COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -7 : கார்த்தவீர்யன் யுத்தங்கள்

அத்தியாயம் 21
பரசுராமர் – கார்த்தவீர்யன் யுத்தம்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘தன்னை எதிர்த்துப் போரிடத் தயாராக நிற்கும் தன் படைகளுடன் அரசன் அர்ஜுனன் வருவதைக் கண்டதும், ஸ்ரீமத் பரசுராமர் மீண்டும் கர்ஜித்தவாறு அந்த அரசனை நோக்கிச் சென்றார்; அரசனோ தன் பரிவாரங்கள் அனைத்தையும் பின்னால் விட்டுவிட்டு, தானே முன்னால் வந்து நின்றான் ||1||

ஸ்ரீமத் பரசுராமர் கூறினார் ‘நீ சிறந்த ஷத்ரிய வீரர்களின் மகன்; அப்படியிருந்தும், ஒரு சாதாரணத் திருடனை போல எங்கள் பசுவைத் திருடிச் சென்றாய்; இப்போது மனவுறுதியுடன் என்னை எதிர்த்து நில்; என் ஆற்றல் எத்தகையது என்பது உனக்குத் தெரியாதா ||2||

நீ விவேகத்துடன் செயல்படுபவன் என்ற புகழைப் பெற்று இருந்தாலும், நீ செய்த இந்தச் செயல், போற்றுதலுக்குரிய வீரர்கள் செய்யும் செயலா?; நீ காண விரும்பிய அந்த வலிமையை இப்போது பார்; நீ காண விரும்பியதை உனக்குக் காட்டக் கூடிய வேறு ஒருவரையும் நீ எங்கும் காண முடியாது ||3||

பொதுவாகவே மன்னர்கள் தமது நாட்டில் உள்ள தகுதியுள்ள, மெய் ஞானம் பெற்ற பிராமண குருமார்களுக்கு பசுக்களைத் தாராளமாகத் தானமாக அளிப்பார்கள்; அத்தகைய குருமார்கள் அப் பசுக்களைப் பராமரிப்பார்கள்; ஆதி காலம் தொட்டு, மன்னர்களில் மேன்மையான மன்னர்கள் கடைப் பிடித்து வரும் தர்ம நெறி முறை இதுவே ஆகும்; அந்த நெறி முறையை மீறியதன் மூலம் நீ இழிந்த நிலையை அடைந்து விட்டாய்||4||

உன் இந்த அறம் அற்ற செயலைப் பற்றி என்னவென்று சொல்வது?; இத்தகைய பொறுப்பற்ற செயல் உன் நல் புத்தியை எப்படி மறைத்து விட்டது, பார்த்தாயா?; இப்போது உன் பாதுகாப்பு கவசங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு நீ செய்த பாவங்களின் விளைவுகள் உனக்கு பலன் தரத் தொடங்கி விட்டன என்றே தோன்றுகிறது||5||

இத்தகைய கடுஞ் சொற்களைக் கேட்ட மன்னன் அர்ஜுனன், ஸ்ரீமத் பரசுராமரிடம் இவ்வாறு கூறினான் ‘எந்த ஒரு அரசனும் தன் கருவூலத்தை, மேம்பட்ட செல்வங்களாலும் பொக்கிஷங்களாலும் நிறப்புவதற்கு முயற்சி மேற் கொள்வான் அல்லவா? ||6||

நான் இதுவரை கண்ட பசுக்களிலேயே மிகச் சிறந்தது இந்தப் பசுவே ஆகும்; தன் இனத்திலேயே இது மிகவும் தனித்துவமானது; இந்தப் பசுவிற்கு ஈடாக நான் வேறு பல பசுக்களை உனக்கு அளித்துள்ளேன்; இப்போது நான் இதை என் தலை நகருக்கு எடுத்துச் செல்கிறேன் ||7||

இதை விட்டுப் பிரிய எனக்கு மனமில்லைதான்; நீ சொல்வது போலவே நீ வலிமை வாய்ந்தவன் என்றால், ஒன்றை உறுதியாக அறிந்து கொள்; போர்க் களத்தில் நாம் சந்தித்தால் ஒழிய, இதை நான் உன்னிடம் திருப்பிக் கொடுக்கவே மாட்டேன் ||8||
தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர் கூறினார் ‘உன் இழிவான சொற்களை நான் கேட்டேன்; சான்றோர்களான அந்தணர்கள் தங்கள் வளர்ப்பு விலங்குகளை விற்பதையோ அல்லது பண்ட மாற்று செய்வதையோ நீ எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?; மேலும், எங்கள் பசுக்களுக்கு ஈடாக நீ கொண்டு வந்த பசுக்களை ஏற்றுக் கொண்டவர் யார்?; ஆகையால், நீ எங்கள் காமதேனுவை வலுக் கட்டாயமாக அபகரித்துச் சென்றதாகவே கருத வேண்டும் ||9||

இவளுக்காக, முழுப் பிரபஞ்சத்தையே ஈடாக கொடுத்தாலும் கூட அதை நான் பெற்றுக் கொள்ள தயாராக இல்லை; அப்படியிருக்க, கேவலம் சில இரத்தினங்களையும் செல்வங்களையும் கொடுத்து விட்டு, காகங்கள் உணவை எடுத்துச் செல்வது போல இவளை நீ சாதாரணமாக எடுத்துச் சென்று விடலாம் என்று நினைக்கிறாயா? ||10||

இப்போது நான் உன்னுடன் நிச்சயமாகப் போரிடுவேன்; உன் தலையை நான் உறுதியாக உடைப்பேன் என்பது சத்தியம்; அவ்வாறு செய்தால்தான், நான் அன்னை ரேணுகாவின் உண்மையான மகன் என்று அழைக்கப்படுவேன்; இல்லையெனில், பிணங்களை எரிக்கும் இழிந்த குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன் என்றே என்னை உலகம் அழைக்கும்||11||

இவ்வாறு சபதம் செய்த தெய்வமான ஸ்ரீமத் பரசுராமன், தன் கையில் கோடரியை ஏந்தினார்; தனக்குத் தேவையற்றவை என்று கருதிய அனைத்தையும் அழிப்பதற்காக, எவ்விதச் சிரமமுமின்றி இயல்பாகப் பாய்ந்து சென்று போரைத் துவக்க முன்னேறி சென்றார் ||12||

தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர் தனி ஒருவனாகப் போருக்குத் தயாராக நிற்பதைக் கண்ட அரசன் அர்ஜுனன், தன் படை வீரர்களுக்கு கட்டளையிட்டான் ‘அதோ வந்து கொண்டிருக்கின்றானே அந்த அந்தணன் நேர்மையானவன் அல்ல; அவன் இங்கு வந்ததும், அவனை வெட்டிக் கொன்று விடுங்கள் ||13||

அவனது வார்த்தைகள் மிகவும் கடுமையாகவும் வரம்பு மீறியும் உள்ளன; எனவே, அவன் ஒரு அந்தண குருமாரானக இருந்தாலும், போர்க்களத்தில் நாம் அவனது உயிரைப் பறிக்கும்போது, அதை யார் ‘அநீதி’ என்று சொல்ல முடியும்? ||14||

தங்கள் மன்னனின் அப்படிப்பட்ட சொற்களைக் கேட்ட படை வீரர்களும் அதற்கு உடன்பட்டனர்; பிருகு முனிவரின் பரம்பரையை சேர்ந்த அந்த அந்தணனை அழிப்பதற்காக, அவர்கள் அனைவரும் அவரை நோக்கிப் பாய்ந்து சென்றனர்||15||

சிலர் அவர் மீது அம்புகளைப் பொழிந்தனர்; சிலர் அவரை வெட்டுவதற்காகத் தங்கள் வாள்களை உறையிலிருந்து உருவினர்; வேறு சிலர் தங்கள் கதாயுதங்களை ஓங்கினர்; இன்னும் சிலர், எறி பொருட்களை வீசக் கூடிய முத்கல’ (Mudgal)* எனும் ஆயுதங்களைக் கையில் ஏந்தியிருந்தனர்.
{*முத்கல (Mudgal) என்பது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக மற்போர் வீரர்கள் மற்றும் போர் வீரர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய உடற்பயிற்சி கருவியும், ஆயுதமும் ஆகும்; இது கனமான மரத்தாலான அல்லது இரும்பிலான ஒரு கதாயுத வடிவத்தை ஒத்திருக்கும்} ||16||

இறைவன் ஸ்ரீமத் பரசுடராமரும் போர் வீரர்களுக்குப் பொருத்தமான வீரத்தை வெளிப்படுத்தினார்; அவர் எதிரிகளை நேருக்கு நேர் எதிர் கொண்டு அங்கே நின்றார்; தன் கோடரியைச் சுழற்றியவாறு, தனி ஒருவனாக நின்று, நிகரற்ற வலிமையுடன் அனைவருடனும் போரிட்டார்||17||

சில படை வீரர்களின் கவசங்கள் உடைந்து நொறுங்கின; வேறு சிலரின் வில் ஆயுதங்கள் துண்டு துண்டாக உடைந்தன; இன்னும் சிலரின் கால்கள் முறிந்து போயின||18||

அவரைத் தங்கள் கைகளால் தாக்கிய மற்றவர்கள், தங்கள் கைகள் செயல்படாத நிலையை அடைந்ததைக் கண்டனர்; பல தேர்கள் சிதைந்து போயின; தேரோட்டிகள் நசுக்கப்பட்டு உயிரிழந்தனர்||19||

யானைகளின் தலையில் இருந்த மிகவும் மென்மையான பகுதிகள் நசுக்கப்பட்டன; குதிரைகளின் தலைகள் பிளந்து திறந்தன. போர்க் களத்தில் ஸ்ரீமத் பரசுராமர் ஒரு கணமும் வீணடிக்காமல், எதிரிகள் பலரை இயன்றவரை விரைவாக எம லோகத்திற்கு அனுப்பியதைப் போலத் தோன்றியது||20||

அவரது கோடரி ஒருபோதும் தன் இலக்கைத் தவற விடவில்லை; அவரது ஆயுதத்தின் விளிம்பு தேவையான அளவு கூர்மையுடன் திகழ்ந்து, உயிர்களை எளிதாகப் பறித்தது; எதிராளிகள் படையினர் முழுவதுமே தங்கள் மன உறுதியை இழப்பதைப் போலத் தோன்றியது; வெல்லப்பட முடியாத அவரை யாரால் வெல்ல முடியும்? ||21||

பலர் உடனடியாக உயிரிழந்தனர்; பலர் இரக்கமின்றி காயப்படுத்தப்பட்டனர்; அனைவரும் திடீரெனத் துயரத்திலும் திகைப்பிலும் ஆழ்ந்தனர்; ஸ்ரீமத் பரசுராமன் எம தர்ம ராஜனின் உருவமாக அவதரித்து வந்திருப்பதாகப் பலரும் கருதினர் ||22||

ஒரே ஒரு சிங்கம், பல யானைகளை அழிப்பதற்கு எத்துணை வலிமையுடனும் திகழ்கிறதோ, அதேபோல ஸ்ரீமத் பரசுராமரும் தனி ஒருவராக நின்று, எதிரிப் படைகளின் பிரிவுகள் அனைத்தையும் அழித்தொழிக்கும் பிரும்மாண்ட பேரலையை உருவாக்கினார் ||23||

சிறிது நேரத்திற்குள்ளேயே, அவரை எதிர்க்க வந்த எதிரிப் படை முழுவதுமே இல்லாமல் போனது; இது ஒரு மிகச் சிறந்த, ஈடு இணையற்ற சாதனையாகும்; வெட்டுப்பட்ட சடலங்களும் உடல் உறுப்புக்களில் இருந்தும் வெளியேறிய இரத்தம் வெள்ளம் போல பெருகி ஓடியது; அதைக் கண்டு வியந்து போன தேவர்கள் பேச்சற்று நின்றனர் ||24||

விரைவிலேயே அந்த இரத்த வெள்ளம் ஒரு நதியின் வடிவத்தை அடைந்தது; போரில் சிதைந்த உடல்களின் தலை முடி, அழுக்கு, கசடுகள் மற்றும் உள்ளுறுப்புகளால் அது நிறைந்திருந்தது; அதில் மிதந்த துண்டிக்கப்பட்ட கைகள் பாம்புகளைப் போலத் மிதந்து கொண்டு இருந்தன ; இறந்த உடல்கள் பயங்கர நீர்வாழ் விலங்குகளைப் போலக் காட்சியளித்தன ||25||

வாள் வீச்சிலிருந்து காக்கும் கவசங்கள் அந்த இரத்த ஓட்டத்தில் புருவங்களைப் போலத் தோன்றின; தசைகள் மற்றும் தசைநார் திசுக்களின் சேறும் சகதியும் எங்கும் பரவியிருந்தன; யானைகள் மற்றும் குதிரைகளின் கால்கள் அந்தச் சகதியில் சிக்கிக் கொண்டன||26||

தெய்வ பறவையான கருடன் தனி ஒருவனாக நின்று, பாம்பினங்கள் முழுவதையும் அழிப்பதில் எத்துணை ஈடு இணையற்றுத் திகழ்ந்தாரோ, அதேபோல ஸ்ரீமத் பரசுராமரும் தனி ஒருவராக, நிகரற்ற வீரத்துடன் தன் எதிரிகள் அனைவரையும் அழித்தார் ||27||

கடலில் எழும்பிய பெரும் சீற்றம் போல நின்று கொண்டிருந்த ஸ்ரீமத் பரசுராமரால் அர்ஜுன மன்னனுடன் வந்த எதிரிப் படையெனும் கடலானது, சில கணங்களுக்குள்ளேயே அழிந்து போனது ||28||

தன் உள்ளங்கையில் சமுத்திரத்தையே ஏந்திப் பருகிய அகத்திய முனிவரைப் போலவே, ஒப்பற்ற பெருமை கொண்ட ஸ்ரீமத் பரசுராமரும் அர்ஜுனனின் துணைப் படைகளை அழித்தொழித்தார்; போர்க்களத்தில் அந்தணராக அவர் நிகழ்த்திய இந்த அற்புதமான செயல்பாடு, மன்னன் சஹஸ்ரார்ஜுனன் மனதில் எஞ்சியிருந்த அனைத்து ஐயங்களையும் முற்றிலுமாக நீக்கியது||29||

அவன் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு இவ்வாறு உணர்ந்தான் ‘இந்த அந்தணர் ஒரு சாதாரண மனிதர் அல்ல; இவரே அந்தப் பரம்பொருள் அனுப்பியவராக இருக்க வேண்டும்; இல்லையெனில், சமுத்திரம் போன்ற எனது இந்தப் பெரும் படையை, ஒரு அற்ப மனிதனால் இவ்வளவு விரைவாக எப்படி அழித்திருக்க முடியும்? ||30||

இருளைச் சில நொடிகளிலேயே சூரியன் அகற்றுவது போலவே, இந்த அந்தணரும் எனது வலிமை மிக்கப் படையை, எவரையும் மிச்சம் வைக்காமல், ஈடு இணையற்ற வேகத்துடனும் திறமையுடனும் செயல்பட்டு அழித்து விட்டார்||31||

தேவர்களோ அல்லது அசுரர்களோ, என்னை எதிர்த்து நிற்கக் கூடியவர் எவரும் இல்லை; என்னை அடக்கி ஆளக்கூடிய தகுதி வாய்ந்த போர் வீரன் மூவுலகிலும் இல்லை; ஏன், இந்தப் பிரபஞ்சத்திலேயே அத்தகையவன் எவனும் இருக்க முடியாதே’ என்று அர்ஜுனன் சிந்தித்தான் ||32||

அப்படியிருக்கையில், எந்த சிந்தனைகளையும் இல்லாமல் என்னுடன் போரிடத் துணியும் அந்தப் பரிதாபத்திற்குரிய மனிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதென்ன?; ஆகையால், இந்த எதிரி வெறும் ஒரு முனிவரின் மகன் மட்டுமல்ல; இவரே அன்னை மகாலட்சுமியின் திவ்ய நாயகராகவே இருக்க வேண்டும் என்றே மனதில் தோன்றுகின்றது||33||

ஆகவே, எனது விருப்பப்படியே நான் இவருடன் போரிடுவேன்; போர்க்களத்தில் இவரைத் திருப்தி படுத்துவதோடு, போர் வீரர்களுக்கே உரிய போர் வெறியையும் நான் தணித்துக் கொள்ள விரும்புகிறேன்; இந்தப் போர்க் களத்திலேயே எனது உடலைத் துறந்து விட்டு, எனது உண்மையான இருப்பிடத்திற்கு நான் திரும்புகிறேன்||34||

இவ்வாறு முடிவு செய்த மன்னன் சஹஸ்ரார்ஜுனன், ஒரு சிறந்த ஆத்மா வாகவும், தவசியாகவும், பக்தனாகவும் திகழ்ந்தவன், ஸ்ரீமத் பரசுராமரை நேருக்கு நேர் எதிர் கொள்ள போர் முனைக்கு வந்தான்; அப்போது அவன் ‘இனிமேல் நான் உன்னை விட்டு வைக்கப் போவதில்லை’ என்று முழக்கமிட்டான்||35||

நீ ஒரு அந்தண குருமார்; நானோ ஒரு போர் வீரன்; தேவைப் படும்போது என்னால் இரக்கமற்றவனாகவும் இருக்க முடியும்; எனது உண்மையான ஆற்றல் மிகவும் பயங்கரமானது; அச்சமூட்டக் கூடியது; எனது அம்புகள் மிகக் கடுமையானவையாகவும், ஊடுருவித் துளைக்கக் கூடியவையாகவும் இருக்கும்||36||

நீ இன்னும் இளமைப் பருவத்தில்தான் இருக்கிறாய்; நீ ஒரு தவசியான முனிவரின் மகன்; வெறும் பழங்களை உண்டு உயிர் வாழ்பவன். என்னுடன் நடத்த உள்ள கடுமையான போரில் உன்னால் எப்படித் தாக்குப் பிடித்து நிற்க முடியும்? ||37||

நீ வீணாகவே உயிரிழக்க நேரிடும்; உன் தாய் உன்னை நினைத்துத் துயருறுவாள்; எனவே, நீ வந்த வழியே திரும்பிச் சென்று, மகிழ்ச்சியுடன் உன் இல்லத்திற்கு சென்று சேருமாறு நான் உனக்கு அறிவுறுத்துகிறேன் ||38||

கொசுக்கள் உங்களைக் கடித்தாலே, நீங்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி, அந்தச் வலியையே பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பவர்கள்; அப்படியிருக்க, கூர்மையான இரும்பு முனைகளைக் கொண்ட இந்த அம்புகள் உங்களைப் பிய்த்துக் கொண்டு பாயும்போது, அவற்றை நீங்கள் எவ்வாறு மானத்துடன் தாங்கிக் கொள்ள இயலும்? ||39||

மன்னன் அர்ஜுனன் கூறிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீமத் பரசுராமர்,பின்னர் எரிச்சலடைந்து கூறினார் ‘என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என் மீது இரக்கப் படவும் வேண்டாம். பயனற்ற வார்த்தைகளைப் பேசுவதை விட்டு விட்டு, உங்கள் ஆயுதங்களை ஏந்த இதுவே சரியான நேரம் அல்லவா? என்றார்||40||

குரு வேத தர்மா தொடர்ந்தார் ‘அடுத்து மன்னன் என்ன செய்தான்? அவன் தன்னால் இயன்ற அனைத்தையும் கொண்டு ஸ்ரீமத் தத்த பகவானை மனதிற்குள் ஏந்திக் கொண்டு , பின்னர் தனது ஆயிரம் கைகளில் ஐநூறு வில்களை எடுத்து, அவற்றை விரைவாகப் போருக்குத் தயார் செய்தான் ||41||

அர்ஜுனனும் சிங்கம் போல் கர்ஜித்து, ஒரே நேரத்தில் ஐநூறு அம்புகளைப் பொழிந்தான்; ஸ்ரீமத் பரசுராமர் கூர்மையான அம்புகளால் சூழப்பட்டது போல் இருந்தார்; ஆனாலும் அவர் அவை ஒவ்வொன்றையும் உடைத்தார் ||42||

மேகங்கள் மலைகளில் மோதி, ஒரே நேரத்தில் ஆயிரம் மழையைப் பொழிவது போல, மன்னன் அர்ஜுனனும் தன்னால் இயன்ற அனைத்தையும் கொண்டு ஸ்ரீமத் பரசுராமர் மீது தாக்குதல் நடத்தினான்; சஹஸ்ரார்ஜுனன் தனது கைகளில் எரிகணங்களை (missiles) ஏந்திக் கொண்டு இருந்தான்||43||

இதற்கிடையில், தேவர்களும் தெய்வங்களும் வானம் அந்த போரினால் எந்த விதமான சேதமும் அடையாமல் இருக்க தங்கள் ஆகாய வாகனங்களாலும், உடைக்க முடியாத பிற வாகனங்களிலும் வானத்தை மூடியிருந்தனர்; போரின் வெளிப்படையான வீரத்தைக் கண்ட அவர்கள், ஆனந்தக் கூக்குரல் எழுப்பினர் ||44||

தனது கம்பீரத்திற்கும் தொலை நோக்குப் பார்வைக்கும் பெயர் பெற்ற, புகழ் பெற்ற, தனது தேரில் அமர்ந்திருந்த அர்ஜுனன், தனது ஆயிரம் வலிமை மிக்க கரங்கள் ஒவ்வொன்றிலும் ஆயுதம் ஏந்தி, ஒளி நிறைந்த மற்றொரு சூரியனைப் போலத் தோன்றினான் ||45||

ஒவ்வொரு முறையும் அவன் ஒரே நேரத்தில் ஐநூறு அம்புகளைப் பொழிந்த போதும், அவனது எறிகணைகள் ஒருபோதும் இலக்கைத் தவற விடுவதில்லை என்பது தெரிந்தது; ஒவ்வொரு தாக்குதலும் ஸ்ரீமத் பரசுராமரை தாக்கியது என்றாலும் அவருடைய சிங்க கர்ஜனை பின்னணியில் கேட்டது ||46||

யாருடைய ஆயுத பலம் சவாலற்றதோ, யாருடைய அம்புகள் ஒரு போதும் வீணாவதில்லையோ, யாருடைய தாக்குதல் பலியானவர்களை பிரமிப்புடன் கூடிய ஆச்சரியத்தில் உலுக்கியதோ அவன் எய்த ஆயுதங்கள் ஸ்ரீமத் பரசுராமர் அருகிலேயே சென்று விழுந்தன ||47||

அர்ஜுனன் அம்புகளை ஒன்றன்பின் ஒன்றாக சாமர்த்தியமாக ஏந்துவதைக் கண்ட ஸ்ரீமத் பரசுராமர் போரில் ஒரு பக்தன் புத்திசாலியாகவும் புதுமையானவனாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கண்டவர் அவனைப் பாராட்டி கூறினார் ‘அவன் ஆயுதங்களைக் கற்பனைத் திறனுடன் பயன்படுத்தும் விதத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது’ ||48||

சஹஸ்ரார்ஜுனன் சலியாத மன உறுதி கொண்டவன்; உண்மையிலேயே புகழ் மிக்க போர் வீரன்; போர்க் களத்தில் அவன் வீரமும் துணிச்சலும் மிக்கவன்; மேல் உலகில் உள்ள தேவர்களாலும் அவனை எந்த வகையிலும் வெல்ல முடியாது எனும்போது பலவீனமான மனித குலம் அவனை எங்கு எந்த வகையில் எப்படி எதிர்கொள்ள முடியும்?’ ||49||

இவ்வாறு அர்ஜுனனைப் புகழ்ந்த ஸ்ரீமத் பரசுராமர் அவன் ஒவ்வொரு முறையும் பொழிந்த அம்புகள் அனைத்தையும் சிரமமின்றி உடைத்தார்; பின்னர் தனது கோடரியால் வேகமாக அடித்து அர்ஜுனனின் குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்றார்; அடுத்த அடியில் அர்ஜுனனின் தேரைத் துண்டு துண்டாக உடைத்தார்||50||

சரியான முறையை பயன்படுத்தி எப்படி மரங்களின் கிளைகள் எளிதில் உடைக்கப் படுகின்றதோ அதை போலவே, அர்ஜுனனின் ஒவ்வொரு கையையும் ஸ்ரீமத் பரசுராமர் தனது கோடாரியின் தாக்குதலால் உடைத்தார்||51||

ஆச்சரியப்படும் விதமாக அர்ஜுனனின் ஒவ்வொரு கையையும் அவர் முறித்த போது, அந்த இடத்தில் இன்னொரு புதிய கை விரைவாக முளைத்தது; மேலும் அப்படி புதியதாக முளைத்த ஒவ்வொரு புதிய கையும் மீண்டும் பகவான் ஸ்ரீமத் பரசுராமரை எதிர்த்துப் போரிட்டது; அர்ஜுனனோ அல்லது அவனது உடல் பாகங்களோ போரிலிருந்து ஒரு அடி கூட பின் வாங்கவில்லை ||52||

ஸ்ரீமத் பரசுராமரோ தன்னால் இயன்ற வேகத்தில் புதிதாக முளைத்த கைகளை மீண்டும், மீண்டும் வெட்டினார்; ஒவ்வொன்றும் தரையில் விழுந்து போர்க் களத்தில் ரத்த ஆற்றை மேலும் பெருக்கியது; ஆயினும் புதிதாக முளைத்த கைகள் முன்னர் இருந்த கைகளை போலவே வலிமை மிகையவைகளாகவே இருந்தன; அர்ஜுனனையும் அவனது வீரத்தையும் போல ஆயிரம் பேர் பகவான் ஸ்ரீமத் பரசுராமனை தாக்கினர் ||53||

அர்ஜுனனின் முறிந்து விழுந்த கைகள் ஒரு சிறிய மலை போல ஆயிற்று; அதைக் கண்ட பகவான் ஸ்ரீமத் பரசுராமர் சற்றே மனச் சோர்வடைந்தார், மேலும் அவர் ஆச்சரியப்பட்டார்: இந்த நிகழ்வுக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?; இது எப்படி இவ்வளவு வேகத்தில் நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ||54||

அவனுடைய கைகள் அழிக்கப்படாவிட்டால், நான் என்ன செய்தாலும் அவனுடைய தலை பாதுகாப்பாக இருக்கும், மேலும் அவன் இன்று இறக்கா விட்டால், என் சபதம் வீணாகி விடும்’ என்று ஸ்ரீமத் பரசுராமர் சிந்தித்தார்||55||

கடைசி நேரத்தில் நம்பிக்கையை இழப்பவரைப் போல, ஸ்ரீமத் பரசுராமரின் மனம் கவலையும் கலக்கமும் நிறைந்ததாயிற்று; அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவருடைய அறிவு முழுவதும் தவித்தது போல இருந்தது; அவர் யோசித்தார்: இந்த நாள் முற்றிலும் வீணாகி விடுமா? ||56||

என் தந்தை ஜமதக்னி முனிவர் என் பக்தி மிக்க அன்னை ரேணுகாதேவி இருவருமே தூய்மை வடிவானவர்கள்; நாங்கள் தேடிப் போற்றும் குருவும் தெய்வமும், தக்க வேளையில் அழிக்கும் கடவுளான சங்கரனே (சிவபெருமான்) ஆவர்||57||

அவர்கள் எனக்கு அருள் புரிந்தால் இந்த நாள் எனக்கு புகழும் பெருமையும் தரும் ; அர்ஜுனன் என் கரங்களாலேயே கொல்லப்படுவான்; அவனை அழிப்பேன் என்று நான் பூண்ட சபதமும் முழுமையடையும்||58||

அவர் இவ்வாறு சிந்திப்பதை நிறுத்திய மறுகணமே, திடீரென்றும் எதிர்பாராத விதமாக விண்ணுலகிலிருந்து ஒரு தெய்வீகக் குரல் எழுந்தது; அக்குரல் ஸ்ரீமத் பரசுராமரை நோக்கி மிக உருக்கமாகப் பேசியது ||59||

ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானின் அருளாற்றலினாலேயே, அர்ஜுனனுக்குப் புதிய கைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து முளைத்துக் கொண்டே இருக்கின்றன; அந்த கைகளின் மூலமும் விதையும் அவனது இதயத்திற்குள்ளேயே அமைந்துள்ளன; எனவே, முதலில் அவனது இதயத்தை எரித்துச் சாம்பலாக்குவீராக; அதன் பின்னரே அவனது கைகளை அழிப்பீராக ||60||

இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் தெய்வீக உதவியைக் கேட்ட அடுத்த கணமே, ஒரு கணம் கூட தாமதிக்காமல், மனதளவில் அந்த நெருப்பு எறி பொருளை நினைவு கூர்ந்தது; அதைக் கொண்டு அர்ஜுனனின் இதயப் பகுதியைத் தாக்கி, புதிய உறுப்புகள் முளைப்பதற்கான விதையை எரித்து விட்டார் ||61||

அடுத்த கணமே அவர் மீண்டும் அர்ஜுனனின் கைகளை வெட்டத் தொடங்கினார், தொள்ளாயிரத்து தொண்ணூற்றெட்டு கைகள் விரைவில் தரையில் விழுந்தன; இரண்டு கைகள் மட்டுமே எஞ்சின. தான் எவ்வளவோ முயன்றும் அவை தன் கைகளைப் பற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்த தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர் ததாஸ்து என்று கூறினார் ||62||

அப்போதுதான் மன்னன் அர்ஜுனன், தான் விரைவில் தன் உடலை இழக்க நேரிடும் என்பதையும், தான் விரும்பியபடியே தன் இறுதி நாட்களை எட்டி உள்ளதையும், தான் காத்திருந்தது வீணாகவில்லை என்பதையும் இறுதியாகப் புரிந்து கொண்டான்||63||

என் குரு தேவ கடவுள் ஸ்ரீமத் தத்தா போற்றி; அவர் இப்பொழுதும் என் உணர்வுப் புலன்களில் மகிழ்ச்சியை நிரப்பியுள்ளார்; நான் மனமுருகி வேண்டிக் கொண்டதை அவர் நிறைவேற்றியுள்ளார்; நானும் என்னிடம் உள்ள அனைத்தையும், நான் யார் என்பதையும் அவர் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன் ||64||

அவருடன் இணைந்து விட்ட நான் இனி அர்ஜுனன் அல்ல, நான் இருப்பு-உணர்வு-பேரின்பம் ஆகிய அனைத்தின் இருந்தும் விலகிக் கொள்கின்றேன்; இப்போது நான் அத்வைத நிலையில் உள்ளேன்; தெய்வீகத்துடன் இணைய உள்ளேன் ||65||

இப்போது என் உண்மையான வடிவத்தில் கவனம் செலுத்தி, என் புலன்கள் அனைத்தையும் அவற்றின் பொருட்களுடனான தொடர்புகளிலிருந்து விலக்கி, பின்னர் அவை அனைத்தையும் என் மனப் புலன்களில் ஒன்றிணைத்து, என் மனதை என் பிராண வாயுக்களுடன் ஒன்றிணைப்பேன்||66||

பின்னர் நான் அந்த உயிர் சக்திகளை மேலேறி பேரொளியில் ஒன்றிணையச் செய்வேன்; பின்னர் அந்த தெய்வீகப் பேரொளியை பரமாத்மனுடன் ஒன்றிணையச் செய்வேன்; இப்படியாக எண்ணிக் கொண்ட அர்ஜுனன் தான் பலமுறை எளிதாகச் செய்ய அறிந்திருந்ததைப் போலவே அவற்றை செய்தான்; அத்வைத நிலையில் இருந்ததினால் அவன் தெய்வீகத்திலிருந்து வேறுபடாதவனானான் ||67||

அந்த உயிர் சக்திகள் அனைத்தும் மைய சூட்சும நரம்புகள் வழியாக பாய்ந்து செல்ல உள்ளே ஒரு சூட்சும பிரபஞ்ச ஒளி இதயத்தில் தெளிவாகத் தெரிந்தது; மைய சுஷும்னா நரம்புக் கால்வாய்களின் பாதையை தேர்ந்து எடுத்துக் கொண்டு, அவன் தேடிய இலக்கை நோக்கி அவனது சுவாசம் உயர்த்தப்பட்டது||68||

இறைவன் ஸ்ரீமத் பரசுராமர், அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்து, தக்க தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தார்; பின்னர், கச்சிதமான நேரத்தில் அர்ஜுனனின் தலையை பலமாகத் தாக்கினார்; அடுத்த கணமே, தேவர்களின் வாழ்த்து முழக்கங்கள், வெற்றி கோஷங்கள் மற்றும் ஆரவாரங்களுக்கு இடையே அர்ஜுனனின் உடல் தரையில் வீழ்ந்தது ||69||

அந்த மரண அடி எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தியது; அர்ஜுனனின் உயிர் சக்தி தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் சக்தியோடு இரண்டறக் கலந்தது; தான் தேடிய இறைவனோடு உணர்வுபூர்வமாக ஒன்றிணையும் முக்தியை அர்ஜுனன் அடைந்தான்; சமஸ்கிருதத்தில் ‘சாயுஜ்யம்’ என்று போற்றப்படும் இந்த நிலை, தேவர்களுக்கே கிடைப்பதற்கு அரிதான ஒன்றாகும்’ ||70||

தன் வாழ்நாள் முழுவதும் தன் அகக் கரணங்களால் இறைவன் ஸ்ரீமத் தத்தரை இடைவிடாமல் நினைத்து வந்தவனும், அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவருமான அர்ஜுனனை, வேறு யாரால் அழித்திருக்க முடியும்? இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் இங்கு ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டார்||71||

இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் புகழ்பெற்ற பக்தனான அர்ஜுனன், தான் உயிருடன் இருந்தபோதே தனக்குச் சொந்தமான அனைத்தின் மீதும் பற்றற்று வாழ்ந்தவன்; வாழும் போதே ஞான ஒளியையும் அதன் ஆனந்தத்தையும் அனுபவித்த அவன்; இப்போது மரணத்திற்குப் பிறகு இறைவனோடு ஒன்றிணையும் அந்த அரிய முக்தியைப் பெற்றான்||72||

விண்ணுலகில் இருந்த தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்; அவர்கள் மேலிருந்து வாழ்த்து முழக்கங்களையும் வெற்றி கோஷங்களையும் எழுப்பி ஆரவாரம் செய்தனர்; அவர்கள் இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் மீது பக்தியுடனும் களிப்புடனும் மலர்களைப் பொழிந்தனர்; அவர்களின் மகிழ்ச்சியை அவர்களாலேயே அடக்கிக் கொள்ள முடியாது போல அது காட்சியளித்தது||73||

தேவ இனத்தவரான கந்தர்வர்கள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் ஒருமித்த குரலில் இசை பாடினர்; தெய்வீக வாத்தியங்களின் முழக்கத்தோடு தேவ மங்கையர்கள் நடனமாடினர்; அந்தப் பாடல்கள் அனைத்தும் இறைவன் ஸ்ரீமத் பரசுராமரின் புகழைப் போற்றுபாவைகளாகவே அமைந்திருந்தன ||74||

பிருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் பல்லாண்டு பல்லாண்டு போற்றி; இவரே பரம்பொருளான புருஷோத்தமன் ஆவார்; ஓ இறைவா, நீயே சகல மங்கலங்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்கிறாய்; உனது செயல்கள் ஈடு இணையற்றவை’ என்று தேவர்கள் பாடிப் போற்றினர்||75||

யட்சர்கள் மற்றும் கின்னரர்கள் போன்ற தேவ இனத்தவரை வென்றவன் அர்ஜுனனே ஆவான்; பிற தேவர்களாலோ அல்லது அரக்கர்களாலோ தன்னை கொல்ல முடியாத வலிமை பெற்று இருந்தவன் அர்ஜுனன்; தன் சொந்த பலத்தால், அக் காலத்தில் வாழ்ந்த மிக வலிமையான வீரர்களையெல்லாம் கட்டிப் போட்ட அர்ஜுனனின் முடிவை நிகழ்த்திய நீரே பாக்கியசாலி, ஓ இறைவன் ஸ்ரீமத் பரசுராமா’ ||76||

இக் காட்சியை நேரில் கண்டு கொண்டிருந்த மக்கள் கூட்டம் இவ்வாறு இறைவன் ஸ்ரீமத் பரசுராமரை புகழ்ந்து போற்றியது; மேலும், நினைத்ததை அருளும் கற்பக விருட்சத்தின் மலர்களை அவர் மீது பொழிந்தனர்; தான் ஏற்றுக் கொண்ட சபதம் வெற்றிகரமாக நிறைவேறியதை எண்ணி, இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் தன் உள்ளத்தில் மகிழ்ச்சி அடைந்தார் ||77||

பின்னர், ஸ்ரீமத் பரசுராமர் தெய்வீகப் பசுவான காமதேனுவை அழைத்துக் கொண்டு, தன் தந்தையின் ஆசிரமத்திற்குள் திரும்பினார்; அங்கே தந்தையை வணங்கிய பிறகு, அந்த முனிவரான தன் தந்தையிடம் அவர் இவ்வாறு கூறினார் ‘தந்தையே, நான் அந்த அரசனைக் கொன்று விட்டேன் ||78||

இன்று நான் போரில் ஈடுபட்டேன்; அர்ஜுனனின் முழுப் படையையும் நான் அழித்தேன்; அவனது கைகளைத் துண்டித்தேன்; மேலும், அர்ஜுனனின் தலையையும் வெட்டி வீழ்த்தினேன் ||79||

மகிழ்ச்சிப் பெருக்கோடு பரசுராமர் கூறிய இச் சொற்களைக் கேட்டதும், முனிவர் ஜமதக்னி கடும் சினம் கொண்டு கூறினார் ‘என் பார்வையிலிருந்து விலகிச் செல்; நீ பெரும் பாவச் சுமையோடு இங்கு திரும்பியிருக்கிறாய் ||80||

அர்ஜுனன் தன் குடி மக்கள் அனைவரின் துன்பங்களையும் போக்கி வந்தவன் ஆவான்; அவன் மீதான அச்சமும், அவன் கொண்டிருந்த ஒழுக்கமும் மூன்று உலகங்களிலும் கோலோச்சின; தன் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற உயிர்களுக்கு இன்பம் அளித்தவனும், சிறந்த பக்தனாகப் புகழ் பெற்றவனும் ஆகிய அவன், இத்தகைய கொடூரமான மரணத்தை அடையத் தகுதியானவனா? ||81||

அர்ஜுனனின் ஆட்சி பரவியிருந்த இடமெல்லாம், நாங்கள் எவ்விதத் தடையோ இடையூறோ இன்றித் தவம் இயற்றி வந்தோம்; அவன் தன் குடி மக்களை, மிகுந்த பாசம் கொண்ட பெற்றோரைப் போலவே கவனித்து வந்தான்; அப்படியிருக்க, நீ ஏன் உன் சினத்தை அவன் மீது கொட்டினாய் ||82||

ஒருவேளை அர்ஜுனன் விளையாட்டாகவோ, அல்லது ஏதோ ஒரு கண நேர ஆவேசத்தாலோ நம் பசுவை எடுத்துச் சென்றிருந்தாலும் கூட, நான் அவனைச் சபித்திருக்க மாட்டேன்; இனியும் சபிக்க மாட்டேன்; ஆனால் மகனே, சிந்தனை இன்றி நீ அவசரத்தில் எத்தகைய கொடிய செயலைச் செய்து விட்டாய்? ||83||

அர்ஜுனன் அந்தணர்களுக்கு எண்ணற்ற பசுக்களையும் பிற பரிசுகளையும் தானமாக அளித்தவன்; யோக சித்தியும் தேவலோகச் செல்வங்களும் அவன் காலடியில் பணிந்து நின்றவை; இறைவன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பக்தரும், மெய்ஞானம் பெற்ற ஆத்மாவும் ஆன அவனுக்கு, நம்முடைய இந்தப் பசுவின் தேவைதான் என்ன இருக்கப்போகிறது? இதற்கு பதில் கூறுவாயாக ||84||

அவனுடைய துடுக்குத்தனமான செயல் ஒரு கண நேர உணர்ச்சிப் பெருக்காகவே இருந்திருக்கக் கூடும்; அந்த உணர்ச்சி தணிந்ததும், அவன் காமதேனுவை நம்மிடமே திருப்பிக் கொடுத்திருப்பான்; ஆனால் நீயோ வீணாக அவனது தலையைக் கொய்து விட்டாய்; அதன் விளைவாக, இப்போது மலை அளவிலான பெரும் பாவம் உன் தலையில் சுமத்தப்பட்டுள்ளது||85||

ஒரு அறநெறி சார்ந்த மன்னன், பத்து மெய்ஞானம் பெற்ற அந்தண ஆசான்களுக்கு இணையான தகுதி வாய்ந்தவன் என்று வேதங்கள் கூறுகின்றன; அவனை நீ கொன்ற இந்த அறமற்ற செயல், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட தர்ம நெறிக்கு முரணானது; உன்னுடைய இச்செயல் மிகக் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும் ||86||

தகுதி வாய்ந்த, போற்றுதலுக்குரிய அந்தணர்களால் முடி சூட்டப்பட்ட ஒரு மன்னனை, சர்வ உயிரினங்களும் போற்றி வணங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன; அர்ஜுனனும் அத்தகைய நற்பெயரைப் பெற்றிருந்தான்; ஆகையால், ஓ ஸ்ரீமத் பரசுராமா அர்ஜுனனைக் கொன்றதன் மூலம் நீயும் பெரும் பாவம் செய்து விட்டாய்’ ||87||

தன் தந்தையின் இக் கடுமையான கண்டனச் சொற்களைக் கேட்டு, ஸ்ரீமத் பரசுராமர் திகைத்து மௌனமானார்; அவரது உள்ளத்தில் துயரமும் மன வேதனையும் தாங்க முடியாத அளவிற்குப் பெருகின; அவர் உடனடியாகத் தன் தந்தையிடம் மன்னிப்புக் கோரி, அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்; மிகுந்த பணிவுடன் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார் ||88||

‘தந்தையே, நான் அறியாமையினாலேயே இச்செயலைச் செய்து விட்டேன்; விவேகமற்றுச் செயல்பட்டு, பெரும் பாவங்களைச் சுமந்து கொண்டேன்; இப்போது என்னைக் கரையேற்றவும், வழிகாட்டவும் உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? ||89||

ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமாகத் திகழ்பவரே; என்மீது கருணை கொண்டு, உமது உதவிக் கரத்தை நீட்டுவீராக; என்னால் இயன்ற முழு வலிமையோடும், நான் உமது உறுதியான திருவடிகளையே பற்றிக் கொள்கிறேன்; என் தெய்வமே, என்னைக் கரையேற்றுவீராக; எனக்கு நல்வழி காட்டுவீரா’ ||90||

இவ்வாறு ஸ்ரீமத் பரசுராமர் தன் உள்ளம் முழுவதும் ஆழ்ந்த மன வருத்தமும் துயரமும் நிறைந்திருக்க, கண்ணீர் மல்க தன் தந்தையிடம் உண்மையாகவே மன்றாடினார்; அத்தகையதொரு பரிதாபகரமான நிலையில் நின்ற ஸ்ரீமத் பரசுராமரை கண்டதும், அந்தப் முனிவரின் இதயம் இரக்கத்தால் உருகியது ||91||

உன்னுடைய பாவங்கள் நான் கூறியது போலவே மிகக் கொடியவை என்று நீ உணர்ந்து ஏற்றுக் கொள்வாயானால், உடனேவெளிப்புற ப்படு; என்மீது நீ வைத்திருக்கும் இந்த நம்பிக்கையைச் சிறிதும் தளர விடாமல், புனிதத் தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள நீ உடனடியாகப்வெளிப்புற ப்படுவாயாக||92||

சமஸ்கிருதத்தில் பாரத்-கண்டம் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில், இப்போது நீ உணரும் துயரத்தை மீண்டும் அனுபவித்து, புகழ் பெற்ற அனைத்துப் புனிதத் தலங்களுக்கும் சென்று, அவற்றின் புனித நீரைப் பருகி, அங்கே தூய்மைப்படுத்திக் கொள்ள நீராடு ||93||

புனித கங்கையின் நீரை நிரப்பி, அதை உன்னுடன் எடுத்துக் கொண்டு தென்முனைக்குச் செல்; அந்தப் புனித நீரை இந்தியப் பெருங்கடலுக்கு அர்ப்பணி; அந்தப் பெரும் கடல்களைப் பக்தியுடன் வணங்கு ||94||

பின்னர் அந்தப் புனிதமான கரைகளின் புனித மணலை நிரப்பி, அவற்றை உன்னுடன் எடுத்துக் கொண்டு, நீ கங்கையை எடுத்த இடத்திற்கே திரும்பிச் செல்; பின்னர் அந்தப் புனித நதியில் உன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளும் விதத்தில் நீராடி, அந்த மணலை அதன் தடையற்ற ஓட்டத்தில் விட்டு விடு ||95||

நான்கு புனிதத் தலங்களையும், சிவபெருமானின் பன்னிரண்டு புகழ் பெற்ற ஆலயங்களையும் தரிசித்து, ஏழு புனித நகரங்களையும்* சென்றடைந்து அங்கும் தரிசனங்கள் செய்து அவற்றின் தூய நிலைகளை கண்டு மன மகிழ்ச்சி அடைவாயாக. {*அயோத்தி, மதுரா, ஹரித்வார் (மாயா), வாரணாசி (காசி), காஞ்சிபுரம் (காஞ்சி), உஜ்ஜயினி (அவந்திகா), மற்றும் துவாரகா (துவாரவதி)} ||96||

ஸ்ரீமத் பரசுராமர் அந்த அறிவுரைகளைக் கவனமாகக் கேட்டு, தன் தந்தையின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, மிகுந்த மரியாதையுடன் அவரை வணங்கி, தன் தாயின் அனுமதியுடன் அந்தப் புனிதமான ஆசிரமத்தை விட்டு வெளியேறினார் ||97||

ஸ்ரீமத் பரசுராமர் தன் செய்த பாவங்களை அனைவரும் கேட்கும்படி உரக்கக் கூறிய பின்னர் தந்தை வழி காட்டியபடி யாத்திரையை முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன், தேவையான சடங்குகளை செய்து முடித்த பின்னர் தனது பாதையில் அடியெடுத்து வைத்தார் ||98||

தன் தந்தை எப்போதும் தெய்வீகத்துடன் இணைந்தவர் என்பதை ஸ்ரீமத் பரசுராமர் அறிந்திருந்தார்; எனவே அவரிடமிருந்து பெற்ற அறிவுரைகள் தெய்வத்திடம் இருந்து பெற்றவர்களுக்கு சமமானவை; ஆகையால், அவர் கூறிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிறைவான மனதுடன், முழுமையான பக்தியுடனும் நடந்து சென்றார் ||99||

குரு வேத தர்மா கூறினார், ‘கற்றறிந்தவர்கள் ஸ்ரீமத் பரசுராமர் எல்லா வடிவங்களிலும் இருக்கிறார் என்பதை அறிவார்கள்; அவர் தனது சொந்த பக்தர்களுக்கு எதிராக எப்படி நடப்பார் ?; அவர் எந்த பாவங்களாலுமே தீண்டப்படாதவராக இருக்கிறார்; எனவே வருத்தமும், துயரமும் அவருக்கு எப்படி ஏற்பட முடியும்?||100||

தெய்வத்தோடு இணையாதவர்களும், அறியாதவர்களும், ஆசைகளுக்கும் காமத்திற்கும் அடி பணிகிறார்கள்; முழு மனதார பாவங்களை ஒப்புக் கொள்வது கூட, அகங்காரத்தின் காரணமாக ஒன்றை ஏற்றுக் கொள்வதாகும் ||101||

ஸ்ரீமத் பரசுராமர், ஸ்ரீமத் விஷ்ணுவின் செயல் ஆற்றல் அவதாரம்; அவர் எப்படி அகங்காரத்திற்கோ அல்லது தற்பெருமைக்கோ ஆளாகி இருக்க முடியும் ?; படைப்பிற்கு ஒரு முன் மாதிரியை அமைப்பதற்காகவே அவர் அதைச் செய்யத் தேர்ந்தெடுத்தார்’ ||102||

அவர் வட திசையில் அமைந்துள்ள புனிதமான பத்ரிகா ஆசிரமத் திருத்தலத்திற்குச் சென்றார்; அங்கு நாராயணப் பெருமானை வணங்கினார்; பின்னர், அங்குள்ள கங்கை நதியின் புனித நீரைக் கையில் ஏந்தி, அந்நீரில் தம் திருவடிகளைப் பதித்த மாத்திரத்திலேயே, அந்த நதியையும் அவர் புனிதப்படுத்தினார் ||103||

அதன்பின், தென் திசை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்த அவர், வழியில் யமுனை, க்ஷிப்ரா, நர்மதை, தாபி, பயோஷ்ணி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நந்தா, புண்யதா மற்றும் தாமிரபரணி ஆகிய புனித நதிகளின் கலைகளுக்கும் சென்று அவற்றில் நீராடினார் ||104||

பண்டைய பாரத நாட்டின் தென் முனையை அடைந்த அவர், அங்குள்ள கடலில் நீராடி, தம் தந்தையார் இட்ட கட்டளையை நிறைவேற்றினார்; பின்னர், அங்கிருந்து சிறிது மணலை எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கி, முருகப் பெருமானின் (கார்த்திகேயரின்) புனிதத் தலங்களுக்கு*சென்று வழிபட்டார்.
{*முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகனின் ஆறு மிக முக்கியத் தலங்களாகும். அவை: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி (திருவாவினன்குடி), சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை } ||105||

மீண்டும் வடதிசை நோக்கிச் சென்ற அவர், சிவ காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி ஆகிய திருத்தலங்களில் தம் திருவடிகளைப் பதித்தார்; அதன்பின் புனித மலைகளுக்கும் சென்றார்; ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் மல்லிகார்ஜுனத் திருத்தலத்தை அடைந்த அவர், அங்கு வீற்றிருக்கும் விரூபாட்சப் பெருமானை வணங்கினார்||106||

கோகர்ணத்தை அடைந்ததும் ஸ்ரீமத் தத்தப் பெருமானை வழிபட்டார்; கோலாப்பூரில் அன்னை தேவியைப் போற்றித் துதித்தார்; திரியம்பகேஸ்வரத்தில் ஸ்ரீமத் சிவபெருமானுக்கும் தம் வணக்கத்தைச் செலுத்தினார்; அதன்பின், மேற்கு இந்தியாவில் துவாரகைக்கு அருகிலுள்ள சோமநாதத் திருத்தலத்தை அடைந்தார்||107||

குஜராத்தில் அமைந்துள்ள, கபில முனிவர் மற்றும் தேவஹூதி அன்னையாரின் புனிதத் தலமான சித்தபூர்; ராஜஸ்தானில் உள்ள புண்ணியத் தீர்த்தமான புஷ்கர்; உத்தரப் பிரதேசத்தில் மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாகை ஆகிய இடங்களை தென் திசையிலிருந்து தாம் கொண்டுவந்த மணலைச் சமர்ப்பிக்க அவர் தேர்ந்தெடுத்தார்||108||

அங்கிருந்து காசிக்குத் தொடர்ந்து சென்று, தாம் சங்கற்பித்தபடியே தனது புனித யாத்திரையை நிறைவு செய்தார்; பின்னர் விரைவாகத் தனது தந்தையாரான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து, தாம் மேற்கொண்ட அந்தப் பணி வெற்றிகரமாக நிறைவேறியதை அவருக்குத் தெரிவித்தார்||109||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இருபத்து ஒன்றாவது(21) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 109
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்து ஒன்றாவது(21) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
2164 + 109 = 2273

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம் -7, அத்தியாயம் -21 முடிவடைந்தது
அத்தியாயம் -22 தொடர்கின்றது