மனுதேவி ஆலயம்,
ஜல்கோன், மகராஷ்டிரா
சாந்திப்பிரியா 
 
ஒரு முறை உலகில் ராக்ஷஸர்களினாலும் அசுரர்களினாலும் மூவுலகிலும் பெரும் துன்பம் ஏற்பட்டது.  அனைத்து உலகிலும் இருந்த ரிஷி முனிவர்களும் தேவர்களும் அவர்கள் கொடுத்து வந்த தொல்லைகளினால் சொல்லோண்ணாத் துயரத்துக்கு உள்ளானார்கள். ஆகவே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  பிரும்மா மற்றும் விஷ்ணுவிடம் முறையிட அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்.
அந்த கொடிய நிலையை உணர்ந்து கொண்ட சிவபெருமான் என்ன செய்யலாம் என பிரும்மா மற்றும் விஷ்ணுவிடம் கலந்து ஆலோசனை செய்தார். அப்படி துன்பத்தைக் கொடுத்து வந்த  பல ராக்ஷஸர்களையும்  அசுரர்களையும் அழிக்கலாம். ஆனால் அவர்கள் பின்னணியில் உள்ள  முக்கியமான தலைவன் மகிஷாசுரனை வெல்ல மும்மூர்த்திகளாலும் முடியாத நிலை. அதற்குக்  காரணம் அவர்கள் அவனுக்கு கொடுத்து இருந்த வரங்களே. ஆகவே என்ன செய்வது எனப் புரியாமல் யோசனை செய்தவர்கள் முடிவாக அவன் தங்கி இருந்த பகுதிக்கு அருகில் இருந்த  மகராஷ்டிராவின்  ஜல்குவோன் எனும் பகுதியில் இருந்த  சட்புடா என்ற மலைப் பகுதியில் ஒரு குகையில்  மூவரும் சென்று அமர்ந்து கொண்டு தவத்தில் அமர்ந்தார்கள்.  மூவரும் தபமிருந்தபோது வெளியேற்றிய மூச்சில் இருந்து ஒரு சக்தி தேவியானவள் வெளி வந்தாள்.
அவர்களிடம் தன்னை ஏன் படைத்தீர்கள் எனக் கேட்டவளிடம் மூவுலகிலும் அசுரர்களும் ராக்ஷஸர்களும் கொடுத்து வந்த தொல்லைகளை எடுத்துக் கூறி அவர்களில் முதன்மையான மகிஷாசுரனை முதலில் அழித்துவிட்டு, பின்னர்  மற்றவர்களையும் அழித்து மூவுலகிலும்  நிம்மதி கிடைக்க உதவ வேண்டும் என அவளை வேண்டினார்கள். அந்த தேவியானவள் மூன்று மூர்த்திகளின் மூச்சுகளில் இருந்து படைக்கப்பட்டவள் என்பதினால் அவர்கள் மூவரையும் விட சக்தி வாய்ந்தவள், அழிக்கப்பட முடியாதவள். மேலும் மும்மூர்த்திகளின் மூச்சுக் காற்றில் இருந்து வெளிவந்து ஒன்று சேர்ந்ததினால் அவள் புதிய அவதாரம். அதுவரை யாருக்கும் வரன் தராத அவதாரம்.  ஆகவே மும்மூர்த்திகள்  அவனுக்குக் கொடுத்த வரனின் பயனை அவனால் அனுபவிக்க முடியாது. அந்த தேவியானவள் மூன்று மூர்த்திகளின் மூச்சுகளில் இருந்து படைக்கப்பட்டவள் என்பதினால் அவர்கள் மூவரையும் விட சக்தி வாய்ந்தவள், அழிக்கப்பட முடியாதவள் என ஆனாள்.
உண்மையில் அவள் சிவபெருமானின் மனைவியான பார்வதியின் மறு ரூபமே. பல அரக்கர்களும் சிவபெருமான் மற்றும் மற்ற இரண்டு மூர்த்திகளிடமும் இருந்து வரம் பெற்று இருந்ததினால்தான் ஒரு மூர்த்தியின் சக்தியினால் அவர்கள் அனைவரையும், முக்கியமாக மகிஷாசுரனை அழிக்க முடியாது. அதனால்தான் சிவபெருமான் மற்ற இரண்டு மூர்த்திகளையும் தன்னுடன் அழைத்துச் சென்று  தன்னுள் இருந்து வெளிவந்த சக்தியின் வடிவிற்கு அதிக சக்தியைத் தர ஏற்பாடு செய்தார் . இப்படியாக எட்டுக் கைகளுடன் வெளி வந்தவள் மனுதேவி என்ற பெயரைப் பெற்றாள். மனு என்றால் நீதி. அக்கிரமத்தை அழித்து  நீதியை நிலை நாட்ட வந்ததினால் அவள் அந்தப் பெயரை அவள்  பெற்றாள். அவளும் அவர்களிடம் தாம் எதற்காகப் படைக்கப்பட்டேனோ அதை முடித்துத் தருவேன் என்ற வாக்குறுதியை தந்தாள்.
தாபி எனும் நதிக் கரையை அடைந்து ஷிராகத் எனும் இடத்தில் இருந்த அசுரர்களை வதம் செய்தப் பின், பாடனா எனும் இடத்துக்குச் சென்று அங்கிருந்த அசுரர்களுடன் யுத்தம் செய்து அவர்களை அழித்தாள். யுத்தத்தில் ஏற்பட்ட களைப்பைப் போக்கிக் கொள்ள அவள் அந்த மலை அடிவாரத்தில் சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டாள். அதனால்  அவள் யுத்தம் செய்த அந்த இரண்டு இடங்களிலும் அஷ்டபுஜ தேவி என்ற பெயரில் இரண்டு ஆலயங்கள் அவளை வழிபடுவதற்காக அமைந்தன. சிறிது நாட்கள் ஒய்வு எடுத்தப் பின் முடிவாக அவள் சபதஸ்ருங்க் மலை அடிவாரத்துக்குச் சென்று தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர் என்ற கூற்றுக்கு ஏற்ப யுத்தம் செய்து அங்கு மகிஷாசுரன் மற்றும் அவனது சேனையை அழித்து நிர்மூலமாக்கினாள். அவள் பெயரும்  சபதஸ்ருங்க் தேவி என ஆயிற்று.
சத்புடா மலை  மகாராஷ்டிராவின் ஜல்குவோன் மாவட்டத்தில் உள்ளது. தேவியானவள் அந்த இடத்தில் யுத்தம் புரிந்து மக்களைக் காத்ததினால் அந்த இடத்திலும் சத்புடா மனுதேவி என்ற பெயரில் சுமார் 500 மீட்டர் மலை உயரத்தில் அவளுக்கு ஒரு ஆலயம் அமைந்தது.  இந்த ஆலயம் உள்ள மலையை சுற்றி மூன்றுபுறமும் சிறு மலைகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து நீர் கொட்டும் இயற்கையான நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. சத்புடா மலை அடிவாரத்தையும் அதை சுற்றியும் அப்போது வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவளே மனுதேவி என்ற பெயர் கொண்ட குலதேவியாக அமைந்தாள். சுற்றிலும் மிகப் பெரிய பெரிய வானுயர்ந்த மரங்களும் பச்சை பசேல் என்ற இயற்கை காட்சிகளையும் கொண்டு ஆலயம் அங்கு அமைந்தது.  வானுயர்ந்த மரங்களை பரசுராமரே அங்கு அமைத்து இருந்தார் என்ற கிராமியக் கதையும் உள்ளது . ஆனால் ஆலயம் அங்கு இருந்தது எவருக்கும் தெரியவில்லை. காரணம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு இருந்த அந்த ஆலயம் அந்தப் பகுதியில் புல்மண்டிக் கிடந்தது மறைந்து இருந்தது. 1250 A.D/B.C ஆண்டிற்குப் பிறகே இந்த மறைந்து கிடந்த ஆலயம் இங்க்லே என்ற இனத்தவரை சேர்ந்த (இங்க்லே என்பவர்களும் மகராஷ்டிர பிராமணப் பிரிவினர்களே) பாண்டு ஜீவன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள். அது முதல் இந்த மனுதேவி இங்க்லே இனத்தவரின் குல தேவியாக ஏற்கப்பட்டாளாம் .
மனுதேவிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் பின்னர் கட்டப்பட்டு உள்ளன என்றாலும் மனுதேவியின் பிரதான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆலயம் சட்புடாவில் உள்ள இந்த மனுதேவி ஆலயம்தான். ஆலய வளாகத்துக்குள் சுமார் ஏழு கிணறுகள் உள்ளன. சுமார் 80 x 50 அடிக்கும் மேலான ஆலய சன்னதியில் 20 x 20 அடிக்கும் மேலான அளவு கருவறை உள்ளது. சட்புடாவில் வாழ்ந்து வந்தவர்கள் 1991 -1992 ஆம் ஆண்டில் ‘சத்புடா நிவாசினி மனுதேவி சேவை பிரதிஷ்டான்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆலயத்தை புனரமைத்து நிர்வாகிக்கின்றார்கள். தேவியானவள் தாப்பி நதிக்கரையில் அமைந்து உள்ள இந்த ஆலயம் உள்ள இடத்தில் அவதரித்ததினால் குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடுகிறார்களாம். இங்கு செல்வதினால் மன அமைதி கிடைக்கும், நமக்கு வரும் தீமைகள் அழியும் என்பது ஐதீகம். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அங்கு செல்வது சிறந்தது. நவராத்தரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

ஆலயத்திற்கு செல்லும் வழி

ஜல்கோனில் உள்ள யாவால் எனும் மாவட்டத்தில் அட்கோன் என்ற கிராமம் உள்ளது. யாவால்-சொப்படா நெடும்சாலையில் சென்று அட்கோன் -காசர்க்ஹெடா என்ற இடத்தை அடைந்தாள் அங்கிருந்து மனுதேவிக்கு செல்லும் பாதை வரும். அதில் 10 கிலோமீட்டர் பயணம் செய்து ஆலயத்தை அடையலாம். அதில் முக்கால்வாசி பாதை நல்ல தார் போட்ட சாலை. சுமார் 500 மீட்டர் தூரத்தை நடந்து செல்ல வேண்டும்.
ஆலய விலாசம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Satpuda Nivasini Shree Shetra Manudevi Seva Pratisthan, Adgaon
Tal. Yaval, Dist. Jalgaon
Adgaon 425127 Maharashtra INDIA
Tel.: 91-(2585)-267452