ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா
சாந்திப்பிரியா
ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா எனும் ஆலயம் கர்நாடகத்தின் பெங்களுர் மாநகரின் கெங்கேரிக்கு அருகில் உள்ள ராமொஹல்லி எனும் சிறிய கிராமத்தின் அருகில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் ஜுஞ்சப்பான குடி பாலு என்ற பெயரில் இருந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த கொல்லா என்ற இனத்தவர் நாக வழிபாட்டைக் நடைமுறையில் கொண்டு இருந்தார்கள். அதற்குக்  காரணம் அந்த பகுதியில் 100 வயதான 25 அடி நீளமான ராஜ நாகம் வாழ்ந்து கொண்டு இருந்தது . அங்கு ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா என்ற ஆலயத்தை ஸ்தாபித்த தற்போது ஸ்ரீ தர்மாதிகாரி எனப் பட்டம் பெற்றுள்ள திரு தெய்வாக்ன ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் அந்த ஆலயத்தை நிர்மாணித்த கதையே சுவையானது. முதலில் அவர் யார் என்பதை பார்க்கலாம். 1949 ஆம் ஆண்டு பிறந்த அவர் புகழ்பெற்ற தம்பதியினருக்குப் பிறந்தவர் என்றாலும் இளம் வயதில் நிறைய கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அச்சகத்தில் வேலை செய்தும், தினசரி செய்தித்தாள்களை விநியோகித்தும் பிற வேலைகளை செய்தும் சம்பாத்தவர் படிப்படியாக பட்டப்படிப்பு படித்து 1968 ஆம் ஆண்டு பேராசிரியராக வேலையில் சேர்ந்தார். ஒன்பது பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணி புரிந்து உள்ளார். இப்படியாக படிப்படியாக வளர்ந்து வந்தவர் வாஸ்து சாஸ்திரங்களைக் கற்றறிந்து பலருக்கும் வாஸ்து சம்மந்தப்பட்ட அறிவுரைகளை வழங்கலானார். மேலும் அவருடைய 41 ஆம் வயதில் குக்கி சுப்ரமணிய ஸ்வாமியின் அருளினால் அவரால் மற்றவர்களின் வருங்காலத்தைப் பற்றிய கணிப்புக்களை கூற முடிந்தது.

ஒருநாள் அவர் குக்கீ சுப்பிரமணியா ஆலயத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது இனம் புரியாத எதோ சக்தி அவர் உடலுக்குள் புகுந்ததைக் கண்டார். அதே நேரத்தில் அந்த ஆலய யானை ஆலயத்தின் வாயிலில் நின்று கொண்டு இருந்தது போல உணர்ந்தார். அது முதல் அவரால் மற்றவர்களின் வரும் காலத்தைப் பற்றிக் கூற முடித்ததைக் கண்டார். முக்கியமாக நாக தோஷம் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு அவரால் வழி காட்ட முடிந்தது.

சில வருடங்கள் கழிந்தன. அவர் கனவில் தோன்றிய சுப்ரமண்யப்  பெருமான் தான் அவர் அருகிலேயே உள்ளதாகவும், தனக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினார். ஆலயத்தை எப்படி அமைப்பது? அதற்கான பணம் எங்கிருந்து வரும்? மேலும் என்னால் எப்படி ஆலயம் அமைக்க முடியும் என அவர் மனதில் எழும்பிய கேள்விகளுக்கு விடை தருவது போல மீண்டும் கனவில் வந்த முருகன் மறுநாள் தான் உள்ள இடத்திற்கு ஒருவர் வந்து அவரை அழைத்துச் செல்வார் என்றும், அங்கு தானே அவரை வரவேற்க உள்ளதாகவும் கூறினார்.

மறுநாள் ஸ்ரீ நாகபூஷனா என்பவர் தனது ஒரு தொழில் சம்மந்தமான பிரச்னைக்கு தீர்வு கேட்க தர்மாதிகாரியிடம் வந்தார். பேச்சுவாக்கில் தர்மாதிகாரி தமக்கு கனவில் வந்த கட்டளை1 குறித்து அவரிடம் கூற வந்தவரோ சற்றும் தயங்காமல் ரமோஹல்லிக்கு அருகில் இருந்த தம்முடைய பண்ணைக்கு அழைத்துச் சென்று காட்டி அங்கு இடம் தருவதாகக் கூறினார். அதுவே ஒரு தெய்வச் செயல் அல்லவா. அந்தப்  பண்ணைக்கு செல்லும் வழியில் அவர்களை தாண்டி சுமார் 25  அடி நீளமான நாகப்பாம்பு ஒன்று சென்றது.  அதுவே முதல் நல்ல சகுனம் என எண்ணினார்.

அதன் பின் அந்தப் பண்ணை அடைந்தவுடன் தற்போது ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா ஆலய கர்பக்கிரகம் கட்டப்பட்டு உள்ள அதே இடத்தில் மூன்று நாகங்கள் அவர்கள் முன் தோன்றின. நாகபூஷணத்தின் அனுமதியோடு அங்கு சர்ப சாந்தி செய்து மக்களின் சர்ப தோஷங்களை களைய ஏற்பாடு செய்தார். அன்று இரவு மீண்டும் ஸ்ரீ சுப்பிரமணியர் அவர் கனவில்  தோன்றி அந்த இடத்திலேயே அவருக்கு ஆலயம் அமைக்குமாறு கூறினார். ஆகவே மீண்டும் ஸ்ரீ தர்மாதிகாரி அந்த இடத்துக்கு சென்றபோது அங்கு சுமார் 12 -3/4 அடி அளவு நாகப் பாம்பின் உறித்துப் போட்டு இருந்த   தோல் ஆடை கிடந்தது . அதையே  தனக்கு   வழிகாட்டியாக கருதியவர்  மூன்று வருடங்கள் சிரமப்பட்டு  நன்கொடைகளை வசூலித்து காஞ்சீபுரத்தில் 16 அடி உயர நாகத்தின் சிலையை செய்து அதை இங்கு வந்தார். அந்த பதினாறு அடி உயர சிலையில் நாகப்பாம்பின் சிலை அவருக்குக் கிடைத்த நாகப்பாம்பின் உரித்த தோலின் அளவான 12 -3/4 அடிதான். இத்தனை பெரிய நாகராஜரின் சிலை உலகில் எங்குமே இதுவரை இல்லை என்பது ஒரு பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம் என்ன என்றால் அந்த சிலையை காஞ்சிபுரத்தில் செய்து அதை லாரி மூலம்  கிருஷ்ணகிரி வழியாக  கொண்டு வந்தபோது  கிருஷ்ணகிரியில்  நிலவி  வந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் விதமாக அன்று பெரும் மழைக் கொட்டித் தீர்த்தது.  மக்கள் அங்கேயே அந்த சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள்.

அது மட்டும் அல்லாமல் அந்த சிலை தற்போது ஆலயம் உள்ள இடமான  ராமொஹல்லிக்கு வந்தபோது அங்கும் மழைக் கொட்டித் தீர்ததாம்.  அங்கு அவர் ஸ்ரீ நாக முக்தி நாக ஷேத்திரா என்ற ஆலயத்தை நிறுவினார். அங்கு பல அதிசயங்கள் நடந்துள்ளன. அவர் அங்கு வந்தவர்களுக்கு வழிகாட்டி அவர்களுக்கு நடந்த மகிமைகள் பல உள்ளன. அந்த ஆலயத்திற்குச் சென்றால்  சர்பதோஷம் விலகுகின்றன. பல பாபங்களும் விலகுகின்றன.  ஸ்ரீ தர்மாதிகாரி வருபவர்களுக்கு வழி கட்டுகிறார்.

ஸ்ரீ தர்மாதிகாரி கூறுகிறார், ” சுப்பிரமணியக் கடவுள் நான்கு தோற்றங்களில் காட்சி தருகிறார்.  நாகராஜரின் இளம் பருவத்தைக் குறிக்கும் விதத்தில் ‘குகி சுப்பிரமணியராகவும்’, அவருடைய இளம் பருவத்தைக் காட்டும் வகையில் ‘கட்டி சுப்பிரமணியராகவும்’, திருமண கோலத்தில் பழனி மற்றும் திருவண்ணாமலையிலும் , முடிவாக முக்தி நாக ஷேத்திரத்தில் சுப்பிரமணியக் கடவுளாகவும் காட்சி தந்து இங்கு வந்து வணங்குபவர்களின் குறைகளைக் களைந்து அவர்களின் பாபங்களை களைந்து முக்தி தருகிறார் ”.
ஆலய முகவரி மற்றும் தொடர்பு
கொள்ள வேண்டிய விலாசம்:
Sree Mukthi Naga Kshethra temple
Big Banyan-tree Road, Ramohalli, Kengeri,
Bagalore – 560 060
Phone Numbers
+91-80-2671 3583 Email
info@mukthinagaksethra.com
பதிவு செய்யப்பட்டுள்ள  அலுவலக விலாசம் :-
Shri Subrahmanya Swamy Temple Trust
33A, II Cross, Eshwar Nagar,
Banashankari II Stage,
Bangalore – 560 070.
Phone: 080 – 2671 3583