COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் – 3 : முனிவர்களின் அறிவுரை
அத்தியாயம்-9
காயத்ரி மந்திர ஜப முறை; பக்தன் சுசீலன் முக்தி பெற்ற கதை
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
தெய்வமான ஸ்ரீமத் தத்தர் பிரஹஸ்பதி இந்திரனுக்கு கூறிய அடுத்த கதையைக் கூறலானார் ‘அர்ஜுனா, இந்த மூன்றாவது கதையை, முழு கவனத்துடன் கேள்; இதன் மூலம் நீ தேடும் மன அமைதியை நீயும் அடைவாய்||1||
பிரஹஸ்பதி இந்திரனுக்கு கூறிய அடுத்த கதை இது ‘முற்காலத்தில் வேத சர்மா என்ற ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார்; சாதுரியமான செயல் திறன் மற்றும் நுட்பமான அறிவு கூர்ந்தவரான அவர் கோதாவரி நதிக்கரையில் வசித்து வந்தார்; அவருக்கு ஒரு மகன் பிறந்தான்; அவனது இயல்பின்படியே, சிறந்த நற்பண்புகள் நிறைந்தவனாக திகழ்ந்ததால், அவனுக்கு ‘சுசீலன்’ என்று பெயரிடப்பட்டது’ ||2||
அந்தணர்களுக்குரிய நித்ய தர்ம அனுஷ்டானங்களைச் செய்வதில் சுசீலன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். காயத்ரி மந்திரத்தின் மகிமையைச் மிக்க கவனத்துடன் கேட்டு, அதைத் தன் சிந்தையில் நிறுத்திக் கொண்ட பிறகு அவன் அந்த மந்திரத்தை விதிப்படி ஜபித்து வந்தான்; ஆனாலும் , விதி வசத்தால் ஒருமுறை, ஏழு பேய்கள் அவனது உடலுக்குள் புகுந்து கொண்டன||3||
அந்த ஏழு பேய்களும் ‘பிரம்ம ராக்ஷஸர்கள்’ என்ற பிரிவை சேர்ந்தவை; அவை பல விதங்களில் அந்தச் சிறுவனைத் துன்புறுத்தின, அவனை ஒரு வாய் உணவைக் கூட உண்ண விடாமல் தடுத்து நிறுத்தின; மேலும், அவனுக்கு தொல்லைகளைக் கொடுப்பதற்காக புதிய, புதிய வழிமுறைகளை செயல்படுத்தி வந்தன ||4||
அந்த ஏழு பேய்களில் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் சுசீலனைத் துன்புறுத்துவதற்கு தனித்துவமான வழி முறையைக் கொண்டிருந்தது மட்டும் அல்ல அத்தனை பேய்களும் ஒரே நேரத்தில் வந்து அவனை துன்புறுத்தாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தொல்லை தந்து கொண்டு இருந்ததினால் அவற்றின் பிடிகளில் சிக்கி வேத சர்மாவின் மகனான சுசீலன் தவித்து வந்தான் ||5||
ஒரு பேய் அவனை அழச் செய்யும்; மற்றொன்று அவனைத் தாவிக் குதிக்கச் செய்யும்; மூன்றாவது பேய் அவனை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்க வைக்கும்; நான்காவது பேய் அவன் எங்கு சென்றாலும் அவனுக்கு முன்னால் சென்று நின்று கொண்டு நடனமாடும்; ஐந்தாவது பேயோ அவன் உணவை உண்ட அடுத்த நிமிடத்தில் அவற்றை அவனது வாயில் இருந்து வாந்தி எடுக்க வைத்து விடும் ||6||
அந்த சிறுவனின் உடலுக்குள் புகுந்து கொண்ட பேய்கள், அத்தகைய தொல்லைகளைத் தொடர்ந்து அந்தச் சிறுவனுக்கு கொடுத்து வந்தவண்ணம் இருந்து கொண்டு அவனை அமைதியில் இருக்க விடாமல் செய்தன; ஆகவே அந்த பேய்களை விரட்டுவதற்காகப் பல பரிகாரங்கள் செய்து பார்த்தும் எதுவுமே பலனளிக்கவில்லை; இது சுசீலனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் மேலும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது ||7||
வேத சர்மா வருத்தமுற்று எண்ணினார் ‘எனக்கு உள்ளது ஒரே ஒரு மகன்; அவனோ கொடிய பேய்களால் துன்புறுத்தப்படுகிறான்; அவனது பரிதாபகரமான நிலையைக் காணுகையில் என்ன செய்வது என்பதை அறியாமல் எனது மனதில் பெரும் துயரம் ஏற்படுகிறது; இதென்ன கொடுமை, அவன் இவ்வுலக இன்பங்களையும், மறுவுலக நன்மைகளையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளானே||8||
நான் ஸ்ரீமத் தத்தாத்ரேயரை வழிபடும் பக்தனாக இருந்தும், எனக்கு பிரியமான மகன் இத்தகைய துன்பத்திற்கு ஆளாவதை நான் காண வேண்டிய விதி எதனால் எனக்கு ஏற்பட்டது?’ குரு பிருஹஸ்பதி தேவேந்திரனுக்கு தொடர்ந்து கூறினார் ‘பகுத்தறிவு ஒருவரது எண்ணங்களை எவ்வாறு மறைத்து விடுகிறது என்பதை பாருங்கள்; நன்கு கற்றறிந்த வேத சர்மாவால் கூட உண்மைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலவில்லை ||9||
துயருற்ற அந்தணரான வேத சர்மா, இனி என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றார்; அப்போது தூரத்திலிருந்து திடீரென்று ஒரு துறவி அவரது வீட்டிற்கு வந்து கொண்டிருந்ததைக் கண்டார்; வந்த துறவியின் உடலில் துர்நாற்றம் வீசியது; ஆடைகள் கிழிந்தும் அழுக்காகவும் இருந்தன; தோற்றத்திலோ அவர் ஒரு மூடனைப் போலவே காட்சியளித்தார்; சமுதாயத்தில் உள்ள எவரும் அத்தகைய ஒருவரை, வீட்டிற்குள் விடாமல் துரத்தி அனுப்பி விடுவார்கள்||10||
ஆனால் அவற்றுக்கு மாறாக வேத சர்மா மிகுந்த கருணையுடன் அந்தத் துறவி கேட்ட பிட்ஷையை அவருக்கு அளித்தபோது, அந்த துறவியிடம் ஒரு தெய்வீக ஒளியைக் கண்டார்; அது அவரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது; வேத சர்மா எண்ணினார் ‘நான் கண்டது சூரிய பகவானின் தெய்வீகத் தோற்றமா?; அல்லது நான் ஏமாற்றப்படுகிறேனா, அல்லது ஏதோ மாயையில் உழல்கிறேனா? ||11||
இந்தத் துறவியை நான் ஒரு முறை சோதனை செய்து பார்க்கின்றேன்’ என்று நினைத்தவாறு அவரது அருகில் செல்ல வேத சர்மா நினைத்த அடுத்த கணமே, அந்தத் துறவி முழு வேகத்தில் ஓடத் தொடங்கினார்; வேத சர்மாவும் அவரைத் துரத்திக் கொண்டு அவர் பின்னால் ஓடினார்; அந்தத் துறவி வேத சர்மா கையில் சிக்காமல் வேகமாக ஓடினார் ||12||
விரைவிலேயே அந்த இருவரும் ஒரு அடர்ந்த காட்டிற்குள் புகுந்து விட்டார்கள்; ஆனாலும் தனது நம்பிக்கையை இழக்காத வேத சர்மா அவரைத் தொடர்ந்து துரத்திச் சென்றார்; அதைக் கண்ட துறவி பூமியில் இருந்து கற்களைப் பொறுக்கி எடுத்து வேத சர்மா மீது வீசத் தொடங்கி விட்டு, அவரை நோக்கிக் கத்தினார் ‘இங்கிருந்து உடனே ஓடி விடு; என்னை துரத்திக் கொண்டு வருவதை நிறுத்து ||13||
துறவி தன் மீது வீசி எறிந்த சிறு கற்கள், பெரிய கற்கள் மற்றும் மரக் குச்சிகள் என எதையும் பொருட்படுத்தாமல், அந்த வேதனைகள் அனைத்தையும் மௌனமாகத் தாங்கிக் கொண்ட வேத சர்மா அந்த துறவியின் அருகில் சென்று அந்தத் துறவியின் பாதங்களைப் இறுக பற்றிக் கொண்டு கேட்டார் ‘ஓ சத்திய சொரூபியே, என்னைக் காத்தருளும்; நான் உம்மிடம் அடைக்கலம் கேட்கின்றேன்||14||
அதற்கு பதிலளித்த அந்தத் துறவி, “நான் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவன்; தீண்டத்தகாதவன்; அனைவராலும்வெளிப்புற க் கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுபவன்; ஆனால் நீயோ, நற்பெயரும் மதிப்பும் கொண்ட ஒரு சிறந்த அந்தணன்’ என்று கூறினார்; ஆனால் அவர் யார் என்பதை புரிந்து கொண்டு விட்ட வேத சர்மா ‘ஸ்வாமி , நீங்களே எங்களை அனைவரையும் விட மேலானவர்; இந்த மண்ணில் மனித வடிவில் அவதரித்திருக்கும் தெய்வமே நீங்கள் என்று பதிலளித்தார் ||15||
வேத சர்மா தன்னைப் போற்றி புகழ்வதைக் கேட்ட அந்த துறவி மெளனமாக புன்னகைத்தார்; அடுத்த வினாடி அவர் முன் ஸ்ரீமத் தத்த தெய்வமாக தனது சுய ரூபத்தில் காட்சி அளித்தார்; அந்த தெய்வீகக் காட்சியைக் கண்டு பரவசமான வேத சர்மா ‘இதோடு என் பாவங்கள் அனைத்தும் நீங்கி விட்டன, என் துயரங்கள் மறைந்து விட்டன, நான் உம்மை நேரில் தரிசிக்கும் பெரும் பேறு பெற்றேன்’ என்று பகுதி பரவசத்துடன் பெரும் கூச்சலிட்டுக் கூறினார் ||16||
அதன் பின்னர் ‘ஸ்வாமி எனக்கு உள்ள ஒரே மகனை பேய்கள் பிடித்து ஆட்டுவிக்கின்றன; தயவு செய்து அவனை அந்த துன்பத்தில் இருந்து விடுதலை செய்து அருள் புரிய வேண்டும் ‘ என்று வேண்டிக் கொண்டான்; அதைக் கேட்ட துறவி உருவில் வந்திருந்த ஸ்ரீமத் தத்த பகவான் புன்னகையுடன் கூறினார் “நான் உனக்கு ஏழு சிறப்பு மந்திரங்களை அருளுகிறேன்’ ||17||
அந்த மந்திரங்களை முறைப்படி ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும், உன் மகனின் உடலிலிருந்து ஒவ்வொரு பேயாக வெளியேறி விடும்; அந்தப் பேய்கள் அனைத்தும் அவற்றின் வலிமைகளை இழந்து , இனி மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க இயலாத நிலையை அடைந்து விடும்; அதே நேரத்தில் உன் மகனோ, அந்தப் பேய்களின் ஆதிக்கம் அனைத்திலிருந்தும் முழுமையாக விடுதலை அடைந்து விடுவான் ||18||
சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள வேத மந்திரங்களை ஒவ்வொரு முறையும் ஸ்தோத்திரம் செய்யும்போது, எப்படி மனதிலுள்ள களங்கங்கள் ஒவ்வொன்றாகக் கழுவப்பட்டு, பாவமற்ற தூய்மை நிலையை அடைந்து விடுமோ, அதே போலவே இங்கும், ஆத்மா வை மூடியிருக்கும் மாயத் திரை படிப்படியாக விலகி விடும் ||19||
அந்தணனே, எனது வார்த்தைகளை சந்தேகத்துடன் பார்க்காதே; ஒவ்வொரு மந்திரமும் ஒரு குறிப்பிட்ட பேயை அவனது உடலிலிருந்து வெளியேற்றி விடும்; அந்தப் பேய்கள் ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை, ஒன்றுக்கொன்று முரண்பட்ட இயல்புடையவை; அதனால்தான் அவை அனைத்தையும் விரட்டி அடிக்க ஏழு மந்திரங்கள் தேவைப்படுகின்றன; இல்லையெனில், ஒரே ஒரு மந்திரமே போதுமானதாக இருந்திருக்கும்||20||
இவ்வாறு, மந்திரங்களை எவ்வாறு வரிசைக் கிரமமாக உச்சரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழி முறைகளைத் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் வேத சர்மாவுக்கு விளக்கத் தொடங்கினார்; அதன்பின் அவர் வேத சர்மாவுக்கு அருள் பாலித்து விட்டு, மறைந்து போனார்; வேத சர்மாவும் ஆழ்ந்த மரியாதையுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரை வணங்கி துதித்த பின்னர் ஆழ்ந்த அமைதியோடு அவரது இல்லத்திற்கு திரும்பிச் சென்றார் ||21||
வேத சர்மாவும் தன்னை மிகவும் பாக்கியசாலியாகவும் அருள் பெற்றவனாகவும் கருதிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்; அவருக்கு ஸ்ரீமத் தத்தர் வழிகாட்டப்பட்டபடியே நீராடிய பின்னர் அவர் நியாச (Nyasa)* எனும் சடங்கையும் தியானத்தையும் மேற்கொண்டார்; அதன் பிறகு, அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடியே, அந்தப் பிணி நீக்கும் சடங்கைத் தொடங்கினார்
{*‘நியாச’ (Nyasa) என்பது இந்து தந்திர மற்றும் யோக மரபுகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான ஆன்மீகச் சடங்காகும்; அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது, உடலின் குறிப்பிட்ட பாகங்களில் கைகளால் தொட்டு, அந்த மந்திர சக்தியை அல்லது தெய்வத்தின் இருப்பை உடலுக்குள் நிலை நிறுத்திக் கொள்வதையே நியாசம் என்பார்கள்} ||22||
மந்திரங்களை உச்சரித்த பிறகு, ஒவ்வொரு பேயாக தன் மகனின் உடலை விட்டு விலகிச் சென்றதை அவர் கண்டார்; சுசீலனிடம் முன்பு தென்பட்ட விசித்திரமான செய்கைகள் எதுவும் இப்போது காணப்படவில்லை. அந்த மந்திரங்களின் வலிமையால் மட்டுமே, அந்தச் சிறுவனும் தன் உடல் பாரம் நீங்கி, ஓரளவுக்கு நிம்மதி அடைந்தான்||23||
மேற் கூறிய அதே முறையில், அந்தணர் வேதா சர்மா, அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடியே தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மந்திரங்களை உச்சரித்து வந்தார்; மந்திரங்களை உச்சரிக்கும் முறையில் அவர் மிகுந்த கவனத்துடனும் விடா முயற்சியுடன் செயல்பட்டதால், அந்த ஏழு ஆவிகளையும் கட்டுப்படுத்துவதில் முழுமையான வெற்றி பெற்றார்||24||
முன்னர் ஒவ்வொரு பேயும் அந்தச் சிறுவனின் உடலைத் துன்புறுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாண்டு வந்தது; இப்போது அந்தச் செயல்கள் எதையும் அந்த பேய்களினால் செய்ய முடியவில்லை என்பது அவனிடம் தென்பட்டது; இவ்வாறாக வரிசைக் கிரமமாக அந்த ஏழு பேய்களும் அவனை விட்டு விலகிச் சென்றன, அந்தணரின் மகனான சுசீலன், அந்தப் பேய்களின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டான்||25||
அதன்பிறகு சுசீலன், அந்த மந்திரங்களின் பயன்பாட்டு முறைகளையும், பேய் பிணி நீக்கம் சார்ந்த பிற சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான்; சாஸ்திர நூல்களுடன் ஒப்பிடுகையில் இவ்வகையை சேர்ந்த நூல்கள் வேத நூல்களை போன்ற தூய்மையானவை அல்ல என்று கருதப்பட்டாலும், சுசீலன் அனுபவித்த அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பலருக்கும் அவன் ஒரு உறு துணையானவனாக திகழ்ந்தான்||26||
‘ஆகவே, மந்திரங்களையும் அவற்றை செயல்படுத்தும் முறைகளையும் போதிக்கும் சாஸ்திரங்கள் கூடச் சமூகத்திற்கு பெரிதும் பயன் படுகின்றன; மூன்றாவது நிகழ்வு நமக்குத் தெளிவாக உணர்த்தும் பாடம் இதுவே ஆகும்; குரு பிருகஸ்பதி தொடர்ந்து கூறினார் ‘இப்போது நான்காவது நிகழ்வைக் கேள், இந்திரா; அதைக் கேட்டதும் உன் மனதில் உள்ள அனைத்து ஐயங்கள் நீங்கி விடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்||27|
சஹ்யாத்ரி மலைக்கு அருகில் மாதாபூர் என்ற ஊர் அமைந்திருந்தது; அங்கே விஷ்ணு தத்த சர்மா என்ற பெயருடைய ஓர் அந்தணர் வாழ்ந்து வந்தார்; அவர் தூய ஒழுக்கம் கொண்டவராகவும், இல்லற தர்மத்தை முறையாகப் பின்பற்றும் கர்ம யோக* நெறியில் வல்லவராகவும் திகழ்ந்தார்.
{*கர்ம யோகம் என்பது பலனை எதிர்பார்க்காமல், தன்னலமற்ற சேவையாக தன் கடமைகளைச் செய்வதன் மூலம் ஆன்மீக உயர்வு பெறும் ‘செயல் வழி’ யோகமாகும்; இந்த நெறி, மனதைத் தூய்மைப்படுத்தி, அகங்காரத்தை நீக்கி, இறை உணர்வை அடைய உதவுகிறது} ||28||
அவருடைய மனைவியும் நற்பண்புகளில் அவருக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர்; அவள் எப்போதும் தன் கணவனுக்கு உறுதுணையாக இருந்து உதவி வந்தாள்; அவள் தன் கணவரை எந்த நிலையிலும் எதிர்த்துப் பேசியதோ அல்லது அவருடன் சண்டையிட்டதோ இல்லை; மாறாக, மிகுந்த விவேகத்துடனும் கடமையுணர்வுடனும் அவருக்குப் பணிவிடை செய்து வந்தாள்||29||
அந்த அந்தணர் ஸ்ரீமத் தத்தாத்ரேயரை முழு மனதுடன் பூஜித்து வந்தவர்; இவர் மீமாம்சை நூல்களையும், கர்ம யோகத்தையும் நன்கு கற்றறிந்திருந்தார்; பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளபடியே, முழுமையான பகுத்தறிவுடன், பகலின் தகுந்த நேரங்களில் இவர் அக்னி ஹோமத்தை (தீ வேள்வியை) நிகழ்த்தி வந்தார் ||30||
அவரது முற்றத்தில், நுழை வாயிலுக்கு அருகிலேயே ஒரு அரச மரம் இருந்தது; அந்த மரத்தில் பிரம்ம ராக்ஷஸன் எனும் பிரிவை சேர்ந்த ஒரு பூதம் வசித்து வந்தது; அந்த மரத்தின் அடியில் தினமும் விஷ்ணு சர்மா அனைத்து உயிரினங்களும் உண்ணுவதற்கு படைக்கும் உணவை அந்தப் பூதம் உண்டு வந்தது; அதை வைச்வதேவ* சடங்கு என்பார்கள்; அதை படைத்த பின்னரே வீட்டில் உணவு உண்ணப்படுவது வழக்கம் ஆகும்
{*வைச்வதேவ சடங்கு என்பது வீட்டில் தினமும் சமைத்த பின்னர் அந்த உணவை மரத்தடியில் சிறிதளவு வைத்து விட்டு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தேவர்களிடம் வேண்டிக் கொள்ளும் ஒரு சடங்கு அல்லது பூஜை ஆகும்} ||31||
வைச்வதேவ சடங்கு முடிந்த பிறகு, அனைத்து உயிரினங்களின் இயல்பையும் உணர்ந்து, அவற்றுக்கும் உணவுப் படையல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நியதியாகும்; அந்த சடங்கை முறைப்படி செய்தவர்களை அந்த பூதம் துன்புறுத்தியதே இல்லை||32||
ஆகவே, விஷ்ணு தத்தர் வீட்டில் எப்போது உணவு சமைத்தாலும் உணவை அதில் சிறிதளவு உணவுப் படையல்களை தேவர்களுக்கு சமர்ப்பித்து விட்டு செல்வார்; அதை கவனித்த பூதம் விஷ்ணு தத்தர் உணவை வைத்து விட்டு சென்றதும் அந்த பூதம் அவற்றை தவறாமல் உண்டு வந்தது; தெய்வத்திற்கு முதலில் படைக்கப்பட்ட அந்தப் புனித உணவை உண்டதன் விளைவாக, அந்தப் பூதத்தின் மனம் இளகிய மனதுடன் இருந்தது; தெய்வத்திற்கு படைக்கப்பட்ட இத்தகைய தெய்வீக மற்றும் புனிதமான உணவை உட்கொள்வதால், ஒருவருக்கு எத்தகைய நன்மைகள் தான் கிட்டாது?||33||
ஒரு நாள், வழக்கம் போலவே விஷ்ணு தத்தர், ஒரு அந்தணருக்கு உரிய கடமையாகவும் தனது அன்றாடப் பழக்கமாகவும் கொண்டிருந்த பழக்கத்திற்கேற்ப உணவுப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அந்த அரச மரத்தடிக்கு வந்தார்; அவர் சென்றதும் எப்போதும் போல அந்தப் பூதம் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து, அவர் படைத்த உணவை உண்ணத் தொடங்கியது ||34||
ஆனால் அன்றைய தினத்தன்று, விஷ்ணு தத்தர் அந்தப் பூதத்தை அதன் உண்மையான, பயங்கரமான உருவத்தில் நேரில் காண நேர்ந்தது; அதன் விளைவாக, அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் அச்சத்தினால் நடுங்கத் தொடங்கினார்; ‘ஐயோ, இதென்ன கோலம், என் வாழ்வில் இந்நாள்வரை எதிர்பாராமல் வந்துள்ள துரதிர்ஷ்டமே, என்று எண்ணி மனம் கலங்கினார்||35||
அந்தப் பூதம் மிக அதிக உயரத்துடன் காணப்பட்டது; அதன் முகமும் காண்பவர் மனதில் அச்சத்தை ஊட்டுவதாக அமைந்திருந்தது; பசியுடன் வரும் சிங்கங்களின் கூட்டத்தை, சாதுவான பசுக்களின் கூட்டம் நேரில் பார்த்து விட்டால் எப்படி அஞ்சி துடிக்குமோ, அத்தகைய அச்சத்தையே அந்தப் அந்தணரும் அடைந்தார்||36||
மனம் கலங்கி, குழப்பம் மற்றும் திகைப்பு அடைந்த அந்தப் பிராமணர் இவ்வாறு சிந்தித்தார் ‘எனக்கு அச்சத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதத்தில் இப்படி ஒரு பயங்கரமான உருவத்தில் பூதம் வந்து நிற்கின்றதே, தெய்வமே, என் மீது உனக்கு என்ன கோபம் ஏற்பட்டுள்ளது?; என் நற்பெயரைக் காத்து, எனக்குத் துணையாக நீ வர மாட்டாயா?||37||
இதற்கிடையில், தனது உண்மையான உருவத்தை அந்த அந்தணர் பார்த்து விட்டதினால் மிகுந்த அச்சத்தில் இருப்பதை அந்தப் பூதமும் உணர்ந்து கொண்டது; எனவே, தன் மனதிற்குள் அமைதியை வரவழைத்துக் கொண்டு, மிகவும் மென்மையான குரலில் அந்தப் பூதம் இவ்வாறு கூறியது ‘அந்தணனே, பயப்படாதே, நான் உனக்கு ஒரு வரத்தை அளிக்க விரும்புகிறேன்||38||
சாஸ்திரங்களின் விதிப்படி அனைத்து விதமான உயிரினங்களுக்கும் தவறாமல் ஏதேனும் சிறிதளவு உணவை இந்நாள்வரை அளித்து வந்துள்ளீர்கள்; நானும் நெடுங்காலமாக அந்த படையல்களை தவறாமல் ஏற்று வந்துள்ளேன்; ஆனால் முதலில் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பின்னர், அந்தப் தெய்வீக மற்றும் புனிதமான மீதத்தை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன்; இத்தனை நாட்களும் அவற்றை நான் உண்டு வந்ததினால் எனக்குள் அமைதி ஏற்பட்டு உள்ளது; ஆகவே உங்களுக்கு தேவையான, என்னால் ஆன வரத்தை தந்து,அந்த வரத்தின் மூலம் நான் உங்களுக்கு என் கடனைத் தீர்க்க விரும்புகிறேன்’ என்றது ||39||
‘பூதம் தன்னிடம் உரைத்த அந்த வார்த்தைகளைக் கேட்டதும், தாம் செய்த புண்ணியங்கள் பலனைத் தரும் என்பதாக நம்பிய அந்த அந்தணன் இன்ப அதிர்ச்சி அடைந்து ஸ்ரீமத் தத்தாத்திரேயரை போற்றி புகழத் தொடங்கினான் ||40|| ‘
இந்த உலகில் என்னென்ன அதிசயங்கள் நடைபெறுகின்றன, ஓ ஸ்ரீமத் தத்த தேவா, நான் எதைக் காண வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?; எனக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள், ஸ்ரீமத் தத்த தேவா, தயவு செய்து சொல்லுங்கள்’ ||41||
நான் உங்களுக்கு தவறாமலும், என்னால் முடிந்த அனைத்துத் தூய்மையோடும், சேவை செய்து வந்துள்ளேன்; ஒரு குருவாக என் தர்மத்திற்கு ஏற்ற அனைத்துச் தர்ம செயல்களையும் செய்தவாறு வந்துள்ளேன்; ஆனால் அதெல்லாம் பேய்கள் மற்றும் பூதங்கள் போன்ற உயிரினங்களுக்கு கூட மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருக்குமா?||42||
உங்கள் பெயரைக் கூறினாலே பேய்களும் பூதங்களும் அலறிக் கொண்டு ஓடி விடும் என்பார்கள்; ஆனால் இங்கே என்னை ஆச்சர்யப்படுத்துவது என்ன என்றால், எந்த பூதங்கள் உங்களை நினைத்த மாத்திரத்திலேயே ஓடி விடுமோ, அவற்றுடன் நான் பார்க்கவும் கேட்கவும் நீங்கள் அனுமதித்துள்ளது நிலை ஆகும்’ ||43||
இவ்வாறு வேத சர்மா நினைத்துக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டு விட்ட பூதம் அந்த அந்தணருக்கு பதிலளித்தது ‘ஓ தூய பிராமணரே, நான் சொல்வதைக் கேளுங்கள்; எதற்காக இவ்வளவு பயந்து திகைத்து நிற்கிறாய்? நீங்கள் உண்மையிலேயே விவேகமும் நிதானமும் கொண்டவனாக இருந்தால், தேவையற்ற உங்களது பயத்தை உதறித் தள்ளி விட்டு நிம்மதியாக நான் கூறுவதைக் கேட்பீராக||44||
உங்கள் மனதின் உள்ள அனைத்து சந்தேகங்களையும், அச்ச உணர்வுகளையும் அகற்றி வைத்து விட்டு, நான் உங்களுக்கு அளிக்க விரும்பும் வரத்தை ஏற்றுக்கொள்; அதை விடுத்து வீணான அனுமானங்களுக்கோ, கற்பனைகளுக்கோ அடி பணியாதீர்கள்; நான் இதை மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறுகின்றேன் என்பதை மட்டும் உறுதியாக நம்பினால் போதுமானது ||45||
அந்த பிராமணன் பூதத்தின் குரலை மீண்டும் கேட்டு, தனக்குள் சிந்திக்கத் தொடங்கினான் ‘ நான் இந்த பூதத்தை நம்பி எனக்கு சந்ததி வேண்டும் என்றோ மகன் வேண்டும் என்றோ கேட்டால் நான் இன்னொரு ஏழை முட்டாளைப் போன்றவனாகத்தான் இருக்க முடியும்||46||
நான் வாரிசுகளுக்குப் பதிலாகச் செல்வத்தை தருமாறு கேட்டால், சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாத நான், எனக்கே மேலும் பல தொல்லைகளைத்தான் வரவழைத்துக் கொள்வேன்; ஆகவே ஓ மனமே, இந்தத் தாராள குணம் கொண்ட பூதத்திடம் நான் எதைக் கேட்பது என என்னால் தெளிவாக எதையுமே யோஜனை செய்ய முடியவில்லையே ||47||
இவ்வுலகில் உள்ள அனைத்தும் காலத்தின் வரம்பிற்கு உட்பட்டவையே என்பதினால், அவற்றால் எனக்கு எவ்விதப் பயனும் கிடைக்கப் போவது இல்லை; அதே போல, மேலுலகங்களின் நிலைதான் என்ன? அவையும் நிலையற்றவை என்பது நன்கு தெரிந்ததுதான்; அப்படியென்றால், நான் பேரானந்தத்தை தரும் நிர்வாண நிலையை தருமாறு கேட்கலாமா?||48||
இவ்வாறு எண்ணிக் கொண்டே இருந்த அந்த அந்தணர் மீண்டும், மீண்டும் குழப்பமடைந்தார்; எனவே அவர் அந்தப் பூதத்திடம் சிறிது அவகாசம் கேட்டு விட்டு, அவர் தன் மனைவியிடம் கலந்தாலோசிக்க எண்ணி அவசரமாகத் தன் இல்லத்திற்கு விரைந்தார்; ஏனெனில், அவரது மனம் இன்னும் அச்சம், ஐயம் மற்றும் குழப்பங்களிலிருந்து விடுபடவில்லை; தனது இல்லத்திற்கு சென்றவர் நடந்த அனைத்தையும் அவளிடம் விரிவாக எடுத்துரைத்தார் ||49||
அதற்கு அவரது மனைவி இவ்வாறு பதிலளித்தாள், என் உயிர் நாதா, இவ்வுலகிலோ அல்லது மறுவுலகிலோ, காலத்தால் வரையறுக்கப்பட்ட (அழிந்து போகக் கூடிய) எதையுமே அந்த பூத்திடம் கேட்காதீர்கள். அதற்கு மாறாக, ஸ்ரீமத் தத்த பிரபுவையே நேரில் தரிசிக்கவும், சந்திக்கவும், அவருடன் உரையாடவும், அவரது திருவருளைப் பெறவும் ஏதேனும் ஒரு வகையில் அவன் உங்களுக்கு உதவ முடியுமா என்று கேளுங்கள்||50||
ஒருமுறை நீங்கள் அந்த தெய்வத்தை நேரில் தரிசித்து விட்டால், அது எந்த உலகத்தைச் சார்ந்ததாக இருப்பினும், அதுவே வாழ்க்கையில் அடையக் கூடிய மிகச் சிறந்த செல்வத்தைப் பெற்றதற்குச் சமமாகும். எனவே இனியும் தயங்கிக் கொண்டிருக்காதீர்கள்; யோகியர் பல ஆண்டுகள் தவம் இருந்து எவரை அடைய முயல்கிறார்களோ, அந்த தெய்வத்தையே சந்திக்க அது உதவ வேண்டும் என்பதை வரமாகக் கேளுங்கள்||51||
ஸ்ரீமத் தத்த தேவரின் அருள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று தெரிந்த அடுத்த கணமே, மற்ற தெய்வங்கள் அனைவரும் தாமாகவே முன் வந்து உங்களுக்குப் பல வரங்களை அளித்து ஆசீர்வதிப்பார்கள்; இவ்வுலகச் செல்வத்தைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள்; இவ்வளவு தெளிவான உண்மை தெரிந்திருக்கையில், ஏன் இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள்?||52||
தன் அன்பு மனைவியின் அந்த தெளிவான பதிலை கேட்ட அந்த அந்தணர் பெரிதும் மகிழ்ந்தார்; அவளைத் தன் துணையாகப் பெற்றதற்காகத் தாம் பெரும் பாக்கியசாலி எனக் கருதினார்; அவளிடம் கூறினார் ‘அன்பு மனைவியே நீ உண்மையாகவே ஞானம் மிக்கவள்; ஏனெனில் அந்த பரமாத்மாவின் திருவடிகளைத் தரிசிப்பதின் மூலமே நமக்குத் தேவையான நல்ல வாழ்வு அமையும் என்று கூறினார் ||53||
இவ்வாறு கணவன்-மனைவி இருவரும் ஒரு மனதாக ஒரு முடிவிற்கு வந்த பிறகு, அந்த அந்தணர் மீண்டும் அந்த அரச மரத்தருகே நின்றிருந்த பூதத்திடம் சென்றார்; அதனிடம் ‘ஸ்ரீமத் தத்த பிரபுவை நாங்கள் தரிசிக்க நீ அருள் செய்வாயா?; அந்த வரத்தை நீ எனக்கு அளிப்பாயாக; ஓ பூதமே, அந்த வரத்தைப் பெறவே நான் உளமார விரும்புகிறேன்’ என்று கூறினார் ||54||
அதற்கு அந்தப் பூதம் இவ்வாறு பதிலளித்தது ‘அவரது திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே, எங்கள் மனம் அச்சத்தால் நடுங்கி விடும்; அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டு விடுவோம்; இதுவே யதார்த்தமான உண்மை நிலை ; ஆயினும் ||55||
இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறீர்கள்; அந்த உதவிக்கு என்னால் ஏதேனும் ஒரு வகையில் கைமாறு செய்ய முடியுமென்றால், நான் அதைச் செய்தே தீர வேண்டும்; இல்லையேல் எனக்குப் பெரும் பாவம் வந்து சேரும். இதுவே எனது உறுதியான எண்ணம் ஆகும்; ஓ விஷ்ணு தத்தரே ||56||
உங்கள் ஐயங்களை நீக்கிக் கொள்ளுங்கள்; நீங்கள் ஸ்ரீமத் தத்தரை நேரில் தரிசிக்க நான் முழு முயற்சி எடுக்கிறேன்; ஆனால், நீங்கள் அதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். நான் தூரத்தில் இருந்தே உங்களுக்கு சுட்டிக் காட்டும் வேளையில், நீங்கள் விரைந்து சென்று அவருடைய திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் ||57||
அவர் பல வடிவங்களையும், பெயர்களையும் தாங்கி கொண்டு உலா வருவார் என்று தேவர்கள் கூறுவார்கள்; தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் கூட அவரை அவருடைய உண்மையான வடிவில் தரிசிப்பது கடினம் என்பதை நீ நன்கு அறிவாய்; அவர் யோக மார்க்கத்தின் அதிபதி; பணிவு மற்றும் பக்தியின் மூலமே அவரை அடைய முடியும்; இந்த ஜென்மத்திலேயே அவரைத் தரிசிக்க வேண்டும் என்று நீ உறுதியாகத் தீர்மானித்திருப்பது மிகவும் சிறந்தது||58|| ‘
நாம் அவருடைய தரிசனத்தைப் பெற்றால் நம் இனம் எதுவாக இருப்பினும், நம் வாழ்வும் பிறவியும் நிச்சயமாகப் பயனுள்ளவையாகி விடும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது; மாறாக நம் வம்சாவளியினர் மேன்மை அடைவர்; ஒரு மனிதனாகிய உனக்கு , நீ தேடி அலையும் நிர்வாண நிலை (மோட்ஷம்) கிடைக்கும் ||59||
அவ்வாறு ஆறுதல் அளிக்கும் சொற்களைக் கூறிய பின்னர், தான் அளித்த வரத்தை உறுதிப்படுத்திய பிறகு, அந்தப் பூதம் திடீரென்று மறைந்து விட்டது; விஷ்ணு தத்தன் மகிழ்ச்சியான வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்ந்தார்; பின்னர் அவர் தன் மனைவியுடன் வீடு திரும்பினார் ||60||
அதன் பிறகு ஒரு முறை, பல விதமான மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் ஒரு மதுக் கூடத்தில், ஸ்ரீமத் தத்தாத்ரேயர்எழுந்தருளியிருப்பதைச் சில பக்தர்கள் மூலம் அந்த பூதம் தெரிந்து கொண்டது; உடனே அந்த அந்தணருக்குத் தகவல் தெரிவிக்க அது தீர்மானித்தது||61||
விரைந்து சென்று விஷ்ணு தத்தனை பார்த்த பூதம் அவரிடம் கூறியது ‘விஷ்ணு தத்தா விரைந்து அந்த மதுக் கூடத்திற்குச் செல்; அங்கே சென்று மாறு வேடத்தில் உள்ள அந்த தெய்வத்தின் திவ்யத் திருவடிகளைப் பற்றிக்கொள்; சற்றும் தயங்காதே; உன் கண்களை இங்குமங்கும் அலைபாய விடாதே; ஏனெனில், ஒரே குறிக்கோளுடன் கூடிய மன ஒருமையால் மட்டுமே அவரை அடைய முடியும் ||62||
ஒரு மதுக் கூடத்தில் இறைவனுக்கு என்ன வேலை?; அல்லது அங்கே அமர்ந்து உளறிக் கொண்டிருக்கும் அந்த மதுப் பிரியர்களுக்கு மத்தியில் அவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்றெல்லாம் சந்தேகம் கொண்டு தயங்காதே; நீ கற்றறிந்த அனைத்தையும் மறந்து விடு; உறுதியுடன் விரைந்து சென்று அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு, அவர் மூலம் பேரருளைப் பெறுவாயாக||63||
விஷ்ணு தத்தரும் அந்தப் பூதத்தின் சொற்களை முழுமையாக நம்பி, விரைந்து அந்த மதுக் கூடத்திற்குச் சென்றார். ஆனால் அங்கேயே போதையின் மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த ஒருவரைத்தான் அவரால் காண முடிந்தது; மேலும் அவருடைய உடலில் இருந்து ஒரு துர்நாற்றம் வீசியது; அவரது உடலை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன; மனம் சோர்ந்து போன அந்தணர் தூரத்தில் இருந்தே தயங்கி நின்று பார்த்தவாறு ‘புகழ் பெற்ற அந்தத் துறவி இவராக இருக்க முடியாது’ என்று வெறுப்புடன் சிந்திக்கத் தொடங்கினார் ||64||
அந்தப் பூதம் நிச்சயமாக என்னை ஏமாற்றுகிறது; ஒரு பூதமாகிய அதற்கு, கடவுளைப் பற்றியோ அல்லது தூய, களங்கமற்ற தெய்வீகத்தைப் பற்றியோ என்ன தெரியும்? ஒருவேளை நான் சென்று, அந்தத் தள்ளாடும் கயவனின் கால்களில் விழுந்தால், அங்கே கூடியிருப்போர் மத்தியிலும், சமுதாயத்திலும் நான் நிச்சயமாக ஒரு மரியாதை அற்ற மனிதனாகி விடுவேன்||65||
இத்தகைய எண்ணங்கள் அந்த அந்தணனை ஆட்கொண்ட அடுத்த கணமே, அவனுக்குப் பெரும் வியப்பு அளிக்கும் வகையில், போதையின் மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டு இருந்த அந்த தெய்வத்தை காணவில்லை; அங்கிருந்து மாயமாக மறைந்து இருந்தார்; தன் பிழையை உணர்ந்த அவர் , நீரிலிருந்து வெளியில் வந்து விழுந்து கிடந்த மீனைப் போலத் தவித்தார் ; தன்னைத்தானே நொந்து கொண்டு ‘நான் எத்தனை பெரிய துரதிஷ்டசாலியாக இருந்துள்ளேன்’ என்று கதறி அழுதார்||66||
நான் ஊகித்தபடியே, அந்த நபர் உண்மையில் தள்ளாடும் குடிகாரராகவே இருந்திருப்பாரானால், அவர் திடீரென்று கண்ணுக்குத் தெரியாமல் எப்படி மறைந்து போனார்? அங்கு இருந்தவர் சாட்ஷாத் ஸ்ரீமத் தத்தரே அன்றி வேறில்லை என்று அந்த பூதம் என்னிடம் அடித்துக் கூறியதே; ஐயோ, நான் ஏன் இவ்வளவு மூல அற்றவனாக இருந்து விட்டேன் ||67||
நான் தூய அந்தண குருமார் என்ற ஆதிக்க எண்ணம் என்னுள் இருந்ததினால் ஏற்பட்ட விளைவைப் எண்ணி வெட்கப்படுகிறேன்; மற்றவரை விட நான் உயர்ந்தவன் என்ற அகந்தைக்கு ஆட்பட்டு, நான் ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டேன்; இப்போது அந்த இரக்ககுணம் கொண்ட பூதத்தின் முகத்திலோ அல்லது என் பக்தி கொண்ட மனைவியிடமோ நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு செல்வேன்? எனது கர்வத்தினால் கிடைப்பதற்கு அறிய செல்வத்தை இழந்து விட்டேன் என்று அவர்கள் நிச்சயமாக என்னைக் குற்றம் சாட்டுவார்களே||68||
இப்படி எல்லாம் மனம் வருந்திக் கொண்டு, தன்னைத் தானே நொந்து கொண்டவாறு, அந்த அந்தணன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்; நடந்ததை அறிந்திருந்த அந்த பூதம், அவனை விரக்தியோடு நோக்கிக் கூறிற்று ‘நீங்கள் என் வார்த்தைகளை நம்புவதற்கு தயாராக இல்லை என்பதினால் என்ன ஆயிற்று பார்த்தீர்களா?’ ||69||
அந்த பூதம் தொடர்ந்து பேசியது ‘போகட்டும், நீங்கள் எவ்வளவுதான் மதி நுட்பம் அற்றவனாக இருந்தாலும், உங்களுக்காக நான் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறேன்; தெய்வமான ஸ்ரீமத் தத்தரைத் மீண்டும் ஒருமுறை தொலைவிலிருந்தே உனக்குச் சுட்டிக் காட்டுகிறேன்; இம் முறையாகிலும் அவசரப்படாமல், பொறுமையுடனும் சென்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கு; மிகுந்த எச்சரிக்கையுடனும், பக்தியுடனும், உன் சங்கல்பத்தில் உறுதியுடனும் இரு’ ||70||
காலம் ஓடியது; காலத்தின் மர்ம ஓட்டம் தொடர்ந்தது; ஒருநாள், ஸ்ரீமத் தத்தர் சுடுகாட்டில் விளையாடிக் கொண்டிருப்பதை அந்த பூதம் அறிந்து கொண்டது; உடனே அது மீண்டும் அந்த அந்தணனை, சற்று கண்டிக்கும் தொனியுடன் சைகை காட்டி அழைத்து, அவரிடம் தெளிவான வார்த்தைகளில் பின்வருமாறு கூறியது ||71||
‘நீ தேடிக்கொண்டிருக்கும் யோகக் கலையின் தலைவன் இப்போது சுடுகாட்டில் அமர்ந்திருக்கிறார். அங்கே அவர் தன் உடலெங்கும் எரிந்து போன உடலின் சாம்பலை பூசிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்; அவருடன் சில நாய்களும் அவருக்கு துணையாக உள்ளன; அவர் தன் சுயத்தில் ஆழ்ந்து, தனது திவ்ய லீலையை (தெய்வீக விளையாட்டை) நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் |72||
எவர் ஒருவர், எக்காலத்திலும் தன் ஆத்மாவுடன் ஒன்றிணைந்து ஆழ்ந்த மகிழ்ச்சி நிலையில் இருப்பாரோ அவரையே அனைத்து யோகிகளும் முனிவர்களும் தேடித் கொண்டு இருப்பார்கள் என்பதை முழுமையாக உணர்ந்து கொள்; அவரே தன் சுயத்தை மையமாகக் கொண்டு தெய்வீக லீலைகளை புரிபவர் என்பதையும் உணர்ந்து கொள்; அவரை நாடுபவர்களுக்கு முக்தி (விடுதலை) தருபவரும் அவரேதான்||73||
அவர் ஏன் இப்படி எல்லாம் மர்மமான முறையில் நடந்து கொள்கிறார் என்பதைப் பற்றிச் எங்களைப் போன்ற பூதங்களாலோ அல்லது மானிட உடலோடு பிறந்துள்ள வேறு எந்த உயிரினத்தாலோ அதை எப்படி அறிந்து கொள்ள முடியும்?; ஆனால், எனது முற்பிறவிகளில் நான் மிகுந்த பக்தியுடன் வாழ்ந்திருந்தேன்; அதனாலேயே, இத்தகைய விஷயங்களை என்னால் உனக்குத் தந்திரமாக வெளிப்படுத்த என்னால் முடிகிறது ||74||
நானும் ஒரு காலத்தில் பக்தியுள்ளவனாக இருந்தேன், ஆனால் எனது அறியாமையினால் பக்தியுள்ள பிராமணர்களை அவமதித்தேன்; அவர்களை தரக்குறைவாக பேசியதினாலும், அவர்களுக்கு நான் இழைத்த இழிவான செயல்களினாலும் நான் இந்தப் பூதப் பிறவியை எடுக்க வேண்டி வந்து விட்டது;ஆனாலும் எனது முந்தைய நினைவை நான் தக்க வைத்துக் கொண்டுள்ளேன்’ ||75||
இவ்வாறு பூதத்தினால் அறிவுறுத்தப்பட்ட விஷ்ணு தத்தன் சுடுகாட்டிற்கு விரைந்தார்; அவரைக் கண்ட ஸ்ரீமத் தத்தாத்ரேயர் வேண்டும் என்றே அவர் மீது எலும்புத் துண்டுகளை வீசத் தொடங்கினார்; அப்படிப்பட்ட இழிவான முறையில் விரட்டப்பட்டதினாலும், உயிருக்கு பயந்தும் விஷ்ணு தத்தன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டார்; அங்கே பூதம் அதிருப்தியான மனநிலையிலும் கோபத்துடனும் அவருக்காகக் காத்திருப்பதைக் கண்டார் ||76||
பூதம் அவரிடம் கூறியது ‘என்ன காரியம் செய்து விட்டாய்; நீங்கள் கொண்டுள்ள பிராமண உடலையும் அது சந்தித்த அனைத்தையும் உன்னால் ஏன் மறக்க முடியவில்லை? நீங்கள் தேடி அலைந்து கொண்டிருந்த தெய்வத்தை இப்படி அலட்ஷியமாக கை நழுவ விட்டு விட்டீர்களே. பரவாய் இல்லை, அவரை உங்களுக்கு கடைசியாக ஒரு முறை சுட்டிக் காட்டுகின்றேன்; இந்த முறையும் நீங்கள் பரீட்ஷையில் தோற்று விட்டால், அது உங்களுடைய சொந்தச் செயலாலும் துரதிர்ஷ்டத்தினால்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்’||77||
அதன் பிறகு ஒரு நாள் மீண்டும் சுடுகாட்டில், ஸ்ரீமத் தத்தர் உள்ளார் என்றும், அவர் ஒரு கழுதையின் பிணத்திலிருந்து இறைச்சித் துண்டுகளைக் கிழித்து எடுத்து, அவற்றை தன்னுடன் இருந்த நாய்களுக்கு போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டு உள்ளார் என்பதையும் அறிந்து கொண்ட பூதம் விரைவாக அந்த அந்தணரிடம் சென்று முன்பைப் போலவே அறிவுரை கூறியது||78||
இந்த முறை பிராமணர் புறப்படுவதற்கு முன் தன் மனைவியிடம் விடை பெற்றார்; இம்முறை நன்கு யோஜனை செய்து நடந்து கொள்ளுங்கள்’ என்று பூதம் அவருக்கு அறிவுரை கூறியது; அதற்கு அவர், ‘நான் என் பொறுமையையோ மன உறுதியையோ கை விட மாட்டேன்’ என்று உறுதியாக கூறினார்; பூதம் மீண்டும் கூறியது ‘ஒருவேளை அந்த தெய்வமே உங்களுக்கு வரங்களை அளித்தால், யோகத்தின் அதிபதியான அந்த தெய்வத்தை சந்தேகிக்காதே’ என்று அறிவுரை கூறியது ||79||
அந்த பூதம் மேலும் கூறியது ‘அந்த தெய்வத்திடம் நான் உங்களை தர்ஷ-ஷ்ராத்* சடங்கிற்கு பணிவுடன் அழைக்க வந்துள்ளேன்; வருடாந்திர தர்ஷ-ஷ்ராத் அன்று பித்ருக்களுக்கு செய்யப்படும் காணிக்கை சடங்கில் தயவுசெய்து கலந்து கொள்ள சம்மதம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்ட பின்னர் வேறு எதையும் கேட்காதீர்கள், இதன் மூலம் நீங்கள் அவரை மீண்டும் தரிசிக்க முடியும்’ என்று கூறி விட்டு சென்று விட்டது; விஷ்ணு தத்தரும் முழு மனதுடன் அதற்கு ஒப்புக் கொண்டு சுடுகாட்டிற்குப் புறப்பட்டார்.
{*தர்ஷா-ஷ்ரத்தா (Darsha Shraddha) சடங்கு என்பது ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குச் செய்யப்படும் ஒரு முக்கிய பித்ரு காரிய சடங்காகும்} ||80||
அவர் விரைவில் அந்த அச்சமூட்டும் சுடுகாட்டை அடைந்தார்; திகிலுடன், அவர் முன்பு அஞ்சிய அதே நபரை சுடுகாட்டில் மீண்டும் கண்டார்; ஆயினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரது அருகில் சென்று அந்த தெய்வத்தின் பாதங்களில் விழுந்தார்; அப்போது ஸ்ரீமத் தத்தர் அவருக்கு கொடுத்த அடி, உத்திகளை பொருட்படுத்தாமல் அவரது கால்களை இருக்க பற்றிக் கொண்டார் ||81||
அதனால் மனம் இளகிய ஸ்ரீமத் தத்தர் அவர் முன் தோன்றி ‘நீ ஏன் என் பாதங்களை பற்றிக் கொண்டு விடாமல் இருக்கிறாய்?’; அதற்கு அந்த அந்தணர் பதிலளித்தார் ‘பித்ருக்களுக்கான சடங்கில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்’; இதைக் கேட்டுச் சற்று நகைத்த ஸ்ரீமத் தத்தர் விஷ்ணு தூதரிடம் கேட்டார் ‘வெளிப்படையாகப் தூய வழியில் இருந்தும், நல்வழியிலிருந்தும் நான் விலகி இருப்பதை நீயே பார்த்த பின்னரும் எதற்காக அந்த தூய சடங்கிற்கு நீ என்னை அழைக்க வேண்டும்?’ ||82||
ஸ்ரீமத் தத்தர் தொடர்ந்து கூறினார் ‘நான் முற்றிலும் அதர்ம வழியில் செல்பவன், எவராலும் தீண்டப்படாமால் உள்ளவன், நீதி மற்றும் நேர்மையை கடை பிடிக்காதவன்’; அதற்கு அந்த அந்தணர் முழு மனதுடன் கூறினார், ‘அது வெளிப்படையாக பார்த்தால் முற்றிலும் உண்மையாகவே தோன்றும்; ஆனால் நீங்கள் பரமாத்மா; சர்வ வல்லமை படைத்தவர்; அனைத்திலும் வியாபித்து உள்ளவர்; ஆகவே சாஸ்திரங்கள் கூறும் தீண்டத் தக்கவை மற்றும் தீண்டத்தகாதவை என்பது கிடையாது||83||
அந்த அந்தணரின் மதி நுட்பத்தைக் கண்டு ஸ்ரீமத் தத்தர் புன்னகைத்தார்; பின்னர் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உரைத்து, தமது முழுப் பேரொளியுடன் அவருக்குக் காட்சியளித்தார்; அவருடன் வந்திருந்த நாய்கள் அனைத்தும் வேதங்களின் அதிபதிகளான தெய்வங்களாக உருமாறின; அதே போலவே, அங்கிருந்த காகங்களும் தேவர்களாக உருமாறி, மிகுந்த பரவசத்துடனும் பக்தியுடனும் பகவானின் அருகே நின்று கொண்டன. ||84||
அந்தச் சுடுகாடு, யோக மார்கத்தை சித்தரிக்கும் பல்வேறு வடிவங்களில் உருமாறியது; அந்த அற்புதக் காட்சியைக் கண்ட விஷ்ணு தத்தர் பேரானந்தத்தில் திளைத்துப் போனார்; அவர் ஸ்ரீமத் தத்தரை பணிவுடன் வணங்கினார்; அப்போது ஸ்ரீமத் தத்தர் ‘அந்த சடங்கு தினத்தன்று நண்பகலில், நீராடித் தூய்மை பெற்ற பிறகு, உனது அழைப்பை ஏற்று நான் அங்கு வருவேன்’ என்று அருளினார் ||85||
ஆனால், நான் விதிக்கும் ஒரு நிபந்தனை என்னவென்றால், என்னுடன் வரும் பிற அந்தணர்களும் எனக்குச் சமமான தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும்; இல்லையெனில், அன்று நீ எனக்குப் படைக்கும் உணவை நான் ஏற்க மாட்டேன்’ இதைக் கேட்ட அந்த அந்தணர் பணிவுடன் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தார்; பின்னர், இறைவனுக்குச் சமமான தகுதி கொண்ட வேறு யாரை அழைப்பது என்று தெரியாமல், மகிழ்ச்சியும் குழப்பமும் கலந்த மனநிலையில் அவர் வீடு திரும்பினார்||86||
வீடு திரும்பியதும் அவர் செய்த முதல் காரியம் என்னவென்றால், அந்த அரச மரத்தடிக்குச் சென்று, இறைவனுடனான சந்திப்பு எவ்வாறு அமைந்தது என்பதை அந்தப் பூதத்திடம் விவரித்ததுதான்; பின்னர் அவர் தனது சந்தேகத்தை அதன் முன் வைத்து வீட்டுக் கேட்டார் ‘இறைவனுக்குச் சமமான தகுதி கொண்ட அந்தணர்களை நான் எங்கே தேடிக் கண்டு பிடிப்பது ? இந்த இக்கட்டான சூழலில் நீ எனக்கு வழிகாட்ட முடியுமா?||87||
அதற்கு அந்தப் பூதம் இவ்வாறு பதிலளித்தது ‘நெருப்பின் கடவுளான அக்னியும், சூரியக் கடவுளான ஆதித்யனும் மட்டுமே, அந்தத் திருவிழா நாளன்று இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயருடன் வருவதற்குத் தகுதியான அந்தணர்களாவர்; நீ என்னிடம் எதிர்பார்த்த காரியம், இறைவனின் திருவருளால் கை கூடி விட்டது; அவ்வப்போது என்னை நினைவு கூர்ந்து வா’ இவ்வாறு கூறி விட்டு, அந்தப் பூதம் விடைபெற்றுச் சென்று விட்டது ||88||
பின்னர் அந்த அந்தணர் தன் மனைவியிடம் சென்று, நடந்த அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார். அவளும் இறைவனின் கருணையை எண்ணிப் பெரு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தவாறே, சமையலறையில் தனது பணிகளைத் தொடர்ந்தாள் ||89||
முன்னோர்களுக்கான சடங்கு நடைபெறும் அந்தத் திருநாளன்று, நண்பகலில் தெய்வமான ஸ்ரீமத் தத்தர் அங்கு எழுந்தருளி ‘இங்கே என்னைத் தவிர வேறு எந்த அந்தணர்களையும் நான் காணவில்லையே?” என்று கேட்டார்; விஷ்ணு தத்தரோ, அந்த சடங்கிற்காக ஓர் அந்தணரின் மிகச் சிறந்த வடிவத்தை ஏற்று வந்திருந்த அந்த தெய்வத்தை, அன்பும் பக்தியும் கலந்த பெருமதிப்புடன் உற்று நோக்கியவாறே நின்றிருந்தார் ||90||
அப்போது அந்த அந்தணரின் மனைவி அங்கு வந்து அந்த தெய்வத்திற்கான இருக்கையை அவருக்கு காட்டிய பின்னர் ‘ ஸ்வாமி தாங்கள் சற்று நேரம் இதில் அமர்ந்து இளைப்பாறுங்கள்; மற்ற அந்தணர்களும் விரைவில் வந்து விடுவார்கள்’ என்று பணிவுடன் வேண்டினாள்; அதற்கு இறைவன் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்து ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருளினார்’ ||91||
பின்னர் அந்தப் பக்தி மிக்க மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று, கைகூப்பி, வானத்தையும் அதில் தெரிந்த சூரியனையும் பார்த்துப் பிரார்த்தித்தாள் ‘ஓ காஷ்யப முனிவரின் தெய்வீக மகனே, இருப்பவை அனைத்திற்கும் மூலமானவரே, எல்லா ஆத்மா க்களுக்கும் உணர்வை அளிப்பவர் நீங்களே’||92||
பிராமணர்கள் ஒரு நாளைக்கு மும்முறை வழிபடும் தெய்வம் நீரே, இந்த சடங்கிற்கான விருந்திற்கான எங்கள் அழைப்பை விரைவாக ஏற்று, தகுந்த உருவம் எடுத்து இங்கே காட்சியளியுங்கள், அத்ரி முனிவரின் தெய்வீக மகனான ஸ்ரீமத் தத்த தெய்வம் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறார் ||93||
அந்தப் பக்தி மிக்க இல்லத்தரசியின் எளிய பிரார்த்தனையைக் கேட்ட, சூரிய பகவான் மகிழ்ச்சியுடன் ஒரு பிராமணரின் உருவம் எடுத்து, விரைவாக அவர்களின் இல்லத்தில் தோன்றினார்; அவரை அந்தப் பக்தி மிக்க மனைவி வரவேற்று, ஸ்ரீமத் தத்த தெய்வத்தின் அருகிலேயே அவருக்கு ஓர் இருக்கையை அளித்தாள் ||94||
ஸ்ரீமத் தத்தர் கூறினார் ‘ நிச்சயமாக இது தர்ஷா-ஷ்ரத்தா சடங்குதான், இங்கு ‘ஷட்-தைவத்’* எனப்படும் ஆறு தெய்வங்களும் இருக்கின்றன; அதற்கு அந்த பக்தியுள்ள மனைவி பதிலளித்தாள்’; மூன்றாவது பிராமணரும் வந்து கொண்டிருக்கிறார், வழக்கப்படி இந்த நிகழ்விற்கு குறைந்த பட்சம் மூன்று பிராமணர்கள் இருக்க வேண்டும்
{* இது ஒரு சிரார்த்த சடங்கு போன்றதுவே ஆகும்; இந்த சடங்கு மூலம் உடலை சிவமாக்குவதாகவும் (சிவமயமாக்குதல்) மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது; வடமொழியில் ‘ஷட்’ (Shat) என்றால் ஆறு என்றும், ‘தைவத்’ (Daivat / Daivatham) என்றால் தெய்வீகம் அல்லது தேவதைகள் என்றும் பொருள்படும். } ||95||
பிறகு அவள் சமையலறைக்குச் சென்று, அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை நோக்கி கைகூப்பி அதன் அதி தேவதையிடம் வேண்டினாள் ‘ஓ அக்னி தேவானே, நீர் அனைத்து இல்லறத்தாருக்கும், ஏழை எளியவர்களுக்கும் உண்மையான பாதுகாவலராகப் இருப்பவர்; மேலும் செயல்களால் களங்கப்படாத அனைவரிலும் உயர்ந்தவர் ||96||
உம்மிடம் வைக்கப்பட்ட அல்லது உம்மால் தீண்டப்பட்ட அனைத்தையும் எந்தக் கெட்ட பெயரையும் சம்பாதிக்காமல் எரித்து விடுகின்றீர்கள்; நீர் விரும்பும் இல்லங்களை காப்பாற்றுகின்றீர்கள்; தயவுசெய்து ஒரு பிராமண உருவம் எடுத்து, இந்த ஏழை வீட்டின் விருந்திற்கு இங்கு வந்து சேருங்கள்; அனைத்து யோகிகளுக்கும் அதிபதியான ஸ்ரீமத் தத்த தெய்வம் உமது வருகைக்காக இங்கு காத்திருக்கிறார் ||97||
அவளுடைய பிரார்த்தனையைக் கேட்ட அக்னி பகவானும் அவளுடைய அழைப்பை ஏற்று, ஒரு பிராமண உருவம் எடுத்து, அவள் அளித்த இருக்கையில் சென்று அமர்ந்தார்; பின்னர் அந்த பிராமணர், தன்னால் முடிந்ததை பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கும் தெய்வீக மற்றும் புனிதமான உறுதியுடன் சடங்கைத் தொடங்கி, பின்னர் விதிக்கப்பட்டபடியே அதைச் சரியாக முடிப்பதை உறுதி செய்தார்||98||
அந்த மூன்று தெய்வங்களும் அவர்களது தூய்மையாலும், செயல்களில் அவர்களுக்கு இருந்த திறமையாலும் பெரிதும் மகிழ்ந்தனர்; அந்தத் தெய்வீகமான அர்ப்பணிப்பின் விளைவாக, அவனது முன்னோர்களும் உயர்ந்த கதியை அடைந்தனர்; பின்னர், விஷ்ணு தத்தர் மிகுந்த அன்புடன் ஸ்ரீமத் தத்த பகவானை வணங்கி, அவரது தெய்வீக மற்றும் புனிதமான 108 திருநாமங்களை ஓதி அவரைப் போற்றினார் ||99||
அதன் பின் அவர் இவ்வாறு கூறினார் ‘என் தெய்வமே, நான் சிற்றறிவுடையவன்; என் மனம் பலவிதமான விருப்பங்களுக்கும் கருத்துக்களுக்கும் இடையே தடுமாறி, குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறது; ஆனால் இறைவா, உமது ஒவ்வொரு சங்கல்பமும் (தீர்மானமும்) சத்தியத்திலிருந்தே பிறப்பவை; அவை அனைத்தும் சத்தியமானவையே; இன்று நீங்கள் எனக்கு மன தெளிவையும், ஒருமுகப்பாட்டையும் உணரச் செய்துள்ளீர்||100||
இன்று என் கண்கள் பெரும் பேறு அடைந்து விட்டன; உங்களின் உண்மையான தெய்வீக உருவை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அவை தூய்மையடைந்தன; என் உடலும், அதன் அனைத்து உறுப்புகளும் இன்று தூய்மை அடைந்து விட்டன; என் வம்சத்தின் முன்னோர்களும் இன்று நற்கதி அடைந்து மகிழ்ந்து இருக்க வேண்டும் ||101||
மிகவும் அற்பமானவனான நான் யார்?; வல்லமை மிக்க தெய்வங்களான நீங்கள் மட்டுமே திளைத்து மகிழும் அந்த உண்மையான தெய்வீக மற்றும் புனிதமான நான் (ஆத்ம தத்துவம்) என்பதுதான் என்ன? எனது ஆசையை நீங்கள் நிறைவேற்றித் தந்துள்ளீர்கள்; என் சுற்றத்தார் அனைவருடனும் சேர்ந்து, நானும் முழுமையான நிறைவை அடைந்து விட்டதாக உணர்கிறேன்’ ||102||
அந்த ‘பிரம்ம ராக்ஷஸ பூதத்தின் அறிவுரையின் காரணமாகவே, என்னால் இந்தத் தெய்வீகத் திருவடிகளைத் தரிசிக்க முடிந்தது’; தன்னை வழி நடத்திய அந்தப் பூதத்தை விஷ்ணு தத்தர் நினைவு கூர்ந்ததைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீமத் தத்த பகவான், அவரிடம் இவ்வாறு கூறினார் ‘ஓ அந்தணனே, அந்தப் பூதமானது எனது தொன்மையான பக்தன் என்பதை நீ அறிந்துகொள்’ ||103||
துரதிர்ஷ்டவசமாக, அவர் இழிந்த ஒரு பிறவியை (பூதப் பிறவியை) ஏற்க நேர்ந்தது; அவருக்கு எஞ்சிய உணவையும், யாகப் படையல்களையும் அளியுங்கள்; அதன் மூலம் அவர் மேன்மையான, புண்ணிய நிலைகளை அடைவார்; அதற்குப் பிரதி பலனாக, நீங்களும் உங்கள் மனைவியும் எங்களிடமிருந்து ஜீவன் முக்தி (வாழும் போதே அடையும் முக்தி) நிலையைப் பெற்றுக் கொள்வீர்கள்’ ||104||
என்னிடம் பக்தி கொள்வது என்பது மிகவும் அரிதான ஒன்று என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்; நல்வினைப் பயனால் நீங்கள் அதனைப் பெற்றுள்ளீர்கள்; இவ்வுலகிலும் மறுவுலகிலும் இன்பங்களை அனுபவித்த பிறகு, நீங்கள் நிச்சயமாக பேரானந்தத்தை தரும் நிர்வாண நிலையை அடைந்து, முழு உணர்வுடன் என்னுடன் இரண்டறக் கலப்பீர்கள்’ ||105||
இவ்வாறு ஆசீர்வதித்த பிறகு, ஸ்ரீமத் தத்த பகவான் அந்த அந்தணருக்குச் சமூக நலனுக்காக ஆன்மீக ஞானத்தை அருளினார்; சூரிய பகவான் எங்கும் செல்லக்கூடிய ஒரு விமானத்தை அவருக்குப் பரிசளித்தார்; அக்னி தேவன் அவருக்குச் செல்வச் செழிப்பையும் நல் வாய்ப்புகளையும் வரமாக அளித்தார்||106||
அதன்பின், அங்கு கூடியிருந்த மூன்று தேவர்களும் விடைபெற்றுச் சென்றனர்; அந்த அந்தணர் தன் மனதிற்குள்ளேயே ஸ்ரீமத் தத்த பகவானை இடைவிடாமல் நினைத்துத் தியானித்தார்; அந்தப் பூதமானது, ஸ்ரீமத் தத்த பகவான் தனக்கு அருளிய உணவை உட்கொண்ட பிறகு, உயர்ந்த ஆன்மீக நிலைகளை நோக்கிச் சென்றது; அந்த அந்தணத் தம்பதியினர் ஜீவன் முக்தி எனும் ஞானப் பேற்றைப் பெற்றனர் ||107||
இவ்வாறு கதையை கூறி முடித்த குருபகவான் (பிருஹஸ்பதி) இந்திரனிடம் கூறினார் ‘இவ்வாறு, மீமாம்சை சாஸ்திரங்களின்படி, தன் செயல்களை அமைத்துக் கொண்ட இந்த அந்தணர், இதுவரை கேள்விப்படாத அரிய நற்பலன்களைப் பெற்றார்; எனவே, எவரொருவர் ஏதேனும் ஒரு சாஸ்திரத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டு, அதில் முழுத் தேர்ச்சி பெறுகிறாரோ, அவர் அனைத்துப் புனித சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ள அறநெறிகளைப் பின்பற்றியதற்கான முழுப் புண்ணியப் பலன்களையும் அடைவார் ||108||
|| இத்துடன், பி. தெம்பே மகாராஜ் (P. Tembe Maharaj) அவர்களால் இயற்றப்பட்ட இந் நூலின் ஒன்பதாம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது ||
இது கடவுள் தத்தாத்ரேயரின் திருவடிகளில் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் ஒன்பதாம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 865 = 973
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -3, அத்தியாயம் -9 முடிவடைந்தது
அத்தியாயம் -10 தொடர்கின்றது