’ மருத்துவ மையமாகவே விளங்கியதாம்.
மேலும் சில கதைகளின்படி மாமுனிவரான கடம்ப முனிவரும் இங்கு ஆஸ்ரமம் அமைத்து தங்கி இருந்தாராம். அவர் மூலமே இந்த ஆலயத்தின் பெருமையும் பல இடங்களுக்கும் பரவியதாம்.

காலப்போக்கில் இந்த வழிபாட்டு தலத்தின் பெருமை அனைத்து இடங்களுக்கும் பரவத் துவங்க அன்றைய கங்கா, சோழா, ஹோய்சாலா, மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் இந்த வழிபாட்டு தலத்தை ஆலயமாக மாற்றவும், சீரமைக்கவும் தம்மால் ஆன சேவைகளையும் உதவிகளையும் செய்துள்ளார்கள். 1941 ஆம் ஆண்டில் மைசூரில் திவானாக இருந்த திரு மிர்சா இஸ்மாயில் என்பவர் இந்த ஆலயத்துக்கு வந்ததும் இல்லாமல் ஆலயத்தின் எதிரில் இருந்த ஆற்றின் கரையை சீரமைக்கவும் ஏற்பாடுகள் செய்தாராம்.

ஆலய தொடர்பு முகவரி :
Vaidyanatheshwara Temple,
Vaidyanathapura,
Mandya District, Karnataka, Pin code – 571 433.
India.
Priest Phone: 9945100054

சிந்தாமணி வைத்தீஸ்வரன் ஆலயம், விழுப்புரம்

ஏறக்குறைய 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்கு அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த பகுதியாகும். சிந்தாமணி வைத்தீஸ்வரன் ஆலயமும் சோழ மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் ஆகும். ஊர் கடைக் கோடியில் வயல் வெளிகள் சூழ இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

ஸ்தல வரலாறு : ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டுகள் இந்த ஆலயத்தின் பெயரை குலோத்துங்க சோளீஸ்வரமுடைய மகாதேவர் என்றே குறிப்பிட்டு உள்ளன. குலோத்துங்க சோழன் என்பவர் தனது தந்தையார் விக்ரம சோழன் நினைவாக கி.பி 1119 ஆண்டு இந்த ஆலயத்தைக் கட்டி உள்ளதாக தெரிகின்றது. இன்று வைத்தியநாதர் அல்லது வைத்தீஸ்வரன் என்று குறிப்பிடப்பட்டாலும் அதை காட்டியபோது அதன் பெயர் குலோத்துங்க சோளீஸ்வரமுடைய மகாதேவர் என்றே இருந்தது. தாயாரின் பெயரால் சிந்தாமணி என்ற கிராமத்தை நிறுவி, தந்தையின் பெயரால் அங்கேயே ஒரு சிவாலயத்தையும் குலோத்துங்க சோழன் ஸ்தாபித்து உள்ளார் என்பது ஆலய வரலாறு ஆகும்.

ஆலய அமைப்பு : இந்த ஆலயத்தின் உள்ளே உள்ள அனைத்து சிற்பங்களும் உலோகத்தில் செதுக்கியத்தைப் போல காட்சி அளிக்கின்றன. கர்ப்பகிரஹத்திற்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் துவார பாலகர்களாக வினாயகரும் முருகப் பெருமானும் காட்சி அளிக்கின்றார்கள். அதே போலவேதான் கர்ப்பகிரஹத்திற்கு வெளிப்புற ஆலய சுவர்களில் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, விநாயகர், பிஷாடனர், பார்வதி சமேத சிவனார் போன்றவர்கள் கோஷ்டி மூர்த்திகளாக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், தனித்துவமாக உள்ளது ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியான சிவபெருமானின் வடிவமைப்பு ஆகும். ஜடா மகுடம் சூடி பக்கவாட்டு முடிச்சுகளுடன் எட்டு கரங்களைக் கொண்டு , ஒரு காலை தூக்கி நடனமாடுவது போல் காட்சி அளிப்பது அரிதான சிலை வடிவமைப்பு ஆகும்.

ஆலய மேன்மை : இந்த ஆலயம் அமைக்கப்பட்ட பின்னர் காலப்போக்கில், ஆலயத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்ட இந்த ஊர் மக்கள், அந்த ஆலயத்திற்கு சென்று தமது கஷ்ட நஷ்டங்களைக் கூறி, தமக்குள்ள உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்குமாறு பிரார்த்தனைகள் புரிந்து வந்தபோது அவர்கள் தமது நோய்கள் குணமடைவதைக் கண்டனர். இதனால் இந்த ஆலயத்தின் மூலவர் படிப்படியாக வைத்தீஸ்வரர் அல்லது வைத்தியநாதர் என்று அழைக்கப்படலானார்.
ஆலய நுழை வாயிலில், இடது புறத்தில், ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. அவருக்கு மேல் புறத்தில் சிவலிங்கம், பஞ்ச பூத லிங்கங்கள், நாகர் மற்றும் வினாயகர் போன்றவர்கள் சிலைகளும் காணப்படுகின்றன. ஜீவ சமாதியை ஒட்டி ஆஞ்சனேயரின் பெரிய சிலையும் காணப்படுகின்றது. அனைத்து வைத்தீஸ்வரன் ஆலயங்களில் உள்ளதை போலவே இங்கும் கிரஹ தோஷங்களை விலக்கும் செய்வாய் கிரகத்திற்கு தனி சன்னதி உள்ளது. ஆலய பூசாரி ஆலயத்தின் அருகிலேயே வசிக்கிறார்; அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு :
போன்: 94427 79895.

திரு வில்லிபுத்தூர், மடவர் வளாகம்
விருதுநகர் அருள்மிகு
சிவகாமி அம்பாள் சமேத வைத்யனாதஸ்வாமி ஆலயம்

திரு வில்லிபுத்தூர், மடவர் வளாகம் விருதுநகர் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத வைத்யனாதஸ்வாமி ஆலயம் , விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-இராஜபாளையம் சாலையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு : இந்த ஆலயம் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. திராவிட கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. சிவபெருமான் வைத்தீஸ்வரராகவும், பார்வதி சிவகாமி எனும் பெயரில் வணங்கப்படுகிறார்கள். திராவிடக் கலையில் கட்டப்பட்டு உள்ளது என்று கூறப்படுவதின் காரணம் இந்தக் ஆலயம் 16 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது, அவர் இந்த ஆலயத்தினால் உடல் நலம் அடைந்தவர் என்பதான நம்பிக்கை உள்ளது.
அதே சமயம் பல வரலாற்றுப் பதிவுகளையும், வாய்மொழி கதைகளையும் கேட்கும்போது இந்த ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, அவர்களாலேயே 12 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதாக நம்பப்படுகின்றது. அதே சமயம் இந்த ஆலயத்தின் மேன்மையினால் உடல் நலமடைந்து இருந்த திருமலை நாயக்கர் எனும் மன்னரால் சிதிலம் அடைந்திருந்த இந்த ஆலயம் மீண்டும் 16 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தையும் தள்ள முடியவில்லை என்பதினால் ஆலயத்தின் தோற்றம் குறித்து உறுதியாக கூற இயலவில்லை என்பதாக கூறுகின்றார்கள்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு மிக முக்கியமான ஆலயங்களும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் ஆட்சிக்கு வந்திருந்த பாண்டிய மற்றும் விஜயநகர பேரரசர்களினால் புதுப்பிக்கப்பட்டு உள்ளன என்பது வரலாற்று செய்தியாகும். ஆகவே விருதுநகர் வைத்தீஸ்வரர் ஆலயமும் பல மன்னர்களால் ஆதரவு அளிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இருக்கலாம். இந்த நம்பிக்கைக்கும் காரணம் காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள பல ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் பாண்டிய அரசர்கள் மற்றும் திருமலை நாயக்கர் ஆகியோரிடமிருந்து பெற்றுள்ள பல்வேறு மானியங்களை வெளிப்படுத்துகின்றதாம் .
இந்த தலமும் மடவர் வளாகம் என்று அழைக்கப்படுவதின் காரணம் 1000 வருடங்களுக்கு முன் ஆடல் பாடல்களில் சிறந்த இரு ஏழைப் பெண்கள் (மடவார்) ஆலயத்திற்கு வந்து தங்களது ஆடல், பாடல் மூலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வந்தார்களாம். ஆகவே அந்த இரண்டு ஏழைப் பெண்களுக்கும் ஏதாவது பொருள் உதவி கிடைத்து, சொந்தமாக வீடும் கிடைக்கச் செய்ய சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய தலம் என்பதால் இதை மடவர் வளாகம் என அழைத்துள்ளார்கள். மடவர் என்பது பெண்களைக் குறிக்க, வளாகம் என்பது தங்கும் இடத்தைக் குறிக்கின்றது.

ஆலயத்தின் மேன்மைக் குறித்த கதை : ஒரு ஏழைத் தம்பதியினர் குழந்தை வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும், அவர்களுக்கு கருணை புரிய, அந்த பெண் கர்பமுற்றாள். அவளது பிரசவத்திற்கு அவளது தாயார் வந்து உதவுவதாக இருந்த நிலையில், பிரசவ காலம் நெருங்கியது, என்ன காரணத்தினாலோ அவளது தாயாரும் வரவில்லை என்பதினால் அந்த கர்ப்பவதி பெண் தன் தாயின் இருப்பிடம் நோக்கித் தனியே சென்றாள். சிறிது தொலைவு சென்றதும் அவளுக்கு பிரசவ வலி கண்டது. உதவி செய்ய யாரும் அருகில் இல்லை. தன்னைக் காக்கும்படி அவள் சிவபெருமானையே வேண்டினாள்.
அவளது நிலையைக் கண்ட சிவபெருமானும் தானே ஒரு தாயின் தாயின் உருவில் வந்து அவளுக்கு சுகப்பிரசவம் பெற உதவினார். அது மட்டும் அல்ல, அங்கேயே பூமியை விரலால் கீறி தண்ணீரை வெளிப்பட வைத்து அந்த தண்ணீரையே மருந்தாக அவளை அருந்தச் செய்தார்.
மயக்க நிலையில் இருந்த பெண்ணும் தண்ணீரைக் குடித்துவிட்டு, தனது தாயாரை தேடினாள், ஆனால் அவள் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாரும் இருக்கவில்லை. அப்போதுதான் தூரத்தில் இருந்து ஓடோடி வந்து கொண்டிருந்த அவளது தாயார் தனது பெண் சுகமாக குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கண்டு வியந்தாள்.
அவர்கள் முன் சிவபெருமானும் பார்வதியும் தோன்றி அந்த பெண் தன்னிடம் கொண்ட பக்தியின் காரணமாகத் தான் தானே அங்கு வந்து அவளுக்கு உதவியதாகவும், அவளது தாகத்திற்கும் காயத்திற்கும் மருந்தாக அமைந்த அந்த தண்ணீர் உருமாறி காயக்குடி எனும் பெயரிலான ஆறாக ஓடும் {காயங்களை – அதாவது ரணங்களை (நோய்) – ஆற்றும் தண்ணீர் ஊற்று என்ற அர்த்தத்தில்} என அழைக்கப்படும் எனவும், அந்த நீரில் முழுகி எழுந்து அந்த தலத்தில் எழ உள்ள சிவபெருமானை வழிபடுவோரின் நோய்கள் விலகும் எனவும் கூறிவிட்டு மறைந்தார்.
இன்னொரு சம்பவம். இந்த பகுதியில் ஆட்சி புரிந்து வந்திருந்த திருமலை நாயகர் எனும் மன்னர் ஒருமுறை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாமல் இருந்திருந்த தீராத வயிற்று வலி நோயினால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தபோது, பெரியவர்கள் கூறிய அறிவுறையை ஏற்றுக் கொண்டு, தனது வயிற்று வலியை குணப்படுத்த வேண்டும் என்று இந்த ஆலய தலத்தில் இருந்த சிவபெருமானை பிரார்த்தித்து துதித்துக் கொண்டிருந்தபோது , ஒருநாள் திடீர் என தன்னால் அந்த நோய் மறைந்து விட்டதாம்.

இப்படி ஆலய வைத்தீஸ்வரரின் அருளினால் பல சம்பவங்கள் நடக்கத் துவங்கியதும், இந்த ஆலயத்தின் புகழும் விரிவடைந்தது. நாளடைவில் இந்த ஆலயத்தின் வைத்தியநாதர் பிணிகளை தீர்ப்பவர் என்பதினால் மகா அஷ்டமி தினத்தன்று இந்த ஆலயத்தில் வருகை தரும் பக்தர்கள் உணவு உண்ட எச்சில் இலை மீது அங்கப் பிரதர்ஷணம் செய்யும் வழக்கம் உள்ளது. இவ்வாறே அந்த தலம் சிவகாமி அம்பாள் சமேத வைத்யனாதஸ்வாமி ஆலயமாக உருவாயிற்று.

ஆலய தொடர்பு முகவரி :
Sri Shivagami samedha Vaidyanathaswamy temple, Madavarvalaham, Srivilliputhur, Virudhunagar Dt. Tamilnadu, India
Telephone Number :+91-4563-261-262
E-mail : vaithaiyanathaswamytemplesrivi@gmail.com

காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் ஆலயம்

ஸ்தல வரலாறு : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளைப்பாக்கம் என்ற ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது இன்னும் ஒரு வைத்தீஸ்வரன் ஆலயம். பல்லவர் காலத்தை சேர்ந்த இந்த ஆலயம் சோழ மன்னர்கள் ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டதாகவும், இதுவும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் என்றும், ஆனால் கோல்கொண்டா நவாப் தமிழ் நாட்டுப் பகுதியில் படையெடுத்து வந்தபோது இந்த ஆலயத்தை இடித்து விட்டு சென்றதாகவும், 1977 ஆம் ஆண்டு இதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ நமச்சிவாய செட்டியார் என்பவரால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றும் வாய் மொழி செய்தியாக ஸ்தல வரலாறு கூறப்படுகின்றது. ஆலயத்தைக் குறித்த செய்திகள் அடங்கி இருந்த அனைத்து கல்வெட்டுக்களும் அழிந்து சிதைந்த நிலையில் இருந்ததினால் ஆலயத்தைக் குறித்த முழு விவரங்களும் கிடைக்கவில்லையாம்.

ஆலய மேன்மை : ஆலயத்தின் மூலவரை வைத்தீஸ்வரன் என்றும், அவரது துணைவியான பார்வதியை தையல் நாயகி என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஆலயத்தில் உள்ள ஒரு சிறப்பு என்ன என்றால் இங்குள்ள கால தட்சிணாமூர்த்தி தனது கைகளில் சூலாயுதம் மற்றும் நாக பரணம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சியளிக்கிறார். இந்த கோலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது. இதனால் அவரை நாக தோஷத்தை அழிக்கும் பகவானாக கருதி வழிபடுகிறார்கள். ஆலயத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் சண்டிகேஸ்வரருடன் சண்டிகேஸ்வரியும் காணப்படுகின்றார்.

ஆலயத்தின் கதை : ஆலயத்தைக் குறித்து கூறப்படும் ஒரு கதையின்படி, ஒருமுறை இரவில் ஆலய அர்ச்சகரின் மகனை பாம்பு கடித்து விட்டது. அருகில் எந்த மருத்துவரும் கிடையாது. தொலைதூரம் வரை அதிக மனிதர்கள் இருந்திடாத அந்த காலத்தில், இரவு நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் பதறிய அர்ச்சகர், தெய்வத்தின் மீது பாரத்தை போட்டு விட்டு, பாம்பு கடித்த தனது மகனை சன்னதியில் இறைவன் முன் கிடத்தி விட்டு அவனைக் காப்பாற்றுமாறு மனமுருகி வேண்டிக் கொண்டபோது, எங்கிருந்தோ அங்கு வந்த பசு மாடு ஒன்று, சன்னதிக்குள் நுழைந்து, பாம்பு கடித்த சிறுவனின் உடல் பகுதியை தனது நாக்கினால் நக்கியவுடன், விஷம் அகன்ற சிறுவன் உயிர் பிழைத்து எழுந்தானாம். அதைக் கண்டு பிரமித்து நின்ற அர்ச்சகர், தன் நிலைக்கு திரும்பும் முன்னரே, அவர் கண் எதிரிலேயே அந்த மாடும் சிவலிங்கத்திற்குள் சென்று மறைந்து விட்டதைக் கண்டாராம். பசு மாட்டின் உருவில் வந்தது இறைவனே என்பதை உணர்ந்தார். அதை அந்த அர்ச்சகர் ஊரார் அனைவரிடமும் சென்று கூற அந்த ஆலய பகவானின் குணப்படுத்தும் சக்தி வெளிச்சத்திற்கு வந்தது. அதுமுதல் அந்த ஆலய இறைவனை வைத்தீஸ்வரர் என்று ஊரார் போற்றலாயினர். அதனால் அந்த கிராமம் ‘குழந்தையை நக்கிய இடம்’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் பிள்ளையை நக்கிய பாக்கம் (இடம்) என்றாக மருவி, காலப்போக்கில் பிள்ளைப்பாக்கம் என்றாகி விட்டதாம்.
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் உடல் நிலை நிச்சயமாக குணமாவதாக கூறுகின்றார்கள்.

ஆலய முகவரி :
பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் ஆலயம்,
பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 602105

திருமழபாடி வைத்தியநாதர் ஆலயம்

திருமழபாடி வைத்தியநாதர் ஆலயம் என்பது அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும் ஆகும். திருமழபாடி என்னும் இந்த ஆலயம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் உள்ள சிவாலயம் ஆகும்.

ஸ்தல வரலாறு : கயிலாயத்தில்‌ சிவபெருமானுக்கு ‌ திருப்பணி புரிந்து வந்தவர் ஆலால சுந்தரனார்‌. ஒருநாள் கயிலையில் இருந்த தோட்டத்தினுள்‌ சென்ற சுந்தரனார்‌, அங்கே இருந்த இரண்டு தேவ கன்னிகைகள் அழகைக் கண்டதும் அவர்கள் மீது சிறிது சபலம் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட சிவபெருமான் அவரை பூமியில் பிறப்பெடுத்து பெண்ணாசையை நீக்கிக் கொண்டு வர சாபமிட்டார். அதன்படியே பூமியில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஸ்வாமிகள் ஆவார். அவரும் பூமியில் பிறந்து சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானை தொழுது வணங்கி கொண்டிருந்த நிலையில் ஒருநாள் அவர் கனவில் சிவபெருமான் தோன்றி ‘மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ’ என்று கேட்டார். அதைக் கேட்டவர் உடனடியாக வடகரையை அடைந்து திருமழபாடி சிவபெருமானை தரிசித்து ஒரு தேவார பாடலைப் பாடினார். இப்படியாக திருமழபாடி வைத்தியநாதர் ஆலயம் தேவாரம் பாடல் பாடப்பட்ட தலம் ஆயிற்று.

ஆலய அமைப்பு : இந்த ஆலயம் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டு உள்ளது என்பதாக கூறப்படுகின்றது. இந்த ஆலயத்தை கட்டி சீரமைத்ததில் பல்வேறு மன்னர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அவர்களில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், ஹோய்சாலா மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் என்று பட்டியல் நீளுகிறது. அதற்கு ஆதாரமாக இந்த ஆலயத்தில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றனவாம். இங்குள்ள மூலவர் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீ வஜ்ரதம்பநாத ஸ்வாமி என்றும் இரு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மூலவரின் துணைவியாரும் ஸ்ரீ சுந்தராம்பிகை மற்றும் ஸ்ரீ பாலாம்பிகை என்ற இரு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள் என்பதால் அவர்கள் இருவருக்குமே தனி தனி சன்னதிகள் உள்ளன. இந்த ஆலயத்தின் தீர்த்த குளத்தை லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கின்றார்கள். சோமாஸ்காந்தாரின் வடிவம் ஒரே கற் சிலையில் அமையப் பெற்று இருக்க, இங்குள்ள பிரும்மாவின் சிலைக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ள காட்சியைக் காண முடிகின்றது.

ஆலயத்தின் மேன்மை : இத் தலம் புருஷா மிருகம் எனும் மகரிஷியால் பூஜிக்கப்பட்ட தலம் ஆகும். புருஷா மிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர, வேறு இறைவனை ஏற்க மாட்டார்.

எங்கேயாவது சிவலிங்கத்தை பார்த்து விட்டால் சிவ பூஜையை முடித்து விட்டுத் தான் அது பயணத்தைத் தொடரும். சிவன் விழாக் காலங்களில் இந்த புருஷா மிருகத்தின் வாகனத்தில் அமர்ந்து வீதியுலா வருவதை காணலாம். அந்த புருஷா மிருகம் இந்த தலத்திற்கும் வந்து சிவபூஜை செய்துள்ளதாக புராணக் கதைகள் கூறப்படுகின்றன.
ஒருமுறை புருஷா மிருக முனிவரால் இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை பிரம்மன் பெயர்த்தெடுக்க முயன்றபோது, தன்னை வெளியில் எடுக்க முடியாமல் உள்ள நிலையிலான ஸ்தம்பமாக உருமாற்றிக் கொண்டாராம் சிவபெருமான்.
மேலும் திருமால், இந்திரன் போன்றவர்களும் இந்த தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபாட்டு உள்ளார்கள். அதே போலவேதான் சந்திர பகவானும் தனக்கு ஏற்பட்டு இருந்த கடுமையான ஒரு நோயின் தாக்கத்தை விலக்கிக் கொள்ள இந்த தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபாட்டு நிவாரணம் அடைந்தாராம் .
இந்த ஆலயத்தில் சிவபெருமானின் வாஹனமான நந்தி தேவருக்கு மிக்க முக்கியத்துவம் வழங்குகின்றது . மானிட அவதாரத்தில் இருந்த நந்தி தேவர் இங்குதான் திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்த ஆலயத்தில் ஜூரஹரேஸ்வரருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. பல நாளாகியும் ஜுரத்தின் தன்மை குறையாதவர்கள் இங்கு வந்து சூடான வேக வைத்த அரிசியுடன், சூடான ரசத்தை கடவுளுக்கு பிரசாதமாக வழங்கினால் ஜுர வெப்பம் குறைந்து காய்ச்சல் குணமாவதாக நம்புகின்றார்கள்.

ஜுரஹரேஸ்வரர் அவதரித்த கதை : ஒருமுறை மன்மதனை நெற்றிக்கு கண்ணால் அழித்த பின்னரும் கோபம் அடங்காமல் இருந்த சிவபெருமானிடம் அவரது கோபம் தணிய வேண்டும் என்று தோத்திரம் செய்து தேவர்கள் துதித்த போது, மனம் இளகிய சிவபெருமானும் தனது நெற்றி பொட்டில் இருந்து ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தி அதை அக்னி தேவனிடம் கொடுத்தார். ஆனால் அந்த வெப்பமோ அக்னி பகவானை மட்டும் அல்ல தேவர்கள் என அனைவரையும் தாக்கியதில் அவர்கள் காய்ச்சல் ஜுரம் ஏற்பட்டது போல், உடல் சூடாகி துடித்தனர். பின்பு சிவபெருமானையே தேவர்கள் சரணடைந்த போது, சிவபெருமானும் தான் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் லிங்க வடிவில் ஆலயங்களில் அமர்வேன் என்றும், அந்த லிங்க வடிவத்தை வழிபட்டால் ஜுரம், காய்ச்சல் தீர்ந்து உடல் வெப்பம் தணியும் என்று கூறி அருள் புரிந்தாராம். இப்படியாக அவதரித்த ஜுரஹரேஸ்வரர் சில ஆலயங்களில் காணப்படுகின்றார்.

ஆலய தொடர்பு விவரங்கள்:
எஸ்.கணேச சிவாச்சாரியார் 98433 60716, 04329 243282, 97900 85702, 97503 02325 மற்றும் 97862 05278