COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்:
ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் குருமார்கள்
அத்தியாயம் 47
அவதூதர் – யது குல மன்னன் உரையாடல்கள்; பூமி, காற்று மற்றும் ஆகாயத்திடமிருந்து
பெற்ற போதனைகள்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘அரசன் யது, தான் ஒரு உயர்ந்த ஞானியின் முன்னிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டது மட்டும் இல்லாமல் அவரது போதனைகளினால் மெய் மறந்து நின்று பின்வருமாறு வினவினான் ‘ஐயா தயவு செய்து நீங்கள் உங்களது குருமார்களிடம் இருந்து அடைந்த ஞானத்தை எனக்கும் எடுத்து உரைப்பீர்களா||1||
எப்படி குரு வேத தர்மா தனது சீடனால் மகிழ்ந்தாரோ அதை போலவே யதுகுல மன்னனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீமத் தத்த பகவானும் மனம் மகிழ்ந்தார்; அந்த அவதூத ஞானி பதிலளித்தார் ‘அந்த ஞானத்தை நான் உனக்கு உபதேக்கிறேன்; ஒரு தகுதியுள்ள சீடனுக்குரிய மனப்பான்மையுடன், மிகக் கவனமாக அவற்றை கேட்பாயாக ||2||
எனது முதல் குருவான பூமி எனக்கு என்ன போதித்தாள்? ஒருவன் வாழ்வில் உயர் நிலையை அடைய விரும்பினால், அவனுக்கு ஒரு ஏணி (துணைக் கருவி) தேவைப்படுகிறது; அந்த உயர்வை அடையப் பொறுமையும் உறுதியும் இன்றியமையாதவை; இந்த தத்துவம், உண்மையான ஆன்மீகச் சாதகர்களுக்கு சரியாகப் பொருந்தும் ||3||
பூமி மீது பல்வேறு உயிரினங்களும் மனிதர்களும் வாழ்ந்து வருகின்றார்கள்; அவர்கள் அனைவரும் தமது கழிவுகளை பூமியின் மீதே வெளியேற்றுகின்றார்கள்; மனிதர்களும் அதன் மீது துப்புகின்றனர்; ஆயினும், பூமி அவர்களில் எவர் மீதும் சினத்தை வெளிப்படுத்தாமல் , அனைத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறது||4||
பூமி கூறுகின்றாள் ‘அத்தகைய செயல்கள் அனைத்தையும் விதியின்படியே நான் தாங்கிக் கொள்ள வேண்டும்; ஏனெனில், மனிதன் பூமியைச் சீரழிப்பதன் மூலம் தனது கலாச்சார தரத்தை வெளிப்படுத்துகிறான்; பறவைகளும் விலங்குகளும் செய்யும் செயல்களுக்காக யாரை குறை கூற முடியும்?; இதுவே யதார்த்த நிலை எனும்போது நான் யாரிடம் சென்று எனது குறையை கூற இயலும்||5||
சுயமாக தோன்றியவரும் சர்வ ஞானியுமான பரம்பொருளே இந்த விதியை நிர்ணயித்துள்ளார்; இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் பாரத்தையும் தாங்குவதற்கு நானே தகுதியுடையவளாக உள்ளேன்; என்னைத் தவிர அவர்களுக்கு வேறு புகலிடம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை||6||
படைக்கப்பட்ட உலகின் அனைத்து உயிராதாரங்களும் என்னிடமே உள்ளன; அதனால்தான் மக்கள் தங்கள் பயிர்களை விளைவிப்பதற்கு என்னையே தோண்டி, குடைந்து , உழுது என் மீதே எரிக்கவும் செய்கின்றார்கள் ||7||
மக்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் என்னை மிதித்தபடி செல்கின்றார்கள் அல்லது என்னை உதைக்கின்றார்கள்; அவற்றை நான் குறை கூறி என்ன பயன்? வேறு ஏதன் மீது அவர்கள் தமது கால்களை வைக்க முடியும் ||8||
ஆகையால்தான் நான் பெண்மையாக ‘பூமாதேவி’ எனும் பெயரில் போற்றப்படுகிறேன்; உயிரினங்கள் அனைத்தும் என் குழந்தைகளாகக் கருதப்படுகின்றன; அவர்கள் மேற் கொள்ளும் அத்தனை செயல்களையும் நான் குழந்தைகளின் பருவ கால விளையாட்டுகளாகவே கருதுவதால், அவற்றை என் மனதிற்குள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை||9||
ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவூட்டும்போது, அந்த குழந்தை தாயை உதைப்பதும், அடம் பிடித்துத் தன் கோபத்தையெல்லாம் தாயின் மீதே காட்டுவதும் நாம் சாதாரணமாகக் காணும் காட்சியல்லவா? அதற்காக அந்தத் தாய் குழந்தையைத் திருப்பித் தாக்குவாளா? ||10||
உணவூட்டும்போது அக் குழந்தை தாயின் மீதே சிறுநீர் அல்லது மலம் கழித்து விட்டாலும், அந்தத் தாய் குழந்தையை அடிப்பாளா அல்லது கடுஞ் சொற்களால் திட்டுவாளா?; அவள் அதைச் சுத்தம் செய்துவிட்டு, தன் கடமையைத் தொடர்ந்து செய்வாளே தவிர, குழந்தையைத் தண்டிக்க மாட்டாள்||11||
அவ்வாறே நானும் அனைவரிடமும் தாய்மை உணர்வுடன் நடந்து கொள்கிறேன்; அதனால்தான் உலகின் எந்தப் பகுதியிலுள்ள மண்ணும் ‘தாய்நாடு’ என்று போற்றப்படுகிறது; அது தாய்மைக்கே உரிய மன்னிக்கும் பண்பையும், எதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையையும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது||12||
முக்தி (விடுதலை) அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனேயே சிலர் நற் செயல்களைச் செய்கிறார்கள்; அத்தகையோர் பெரிதும் போற்றுதலுக்குரியவர்கள்; அந்த நற் செயல்களைச் செய்யும் முயற்சியில், எனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தாலோ அல்லது நான் காயப்பட்டாலோ கூட, நான் கோபமுற்று சீறுவதில்லை ||13||
உறுதியான பொறுமையுடன் சத்தியத்தைக் கடைப் பிடித்து வாழ்வது மிகவும் கடினமானது; வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியது; எத்தகைய சூழலிலும் தர்மத்தின் பாதையை விட்டு விலகக் கூடாது; தர்மத்தின் பாதையில் நடப்பவர்களிடமிருந்து நானும் இத்தகைய அறிவுரையையே பெற்று வருகிறேன் ||14||
ஞானம் பெற்ற துறவியாக திகழ்ந்த ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமான், பூமா தேவி அளித்த போதனைகளைத் தொடர்ந்து விவரித்தார்; ‘ஒருவர் உன்னைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாலோ, அவமதித்தாலோ, கடுஞ் சொற்களால் திட்டினாலோ, அத்தனை ஏன், காரணமே இல்லாமல் சண்டையிட்டு உன்னைத் தாக்கலாம்||15||
சிலர் உன்னை மிரட்டலாம்; வேறு சிலர் உன்னிடம் அநீதியாக நடந்து கொள்ளலாம்; சிலர் ஆயுதங்கள் அல்லது தடிகளால் உன்னைத் தாக்கலாம்; இன்னும் சிலர், தாம் விரும்பிய இடமெல்லாம் துப்பி அசுத்தப்படுத்தலாம் ||16||
பிறரால் உனக்கு நேரும் துன்பங்கள் அனைத்தும் ‘விதியின் காரணமாகவே நிகழ்கின்றன; எஞ்சியிருக்கும் செயல்கள் அனைத்தும் தர்மத்தின் அடிப்படையில் நீயே விரும்பி மேற் கொள்ளும் செயல்களாகும்; நீ விரும்பவில்லை என்றாலும், விதியால் நிர்ணயிக்கப்பட்டவை நடந்தே தீரும்; இந்த விதியும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது ||17||
நம் உடல் காலத்தின் பிடியில் உள்ளது; எப்போது என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. எனவே, விதிப்படி நடக்க வேண்டியவை நடக்கும் என்ற தெளிவோடு, தேவையற்ற கவலைகளை துறந்து விட்டு விதியிடம் நம்மை ஒப்படைப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்; அவ்வாறு செய்து விட்டால், துக்கம் ஒருவரை எப்படித் துன்பத்தில் ஆழ்த்தும்? ||18||
இறைவன் தொடர்ந்தார்: சிலர் பூமியை முட்களாலும் பிற சாதனங்களால் துளைக்கிறார்கள்; ஆனாலும் பூமி மௌனம் நடப்பதை பார்த்தவண்ணம் இருக்கும் சாட்சியாகவே இருக்கிறது; வேறு சிலர் அதன் மீது புனிதப் பொருட்களையும் சந்தனத்தையும் இடுகிறார்கள், அதனால் பூமி தானாகவே பெரிதாக மகிழ்ச்சியும் அடைவதில்லை ||19||
ஓ மன்னா, சிலர் உம்மை நாகரிகமற்றவர் என்று அழைக்கலாம்; மற்றவர்கள் உம்மைப் பண்பானவர் என்று மதிக்கலாம்; சிலர் உன் மீது முட்டாள் என்ற முத்திரையை குத்தலாம்; அதனால் நாம் மன்னிக்கும் உணர்வை நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும் ||20||
தாழ்ந்தவர்களை மன்னிக்கும் போது, அடுத்த கணமே மன்னிப்பவர், அந்தச் சுமையிலிருந்து விடுபட்டு விடுகிறார் என்பது தெரியும் அல்லவா ||21||
மன்னிப்பு ஒரு பெரிய நற்பண்பு ஆகும்; அது எவருடைய இதயத்தில் குடி கொண்டுள்ளதோ, அவர் பிரபஞ்சத்தில் எங்கும் தனக்கு எதிரி எவரும் இல்லை என்பதைக் காண முடியும்; அவருடைய இரண்டாவது பார்வை விதியின் அனுபவத்தின் மீது இருக்கும் ||22||
சமஸ்கிருத சுலோகம்: ‘அசப்ய: சப்யதாம்யாதி க்ஷம யஸ்யவஷேஸ்தித, சப்யோ-அபி- சப்யதாம்யாதிக்ரோத்னோ ய: க்ஷமோஜ்ஜித:’
இதன் அர்த்தம் என்ன என்றால் பண்பாடற்ற மூடர்களிடம் பொறுமை என்ற குணம் இருந்தால் அவன் மற்றவர்களினால் பண்பாளனாக கருதப்படுவான்; ஆனால் மிகச் சிறந்த பண்பாளனாக கருதப்படும் ஒருவனிடம் பொறுமை இல்லை என்றால் அவன் மற்றவர் முன்னிலையில் பண்பாடு அற்றவனாகவே காணப்படுவான்||23||
ஆகவே கோபம் என்பது என்பது அடர்ந்த இருளைப் போன்றது; மன்னிப்பு என்பது தேவர்களின் மாபெரும் மாளிகையைப் போன்றது, இதை முழுமையாக உணர்ந்து கொள்பவர்கள் இந்த உலகியல் வாழ்வைக் எளிதாகக் கடந்து செல்ல முடியும்’ ||24||
மனிதப் பிறவி என்பது பரோபகாரச் செயல்களிலோ அல்லது சமூகப் பணிகளிலோ அதீத ஈடுபாடு காட்டுவதற்கு மட்டுமே எடுக்கப்பட்டது அல்ல, தனது உயர்ந்த நலன் எங்கே உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து கொண்டு இந்த வாழ்நாளிலேயே அதன் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் உள்ளது||25||
அதனால்தான் நான் மரங்களையும் குருவாக கருதுகிறேன்; அவை பூமியின் கருப்பையின் ஒரு பகுதியாகும், இந்த சிறிய உட்பிரிவு அறிவைப் பெறுவதற்கும், அன்னை பூமியின் அங்கமாக இருக்கும் அனைத்தின் சிறந்த பண்புகளை ஏற்றுக் கொள்வதற்குமே ஆகும்||26||
இயற்கையின் செயலற்ற தமஸ் குணம் மரங்களில் மேலோங்கி இருந்தாலும், அவை தங்கள் வாழ்நாள் முழுவதும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டிருந்தாலும், அவற்றின் நாட்கள் அனைத்தும் மற்றவர்களின் நன்மைக்காகவே செலவிடப்படுகின்றன; ஆயினும் அவை தொன்று தொட்டு வணங்கப்பட்டு வந்துள்ளன ||27||
அனைத்து தாவரங்களும், விலங்குகளும் எப்போதும் மகிழ்ச்சியான அமைதியை வெளிப்படுத்துகின்றன, அவை வாழ்வது தோட்டக்காரரின் கருணையை சார்ந்ததாக இருந்தாலும், அவை தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் தொடர்ந்து உதவுகின்றன, மேலும் பூமியில் தங்கள் வாழ் நாட்கள் முடியும் வரை தொடர்ந்து தமது சேவையை செய்து வருகின்றன||28||
மரங்களில் பல தரப்பட்ட பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கின்றன; அல்லது ஒரு சிறிய ஓய்வுக்காக தங்கள் இரவுகளைக் கழிக்கின்றன; மரங்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும், அவை எந்த பறவைகளுக்கும் தீங்கு செய்வதில்லை அல்லது அவற்றை வெளியே அனுப்புவதில்லை ||29||
அது சந்தேகங்கள் அல்லது பயத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதும் இல்லை; வெப்பம், குளிர், மழை மற்றும் பருவங்களின் தாக்குதல்களை அவை தாங்கி கொள்கின்றன; விலங்குகளும், பறவைகளும் தொடர்ந்து அவற்றை உண்டாலும், அவை துக்கத்திற்கோ அல்லது முறையிடுவதற்கோ இடம் கொடுப்பதில்லை||30||
அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற அவற்றின் விருப்பம் எவ்வளவு நேர்மையானது என்று பாருங்கள்; சிலர் அவற்றின் கிளைகளை உடைக்கிறார்கள்; சிலர் அவற்றை வேரோடு பிடுங்குகிறார்கள்; சிலர் அவற்றின் தோலை உரிக்கிறார்கள்; மற்றவர்கள் அவற்றின் பூக்களை எடுத்துச் செல்கிறார்கள்||31||
மற்றவர்கள் அவற்றின் இலைகளை பறித்துக் கொள்கிறார்கள்; சிலர் அவற்றின் பழங்களைப் பறித்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள்; மற்றவர்கள் அவற்றின் பிசினைப்* பயன்படுத்துகிறார்கள்; சிலர் அவற்றின் கிளைகளையும் சிறு கிளைகளையும் நெருப்பு மூட்டப் பயன்படுத்துகிறார்கள்
{*பிசின் (Resin) என்பது மரங்கள் காயமடையும் போது சுரக்கும் ஒரு பிசு பிசுப்பான, இயற்கை திரவமாகும்} ||32||
இவ்வாறு ஒரு மரம் பலவிதமான வலிகளை அனுபவிக்கிறது; ஆனால் அது கலக்கத்திற்கோ அல்லது துன்பத்திற்கோ ஆட்படுவதில்லை; இவ்வாறு அனைவருக்கும் உதவியாகச் செயல்படும்போது, அவற்றின் முழு வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது ||33||
தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் இன்பம் அளிப்பதே மரங்களின் குறிக்கோளாகும்; அத்தகைய பண்புடன் வாழும் மக்களும் பிறரால் போற்றப்படுகின்றனர்; மரங்கள் மடிந்த பிறகும் கூட, அவற்றின் ஒவ்வொரு பாகமும் ஈமச் சடங்குகளுக்கான சிதைகளை அமைக்கப் பயன்படுகின்றன||34||
மரங்கள் வேரோடு வெட்டப்பட்டு, அவற்றின் கட்டைகள் அகற்றப்படும்போது, அவற்றைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்களையும், பிறருக்கு இருப்பிடமாக அமையும் வீடுகளையும், கதவுகளையும் உற்று பார்; மேலும், மனிதர்களின் அன்றாட வாழ்வில் தீ மூட்டுவதற்கும், ஈமச் சடங்குகளுக்கும் அந்த மரக் கட்டைகள் எத்தனை உதவியாக அமைகின்றன என்பதையும் பார்||35||
மரங்கள் தங்கள் வாழ்வுக்காக நிலம், சூரியன் மற்றும் நீரைச் சார்ந்திருக்கின்றன; அவை தீயில் கருகிச் சாம்பலானாலும் கூட, அவற்றின் கிளைகள் மீண்டும் துளிர் விட்டு வளர்கின்றன; மரத்தை எரித்த சாம்பலும் கூட மண்ணை வளப்படுத்தவும், பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுகின்றது ||36||
எப்படி ஒரு மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல்வேறு உயிரினங்களின் நன்மைக்காகப் பயன்படுகிறதோ, அதை போலவேதான் மனித உடலும், அது உயிரோடு இருக்கும் காலம் வரை, பிறரின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் ||37||
பயணத்தால் களைத்துப் போன வழிப்போக்கர்கள், மரங்களின் நிழலில் ஓய்வைப் பெறுகின்றனர்; அதே போலவே, இல்லறத்தார் தங்கள் விருந்தினர்களை உபசரித்து, அவர்களுக்குத் தேவையான ஓய்வையும் நிம்மதியையும் அளிக்க வேண்டும்||38||
கோடைக் காலமாகட்டும் அல்லது குளிர் காலமாகட்டும், மரங்கள் கால நிலையை எதிர்த்து உறுதியாக நிற்கின்றன; தங்கள் அடியிலோ அல்லது அருகிலோ நிற்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அவை இதமளிக்கின்றன; அவை எவருக்கும் தன்னிடம் உள்ள எதையும் தர மறுப்பது இல்லை ||39||
மனிதன் அத்தகைய தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வாழ்விலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்; மரங்களைப் போலவே இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்; விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு ஓய்வும் ஊக்கமும் அளிக்க வேண்டும்; முகத்தைச் சுளிக்காமல், அவர்களை இன்முகத்துடன் உபசரிக்க வேண்டும்||40||
விருந்தினர்களை உபசரிக்கும் குடும்பஸ்தர், விருந்தினர்களின் பசி மற்றும் தாகம் சார்ந்த தேவைகளை—அல்லது வேறு ஏதேனும் தேவைகளை—உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்; தன் சொந்த வலிமையையும் வரம்புகளையும் மனதில் கொண்டு, விருந்தினர்களின் உணவு தேவையையோ அல்லது தாகத்தையோ தணிக்க முயல வேண்டும்||41||
விதி வசத்தால் ஒருவனுக்குச் செல்வமும் செழிப்பும் வந்து சேரும்போது, அவன் கர்வத்தால் தலைக் கனம் கொள்ளக் கூடாது; பூக்களையும் கனிகளையும் சுமந்து நின்றாலும், என்றும் பணிவுடனும் அடக்கத்துடனும் விளங்கும் மரத்தைப் போலவே, மனிதனும் பணிவுடன் திகழ வேண்டும் ||42||
பொதுவாக, கையில் செல்வம் சேர்ந்தவுடன் மனிதன் வீண் பெருமைக்கும் அகங்காரத்திற்கும் ஆட்படுவதைக் காண முடிகிறது; ஆனால், அந்தச் செல்வத்தின் பின்னால் காத்திருக்கும் தவிர்க்க முடியாத எதிர் காலத்தைப் பற்றி அவன் அறியாமலே இருக்கிறான்; அங்கே, நீண்ட வரிசையில் துரதிர்ஷ்டங்களும் துன்பங்களும் அவனுக்காகக் காத்திருக்கின்றன||43||
ஆகவே, செல்வச் செழிப்பால் சூழப்பட்டிருக்கும் வேளையில், மனிதர்கள் அனைவரும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும்; மரங்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் இவையே ஆகும் ||44||
மரங்கள் கனிகளைச் சுமக்கும் போது, அவை தரையை நோக்கிப் பணிவுடன் வளைந்து நிற்கின்றன; இதனால் கனிகளைப் பறிப்பது எளிதாகிறது; யாரேனும் கனிகளைப் பறிக்கும் போது, மரங்கள் அதற்காகச் சிறிதும் வருத்தமோ அல்லது சோர்வோ அடைவதில்லை||45||
அன்னை பூமியின் மற்றொரு முக்கிய அங்கமாக மலைகள் திகழ்கின்றன என்று அந்த துறவி யதுகுல மன்னனுக்கு தொடர்ந்து விளக்கினார்; ‘ அந்த மலைகளிடமிருந்தும் நான் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டேன்; விலை மதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அந்த பாடமாகும்||46||
பல்வேறு வகையான சுரங்கங்கள் எவ்வாறு தோண்டப்படுகின்றன என்பதை யோஜனை செய்து பார்; நிலக்கரி மட்டுமல்லாமல், விலை மதிப்பற்ற கற்களும் இரத்தினங்களும் மிகுந்த முயற்சியின் பின்னரே அங்கிருந்து கண்டெடுக்கப்படுகின்றன; பின்னர் மனிதன் அவற்றைப் பக்குவப்படுத்தி, விற்பனைக்கு ஏற்ற மதிப்புடையவையாக மாற்றுகிறான்; அதன் மூலம் அவன் தனது வாழ்வாதாரத்தையும் வளமாக்கிக் கொள்கிறான்||47||
மரக் கிளைகள் படர்ந்து விரிவடைந்து உள்ளதை போல, மனிதனும் பல நிலைகளில் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு தனக்கு கிடைத்த ஞானத்தை பயன்படுத்தி பொது மக்களுக்கு உதவ வேண்டும்; அவ்வாறு செயல்படும்போது, அவனும் ஒரு ‘இரத்தினம்’ போன்ற சிறந்த மனிதராகப் போற்றப்படுவான் ||48||
மலை மீதுள்ள நீரோடைகள் அனைத்து தடைகளையும் கடந்து அமைதியாக பாய்ந்து செல்வதைப் போல, மனிதனின் பேச்சும் இனிமையாகவும் மகிழ்வூட்டுவதாகவும் இருக்க வேண்டும்; அதைக் கேட்பவர்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டும்||49||
மலைகளில் உள்ள பல்வேறு குகைகள், அங்கு செல்பவர்களுக்கும் விலங்குகளுக்கும் அமைதியான தங்குமிடங்களாக இருப்பது போல, நல்ல பண்புகளைக் கொண்டவர்களும், மேன்மையானவர்களும் தங்கள் இருப்பிடங்களை முனிவர்களின் ஆசிரமங்களைப் போல அமைதியான வீடுகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்||50||
மனிதன் சக மனிதனுக்கு உதவ வேண்டும்; அவனது உரையாடல்கள் சத் சங்கப் பிரசங்கங்களைப் போல உண்மையாக இருக்க வேண்டும்; அப்போதுதான் நல்ல நன்மைகள் விளையும்; இவை அனைத்தையும் நான் மலைகளிலிருந்து கற்றுக் கொண்டேன் ||51||
உலகப் பற்று நிலையற்றது மற்றும் பயனற்றது என்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொள்; அதன் மத்தியில் உள்ள ஒரே சாராம்சம், உயர்வுக்குத் தூண்டுகின்ற சத்தியத்துடனான சத் சங்க உரையாடல்கள் ஆகும்; இதன் மூலம்தான் ஒருவன் பிறப்பு மற்றும் இறப்பின் தொடர் சுழற்சியைக் கடந்து செல்கிறான்||52||
இவ்வளவு பெருமைகளை தன் மீது சுமந்து கொண்டிருக்கும் பூமியை என் குருவாக ஏற்றுக் கொண்டேன்; அதன் இருப்பிடத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பவர்களிடம் இருந்து வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக் கொண்டேன்; அதனால்தான் நான் அந்தப் பாடங்களை நான் உள் வாங்கிக் கொண்டபோது, என்னால் சலனமற்ற அமைதியுடன் அமர முடிந்தது ||53||
உறுதியாக அனைத்தின் மீதான பற்றை துறந்தவர்களே ஆத்ம விடுதலை அடைகிறார்கள்’; இது ஒரு பழமொழி ஆகும்; எனவே ஒருவர் நல்ல குணமான மன்னிக்கும் குணத்தை நிறையவே கொண்டிருந்தாலும், அவர் அனைத்திலும் பற்றற்று இருக்கும் வரை அது எந்தப் பயனையும் அளிக்காது ||54||
ஒருவர் இரக்க குணம் கொண்டவர் என்று தெரிந்தும், புலன் இச்சைகளுக்கு முடிவில்லாமல் அடிமையாக இருந்தால், அது நிச்சயமாகத் துறவியின் அடையாளம் அல்ல; அப்படிப்பட்ட பலவீனமான மனிதர்கள் எப்படி யோகப் பாதையில் முன்னேற முடியும்?||55||
மற்றவர்களிடம் இருப்பவைகளை பார்த்து பொறாமைப்படுவதை விட, தம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தி அடையக் கூடியவர்களே தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்; மேலும் அந்த தகுதியை, ஒருவர் காற்றைத் தனது குருவாக ஏற்றுக் கொள்ளும்போது கற்றுக் கொள்ளலாம்||56||
காற்றின் அங்கமான மூச்சின் உதவியால் வாயுக்கள் உடல் முழுவதும் பரவுகின்றன; அதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; ஓ அரசனே கவனமாகக் கேள்’ என்று அவதூத துறவி பாசத்துடன் கூறினார்||57||
உணவு இல்லாதபோது, உடலும் பிராண வாயுக்களும் பலவீனமடைகின்றன; எனவே, அறுசுவையானவற்றின் மீது நாட்டம் கொண்டு அலையாமல் கிடைத்தவற்றைக் உண்டவாறு உடலை பராமரித்துக் கொள்ள வேண்டும்||58||
இது மிகவும் இனிப்பாக இருக்கிறது , இந்த உணவு சுவையாக இல்லை, இந்த உணவு மோசமாக இருக்கிறது போன்றவைகளே பொதுவாக ஒவ்வொருவரின் உணர்வாக உள்ளது; ஒருவரை விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாக்கும் அத்தகைய உணர்வுகளை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைத்து விட்டு செல்வதே சிறந்தது||59||
எந்த உணவு மெல்ல மெல்ல செரிக்கப்படுகிறதோ, அதன் மூலம் அது உடல் முழுவதற்கும் சக்தியை அளிக்கின்றதோ, அது போலவேதான் ஸ்வாசமும் செயல்படுகிறது; அதன் வேலையை நாள் முழுவதும் அதிக சிரமமின்றி செய்தவாறு தமது கடமையை ஆற்றிக் கொண்டு வருகின்றது||60||
நமது விதிக்கு ஏற்பவே நமது தட்டிலும் நமக்கு எந்த அளவிலான, என்ன உணவு கிடைக்க வேண்டுமோ, அவை கிடைக்கின்றன ; இந்த உண்மையை புரிந்து கொண்டு நமது வாழ்க்கையை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்||61||
பயத்தினாலோ அல்லது தீவிர விருப்பு, வெறுப்பிற்கோ அடிமையாகி, தனக்கு கிடைத்ததை ஒருவன் தள்ளி வைத்து விட்டாலோ அல்லது அவமதித்து விட்டாலோ, இறுதியில் அவன் விரக்தி நிலையையே அடைவான்; அது எதிர் காலத்தில் அவனது செயல் திறனைப் பாதித்து விடும்||62||
மனமும் பேச்சும் செயல்பட முடியாமல், வெறுமையாகி விடும் போது அவன் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த அனுபவங்களும், அறிவும் கூட பயன்படாமல் போகின்றன; அந்த நிலை அவனது வாழ்வியலை பெருமளவு பாதிக்கும்; இது ஒருவரை ஆன்மீக முன்னேற்றத்திலிருந்து பின்னுக்குத் தள்ளி விடும்; ஆழ்மனதில் இருக்கும் குழப்பங்களும், தெளிவின்மையும் நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும் ||63||
அப்படியானால், உணர்வு பூர்வமான பேரின்பத்தை எப்படி உணர முடியும்?; பொதுவாக கிடைக்கும் இன்பங்களைக் கூட அவனால் அனுபவிக்க முடிவதில்லை; ஒருவன் யோகப் பாதையில் தடைகள் இன்றி முன்னேறிச் செல்ல வேண்டும் எனில் அவனுக்கு அத்தியாவசியமான சத்தான உணவு தேவை படுகின்றது||64||
எவர் ஒருவர் அதிக அளவிலான இனிப்பு பண்டங்களையும், உணவுகளையும் அடிக்கடி உண்பார்களோ, நிச்சயமாக அவர்களது உணர்வு பூர்வமான திறன்கள் மிக எளிதில் பாதிக்கப்பட்டு விடும்; அத்தகையவர்களால் தியானத்தில் ஆழமாக ஈடுபட முடியாது ||65||
ஒருவரது நாக்கு என்பது சுவைகளை அறியும் ஒரு கருவி; சுவை வேட்கைக்கு அடிமையாகி, அதைத் தொடர்ந்து திருப்திப்படுத்தி படுத்திக் கொண்டே இருந்தால், அவன் மிக உயர்ந்த நன்மையை அடைவதை இழக்க நேரிடும்; நாக்கின் சுவைக்காக வாழும்போது, மனித வாழ்க்கையின் உண்மையான நோக்கமான ஆத்மா வை உணர்தல் (Self-realization) என்பதை இழக்க நேரிடும்; பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சி அவனுக்கு தொடரும் ||66||
உண்ணும் உணவின் மேல் அதீத பற்றுதல் கொண்டவர்கள் ஒரு சிட்டிகை உப்பு குறைந்திருந்தாலும் அல்லது அதிகமாயிருந்தாலும் அது உண்ணத் தகுதியற்றது என்று ஒதுக்கி விட்டு வேறு உணவு உண்ண வசதி இருந்தால், அந்த உணவை நாடிச் சென்று விடுவார்கள்||67||
சுவையானதாக இருந்தாலும் சரி, சுவை அற்றதாக இருந்தாலும் சரி, எவர் ஒருவர் தனது நாக்கின் ருசி உணர்வை அடக்கிக் கொள்கிறாரோ, அவரை தெய்வத்திற்கு சமானாகவே போற்றலாம் ||68||
அது போலவே, புலன் இச்சைகளை சார்ந்த அனைத்தையும் வெல்ல வேண்டும்; அவற்றுக்கு அடி பணிந்து நமது நேரத்தை வீணடித்துக் கொள்ளக் கூடாது; அவை மீது பற்றின்மையை இயல்பாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் தான் விரும்பும் ஆன்மீக ரீதியிலான துறவு நிலையானதாக இருக்கும் ||69||
வாயு தேவர் (காற்று) கற்பிக்கும் பாடம் என்ன என்றால், ஒருவன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் சரி, விதியின்படி அவன் அனுபவிக்க வேண்டியதை அவன் நிச்சயமாக அடைந்தே தீருவான்; ஆகவே எந்த ஒருவனும் விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளுக்கு அடி பணியாமல் கவனமாக இருக்க வேண்டும்||70||
காற்றின் இயக்கம் மற்றும் உடலில் உள்ள பிராண வாயுக்கள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் வெப்பம் அல்லது குளிர்ச்சியை உணர வைக்கின்றன; வெப்பமோ அல்லது குளிரோ எது வந்தாலும் அவை தற்காலிகமானது என உணர்ந்து, மனதை சம நிலையில் வைத்து இருப்பவர்; எந்த விதத்திலான துன்பத்தினாலும் பாதிக்கப்பட மாட்டார் ||71||
மனிதன் தன் இயல்பில் தூய்மையுடன் வாழ வேண்டும்; மற்றவர்களிடம் அல்லது சூழ்நிலைகளில் குறைகளைக் கண்டுபிடித்து, விமர்சித்து, ஆற்றலை செலவு செய்யக் கூடாது; கோடையோ குளிர் காலமோ எதுவாக இருந்தாலும், இரண்டின் மீதான விருப்பு வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டு வாழாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும் ||72||
தன் வாழ்நாள் முழுவதற்கும் வேத நெறிமுறைகளை ஏற்றுக் கொண்டு நடந்தால், மனிதன் எங்கும் வாழ முடியும்; காற்று எப்படி தன் மீது கலந்து கொண்டு செல்லும் நறுமணத்தாலோ அல்லது துர்நாற்றத்தாலோ தன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லையோ, அதுபோல வேத நெறி முறைகளைக் கடைப் பிடிப்பவன் இன்பம்-துன்பம், புகழ்ச்சி-இகழ்ச்சி என எதன் மூலமாகவும் கலங்குவதில்லை ||73||
காற்று எங்கும் எவ்வித வேறுபாடுமின்றி வீசுகிறது; அது ஒரு குப்பைக் கிடங்காக இருந்தாலும் சரி, அழகிய நந்தவனமாக இருந்தாலும் சரி, அது எதையும் தன்னுடன் ஒட்டிக் கொள்ள விடுவது இல்லை; அது எதையும் வெறுப்பதுமில்லை; மானிடப் பிறவி அரிதானதுதான்; ஆனால், அந்தப் பெருமையே ஒருவனுக்கு கர்வமாக (Ego) மாறி விடக் கூடாது. காற்று எப்படி ஆரவாரமின்றித் தன் கடமையைச் செய்கிறதோ, அதுபோல மனிதனும் அகந்தையின்றி வாழ வேண்டும்||74||
மனிதன் பூத உடலோடு உலகில் வசிக்கும்வரை விதி வசத்தால் நிர்ணயிக்கப்பட்ட புலனிச்சைகளை அனுபவிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை; ஆனால் அவன் துறவி போல இருந்து கொண்டு அவற்றினால் தான் தீண்டப்படாமல் இருந்து வந்தான் எனில் அவனே உண்மையில் அனைத்து புலன் தொடர்ப்புகளையும் துறந்த பட்டற்றவன் ஆகிறான்’ ||75||
அவதூதர் யதுகுல மன்னனுக்குத் தொடர்ந்து போதனைகள் செய்து வந்தார் ‘தன் வாழ்நாள் முழுவதும் புலனிச்சைகளில் மூழ்கி இருந்த மனிதன், திடீர் என எப்படி தன்னை புலன் இச்சைகளில் இருந்து விலக்கி வைத்துக் கொண்டு கொண்டு பட்டற்ற நிலையில் இருக்க முடியும்? இதை நான் விளக்கப் போவதில்லை ||76||
ஒரு விளைவு இன்றி எதிர் விளைவுகள் ஏற்படுவதில்லை; எனவே, ஒருவன் நீதி மற்றும் தர்ம வழியில் இருந்து தான் விலகிச் செல்வதை உணர்ந்தால், அது நிச்சயமாக ஆரம்பத்தில் அதீத தன்னம்பிக்கையினால் விளைந்த அவனது கவனக் குறைவினால் ஏற்பட்டதே ஆகும்||77||
தவறு செய்யும்போது, அதை உணர்ந்து உடனடியாகத் தன்னைத் தானே ஆராய்ந்து திருத்திக் கொள்வது ஒருவனை முழுமையாக்குகிறது; நிலையற்ற உலக இன்பங்களை விட, நிலையான மன அமைதியைத் தரும் துறவு நிலை அல்லது நிதானமான நிலை மேன்மையானது என்ற எண்ணம் வலுக்கும் போது, எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் நிலை அவனுக்கு எளிதாகக் கைகூடும் ||78||
எவற்றினாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் உடலுக்குள் இயங்கும் பிராண வாயுவையும், உடலுக்கு வெளியே வீசும் காற்றின் தன்மைகளையும் அறிந்து கொள்வதின் மூலம் எப்படி ஒருவன் பற்றின்மையுடன் இருப்பது என்பதின் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்; நாக்கின் ருசி மற்றும் இன்பமூட்டும் செயல்கள் தம் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க அந்த பாடத்தையே வழிகாட்டியாக கொள்ள வேண்டும் ||79||
வேத புராண நூல்கள் கூறி உள்ளவை என்ன என்றால் பிராண வாயுவை அதாவது மூச்சுக் காற்றை முறைப்படுத்துவதன் மூலமே ஒருவன் தன் மனதையும் புலன்களையும் வெல்ல முடியும்; மூச்சைக் கவனிப்பவன் வாழ்க்கையைக் கவனிக்கிறான்; ஒருவனது கட்டுப்பாட்டு வந்து விடும் மூச்சு, ஒருவனைப் புலனிச்சைகளுக்கு அடிமையாகாமல் தடுத்து நிறுத்தி தெளிவான பாதையில் செல்ல வழி வகுக்கின்றது||80||
இப்படியாக இரண்டாவது குருவான ‘காற்று’ எத்தகைய சூழ்நிலையிலும் எதாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் தன்மையை நமக்குக் கற்பிக்கிறது; இனி, மூன்றாவது குருவான ‘வானம்’ நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்பிக்கிறது என்பதை விரிவாக விளக்குகிறேன் ||81||
பரம்பொருள் (ஆத்மா), ஜடமான மற்றும் ஜடமற்ற அனைத்துப் பொருட்களிலும் ஊடுருவி உள்ளது; ஆயினும், அதற்கு எந்த விதத்திலான வடிவச் சிதைவுகளும் இல்லை; எந்த காலத்திலும் அவற்றின் தன்மைகளில் எந்த மாற்றமும் கிடையாது ; மேலும், அது என்றும் ஒரே நிலையிலேயே இருந்து வருகின்றது. இந்த தத்துவத்தைத்தான் வானம் நமக்குக் கற்பிக்கிறது ||82||
உயிரினங்கள் எத்தகைய இனத்தைச் சார்ந்தவையாக இருந்தாலும், அவை சிறியனவோ அல்லது பெரியனவோ, எத்தகைய வடிவம் கொண்டவையோ அல்லது எத்தகைய சூழலில் வாழ்பவையோ என்பவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வானம் எங்கும் ஒரே மாதிரியாகவே இருப்பது போலவே, அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உறையும் ஆத்மா (உயிர்) ஒன்றே ஆகும்||83||
உடலுக்குள் சாட்சியாக விளங்கும் ஆத்மா வானது, ஏதேனும் ஒரு செயல்பாடு, செயலற்ற நிலை அல்லது பிற மன எண்ணங்களினால் கட்டுப்படுத்தப்படுவதை போல தோன்றினால், அப்போது, உடலுக்குள் மறைந்துள்ள தூய ஆத்மா போன்று தெரியும் மனத்தின் ஒரு பகுதி தவறாகச் செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்; ‘சத்’ (இருப்பு), ‘சித்’ (அறிவு/உணர்வு), ‘ஆனந்தம்’ (பேரின்பம்) இவையே அந்தத் தூய ஆத்மா விற்குரிய மாறாத இயல்புகளாகும் ||84||
பார்ப்பதற்குப் பல உடல்கள் இருந்தாலும், அனைவருக்குள்ளும் இருப்பது ஒரே பரம்பொருள் அல்லது தூய உணர்வுதான்; அதை மூடியிருக்கும் திரைகள் (மாயைகள்) பலவாகும்; ஆத்மா வை அறிவது என்பது எளிதல்ல; அதற்கு ஆழ்ந்த தியானம் மற்றும் மனக்கட்டுப்பாடு தேவை; சோம்பேறித்தனமான மனம் இதற்குத் தடையாக இருக்கிறது||85||
படைப்பின் பல்வேறு வடிவங்கள் அனைத்திலும், காலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், செயல்களை இயங்குவதற்கும், மற்றும் பல்வேறு குணாதிசயங்களால் பாதிக்கப்படுவதற்கும் பின்னணியில் உள்ள சைதன்ய சக்தியாக ஆத்மாவே விளங்குகிறது; பிரபஞ்சம் இருக்கும் வரை, படைப்பு (Manifestation) என்று வந்து விட்டால், அங்கு வேற்றுமை (Diversity) தவிர்க்க முடியாதது; பிரபஞ்சம் இருக்கும் வரை இருமை எனும் நிலை நீடிக்கும். ||86||
இது ஒரு முடிவில்லாத ஆற்று வெள்ளத்தை போன்றது; எவர் ஒருவர் இதனைப் பற்றி ஆழமாக சிந்தனை செய்து அவற்றை அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லையோ, அவர் நிச்சயமாக உலக ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, இறுதியில் அதனுள்ளேயே மூழ்கித் தவிப்பார் ||87||
இயற்கையின் மூன்று குணங்களான சத்துவம் (தூய்மை), ரஜஸ் (செயல்பாடு) மற்றும் தமஸ் (மந்த நிலை) ஆகியவற்றில் முதன் முதலில் ஒரு சலனத்தை ஏற்படுத்திய மூலசக்தி ‘கால தத்துவம்’* (Time Essence) என்றழைக்கப்படுகிறது; அந்தத் தருணத்தில், இப் படைப்பு முழுவதையும் நுகரவும், உணரவும் மற்றும் அனுபவத்திற்குரியதாக மாற்றிய அந்த முதன்மையான செயல் நிகழ்ந்தது
{*இயற்கையின் முக் குணங்களும் சம நிலையில் இருக்கும்போது அங்கே படைப்பு இருப்பதில்லை; அந்த அமைதியை ஒரு சலனமாக (Vibration) மாற்றி, காலச் சக்கரத்தைச் சுழல வைக்கும் அந்த மூல சக்தியை ‘கால தத்துவம்’ என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன} ||88||
முதலில் மூன்று இயற்கை குணங்களை வெளிக் கொண்டு வந்த மூலம் எது? அனைத்து உயிரினங்களிலும் அந்த மூன்று குணங்களின் சுழற்சியே ஆட்சி செய்கிறது; எனவே, மண் பானை உருவாவதற்கு மண் காரணமாக இருந்தாலும், அதை உருவாக்குவது குயவன் போல, குணங்களின் செயல்பாட்டிற்கு உந்து சக்தியாக இருப்பது ஆத்மா என்று கூறப்படுகிறது||89||
ஒரு பொருள் உருவாவதற்கு முன்பும் அது இல்லை; அழிந்த பின்பும் அது இல்லை; இடைப்பட்ட காலத்தில் மட்டுமே அது தற்காலிக உண்மையாகத் தோன்றுகிறது; பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து உயிர்களும் காலம், செயல் மற்றும் மூன்று குணங்களால் பிணைக்கப்பட்டுள்ளன||90||
ஆகவே அனைத்து உருவங்களும், காலம், செயல் மற்றும் மூன்று இயற்கை குணங்களின் பிரிவுகளே; இவை காலத்தின் (Time) சுழற்சிக்கு உட்பட்டவை என்பதால், எதற்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு என்பதினால் காலம், செயல் மற்றும் மூன்று குணங்களின் தாக்கமும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட, குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே செயல்படும்||91||
ஓ அரசே, மூன்று ஆதி சக்திகளும் தனித் தனியாகப் பிரிந்து செயல்படுபவைகளாக இருக்க முடியுமானால், சாதகன் அந்த நிலையைப் பற்றி மேலும் ஆராய முற்படலாம்; ஆனால் அந்த உண்மையை உணரும்போது அந்த அதிர்வை தாங்கும் சக்தி இந்த பூத உடலுக்கு (Physical body) இருப்பதில்லை; அதனால் அத்தகைய உயர்ந்த ஞானத்தைப் பெறும் போது உடலை துறக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது||92||
படைப்பில் உள்ள அனைத்தும் அழிந்தாலும், உள்ளிருக்கும் ஆத்மா யாரையும் கொல்வதும் இல்லை, யாராலும் கொல்லப்படுவதுமில்லை; அது என்றும் நிலையானது, அழிவற்றது; வானத்தின் கீழே உள்ள எவற்றாலும் தீண்டப்படாமல் இருக்கும் வானத்தைப் போல, ஆத்மாவின் சாரமும் அனைத்து சிதைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் அப்பாற்பட்டு என்றென்றும் நிலைத்திருக்கிறது||93||
ஒருவன் ஆத்மா வுடன் ஒன்றிணைய ஆசைப்பட்டால், ஆத்மா அனைத்திலும் உள்ளது, அனைவருமாக இருக்கிறது; யாருடன் சென்று இணைவது, யாரை ஒதுக்கி வைப்பது? இந்த ஆத்மா வே முழுமை, ஆனால் நதி வெள்ளம் போலப் படைப்பு, பிறப்பு, இறப்பு, செயல்பாடு என்று ஒன்றன் பின் ஒன்றாக வரும் முடிவில்லாத சுழற்சியை எவ்வாறு கடப்பது? ||94||
ஒருவனால் தூய ஆத்மா வுடன் ஒன்றிணைய முடியா விட்டால், அப்போது அப்போது பிடிப்பதன் மேல் விருப்பு (Like) கொள்வதும், பிடிக்காததின் மேல் வெறுப்பு (Dislike) கொள்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது; எல்லாவற்றின் மீதும், எல்லோர் மீதும் விருப்பு வெறுப்பிற்கு ஆட்படுவது தவிர்க்க முடியாதது; வானம் களங்கமற்றது என்பதைப் புரிந்து கொள்பவன் செல்லும் ஆன்மீக முன்னேற்றப் பாதையானது, மந்த புத்தியுள்ளவர்களால் வெறுக்கப்படும் பாதை ஆகும் ||95||
ஒருவன் அழகு என்று ரசிக்கும் உடலும் பஞ்ச பூதங்களால் (நிலம், நீர், நெருப்பு/ஒளி, காற்று, ஆகாயம்) ஆனதே ஆகும்; மேகங்கள் காற்றில் மிதப்பது போல, நாம் உண்ணும் உணவினால் கிடைக்கும் ஆற்றலால் அந்த எண்ணம் சற்று நேரம் நிலைத்திருக்கிறது||96||
முழுமையாகவும், படைப்பு அனைத்திலும், உயிரினங்கள் அனைத்திலும், ‘அ’ முதல் ‘ஔ’ வரை உள்ள ஒவ்வொன்றிலும், வியாபித்திருக்கும் அந்தப் தூய ஆத்மா வானது ஒன்றே ஆகும்; உடல்கள் பல் வேறாகத் தோன்றினாலும், அவை படைப்பின் பன்முகத் தன்மையே அன்றி வேறில்லை; அவற்றுள் உறையும் ஆத்மாவோ, என்றும் இருந்தவாறே மாறாமல் நிலைத்திருக்கிறது||97||
ஏதோ ஒரு உணர்வு சக்தி உடலோடு இணைந்து நடப்பதாகவும், பேசுவதாகவும், அசைவதாகவும் மனதில் தோன்றினாலும் அந்த ஆத்மா அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளது; அது எங்கிருந்தும் வருவதும் இல்லை, செல்வதும் இல்லை; வானத்தைப் போலவே, ஆத்மா அனைத்து இடங்களிலும் நிறைந்து, மாற்றமின்றி, நிலைத்து நிற்கிறது; இதுவே நான் அதிலிருந்து கற்றுக் கொண்ட உண்மையாகும் ||98||
ஒரு காலிக் குடத்தில் இருக்கும் காற்று (வெற்றிடம்), வெளியிலிருக்கும் பிரம்மாண்டமான வானவெளியின் ஒரு பகுதிதான்; ஆனால், அந்த குடத்தை மட்டும் பார்க்கும் ஒருவன், வானம் இந்த குடத்துக்குள் அடங்கி, உள்ளது என்று நினைப்பது எவ்வளவு தவறோ, அது போலவே, ஆத்மா உடலுக்குள் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பதும் தவறு||99||
பரந்த வானம் என்றும் மாறாமல் நிலைத்திருக்கிறது; ஒரு காலிக் குடத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும் அதனுள் இருக்கும் வெற்றிடமும் அதனோடு நகர்ந்து செல்கிறது என்று ஒருவர் தவறாக உணர்ந்தால், வானத்தை நிமிர்ந்து நோக்குவதன் மூலம் அந்தத் தவறைத் திருத்திக் கொள்ள முடியும் ||100||
வானம் எங்கும் நிறைந்திருப்பது போலவே, மாற்றமற்ற அந்த ஆத்மாவும் எங்கும் நிறைந்திருக்கிறது; உடல் தனது அன்றாடச் செயல்கள் அனைத்திலும் ஈடுபட்டிருந்தாலும், அந்த ஆத்மாவோ எவ்வித மாற்றமுமின்றி, அசைவற்றதாக, தூயதாக, எல்லா நிலைகளிலும் எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றாகவே திகழ்கிறது||101||
இதனால்தான் வேதங்கள், தூய ஆத்மாவை மிக உயர்ந்த பெருமைக்குரிய சாரம் என்று போற்றிப் புகழ்கின்றன;அதற்கு இணையாக வேறெதுவும் இல்லை; எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஆத்மா வை அசைக்கவோ, மாற்றவோ யாரால் முடியும் ? ||102||
வானத்தைப் போலவே ஆத்மாவும் அழிவற்றது; அந்த இரண்டையும் அழிக்க மேற் கொள்ளும் எத்தகைய முயற்சியும், அதன் இயல்பின்படியே வீணானதாகவே ஆகும்; அது எப்படி இருக்கும் என்றால் ‘குடத்தை உடைப்பதன் மூலம் வானத்தையும் உடைத்து விட்டோம்’ என்று தவறாகக் கருதுவதைப் போன்றதாகும்; அழிவற்ற அந்த ஆத்மா, என்றும் இருந்தவாறே, எவ்விதச் சிதைவுமின்றி முழுமையாகவே நிலைத்திருக்கும்||103||
நாம் அடிக்கடி காண்பது போலவே, ஒரு மண் குடம் உடைந்து போனால், அதற்காக நாம் பெரிதாகத் துயரப்படுவது இல்லை; அதே போலவே, யாரேனும் ஒருவர் இறக்கும் போதும், நாம் பக்குவத்துடன் இருக்கக் கூடிய கூடிய மன நிலையை வைத்துக் கொள்ள வேண்டும்; உடலுக்குள் உறையும் ஆத்மா விற்கு இறப்பு என்பதே இல்லை; அது என்றும் இருந்தவாறே, பிளவுபடாததாகவும், பிரிக்க முடியாததாகவும், நிலையானதாகவும், தூய்மையானதாகவும் நிலைத்திருக்கும்||104||
ஆகவே, உடலுக்குள் உறையும் ஆத்மாவைப் அடையாளம் காணவும், அதனோடு உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்து வாழவும் மட்டுமே நமக்கு விவேகமும் முயற்சியும் தேவைப்படுகின்றன; அவ்வாறன்றி பூத உடலையே ஆத்மா என்று தவறாகக் கருதிக் கொண்டு, உடலின் நீண்ட ஆயுளுக்காக மட்டுமே ஒருவர் பாடுபட்டால், அவர் நிச்சயமாகத் தோல்வியையே தழுவ நேரிடும் ||105||
உடலுக்குள் உறையும் ஆத்மாவானது, படைத்தல், காத்தல் அல்லது அழித்தல் ஆகிய எவற்றாலும் பாதிக்கப்படுவதில்லை; பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகிய தெய்வங்களாலும் கூட அதை ஏதும் செய்ய இயலாது; அது வானத்தைப் போன்ற ஒரு பரிபூரண நிலையிலானது; அது எக் காலத்திலும் தான் இருந்த நிலையிலேயே மாறாமல் நிலைத்திருக்கிறது ||106||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘யே தீர்த்வா-பரம் க்ஜ்யான்சாகரம் ஞாநௌகயா, ஆகாஷ்-கல்பம்-ஆத்மானம் ப்ரத்யஞ்ச்யாந்த்யா- பேததா:’
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘வாழ்க்கை என்பது ஒரு பெரிய கடல் என்றால், உண்மையான அறிவே அதைத் தாண்டிச் செல்ல உதவும் படகு ஆகும்; ‘அறிவெனும் இந்த சாகரம் எல்லையற்றது; அறிவெனும் படகில் ஏறிப் பயணிப்பதன் மூலமே ஒருவன் இதனைக் கடக்க இயலும். உள்ளே இருக்கும் ஆத்மா (ஆத்மா) என்பது வெற்று ஆகாயத்தைப் போல தூய்மையானது, பரந்து விரிந்தது மற்றும் எவ்வித உலகியல் மாற்றங்களாலும் பாதிக்கப்படாதது என்பதை உணர்வார்கள் ||107||
அந்தத் தூய இரண்டற்ற தன்மையானது, ஒருவரின் நேரடி அனுபவத்தின் மூலம் உணரப்பட வேண்டிய ஒன்றாகும்; அதனால்தான், அரசனே, நான் இந்த வனத்தையே எனக்கு இன்னொரு குருவாக ஏற்றுக் கொண்டேன்; அதன் மூலமே நான் தெளிவான புரிதலைப் பெற்றேன்; அனைத்திற்குள்ளும் ஊடுருவியும், அனைவதாகவும் விளங்கும் அந்த பரம்பொருளோடு ஒருவன் ஒன்றிணையும்போது, எந்த இடத்திலும் எவ்வித அச்சமும் தோன்றுவதில்லை||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்தேழாவது (47) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்தேழாவது (47) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108+4971 = 5079
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் 47 முடிவடைந்தது
அத்தியாயம் 48 தொடர்கின்றது