ஸ்ரீ ராம்தேவ் பாபா
– அற்புத சித்தர்
சாந்திப்பிரியா 

( இந்தக் கதையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதினேன். ஆனால் பாபாஜி சித்தர் ஆன்மீக ஆலயம், ஆன்மீக ஆலயம் , ஓம்  போன்றவைகளில்  எந்த இதழில் இது வெளியாயிற்று என்று நினைவில்லை. ஆனாலும் ராம்தேவ் பாபாவின் மகிமைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதை  என் தளத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.)
 
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட நாட்டில் முகமது  கோரி மற்றும் அல்லாவுத்தின் கில்ஜி போன்றவர்கள் ஆண்டு வந்த நேரத்தில் ராஜஸ்தான் மானிலத்தில் அவதரித்தவர் பாபா ராம்தேவ் என்பவர். ராஜபுத்திர வம்சத்தில் அவதரித்த தோமர் இனத்தை சேர்ந்தவரான அவர் 13 ஆம் நூற்றாண்டில் பெரிய மகானாக இருந்தார். அவருடையக் கதை அற்புதமானது.

ராம்தேவ் மகராஜின் வரலாறு

முன் ஒரு காலத்தில் வட நாட்டில் இராணாஜி என்ற தெய்வ சக்தி மிக்க மகான் வாழ்ந்து வந்தார். அவரை ஒரு முறை ஒரு முஸ்லிம் மன்னன் சிறை பிடித்து கண்ட துண்டமாக வெட்டி எறிந்தான். ஆனால் ஆச்சர்யமாக அந்த வெட்டப்பட்ட உடலில் இருந்து ஒரு துளி இரத்தமும் கீழே சிந்தவில்லை. அதற்குப் பதிலாக அவர் உடலில் இருந்து பால் ஆறாக வெளி வந்தது. அந்த இராணாஜிக்கு எட்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஆறுபேர் மொகலாயர்களின் படை எடுப்பின் போது மடிந்து விட்டார்கள் . மற்ற இருவரும் மொகலாயப் படையினரிடம் இருந்து தப்பி ஓடி புஷ்கர் என்ற இடத்தில் சென்று தஞ்சம் அடைந்தாலும் படையினர் அவர்களை துரத்தியபடி அங்கும் வந்தார்கள். ஆகவே அந்த இரண்டு சகோதரர்களும் அங்கிருந்தும் தப்பி ஓடி காஷ்மீர் பகுதியில் இருந்த உண்டா என்ற இடத்திற்குச் சென்று வசிக்கலாயினர். அவர்களின் பெயர் அஜ்மல்ஜி மற்றும் தன்ருப்ஜி என்பது. அங்கிருந்தபடியே அந்த இரண்டு சகோதரர்களும் அங்கிருந்த மக்களுக்கு பல விதங்களில் தம்மால் ஆன சேவைகளை செய்து வர அவர்கள் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றார்கள்.

அந்த நிலையில் ஜெய்சல்மீரை சேர்ந்த மன்னன் ஒருவன் தனது மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வந்தார். அவருடைய மகள் அங்ககீனமானவள் மட்டும் அல்ல, குருடும் கூட. ஆகவே அவளை மணக்க ராஜ வம்சத்தை சேர்ந்த எவருமே முன் வரவில்லை. இப்படியாக அவர் மணமகனை தேடிக்கொண்டு இருக்கையில் தற்செயலாக அவர் அஜ்மல்ஜீயைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அழைத்தார். அங்கு வந்த அஜ்மல்ஜி தான் அந்தப் பெண்ணை மணக்க சம்மதம் தெரிவித்ததும், ஜெய்சல்மீர் மன்னனின் கவலை தீர்ந்தது. நல்ல நாளில் தனது மகளை அவருக்கு மணமுடித்துத் தந்தார். திருமணத்தன்று மணமகனின் கையை மணமகள் பிடித்ததுதான் தாமதம் அவளுக்கு கண் பார்வை திரும்ப வந்ததும் இல்லாமல் அவள் முடமும் குணமாகி அழகிய பெண்ணாக காட்சி அளிக்க அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது, அஜ்மல்ஜி எதோ ஒரு தெய்வ சக்தி பெற்றவர் என்பது.

காலம் ஓடியது. திருமணம் ஆன இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த மன்னன் தனது மனைவியுடன் விடியற்காலையில் நகரின் அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்றான். அப்போது அங்கு வயலுக்கு வந்து கொண்டு இருந்த உழவர்கள்  மன்னனைப் பார்த்ததும் தமது முகங்களை கீழே பார்த்தபடி வைத்துக் கொண்டு நடக்கத் துவங்கினார்கள். அவர்களை அழைத்து அதற்கான காரணத்தை வினவியபோது அவர்கள் வாரிசற்றவனின் முகத்தைப் காலையில் பார்த்து விட்டு வயலுக்கு சென்றால் அங்கு எதுவும் விளையாதே என்ற பயத்தினால்தான் அப்படி செய்ததாகக் கூற மன்னன் மிகவும் வருத்தமுற்றான்.

ஆகவே வீடு திரும்பிய அவர்கள் சிவபெருமானை வேண்டித் துதித்தார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவர்களின் கனவில் தோன்றி துவாரகாவிற்குச் சென்று கிருஷ்ணரை வேண்டுமாறு ஆணை இட்டார். அவர்களும் துவாரகைக்குச் சென்று அங்கிருந்த ஒரு கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணரை வழிபடத் துவங்கினார்கள். பல நாட்கள் ஆகியும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதினால் ஒரு நாள் கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்ற அஜ்மல்ஜி கோபமுற்று ‘எனக்கு எந்த விதத்திலும் உதவாத உனக்கு என்ன பூவும் பழமும் வேண்டி உள்ளது….இந்த உன் பூவை நீயே வைத்துக் கொள் ‘ என்று கூறி விட்டு பண்டிதர் தந்த அந்தப் பூவை கிருஷ்ணர் மீதே தூக்கி எறிந்து விட்டு வெளியில் வந்தார். கோபத்துடன் வெளியில் வந்தவரை இன்னொரு பண்டிதர் வழியில் பார்த்தார். அவர் அஜ்மல்ஜீயிடம் தானாகவே வந்து ‘ ஐயா, கிருஷ்ணர் சிலை மீது கோபப்படுவதை விட துவாரகை நதிக்குள் அமர்ந்து உள்ள அவரை ஏன் நேரிலே போய் சந்திக்க கூடாது ‘ எனக் கூறி விட்டு சென்று விட்டார்.

ஆத்திரம் கண்ணை மறைப்பது போல அஜ்மல் துவாரகாவிற்குச் சென்று கடலுக்குள் நடக்கத் துவங்கினார். தான் கடலுக்குள் நடப்பதை மறந்துவிட்டு தனது மனைவியின் கையை இழுத்துக்  கொண்டு கடலுக்குள் சென்றார். ஆனால் அதிசயமாக அவர்கள் கடலுக்குள் முழுகவில்லை. அவர்கள் சென்ற பாதையில் இருந்த கடல் நீர்  ஒதுங்கி அவர்களுக்கு வழி விட்டது.  அந்தக் கடலுக்குள் துவாரகை மாளிகை இருப்பதைக் கண்டு உள்ளே சென்ற மன்னன் அங்கு மாளிகையில்  அமர்ந்து இருந்த கிருஷ்ணரைப் பார்த்தார். மன்னனைக் கண்ட கிருஷ்ணரும் அவர் வரவை எதிர்பார்த்து காத்திருந்ததைப்  போல  அவரை அன்புடன் வரவேற்றார்.
கிருஷ்ணரைக் கண்ட மன்னனும் தமது துயரத்தை அவரிடம் கூற அதைக் கேட்ட கிருஷ்ணரோ தானே அவருக்கு மகனாகப் பிறப்பேன் என வாக்குறுதி தந்து அனுப்பினார். தனக்கு பிறக்க இருப்பது கிருஷ்ண பகவானே என்பதை எப்படி அறிந்து கொள்வது எனக் கேட்ட மன்னனிடம், அவர் வீட்டில் தாம் பிறக்கும்போது ஊரில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஆலய மணிகள் தானாகவே  அடிக்கும் , நகரின் மத்தியில் பெரிய ஜுவாலை ஒன்று தோன்றும்  மற்றும் அஜ்மல் வீட்டில் உள்ள குழாயில் இருந்து வெளிவரும் நீர் பாலாக இருக்கும் என்றார் . கிருஷ்ணர் கூறியபடியே சில மாதங்களில் அஜ்மலுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது. அது பிறந்த நேரத்தில் கிருஷ்ண பகவான் கூறிய அனைத்துமே நடந்தது.  யாருக்கும் அதன் காரணம் புரியவில்லை.

பிறந்தக் குழந்தை ஆற்றல் மிக்க குழந்தையாக இருந்தது என்பது பிறந்தது முதலே தெரிய வந்தது.  அதற்கு ராம்தேவ் எனப் பெயரிட்டார்கள். ஒரு நாள் அதன் அன்னை அடுப்பில் பாலை வைத்துவிட்டு குழந்தைக்கு பாலூட்டத் துவங்கினாள். அடுப்பில் பாலை வைத்திருந்ததையே மறந்து விட்டாள் .  பால் பொங்கத் துவங்கியது. அவ்வளவுதான் தாயின் மடியில் படுத்து இருந்தக் குழந்தை தன்னுடைய கையை நீட்டியது.  அடுப்பில் கொதித்துக் கொண்டு இருந்த பாலை கீழே  இறக்கி வைத்தது. கை மீண்டும் சிறியதாக மாறி விட்டது. அதை  கண்ட அதன் தாயார் பயந்து விட்டாள்.  குழந்தையின் கை எப்படி அத்தனை நீட்டமாயிற்று? அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கையில் சூடு படாமல் இருந்தது எப்படி?  அதை முதலில் யாருமே நம்பவில்லை.  ஆனால் இப்படியாக சிறிய சிறிய சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் மக்கள் அதை அதிகம் பொருட்படுத்தவில்லை .

குழந்தை பெரியவனாக வளர்ந்தது. ஒரு நாள் தன்னுடைய தந்தை ஒரு குதிரை மீது ஏறிக் கொண்டு செல்வதைப் பார்த்து  தனக்கும் ஒரு  குதிரை ஒன்று வேண்டும் என அடம் பிடித்தது.  சிறு குழந்தைதானே என எண்ணிய அதன் தந்தை ஒரு விளையாட்டுக் குதிரையை துணியால் செய்து அதனிடம் தந்தார்.  அவ்வளவுதான், அந்தக் குழந்தை அந்தக் குதிரை மீது ஏறி அமர அந்தக் குதிரையோ வானத்தில் துள்ளிப் பறந்து சென்றது.  வானத்திலே பறந்து சென்று விட்டு கீழே இறங்கி வந்ததைக் கண்ட அனைவரும் இது அதிசயக் குழந்தை என்பது மட்டும் அல்ல தெய்வாம்சம்  பொருந்தியதே என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்கள். அந்தக் குழந்தையோ அந்த துணிக் குதிரையை  நீலக் குதிரை எனப் பெயரிட்டு தனது குதிரையாக வைத்துக் கொண்டு விட்டது. இப்படியாக அந்தக் குழந்தை பெரியவனாகும்வரை பலப் பல அற்புதங்களை செய்து கொண்டு இருக்க அவர் புகழ் பல இடங்களுக்கும் பரவியது.  மெல்ல மெல்ல ராம்தேவ் என்றப பெயர் மறைந்து ராம்தேவ்ஜி மற்றும் ராம்தேவ் பாபா என மக்களால் அவர் மரியாதையுடன் அழைக்கப்படலானார்.

அந்தக் காலங்களில் மாய வித்தைகள், தந்திர மந்திரங்கள், பில்லி சூனியங்கள் மிகவும் அதிகம் உண்டு. ராம்தேவ்ஜியின் புகழைக் கண்டு பொறாமைக் கொண்ட ஒரு மந்திரவாதி அவரைக் கொல்ல  பூதகணம் ஒன்றை  ஏவினான். அதுவும் ஒரு குழந்தை வடிவில் ராம்தேவ் வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென ராம்தேவ் சகோதரரை தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தது. விடுவாரா ராம்தேவ்ஜி. தனது நீலக் குதிரையை எடுத்தார். அதன் மீது அமர்ந்து கொண்டு அதை வானத்திலே பறந்து சென்று துரத்திப்  பிடித்தார்.  வானத்திலேயே அனைவர் முன்னிலையிலும் அதனுடன் சண்டைப் போட்டு அதை கொன்றார். அதற்கு சில நாட்களுக்குப் பின்னால் பாலினாத் என்ற மடத்தின் முனிவர் வேண்டுகோளை ஏற்று அவர் மடத்துக்குச் சென்று அங்கு சுற்றித் திரிந்து கொண்டு இருந்த துர் தேவதைகளை அழித்தார். இவற்றினால் ராம்தேவ்ஜியின் புகழ் மேலும் மேலும் பரவியது.
அவர் புகழ் மேலும் மேலும் பரவுவதைக் கண்ட சில முஸ்லிம் மன்னர்கள் ராம்தேவ் பாபா உண்மையிலேயே தெய்வப்பிறவியா என்பதைக் கண்டறிய பீர்கள் என மிக மரியாதையுடன் போற்றி அழைக்கப்படும்  ஐந்து முஸ்லிம் மதக் குருமார்களை ராம்தேவ் பாபா உண்மையிலேயே தெய்வீக சக்தி பெற்றவரா எனக் கண்டறிய மாறு வேடத்தில் அவர்களை அனுப்பினார்கள்.  அந்த முஸ்லிம் மதக் குருமார்கள் மற்றவர்கள் வீடுகளில் உணவு உண்பது இல்லை. பல கடுமையான விதிமுறைகளைக் கடைபிடித்தே வாழ்கையை நடத்திக் கொண்டு இருந்தவர்கள்.
ஆகவே ராம்தேவ்ஜியை சோதனை செய்ய வந்தவர்கள் அவர் இருந்த நகரின் எல்லைக்கு வந்தப் பின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு உணவு அருந்தத் எண்ணி  நிழல் தரும் பெரிய மரம் எதுவும் உள்ளதா எனத் தேடினார்கள். அதை அறிந்து கொண்ட ராம்தேவ் பாபா அங்கு வந்தார். அவர்கள் இருந்த இடத்தின் அருகிலேயே ஒரு பெரிய மரத்தை சில வினாடிகளிலேயே உருவாக்கி விட்டுச் சென்று விட்டார். ராம்தேவ் பாபாவிற்கு அவர்கள் வந்துள்ளதின் காரணம் தெரியும் என்றாலும் அவர்கள் அதை அறியாதவண்ணம் தம்முடைய நாட்டிற்கு விஜயம் செய்துள்ள  அன்னியர்களுக்கு  உதவி செய்வது  போல நாடகமாடி அதை செய்தார்.

வந்திருந்த முஸ்லிம் மத பீர்மார்களும் அதைக் கண்டு  மனதிற்குள் வியந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தமது மகிமையினால் ஒரு பாம்பு கடித்து இறந்தவனை வரவழைத்து தம்முடைய மகன்  பாம்பு கடித்து இறந்து விட்டதாக நாடகம் ஆடி அழுதார்கள். ராம்தேவ் பாபாவோ அந்த பாம்பு கடித்து இறந்தவனை தம்மிடம் அனுப்புமாறு கூறினார். அவர்களும் அந்த சிறுவனை அவரிடம் அனுப்பி வைக்க   ராம்தேவ் பாபாவோ அந்த சிறுவனின் உடலில் இருந்த விஷத்தை எடுத்துவிட்டு அவனைப் பிழைக்க வைத்து அனுப்பினார்.

ஆனாலும் அவற்றை எதுவுமே பெரிய மகிமை எனக் காட்டிக் கொள்ளாமல் ராம்தேவ் விடுத்த அழைப்பை ஏற்று  அந்த முஸ்லிம் மதக் குருமார்கள் ராம்தேவ் பாபாவிடம் சென்றார்கள்.  அங்கு சென்றதும் அவர்களை  உணவு உண்ண அழைத்தார் ராம்தேவ் பாபா. அவர்களோ தாம் மற்றவர்களின் வீட்டுத் தட்டுக்களில் உணவு உண்ணுவது  இல்லை எனவும், தாம் தமது வீட்டில் மறந்து போய் தமது உணவு உண்ணும்  தட்டுக்களை வைத்துவ்ட்டு வந்து விட்டதினால் அந்த அழைப்பை ஏற்க  முடியாத நிலையில் உள்ளதாகக் கூறினார்கள். சரி அப்படியானால் வீட்டிற்குப் போய் தட்டுக்களை எடுத்துவந்து தம் இருப்பிடத்தில் சாப்பிடுமாறு ராம்தேவ் பாபா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்தப் முஸ்லிம் மத பீர்களோ தம்முடைய வீடுகள்  பல மைல்கள் தூரத்தில் உள்ள  முல்தான் எனும் நகரில்  உள்ளது எனவும் அதை எடுத்துவர இயலாத நிலையில் உள்ளதாகக் கூற ராம்தேவ் பாபாவோ சரி அப்படி என்றால் இந்த பாய் மீது அமர்ந்துகொண்டு உங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று சில நொடிகளில் தட்டுக்களை எடுத்து வருகிறீர்களா எனக் கூறி  மூன்றடிக்கு மூன்றடி அளவிலான பாய் ஒன்றை வரவழைத்தார். அந்தப் பாய் ஐந்துபேரும் அமரும் வகையில் பெரியதாக இல்லையே எனக் கூற அவரோ அந்தப் பாயை அவர்கள் எதிரிலேயே பெரியதாக்கினார்.

அந்தப் பாயில் அந்த ஐந்து முஸ்லிம் மதக் குருமார்களும் அமர அடுத்த வினாடி அது ஆகாயத்தில் பறந்து சென்றது.  அது பறந்து கொண்டு இருக்கையிலேயே அதில் அவர்கள் வீடுகளில் இருந்து தட்டுக்களும் பறந்து வந்து அதில் இறங்கின. அதைக் கண்டு ஆச்சர்யப்பட்டவர்கள் அவை  தமது தட்டுக்கள்தானா என நன்றாக  ஆராய்ந்தப் பின் ராம்தேவ் பாபா உண்மையில் தெய்வீக சக்தி பெற்றவரே என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தமது மன்னர்களிடம் சென்று அந்த உண்மையைக் கூறினார்கள்.  அந்த மன்னர்களும் தமது பிழையை உணர்ந்து கொண்டு ராம்தேவ் பாபாவை தமது நாட்டிற்கு வரவழைத்து அவரை கவுரவித்து ராம்ஷப்பீர் என்ற பட்டதையும் வழங்கினார்கள்.

இப்படியாக பல அற்புதங்களையும் செய்து கொண்டு இருந்த ராம்தேவ் பாபா ஒருமுறை மத்தியப் பிரதேசத்தில் இருந்த ஒரு இடத்திற்குச் சென்றார். அவர் செல்லும் வழியில் கல்கண்டு மூட்டைகளை வியாபார நிமித்தமாக எடுத்துக் கொண்டு  வெளி ஊருக்கு  சென்று கொண்டு இருந்த வியாபாரியைக் கண்டார். அந்த மூட்டைகளில் என்ன உள்ளது என அந்த வியாபாரியை ராம்தேவ் பாபா கேட்டபோது அதில் உப்பு உள்ளது எனக் கூறினான் அந்த வியாபாரி. ராம்தேவ் பாபா அரசாங்க அதிகாரியாக இருக்கலாம், தாம் கொண்டு செல்வது கல்கண்டு மூட்டை எனத் தெரிந்தால் வரி போட்டு விட்டால் என்ன செய்வது என யோசித்தவன் அப்படி ஒரு பொய்யைக் கூறினான். ராம்தேவ் பாபாவிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றவன் சந்தைக்கு சென்று மூடைகளை பிரிக்க அவை அனைத்திலும் உப்பே நிறைந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவன் உடனேயே அங்கிருந்து கிளம்பி தன்  ஊருக்குச் சென்றான். அங்கு வந்திருந்த ராம்தேவ் பாபாவைத் தேடிக் கண்டுபிடித்து அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டான் . இப்படியாக பல மகிமைகளை செய்து கொண்டு இருந்த ராம்தேவ் பாபா தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள  வேண்டிய காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.  உடனேயே அங்கிருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.  தாம் தங்கி இருந்த இடத்தின் அருகில் பெரிய குழியை தோண்டச் சொல்லி  அதற்குள்  அமர்ந்து கொண்டார்.  தம் மீது மண்ணைப் போட்டு அந்தக் குழியை மூடிவிடுமாறு தனது சிஷ்யர்களிடம் கட்டளை இட்டுவிட்டு 1458 ஆம் ஆண்டு சமாதி  அடைந்தார்.

அவர் சமாதி அடைந்த இடம் இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் அணுகுண்டு சோதனை நடத்திய போக்ரன் என்ற இடத்தில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.  பாபாவின் புகழைக் கேள்விப்பட்ட பிக்கானீர் மன்னர் அவருக்கு  ராஜஸ்தானில்   ஆலயம் ஒன்றை எழுப்பினார். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ராம்தேவ் பாபாவின் ஆலயத்தில் விழா நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குமிழி அவரை ஆராதிக்கின்றார்கள்.  அந்த ஆலயத்திற்குச்  சென்று அவரை வேண்டி வணங்கினால் வேண்டிய காரியம் நிறைவேறும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.