அம்மாவாசை மற்றும் பௌர்ணமி
 பிறந்த கதை 
 
சாந்திப்பிரியா

ஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட மனைவிகள் மூலம் பால ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். ஆனால் பரிதாபம் என்ன என்றால் அவனுடைய எந்தப் பிள்ளைகளினாலும் அவனுக்கு பெருமைக் கிடைக்கவில்லை. ஆகவே அவன் மனம் நொடிந்து போனான். மீண்டும் சிவபெருமானை துதித்தார்.  சிவபெருமானின் அருளினால் அவனுக்கு இருபத்தி ஏழு பெண்கள் பிறந்தார்கள் . அவர்கள் அனைவரையும் நன்கு பேணி வளர்த்து வந்த தக்கன் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வந்தான். அப்போது அதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த சந்திரன் தனக்கு அவர்களை மணம் செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைக்க அதை ஏற்றுக் கொண்ட தக்கனும் சந்திரனுக்கு அவர்கள் அனைவரையும் திருமணம் செய்து வைத்தார்.

முதலில் சில வருடங்கள் அனைத்து மகள்களின் வாழ்கையும் இனிமையாகவே கழிந்தன. சந்திரனும் தினமும் ஒரு மனைவி என ஒவ்வொரு பெண்ணுடனும் ஒவ்வொரு நாளைக் கழித்தாலும் அவர்களில் மூத்தவளையும், இளையவளையும் அதிகம் நேசித்து அவர்கள் இவருடனேயே அதிக நேரத்தைக் கழிக்கலானார். மற்றவர்களை ஒதுக்கி வைத்தார். அதனால் கவலைக் கொண்ட அனைத்துப் பெண்களும் தனது தந்தையிடம் சென்று அது குறித்து முறை இட்டார்கள். அவனும் சந்திரனுக்கு எத்தனையோ எடுத்துக் கூறியும் சந்திரன் தக்கனின் அறிவுரையை ஏற்க மறுத்தார். ஆகவே கோபமடைந்த தக்கனும் இனி சந்திரன் அவரிடம் இருந்த அனைத்துக் கலைகளையும் இழக்க வேண்டும் என்று சாபமிட்டார். அந்த சாபத்தின் விளைவாக சந்திரனின் கலைகள் அனு தினமும் மெல்ல மெல்ல அழியத் துவங்கின. சந்திரனின் வனப்பு அழியத் துவங்கியது. சந்திர ஒளியும் குறைவுற்றது.

அதனால் பிரபஞ்சத்தில் சந்திர ஒளி குன்றியதினால் பல பிரச்சனைகள் தோன்றலாயின. சந்திரனிடம் மொத்தம் பதினைந்து அற்புதமான சக்தி வாய்ந்த கலைகள் இருந்தன . அவற்றை ஒவ்வொன்றாக இழக்கத் துவங்கிய சந்திரனிடம் எஞ்சி இருந்தது பதினைந்தாவது கலைதான் அதையும் சந்திரன் இழந்து விட்டால் இரவில் ஒளியே இருக்காது. சந்திரனின் மகிமையும் முற்றிலும் மறைந்து விடும். அதைக் கண்டு கவலைப்பட்ட சந்திரன் தக்கனின் தந்தையான பிரும்மாவிடம் சென்று நடந்ததைக் கூறி அவரை தக்கனுடைய சாபத்தை விலக்குமாறு  கோரிக்கை விடுத்தார். ஆனால் பிரும்மனோ தன்னால் அதை செய்ய முடியாது என்றும் சிவபெருமானினால்  மட்டுமே அதை செய்ய இயலும் என்றும் கூறி விட வேறு வழி இன்றி சந்திரன் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி நடந்ததைக் கூறி அழுதார். ஆனால் சிவபெருமானும் தான் வரம் கொடுத்த தக்கனும் உண்மையில் முனிவர்களுக்கு நிகராக விளங்கி வந்ததினால் அதை எளிதில் மாற்ற முடியாது என்பதினால், சந்திரனிடம் இருந்த கடைசி கலையை தான் தனது முடியில் வைத்துக் கொள்வதாகவும், அப்படி வைத்துக் கொண்டப் பின் அதை தக்கனின் சாபம் அழிக்க முடியாது என்றும், தான் சந்திரனை அந்த பதினைந்தாவது கலையுடன் சேர்த்து  தன்  முடிக்குள் வைத்துக் கொண்டாலும், சந்திரன் முன்பைப் போலவே அனைத்து கலைகளையும் மீண்டும் பெறுவார் என்றும் கூறினார். ஆனால் அதில் இருந்த ஒரு சிறிய சங்கடத்தையும் சந்திரனுக்கு விளக்கினார்.
சந்திரனை தன் தலையில் பதினைந்தாவது கலையுடன் தான் முடித்து வைத்துக் கொண்டதும், ஒவ்வொரு நாளாக சந்திரனின் ஒவ்வொரு கலையும் சந்திரனிடம் மீண்டும் சென்று அவரை சக்தி மிக்கவர் ஆக்கி பதினைந்தாம் நாள் எப்போதும் போலவே அவர் பிரகாசிப்பார் என்றும், மறு நாள் முதல் மீண்டும் ஒவ்வொரு நாளும் அவர் கலைகள் அவரை விட்டு விலகும் என்றும், மீண்டும் பதினைந்தாம் நாள் அவர் கலைகள் அனைத்தையும் இழந்து விட்டப் பின்  ஒழி இழப்பார் என்றும் கூறினார்.  ஆனால் மீண்டும்  அதற்கு அடுத்த நாள் முதல் கலைகள் மீண்டும் அவருக்கு திரும்பும் என்றும் கூறினார். இப்படியாக ஒவ்வொரு பதினைந்து நாளும் சந்திரனின் கலைகள் விலகி அவர் ஒளி இல்லாமல் இருக்க அதுவே அம்மாவாசை என்றும்,  அடுத்த பதினைந்து நாளில் மீண்டும் அவரிடம் போய் சேரும் கலைகளினால் அவர் பிரகாசிப்பதினால் அதுவே பௌர்ணமியாகவும்  ஏற்கப்பட்டது.