COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

 

பாகம் -1 : மங்கல துவக்கம்

அத்தியாயம்-4
கார்த்தவீர்யனின் பிறப்பும் கர்கா முனிவரின் அறிவுரையும்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு தொடர்ந்து கூறலானார் ‘சத்ய யுகத்தில், சந்திர குலத்தை சேர்ந்தவர்களும் சோம வம்சத்தில் பிறந்தவர்களுமான புகழ் பெற்ற ஹைஹேய யுத்த மன்னர்கள் வழி வந்த க்ஷத்திரிய மன்னர்களின் மரபில் வந்தவரும், தமது பகைவர்களை வென்று தனது ராஜ்யத்தை விஸ்தாரப்படுத்திக் கொண்டு சக்ரவர்த்தியாகவும் நீதிமானாகவும் திகழ்ந்த கிருதவீர்யன் (Krutveerya) என்பவன் பிறந்தான் ||1||

அவன் நூறு புதல்வர்களைப் பெற்றான்; ஆனால் அவர்கள் அனைவரும் ஸ்யாவன முனிவர் என்பவரால் சாபம் பெற்று இறந்து போனார்கள்; அதன் விளைவாக பெரும் துயரமுற்ற மன்னன் தனது அரசாட்சியை துறந்து வெளியேறினான் ||2||

அச்சமயத்தில், தற்செயலாக அவனது குரு அவனை சந்திக்க வந்தார்; மன்னன் தன் உள்ளத்தில் இருந்த துயரத்தையும், சோகத்தையும் சுமந்தவாறே, அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தனது குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கினான் ||3||

அதன் பின் எழுந்த மன்னன் குருவிடம் கதறி அழுதான்; ‘நான் முற்றிலும் அழிந்து விட்டேன்; அனைத்தையும் இழந்து விட்டேன்; என் புதல்வர்கள் அனைவரையும் இழந்து விட்டேன்; இனி நான் என்ன செய்ய உள்ளது?; ஆனால் என் நல் விதியின் பயனாக தங்கள் தெய்வீக மற்றும் புனிதத் திருவடிகளைக் காணும் பேறு பெற்றேன் என்பதினால் என் இதயத்தை வாட்டும் பெரும் துயரத்திலிருந்து நான் விடுபடுவேன் என்று நம்புகிறேன்’||4||

குரு பதிலளித்தார் ‘மன்னா, பொறுமையுடன் இருந்தபடி நான் உனக்கு கூறும் வழியைக் பின்பற்றி நடந்தால், அதன் மூலம் நன்மை கிடைக்கும்; மேலும் உன் வம்சமும் தழைத்துத் தொடரும் ||5||

சூரிய பகவானை பிரார்த்தனை செய்து கொண்டு கடைபிடிக்கும் ஒரு விரதம் உள்ளது; அது அனைத்துப் பாவங்களையும் போக்கி, மன அமைதியை அருளக் கூடியது; அதை நீ வெற்றிகரமாக செய்து முடித்தால் உனக்கு பெரும் மகிழ்ச்சியையும், சிறந்த ஒரு புதல்வனையும் வரமாக அளிக்கும்||6||

ஒரு பெண் மலட்டுத்தன்மை கொண்டவளாக இருந்தாலோ, அல்லது இறந்த குழந்தைகளையே பெற்றுக் கொண்டு இருந்தாலோ, அவள் துணிச்சலுடன் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருவாளேயானால் அவள் நிச்சயமாக ஒரு புகழ்பெற்ற குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்பது இந்த விரதத்தின் சிறப்பு அம்சம் ஆகும் ||7||

எவர் ஒருவளுக்கு கருச் சிதைவுகள் தாமாகவே ஏற்படுகின்றனவோ, எவர் ஒருவள் தொடர்ந்து கருச்சிதைவு செய்து கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்களோ, அல்லது எவள் ஒருவளுக்கு குறைப் பிரசவம் ஏற்பட்டு, பிறக்கும்போதே குழந்தை இறந்து விடுகிறதோ…. ||8||

எந்த குழந்தை உயிருடன் பிறந்தும் விரைவில் இறந்து விடுகின்றனவோ; எந்த குழந்தைகள் தீய ஆவியால் பீடிக்கப்பட்டு விடுவார்களோ; அல்லது பிறந்த குழந்தைகள் இளம் பருவத்திலேயே இறந்து விடுவார்களோ; அல்லது பிறந்து வளரும் குழந்தைகள் மந்த புத்தியுடன் இருப்பார்களோ….||9||

அல்லது பிறந்த குழந்தைகள் நோயால் பீடிக்கப்பட்டு இருப்பார்களோ, பேய் அல்லது பிற தீய ஆவிகளால் குழந்தைகள் ஆட் கொள்ளப்பட்டு இருப்பார்களோ, அல்லது விபத்துக்களில் இறந்து விடுவார்களோ, அத்தகைய அனைத்துக் குறைகளையும் அல்லது பாவங்களையும், இந்தச் விரதத்தை கடை பிடிப்பதில் மூலம் போக்கிக் கொள்ளலாம்||10||

ஒரு மாதத்தின் ஏழாம் நாள், ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் அன்றைய தினத்தில் சந்திரன் சாதகமான நிலையில் அமர்ந்து இருக்கின்றாரா என்பதை பஞ்சாங்கத்தைப் பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகு இந்த விரதத்தை மேற்கொள்ளத் தொடங்க வேண்டும் ||11||

எந்த ஒருவர் இந்த விரதத்தை மேற்கொள்வாரோ அவர் முதலில், பண்டிதரைக் கொண்டு சூரிய விரதத்தை மேற் கொள்வதற்கான சங்கல்பத்தை (உறுதி மொழியை) செய்து கொள்ள வேண்டும்; அதன்பின், நாந்தி சிரார்தம்* எனும் சடங்கை (Naandhi Shraadh) முன்னோர்களுக்காக செய்த பின்னர், விரதச் சடங்கு முழுவதையும் வழி நடத்திக் கொடுக்க தக்க ஒரு குருவை வைத்துக் கொண்டு வேண்டுதலுடன் விரதத்தை துவக்க வேண்டும் வேண்டும்
{* நாந்தி சிராத்தம் (அல்லது நந்தி சிராத்தம்) என்பது திருமணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன், மறைந்த முன்னோர்களின் (தாத்தா, கொள்ளுத் தாத்தா, மாதாமஹர்கள் – தாய் வழி முன்னோர்கள்) ஆசியைப் பெற செய்யப்படும் ஒரு முக்கியமான பித்ரு கர்மா ஆகும்; நாந்தி என்றால் மங்களம் என்று பொருள்; குடும்பத்தில் மங்களம் நிலைக்க இது அவசியம் ஆகும் }||12||

விரதத்தை வழி நடத்திக் கொடுக்கும் குரு விரதத்தை மேற்கொள்பவரின் இல்லத்தை முதலில் புனிதப்படுத்திய பின்னர் அங்கு யாகத் தீ (அக்னி) வளர்க்க வேண்டும்; அதன் பின்னர் அனைத்துச் சடங்குகளையும் அவர் முறைப்படி செய்து, புனித நீர் நிறைந்த கலசத்தை (குடத்தை) உரிய இடத்தில் நிறுவிய பின்னர் அந்தக் கலசத்தின் மீது தேவதைகளை ஆவாஹனம்* செய்து வைக்க வேண்டும்
{*ஆவாஹனம் என்பது யுகங்களிலும் பூஜைகளிலும் தெய்வத்தையோ அல்லது பித்ருக்களையோ (முன்னோர்கள்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் மந்திரங்கள் மூலம் எழுந்தருள வைக்கும் முறையாகும். இது எந்த ஒரு பூஜைகளிலும் அல்லது யாகங்களில் துவக்கத்தில் செய்யப்படும் முதல் நியதி ஆகும்} ||13||

சூரிய மண்டல தேவர்கள், பதினொரு ருத்திரர்கள், ஏழு மாத்ருகைகள் (சப்த மாதர்கள்) ஆகியோர்களின் தங்க சிலைகளை அங்கு நிறுவ வேண்டும்; அதன்பின், அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்ற வேண்டுதலுடன் அந்தச் சடங்கு நடைபெறும் இடத்தைச் சுற்றி ஏழு நீர் நிரப்பிய கலசங்களை வைக்க வேண்டும்||14||

அந்த சடங்கு முறைகளை செய்து முடித்த பின்னர் சாந்தி-சூக்தம் (Shanti-Suktha)* எனும் மந்திர உச்சாடனை செய்யப்பட வேண்டும்; அது அமைதியான சூழ்நிலை நிலவ வழி வகுக்கும்; அதன் பின்னர் அன்வாதானம்** (Anvaadhaan) எனும் சடங்கின் மூலம் யாகத் தீயை தொடர்ந்து எரிய வைத்து பண்டிதர் மூலம் யாகத்திற்கு தேவையான ஆகுதிகளைச்***(ஹோம பொருட்கள்) அதில் போட வேண்டும்.
{(i)* சாந்தி சூக்தம் (Shanti Suktam) என்பது வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை வேண்டிப் பாடும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்;இது பிரபஞ்ச அமைதி, இயற்கை, மற்றும் தனிமனித அமைதிக்காக விண்ணப்பம் செய்கிறது (ii)**அன்வாதானம் (Anvadhanam) என்பது ஹிந்து சமய சடங்குகளில், குறிப்பாக வேள்விகள் (ஹோமம்) முந்தைய நாள் செய்யப்படும் ஒரு முக்கிய சடங்கு ஆகும்; மறுநாள் செய்யவிருக்கும் பிரதான ஹோமத்திற்காக அக்னியைத் தயார் நிலையில் வைத்தல், மனதை ஒருமுகப்படுத்துதல் மற்றும் தெய்வங்களின் ஆசியைப் பெறுதல் இதன் நோக்கமாகும். (iii) **ஹோமத்தில் ‘ஆஹுதி’ என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்; ஆஹுதி என்பது மந்திரங்களை உச்சரித்து, நெய், மூலிகைகள், தானியங்கள், பலன்கள் மற்றும் பிற தெய்வீக மற்றும் புனிதப் பொருட்களை ஹோம குண்டத்தில் உள்ள அக்னியில் சமர்ப்பிப்பதாகும்; அது அக்னி தேவனின் மூலம் அந்தந்த தெய்வங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது என்பது ஐதீகம்}||15||

தெய்வீக மற்றும் புனிதமான சமித்து கட்டைகள் {யாகத்தில் பயன்படுத்தப்படும் விறகுகள்}, எள், பார்லி, பாயசம் மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு, ஒவ்வொரு தேவதைகளுக்கும் 108 முறை ஆஹுதி வழங்கப்பட வேண்டும்; அதன்பின், யாகத்திற்குப் பயன்படுத்த எஞ்சியுள்ள பொருட்களைக் கொண்டு, பண்டிதர் தேவிக்கு ஆகுதிகளை வழங்குவார்; தேவைப்பட்டால், பண்டிதரின் அறிவுரைக்கேற்ப மேலும் சில சடங்குகளையும் கூடுதலாக மேற் கொள்ளலாம் ||16||

யாகச் சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்ததும், அங்குள்ள குழந்தைகள் உயிருடன் உள்ள, திருமணம் ஆன மங்கையர்களிடம் புனித நீர் கலசத்தை வழங்க வேண்டும்; அவர்கள் புரோகிதர் கூறுகின்றபடி விரதத்தை மேற்கொள்ளும் தம்பதியினர் மீது அந்தப் புனித நீரை தெளிப்பார்கள் ||17||

அப்பொழுது, சூரிய மண்டலத்தின் அனைத்து தேவர்களும், மும்மூர்த்திகளும், விண்ணுலகத்தை சேர்ந்த தெய்வங்களும் பிறக்க உள்ள குழந்தையைப் பாதுகாக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுவார்கள்; இதன் விளைவாக, விரதத்தை மேற்கொள்ளும் தம்பதியினருக்கு நீண்ட ஆயுள் கொண்ட மகன் அல்லது மகள் பிறப்பார்கள்||18||

பேய் பிசாசுகளிடம் இருந்து இவர்களுக்கு பிறக்கும் குழந்தை பாதுகாக்கப் படட்டும்; தீக் காயங்கள், சனி மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும் வகையில் இருக்கும் பிற கோள்களின் தீய விளைவுகள் அனைத்திலும் இருந்தும் குழந்தையை தினமும் பாதுகாத்து வரப்பட வேண்டும்; இரவோ பகலோ, எக் காலத்திலும், எவ்விதத் துன்பமும் இக்குழந்தையை அணுகாதிருக்க அருள் புரியட்டும் என்றெல்லாம் பிரார்த்தித்தவாறு , விரதத்தை மேற்கொள்ளும் தம்பதியர் மீது சுமங்கலிப் பெண்கள் புனித நீரை தெளிப்பார்கள் ||19||

இச் சடங்கு முடிந்ததும், புனித நீராடல் மேற் கொள்ளப்பட வேண்டும். விரத சடங்கை நடத்தி வைக்கும் பண்டிதர் மூலம் சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திரங்களை கொடுக்க வேண்டும்; அதன் பின்னர், அவரவர் வசதிக்கேற்ப, அந்த விரத சடங்கை நல்ல முறையில் நடத்தி வைத்த புரோகிதர்கள் மனம் மகிழும் வகையிலான சன்மானமும் வழங்க வேண்டும் ||20||

மேலும், அந்த சடங்கை நடத்தி வைத்த தலைமை பண்டிதருக்கு ஒரு பசுவை தானமாக அளிக்க வேண்டும்; அத்துடன், எள் நிறைந்த ஒரு பாத்திரத்தில் காலதேவனை* ஆவாஹனம் செய்து, அவரையும் தானமாக வழங்க வேண்டும்; இவ்வாறு அனைத்தையும் அவருக்கு அளித்த பிறகு, அந்த சடங்கில் பங்கேற்ற அனைத்து பண்டிதர்களுக்கும் விருந்து கொடுக்க வேண்டும்.
{*கால பைரவரையே கால தேவன் என்பார்கள்; அவர் சிவ பெருமானின் ருத்ர ரூபமாக இருப்பவர்; சிவன் கோயிலின் வடக்கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்}||21||

இனிப்புப் பாயசம் (பால் சோறு) உள்ளிட்ட உணவுகளை, விருந்து உண்ணும் பண்டிதர்களின் மன விருப்பத்திற்கேற்ப பரிமாற வேண்டும்; பின்னர் அவர்களைப் பணிவுடன் வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொருவருக்கும் நல்ல முறையிலான பரிசுகளையும் வழங்க வேண்டும்; இவ்வாறு செய்வதன் மூலம், அனைத்து விதமான துரதிர்ஷ்டங்களையும் வென்று விடலாம் ||22||

இந்த விரதத்தை மேற்கொண்ட இல்லறத்தரசி, ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கொண்ட ஒரு மகனைப் பெறுவாள்; அந்த மகன் நூறாண்டுகள் இன்புற்று வாழ்வான். அவனுக்குத் துயரமோ வலியோ எது எழுந்தாலும் அவை அனைத்தும் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைத் தீயில்* விழுந்து அழிந்து போகட்டும்.
{*வட வாக்கினி எனும் தீயானது கடல் நீருக்கு அடியில் எப்போதுமே எரிந்து கொண்டிருக்குமாம்} ||23||

பிரம்மா, ஹரி (விஷ்ணு), ஹரன் (சிவன்) ஆகியோரும் முருகப் பெருமான், இந்திரன், வாயுதேவன் மற்றும் அக்னி தேவன் ஆகியோரும் இணைந்து, துரதிஷ்டத்திற்குக் காரணமான அனைத்தையும் அகற்றி அருளட்டும் என்ற பொருள் கொண்ட மந்திரங்களினால் அந்த விரதத்தை மேற்கொண்ட தம்பதியினரை அந்த பண்டிதர்கள் வாழ்த்துவார்கள் ||24||

அதன் பிறகு விரதத்தின் பிரசாதங்கள் அனைத்தையும் தெய்வத்திற்கு அர்ப்பணித்த பிறகே அந்த குடும்பத்தின் தலைவர் தமது குடும்பத்தினருடன் உணவு அருந்த வேண்டும்; அந்த விரதத்தினால் மனம் மகிழும் சூரிய பகவானின் அருளினால் அனைத்து இடர்பாடுகளும் நீங்கி, ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் கிடைக்கும்’; இவ்வாறு மன்னனின் குரு கூறினார் ||25||

தமது குருநாதர் கூறிய அனைத்தையும் கேட்ட மன்னன், மிகுந்த மகிழ்ச்சியுற்றான்; தன் குருவை வணங்கிப் போற்றிய அவன், குரு அறிவுறுத்தியபடியே அந்த விரதத்தை முழுமையான பக்தியுடன் கடைப் பிடிக்கத் தொடங்கினான் ||26||

இப்படியாக இருக்கையில் ஒரு நாள் ஞானி என்று போற்றப்படும் பெருமைக்குரிய , யாஜ்ஞவல்கிய முனிவரின் பக்தி மிக்க மனைவியான அன்னை மைத்ரேயி, எதிர்பாராத விதமாக மன்னனையும் அவரது குடும்பத்தினரையும் காண அரண்மனைக்கு வருகை தந்தார்; அவளை மெத்த அன்புடன் வரவேற்ற அரசி அவர் கால்களில் விழுந்து வணங்கி, தன் துயரத்திற்குக் காரணமான நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்துக் கூறினாள்||27||

அதைக் கேட்ட மைத்ரேயி அவளுக்கு இன்னொரு அறிவுரையையும் கூறினாள் ‘நீங்கள் தெய்வ நாகமான ஆனந்தாவை வழிபடும் விரதத்தை கடைப் பிடித்தால் அதன் விளைவாக, நீங்கள் மீண்டும் ஒரு குழந்தையைப் பெறுவீர்கள்; இவ்வுலகில் மிகவும் சக்தி வாய்ந்த இந்த விரதத்தின் பயனாகப் பிறக்கும் குழந்தை, மிகுந்த பொறுமையையும், நற்பண்புகளையும் கொண்ட ஒரு வீரனாகத் திகழ்வான்’ என்று கூறினாள்||28||

அவர் மேலும் கூறுகையில் ‘அந்த விரதத்தை மாகசர்’ (Maagsar) எனும் மாதத்தின் (அதாவது ஜனவரியில்) பௌர்ணமி இரவில் தொடங்க வேண்டும்; அதன்பின் ஓராண்டு காலம், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அந்த தெய்வ நாகமான ஆனந்தா விரதம் இருந்து முறைப்படி வழிபட வேண்டும் ||29||

முதலில் புரோகிதர்கள் மங்கல சுலோகங்களை ஓதிய பின்னர், சாஸ்திர விதிகளின்படி விரதத்தைத் தொடங்க வேண்டும்; அதைத் தவிர ‘பிரதோஷத்துடன் ஒன்று சேர்ந்து வரும் பௌர்ணமி நாட்களில் விசேஷ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த ஓராண்டு காலம் முழுவதும் வேத யாகங்களில் தரப்படும் ஹவிஸ் (படையல்) எனப்படும் உணவை மட்டுமே உட்கொண்டபடி இருக்க வேண்டும் ||30||

தெய்வ நாகமான ஆனந்தா அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவராகப் போற்றப்படுகிறார்; எனவே, முழுமையான நம்பிக்கையுடன் இந்த மகத்தான விரதத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்; ஒவ்வொரு விரத முடிவிலும் ‘இந்த பிரபஞ்சத்தைப் படைத்த தெய்வமே எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு அருள் புரிய வேண்டும்; எங்களுக்குப் பேரருளையும் நன்மையையும் கொடுக்கும் ஒரு குழந்தையை வரமாகத் தந்தருளும் என்று மனமுருகி பிரார்த்திக்க வேண்டும்||31||

மேற் கூறிய வழிபாட்டு முறைகளை பின்பற்றியவாறு விரதத்தை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்; ஓராண்டு காலம் நிறைவடைந்ததும், விரதத்தை நிறைவு செய்வதற்கான சடங்குகளைச் சாஸ்திர விதிகளின்படி செவ்வனே செய்து முடிக்க வேண்டும்; இறுதியில் அந்த விரதத்தை ஓராண்டு காலமும் சிறப்பாக நடத்தித் தந்திருந்த புரோகிதர்களுக்கு பசுக்களை தானமாக தர வேண்டும்||32||

மேலும், நீர் நிறப்பிய பன்னிரண்டு கலசங்களை அந்த புரோகிதர்களுக்கு அளிக்க வேண்டும்; அவரவர் வசதிக்கேற்ப அந்தணர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்; இந்த விதமாக சாஸ்திர நெறிப்படி விரதத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம், அனைத்துப் பாவங்களையும் போக்கிக் கொள்ள முடியும்||33||

அப்படியாக விரதத்தை முடித்த பின்னர் பிறக்கும் குழந்தை, நற்பண்புகள் நிறைந்தவனாகவும், மக்களை ஆளும் மன்னனாகவும், அறநெறி தவறாத அரசனாகவும், எங்கும் புகழ் பரவியவனாகவும் திகழ்வான்; மிகுந்த கீர்த்தி கொண்ட அவன், பகைவர்களைக் ஒடுக்குவதில் உறுதியுடனும் கடுமையுடனும் நடந்து கொள்வான் ||34||

இப்படியாக யாஜ்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயி அறிவுரை வழங்கினாள்; அதன் பின்னர் ‘ஷீலதாரா’ (Sheeldhara) என்னும் பெயருடைய அந்த அரசியிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றாள்; போகும் முன் அரசியும் பணிவுடன் அந்த முனிவரின் மனைவிக்கு தலை வணங்கி ‘தாயே! தாங்கள் எக்காலத்திலும் எங்கள் அனைவர் மீதும் பேரன்பு கொண்டிருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டாள் ||35||

அதன் பின்னர், அந்த அரசி, தான் சந்தித்த நற்பண்புகள் நிறைந்த யாஜ்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயிடம் இருந்து பெற்ற அறிவுரைகளைத் தன் கணவரான மன்னரிடம் எடுத்துரைத்தாள்; மன்னரும் அவளது அறிவுரைகளை ஏற்பதாக இசைவு தெரிவிக்க, மன்னனின் மனைவி முனிவரின் மனைவியான மைத்ரேயி வழி காட்டியபடியே தெய்வீக நாகமான ஆனாந்தாவின் விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள் ||36||

ஓராண்டு முழுவதும் அவள் புனித யாகங்களின் யாகங்களில் மீதம் இருந்த உணவையே உண்டு வந்த வண்ணம் தூய்மையாக இருந்து வந்தாள்; அவள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து தரையில் படுத்தாள்; காமம் அல்லது அதன் சீற்றத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்படாமல், துறவிகளைப் போல மௌனத்தைக் கடை பிடித்தாள் ||37||

அவளுக்கு கிடைத்த அறிவுரைப்படியே தெய்வத்தை வேண்டிக் கொண்டும் வந்தாள்; அத்தகைய விரதத்தை அனுஷ்டிக்க என்னென்ன முறையில் வாழ வேண்டுமோ அவ்வாறே தனது மனதை பக்தி மார்கத்தில் ஒருமுகப்படுத்தி வைத்துக் கொண்டும், மன சஞ்சலங்கள் எதுவுமே இல்லாமலும் ஓராண்டு விரதத்தை நிறைவு செய்தாள்||38||

அவளுடைய நேர்மையான பக்தியைக் கண்ட ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் அவளுடைய கனவில் தோன்றி அவளை கனிவுடன் பார்த்து ஆசிர்வதிக்கும் முறையில், முகத்தில் புன்னகை ததும்பக் கூறினார் ‘தெய்வீக மற்றும் புனிதமான பெண்மணியே, நீ மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும், அருளுக்கும் பாத்திரமானவள்||39||

நீ மேற்கொண்ட இந்த கடுமையான விரதத்தின் தன்மையால், நீ மங்களகரமான பலனை விரைவில் பெறுவாய்; உனக்கு பிறக்க உள்ள மகன் பெரும் வீரனாக திகழ்வான் என்பது மட்டும் அல்ல ஏழு கடல்களையும் அதன் தீவுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமை கொண்டவனாக இருப்பான் ||40||

அவனுடைய பராக்கிரமம் தடுத்து நிறுத்த முடியாதவையாக இருக்கும்; அவரை நினைத்த மாத்திரத்திலேயே அங்கே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவருக்குக் இருக்கும்’ என்று கூறி விட்டு அவளை ஆசீர்வதித்ததும், ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் அவளது கனவில் இருந்து மறைந்து போனார் ||41||

அதைக் கண்டு சட்டென கண் விழித்த அரசி ராணி தான் கண்ட கனவில் தோன்றிய தெய்வத்தின் ஆசீர்வாதங்களை நினைவு கூர்ந்து கொண்டதும், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று அரசனிடம் தன் கனவில் தோன்றி தன்னை ஆசிர்வதித்த ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் கூறியவற்றை விவரித்தாள் ||42||

அதைக் கேட்டு அரசன் கிருதவீர்யன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்; விரைவில் ராணி கருவுற்றாள்; அவளுடைய கர்ப்ப காலம் எந்த சிக்கலும் இன்றி கழிந்தது; அரசனும் அவளுடைய ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றினான் ||43||

அந்தந்த நேரங்களுக்குத் தேவையான அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டன; ஐந்து கிரகங்கள் ஏற்ற நிலையில் இருந்த நேரத்தில், நள்ளிரவில் அவளுக்குப் பிரசவ வலி தொடங்கியது||44||

எல்லா திசைகளிலும் மகிழ்ச்சி பிரதிபலித்தது போல் தோன்றியது; காற்று மென்மையாகவும், இதமான குளிர் நறுமணத்துடனும் வீசியது; யாக பீடங்களின் ஜூவாலைகள் தெற்கு நோக்கி சுழன்றன; வானம் தெளிவாக இருந்தது; அவை அனைத்துமே நல்ல நிலையை எடுத்துக் காட்டும் விதத்திலேயே இருந்தன ||45||

அந்த நேரத்தில் முழு பிரபஞ்சமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருந்தது போல காட்சி அளித்தது; தேவர்கள் கூட தங்கள் இசைக் கருவிகளையும் மேளங்களையும் முழங்கினர்; தேவ கன்னியர்கள் கைகளில் தாமரைகளுடன் நடனமாடினர்; கந்தர்வர்கள் எனப்படும் தேவலோக இசைக் கலைஞர்கள் மனமுருகிப் பாடிக் கொண்டு இருந்தார்கள் ||46||

குழந்தையும் பிறந்தது; அதன் ஒளி வீசும் தேஜஸைக் கண்டதும், வானிலிருந்து தெய்வீக மலர்கள் பொழிந்தன; அந்த குழந்தையின் தேஜஸ்ஸுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் ஒளியும் கூட மிகவும் மங்கலாகத் தோன்றின; விண் மீன்களின் (நட்ஷத்திரங்கள்) ஒளியும் மழுங்கிப் போனது||47||

மக்கள் மனதெல்லாம் தர்ம வழிக்கு திரும்பின; கொடையாளிகள் பெரும் மகிழ்சசி அடைந்தார்கள்; சான்றோர்கள் ‘நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடனும், சகல நன்மைகளுடனும் வாழ வேண்டும்’ என்று ஆசீர்வாதங்களை கொடுத்தார்கள்||48||

மன்னர் சோதிடர்களை வரவழைத்து, அக் குழந்தையின் ஜாதகத்தின் அடிப்படையில் செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும், அதாவது ஜாதகர்மா* எனும் வைதீகச் சடங்கைச் செய்தார்; குழந்தையைப் போற்றி மகிழ்ந்த மக்களுக்கும் ஆடைகள், செல்வம் மற்றும் தானியங்கள் பரிசளிக்கப்பட்டன.
{*ஜாதகர்மா (Jatakarma) என்பது இந்து சமயத்தில் குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் முதல் மற்றும் நான்காவது சம்ஸ்காரம் ஆகும். இது தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன், தாய்ப்பால் புகட்டுவதற்கு முன், குழந்தையின் நீண்ட ஆயுள், புத்திசாலித்தனம் மற்றும் ஆரோக்கியத்திற்காகத் தந்தை செய்யும் சடங்கு. இது தந்தையையும் குழந்தையையும் இணைக்கும் ஒரு முக்கிய பாசபந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது}||49||

அந்தணர்களுக்குப் பொன்னும், பொருளும், எண்ணற்ற பசுக்களும் தானமாக வழங்கப்பட்டன; ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகக் குறிப்புகளைத் துல்லியமாக ஆராய்ந்த பின்னர், பின்வருமாறு மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறலாயினர்||50||

‘இளவரசர் மிகவும் பாக்கியசாலி; இவர் ஸ்ரீமத் தத்தாத்ரேய பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாவார்; தனது தவ வலிமையால் இவர் ஆன்மீகத் தூய்மையை அடைந்து, எங்கும் நிறைந்த புகழைப் பெறுவார்||51||

இவரது பெயரை உச்சரித்த மாத்திரத்தில், தாங்கள் தொலைத்த பொருட்கள் அல்லது உடைமைகளை மீண்டும் கண்டு பிடித்து விடுவார்கள்; எவரேனும் இவரை உளப்பூர்வமாக நினைத்தாலே போதும், அவர் அங்கே தோன்றி விடுவார்; இவர் வேத சாஸ்திரங்களில் தலைசிறந்த பண்டிதராக திகழ்வார்||52||

இவர் ஏழு தீவுகளுக்கும், ஏழு கடல்களுக்கும் அதிபதியாகத் திகழ்வார்; இவரது ஆட்சி எவராலும் எதிர்க்கப்பட முடியாத நிலையில் இருக்கும்; எண்பத்தைந்து ஆயிர ஆண்டுகள் தேவ லோக நாகமான ஆனந்தாவை வழிபட்ட விரதத்தின் பலனே இதுவாகும் ||53||

சூரிய பகவானை வேண்டி கொண்டு மேற்கொண்ட விரதத்தின் பயனாக, இவர் எவ்வித நோய்களும் அண்டாமல் இருப்பார்; இவரது ஆயுள் காலம் ஒரு லட்சம் ஆண்டுகள் நீடிக்கும்; தன் ஐம்புலன்களையும் முழுமையாக அடக்கி ஆளும் வல்லமை பெற்று, எக்காலத்திலும் வெற்றிகரமானவராகத் திகழும் இவரை, மக்கள் அனைவரும் ஒரு மனதாகப் போற்றி ஏற்றுக் கொள்வார்கள்’||54||

சோதிடர்கள் கூறிய மங்கலமான நற் செய்திகளைக் கேட்ட மன்னர், அவர்களைப் பணிந்து வழிபட்டார்; பின்னர், குழந்தை பிறந்த பதினாறாவது நாளில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில், அக்குழந்தைக்கு ‘அர்ஜுனன்’ என்று பெயரிட்டார்கள்||55||

அர்ஜுனன் பட்டத்து இளவரசராக முடி சூட்டிக் கொள்ளும் தகுதி பெற்ற பருவத்தை அடைந்தபோது, அவரது தந்தை காலமானார்; அவருக்குரிய ஈமச் சடங்குகள் அனைத்தும் முறைப்படி செய்து முடிக்கப்பட்டன. அதன் பின்னர் ராஜாங்கத்தில் இருந்த ஆலோசகர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் அர்ஜுனனிடம் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது என்று கூறினர் ||56||

அதற்கு அவர் அவர்களிடம் கூறினார் ‘என்னைப் பொறுத்தவரை எனக்கு அதில் நாட்டம் இல்லை; அரச பீடம் எத்தனை சிறப்பானது என்றாலும், எத்தனை வசதிகளை தருவது என்றாலும், எனக்கு அதன் மீது பற்று இல்லை என்பதினால் அந்த ஆசையில் இருந்து விலகியே நிற்கின்றேன்; காரணம் இறுதியில் சிம்மாசனம் தருவது துன்பம்தான் ||57||

விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் இருந்து ஆறில் ஒரு பங்கும், வாணிகம் மற்றும் பிற தொழில் செய்பவர்கள் ஈட்டும் வருமானத்தில் இருந்து பன்னிரண்டில் ஒரு பங்கும் வரியாகப் பெற்றுக்கொண்டு, கஜானாவை நிரப்பிக் கொள்ளும் மன்னன் தன் குடிமக்களின் நலனை முற்றிலும் பாதுகாக்கின்றானா? ||58||

அவன் தன் குடி மக்களை திருடர்களிடமிருந்தும், தீயவர்களிடமிருந்தும் காக்க இயலாதவனாகவும், இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களைப் காக்க திறனற்றவனாகவும் இருந்தால், அந்த மன்னன் அறம் சார்ந்த ஆளுமையின் நியதியின்படி நடக்கவில்லை என்பதாகி விடும்; அதன் விளைவாக அவன் இறந்த பின்னர் நரகத்திற்கே செல்ல வேண்டும்||59||

மேலும், அசாத்திய வலிமையும் பராக்கிரமமும் பெற்றிருந்தும், அறமற்ற செயல்களை அடக்கி ஒடுக்காமல், எந்த வழி முறைகளிலாவது தன் குடிமக்களின் செல்வத்தைப் பறிப்பதிலேயே தன் காலத்தைச் செலவிட்டபடி அரசாளும் அரசன் நிச்சயமாக நரகத்தையே அடைவான் ||60||

எந்த ஒரு அரசன் அறநெறிகள் அனைத்திலும் இருந்து விலகி நின்று, பேராசைக்கும் காமத்திற்கும் அடிமையாகித் தன் காலத்தைக் கழித்த வண்ணம் இருப்பானோ, எந்த ஒரு அரசன் நிரபராதிகளுக்குத் தண்டனை வழங்குவானோ, அந்த அரசன் அரச செங்கோலுக்குக் களங்கம் விளைவிப்பவன் ஆகி விடுவான்||61||

நான் இப்போது கூறியவை அனைத்தும் உண்மையே என்று நீங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டாலும் சரி இல்லை என்றாலும் சரி, ஒன்று உண்மை; ஒருவனுக்கு மெய்யறிவு இருந்தால் மட்டுமே அவனால் நீதியாகவும் தர்மத்தை நிலை நாட்டியபடியும் ஆட்சி செய்ய முடியும், ஆனால், தனக்கு வழிகாட்ட பலரை நியமித்துக் கொண்டு, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆள வேண்டிய சூழ்நிலையில் உள்ளவனால் நீதி நெறியைக் கடைப் பிடித்து ஆளுவது எவ்வாறு சாத்தியமாகும்?||62||

அரசனுக்குப் பணிவிடை செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர்கள் எவரேனும் பாவம் செய்தால், சாஸ்திரங்களின் நியமங்களின்படி, அந்த பாவத்தின் கால் பகுதி (நான்கில் ஒரு பங்கு) அரசனுடைய தலையிலேயே விழும்||63||

இவ்வாறு அரசன் பணி புரிய வேண்டிய நிலையில் இருக்கும்போது நான் ஒருவனாக நின்று, அற வழியில் அரசை நடத்தி எப்படி புண்ணியங்களை ஈட்ட முடியும்?; ராஜ்யத்தின் தலைமையை ஏற்று அரசாள தயங்கி, துயருற்ற நிலையில் இருந்த இளவரசன் கூறியதைக் கேட்ட, பக்திச் செழுமையும் பெரும் புகழும் வாய்ந்த கர்கா முனிவர் பின்வருமாறு கூறலானார் ||64||

‘அர்ஜுனா, நீ பாராட்டிற்கு உரியவன், உன்னை நான் வாழ்த்துகின்றேன். நீ கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்பதில் ஐயமில்லை; எந்த ஒருவன் நில விளைச்சலிலோ அல்லது அல்லது குடி மக்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் இருந்தோ ஒரு பங்கை பெற்றுக் கொள்கிறானென்றால், அந்த நிலங்களையும், குடி மக்களையும் காக்கும் பொறுப்பையும் அவன் ஏற்றுக் கொண்டாக வேண்டும் ||65||

ஒரு அரசன் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையாக நடந்து கொண்டால், அதனால் சிலர் துயருறுவர்; அதே சமயம், தண்டனை அளிப்பதில் அவன் மிக மென்மையாக நடந்து கொண்டால், அதே குடிமக்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை வரம்பற்ற முறையில் பயன்படுத்திக் கொண்டு தவறான பாதையில் செல்லத் துவங்கி விடுவார்கள் ||66||

எவ்வாறு சுட்டெரிக்கும் கோடைக் காலக் காற்றும், உடலை குளிரால் வாட்டிடும் குளிர் காற்றும் எவருக்கும் இன்பம் தருவதில்லையோ, அவ்வாறே குடி மக்களைப் பேணிக் காக்கவும் அவர்களை நல் வழியில் நடத்தவும், அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப நடை முறைப்படுத்தப்படும் நீதி அவசியமாகிறது ||67||

தற்போதைய நிலையில் பிறர் மீது நம்பிக்கை வைப்பதற்கு மனம் இல்லை என்றால் உடனே ராஜ்ய தலைமையை ஏற்க வேண்டாம்; அதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது; ஆகவே நீ யோகாவை கற்றறிந்த பின்னர் முடிவு செய்; யோகாவின் மூலம் உன் மனதிலுள்ள அச்சங்கள் அனைத்தையும் தகுந்த முறையில் நீயே களைந்து கொள்வாய் ||68||

யோகாவின் ஆற்றலினால் ஒரே நேரத்தில், பல நிலைகளில் பணியாற்றும் ஆற்றலை நீ பெறுவாய்; நீ விரும்பினால், ஆலோசகர்கள் இல்லாமல் தனி மனிதனாகவே இருந்தவாறு ஆட்சி செய்யும் வல்லமையையும் பெறுவாய்; மேலும், மனம் ஓடும் அதே வேகத்தில் உன்னால் செயல்படவும் முடியும்; நீ அறிய விரும்பும் எதைக் குறித்தும் இருந்த இடத்திலிருந்தே நேரில் காணும் திறனையும் நீ பெறுவாய் ||69||

புண்ணியவதி அன்னை அனுசூயையின் திருமகன் எனும் அவதாரத்தில் எழுந்துள்ள மாபெரும் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் சஹ்யாத்ரி எனும் மலைத் தொடரில் எழுந்தருளியுள்ளார்; இதனை நீங்கள் நன்கு ஆலோசனை செய்ய வேண்டும் ||70||

தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர், யோகத்தின் அதிபதி அதாவது யோகிந்திரர் என்று போற்றப்படுகிறார்; அவரது திருநாமத்தை உச்சரிப்பதன் மூலமே உலகப் பந்தம் எனும் சம்சாரத்தின் பெருங் கடலை ஒருவரால் கடந்து விட முடியும்; அவர் முக் காலத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பவர் என்று கூறப்படுகிறது; ஆத்ம விழிப்புணர்வு மிக்க ஞானிகள் அவரை தியானித்தே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றார்கள்||71||

அவரது வழிமுறை, சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுக்கும் அப்பாற்பட்டதாகும்; அவர் யோக வலிமையால் தன் பக்தர்களைக் காப்பாற்றுகிறார்; யோக நெறி அருளும் பேரின்பத்தில் திளைக்கிறார்; ஆன்மீகக் கடலில் இணைந்து விடத் துடிக்கும் அமைதியான எண்ணம் கொண்டவர்களால் தேடப்படும் ஆசான் இவர் மட்டுமே ஆவார்||72||

இந்த பிரபஞ்சத்திற்கே சாட்சியாக திகழும் அந்த பரமாத்மனுக்கு எந்த பாரபட்சமும் கிடையாது; பக்தர்களுக்கு அருள் பாலிப்பதில் அவருக்கு நிகர் எவரும் கிடையாது; தீயவர்களை தண்டிக்கும் பொறுப்பையும் தாமே ஏற்று நடத்துபவர் அவர் ||73||

அநீதி இழைப்பவர்களை அந்தந்த குற்றங்களுக்கு ஏற்ப அவர் கடுமையாக தண்டித்தாலும், அவர் கொடுமைக்காரர் அல்ல, சர்வாதிகாரியும் அல்ல; யோக நெறியின் ஆற்றலின் காரணமாகவே, அவர் எந்த நிலையிலும் அமைதியான மன நிலையில் பொறுமைக் காத்து, தடம் பிறழாமல் இருக்கின்றார் என்பதை பார்க்க முடிகின்றது||74||

ஒரு தாய் தன் குழந்தைக்கு பசியெடுக்காமலிருக்க அந்தந்த நேரங்களில் பாலூட்டி, உணவளித்து வந்தாலும், அந்த குழந்தை தவறு செய்யும் நேரங்களில் அதை கண்டித்துத், திருத்தவும் உரிமை கொண்டிருக்கின்றாள்; அவள் அந்த குழந்தையை திருத்துகையில், அவள் கண்டிப்பாக இருப்பதினால், அவளை இரக்கமற்றவள், கொடுமைக்காரி என்று முத்திரை குத்தலாமா?; தன் குழந்தையைத் திருத்தும் பாச மிக்க தாயின் செயல் தவறு என்று எப்படிக் கூற முடியும்? ||75||

அதே போன்ற நிலையில் இருந்தவாறுதான் இவரும் துறவி மற்றும் சாது, சன்யாசிகளை பாதுகாத்து, அவர்களுக்கு துன்பங்கள் தருபவர்களை தண்டித்து வருகின்றார்; இந்த பிரபஞ்சத்தையே இயக்கி வரும் இவர் மீது எந்த களங்கமும் கிடையாது; எக்காலத்திலும் இவர் நன்மை மற்றும் தீமை என்ற கூற்றுகளுக்கு அப்பாற்பட்ட, தெய்வீக ஒளி ஆவார் என்பதினால்தான் அவர் தனித் தன்மையுடன் ஜொலித்து வருகின்றார்||76||

அத்திரி முனிவரின் திருமகனாக அவதரித்து உள்ள அந்த தெய்வம், இந்த உலகை மேம்படுத்தவே அவதரித்து உள்ளார்; அனைத்து சாது, சன்யாசிகள் மற்றும் துறவிகளால் தேடப்பட்டும், போற்றப்பட்டும் வரும் ஒரே தெய்வம் அவர் மட்டுமே ஆவார்; தன் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருபவரும் அவரேதான்; எனவே, நீயும் அவரிடம் சென்று அடைக்கலம் ஆகி அவரது அருளை பெற்றுக் கொண்டு வா’ என்று ஆலோசனை வழங்கினார் ||77||

அவர் மேலும் கூறினார் ‘முன்னொரு காலத்தில் ஜம்பன் (Jambha) எனும் பெயருடைய ஒரு அசுரன், தேவலோகத்தின் மீது படையெடுத்து, வென்று, அதை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்; அங்கிருந்து தப்பித்து ஓடிய தேவேந்திரன், ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவானிடம் அடைக்கலம் கேட்டு, தேவலோகத்தை மீட்டுத் தருமாறு வேண்டிக் கொண்டு அவரை பிரார்த்தித்தான்; அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீமத் தத்தர், தேவேந்திரன் இழந்த சாம்ராஜ்யத்தை மீண்டும் அடையும் வகைக்கான அனைத்து அருளையும் தந்து உதவிகளையும் செய்தார்||78||

அதனால்தான் இன்றளவும் தேவேந்திரன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரிடம் பக்தி கொண்டு அவரை ஆராதித்து வருகின்றார்; அனு தினமும் தேவலோகவாசிகள் அனைவருடனும் சேர்ந்து ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் புனித தரிசனத்தைப் பெற்று வணங்கி வருகின்றார்; எனவேதான் தற்போது எவருக்கும் சொர்க்கத்தை அபகரிக்கும் துணிவு வரவில்லை||79||

அவரை திருப்தி அடைய வைத்து அவரிடம் செல்வது கடினம் என்பதாக மந்த புத்தி உள்ளவர்கள் கருதுகையில், புத்திசாலிகளோ, அவரை தேடுதலில் எந்த தொய்வையும் வைத்துக் கொள்ளாமல் அவரை தேடிக் கொண்டே அலைகிறார்கள் என்பதினால் அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆகி விடுகின்றார்கள்||80||

எவர் ஒருவருக்கு தமது உடல் மீதான ஆசை விலக்கவில்லையோ, எவர் ஒருவரது எண்ணம் அலை பாய்ந்து கொண்டே உள்ளதோ, எவரால் தமது ஆசைகளை விலக்கிக் கொள்ள முடியவில்லையோ, அவர்களால் தெய்வத்தின் உருவைக் காணவும் முடியாது, தூய ஆனந்த நிலை என்ன என்பதை புரிந்து கொள்ளவும் முடியாது||81||

தீய மற்றும் தவறான எண்ணங்களைக் கொண்டவர்களை தம்மிடத்தில் இருந்து விலக்கி வைத்துக் கொண்டுள்ளார்; தூய்மையான எண்ணம் கொண்ட பக்தர்களுக்கு அவர் நெருக்கமானவர், எங்கும் நிறைந்தவர்; யோக மார்க்கத்தின் அதிபதி எனும் புகழ் மிக்க அவரை நீங்கள் தேடுங்கள்; பெரும் கருணை மிக்க அந்த தெய்வத்திடம் இருந்து உங்களுக்கு தேவையான வரங்களை வேண்டிப் பெறுங்கள் ||82|| ‘

தினமும் கங்கை நதியில் புனித நீராடுபவர் அவர்; இரவில் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மஹுர்கட் (Mahurgadh) எனும் நகருக்கு சென்று அங்கு சயனிப்பவர்; சஹ்யாத்ரி மலைத் தொடர்களில் அடிக்கடி அமர்ந்திருப்பார்; கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காபூரில் (Gangapur) அவரே தியானத்திலும் ஆழ்ந்திருப்பார்||83||

தினமும் குருக்ஷேத்திரத்தில் (Kurukshetra) தன் உள்ளங்கையில் நீரை ஏந்தி அருந்திய பின்னர், புனித சாம்பலை தன் உடலில் பூசிக் கொள்ள தூத்பபேஷ்வர் (Dhootpapeshwar) எனும் நகருக்கு செல்பவர்; அங்கிருந்து கஹாட் (Kahaad) நகருக்கு சென்று, அங்குள்ளவர்களுடன் சேர்ந்து மாலை நேர வழிபாட்டில் ஈடுபடுவார்||84||

கோலாப்பூர் (Kolhapur) எனும் ஊரில் உள்ள ஆலயத்தில் பிட்ஷை பெற்றுக் கொள்வார்; அங்கிருந்து கிளம்பி பஞ்சாலேஷ்வர் (Panchaleshwar) எனும் நகருக்கு சென்று உணவு உண்பார்; முக் காலத்தையும் உணர்ந்துள்ள அவருடைய நோக்கமும் எண்ணங்களும் விசித்திரமானவை; எவராலும் அறிந்து கொள்ள முடியாதவை||85||

புனித நகரமான பண்டார்பூருக்கு (Pandharpur) சென்று அங்குள்ள நறுமணப் பூச்சுகளைத் தன் உடலில் பூசிக் கொண்ட பின்னர் அங்கிருந்து கிளம்பி மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் செல்வார்; அந்தி சாயும் வேளையில், பரமாத்மனுக்காக அர்க்யம்(Arghya)* விடுவார்.
{*பொதுவாக அர்க்கியம் விடுவது என்பது இந்து சமய வழிபாட்டு முறைகளில், தேவர்கள், சூரியன், ரிஷிகள், முன்னோர்கள் அல்லது விருந்தினர்களைக் கௌரவிக்கும் விதமாக, நீர் அளித்து உபசரிக்கும் ஒரு தெய்வீக மற்றும் புனிதமான செயலாகும். இது பெரும்பாலும் கைகளால் நீர் எடுத்து விடும் ஒரு சடங்காகச் செய்யப்படுகிறது. ஆனால் ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் விடும் அர்க்கியம் என்பது பரமாத்மனுக்கு செலுத்தும் மரியாதை ஆகும்; பரமாத்மன் என்பவரே ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் தானே என்ற கேள்வி எழலாம். மானிட ரூபத்தில் இருந்த ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் மானிடர்கள் கண்களுக்கு தெரியாத தமது சூட்சும ரூபத்திற்கு அர்க்கியம் கொடுப்பதான தாத்பர்யமே இது }||86||

எவர் ஒருவர் அவரைப் பக்தியோடு போற்றி வணங்கி வருவார்களோ, அவர்கள் அனைவரும் இறுதியில் அவருடைய புனித தரிசனத்தைப் பெறுகிறார்கள்; மூன்று உலகங்களிலும் வியாபித்து உள்ள அவருடைய திருப்பாதங்களை வணங்குவோம் ||87||

எந்தவித முயற்சியும் இன்றி அவர் நிகழ்த்தும் தெய்வீகமான, பேரானந்தம் தரும் தெய்வீக லீலைகளை ஒருவர் செவிகளால் கேட்பதே பேரின்ப நிலைக்கு அவர்களை அழைத்துச் செல்லும் எனும்போது, பிரபஞ்சமே போற்றிடும் அவரை எப்படி ஒருவரால் போற்றாமல் இருக்க முடியும்? ||88||

தம்மிடம் அடங்கி உள்ள மாயை எனும் சக்தியை (Illusionary prowess) தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்; பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இந்த பிரபஞ்சத்தையே தன்னுள் இருந்து வெளிக் கொண்டு வந்தவர்; பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்தை இயக்குபவரும் அவரே; அத்தனை இருந்தும் எவற்றின் மீதும் பற்று இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவரேதான்||89||

படைப்பு தெய்வமான பிரம்மாவின் வடிவத்தை ஏற்று உலகைப் படைப்பவர் அவர்; உலகைக் காத்து ரட்சிக்க விஷ்ணுவின் வடிவத்தை ஏற்பவர் அவர்; அதன்பின், அழிக்கும் தெய்வமான ருத்ரனின் வடிவத்தை ஏற்று தான் படைத்த பிரபஞ்சத்தை தானே தன்னுள் கிரகித்துக் கொண்டு {பிரளய காலத்தில் அழிப்பது} விடுபவரும் அவரேதான்; இப்படியாக மூன்று தெய்வ வடிவங்களிலும் தானே தோன்றி பிரபஞ்சத்தில் விளையாடுவது அந்த பரமாத்மனே ஆவார்||90||

தூய பக்தியால் மட்டுமே அவரை நெருங்க முடியும்; தமது உண்மையான எளிய பக்தர்களுக்குக் கட்டுப்படுபவர் அவர் என்பது உண்மை என்பதினால் அவரது தூய்மையான பக்தர்களை அவர் எந்த நிலையிலும் விலக்கி வைப்பது இல்லை; மாறாக, அவர்களுக்கு நன்மைகளை அருளும் வகையில் தமது லீலைகளை எளிதாகவும் ஆனந்தத்துடனும் நிகழ்த்துகிறார்||91||

வரும் காலங்களில் தமது பக்தர்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது அக்கரைக் காட்டி வழி நடத்துபவர் அவர் என்பதினாலேயே அவரை எக்காலத்திலும் அனைவரும் போற்றி வணங்கி வருகின்றார்கள்; வேத ஞானத்திற்கு தெய்வீகப் பொலிவை தருபவரும் அவரேதான்; அப்படிப்பட்ட தெய்வீக மேன்மைக் கொண்ட பரமாத்மனையே அர்ஜுனன் தேடித் சென்று அவரிடம் அடைக்கலம் ஆக வேண்டும் என்று கர்கா முனிவர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்’ என்பதாக வேத தர்மா தனது சீடர் தீபக்கிடம் கூறினார் ||92||

வேத தர்மா தொடர்ந்து கூறினார்; ‘அர்ஜுனனுக்கு அறிவுரை செய்து கொண்டிருந்த கர்கா முனிவர் மேலும் சில அறிவுரைகளை அர்ஜுனனுக்கு கொடுத்தார் ‘உன் முழு மனதோடு நீ அவரை வழிபடுவாயானால், அவர் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவார்; இல்லையேல், அனைத்தையும் அறிந்துள்ள அவருடைய திருவுள்ளத்தை மாற்றியமைக்க வேறு எவராலும் முடியாது, அவ்வாறு செய்வதில் இதுவரை எவரும் வெற்றி பெற்றது இல்லை ||93||

நீ அவரை வழிபட்டு, அவரிடமிருந்தே நேரடியாக வரங்களைப் பெற்று விட்டால், இந்த பூவுலகை நீ தனித்து நின்று ஆள முடியும்; வேறு யாரையும் சார்ந்திருக்கவோ, நம்பியிருக்கவோ உனக்குத் தேவை இருக்காது; ஏழு கடல்களுக்கும், அவற்றால் சூழப்பட்ட தீவுகளுக்கும் அதிபதியாகி, உன் விருப்பம் போல் ஆட்சி செலுத்த உன்னால் இயலும்||94||

உனக்குத் தேவையான மன உறுதியையும், பொறுமையையும், கூர்மையான அறிவையும் அவரால் மட்டுமே அருள முடியும்; பல்வேறு நிலைகளிலும் உனக்குத் தேவையான வலிமையை வழங்க முடிந்தவரும் அவரேதான்; உனது உள்ளத்தை முழு மனதுடன் அவர் காலடிகளில் சமர்ப்பித்து ‘ஓ முக்தி நாயகனே,எனக்குத் தேவையான சத் புத்தியை நீங்கள்தான் தந்து அருள வேண்டும் என்று வேண்டிப் பிரார்த்தனை செய்||95||

உன் மனதிற்குள் நீ எதை அடைய வேண்டும் என்று விரும்புகிறாயோ, அந்த அனைத்தையும் யோக சக்தியின் மகிமையால் நீ நிச்சயமாகப் பெற்று விட முடியும்; என் வார்த்தைகளை நம்பி உடனடியாக சென்று, இயன்றவரை விரைவாக ஸ்ரீமத் தத்தாத்ரேய பெருமானுக்குத் தொண்டு செய்வாயாக’ என்று கரக முனிவர் கூறி முடித்தார் ||96||

கர்கா முனிவரின் நீண்ட அறிவுரைகளைக் கேட்ட அர்ஜுனன், ஒரு அம்பு, குறி தவறாமல் தன் மனதின் மையப் பகுதியைப் துளைத்தது போன்றதொரு உணர்வைப் பெற்றான்; அவன் அந்த முனிவரை முறைப்படி வணங்கி, மிகுந்த அன்புடன் பின்வருமாறு கூறினான் ||97||

‘ஓ மா முனிவரே தங்களுக்கு நான் மனமார்ந்த நன்றி செலுத்த வேண்டும்; ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பெருமைகளைக் குறித்துக் கூறியதில் மூலமாக எனக்குள்ளும் அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்; இத்தகைய தங்களுடைய செயல் என் மீது பொழிந்த தங்கள் கருணை மழை என்பதாகவே நான் கருதுகிறேன் ||98||

நான் விரும்பும் நன்மைகளை அடைவதற்கான வழியை எனக்குக் காட்டியதன் மூலம், என் அகத்தில் இருந்த அனைத்துப் பற்றுக்களையும், மன உளைச்சல்களையும் தாங்கள் மாற்றி அமைத்து விட்டீர்கள் ; ஸ்ரீமத் தத்தாத்திரேயருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆனந்தத்தையும், பரவசத்தையும் எனக்குள் ஏற்படுத்தி விட்டீர்கள் ||99||

‘மகரிஷி அத்திரி முனிவருக்கும், அவரது அன்பு மனைவி அனுசூயாவுக்கும் என் மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்; ஏனெனில் அவர்கள்தானே திவ்ய ஸ்வரூபமானவரும், பல்வேறு திரு நாமங்களினால் போற்றப்படுபவருமான பரமாத்மனை தமது திருமகனாக அடைந்து உள்ளார்கள்||100||

மகரிஷி அத்திரி முனிவரின் திருமகனாகவும், புனித தெய்வமாகவும் போற்றப்படும் ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் எனும் பரமாத்மன் மூவுலகிலும் வியாபித்துள்ள, யோக நெறியை எடுத்துரைக்கத் திருவுள்ளம் கொண்டவராய் விளங்கும் அந்தப் பரம்பொருளே, எங்கும் நிறைந்திருக்கும் சாரம் ஆவார்||101||

அவருடைய அனுதின செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டதும், நான் உண்மையிலேயே வியப்பில் ஆழ்கிறேன்; அனைத்து மகரிஷிகளும், தேவர்களும் அவரை எவ்வாறு சந்தித்து, அவருடன் உரையாடும் பேற்றைப் பெற்றார்கள் என்பதை எனக்கு எடுத்துரைப்பீர்களா?’ ||102||

தேவலோக அதிபதியான இந்திரன், பரமாத்மனின் உருவிலான ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் உதவியை நாடிச் சென்று, அவரது மங்கல தரிசனத்தை எவ்வாறு பெற்றார்?; அவ்வாறு சென்ற அவர் தொடக்கத்தில் அந்த யோகத்தின் அதிபதியான நாதனுக்கு எப்படியான பணிவிடை செய்தார்?; பரமாத்மன் உதவியைப் பெற அவர் என்னவெல்லாம் செய்தார் ||103||

ஜம்பா எனும் அசுரன், எவ்வாறு விண்ணுலகத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்?; அசுரர்கள் எப்படி தேவர்களுடன் போரிடத் துணிந்தார்கள்?; இறுதியாக, தேவேந்திரனான இந்திரன் எத்தகைய வரத்தைப் பெற்றார் ?’ ||104||

இந்த நிகழ்வுகள் அனைத்துமே தனித் தன்மைக் கொண்டதாக தெரிகின்றது; அவற்றை எல்லாம் நான் முழுமையாக, விரிவாகக் கேட்டறிய விரும்புகிறேன்; குறிப்பிட்ட ஒரு கதையைக் கேட்டால் தமக்கு நன்மை தரும் என்றால் யார்தான் அவற்றை செவி சாய்த்துக் கேட்க மாட்டார்கள்?; எவ்வளவுதான் அகந்தை மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் தமது அகந்தையை ஒதுக்கி வைத்து விட்டு, அவற்றைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா, என்ன?||105||

நீங்கள் கூறிய அனைத்தையுமே நான் மனதார நம்புகிறேன்; ஆகவே அந்த நிகழ்வுகள் அனைத்துமே எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றி தெளிவாக எனக்கு எடுத்துரைக்க வேண்டும்; யோகங்களுக்கெல்லாம் தெய்வமானவர் நிகழ்த்திய திருவிளையாடல்கள், கேட்போரைப் தெய்வீக மற்றும் புனிதப்படுத்தும் வல்லமை கொண்டவை; தெய்வீக திருவிளையாடல்களை எல்லாம் செவி நிறையக் கேட்டறிய வேண்டும் என்று தொன்றுதொட்டே சான்றோர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது||106||

அவற்றை எல்லாம் கேட்ட பிறகு, ஏற்கனவே உறுதியளித்தபடியே, நானும் சென்று தெய்வமான அந்த ஸ்ரீமத் தத்தாத்ரேயருக்குத் தொண்டு செய்யப் போகிறேன்; அதன் மூலம் அவர் என்மீது மகிழ்வுற்று, நான் விரும்பும் வரங்களை எனக்கு அருளக் கூடும் ||107||

இவ்வாறு அர்ஜுனன் வேண்டிக் கொண்ட பிறகு, அவன் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை கர்கா முனிவரின் அருளால் பெறத் துவங்கினான்; கர்கா முனிவர் சிறிது நேரம் ஸ்ரீமத் தத்தாத்ரேயரைத் தியானித்த பிறகு, அர்ஜுனன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார் ||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இரண்டாம் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நான்காம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 217 + 108 + 325 =433
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம்-1,  அத்தியாயம் -4 முடிவடைந்தது
அடுத்து  பாகம்-2, அத்தியாயம்:1 தொடர்கின்றது