சமயபுரம் ஆலயத்தின் சமயபுரத்துக்கு மதுரையிலும் இன்னொரு ஆலயம் உள்ளது என்பது மதுரை நகருக்கு வெளியில் உள்ள பல பக்தர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மதுரையின் மேற்குப்பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு போகும் வழியில், ஐந்தாவது கி.மீ.ல் மதுரையின் மேற்கு எல்லையான அங்கயற்கண்ணி அலங்கார வளைவு அருகில் அமைந்து இந்த ஆலயத்தின் மகிமைகள் பல உண்டு. குறை தீர்க்கும் சமயாள் குடில் எனும் ஆலயத்தை சமயபுரம் மாரியம்மனுக்காக மதுரையில் ஸ்தாபித்தவர் ஸ்ரீ ஸ்வாமி சக்தி அடிமை என்பவர். அந்த ஆலயம் குறித்தக் கட்டுரை இது.
ஸ்ரீ ல ஸ்ரீ ஸ்வாமி சக்தி அடிமை வாழ்க்கை குறிப்பு
சமயயாள் குடில் எனும் ஆலயத்தை நிறுவிய இந்த ஸ்வாமிகள் அவர் 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதியன்று கேரளாவில் பிறந்தவர் என்றாலும் மதுரையில் வந்து குடியேறியவர். அன்னாரின் இயற்கைப் பெயர் திரு ஏ.சுப்பிரமணியன் என்பதாகும். அவருடைய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக அவதரித்தவர். மதி நுட்பம் நிறைந்தவராகவும், சுறுசுறுப்புக்குப் பெயர் போனவராகவும் விளங்கியவர் எதையுமே நிதானமாக சிந்தித்தே செயல்படுபவராக இருந்தார். எண்களில் எட்டு என்பதற்கு அதிக சக்தி உண்டு. ஆகவே எட்டாவதாகப் பிறந்தவர் சக்தி வாய்ந்தவராக இருப்பார் என எண்ணுவது தவறல்ல. 1984 ஆம் ஆண்டு திருமணம் ஆனவர் சமயபுரம் மாரியாத்தாளை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு இருந்தார். அவருடன் சேர்ந்தே அவர் மனைவியும் ஆன்மீகப் பணி ஆற்றி வருகிறார். அவர் மகிமைகளை படிக்க
இங்கே கிளிக் செய்யவும்.
ஆலயம் எழுந்த வரலாறு
மதுரை தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டு இருந்தவர் எளிமையான வாழ்கை முறையை வகுத்துக் கொண்டு ஆன்மீகத்திலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். திடீரெனஅவர் 1992 ஆம் ஆண்டு முதல் அருள் வாக்கு கூறத் துவங்கினார். அவரை நாடி நிறைய பக்தர்கள் வரத் துவங்கினார்கள். நான்கு ஆண்டுகள் கடந்த அவரது இந்த வாழ்கை 1996 ஆம் ஆண்டை எட்டியபோது அவருக்கு ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் மாரியம்மன் ஒரு நாள் அவர் கனவில் தோன்றி தனக்கு முழு நேர சேவை செய்யுமாறும், அதற்காக வேலையை ராஜினமா செய்து விடுமாறும் கூறினாள். இரண்டு குழந்தைகள் உள்ளனரே என்பதற்காக கனவைக் குறித்து மனைவியை கலந்து ஆலோசனை செய்தப் பின், மாரியம்மனின் சொல்லைத் தட்ட முடியாமல் அவர் துணைவியாரின் முழு சம்மதத்துடன் வேலையை ராஜினமா செய்தார். அது முதல் அவர் துணைவியாரும் அவருக்கு அனைத்து விதத்திலும் ஆண்மீகப் பணிக்கு உறுதுணையாக இருப்பது மட்டும் அல்லாமல், குழந்தைகளையும் பேணி வளர்த்து வந்துள்ளார்.
அதற்குப் பின்னர் மீண்டும் சமயபுரத்தாள் அவர் கனவில் வந்து தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறுக் கூறி விட்டு அதற்கான இடத்தையும் அவருக்குக் காட்டினாள். அந்த இடமே தற்போது ஆலயம் உள்ள இடமாகும். 1998 ஆம் ஆண்டு மதுரையின் மேற்குப் பகுதியில், மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு போகும் வழியில், மேற்குப் புறத்தில் ஐந்தாவது கி.மீ.தொலைவில் உள்ள அங்கயற்கண்ணி அலங்கார வளைவு அருகில் கட்டப்படத் துவங்கிய ஆலயம் 2002 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது. ஸ்வாமிகள் தற்போது ஆலயத்தில் அருள் வாக்கு கூறியவாறு, ஆன்மீகப் பணியினை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்.
ஆலய ஸ்தல வரலாறு
முன்னொரு காலத்தில் கோச்சடை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னன் என்பவன் ஆண்ட காலத்தில் பாண்டிய நாட்டின் எல்லையாக இருந்தது தற்போது விராட்டிப் பத்து எனப்படும் இடம். அங்கு ஒரு எல்லைக் காளி அம்மன் ஆலயத்தை அந்த மன்னன் அமைத்தார். அவற்றைத் தவிர அய்யனார் கோயிலும், முத்தையன் திருக்கோயிலும் அமைக்கப்பட்டு இருந்தன. இன்றும் நாகமலை எனப்படும் அந்த எல்லைப் பகுதியில் தடாக நாச்சியார் எனும் கிராம தேவதை தம்மைக் காப்பதற்காக உலாவுகிறார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
மதுரையில் அந்த நாட்டு மன்னனால் தன் கணவன் கோவலன் அநியாயமான பழி சுமத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் கற்புக்கரசி கண்ணகி கோபமுற்றாள். தன் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து மதுரையை எரியூட்டிய பின் அங்கிருந்துக் கிளம்பி கேரளா நாட்டிற்கு சென்றாள். கேரளாவுக்குச் செல்லும் முன் பாண்டி நாட்டின் எல்லைக்குச் சென்று நின்று அங்கிருந்தே ‘கோவலன் பொட்டல்’ எனப்படும் கோவலன் கொலை செய்யப்பட்ட இடத்தையும் மற்றும் மதுரைக்கும் சேர்த்து சாபமிட்டு தனது சக்தியால் அந்த நகரை அங்கிருந்தே எரித்தாள். மதுரைப் பற்றி எரிந்தது. அதன் பின் தான் நின்ற அந்த இடம் தர்மத்தையும், சத்தியத்தையும் நிலை நிறுத்தும் சக்தி பீடமாக அமைந்து இருக்கும் எனவும், அங்கு வந்து தம்முடைய நியாயமான கோரிக்கைகளை நிலை நிறுத்தி எவர் வேண்டுவார்களோ அவர்கள் வேண்டியது நடக்கும் என்றும் கூறினாள். கண்ணகி உண்மையில் மாரியம்மனின் அவதாரம் என்பார்கள்.
இந்த ஆலயம் இன்றுள்ள இந்த வகையிலான சிறப்பு (மாரியம்மனின் அவதாரம் என நம்பப்படும் கண்ணகியின் கூற்று) மகான்கள் , மகரிஷி பதஞ்சலி போன்றோர்களின் அருள் வாக்குகள் போன்றவற்றின் மூலமும், சுவடிகளின் செய்திகள் மூலமும் தெரியவர அங்கு சமயபுரத்தாளின் கட்டளைப்படி ஸ்ரீ ல ஸ்ரீ ஸ்வாமி சக்தி அடிமை மூலம் தனக்கு ஆலயம் அமைத்துக் கொண்டாள் என்பது ஆச்சர்யமா என்ன? ஆகவே மதுரையில் உள்ள இந்த சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தின் பெயரை ஸ்வாமிகள் ”சமயாள் குடில்’’ அதாவது சமயபுரத்தாள் குடியிருக்கும் இடம் என்று அர்த்தம் தரும் வகைக்கான திருப்பெயரை சூட்டி உள்ளார்.
ஆலய அமைப்பு
அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீட ஆலயம் மற்றும் சன்னதிகள் ஓங்கார வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ நர்த்தன விநாயகர் சன்னதி
ஆலயத்தின் நுழை வாயிலைக் கடந்ததும் காணப்படுவது ஸ்ரீ நர்த்தன விநாயகர் சன்னதி. இங்கு விநாயகர் தனது ‘சித்தி’ நாயகியை இடையில் அமர்த்திக் கொண்டு நாட்டியம் ஆடும் காட்சியில் காணப்படுகிறார். பக்தர்கள் தத்தம் கோரிக்கைகள் நிறைவேற தினம் ஒரு மாதுளையை 30, 40, 48, 60 என்ற ஏதாவது ஒரு நாள் கணக்கில் வைத்து வேண்டினால் நினைப்பது நடக்கும் என்கிறார்கள். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் “சங்கடஹர சதுர்த்தி” அன்று வினாயகருக்கு தேங்காய் மாலை சார்த்தியோ அல்லது இரு மூடிகளிலும் நெய்தீபம் ஏற்றியோ வழிபடலாம்.
ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சன்னதி
இச் சன்னதியில் பார்வதியின் அவதாரமான ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனும் அவர் முன்னால் “மகாமேரு” எனப்படும் ஸ்ரீ சக்கரநாயகியும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மகாமேரு அமையப் பெற்ற ஏழு ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ‘பௌர்ணமி’ தினத்தன்றும் பௌர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. ஞானம் சிறப்படையச் செய்யும் `குண்டலினி தீட்சை’யும் அளிக்கப்படுகிறது.
ஸ்ரீ மாரியம்மன் திருவடி
தனக்கு ஒரு ஆலயத்தை இங்கு அமைத்திட வேண்டும் என்று எந்த மாரியம்மன் ஸ்வாமிகளுக்கு கட்டளை இட்டாரோ அவருடைய பாதுகைகளை பிரதிஷ்டை செய்து இந்த சன்னதியில் வழிபடுகிறார்கள்.
ஸ்ரீ புவனேஸ்வரர் சன்னதி
இந்த ஆலயத்தில் உள்ள புவனேஸ்வரி தேவியின் கணவரான சிவபெருமான் லிங்க வடிவில் அமைந்து உள்ளார். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை சோம வாரங்களில் 108 சங்காபி ஷேகம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ சந்தான பரமேஸ்வரர் சன்னதி
நாலு டன் எடை கொண்ட கல்லில் நடுவில் லிங்க ரூபம், மேல் பகுதி கேது மற்றும் கீழ் பகுதி ராகுவாகவும் தோற்றம் தரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த மூர்த்திக்கு பால் அபிஷேகம் செய்யும்போது திருனாகேஸ்வரத்தில் நடப்பது போல அதன் மீது ஊற்றப்படும் பாலும் நீல நிறமாக மாறுவது மகிமையாக உள்ளது.
ஸ்ரீ கருப்பணஸ்வாமி சன்னதி
கிராமங்களின் காவல் தெய்வமாக உள்ள சந்தன கருப்பு ஸ்வாமி மதுரையை நோக்கி வந்தபோது இந்த இடம் அவர் மனதுக்கு பிடித்து விட்டதினால் இங்கேயே காவல் தெய்வமாக அமர்ந்து கொண்டார். இரவு நேரங்களில் அவர் இங்கு உலாவுவதாக நம்பிக்கை உள்ளது.
ஸ்ரீ எல்லைக் காளி அம்மன் சன்னதி
பாண்டிய மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட எல்லைக் காளியம்மன் ஆலயம் காலபோக்கில் சேதம் அடைந்து விட்டதினால் அந்த காவல் தெய்வத்துக்கும் தனி சன்னதி எழுப்பப்பட்டு உள்ளது. அவள் காலடியில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி வைத்து வழிபடும் போது தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்
இந்த ஆலயத்தின் பிரதான தெய்வமான அன்னை சமயாள் குடி மாரியம்மன் எட்டு கரங்களுடன் காட்சி தந்தவாறு பேசும் தெய்வமாகவே நின்று கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள். தத்தம் பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் இங்கு வந்து சமயாள் குடி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து வழிபடுகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழா, ஆடித் திரு விழா போன்றவைகள் கொண்டாடப்படுகிறது. அது போலவே தைப்பூசம் அன்று வரும் ஸ்ரீ ஸ்வாமிகளின் பிறந்த நாள் மத நல்லிணக்க விழாவாகவும், சமய ஒற்றுமை விழாவாகவும் கொண்டாடப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆலயம் செல்லும் வழி
மதுரையின் மேற்குப்பகுதியில், மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு போகும் வழியில், ஐந்தாவது கி.மீ.ல் மதுரையின் மேற்கு எல்லையான அங்கயற்கண்ணி அலங்கார வளைவு அருகில் அமைந்துள்ளது .
ஆலய விலாசம் மற்றும் தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி
ஸ்ரீ சமயாள்குடில் மாரியம்மன் சக்திபீடம்
சந்தோஷ் நகர் , அச்சம்பத்து
தேனி மெயின் ரோடு
மதுரை
தொலைபேசி : 0091-452-6463731
தொடர்பு நேரம் : மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மட்டும்.
இ-மெயில் : info@samayalkudilmariamman.org
டிரஸ்ட் : ஸ்ரீ சமயாள்குடில் மாரியம்மன் சக்திபீடம் டிரஸ்ட் பதிவு எண் : 188/BK4/2008.