COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்:
ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் குருமார்கள்

அத்தியாயம் 48
நீர், நெருப்பு, சந்திரன், சூரியன் போன்றவர்களிடம் இருந்து
பெற்ற போதனைகள்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தீபக்கிற்கு தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தார்; ‘பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டது எதுவோ, அதுவே உள்ளே இருக்கும் ‘ஆத்மா ‘ ஆகும்; அந்த ஆத்மாவே தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் ஆவார்; அவரே ஒரு துறவியின் வடிவில் யதுகுல மன்னனிடம் விளக்கிக் கொண்டு இருந்தார் ‘ஒருவன் எப்போதும் தூய தண்ணீரைப் போலவே களங்கமற்றுத் திகழ வேண்டும்||1||

இவ்வுலகில் எந்த காலத்திலும், அனைத்து உயிரினங்களையும் உன் அன்பைப் பகிர்ந்து கொள்ளத் தகுந்தவைகளாகக் கருது; இரவும் பகலும் அவற்றின் மீது அன்பு செலுத்து; நடத்தையிலோ பேச்சிலோ கசப்புணர்வை அறவே தவிர்க்க வேண்டும்; ஒருவன் உயிருடன் இருக்கும் காலம் முழுவதும் இத்தகைய நன்னடத்தையே அவனிடமிருந்து வெளிப்பட வேண்டும் ||2||

அமுதினும் இனிய சொற்களை உதிர்ப்பவர்கள், தெய்வீகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் உள்ள உண்மையான பக்தர்களிடம் மட்டுமே விவேகத்துடன் பேசுகின்றனர்; மற்றவர்களிடம் பேசும்போது, அவர்களின் நடத்தை இனிமையாகவும், மனிதாபிமானத்துடனும் இருக்கும் ||3||

எவர் ஒருவரது நடத்தையும் பேச்சும் இனிமையாகவும் அனைவரையும் கவரும் வகையில் இருக்குமோ, அத்தகைய ஆத்மாக்களின் துணையை அனைவருமே நாடுவார்கள்; தண்ணீர் எனும் பூதத்தை நான் எனது குருவாகக் கருதுகின்றேன் என்பதின் காரணம் அதனிடம் உள்ள பெருமளவிலான உயர்ந்த பண்புகள்தான் என்பதை ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும் ||4||

இனிமையான, தூய்மையான தண்ணீர் தனது இயல்பிலேயே அனைத்துக் களங்கங்களிலிருந்தும் விடுபட்டுத் திகழ்வது போலவே, மக்களும் அத்தகைய தூய நீர் நிலைகளுக்கு அருகிலேயே குடியேறி வாழ விரும்புகின்றனர்||5||

ஒரு சமஸ்கிருத முதுமொழி இவ்வாறு கூறுகிறது: ‘யா அஸ்ருவந்தி தா ஆப:*
இதன் பொருள் என்ன என்றால் ‘எந்தத் தண்ணீர் பாய்ந்து வருகிறதோ அந்தத் தண்ணீர் புனிதமானது’; ‘ஆப்’ (Aap) என்பது சமஸ்கிருதத்தில் நீரைக் குறிக்கும் மற்றொரு பெயராகும்; அது எங்கும் நிறைந்து, தான் செல்லும் இடமெல்லாம் அனைத்தையும் நிரப்பி, இடை விடாத ஓட்டத்துடன் கீழ் நோக்கிப் பாய்ந்து கொண்டே இருக்கிறது.
{*’யா அஸ்ருவந்தி தா ஆப:’ (या अस्रवन्ति ता आपः) என்பது அதர்வண வேதத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சமஸ்கிருத மந்திரத்தின் தொடக்கப் பகுதியாகும்; அதன் அர்த்தம் எந்த நீர்நிலைகள் எப்போதும் வற்றாமல் தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கின்றனவோ, அந்த நீர்….} ||6||

மனிதன் பேச்சு மற்றும் நடத்தை , தூய தண்ணீரைப் போலவே களங்கமற்றுத் திகழ வேண்டும்; தண்ணீரைப் போலவே அனைவருடனும் இயல்பாகக் கலந்து பழகும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் அந்நியர்களுக்கு மத்தியில் இருக்கும்போதும், தான் தனித்து விடப்பட்டதாக ஒருவன் உணர மாட்டான்||7||

ஒருவன் தன் உடலின் மீது தண்ணீரை தெளித்துக் கொண்டாலோ, சடங்குகளின்படி உள்ளங்கையின் குழிந்த குழியில் அதை வைத்துக் கொண்டாலோ, அல்லது நீர் நிலையைக் கண்டாலோ, அல்லது அதில் அவன் நீராடினாலோ கூட, அந்த தண்ணீர் அவனைத் தூய்மைப் படுத்திப் புனிதமாக்குகிறது ||8||

வணிகம் செழித்துக் கொண்டே போகுமே தவிர, நீர் ஆதாரங்கள் வளர்வது இல்லை; பொதுவாகவே மக்கள் நீர் நிலைகளுக்கு அருகிலேயே குடியேற விரும்புகின்றனர்; மேலும், நீர் மிகக் கடுமையாக மாசுபடாத வரை, அது பயன்பாட்டிற்கு உகந்ததாக திகழ்கிறது; அது போலவே, மனிதனும் அனைவருக்கும் பயன்படும் வகையில் களங்கம் அடையாமல் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும்||9||

ஒரு மனிதன் தன்னை அகத்தாலும் புறத்தாலும் தூய்மையாக வைத்துக் கொண்டால், அத்தகைய மனிதனைக் காண்பது கூடப் பிறரைத் தூய்மைப்படுத்தும்; தூய்மையானவனைப் போல தாமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்; அதனால்தான் ஒருவர் தூய்மைக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் ||10||

யார் பணிவுடன் அனைவரையும் வணங்கி வரவேற்கிறார்களோ, அல்லது ஊக்கத்துடன் சேவை செய்கிறார்களோ, அத்தகைய மனிதர்களுக்குள், எவர் அனைவருக்கும் உதவுகின்றார்களோ, அவர்கள் புனிதத் தலங்களில் உள்ள புண்ணிய நீரைப் போலவே பிறரை உயர்த்தும் ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள் ||11||

தண்ணீரை வாழ்க்கை நெறியின் ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும்; அதை போன்றே மனிதன் தன்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்; முதலில் அவன் தன்னைத் தூய்மையாகவும், களங்கமின்றியும் வைத்துக் கொள்ள முயல வேண்டும்; அதன் பின்னரே சமூகத்தில் உள்ள பிறருக்கு உதவ முன் வர வேண்டும்||12||

தண்ணீரின் தனிச் சிறப்பு இதுவே; கனமான அசுத்தப் பொருட்கள் அனைத்தும் தண்ணீரின் அடியில் தங்கி விடுகின்றன; மேற் பரப்போ தூய்மையாகவே காணப்படும்; அது போலவே, ஒருவன் தண்ணீரைப் போன்று இருந்தவாறு, பிறரிடமுள்ள குறைகளை நீக்குவதற்குச் செயல்பட வேண்டும் ||13||

மனித உடல் என்பது சிறுநீர், மலம், சளி மற்றும் இது போன்ற பிற கழிவுப் பொருட்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை; இது பஞ்ச பூதங்களின் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) சேர்க்கையால் உருவான ஒரு தொகுப்பே ஆகும்; இறுதியில் இது தான் தோன்றிய மூலத்திலேயே மீண்டும் ஐக்கியமாகி விடுகின்றது; அப்படியிருக்கையில், எதற்காக இந்த உடல் மீது பற்றுக் கொண்டு பதற வேண்டும்? {நிலம், நீர், நெருப்பு (அல்லது ஒளி), காற்று மற்றும் ஆகாயம் ஆகியவைகளே அனைத்து உயிரினங்களின் அடிப்படைப் பொருட்களாகும்} ||14||

எவருடைய அறிவுத் திறன் கூர்மையாக செயல்படுகிறதோ, அத்தகைய மனிதர்கள் தமது புறத் தோற்ற உடலின் அழகிற்கு அடிமையாக மாட்டார்கள்; மாறாக, வெளிப்புற தோற்றம் காலப் போக்கில் மாறக் கூடியது என்பதை உணர்ந்து கொண்டு, அவர்கள் அழியாத ஞானத்தைத் தேடுகிறார்கள்; அதன் வாயிலாக, பல்வேறு உயிரினங்களில் மாறி மாறி நிகழும் பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியை தடுத்துக் கொள்ளும் நிலையில் வெற்றி பெறுவார்கள்||15||

அந்த ஆன்மீக ஞானம் ஒருவரின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும் போது, மனிதப் பிறவி எடுத்ததின் முழுமையான பயன் உணரப்படுகிறது; ஆயினும், அத்தகைய ஞானம் பெற்ற புனித ஆத்மா\க்கள் இந்த உடலை விட்டு நீங்க விரும்புவதில்லை; உடலோடு இருக்கும்போதே முக்தி நிலை அடைந்தவர்கள் அவர்கள்; பிறவிப் பெருங்கடலில் தவிக்கும் மற்ற ஆத்மாக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற கருணையினால் தங்கள் உடலைத் தாங்கி நிற்கிறார்கள்||16||

ஒருவன் உயிருடன் இருக்கும் வரை விதியால் அந்த உடல் அனுபவிக்க வேண்டிய கர்மாக்களை அனுபவித்தபடி இருந்தாலும், ஏற்கனவே இருந்த மற்ற கர்ம வினை தாக்கங்களை வென்று விட்ட ஞானிகள், பிறரைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே தொடர்ந்து தமது பூத உடலில் தங்கியிருக்கின்றனர்||17||

அத்தகைய சான்றோர்கள் இவ்வுலகில் சஞ்சரிக்கின்றனர்; தங்கள் பார்வை மற்றும் ஸ்பரிசம் போன்றவற்றின் மூலம் அவர்கள் முடிந்தவரை பிறரை ஆன்மீக ரீதியாகத் தூய்மையடையச் செய்கின்றனர்; பரிசுத்தமான ஞானிகள், தங்கள் பார்வை, ஸ்பரிசம் (தொடுதல்) மற்றும் அன்பான வார்த்தைகள் மூலம் தண்ணீரைப் போல, மற்றவர்களின் மனதை உடனடியாக தூய்மைப் படுத்துகிறார்கள்||18||

நீர் தன் பாதையைத் தானே அமைத்துக் கொள்கிறது; மலைச் சிகரங்களை விட்டு இறங்கி, கீழ் நோக்கிப் பாய்ந்து, பாரபட்சம் பார்க்காமல், தன் கரைகளில் உள்ள பெரிய மரம் முதல் சிறிய புல் வரை அவற்றின் தாகத்தை தீர்க்கிறது; அவை உயிர் வாழ வகை செய்கின்றது||19||

அவ்வாறே, மனிதர்களுள் விடுதலை பெற்ற ஞானிகள் பிடிவாத குணமும், வீண் பெருமையும் கொண்டோரை தம்மிடம் இருந்து ஒதுக்கி வைத்துக் கொண்டு விடுவார்கள்; மேலும் அவர்கள் எப்போதும் பணிவான இயல்புடன் இருந்து கொண்டு தம்மை ஆன்மீக தூய்மைப்படுத்திக் கொள்ள தம்மிடம் வருபவர்கள் ஆன்மீக தூய்மை அடையவும் உதவுகின்றனர்||20||

தங்கள் இழிந்த அறிவையும் வஞ்சகத்தையும் குறித்துப் பெருமை பேசுகிறவர்களை, ஆற்றல் மிக்க ஞானாசிரியர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள்; இதுவே தம்மை பெருமைப் படுத்தி பேசிக் கொள்பவர்களின் முழுமையான வீழ்ச்சிக்கு காரணம் ஆகி விடுகின்றன; அதே நேரத்தில் அந்த ஞானிகள், பணிவான உள்ளம் கொண்டோருக்கு உதவும் தங்கள் பணியைத் தொடர்கின்றனர்||21||

தண்ணீரை ஒரு குருவாகக் கருதியதன் மூலம், அத்தகைய பாடங்களையே நான் கற்றுக் கொண்டேன்; தண்ணீர் எனது நான்காவது குருவாகும்; இப்போது, எனது ஐந்தாவது குருவின் இயல்புகளை உனக்கு எடுத்துரைக்கிறேன்||22||

ஒருவர் தமது தவ வலிமையால் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்து, அனைவராலும் வரவேற்கப்படுகின்றார்கள்; பகிர்ந்து உண்ணும் பண்பைக் கொண்ட அந்த துறவிகள், தங்கள் மனதை ஒருமைப்படுத்தி வைத்துள்ளதால், சமூகத்தால் குறை கூறப்படாமல், உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் ||23||

ஆனால் ஒருவர் அத்தகைய மேன்மைகளை அடையும் வரை, வெளித் தெரியாமல், தனிமையில் அமர்ந்து இருந்து கொண்டு ஆன்மீக முன்னேற்ற பாதையில் மூழ்கியிருப்பது சிறந்தது; அதன் பிறகே அரிதாகவே, அவர்கள் தம்மை பொது வெளியில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் ||24||

அத்தகைய புனிதத் துறவிகளைப் போற்றுபவர்கள், தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதை காண்கிறார்கள்; மேலும் அவர்களின் உள் மனம் தூய்மையடையத் தொடங்குகின்றன; அவர்களது குறைகளும் ஒன்றன் பின்னர் ஒன்றாக நீங்கத் தொடங்குகின்றன||25||

துறவிகள் அலைந்து திரியும்போது, பிட்சையின் மூலம் உணவு கிடைத்தால், கிடைத்த உணவை பதுக்கி வைக்கக் கூடாது; இது நெருப்பை குருவாகக் கருதுவதால் கற்றுக் கற்றுக் கொள்ளப்பட்ட பாடம் ஆகும் ||26||

நெருப்பு ஒளி மயமானது, அது தன் ஒளியையும் வெப்பத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது; அதனால் நடுங்கும் குளிரைக் குறைத்து, இருளை விரட்டுகிறது ||27||

நெருப்பும் அதன் ஜுவாலைகளும் இங்குமங்கும் பயணித்து, தங்கள் பாதையில் உள்ள அனைத்தையும் எரித்து விடுகின்றன; நெருப்பு களங்கம் அடையாமல் தூய்மையாகவே இருக்கிறது; அதனுடன் பயணிப்பவர்களுக்கு (நெருப்பில் போடப்படும் பண்டங்கள்) அது சமமாகப் பயனுள்ளதாகிறது ||28||

நெருப்பு அனைத்தையும் விழுங்கி விடக் கூடியது; அது அதற்குள் போடப்படும் அனைத்தையுமே எரித்து விடக் கூடியது என்பதினால், அது போடப்படுபவற்றின் குறைகளையும் நிறைவுகளையும் சேர்த்தே விழுங்குகிறது; ஆயினும் தன் தூய்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கின்றது ||29||

நெருப்பின் ஒளி அளவிட முடியாதது; எந்தச் சூழ்நிலையிலும் அது தன் தூய்மையை இழப்பதில்லை; இதுவே அது அனைவருக்கும் கற்பிக்கும் பொதுவான பாடம்; ஆத்ம விடுதலையை நாடுபவர்கள் அத்தகைய அச்சமற்ற தூய்மையைத் தங்களுக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும்||30||

யாகங்கள் மற்றும் ஹோம குண்டங்களில், அதன் ஜுவாலைகளுக்கு ஏற்றவாறு சமித்துக்கள் எனப்படும் விறகுக் கட்டைகள் போடப்படுகின்றன; அந்த யாக குண்டத்திலான ஜிவாலைகளுக்குள் சமர்ப்பிக்கப்படும் பலிப் பொருட்களையும் {நெய், தானியங்கள், மூலிகைகள், வஸ்திரம், பழம் போன்றவை} அது சுத்தப்படுத்தி அவை சேர வேண்டிய இடத்திற்கு செல்ல வைக்கின்றது ||31||

சிலர் நெருப்பு தானாக அணையும் வரை அதை அணைப்பது இல்லை; சிலர் அதைச் சாணத்தால் மூடுகின்றனர்; மேலும் சிலர் பலி கொடுக்கும் நேரத்தில் மட்டும் அதை யாக குண்டத்தில் ஏற்ற விரும்புகிறார்கள்; மற்றவர்களோ ‘அஜஸ்ர பக்ஷம்’* எனப்படும் சூழலில் அதை அணைய விடாமல் வைக்கின்றனர்;
{*சில ஆலயங்களில் அல்லது வழிபாட்டு முறைகளில் அணையாமல் எரியும் நந்தா தீபம் அல்லது அஜஸ்ர தீபம் என்பது ஏற்றப்படுவதைக் குறிக்கும்} ||32||

அத்தகைய நெருப்பு, அதை அளிப்பவரின் விருப்பங்களுக்கு உட்பட்டே இருக்கும்; அது எல்லா யாகப் பலிகளையும் ஏற்றுக் கொண்டு, அதை அளிப்பவரைத் தூய்மைப்படுத்துகிறது ||33||

எந்த முறையில் அணுகினாலும், நெருப்பு தன்னை வழிபடும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது; எந்த ஒரு காணிக்கை, எந்த ஒரு வேண்டுதலுக்காக அர்ப்பணிக்கப்படுகிறதோ, அது யாக இறுதியில் அந்தந்த இடத்தைச் சென்றடைகிறது; பலிப் பொருட்களை சுத்தப்படுத்தி, மந்திர சக்தியுடன் தேவதைகளுக்கு கொண்டு சேர்க்கும் விதத்தில் நெருப்பு செயல்படுகின்றது ||35||

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நெருப்புச் ஜிவாலையைப் போலவே பேரொளி மிக்கதாகத் திகழ்கிறது; சில சமயங்களில் நெருப்பு ஜுவாலை பல வடிவங்களில் தென்பட்டாலும், அவை அனைத்தும் தற்செயலான மற்றும் தற்காலிகமான தோற்றங்களே ஆகும் ||36||

நெருப்பு எந்த இடத்திலும் நுழையக் கூடியது, எதையும் விட்டு வைக்காது; அது விறகு கட்டைகளை தன் எரி பொருளாக (உணவாக) ஆக்கிக் கொண்டு கொண்டு எரிகிறது; உண்மையில் அது தன் இயல்பிலேயே நிலைத்திருந்தாலும், நெருப்புக்கு என்று தனி வடிவம் கிடையாது; அது எரியும் பொருளின் வடிவத்தையே* தானும் பெறுகிறது {*உதாரணமாக: ஒரு மெழுகுவர்த்தி எரிந்தால் அதன் வடிவத்திற்கேற்கவும், ஒரு பெரிய குவியல் எரிந்தால் அதன் அதன் வடிவத்திற்கேற்கவும் அது காட்சி அளிக்கும்}||37||

நெருப்பு எரிந்து கொண்டே செல்லும் பாதையில் மிகப் பெரிய மரங்கள் குறுக்கிட்டாலும், நெருப்பு அவற்றையும் எரித்து அவற்றின் வடிவத்தையே ஏற்றுக் கொள்கிறது; அது போலவே சிறிய புதர்கள் குறுக்கிட்டாலும்—அவை நீளமாகவோ, அகலமாகவோ அல்லது வட்ட வடிவமாகவோ இருந்தாலும், நெருப்பு அவற்றின் வடிவத்தையே ஏற்கிறது||38||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘விமதா: சகல ஜீவா: த்வ்யாதாகாரவர்ஜிதா:, யத்தார்த்தம்யம்தேஷாம் து தத்காஷ்டாச்ரிதவஹ்னிவத்’ ||39||

அதன் அர்த்தம் ஏன்ன என்றால் நாம் விவாதிக்கும் அனைத்து ஜீவாத்மாக்களும்; தேவ, மானிடர்கள் போன்ற உருவ வேறுபாடுகள் அற்றவர்கள்; அவர்களின் உண்மையான நிலை (இயல்பு) என்பது கட்டையில் மறைந்திருக்கும் நெருப்பைப் போன்றது; சுருக்கமாகக் கூறினால் ‘உடல்கள் மாறினாலும், அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மாவின் அடிப்படைத் தன்மை ஒன்றுதான்; அது விறகில் மறைந்துள்ள நெருப்பைப் போன்றது ||40||

ஆன்மீக அறிவின் வலிமையோடு, ஆத்ம விடுதலை பெறுவதில் உறுதியாய் நிற்பவர்கள் தம் மீது திணிக்கப்பட்ட தேவையற்ற பண்புகளையும் அடையாளங்களையும் விரைந்து விலக்கிக் கொண்டு, முழு உணர்வுடன் பரம்பொருளோடு ஒன்றிணைகின்றனர்||41||

இந்த உடலானது, ஒருவன் செய்த கர்ம வினைகளின் விளைவாகவே வெளிப்படுகின்றது; ஆனால் அந்த வாழ்வில் கர்ம வினைகளால் ஏற்பட்ட பந்தங்கள் அனைத்தும் ஞானம் என்னும் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுகின்றன; அதன் பிறகு எஞ்சி நிற்பது, தூய்மையான நிலையில் பரம்பொருளோடு ஏற்படும் விழிப்புணர்வு மிக்க ஒன்றிணையும் நிலை ஆகும்||42||

நெருப்பானது தான் எரிக்கும் விறகு போன்ற எரி பொருளின் வடிவத்தை, அந்த குறிப்பிட்ட நெருப்பு எரியும் வரை ஏற்றுக் கொள்கிறது; ஆனால் விரைவில் அது சாம்பலாக மாறி விடுவதால், அது ஏற்றுக் கொண்டிருந்த அந்தத் தற்காலிக வடிவமும் மறைந்து விடுகிறது; இது ஆத்மா தான் தாங்கியிருந்த உடலைக் கை விடுவதை போன்ற நிலை ஆகும்||43||

எல்லா வடிவங்களையும் ஏற்றுக் கொண்டு, பிரபஞ்சத்தில் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அந்தப் பரம்பொருள் தத்துவமே வேதங்களில் போற்றப்படுகிறது; அதன் அளவற்ற பேரொளிக்கு முன்னால், எந்தவொரு வடிவமும் தனித்துத் தெரிவதில்லை ||44||

இந்த உண்மையை எவ்வித ஐயமுமின்றிப் புரிந்து கொள்வதற்காகவே, நான் நெருப்பை எனது ஒரு குருவாக ஏற்றுக் கொண்டேன்; உடல் சார்ந்த அடையாளங்களை முற்றிலுமாகத் துறந்து விட்டு, நான் எங்கு இருந்தாலும் சரி, அங்கு எவ்விதக் கவலையுமின்றி, முழுமையான நிம்மதியுடன் இளைப்பாறுகிறேன்’ என்று அவதூத முனிவர் யதுகுல மன்னரிடம் கூறினார்||45||

இவ்வுடல் காலப் போக்கில் சிதைவுக்கும் மரணத்திற்கும் உள்ளாகக் கூடியது; இந்த உண்மையை முதிர்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதே பற்றின்மையை உள்ளத்தில் ஒளிரச் செய்யும்; இடைவிடாது நிகழும் இயற்கையின் நிகழ்வை முழுமையாக உணர்ந்து கொள்வதற்காகவே, நான் இந்தத் நெருப்புக்கு சீடனாகத் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன் ||46||

இயற்கையில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் ஒவ்வொரு கணமும் தெளிவாகப் புலப்படும், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்தத் தொடர் நிகழ்வை ஒருவன் ஆழ்ந்து சிந்தனை செய்தால், நம் உடலில் உள்ள செல்கள் ஒவ்வொரு நொடியும் இறக்கின்றன, புதிய செல்கள் பிறக்கின்றன என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான்; சில ஆண்டுகளில், நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, நாம் ஒரு புதிய மனிதனாக மாறியிருப்போம்||47||

தீச்சுடர்களின் நிலையும் அத்தகையதே: அது தோன்றுகிறது, தனக்கான எரி பொருளை உட்கொண்டு எரிகிறது, பின்னர் அணைந்து விடுகிறது; பூத உடலும் அதே போன்ற செயல் முறைக்கே உள்ளாகிறது: அது பிறக்கிறது, சிறிது காலம் நிலைத்திருக்கிறது, பின்னர் இல்லாமற் போகிறது(மரணம்) ||48||

மனிதன் இக் கருத்தை ஏற்றுக் கொண்டால், உடல் எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் புரிந்து கொள்வான்; பின்னர் பற்றின்மைக்கு உரிய மதிப்பளித்து, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியைக் கடந்து செல்ல அவன் முயற்சி மேற்கொள்ள முடியும் ||49||

துறவு நிலை எனும் பண்பை வளர்த்துக் கொள்வது ஒரு வகையில் தனக்குத்தானே செய்து கொள்ளும் பேருதவி ஆகும்; அதன் மூலம் உடலின் மீதான தவறான பற்று மற்றும் தன்னை உடலாகவே கருதும் மயக்கம் ஆகியவை முற்றிலுமாக நீங்குகின்றன; நெருப்பிடமிருந்தும் அதன் ஜுவாலைகளிடம் இருந்தும் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவே ஆகும்; நெருப்பே எனது ஐந்தாவது குரு ||50||

காலப் போக்கில் பூத உடலில் வெளிப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் கண் கூடாகத் தெரிந்தாலும், உடலுக்குள் உறையும் ஆத்மா அந்த மற்றங்களால் பாதிக்கப்படுவதில்லை; நிலவு எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் இதுவே ஆகும் ||51||

சூரியனும் நிலவும் வானில் ஒரே ராசியில் (நட்சத்திரக் கூட்டத்தில்) இணையும்போதுதான், நிலவின் ஒளியில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக அமாவாசை எனும் இருள் நிலை ஏற்படுகிறது ||53||

வான மண்டலச் சக்கரத்தில் (ராசி மண்டலத்தில்), நிலவு ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்தையும் கடந்து செல்ல இரண்டரை நாட்கள் எடுத்துக் கொள்கிறது; ஆனால் சூரியன் அதே தொலைவை கடக்க பதிமூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறது ||54||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘க்லௌர்ஜவாத்புரதோயதி ஸ்வே ஸ்வஸ்தாந்வஹம் கதி:, மத்யகோக்ஷகலைதோ ரப்ரகோஅஷ்வமிதா: காலா:*
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘நிலவு தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு மிக வேகமாகப் பயணிக்கிறது; அதே நேரத்தில் அது சூரியனிடம் இருந்தே தனது ஒளியையும் பொலிவையும் பெறுகிறது; சந்திரனின் சராசரி தினசரி இயக்கம் சுமார் 790 கலைகள் (minutes) மற்றும் 35 விகலைகள் (seconds) ஆகும் {* இது வானில் கோள்களின் தினசரி நகர்வு வேகம் (Daily Mean Motion of Planets) மற்றும் அதன் கால அளவைக் கணக்கிடும் ஒரு வானியல் கோட்பாட்டுப் பாடலாகும்} ||55||

அமாவாசை நாளிலிருந்து தொடங்கி, நிலவின் பயண வேகத்தைக் கணக்கிடும் முறை இதுவே ஆகும்; சூரிய மண்டலத்தின் வழியே நிலவு மேற்கொள்ளும் பயணத்தின் விளைவாகவே, சந்திரனின் ஒளியில் மாற்றங்களும் பிரதிபலிப்புகளும் தோன்றுகின்றன||56||

நிலவின் வட்டத்தில் தினமும் நாம் காணும் அந்தப் பதினைந்தாவது பகுதி (கலை) ஒன்றே மீண்டும், மீண்டும் வெளிப்படுகிறது; அந்த பிரதிபலிப்பு நாளுக்கு நாள் மாறி, 15 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக (பௌர்ணமி) காட்சியளிக்கிறது.||57||

வளர்பிறை காலத்தில் நிலவின் கலைகள் (ஒளிப் பகுதிகள்) படிப்படியாக அதிகரிக்கின்றன; தேய்பிறை காலத்தில் அவை படிப்படியாகக் குறைகின்றன; சூரியனும் நிலவும் நேருக்கு நேர் சந்திக்கும்போது, வான மண்டலத்திலுள்ள பதிமூன்று நட்சத்திரக் கூட்டங்களையும் அவை கடந்து சென்றிருக்கின்றன||58||

பௌர்ணமி (முழுநிலவு) நாளில் நாம் காண்பது நிலவின் முழுமையான வடிவத்தின் பிரதிபலிப்பாகும்; பூமியின் நிழல் நிலவின் மீது விழாததால்தான் நிலவு முழுமையாக ஒளிர்கிறது; அந்த நிலையில், பூமியின் நிழல் நிலவின் மீது விழுவது தெளிவாகத் தெரிகிறது; ஆனால் பெரும்பாலான நாட்களில் பூமியின் நிழல் நிலவின் மீது விழுவது இல்லை||59||

ஆரம்பத்தில், அமாவாசை நாளில், சந்திரனின் திறன்கள் மிக நுட்பமானவையாக இருக்கும்; பின்னர் வளர் பிறைக் காலத்தில், அந்த கலைகள் படிப்படியாகத் தெளிவாக வெளிப்படத் தொடங்குகின்றன; இவ்வாறு அமாவாசையில் மறைந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக வளர்ந்து, பௌர்ணமி அன்று 16 கலைகளுடன் முழுமையாகக் (பூர்ண சந்திரன்) காட்சி அளிக்கிறான்|60||

சோதிட வல்லுநர்கள், அந்த பதினாறு நிலைகளையும் துல்லியமாகக் கணக்கிட்டு விவரிக்க வல்லவர்கள்; அதேபோல, தேய்பிறைக் காலத்தில், ஒவ்வொரு நாளும் சந்திரனின் கலைகள் படிப்படியாகக் குறைந்து வருவதையும் அவர்களால் கணக்கிட முடிகிறது||61||

இது இயற்கையின் பரிபூரண ஒழுங்கிற்கு ஒரு இலக்கணம் ஆகும்; அமாவாசை நாள் வரும் வரை சந்திரனின் ஒவ்வொரு கலையும் தேய்ந்து கொண்டே இருக்கும்; இவ்வாறே பௌர்ணமி வரும் வரையில் சந்திரன் வளர்ந்து கொண்டே இருக்கும் ||62||

ஒருவர் நிகழ்வுகளின் காரணத்தை ஆராயாமல், வெறும் விளைவை மட்டுமே உற்று நோக்கி, அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறினால், அது அவரைத் தர்க்க ரீதியற்ற ஊகங்கள் மற்றும் பிழைகளில் சிக்கிக் கொள்ளவே வழி வகுத்து விடும் ||63||

நிலவு எப்போதும் ஒரு முழுமையான கோளமாகவே இருக்கிறது ; நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை என்பது நிலவில் ஏற்படும் உண்மையான மாற்றம் அல்ல; அது நம்முடைய பார்வைக் கோணத்தைப் (Perspective) பொறுத்தது மட்டுமே; அது வானில் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும், அது வெறும் பௌதிக ரீதியான, வரையறுக்கப்பட்ட புலன் காட்சிக்கு மட்டுமே ஒரு எடுத்துக் காட்டாக அமைகிறது||64||

அதேபோல, உடலுக்குள் உறையும் ஆத்மாவும் அதிகரிப்பதோ அல்லது குறைவதோ இல்லை; அது எவ்வித மாற்றத்திற்கும் உட்படுவதில்லை. சந்திரக் கதிர்களின் தோற்றத்தைப் போலவே, வளர்வதும் தேய்வதும் (மாற்றத்திற்கு உட்படுவதும்) வெறும் பூத உடலே ஆகும்’||65||

அவதூதர் மேலும் கூறினார்: ‘படைப்புலகம் அனைத்திலும் ‘ஆத்மாவின் மாற்றமின்மை’ என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாய் இருக்கும்போது, மக்கள் ஏன் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் இவ்வளவு முனைப்புடன் ஈடுபடுகிறார்கள்?’ என்று நீங்கள் சிந்திக்கக் கூடும்; உங்கள் அந்தக் கேள்விக்கு நான் இப்போது பதிலளிக்கிறேன்’ ||66||

வானில் தனித்த கோளத்தில் உள்ள உள்ள சந்திரன், பௌர்ணமி நாட்களில் இருளை அகற்றி ஒளி வீசுவதில், சூரியனின் ஆற்றலையே துணையாகக் கொண்டு சூரியனைப் போலவே செயல்படுகிறது||67||

இந்தச் சந்திர கோளத்தின் முதன்மையான உட்கூறாக ‘தண்ணீர்’ உள்ளதாக கூறப்படுகிறது; அதனாலேயே அது குளிர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது; சந்திரனில் நீர் குளிர்ச்சியைத் தருவது போல, உடலினுள் உள்ள ஆத்மா உணர்வை (Consciousness) தந்து, கைகால்களை இயக்கி, உடலை வாழ வைக்கிறது||68||

சந்திர கோளத்தில் தண்ணீர் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது போலவே, உடலுக்குள் உறையும் மனம், புத்தி, சித்தம் மற்றும் நுண்மையான அகங்காரம் ஆகிய அகக் கருவிகள் அனைத்தும் உள்ளிருக்கும் ஆத்மாவையே பிரதிபலிக்கின்றன; ஆத்மா (கடவுள்/உண்மை) அலைபாயும் மனதிற்குள் நுண்மையாகப் பிரதிபலிக்கும்போது, அந்த பிரதிபலிப்பு, ஆத்மாவே செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது||69||

உள்ளே உறையும் சாட்சியான அந்த நுண்மையான ஆத்மா அழிவற்றது; இதனைத்தான் நான் கற்றுணர்ந்தேன்; சந்திரனை எனது ஆறாவது குருவாகக் கருதிய நிலையில், இனி ஏழாவது குருவைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பேன் ||70||

உடல் எவ்வாறு இயங்கிச் செயல்படுகிறதோ, அதே போலவே உள்ளிருக்கும் ஆத்மாவும் இயங்க வேண்டும் என்று நீங்கள் ஏதேனும் நினைத்தால் அந்த ஆத்மா எவ்வாறு அசைவற்றதாகவும், எங்கும் நிறைந்ததாகவும் போற்றப்படுகிறது? இத்தகையதொரு வினா உங்களுக்கு எழுந்தால், அதற்கான விடை மிகத் தெளிவானது ||71||

உடலுக்குள் உறையும் ஆத்மாவானது, வெறும் பூத உடலைத் தவிர வேறில்லை என்றே பொதுவாகக் கருதப்படுகிறது; ஆனால், அனைத்தையும் தன்னுள் அரவணைத்துக் கொள்ளும் அந்த வானத்தைப் போலவேதான், உள்ளிருக்கும் ஆத்மாவும் எங்கும் பரவி நிற்கிறது||72||

ஒவ்வொரு தனி மனிதனிடமும், பிறப்போடு பெறப்படும் ஒரு சிறப்பியல்பு அவனது பூத உடலாகும்; அந்த உடலையே உள்ளிருக்கும் ஆத்மா என்று கருதுவது, தவறான பகுத்தறிவிற்கு ஒரு தெளிவான எடுத்துக் காட்டாகும்; எப்படி நீரில் சூரியனின் பிம்பம் தெரிகிறதோ, அதே போலவேதான் ஆத்மாவும் உடலுக்குள் பிரதிபலிக்கிறது||73||

இதை இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளவும், மேற் கூறிய உண்மையை விவரிக்கும் விதமாக நான் ஒரு விளக்கத்தை அளிக்கிறேன்; ஒரு குடத்தில் நீரை நிரப்பி, அதில் சூரியனின் பிம்பம் தெரியுமாறு வையுங்கள் ||74||

அந்த நீர் குடத்தை நீங்கள் எங்கு எடுத்துச் சென்றாலும் அல்லது நகர்த்தினாலும், அதனுள் சூரியனின் பிம்பத்தை பார்க்கும்போது, சூரியனின் பிம்பமும் அதனுடனே நகர்வது வந்துள்ளது போலத் தோன்றும்; இது நமது கண்களுக்கு தெளிவாக தெரிந்தாலும் , சூரியனின் சுயரூபம் குறித்து நாம் ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது ? ||75||

அந்த நீர் குடத்தில் உள்ள நீரில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும், அந்த குடத்திற்குள் தெரியும் சூரியனின் பிம்பத்திலும் பிரதிபலிக்கின்றன; ஆனால் உண்மையில் நடப்பது என்ன?; சூரியன் தனது சுயரூபத்தில் எவ்வித மாற்றமும் அடையாமல், என்றும் மாறாத நிலையிலேயே இருக்கிறது; இந்த உண்மையை நமது பகுத்தறிவு முதிர்ச்சியோடு உணர்ந்து கொள்ள வேண்டும்||76||

ஆத்மாவும் சூரியனைப் போன்றதுதான்; வெளித் தெரியும் அனைத்து மாற்றங்களும் பூத உடலில்தான் வெளிப்படுகின்றன, ஆத்மாவில் எந்த மாற்றங்களும் கிடையாது ; உடலுக்குள் உறையும் ஆத்மாவானது, என்றும் மாசுபடாததாகவும், அனைத்தையும் சாட்சி போல நின்று கொண்டு பார்ப்பதாகவும், தனது சுய நிலையில் மாற்றம் இல்லாமல் அப்படியே நிலைத்திருக்கிறது||77||

இந்த உண்மையை எவ்வித ஐயமும் இன்றித் தெரிந்து கொள்; உண்மையான தேடலின் மூலம், தவறான நம்பிக்கைகளையும் மாறுபட்ட பார்வைகளையும் கை விடுவது மிக்க சிறந்தது; சூரியனை ஒரு போற்றுதலுக்குரிய குருவாகக் கருதுவதன் மூலம், நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இதுவேயாகும் ||78||

பல்வேறு உயிரினங்களைக் கொண்ட இந்த முழுப் பிரபஞ்சமும் என்றும் நிலைத்திருப்பதாகவும், அனுபவத்திற்குரியதாகவும் விளங்குகிறது; ஆகவே இந்த பிரபஞ்சத்தின் மீது வெறித்தனமான பற்று கொள்ளாமல், அதன் ஒட்டு மொத்தப் பாதுகாப்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்||79||

அதன்பின், தகுந்த காலம் வரும்போதும், இந்த பிரபஞ்ச நிகழ்வுகளின் பிரம்மாண்டத்தை உணரும் போதும், ஒருவர் தேவையற்ற செயல்பாடுகளைக் கை விட வேண்டும்; தான் கற்றுணர்ந்த அறிவை, அதற்குத் தகுதியான ஒரு சீடனுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் ||80||

ஒருவேளை, கண்ணால் காணக் கூடிய அனைத்தும் ஏதேனும் ஒரு காரணத்தினால் அழிந்து போனாலும், அதற்காக ஒருவர் துயரப்படவோ அல்லது வருந்தவோ கூடாது; ஏனெனில், காலப் போக்கில் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன; அவ்வாறு அனைத்தும் மீண்டும் தோன்றும்போது, அதைக் கண்டு ஒருவர் வரம்பு மீறி மகிழ்ச்சியடையவும் கூடாது||81||

தீவிரமான விருப்பு-வெறுப்புகளுக்கு ஆட்படும் இரட்டை மனப்பான்மையை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, விதி வசத்தால் அதிக சிரமமின்றி கிடைக்கும் செல்வத்தை ஏற்றுக் கொண்டு, மனிதனும் தனது பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைக்க கற்றுக் கொள்ள வேண்டும்; மேலும், எதிலும் பற்றற்ற நிலையோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்||82||

சூரிய தேவன் பல உண்மைகளைக் கற்பிக்கிறான்; அவனது ஒளிக் கதிர்கள் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்ற எந்த பேதமும் இல்லாமல் அனைவரின் மீதும் விழுவதை போலவே, ஒருவன் தன் அறிவை பிறரின் குறைகள் அல்லது குணாதிசயங்கள் மீதே செலுத்தாமல், நடு நிலை தவறாத மன அமைதியுடன் பலனை எதிர்பாராமல், பாரபட்சம் பார்க்காமல் தன் கடமையைச் செய்பவனை எந்தவித கர்ம வினைகளும் பந்தப்படுத்தாது ||83||

சூரியன் தான் பெற்றுக் கொண்டதை உரிய காலத்தில் திரும்ப அளித்து விடுகிறான்; ஆவியான நீரைத் தன்னிடம் சேமித்து வைத்து, மீண்டும் மழையாகப் பொழிகிறான்; ஆயினும், சூரியன் தான் செய்யும் இச் செயலைப் பற்றி எவரிடமும் தற்பெருமை பேசுவதில்லை||84||

எதற்கும் அஞ்சாமல் இருப்பது, மற்றவர்களையும் அச்சமற்றவர்களாக மாற்றுவது ஆகிய ஞானத்தை சூரியனே நமக்குக் கற்பிக்கிறான்; எட்டாவது குருவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட உண்மைகளை, இப்போது நீ கவனமாகக் கேள்||85||

ஒரு மனிதன் தன் மனைவி, மக்கள், செல்வம், சுற்றத்தார் போன்றோர் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டு, அதனால் ஏற்படும் கவலைகளால் வாடினாலும்; அல்லது அவர்களை வளர்க்கும் முறைகளில் மிகக் கடுமையாக இருந்து கொண்டு, ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்தாலும்; அந்தப் புறாவைப் போலவே, அவனும் அழிவை விளைவிக்கும் பந்தங்களில் சிக்கிக் கொள்கிறான்||86||

கட்டுப்பாடற்ற பற்றுக்கு அடிமையாகும் எவருக்கும், நான் எனது குருவாக ஏற்றுக் கொண்ட அந்தப் புறாவிற்கு நேர்ந்த கதியே ஏற்படும்; ஒரு குறிப்பிட்ட காட்டில், ஒரு ஆண் புறாவும் பெண் புறாவும் தம்பதியராக வாழ்ந்து வந்தன||87||

அவை ஒருபோதும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததே இல்லை; பரஸ்பர அன்பால் ஒன்றிணைக்கப்பட்டு, அனைத்துச் செயல்களையும் சேர்ந்தே செய்தன; காலப் போக்கில், அவற்றின் சிந்தனைகள் கூட ஒன்று போலவே மாறி இருந்தன||88||

தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, அவை அந்தக் காடெங்கும் ஒன்றாகவே பறந்து திரிந்தன; தங்கள் இணை வாழ்க்கையை இனிதே கழிப்பதிலேயே, அவற்றின் பெரும்பாலான நாட்கள் கழிந்தன||89||

பெரும்பாலான நேரங்களில், அவை தங்கள் கூட்டிற்குள் அமர்ந்து கொண்டு,ஒருவரை ஒருவர் அன்புடன் உற்று நோக்கியவாறு, தங்கள் இணை வாழ்க்கையை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்திருந்தன ||90||

பிறர், அவ்விரு புறாக்களுக்கும் இடையே இருந்த இணைப்பை கவனித்தனர்; அவை தங்களுக்குள் இருந்த அன்பை, இயன்றவரை இனிமையான ஒலிகள் மூலம் வெளிப்படுத்தின; தங்கள் சிறகுகளை விரித்து, ஒன்றுக்கொன்று அணைத்துக் கொண்டன ||91||

மரணம் என்பது தவிர்க்க முடியாதது; இதை நம்புங்கள்; தற்செயலாகவே கூட ஒருவன் இந்த உடலை விட்டுப் பிரிய நேரிடும்; ஆனால், அந்த புறா தம்பதியினருக்கு அந்த உண்மை தெரிந்திருக்கவில்லை; அவர்களின் சிந்தனைகள் அனைத்தும் புலனின்பங்களை நுகர்வதிலேயே முழுமையாக இருந்தன||92||

மரணத்தை வெல்லும் ஆற்றலை அருளும் இறைவனான சிவபெருமானை நினைவு கூற மறந்து விட்டு, ஒன்றன் பின் ஒன்றாக வரும் புலனின்பங்களிலேயே மூழ்கி, காம களியாட்டங்களில் தங்கள் காலத்தைக் கழிப்பவர்கள், உண்மை நிலை தங்கள் வாசலைத் தட்டும்போது அதிர்ச்சியடைகிறார்கள்||93||

இவ்விதம், தங்கள் பரஸ்பர விளையாட்டுகளிலேயே ஈடுபட்டு, எவ்விதச் சிரமமுமின்றி அவர்களின் காலம் கழிந்தது; ஆயினும், அவர்கள் ஒருவரையொருவர் இப்போதுதான் சந்தித்தது போல உணர்ந்தனர்; ஆண்டுகள் உருண்டோடியதை அவர்கள் சற்றும் கவனிக்கவில்லை||94||

பருவங்களாகவும், மாதங்களாகவும் வகைப்படுத்தப்படும் காலம் என்பது ஒரு சுழற்சி போன்றது; அது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது; ஒவ்வொரு நாளும், ஒருவனுக்கு விதிக்கப்பட்ட மொத்த ஆயுட் காலத்திலிருந்து ஒரு நாளைக் குறைத்து விடுகிறது; மந்த புத்தியுடையவர்களும், மயக்கத்தில் இருப்பவர்களும் அது குறித்து சற்றும் சிந்திப்பதில்லை||95||

இவ்வாறு, தங்கள் வாழ்க்கையிலேயே முழுமையாக மூழ்கி, அந்தப் புறாக்கள் தாங்கள் எப்போதும் வாழ்ந்து வந்ததைப் போலவே தொடர்ந்து வாழ்ந்து வந்தன; அவர்களின் பரஸ்பரச் சிரிப்பும், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட பார்வைகளும், அவ்விருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கப் போதுமானதாகத் தோன்றின||96||

பெரும்பாலும், அவை பசி தாகங்களைக் கூடப் பொருட்படுத்தவில்லை; அவற்றின் மனம் முழுவதுமாக இனப் பெருக்கம் குறித்த சிந்தனையிலேயே ஈடுபட்டிருந்தது; இதுவே அவ்விருவரையும் மிக உறுதியாகப் பிணைத்திருந்த பந்தமாகும் ||97||

காலப் போக்கில், அந்தப் பெண் புறா கருவுற்று, உடல் கனத்தது; பின்னர் முட்டைகளை இட்டது; அந்த முட்டைகளை இரவும் பகலும் மிகக் கவனமாகப் பராமரித்து வந்தது ||98||

அந்த ஆண் புறா, உயிரை நிலை நிறுத்தக்கூடிய உணவையும் புற்களையும் தேடிச் சென்று, அவற்றை எடுத்துக் கொண்டு தன் துணையின் இருப்பிடமான கூட்டிற்குத் திரும்பும்; அந்தப் பெண் புறாவோ, தன் உடல் வெப்பத்தாலும் மிகுந்த பாசத்தாலும், அந்த முட்டைகளை இரவும் பகலும் பாதுகாத்து வந்தது ||99||

முட்டைகளுக்குள் முதலில் நிறைந்திருந்த கருப்பொருள் (மஞ்சள் கரு) — குறிப்பாக அதன் நீர்ச் சத்துப் பகுதிகள், தன் இயல்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் காரணமாகப் பக்குவமடைந்தன; விரைவில் முட்டைகள் உடைந்து, அந்தப் புறா இணையரின் முதல் வாரிசுகளான குஞ்சுகள் வெளி வந்தன ||100||

அவ்விரு புறாக்களின் மனமும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தது; அவை அந்தக் குஞ்சுகளின் மீது அளவற்ற பாசம் காட்டின; காட்டிலிருந்து ஊட்டச் சத்துள்ள உணவைக் கொண்டு வந்து, அந்தக் குஞ்சுகளின் சிறிய அலகுகளுக்குள் ஊட்டி மகிழ்ந்தன ||101||

சமஸ்கிருத செய்யுள்: ‘யோ நாஷ்ணுதே நிஜாநந்தம் ஸ்வாதீனம் ஸுலபம் பரம், ஸ்த்ரி-புத்ராதி- பாவம்ஸௌக்யம் புக்த்வாபி ச ந துஷ்யதி’;
இதன் விளக்கம் என்ன என்றால் ‘யார் ஒருவர் தனக்குள்ளேயே இருக்கும், தனக்கு மட்டுமே சொந்தமான, மிக எளிதாக அடையக் கூடிய, எல்லாவற்றையும் விட மேலான பேரின்பத்தை (நிஜ ஆனந்தத்தை) அனுபவிக்கவில்லையோ, அவர் மனைவி, பிள்ளைகள் போன்றவற்றால் கிடைக்கக் கூடிய உலகியல் ரீதியான சிற்றின்பங்களை எவ்வளவுதான் அனுபவித்தாலும் மனநிறைவு (திருப்தி) அடைவதே இல்லை; அந்த புறாக்களை போலவே பற்றுதலில் மூழ்கிக் கிடந்து, இன்பங்களை அனுபவித்த பின்னரும் மன நிறைவின்றித் தவிக்கிறார்கள் ||102||

பெற்றோர் தங்கள் குழந்தைகளை அணைத்துக் கொள்வார்கள்; வேறு எவரும் செய்யாத வகையில் அவர்கள் மீது அளவற்ற அன்பு காட்டுவார்கள்; அது போல புறாக்களும் தங்கள் குஞ்சுகளுக்குத் தேவையான அனைத்தையும் காட்டில் இருந்து கொண்டு வர மேலேயும் கீழேயும் பறந்து திரிந்தார்கள் ||103||

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும், அவற்றின் பசி அதிகரித்தது; இதனால், பெற்றோர் இருவருமே காட்டிற்குச் சென்று, தங்கள் குஞ்சுகளின் ஊட்டச் சத்துக்காக உணவைக் கொண்டு வருவது அவசியமாயிற்று||104||

ஒரு முறை, பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், அந்தக் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியே வந்தன; விதியின் விளையாட்டாய், அவை ஒரு வேடனின் வலையில் சிக்கிக் கொண்டன; அதே தருணத்தில் தாய் புறா திரும்பி வந்து, தன் குஞ்சுகள் வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டு, அவற்றுக்கு அருகில் இருப்பதற்காகத் தானும் அந்த வலைக்குள் நுழைந்தது ||105||

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆண் புறா திரும்பி வந்து தன் கூட்டைப் பார்த்தது; அது தங்கத்தால் செய்யப்பட்டதாகவே இருந்தாலும், அதில் தனியாகவும் ஏக்கத்துடனும் அனுபவிக்க யார் விரும்புவார்கள்?; வலையில் சிக்கி இருந்த தன் குடும்பத்தின் நிலையே சிறந்தது என்று கருதி, அந்த ஆண் புறாவும் வேடனின் வலைக்குள் நுழைந்தது||106||

தங்கள் வாழ்நாளை புலனின்பங்களை அனுபவிப்பதிலேயே கழிப்பவர்கள், இந்த நிகழ்வில் வரும் புறாவைப் போலவே, காலம் திடீரெனத் தாக்கி, முழு குடும்பத்தையும் பேரழிவை நோக்கி இழுத்துச் செல்வதை உணர்வார்கள் ||107||

முக்தியை அடைவதற்காக உழைப்பது மிகவும் மேன்மையான செயலே என்றாலும், அதை அடைவது அவ்வளவு எளிதல்ல; மேலும், மனிதப் பிறவியைப் பெறுவதும் மிகவும் அரிதான ஒன்றாகும்; ஒருவேளை வாழ்க்கையைச் சரியாக வாழாவிட்டால், உடலை விட்டுப் பிரிந்த பின்னரும் துயரமே காத்திருக்கும்; இதைத்தான் அந்தப் புறா எனும் குரு எனக்குக் கற்றுக் கொடுத்தது’ என்று அவதூதர் யதுகுல மன்னனுக்கு கூறினார் ||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்தெட்டாவது (48) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்தெட்டாவது (48) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 5079 = 5187

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 48 முடிவடைந்தது
அத்தியாயம் 49 தொடர்கின்றது