பெங்களூரு
சாந்திப்பிரியா
கருமாரி அம்மன் யார்? அவளும் பார்வதியின் ஒரு அவதாரமே. ஒருமுறை அவள் ஒரு நாடோடிப் பெண்ணைப் போல வேடம் அணிந்து கொண்டு சென்றபோது அவளை சூரிய பகவானினால் அடையாளம் காண முடியாமல் போயிற்று. அவள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் போன சூரியன் அவளை உதாசீனப்படுத்தினார். அதனால் கோபமுற்றவள் அவர் ஒளி தரும் தனது களையை இழக்க வேண்டும் என்று சாபமிட சூரியனின் ஒளி வெள்ளம் குறைந்தது. தன் தவறை உணர்ந்தவர் ஓடோடிச் சென்று அவளிடம் மன்னிப்புக் கேட்க அவளும் அவரை மன்னித்தாள். அதற்குப் பரிகாரமாக பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் அவளுடைய திருவேற்காடு ஆலயத்தில் சூரிய ஒளி இரண்டு நாட்கள் மட்டும் அவள் தலை மீது விழுவதைக் காணலாம். அதன் மூலம் அவளை பூமியில் வந்து சூரிய பகவான் வணங்குவதாக ஐதீகம் உள்ளது. தேவி கருமாரிக்குப் பிடித்த விருட்ஷம் வேப்ப மரம். அவள் ஒருமுறை நாரதரிடம் கூறினாளாம் ” நான் வேப்ப மர இலைகளை இருக்கையாகப் பயன்படுத்தி அதன் மீதே வாசம் செய்து வருகிறேன். ஆகவே வேப்ப மர இலைகள் மகிமை வாய்ந்தவை. என்னை வேண்டிக் கொண்டு வேப்ப இலைகளை நோயுற்றவர்கள் உபயோகித்தால் அவர்களது நோய் நொடிகள் குணமாகும். அது மட்டும் அல்ல வேப்ப மர இலைகளில் நான் உள்ளதினால் எந்த தீய ஆவிகளுமே வேப்ப இலைகளை உள்ள இல்லங்களை நெருங்க முடியாது ”. இதனால்தான் பல நோய்களை குணப்படுத்தவும், தீய ஆவிகளை விரட்டவும் மந்திரம் ஓதி குணப்படுத்துபவர்கள் வேப்ப மரத்தின் இலைகளைப் உபயோகிக்கின்றார்கள்.
இன்னொருமுறை கருமாரியிடம் நாரதர் கேட்டார் ”அன்னையே, உங்கள் தலை மீது ஐந்து தலை நாகம் உள்ளது. மேலும் நீங்கள் பாம்புப் புற்றுகளில் வசிப்பதாக ஐதீகம் உள்ளதே. அதன் காரணம் என்ன?”. அதற்கு கருமாரி அம்மன் கூறினாள் ‘ நாரதா, நான் இமய மலையில் வசிப்பவள். அங்கு எப்போதுமே குளிமையான சீதோஷ்ண நிலையே இருக்கும். ஆகவே பூமிக்கு இந்த அவதாரத்தில் வந்து வாசம் செய்யும் எனக்கு குளுமையான இடத்தை அமைத்துத் தர வேண்டும் என்பதினால்தான் பாம்புப் புற்றுகளில் நான் வசிப்பதற்கு வசதியாக ராகுவும், கேதுவும் எனக்கு இதுபோன்ற இடங்களில் குடில்களை அமைத்துத் தருகிறார்கள். ராகுவும் கேதுவும் எனக்கு அடிமையான கணங்கள். நான் பல இடங்களுக்கும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களை ரஷிக்கச் செல்லும்போது நான் குளுமையான இடத்தில் தங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பல இடங்களிலும் எனக்காக இப்படிப்பட்ட குடில்களை அவர்களுடைய தலைவரான நாகராஜர் கூறியபடி அமைக்கின்றார்கள். நான் எங்கு சென்றாலும் அந்தக் குடில்களில்தான் தங்குகிறேன் என்பதினால், எனக்குக் கட்டுப்பட்ட ராகு மற்றும் கேதுவினால் ஏற்படும் கிரக தோஷங்களைக் களைந்து கொள்ள என்னிடம் வேண்டுபவர்களுக்கு ராகுவும், கேதுவும் எந்த கெடுதலும் செய்வதில்லை. அதுவும் முக்கியமாக நான் விரும்பும் வேப்ப மரங்களுக்கு அருகிலோ அடியிலோ உள்ள புற்றுக்களில் நான் அதிகம் வசிக்கின்றேன். அங்கெல்லாம் அவர்களின் தலைவனான ஐந்து தலை நாகராஜர் ஐம்புலன்களின் தத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் எனக்கு குடையாக நிற்பது வழக்கம். இதுவே உங்கள் கேள்விக்கான விடை ” என்றாள்.
சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுக்குள் முக்கியமானவை காமிகாகமம், காரணாகமம் என்ற நூல்களே . காரணாகமம் என்பது வடமொழியில் எழுதப்பட்ட சைவாகமங்கள் இருபத்தெட்டில் நான்காவது நூல் ஆகும் . இதில் பூர்வ, உத்தர என்ற இரு பகுதிகள் உண்டு. பூர்வ பக்கத்தில் 147 படலங்கள் அமைந்துள்ளன. இதிலே தந்திரங்கைளப் பற்றியும் மந்திரங்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இதன் பதினெட்டாம் படலத்தில் எண்பத்தி நான்கு செயல்கள் (கரணங்கள்) விளக்கப்பட்டுள்ளன. பராசக்தியின் வெவேறு அவதாரங்களாக கௌரி மனோன்மணி சாமுண்டி, துர்க்கை மற்றும் மகாமாரி போன்றவர்கள் அவதரித்தார்கள். இவர்களில் மகாமாரி என்பவள் மாரகாசூரனை வதம் செய்ததினால் அவள் மாரனை வதைத்த மகா தேவி என்ற பொருளில் மகா மாரி என அழைக்கப்பட்டு இருக்கின்றாள் என்று காரணாகமம் என்ற நூலில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
அந்தக் கதையின்படி முன்னொரு காலத்தில் கடுமையான தவமிருந்து தன்னை எளிதில் அழிக்க முடியாத பல அறிய வரங்களையும் பெரும் சக்தியையும் இறைவனிடம் இருந்து பெற்ற மாரகாசூரன் என்ற அசுரன் ஆணவமும் , அகங்காரமும் கொண்டு மூவுலகங்களிலும் இருந்தவர்களை துன்பப்படுத்தினான். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஆதி பராசக்தியிடம் சென்று அந்த அசுரனின் தொல்லைகளைக் கூறி தம்மை அவன் தொல்லைகளில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டினார்கள். அவற்றைக் கேட்ட தேவியும் அவர்களை தானே காத்தருளுவதாக உறுதி கூறிவிட்டு , கோபாவேசத்தோடு மாரகாசூரனின் இருப்பிடத்துக்குச் சென்று அவனோடு உக்ரஹமாக போரிட்டு அவனது இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமிக்குள் புதைத்துக் கொன்றாள். தேவர்களும், கடவுட்களும் பூ மாறி பொழிந்து தமது நன்றியை அவளுக்கு செலுத்தினார்கள். அன்று முதல் ‘ மாரகாசூரனை வதம் செய்த அம்மன் எனப் பொருள் தரும் வகையில் மாரம்மன் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி மாரியம்மன் என ஆயிற்று. அவள் தலையை சுற்றி எப்போதுமே அக்னி ஜுவாலைகள் எரிந்து கொண்டே இருக்கும் என்பதினால் அவளை எப்போதுமே குளுமையான இடத்தில் சீதளா தேவி அதாவது குளுமைத் தருபவள் என்று வணங்கி குளுமையான இடத்தில் அமரச் செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட அந்த அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தற்போது குளுமை நிறைந்த பெங்களூரில் ராஜராஜேஸ்வரி நகரில் உருவாகி வரும் தேவி கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று. அந்த ஆலய விலாசம் :-
Opp to Shrugagiri Shanmuka Temple,
BEML Layout, Rajarajeshwari Nagara, Bangalore-560098.
Ph: 9945044433 / 9880865461